யாரு அறியாத புதிரான ஒரு முகம் அனைவருக்குள்ளும் உண்டு.. அதை யாரும் அறியாத வரை… எவரும் நல்லவரே…
அடர்ந்த இருளுக்குள் அதிவேகமாய் சென்று கொண்டிருந்த கார் சட்டென்று நின்றது, “என்ன தம்பி எதுக்கு திடீர்னு காரை நிறுத்திட்டீங்க?” என்று குழப்பத்துடன் வினவினார் ராஜதுரை.
“யாரோ நம்மள பாலோ பண்ற மாதிரி இருக்கு”என்று பின்புறம் திரும்பிப் பார்த்தபடி கூறினான் தீபேந்திரன்.
“என்ன தம்பி சொல்றீங்க!, எந்த வண்டியும் நம்ம பின்னாடி வந்த மாதிரி தெரியலையே!” என்று ராஜதுரை கூறிட…” வண்டி இல்ல, யாரோ பின்னாடியே ஓடி வந்த மாதிரி இருந்தது” என்றான் தீபேந்திரன்.
தீபேந்திரனின் வார்த்தையைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவர், “வண்டிக்கு பின்னாடி ஓடி வராங்களா!, என்ன தம்பி சொல்றீங்க?, புயல் வேகத்துல போயிட்டு இருக்கீங்க… நம்ம பின்னாடி யாராவது ஓடி வர முடியுமா என்ன?” என்று எள்ளனுடன் வினவினார் ராஜதுரை.
“அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றீங்களா?, நான் என் கண்ணால பார்த்தேன், எவனோ ஒருத்தன் நம்ம காருக்கு பின்னாடி ஓடி வந்தான்.”என்று கோபம் மிகுதியான வெளிப்பாடாய் அழுத்தமாய் கூறினான் தீபேந்திரன்.
தீபேந்திரனின் கோபம் என்ன செய்யும் என்று உடனிருந்து பார்த்து பழகியவர் சற்று என்று பணிந்து போய்..”நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் தம்பி, நீங்க இங்கேயே இருங்க நான் போய் யாருன்னு பாத்துட்டு வரேன்..” என்று பயத்துடன் சமாதானம் செய்துவிட்டு காரை விட்டு கீழே இறங்கினார் ராஜதுரை.
ஒருமுறை காரை சுற்றி வந்தவர்… பின்புறம் சில அடிகள் சென்று, கையில் இருந்த அலைபேசியில் இருந்த ஒளி அமைப்பு வசதியை உயிர்பித்து அருகில் இருந்த சில புதர்களை ஆராய்ந்தார், ‘இவன் கொடுக்குற சொத்துக்கு ஆசைப்பட்டு.. என்னென்ன வேலை பார்க்க வேண்டியதா இருக்கு, நட்ட நடு ராத்திரியில இவ்வளவு வேகமா போயிட்டு இருக்கிற காருக்கு பின்னாடி எவனோ ஓடி வரானாம், இவன் லூசா இல்ல நம்மள லூசாக்கப் பார்க்கிறான்னு தெரியல’ என்று வாய் விட்டு புலம்பியவர், செடி கொடிகள் வேகமாய் அசையக் கண்டு.. ‘அடடா என்ன வருதுன்னு தெரியலையே.. அருவி பக்கம் ஏதாவது காட்டு விலங்கு தண்ணி குடிக்க வந்தா கூட இந்த பக்கமா தான கிராஸ் ஆகும். ஐயா சாமி எந்த சேதாரமும் இல்லாம என்னை ஊரு போய் சேர்த்திடு கடவுளே..’, என்று வேண்டிக் கொண்ட படி அசைவுகள் ஏற்பட்ட திசைக்கு ஒளியின் திசையை திருப்பினார்.
பண்ணை வீட்டில் இருந்து கிளம்பிய காரை காற்றைப் போன்றதொரு வேகத்துடனும் அதே நேரத்தில் எவரின் கவனத்தையும் ஈர்க்காத வகையில் பின் தொடர்ந்து கொண்டிருந்த கீர்த்தன், வேகமாய் சென்று கொண்டிருந்த வாகனம் சட்டென்று வேகத்தை குறைத்ததோடு அல்லாமல் அதிலிருந்து இறங்கிய ராஜதுரை எதையோ தீவிரமாய் ஆராய்வதை கவனித்து தன் மீது சந்தேகம் வந்திருக்க கூடுமோ என்ற எண்ணத்துடன் அருகில் இருந்த புதர் பகுதிக்குள் பதுங்கினான், அவன் இருந்த திசைக்கு ராஜதுரையின் கவனம் திரும்பி விட மின்னல் வேகத்துடன் அருகில் இருந்த மரக்கிளையைப் பற்றிக் கொண்டு மரத்தின் மீது ஏறி பதுங்கினான் கீர்த்தன். இரவு பொழுதை கழிப்பதற்காக தனது குட்டியுடன் அந்த மரத்தை தஞ்சம் புகுந்திருந்த குரங்கொன்று கீர்த்தனை கண்டதும் அச்சத்துடன் அலறி அடித்து ஓடிட.. ராஜதுரையின் கவனம் குரங்கின் மீது படிந்தது.
எதையோ கண்டு அரண்டது போல் அச்சுறுத்தும் வகையில் ஓசை எழுப்பிய குரங்கு தன் குட்டியை இறுக்கமாய் அணைத்து பிடித்த படி தார் சாலையை கடந்து சென்றிட, ‘ சே.. இது தானா?, நல்ல வேலை குரங்கா போச்சு வேற ஏதாவது காட்டு மிருகமா இருந்தா என் கதி என்ன ஆயிருக்கும்?, ஆமா இது என்னத்த கண்டு இப்படி பயந்து ஓடுது, அது எதைப் பார்த்து இருந்தா என்ன? நம்மள எந்த காட்டு மிருகமும் பாக்கல , அதுவரைக்கும் சந்தோசம் ‘என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவர்… மீண்டும் காரை நோக்கி நடந்தார்.
அடர்ந்த மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்து கொண்டு காரை நோக்கி நடந்து சென்ற ராஜதுரையை பார்வையால் பின் தொடர்ந்தான் கீர்த்தன்.
“நல்லா பாத்துட்டேன் யாரும் இல்ல தம்பி, ஒரு குரங்கு தான் என்னத்தையோ பார்த்து பயந்து ஓடுச்சு.. வேற ஒன்னும் இல்ல சரி வண்டிய எடுங்க. அங்க சுஹனி பாப்பா தனியா இருக்கும்.” என்றார் ராஜதுரை.
“என்ன குரங்கா?, ஆறடியில ஒருத்தன் காருக்கு பின்னாடியே வேகமா ஓடி வந்த மாதிரி இருந்துச்சு நீங்க என்னடான்னா குரங்குன்னு சொல்றீங்க?, நல்லா தேடி பார்த்திங்களா?” என்று சந்தேகத்துடன் வினவினான் தீபேந்திரன்.
” தம்பி நான் இவ்வளவு சொல்றேன் என் மேல நம்பிக்கை இல்லையா?, நான் உங்களுக்காக எவ்வளவு வேலை செஞ்சு இருக்கேன், என் மேல நம்பிக்கை இல்லாம திரும்பத் திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க.. சட்டுபுட்டு வண்டி எடுங்க. காட்டு பக்கம் நின்னு கண்ட கதை பேசிட்டு இருக்கீங்க!, நாட்டுக்குள்ள நிறைய சைக்கோ கொலைகாரங்க சுத்திட்டு திரியுறாங்க,”என்று ராஜதுரை கூறிக் கொண்டிருக்க இடையில் நுழைந்த தீபேந்திரன்.. “என்ன சைக்கோ கொலைகாரங்களா?” என்று புரியாத குழப்பத்துடன் வினவினான்.
“என்ன தம்பி இப்படி கேக்குறீங்க.. நீங்க நியூஸ் எல்லாம் பாக்குறது இல்லையா?, சென்னையில ஒரு சைக்கோ கொலைகாரன் பாக்குற மனுஷங்களை எல்லாம் கழுத்தை கடிச்சு ரத்தத்தை குடிச்சு கொன்னுட்டு இருக்கானாம். சென்னை பக்கம் போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்குன்னு நம்ம ஊர் பக்கம் வந்திருந்தா என்ன பண்றது?. இது வேற அடர்ந்த காடு எந்த பக்கம் இருந்து எவன் வருவான்னே தெரியாது சீக்கிரம் வண்டியை கிளப்புங்க” என்று அவசரப்படுத்தினார் ராஜதுரை.
மீண்டும் ஒருமுறை வந்த பாதையை திரும்பிப் பார்த்துவிட்டு வாகனத்தை கிளப்பினான் தீபேந்திரன்.
கார் சற்று தூரம் விலகிச் சென்றதும்… மீண்டும் பின் தொடர தொடங்கினான் கீர்த்தன்.
கும்பக்கரை அருவி செல்லும் வழியில், அடர்ந்த மரங்களின் நடுவில் பார்வைக்கு பல வருடம் புழக்கம் இல்லாதது போல் இருந்த கட்டிடத்தின் முன் கார் நின்றது.
வீட்டினுள் நுழைவதற்கு முன் மீண்டும் ஒருமுறை சுற்றும் முற்றும்.. பார்த்துவிட்டு தங்களைத் தவிர எவரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் தன் சட்டை பையில் இருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் தீபேந்திரன் மற்றும் ராஜதுரை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தலசீமியா என்பது இரத்த சிவப்பணுக்களை பாதிக்கும் ஒரு மரபணு கோளாறு ஆகும். இது பெற்றோரிடமிருந்து மரபணு ரீதியாக பரவுகிறது. இந்த நிலையில் அசாதாரண ஹீமோகுளோபின்களை உடல் உற்பத்தி செய்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்களுக்கு அதிகப்படியான சேதம் ஏற்படுகிறது, மேலும் இது இறுதியில் இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது.