உன் விழி
என் விழியுடன்
மௌன மொழி
பேசிடும் போது..
என்னை விட்டு
இடம் பெயர்ந்து கொள்கிறேன்
உன்னுள்…
பானுவிடம் வேண்டிய விபரம் அறிந்து வந்த ஹனிகா மன நிம்மதிக்காக சாய்பாபா காலனியில் இருக்கும் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலுக்கு சென்று அமைதி முகத்துடன் அருள்பாலிக்கும் பாபாவை மனமுருகி வேண்டிக்கொண்டவள் கோவிலின் வளாகத்தில் அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கத் துவங்கினாள்.
‘அக்காவோட தற்கொலைக்கு தூண்டுதலா இருந்தது பாலா, அப்போ அவனைப்பிடிச்சு விசாரிச்சா எல்லா விவரமும் தெரிஞ்சிடும். மாமாகிட்ட இந்த விஷயத்தை சொல்லலாமா?, சந்தியாவோடு சாவுக்கு அவர் தான் காரணம்னு குற்ற உணர்ச்சியில இத்தனை வருஷம் நிம்மதி இல்லாம வாழ்ந்துட்டு இருக்காரு, உண்மை என்னனு தெரிஞ்சா கொஞ்சமாவது மனநிம்மதி கிடைக்கும் ’ என்று முதலில் யோசித்தவள், ‘வேணாம் மாமாவுக்கு உண்மை தெரிஞ்சா சந்தியா மேல இருந்த அன்பால பாலாவ உண்டு இல்லன்னு பண்ணிடுவாரு, அது மட்டும் இல்ல, சந்தியா மனசுல அவர் மேல காதல் இல்லாம, கட்டாயத்தால தான் கல்யாணம் நடந்ததுன்னு தெரிஞ்சா ரொம்பவே வருத்தப்படுவார், அவரைப்பொறுத்தவரைக்கும் சந்தியா காதலிச்சது அவரை மட்டும் தான் அது இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும். பாலாவை விசாரிச்சு நடந்தது என்னன்னு தெரிஞ்சுகிட்டத்துக்கு அப்புறம், சரியான நேரம் பார்த்து மாமா கிட்ட பொறுமையா நடந்தத சொல்லுவோம்’ என்று விதுரனிடம் தற்போதைக்கு உண்மையை மறைக்கலாம் என்று முடிவெடுத்தாள்.
மதிய உணவு வேளை நெருங்கிடபக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்கிறேன் என்று கிளம்பிச்சென்ற மருமகள் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று கவலை கொண்ட தேன்மொழி ஹனிகாவை தொடர்பு கொண்டார்.
“ஹனி எங்க இருக்க? பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போயிட்டு வரதுக்கு உனக்கு இவ்ளோ நேரமா?” என்று சற்று பதற்றத்துடன் வினவியவருக்கு “ சாரி அத்தை, நான் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போகல, வீட்டை விட்டு கிளம்பும் போது ராதா அக்கா இன்னைக்கு வியாழக்கிழமைன்னு சொன்னாங்களா, வழக்கமா வியாழக்கிழமைன்னா, சாய்பாபா கோயிலுக்கு போய் பாபாவுக்கு சலாம் போடுறது வழக்கம், அதான் கோயம்புத்தூர்லயே ரொம்ப ஃபேமஸான சாய்பாபா காலனி பாபா கோயிலுக்கு வந்திருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்துல கேப் புக் பண்ணி வீட்டுக்கு வந்துடுவேன் நீங்க கவலைப்படாம இருங்க” என்று விபரம் கூறி வைத்தாள் ஹனிகா.
கார் கிடைத்ததா எங்கு வந்து கொண்டிருக்கின்றாள் என்று அறிய மீண்டும் அவள் அலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டார் தேன்மொழி அது சுவிட்ச் ஆப் என்று பதில் தர தன் மருமகளுக்கு என்னானதோ ஏதானதோ என்ற பதற்றத்துடன் மகனை தொடர்பு கொண்டார். “ கோயிலுக்கு போயிட்டு வரேன்னு சொன்ன ஹனி இன்னும் வீடு வந்து சேரல விதுரா” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் இடையில் புகுந்த விதுரன், “பக்கத்தில எங்கயாவது நேரம் போனதே தெரியாம பராக்கு பார்த்துட்டு இருப்பா, அவ என்ன சின்னக் குழந்தையா வழி தெரியாம போக வந்திடுவா அம்மா” என்று அன்னையை சமாதானம் செய்ய முயன்றான் விதுரன்.
“புரியாம பேசாத கண்ணா, பக்கத்து கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு இங்க இருந்து சாய்பாபா காலனி பாபா கோயிலுக்கு தனியா போயிருக்கா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன் பண்ணுனேன். கேப் புக் பண்ணி வந்துடுறேன்னு சொன்னா, இப்போ ட்ரி பண்ணுனா போன் சுவிட்ச் ஆப்னு வருது, எனக்கு என்னமோ பயமா இருக்கு” என்று தன் பயத்தின் காரணம் கூறினார் தேன்மொழி.
“போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும் இருக்கும். நீங்க பயப்படாதீங்க நான் போய் என்னன்னு பாக்குறேன்” என்று அன்னைக்கு ஆறுதல் சொன்னவன், ஹனிகா எண்ணிற்கு தொடர்பு கொள்ள அவனுக்கும் அதே பதில் கிடைத்திட, மனதில் அச்சம் மெதுவாய் குடி புகுந்தது.
மதிய உணவு இடைவெளி, விதுரன் அலுவலகம் இருக்கும் அதே கட்டடத்தின் கீழ் தளத்தை தனது சட்ட ஆலோசக அலுவலகமாக பயன்படுத்திக் கொண்டிருந்த மாதவன். விதுரன் பதட்டமாய் வருவதை கண்டு “என்ன விதுரா, டென்ஷனா தெரியுற? ஏதாவது பிரச்சனையா? “ என்று விசாரித்தபடி வர அவரிடம் தன் அன்னை சொன்ன செய்தியை பகிர்ந்தவன், “ அவளுக்கு இந்த ஊருல எந்த இடமும் சரியா தெரியாது. அதான் பயமா இருக்கு” என்றான் விதுரன்.
“ பயப்படாத ஒன்னும் ஆகாது, நீ ரொம்ப டென்சனா இருக்க இந்த நிலைமையில நீ கார் ஓட்ட வேணாம், நானும் உன் கூட வரேன்” என்றவர் சற்றும் தாமதிக்காமல் தனது ஜூனியரை அழைத்து அலுவலக பொறுப்பை கூறிவிட்டு விதுரனுடன் புறப்பட்டார் மாதவன்.
இருவரும் வெளியில் கிளம்பிய சிறிது நேரத்தில், விதுரனின் அலைபேசி மெதுவாய் சினுங்கியது. அழைப்பது யார் என்று கவனிக்க அது கோவை லேண்ட்லைன் எண்ணாக இருக்க சற்று யோசனையுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், “ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாய்பாபா காலனிகிட்ட, நடந்த பைக் ஆக்சிடென்ட்ல ஒரு பொண்ணுக்கு அடிப்பட்டு மயக்கமான நிலைமையில ட்ரீட்மென்ட்க்காக இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க. அந்த பொண்ணுக்கிட்ட இருந்த பர்ஸல இந்த மொபைல் கிடைச்சது எமர்ஜென்சி ஆப்ஷன்ல உங்க நம்பர் இருந்தது, அதான் உங்கள காண்டாக்ட் பண்ணுனோம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு வந்துருங்க” என்று ஹாஸ்பிடல் விபரம் கூறி அழைப்பை துண்டித்தார்.
அவர்கள் சொன்ன செய்தியில் இடிவிழுந்தது போல் உடைந்து விழுந்தவன் தான் ஆண் என்பதையும் மறந்து கண்ணீருடன் “ஹனிக்கு ஆக்ஸிடெண்ட்” என்று எதையும் முழுதாய் சொல்ல முடியாமல் திக்கித்திணறியபடி பேசினான் விதுரன்.
அவன் நிலை என்னவென்று உணர்ந்த மாதவன், “ ஹனிக்கு ஒன்னும் ஆயிருக்காது நீ பயப்படாத” என்று ஆறுதல் கூறி அவன் சொன்ன தனியார் மருத்துவமனைக்கு காரை செலுத்தினார்.
“நீ உள்ள போய் விசாரிச்சுட்டு இரு நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்” என்று விதுரனை முன்னே அனுப்பிவைத்து அந்த குறுகலான பாதையில் காரை நிறுத்த இடம் தேடிச் சென்றார் மாதவன்.
பதற்றத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்தவன் அங்கு இருந்த செவிலியரிடம் விபரம் கேட்க, “ அந்த ஆக்சிடென்ட் கேஸா, ஆமா நீங்க அந்த பொண்ணுக்கு என்ன வேணும்?” என்று குறுக்கு விசாரணை செய்தார்.
“ நான் அவளோட ஹஸ்பண்ட், எனக்கு இங்க இருந்து போன் வந்தது” என்று விதுரனும் தன் விபரம் கூறிட.. “ஓ.. நான் தான் பேசினேன், முதல பில் பணத்தை கட்டுங்க,” என்று மருத்துவ செலவிற்கான பணத்தை கட்டும்படி அவசரபடுத்தினார் அந்த செவிலியர்.
“ முதல என் ஹனி எங்க, எப்படி இருக்கான்னு சொல்லுங்க, அவளைப் பார்த்துட்டு வந்துட்டு உங்களுக்கான பணத்தை கட்டுறேன்” என்று அவர்களின் செயலில் உண்டான கோபத்தில் சிடுசிடுத்தான் விதுரன். “ முதல பில்லுக்கான பணத்தை கட்டுங்க சார், டாக்டர் வர நேரமாச்சு”, என்று மீண்டும் அந்த செவிலியர் பணத்திலேயே குறியாக நிற்க பில்லுக்கான பணத்தை கட்டினான் விதுரன்.
“உங்க பில்லுக்கான பணத்தை கட்டிட்டேன், இப்போ சொல்லுங்க என் வைஃப் எந்த ரூம்ல இருக்காங்க” என்று விதுரன் கேட்டுக்கொண்டிருக்க காரை சரியான இடம் பார்த்து நிறுத்திவிட்டு அங்கு வந்து சேர்ந்தார் மாதவன்.
“என்ன விதுரா ஹனியை பார்த்தியா?” என்று மாதவன் விசாரிக்க “ எங்க ஹீரோ சார், வந்ததுல இருந்து பணத்தை மட்டுமே கேட்டுறாங்க, ஹனியை பத்தி எந்த விபரமும் சொல்ல மாட்டேகிறாங்க” என்று கவலையுடன் அலுத்துக்கொண்டான் விதுரன்.
இருவரின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த செவிலியரோ.. “ அந்த பொண்ணு அப்பவே இங்க இருந்து தப்பிச்சு ஓடிடுச்சு. இந்தாங்க இது அவங்களோட பர்ஸ் மொபைல்” என்று அசட்டையாக பதில் தந்தபடி ஹனிகாவின் பொருட்களை விதுரனிடம் கொடுத்தார் அவர்.
“ ஓடிட்டாங்களா? என்ன இவ்வளவு அசால்டா பதில் சொல்றீங்க இதான் நீங்க பேஷண்ட்ட கவனிச்சிக்குற லட்சணமா?, வந்ததும் மறக்காம பில் பணத்தை மட்டும் கட்டச்சொல்லி கேட்குறீங்க, அதுல இருக்கிற அக்கறை கொஞ்சம் பேஷன்ட்டை பத்திரமா பார்த்துகிறதுலயும் இருக்கணும்” என்று மாதவன் கோபமாய் குரலை உயர்த்தினார்.
“ என்ன சார் உங்களோட வம்பா போச்சு, ஆக்சிடென்ட்டாகி மயக்கத்துல இருந்த பொண்ண இரண்டு பேர் கொண்டு வந்து சேர்த்தாங்க. மயக்கம் தெளிச்சு பார்த்து நான் எப்படி இங்க வந்தேன், அது இதுன்னு கண்டபடி கத்திட்டே இருக்கவும் இப்படியே கத்திட்டே இருந்தா உங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கமுடியாது, ஏற்கனவே இது ஆக்சிடெண்ட் கேஸ் போலீசுக்கு வேற போன் பண்ணனும், சொல்லி வாய மூடல, அடிபட்ட காயத்துக்கு ஒழுங்கா மருந்து கூட வைக்கவிடாம, பில்லுக்கான பணத்தையும் கட்டாம, தப்பிச்சு ஓட்டிடங்க, அதான் உங்கள கட்டச்சொன்னேன், உங்க வைஃப் ட்ரீட்மென்ட் செலவுக்கு என் கைக்காசையா போட முடியும், நானே டாக்டர் வந்து கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு நிற்கிறேன். இதுல நீங்க வேற” என்று அந்தப் பணியாளரும் குரலை உயர்த்த, “ நடந்ததுல உங்க தப்பே இல்லாத மாதிரி எவ்ளோ திமிரா பதில் சொல்றீங்க. நான் லாயர், இருங்க கேஸ் போட்டு எல்லாரையும் உள்ள தள்ளுறேன்” என்று விடாமல் வாதம் செய்தார் மாதவன்.
ஹனிகாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அறிந்து நிம்மதியை உணர்ந்தவன் செயலற்று கிடந்த அவள் மொபைலை உயிர்ப்பித்திட, எப்போது மொபைல் உயிர்ப்படையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல, செல்லமாய் சிணுங்கியது அலைபேசி. புது எண் திரையில் ஒளிர தயக்கத்துடன் விதுரன் எடுத்து காதில் வைத்து பேசத்துவங்கும் முன்பே “ஹேய் ஃபிராடு. எங்கடி இருக்க என் கையில சிக்குன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. இருக்கிற கொலை பசில உன்னை கொலை பண்ணி சூப் வைச்சு குடிச்சுடுவேன், இன்னும் பத்து நிமிஷத்துல எங்க இருந்து என் பர்ஸை ஆட்டையை போட்டு போனாயோ அதே இடத்துக்கு திரும்பி வந்து தரணும், தரல உன்னை தரதரன்னு இழுத்துட்டுப் போயி கம்பி என்ன வச்சுடுவேன், என் மாமா யாருன்னு தெரியுமா? ” என்று எதிரில் இருப்பவர் பேசவே இடம் தராமல் பொரிந்து தள்ளினாள் ஹனிகா.
ஹனிகாவின் குரலைக் கேட்டு இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் தெளிவடைந்திட சற்று நேரம் எதுவும் பேசாமல் நிம்மதியுடன் வாயடைத்து நின்றான்.
தன் கோபத்திற்கு எதிர் திசையில் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக “பேசாம இருந்தா உன்னை விட்டு விடுவேன்னு நினைக்கிறயா, நெவர்!” என்று மீண்டும் ஹனிகா கடுகடுக்க “என் பொண்டாட்டி வீரசூரப் புலின்னு ஒத்துக்குறேன், நீ எங்க இருக்குன்னு சொல்லு, நேர்ல வந்து உன் வீரத்துக்கு பரிசு தரேன், ஆமா இது யார் நம்பர்?” என்று தன்னவள் குரலில் தெளிவடைந்து நிம்மதியான மனநிலையில் ஹனியின் துடுக்கு தனத்தை உள்ளுக்குள் ரசித்தபடி வினவினான் விதுரன்.
“அட.. விது மாமா, நீங்களா?”, என்று அசடு வழிந்த படி “சாய்பாபா கோவில் பக்கத்துல தான் இருக்கேன், இங்க ஒரு அம்மா தான் என் பர்ஸ திருட்டு போனதும் அவங்களோட போனை குடுத்து வீட்டுக்கு பேச சொன்னாங்க” என்று தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு கூறினாள் ஹனிகா. “ இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்றவன் அந்த அம்மாகிட்ட போனை குடு, என்றிட, “அம்மா என் வீட்டுக்காரார் உங்ககிட்ட பேசனும்னு சொல்லுறாரு”, என்று அலைபேசியை உதவியவரிடம் கொடுக்க அதை வாங்கி பேசிட துவங்கினார் அந்த பெண்மணி.
“ உங்க உதவிக்கு ரொம்ப நன்றி மேடம். நாங்க இங்க பக்கத்துல தான் இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்திடுவோம், அதுவரைக்கும் அவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்க முடியமா? பார்க்க தான் வாயாடி மாதிரி தெரியுவா ஆனா வளர்ந்த குழந்தை அவ” என்று கெஞ்சலுடன் உதவி கேட்டான் விதுரன்.
அவன் குரலில் இருந்த அக்கறையை எண்ணி மெலிதாய் மலர்ந்த புன்னகையுடன் “நீங்க என்கிட்ட இந்த உதவிய கேட்க வேண்டியதில்ல. நீங்க வந்து கூட்டிட்டு போற வரைக்கும் நான் இந்த பொண்ணை விட்டு நகரமாட்டேன் பயப்படாம பொறுமையாவே வாங்க”,என்று சம்மதம் சொன்னார் அந்தப் பெண்மணி.
நிம்மதியான பெருமூச்சு வெளியேற்றி மருத்துவமனை செவிலியருடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த மாதவன் அருகில் வந்த விதுரன், “ ஹீரோ சார்! இங்க என்ன வெட்டியா அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க ஹனி எங்க இருக்கான்னு தெரிஞ்சிருச்சு வாங்க போகலாம்”, என்று அழைக்க, “அடப்பாவி வெட்டி அரட்டையா, உனக்காகத்தான் என் எனர்ஜி எல்லாம் வேஸ்ட் பண்ணி இபிகோ செக்சன் எல்லாம் சொல்லிட்டு இருந்தேன்” என்று சலிப்புடன் விதுரனை பின்தொடர்ந்து சென்றார் மாதவன்.
மாதவன் சட்டமாய் சட்டதிட்டம் பற்றி பாடம் எடுத்திட இனி என்ன ஆகுமோ என்று கவலையுடன் இருந்தவர் அவர் பிரச்சனை செய்யாமல் விலகி செல்லவும் நிம்மதி பெருமூச்சை வெளியேற்றி தனது வேலையை கவனிக்கச் சென்றார் செவிலியர்.
காரில் சென்று கொண்டிருக்கும் போதே விதுரனை அழைத்த தேன்மொழி.. “எங்க இருக்க விதுரா? எத்தனை தடவை உனக்கு ட்ரை பண்றேன், நாட் ரீச்சபில்னே வருது”, என்று நிறுத்தியவர், “நீ சொன்ன மாதிரி ஹனியோட போன் சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு போல. யாரோ ஒருத்தவங்க போன்ல இருந்து கொஞ்சநேரத்துக்கு முன்னாடி கால் பண்ணுனா. கோயில் பக்கத்துல தான் இருக்கிறதா சொன்னா, சீக்கிரம் போய் கூப்பிடு” என்று அதுவரை இருந்த கவலை மறந்து நிம்மதியான குரலில் மகனுக்கு கட்டளை பிறப்பித்தார் தேன்மொழி.
“அவ எனக்கும் போன் பண்ணுனா, நான் இப்போ ஹனியை தான் கூப்பிட போயிட்டு இருக்கேன் அம்மா” என்றான் விதுரன்.
“என்ன உனக்கும் பேசினாளா? உன்னோட புதுபோன் நம்பர் சரியா நியாபகம் இல்லன்னு தான பழைய நம்பருக்கு கூப்பிட்டேன்னு சொன்னா!” என்று தேன்மொழி குழம்பிட “ அது பெரிய கதை வீட்டுக்கு வந்து சாவகாசமா உங்க மருமக சொல்லுவா”, என்று விதுரன் தன் அன்னையை சமாளித்துக்கொண்டிருக்கும்போதே இருக்குமிடம் வந்திருந்தது நெரிசலான பாதையில் காரை நிறுத்த இடமில்லாமல் சற்று தொலைவில் இருந்த பார்க்கிங்கில் மாதவன் காரை கொண்டு நிறுத்த அதற்குள் பொறுமை இழந்தவனாக கார் நிற்கும் முன்பே அவசரமாக கதவை திறந்து கொண்டு ஹனிகா இருக்கும் இடம் சென்றான் விதுரன்.
தூரத்திலேயே தன்னவனை கண்டுகொண்டவள் மனம் மகிழ்ச்சியில் நிறைய கண்கள் அதை அழகாய் பிரதிபலித்தது. “ அதோ வராரு பாருங்க அவர் தான் என்னோட வீட்டுக்காரர்” என்று தனக்கு உதவிய பெண்மணிக்கு தன் கணவனை சுட்டிக் காட்டியவள் அருகில் வர வர மனம் குற்ற உணர்வில் மெதுவாய் பயம் கொள்ளத்துவங்கியது.
அவள் பயந்தது போலவே ஹனிகா அருகில் வந்த விதுரன் அவளிடம் எதுவும் பேசாமல் அருகில் இருந்த நடுத்தர வயதான பெண்மணிக்கு தன் நன்றியை தெரிவித்துவிட்டு மனைவியுடன் கிளம்ப தயாரானான்.
“காலம் கெட்டு கிடக்கு எல்லாரும் நம்மள மாதிரி நலவங்களா இருப்பாங்கன்னு நினைக்காத, இன்னொரு தடவை இப்படி வீட்டில யார்கிட்டயும் சொல்லாம வரக்கூடாது, என்ன புரியுதா?” என்று அன்னையின் கண்டிப்புடன் அறிவுரை வழங்கினார் அந்த பெண்மணி.
பூம்பூம் மாடு போல சம்மதமாய் தலையசைத்து தன்னிடம் பாராமுகம் காட்டும் விதுரனை ஏக்கமாய் பார்த்தபடி அவனை பின் தொடர்ந்து சென்றாள்.
மாதவன் காரை திருப்பிக்கொண்டு வர இருவரும் காரில் ஏறி வீட்டை நோக்கி பயணித்தனர். காரில் சிறிது நேரம் பெரும் அமைதி நிலவியது, விதுரன் ஹனிகாவிடம் நேரடியாக எதுவும் பேசாமல் இருக்க, “ உன் நம்பர் சுவிட்ச் ஆப்னு வரவும் விதுரன் என்ன செய்யறதுன்னு தெரியாம பயந்துட்டான், அப்போ தான் உனக்கு ஆக்சிடென்ட்டுன்னு போன் வந்தது, அங்க போய் பார்த்தா, நீ பாதி ட்ரீட்மென்ட்லேயே ஹாஸ்பிடல்ல இருந்து ஓடிட்டான்னு சொல்றாங்க, ஊசிக்கு பயந்து ஹாஸ்பிடல்ல இருந்து ஓட்டிடயா? உன்கிட்ட அடிபட்டதுக்கான அடையாளமே இல்லையே!” என்று மாதவன் மட்டும் தனது சந்தேகத்தை வரிசையாய் அடுக்கினார்.
அப்போதும் விதுரன் எதுவும் பேசாமல் இருக்கஅவனை கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தவள், அதற்கும் விதுரன் கோபமாய் விரைப்புடன் அமர்ந்திருக்க, மாதவனுக்கு பதில் சொல்வதுபோல நடந்ததை விவரிக்க துவங்கினாள் ஹனிகா “கோவில்ல பயங்கர கூட்டம் அண்ணா, நான் எப்படியாவது சாமியை பார்த்துட்டு தான் கிளம்பனும்னு ரொம்பநேரம் வெயிட் பண்ணி வரிசையில நின்னு நல்லபடியா சாமியைக் கும்பிட்டு வெளிய வரேன், ஒரு பொண்ணு, நல்ல குடும்பத்து பொண்ணு மாதிரிதான் தெரிஞ்சா, எந்த ஊரு என்னன்னு சாதாரணமா பேச்சு கொடுத்தாங்க. நானும் பாக்க நல்லவங்களா தான் இருக்காங்கன்னு கேப் வர வரைக்கும் அவங்க கூட நின்னு பேசிட்டிருந்தேன். நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க, திடீர்னு என் கையில இருந்த பர்சை புடிங்கிட்டு ரோடு கிராஸ் பண்ணி ஓடிட்டாங்க. அவங்க பின்னாடி நான் ஒடுறதுக்குள்ள சிக்னல் விழுந்திருச்சு எனக்கு என்ன பண்றதுன்னே புரியல அப்போ ரொம்ப நேரமா எங்க பக்கத்துல நின்னு எங்களை கவினிச்சுட்டு இருந்த அம்மாதான், இது உன் ஊரு மாதிரி இல்ல. கொஞ்சம் சூதானமா இருக்கணும்னு சொல்லிட்டு அவங்களோட போனை என்கிட்ட கொடுத்து வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ண சொன்னாங்க. எனக்கு விது மாமாவோட புது நம்பர் சரியா ஞாபகமே இல்லை, பழைய நம்பர் தான் நல்லா மனசுல பதிஞ்சு இருந்துச்சு, அந்த நம்பரை நெட்வொர்க் சரியா கிடைக்கலைன்னு அத்தைகிட்ட குடுத்துட்டார். அத்தைகிட்ட எல்லா விவரமும் சொல்ல முடியாது ரொம்ப பயந்திடுவாங்கல்ல அதான் போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு மட்டும் சொன்னேன்”, என்று தனக்கு நடந்ததை ஹனிகா கூறி முடிக்க அதற்கும் அசையாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் விதுரன்.
“ஹாஸ்பிடல்ல நான்தான் அடிபட்டு கிடக்கிறேன்னு நினைச்சு பயந்துட்டு வந்து பார்த்து நோஸ்கட் வாங்கிட்டீங்களா?” என்று தன்னிடம் கோபம் முகம் காட்டும் கணவனின் கோபத்தையும் ரசித்து சிரித்தபடி வினவினாள் ஹனிகா.
“நோஸ்கட் வாங்குனது கூட பரவால்ல, உன்கிட்ட திருடிட்டு ஒடுன பொண்ணோட ட்ரீட்மென்ட் செலவுக்கு பணம் கட்டிட்டு வந்திருக்கோம் அதுதான் இருக்கிறதுலையே ஹைலைட்டான காமெடி” என்று சிரித்தார் மாதவன்.
“அச்சோ.. என் விது மாமா, ஏமாந்ததும் இல்லாம பணமும் போச்சா?” என்று ஹனி அதையும் கேலி செய்து சிரித்திட அதுவரை அமைதியாய் இருந்தவன் பொறுமை காற்றில் பறந்தது. நன்றாக அவள் புறம் திரும்பி பார்த்து முறைத்தவன், “சிரிக்காத சின்ன குழந்தையா நீ! உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பயத்துல ஓடி வந்தா நீ கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இருக்க, உனக்கு எங்கேயாவது போகணும்னா என்கிட்ட சொல்ல வேண்டியதுதான நான் கூட்டிட்டு போவேன்ல. அதைவிட்டுட்டு யார்கிட்டயும் சொல்லாம இப்படி கிளம்பி வந்தா என்ன அர்த்தம்? உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன், உன்னையும் இழந்துட்டு பைத்தியம் பிடிச்சு அலைய சொல்லுறியா?” என்று கோபமாய் கத்திக்கொண்டு இருந்தவன் உள்ளுக்குள் என்னவோ தெளிவாகிட, அதுவரை குழப்ப மேகத்தில் மறைந்திருந்த மனதின் உணர்வுகள் வெளிவர அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகினான்.
விதுரன் கோபத்தை கண்டவள் அதற்கு மேல் வாயாடாமல் மௌனம் கொள்ள வீடு வந்து சேர்ந்ததும் ஹனிகாவை வீட்டில் இறக்கிவிட்டவன், “ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நைட் வர லேட் ஆகும்”, என்று சொல்லி விடைபெற்று சென்றான் விதுரன்.
நான் நானாக இருக்கிறேன்…
இருந்தும்.. ஏன் என்னுள் உன்னை காண்கிறேன்..
இது காதல் என்பேனா..
உன் கண்களின் மாயம் என்பேனா..
புதிராய் நீ..
புரியாமல் நான்..