14….

அணைத்து ஆறுதல் கூற…
மனம் துடிக்கிறது…
விட்டு விலகி நிற்க
விதி கட்டளை இடுகிறது..
இந்நிலை மாறுமோ!…
என் மனம் உன்னை சேருமோ!…

கீர்த்தனின் வசியத்திற்கு கட்டுப்பட்ட ராஜதுரை தீபேந்திரன் குறித்த எவரும் அறியாத பல விவரங்களை கூறத் துவங்கினார்.

சிறு வயதில் பெற்றோரை இழந்த பிறகு தாய் மாமனிடம் தஞ்சம் புகுந்த தீபேந்திரன் எவரிடமும் ஒட்டுதல் இல்லாமல் தான் பழகி வந்துள்ளான்.

தனிமையை நாடிச் செல்லும் அத்தை மகன் மீது இரக்கம் கொண்ட சுஹனி தீபேந்திரனை அணுகி அன்பு காட்டத் துவங்கினாள்.

சிறு பெண் காட்டிய அனுதாப அன்பில் கொஞ்சம் கொஞ்சமாய் அடிமையாக துவங்கிய தீபேந்திரன் சுஹனியை தன் உடமையாகவே பாவிக்க துவங்கினான்.

சுஹனியிடம் வேறு எவரும் நெருங்க அனுமதிக்காத அளவிற்கு தீபேந்திரனின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்தது என்று சுஹனி மற்றும் தீபேந்திரனுக்கு நடுவில் அன்பு உருவான கதையை ராஜதுரை விவரித்து கொண்டிருக்க…

“தீபேந்திரன் சுஹனியை உயிருக்கு உயிரா அளவுக்கு அதிகமா காதலிக்கிறான்னு சொல்றீங்க, அப்புறம் எதுக்கு கட்டாய கல்யாணம் பண்றதுக்காக கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வரணும், வசியம் பண்றதுக்கு எதுக்கு தேவையில்லாம பூஜை பண்ணனும்” என்று விளக்கம் கேட்டான் கீர்த்தன்.

“தீபேந்திரன் தம்பி தான், சுஹனி பாப்பாவை விரும்புது, ஆனா பாப்பாவுக்கு தம்பியை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல.. ” என்றார் ராஜதுரை.

“ஏன்?” என்று ஒற்றை வரியில் கேள்வி எழுப்பினான் கீர்த்தன்.

“தீபேந்திரன் நடவடிக்கை சரியில்ல… “என்று ராஜேந்திரன் கூறிக் கொண்டிருக்க இடையில் நுழைந்த கீர்த்தன், ” ஓ.. நிறைய கெட்ட பழக்கம் இருக்குமோ!” என்றான்.

இல்லை என்பது போல் மெதுவாய் தலைசைத்தவர் மேலும் விவரம் கூறத் துவங்கினார், ” தம்பி சின்ன வயசுல பெத்தவங்கள இழந்துட்டு இங்க வந்தப்போ ஆரம்பத்துல ஒன்னும் தெரியல, போகப் போக தம்பியோட நடவடிக்கைல ரொம்பவே வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சது. எப்பயும் ஏதாவது ஒரு இடத்துல போய் உட்கார்ந்துட்டு, எதையோ யோசிச்சிட்டு முன்னாடி ஆள் இருக்கிற மாதிரி தனியா பேசிட்டு இருக்கும். இங்க தனியா உக்காந்து என்ன யோசிச்சிட்டு இருக்கன்னு கேட்டா, நான் எங்க தனியா இருக்கேன்… இங்க தான் என் அப்பா அம்மா இருக்காங்களே!, நான் அவங்க கூட தான் பேசிட்டு இருக்கேன்னு சொல்லும். பெத்தவங்கள இழந்த சோகத்துல இப்படி பேசுதுன்னு அப்போ யாரும் பெருசா எடுத்துக்கல, சுஹனி பாப்பாவும் தீபேந்திரன் தம்பியோட சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அவரோட மனநிலைய மாத்துறதுக்காக பாசமா பழக ஆரம்பிச்சது. இனி எல்லாம் சரியா போயிடும்னு எல்லாரும் நம்பிக்கையா இருக்கும்போது, தம்பியோட நிலைமை இன்னும் மோசமாக ஆரம்பிச்சிடுச்சு, அதுவரைக்கும் தனியா பேசிட்டு இருந்தது கொஞ்சம் கொஞ்சமா அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி அத பார்த்து ரசிக்க ஆரம்பிச்சது, வீட்ல வளர்த்த ஆடு, மாடு, கோழின்னு வாயில்லா ஜீவன்களை கூட விட்டு வைக்காம நோகடிக்க ஆரம்பிச்சது. ஒரு நாள் அப்படித்தான் சுஹனி பாப்பா ஆசையா வளர்த்த மீனை.. தண்ணில இருந்து வெளியே எடுத்து போட்டு அந்த மீன் உயிர் போற வேதனையில துடிக்கிறத பாத்து சிரிச்சிட்டு இருந்தது. தம்பி இப்படி கொடூரமா நடந்துக்கிறத, சுமதி அம்மா பாத்துட்டாங்க.. என்ன ஏதுன்னு விசாரிச்சதுக்கு, ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்குனு சொல்லுச்சு..” என்று அதிர்ந்த முக பாவனையுடன் அன்று நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்த்தவர் வார்த்தைகள் தடைப்பட்டு போனது.

“என்ன சொல்றீங்க, ஐஸ்கிரீம் சாப்பிடணும் மீனை சித்திரவதை பண்ணுனானா?, ஏன்?” என்று குழப்பத்துடன் வினவினான் கீர்த்தன்.

“நமக்கு பிடிச்சது கிடைக்கனும்னா சாமிக்கு பலி கொடுக்கணும். எனக்கு ஐஸ் கிரீம் கிடைக்கனும்னு இந்த மீனை பலி கொடுத்தேன்னு சொல்லுச்சு. ” என்றார் ராஜதுரை.

“என்ன..?” என்று நம்ப முடியாத முகபாவனையுடன் மேலும் கதை கேட்க துவங்கினான் கீர்த்தன்.

“இப்படி எல்லாம் இன்னொரு உயிர சித்திரவதை பண்ண கூடாதுன்னு சுமதி அம்மா தம்பிக்கு புரிய வைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கும்போது, வெளி வேலைக்கு போயிட்டு வந்த சுதாகர் ஐயா கையில குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தாரு. ” என்று ராஜதுரை கூறிய கதையை தன் கற்பனையில் காட்சியாய் ஓட்டிப் பார்த்தான் கீர்த்தன்.

“சுஹா… தீபு.. ஓடி வாங்க ஓடி வாங்க உங்களுக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க.. “என்று ஆசையாய் குழந்தைகளை அழைத்தவர் தனது கையில் வாங்கி வந்த பொருளை உயர்த்தி காட்டி..” ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்திருக்கேன் உங்களுக்காக..” என்று அறிவித்தார் சுதாகர்.

“பாருங்க அத்தை நான் மீனை பலி கொடுக்கவும் எனக்கு ஐஸ்கிரீம் கிடைச்சிடுச்சு.. “என்று தீபேந்திரன் துள்ளலுடன் அறிவிக்க.. “இது தற்செயலா நடந்தது.. இது மாதிரி அடிக்கடி நடக்காது, இனிமே எந்த உயிரையும் சித்திரவதை பண்ணாத!” என்று எச்சரிக்கை வழங்கினார் சுமதி.

“நான் அப்படித் தான் செய்வேன், எனக்கு ஏதாவது கிடைக்கணும்னா.. அது எனக்கு கிடைச்சே ஆகணும் அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்..”என்று பிடிவாதமாக அறிவித்தான் தீபு என்று அழைக்கப்படும் தீபேந்திரன்.

“உன் தேவைக்காக அடுத்தவங்களை கஷ்டப் படுத்துவியா.?”என்று அடக்க முடியாத கோபத்துடன் சுமதி வினவ.. “என்கிட்ட இப்படி பேசாதீங்க.. எனக்கு இது பிடிக்கல..” என்று தன் தவறு புரியாமல் பேசினான் தீபு.

“எனக்கும் தான் நீ செய்றது எதுவும் புடிக்கல…”என்று சிறுவனுக்கு இணையாக சுமதி கோபத்தை காட்டிக் கொண்டிருக்க இருவரின் வாதத்திற்கு இடையூறாக வந்து நின்றவர், “என்ன நடக்குது இங்க?, ஐஸ்கிரீம் உருகிடப் போகுது வாங்க சீக்கிரம்..” என்று நடந்து கொண்டிருந்த வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றார் சுதாகர்.

கற்பனைக் காட்சியிலிருந்து வெளிவந்த கீர்த்தன் ராஜதுரையின் வார்த்தைகளில் கவனம் செலுத்த துவங்கினான்.

“இது தற்செயலா நடந்த விஷயம் தான் ஆனா தம்பி மனசுல ஒன்னு வேணும்னா இன்னொன்னை அழிக்கணுங்கிற எண்ணம் ஆழமா பதிஞ்சு போச்சு. இந்த சம்பவத்துக்கு அப்புறம் சுமதி அம்மாவோட கவனம் எப்பவும் தம்பி மேலயே இருந்தது. அதுக்கு அடுத்து தம்பி அந்த மாதிரி முரட்டுத் தனமா நடந்துக்காம ரொம்ப அமைதியாகவே இருந்தாரு. அம்மாவும் அதை பெருசு படுத்தல. “என்றார் ராஜதுரை.

“இந்த மாதிரி நம்பிக்கை அந்த சின்ன வயசுல எப்படி வந்தது?, “என்று சந்தேகத்துடன் கீர்த்தன் வினவ…”ஒருவேளை தம்பியோட அப்பா கிட்ட இருந்து… வந்திருக்கலாம். அவரும் இதே மாதிரி தான் மந்திரம் மாயம்னு ஏதாவது சொல்லிட்டே இருப்பாரு. மாந்திரீகம் சம்பந்தப்பட்ட புத்தகம் நிறைய வாங்கி படிப்பாரு, இப்ப கூட தம்பியோட ரூம்ல அவங்க அப்பா சேகரிச்சு வச்ச புத்தகம் நிறைய இருக்கு. நேரம் போறதே தெரியாம தம்பி அதைத்தான் படிச்சிட்டு இருக்கும்.”என்று விளக்கம் கொடுத்தார் ராஜதுரை.

“நீங்க சொல்றத வச்சு பார்க்கும்போது, தீபேந்திரன் அவனோட குணத்த மாத்திகிட்ட மாதிரி தெரியலையே..”என்று கீர்த்தன் வினவ.. “நீங்க சொல்றது சரிதான்.. தம்பி அதோட குணத்தை மாத்திக்கல யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு கொஞ்ச நாள் அமைதியா இருந்திருக்கு அவ்வளவுதான். ஒரு நாள் தம்பி பத்தாவது படிச்சிட்டு இருந்த சமயத்துல, தோட்டத்துல கழுத்தறுபட்டு கோழி செத்து கிடந்தது. என்ன ஏதுன்னு யாருக்கும் புரியல.. ஏதோ பூச்சி பொட்டு வேலையா இருக்கும்னு எல்லாரும் விட்டுட்டோம். அடுத்து கொஞ்ச நாள்ல இன்னொரு கோழி செத்து கிடந்தது. இப்படி அடிக்கடி நடக்கிறத பார்த்து சுமதி அம்மாவுக்கு இது தீபேந்திரன் தம்பியோட வேலையா இருக்குமோன்னு சந்தேகம் வர ஆரம்பிச்சது. அதனால அம்மா தம்பியை தனியா கூப்பிட்டு விசாரிச்சாங்க.. ஸ்கூல்ல ஒரு வாத்தியார் அவரை அடிச்சதுக்காக அவர் கை உடையனும்னு வேண்டிக்கிட்டு சாமிக்கு கோழியை பலி கொடுத்ததா சொன்னாரு. இந்த முட்டாள் தனத்தை நீ இன்னும் விடவே இல்லையா?, இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோ.. இல்லைனா உன் மாமா கிட்ட இதையெல்லாம் நீ தான் பண்றேன்னு சொல்லிடுவேன்னு மிரட்டுனாங்க. தம்பி சுமதி அம்மாவை வெறுக்க ஆரம்பிச்சது. அடுத்த நாள் பசுமாடு ஒன்னு கழுத்துல அறுபட்டு செத்து கிடந்தது. ” என்று ராஜதுரை கூறிக் கொண்டிருக்க இடையில் நுழைந்த கீர்த்தன்.” அப்போ அவன் யார் பேச்சையும் கேட்டு அவனோட நடவடிக்கையை மாத்திக்கல. அவன் அத்தையை பழி வாங்கணும்னு மாட்டை பலி கொடுத்திருக்கான் அப்படித்தானே!” என்று தீபேந்திரன் குணத்தை சரியாக கனித்துக் கூறினான் கீர்த்தன்.

“ஆமா.. பால் கொடுத்த பசு மாடு இப்படி செத்து கெடக்குற செய்தி கேட்டு.. அவசரமா ஓடி வந்த சுமதி அம்மா மாடி படியில் இருந்து கால் தவறி கீழே விழுந்துட்டாங்க.. தலைல பயங்கரமா அடிபட்டு ஆறு மாசம் சுயநினைவே இல்லாம படுத்த படுக்கையா கிடந்தாங்க..”என்று அன்று நடந்த விபரீதத்தை விவரித்தார் ராஜதுரை.

” இது எதுவும் சுஹனி அப்பாவுக்கு தெரியாதா?” என்ற கீர்த்தன் வினவ..”பேச்சு மூச்சு இல்லாம கிடந்த சுமதி அம்மா படுக்கையை விட்டு எந்திரிச்சதும் முதல்ல ஐயா கிட்ட தான் எல்லாம் விஷயத்தையும் சொன்னாங்க. அவனும் அவன் அப்பா மாதிரியே மாயம் மந்திரம்னு சொல்லிட்டு திரியுறானான்னு கோபப்பட்ட சுதாகர் ஐயா உடனே தம்பியை கூப்பிட்டு வெறி புடிச்ச மாதிரி பெல்டால விலாசிட்டாரு. உன் அப்பா தேவையில்லாத மந்திரம் கத்துக்குறேன்னு இருந்த சொத்தை எல்லாம் இழந்தது போதாதா நீயும் இதே பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டு இருக்கன்னு பயங்கரமா சத்தம் போட்டு தம்பியை வெளியூர் ஹாஸ்டல்ல சேர்த்துட்டாரு. அப்பப்போ லீவுக்கு வீட்டுக்கு வரும்போது யார்கிட்டயும் பேசாத தம்பி, சுஹனி பாப்பா கிட்ட மட்டும் நல்லா பழகும்.” என்றார் ராஜதுரை.

“தீபேந்திரனுக்கு சைக்கலாஜிக்கலா இப்படி ஒரு ப்ராப்ளம் இருக்குன்னு தெரிஞ்சும், சுஹனியோட அப்பா எப்படி அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாரு. ” என்று தனது சந்தேகத்தை வினவியை கீர்த்தன் செவிகளில் அழுத்தமான காலடி சத்தம் தெளிவாய் விழுந்தது.

சில நொடிகளில் காலடி சத்தம் இன்னும் சற்று அதிகமாய் கேட்டிட யாரோ அவசர அவசரமாக பண்ணை வீட்டை நெருங்கி வருவது புரிந்து தன் வசியத்தில் இருந்தவரை நெருங்கி, “என்னை யாருன்னு உங்களுக்கு தெரியாது, நீங்களும் நானும் இதுவரைக்கும் பாத்துக்கிட்டதே இல்லை, இப்ப நான் உங்ககிட்ட எதுவுமே கேட்கல.. நீங்களும் எதுவுமே சொல்லல.. இப்போ நீங்க ஆழ்ந்த உறக்கத்துக்கு போகப் போறீங்க” என்றவன் ராஜதுரை தனது வசியத்திலிருந்து விடுவித்து விட்டு வீட்டின் மற்றொரு வழியாக அங்கிருந்து வெளியேறினான்.

அமர்ந்திருந்த நாற்காலிகிலேயே தலை சரித்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றார் ராஜதுரை.

‘ கும்பக்கரைன்னு சொன்னாரு, கும்பக்கரைல எந்த இடத்துலனு கேக்காம வந்துட்டோமே!, ஆமா இந்த நேரத்துல அவர தேடி யார் வந்திருப்பா.., யாரா இருந்தா என்ன வந்தவங்க கிளம்பி போனதும் மறுபடியும் அவர்கிட்ட பேசி அட்ரஸ் வாங்கணும்’ என்று எண்ணிக் கொண்டவன் பண்ணை வீட்டில் சாளரம் வழியாக வந்தவன் யார் என்று கவனிக்கத் தொடங்கினான்.

பண்ணை வீட்டினுள் நுழைந்தவன் ராஜதுரை இருந்த அறைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த ராஜதுரையின் தோள்களைத் தட்டி எழுப்பினான்.

கண்களையும் திறக்க முடியாதபடி கடினப்பட்டு எழுந்து நேராய் அமர்ந்த ராஜதுரை, “தம்பி நீங்களா?” என்றார்.

“என்ன ராஜதுரை.. கதவு திறந்து கிடக்கிறது கூட தெரியாத அளவுக்கு நல்ல தூக்கமோ! சேர்ல உக்காந்துட்டே தூங்கிட்ட, “என்றான் வந்தவன்.

“கதவை எல்லாம் பூட்டிட்டு வந்து கட்டில்ல படுத்த மாதிரி இருந்தது.. எப்படி இங்க வந்து உட்கார்ந்தேனு தெரியல, கதவும் திறந்து கிடக்குன்னு சொல்றீங்க! ஒன்னும் புரியலையே தம்பி” என்று குழப்பத்துடன் பேசினார் ராஜதுரை.

“நான் வருவேன்னு எதிர்பார்த்துட்டு இருந்திருப்ப, லேட் ஆனதும் அப்படியே தூங்கிட்ட போல, அதை விடு.. சரி நான் வேலையெல்லாம் முடிஞ்சதா?” என்றான் தீபேந்திரன்.

“எல்லாம் முடிஞ்சது தம்பி நீங்க போய் பூஜையை ஆரம்பிக்க வேண்டியது தான்..” என்று பணிவுடன் பேசினார் ராஜதுரை.

“கும்பக்கரை வீட்டில யாரும் இல்லையே..”என்று சந்தேகத்துடன் தீபேந்திரன் வினவ..

“யாரும் இல்ல தம்பி பாப்பாவுக்கு துணையா இருந்த வள்ளியும்.. பாப்பா சாப்பிட்டு முடிக்கவும் கிளம்பி போய் இருக்கும். வழக்கம் போல குடிக்கிற பால்ல தூக்க மாத்திரையை கலந்து கொடுக்க சொல்லிட்டேன். பாப்பாவும் இந்நேரம் நல்லா தூங்கிட்டு இருக்கும்” என்று அவன் கேட்பதற்கு முன்பாகவே அனைத்து விபரத்தையும் கூறினார் ராஜதுரை.

“சரி வாங்க போலாம் பூஜைக்கு நேரமாகுது…”என்றவன் பண்ணை வீட்டை விட்டு வெளியேறும் போது தான் அவன் முகத்தை கூர்ந்து கவனித்தான், “இவனா!..”என்று தன் கண்களை நம்ப முடியாமல் அதிர்ச்சியும் ஆத்திரமுமாய் தீபேந்திரனை முறைத்துக் கொண்டிருந்தான் கீர்த்தன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~