13

உண்மை அறியும் முயற்சி..

காரணம் இல்லாமல்
காரியமில்லை..
நடந்த காரியத்தின்
காரணத்தை
ஆராயாமல்
வாழ்வில்
நிம்மதி  கிடைப்பதில்லை…

திருமணம் முடிந்து சில நாட்கள் நகர்ந்திருந்தது. விதுரன் வீடு ஹனிகாவிற்கும், ஹனிகாவின் குறும்பும்  துருதுருப்பும் விதுரன் வீட்டில் உள்ளவர்களுக்கும்  பழகி இருந்தது.

அடிக்கடி அலைபேசி  மூலம் அழைத்து மகளின்  நலனை விசாரித்துக் கொண்டார் வசுந்தரா, “  நீங்களும்  சலிக்காம  போன் பண்ணும் போதெல்லாம்      இதே கேள்விய  கேட்குறீங்க!  நானும்    சலிச்சுகிட்டே  அதே பதில தான் சொல்றேன், எனக்கு இங்க எந்த குறையும் இல்லை. அத்தை என்னை  நல்லா பார்த்துக்கிறாங்க, என் விது மாமா அதைவிட ரொம்ப நல்லா கவனிச்சிக்கிறாரு” என்று அன்னையின் பழக்கப்பட்ட கேள்விக்கு வழமையான   பதிலையே கூறினாள் ஹனிகா. 

“ பெத்த பொண்ணு நல்லா இருக்கியான்னு கேட்கிறது தப்பா?, கட்டிக்கொடுத்ததோடு சரி அவர் கடமை  முடிச்சதுன்னு,    நிம்மதியா இருக்காரு உன் அப்பா. என்னால அப்படி இருக்க முடியுமா? தினமும் ஒரு தடவையாவது உன்கிட்ட பேசி நீ நல்லா இருக்குன்னு தெரிஞ்சுகிட்ட பிறகு தான்  அன்னைக்கு நிம்மதியா தூக்கமே வருது”, என்று தனது புலம்பலை தொடர்ந்தார் வசுந்தரா.

“ நான் என்ன முன்னப்பின்ன தெரியாத குடும்பத்துக்கா வாக்கப்பட்டு வந்திருக்கேன்,   சின்ன வயசுல இருந்து பார்த்து பழகுன என்  மாமாவை தான  கட்டியிருக்கேன்.  எதுக்கு தான் இப்படி தேவை இல்லாம பயப்படுறீங்களோ?” என்று தாயின் புலம்பலை நிறுத்த வழியறியாது பேசினாள் ஹனிகா.

“ உன்  அக்காவும் அதே   குடும்பத்துக்கு,   பார்த்து  பழகுன மாமனை  தான்  கட்டிட்டு போனா.  அவளும் உன்னை மாதிரி தான்,  நான் நல்லா இருக்கேன், என் அத்தை அப்படி பார்த்துக்கிறாங்க, மாமா இப்படி பார்த்துகிறாங்கன்னு சொல்லிட்டு இருந்தா  கடைசில  அவளுக்கு என்ன நடந்ததுன்னே  சொல்லாம தூக்குல தொங்கிட்டா, தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லன்னு  எழுதி வைச்சு செத்ததால, அவ சாவுக்கு எந்த காரணமும் இல்லாம போயிடுமா? இப்ப வரைக்கும் என் பொண்ணு எதுக்கு  செத்தான்னு  தெரியாமலேயே  வாழ்ந்துட்டு இருக்கேன், என் வலி என்னென்ன சொன்னாலும் உனக்கு புரியாது. நீ சந்தோஷமா இருக்கேல எனக்கு அது போதும்” என்றவர் சிறு தயக்கத்துடன், பேசுவதை நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்,  “நீ சந்தியா அளவுக்கு பலவீனமானவ இல்ல தான், இருந்தாலும் சொல்லுறது என் கடமை.  என்ன பிரச்சனை வந்தாலும் இந்த அம்மாகிட்ட தயங்காம சொல்லு,  உன் அக்கா மாதிரி தப்பான முடிவு மட்டும் எடுத்துடாத!”, என்று கனத்த குரலில் கூறி துண்டித்தார் வசுந்தரா. 

வசுந்தரா பேசி முடித்து அழைப்பை துண்டித்த பிறகும் வெகு நேரம் அதைப்பற்றியே  சிந்திக்க துவங்கினாள் ஹனிகா, ‘ அக்கா சாவுக்கு மாமா காரணம் இல்லன்னு தெரியும், ஆனா என்ன காரணம்னு இதுவரைக்கும் தெரியலையே, இதப்பத்தி ஏன் யோசிக்காமவிட்டேன்’ என்று தனக்குள்ளேயே குற்றவுணர்வில்  குமைந்து கொண்டாள் ஹனிகா. 

‘சந்தியா சாவுக்கு இதுதான் காரணம்னு மாமா சொன்னதை அப்படியே நம்பிட்டேன் போல. அதான் அதப்பத்தி யோசிக்காம விட்டுட்டேன்’ என்று மனம் சமாதானம் செய்திட, மூளையோ  வேறுவகையில் சிந்தனை செய்யத் துவங்கியது.

  ‘  அம்மா கேட்கிறதும்  நியாயம்தான,  புருஷன் பொண்டாட்டிக்குள்ள  நடக்கிற சின்ன சின்ன சண்டைக்கெல்லாம்  செத்துப்  போவாங்களா என்ன? அப்படி பார்த்தா இந்த உலகத்துல பாதி பொண்ணுங்க செத்து தான் போகணும். அக்கா கொஞ்சம் பயந்த சுபாவம் தான் அதுக்காக, செத்து போற அளவுக்கு பயந்தாங்கோலி இல்ல,   மாமா சொன்ன காரணத்தையும் தாண்டி இதுல ஏதோ விஷயம் இருக்கு. வீட்டுக்கு வந்த முதல் நாள் கூட மாமா  என்னமோ சொன்னாரே’ என்று யோசிக்க … ‘யாருக்கும் எந்த கஷ்டமும் இருந்திருக்காது,   உன் அக்காவும் இந்நேரம் அவளுக்கு பிடிச்ச  வாழ்க்கைய சந்தோசமா வாழ்ந்துட்டுயிருந்திருப்பா’ என்று   வீட்டிற்கு வந்த முதல் நாள்  விதுரன் உதிர்த்த வார்த்தைகள் வந்து போனது. 

‘ அப்போ மாமா கூட வாழ்ந்த வாழ்க்கை அக்காவுக்கு பிடிக்கலையா?’, என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு அதற்கான விடையை தேட தீவிர சிந்தனையில் இருந்தவளை மதிய உணவிற்கு அழைக்க வந்தார் தேன்மொழி.

சந்தியாவிற்கும் விதுரனுக்குமான திருமண உறவு எப்படி இருந்தது என்பதை   இவரிடமே பேச்சுக் கொடுத்து தெரிந்து கொள்ளலாம் என்ற  எண்ணத்தில், “அத்தை நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது”, என்றவளை  கிண்டலாய் பார்த்தபடி “ கேக்குற விதமே சரி இல்லையே, என்ன கேக்க போற?” என்றார் தேன்மொழி. 

“ இந்த கேள்வி நான் உங்ககிட்ட எப்பவோ  கேட்டிருக்கணும்,    சந்தியா அக்காவுக்கும் மாமாவுக்கும் நடுவுல ஏதாவது பெரிய பிரச்சனை இருந்ததா?” என்றவள் தேன்மொழி  முகம் போன போக்கை கண்டு, “நான் கேக்கற கேள்விக்கு நீங்க கண்டிப்பா   பதில் சொல்லித்தான் ஆகணும்” என்று கண்டிப்புடன் மீண்டும் அதே கேள்வியை வினவிட, “ எதுக்கு திடீர்னு இப்படி ஒரு கேள்வி கேக்குற?, விதுரன் உன் கூட  சந்தோஷமா தான  இருக்கான், உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும்  இல்லேல.” என்று பதற்றத்துடன் வினவினார் தேன்மொழி.

“அத்தை எனக்கும் மாமாவுக்கும் நடுவுல நீங்க பயப்படற மாதிரி எந்த பிரச்சனையும் இல்ல,  நாங்க  ரொம்ப சந்தோஷமா இருக்கோம்,  அக்காவுக்கு என்ன நடந்தது, எதுக்காக அப்படி ஒரு முடிவு எடுத்தான்னு தெரிஞ்சுக்க நினைக்கிறேன்  அவ்வளவுதான்”, என்று வற்புறுத்தலுடன் ஹனிகா  வினவிட தனக்கு தெரிந்த விபரங்களை மறைக்காமல் கூறினார் தேன்மொழி.

“ கல்யாணமாகி,  வீட்டுக்கு வந்ததுல  இருந்து யார்கிட்டயும் பேசாம ஒதுங்கியே தான் இருந்தா, நானும் கூச்ச சுபாவமுள்ள பொண்ணு கொஞ்ச நாளானா    எல்லாம் சரியாயிடும்னு  அதை பெரிய விஷயமாக எடுத்துக்கல.  ஆனா அவகிட்ட எந்த மாற்றமும் இல்லை, சரி  நம்மகிட்டத்தான்  இப்படி இருக்கான்னு   நினைச்சேன்,   ஆனா விதுரன்கிட்டயும்  ஒதுங்கி தான் இருந்தான்னு  போகப்போக தான் எங்களுக்கு புரிய ஆரம்பிச்சது.  விதுரன் ஆசையா வெளிய போயிட்டு வரலாம்னு   கூப்பிட்டா தல வலிக்குது, கால் வலிக்குது, மூட் இல்ல,  இப்படி  ஏதாவது ஒரு காரணம் சொல்லி வீட்டிலேயே இருந்திடுவா, புதுசா கல்யாணமான ஜோடிகளுக்கு நடுவுல இருக்குற அந்நியோன்னியம் ரெண்டு பேருக்கும் நடுவுல கொஞ்சம்கூட இல்லை.  வீட்ல பெரியவங்க முன்னாடியா கொஞ்சிக்குலாவ முடியும்,    வயசான காலத்துல நான்தான் சின்ன விஷயத்தையும் பெரிசாக்குறேன்னு  நினைச்சு அதை அப்படியே விட்டுட்டேன்.   ஒரு நாள் ராத்திரி எதுக்கோ இடையில ரூம விட்டு வெளிய வந்தேன், அப்போ விதுரன் ஹால் சோபால படுத்திருந்தான்.  அவங்களுக்கே தெரியாம அடுத்த ரெண்டு நாள் கவனிச்சேன், நான் தூங்க ரூம்குள்ள போன கொஞ்ச நேரத்துல விதுரன் அவங்க  ரூமை விட்டு வெளிய வந்துடுறான், ஏதோ சரியில்லன்னு தோணுச்சு. ராதாவுக்கும்   சந்தியா நடவடிக்கைல   சந்தேகம் வர, இதை இப்படியே விட்டா  நல்லது இருக்காதுன்னு,   ரெண்டு பேரும் அவளை கூப்பிட்டு வச்சு பேசினோம். என்னம்மா உங்க ரெண்டு பேரையும் பார்த்தா புதுசா கல்யாணமானவங்க மாதிரியே இல்ல, நீ ஒரு பக்கம் இருந்தா அவன் ஒரு பக்கம் இருக்கான் ரெண்டு பேரும் முகங்கொடுத்து கூட பேசிக்கமாட்டேங்கிறீங்க? உங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு விசாரிச்சோம்.  நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல,  ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சுகிட்ட பிறகு குழந்தையை பத்தி யோசிக்கலாம்னு முடிவு எடுத்திருக்கோம்   அதனால தான் ஒதுங்கி இருக்கோம்னு  சொன்னா.  விதுரன்கிட்டயும் இதைப்பத்தி பேசுனேன் அவனும் சந்தியா சொன்னதையே தான் சொன்னான்,   இந்த காலத்து பிள்ளைங்க இப்படித்தான என்னென்னமோ  கற்பனைல வாழ்ந்துட்டு இருக்காங்க நாளாக எல்லாம்   சரியாகிடும்னு  விட்டுட்டேன்.  நாங்க நினைச்சபடியே  கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாக ஆரம்பிச்சுடுச்சு, புருசனுக்கு பிடிச்ச   சாப்பாடு என்னன்னு    என்னை கேட்டு  சமைச்சுக்  குடுக்க ஆரம்பிச்சா. விதுரன் கூட மட்டுமில்ல வீட்லயும் கலகலன்னு பேசி சிரிக்க ஆரம்பிச்சா. அதுக்கப்புறம் விதுரனும் ஹாலுக்கு வந்து படுக்கல,   எல்லாம்  சரியாயிடுச்சு என் பிள்ளைங்க  வாழ்க்கை நல்லா இருக்கும்னு  நான் நினைக்க, ஒரு நாள் விதுரன்  வேலை விஷயமா டெல்லிக்கு கிளம்ப,  அம்மா அப்பாவ பாத்து ரொம்ப நாளாச்சு  அவங்க கூட ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்னு  வந்து நின்னா! பிள்ளை இல்லாத  வீட்டில மருமகளை மட்டும் பிடிச்சு வைச்சு  என்ன செய்யப் போகிறோம்ன்னு  நானும்  சரின்னு அனுப்பி வைச்சேன்,  அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு, எங்கயும் போக வேணாம்னு என்கூடவே பிடிச்சு  வச்சிருந்தா கண்ணும் கருத்துமா நானே பத்திரமாக பாதுகாத்திருந்திருப்பேன், தப்பு பண்ணிட்டேன். முதல் தடவையா வாய்விட்டு  ஒன்னு கேக்குறான்னு மறுப்பு சொல்லாம உங்க வீட்டுக்கு அனுப்பிவைச்சேன்,  எப்பவும் அமைதியா இருக்கிற மனசுக்குள்ள என்ன நினைச்சாளோ, எல்லாம் கனவு மாதிரி சட்டுனு நடந்து முடிஞ்சிடுச்சு” என்று   கலங்கிய விழிகளுடன் தானறிந்த விவரங்களை கூறி முடித்தார் தேன்மொழி.

“அப்போ அக்கா இங்க வந்ததிலிருந்து  வீட்டை விட்டு வெளிய போகவே இல்லையா?” என்று ஹனிகா வினவிட “அடிக்கடி அவ  கூட படிச்ச பிரண்டை  பாக்குறேன்னு   சாய்பாபா காலனில இருக்குற ஒரு அபார்ட்மெண்ட்க்கு போவா. விதுரன் நானும் துணைக்கு வரவான்னு கேட்டா வேணாம்  கேப் மட்டும்  புக் பண்ண சொல்லி அவளே போயிட்டு வருவா”, என்று விவரம் கூறினார் தேன்மொழி.

“ அக்கா கூட படிச்சவங்களா? அப்போ அது பானு அக்காவா தான் இருக்கும், அவங்களும் அக்காவும்    க்ளோஸ் ப்ரண்ட் அடிக்கடி வீட்டுக்குக் கூட வருவாங்க, அவங்க கல்யாணத்துக்கு கூட நானும் அக்காவும் போயிருக்கோம்,  அவங்க மட்டும் தான் கோயம்புத்தூர்ல இருக்காங்க, ” என்றாள் ஹனிகா.

“ பேரெல்லாம் ஞாபகமில்ல ஹனி, ஆனா அவ கிட்ட தான் அடிக்கடி போன்ல பேசிக்கிவா..”  என்றார் 

பழைய நினைவில்  தவித்த தேன்மொழியை சமாதானம் செய்து, அவருக்கான மருந்தை கொடுத்து  அறையில் உறங்கச் செய்துவிட்டு தனது அறைக்கு வந்த ஹனிகா  விதுரன் சந்தியா திருமண ஆல்பத்தை எடுத்து பார்வையிடத் துவங்கினாள். 

இதற்கு முன் பலமுறை பார்த்த ஆல்பம் தான் இருந்தாலும் இன்று ஏதோ அதில் வித்தியாசம் இருப்பதை போல் உணர்ந்தாள். கண்கொத்தி பாம்பாய் புகைப்படங்களை ஆராய்ந்து கொண்டிருந்தவள் திடீரென்று அந்த ஒரு புகைப்படத்தை சற்று உன்னிப்பாக கவனிக்க அது பாலும்பழமும் ஊட்டும் சம்பிரதாயத்தில்  எடுக்கப்பட்டது , விதுரன் எச்சில்பட்ட  பழத்தை  உண்ண மறுத்து வாயில் கை வைத்து மறைத்தபடி  அருவருப்பாய் முகம் சுளித்து அமர்ந்திருந்தாள் சந்தியா.

பார்க்க சாதாரணமாய்  தெரிந்தாலும் உன்னிப்பாக கவனிக்கும் போது, சந்தியாவின் முகத்தில் இருந்த உணர்வுகளை நன்றாக படிக்க முடிந்தது. விதுரன் சந்தியா திருமணத்தின்போது பாலும்பழமும் ஊட்டும்  சம்பிரதாயத்தில் ஹனிகா விதுரனுக்கு ஊட்டிய பழத்தை  சந்தியாவிற்கு கொடுக்க,   அவளோ ‘இப்போ தான் சாப்பாடு  சாப்பிட்டோம், வயிறு  ஃபுல்லா இருக்கு இதெல்லாம்  வேண்டாம்’  என்று சிறு பிடிவாதத்துடன் கூறிட அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து  விதுரனும் ‘போதும்னா விட்டுடு ஹனி,  தொந்தரவு பண்ணாத’ என்று  விஷயத்தை பெரிதாக்காமல் மூடி மறைத்துவிட்டான்.

அதை நினைத்து பார்த்தவள் மனம் கனத்தது,  ‘இதுனால தான் அன்னைக்கு என்னையும் அவர்  எச்சில்பட்ட பழத்தை சாப்பிட பிடிக்கலன்னா  விட்டுட்டுன்னு சொன்னாரா?’ என்று அவர்கள் திருமணத்தில்  நிகழ்ந்ததை நினைவுபடுத்திக்கொண்டாள் ஹனிகா. 

‘ கணவனோட எச்சில் மனைவிக்கு அருவருப்பா இருக்குமா என்ன? சந்தியாவுக்கு   விது மாமா மேல காதல் இருந்திருந்தா அன்னைக்கு எச்சில் பழத்தை சாப்பிட சங்கடப்பட்டு இருக்கமாட்டா.  ஒரு பொண்ணுக்கு தான் வாழப்போற வீடு எப்படி இருக்கணும்னு பல கனவு இருக்கும், மாமா அவளுக்கு பிடிச்ச மாதிரி வீடு கட்ட நினைச்சப்ப கூட விருப்பமில்லாம என்னைய பதில் சொல்ல சொன்னா. இதையெல்லாம் வச்சி பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவா புரியுது,   சந்தியாவுக்கு ஆரம்பத்துல இந்த கல்யாணம் பிடிக்கல, போகப் போக மாமா மேல காதல் வர ஆரம்பிச்சிருக்கு. அவர் கூட வாழனும்னு ஆசைப்பட்டு இருக்கா?,  அப்புறம் எதுக்கு அப்படி ஒரு முடிவு எடுத்தா..?’  என்று மீண்டும் துவங்கிய இடத்திலேயே வந்து நின்றாள் ஹனிகா.

அடுத்தடுத்து வந்த நாட்களில் விதுரனிடம் பேச்சுக் கொடுத்தபடி விவரம் அறிய ஹனிகா முயன்றிட அவள் முயற்சி எதற்கும் பிடிகொடுக்காமல்,  “ஏற்கனவே எல்லார் முன்னாடியும் எங்களுக்குள்ள வந்த சண்டைக்கான காரணம் சொல்லிட்டேன்,  திரும்பத் திரும்ப  கேட்கிறதுனால    ஏதாவது மாறப்போகுது என்ன?” என்று அலுத்துக்கொண்டவன், விடாமல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருப்பவள் தொல்லை தாங்காமல், “கல்யாணமான புதுசு. அவள மட்டும் இங்க தனியா விட்டுட்டு டெல்லிக்கு போறேன்னு எங்களுக்குள் வாக்குவாதம் வந்தது, அவளையும் கூட கூட்டிட்டு போக சொல்லி சண்டை போட்டா. பிசினஸ் விஷயமா போறேன் உன்னை   கூட கூட்டிட்டு போக முடியாதுன்னு நானும் பதிலுக்கு சண்டை போட்டுட்டு அவகிட்ட சொல்லாம கூட ஊருக்கு கிளம்பி போயிட்டேன்,  என் மேல இருந்த கோபத்துல உங்க வீட்டுக்கு கிளம்பி வந்துட்டா,  என்னை  கேட்காம  நீ எப்படி ஊருக்கு  போகலாம்னு  போன்ல  சண்டை போட்டேன்,   ஏற்கனவே என் மேல கோபத்துல இருந்தவ இந்த சண்டையையும்  மனசுல வச்சுட்டு தப்பான முடிவு எடுத்துட்டா ” என்று அன்று கூறிய அதே காரணத்தை திரும்ப கூறினான் விதுரன். 

அன்றைக்கு கேட்கும்போது உண்மை போல் தோன்றிய காரணம் இன்று ஏனோ கட்டுக்கதை போல்  தோன்றியது, ‘மாமாவும் அடுத்தவங்கள காயப்படுத்துற ரகம் இல்ல, அக்காவும்  தொட்டதுக்கெல்லாம் சண்டை போடுற ஆளில்ல, அப்போ சந்தியாவோட சாவுக்கு  வேற ஏதோ காரணம் இருக்கு. என்ன நடந்ததுன்னு தெளிவா தெரியுற வரைக்கும் மாமா மேல இருக்கிற களங்கத்த  துடைக்க முடியாது. பாக்குறவங்க எல்லாம்  அவரை தப்பா தான்  பேசுவாங்க. என்னமோ  தப்பா இருக்குனு அப்பப்போ  தோணும்,  ஆனா அது என்ன தப்புன்னு கண்டுபிடிக்க முடியல,  இனிமேலும்  அதை அப்படியே விடமுடியாதை, என்ன நடந்ததுன்னு  கண்டுபிடிக்க  நான் தான் முயற்சி பண்ணனும்’, என்று உறுதியான தீர்மானம் எடுத்த பின்பே நிம்மதி அடைந்தாள் ஹனிகா. 

முயலாமை..
நம்முள்
இருக்கும்  வரை..
நம் செயலில்
இயலாமை
இருந்து கொண்டே
இருக்கும்..