காதலின் தீபம் ஒன்று..!! – 10
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”
அந்த இசை அமைப்பாளர் யாழினி அவர் இசையில் பாடுவாள் என்று சொல்லும்போதும் மகிழனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.. அவன் முகத்தை முன்பிருந்தது போல் ஒரு இறுக்கமே சூழ்ந்து இருந்தது..
அவளுடைய நண்பர்கள் தோழிகள் பேராசிரியர்கள் அனைவரும் வந்து அவளுக்கு வாழ்த்து சொல்ல இறுதியாக மகிழன் அவளிடம் வந்து “ம்ம்.. சீக்கிரம் பெரிய பாடகியாக போறே.. கங்க்ராட்ஸ்.. அப்பவும் எங்களை எல்லாம் ஞாபகம் வச்சுக்கோமா..”
அவன் குரலில் சிறிய கேலி இருந்ததே தவிர பொறாமை இல்லை.. யாழினிக்கு அது நன்றாகவே விளங்கியது.. மேலும் கீழும் தலையாட்டி அவனுடைய வாழ்த்தை ஏற்றுக் கொண்டவள் “தேங்க்ஸ்.. அப்புறம் டைட்டில் வின் பண்ணதுக்கு உனக்கும் கங்கிராட்ஸ்..”
அவள் சொல்லி முடிக்கவில்லை.. அதற்குள் “அது நான் மட்டும் வின் பண்ணலையே.. ப்ரணவும் தான் வின் பண்ணான்..” என்று பிரணவ் தோளை சுற்றி கையை போட்டுக்கொண்டு சொல்லியவன் அவனை பெருமையாய் பார்த்து “எக்ஸலென்ட் மியூசிக்..!!” என்றான்..
ஏனோ அவன் குரலில் சிறு கோபம் இருந்ததாக பட்டது யாழினிக்கு..
“இவனுக்கு அப்படி என்னதான் கோபம் என் மேல.. அப்பப்ப அந்த கோபத்தோட சாயல் இவன் குரலிலயும் நடவடிக்கைலயும் தலை தூக்குதே” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்..
அதன் பிறகு மகிழன் அவனுடைய நண்பர்களுடன் அங்கிருந்து நகர்ந்து விடவும்
“தேங்க்ஸ் யாழினி.. உன்னால தான் நானும் வின் பண்ண முடிஞ்சிது”
பிரணவ் சொல்ல “இல்ல பிரணவ்.. என்னதான் நான் நல்லா பாடினாலும் அந்த பேசிக் மியூசிக் நீ போட்டது.. அதனால இதுல உனக்கும் க்ரெடிட் இருக்கு..”
“இல்லை.. யாழினி.. இப்போ காவியா ஆர்யன் மியூசிக்ல பாடுன பாட்டை ஒருவேளை நீ பாடி இருந்தா நிச்சயமா சொல்றேன்.. என் மியூசிக் எல்லாம் அந்த மியூசிக் கிட்ட போய் தொட்டு இருக்க கூட முடியாது.. அவ்ளோ பெஸ்ட்டெஸ்ட்டா இருந்திருக்கும்.. ஆனா ஆரியன் கொடுத்ததை அப்படியே பாடி இருக்கா காவியா.. அந்த பாட்டுல அவ குரல்ல ஓரளவுக்கு மேல எமோஷன்ஸை ப்ளேஸ் பண்ண முடியல அவங்களால.. பாட்டு பர்ஃபெக்ட்டா இருந்தது.. எந்த குறையும் சொல்ல முடியாது.. ஆனா நீ பாடி இருந்தா அது பர்ஃபெக்ட்டுக்கு மேல இருந்திருக்கும்.. ஏன்னா நீ பாடும்போது நிச்சயமா அதுல அத்தனை உணர்வுகளையும் கொட்டி கேக்குறவங்களை அப்படியே மெஸ்மரைஸ் பண்ணி இருப்ப..”
அவன் சொன்னதை கேட்டவள் ஒரு விரக்தி புன்னகையோடு மனதிற்குள் “அதுக்கு தான் எனக்கு கொடுத்து வைக்கலயே..” என்று எண்ணிக்கொண்டாள்..
“இதெல்லாம் ரொம்ப தப்பு பிரணவ்.. காவியா பாடினது ரொம்ப பர்ஃபெக்ட்டா அப்படியே மனசை உருக்கிற மாதிரி தான் இருந்தது.. அந்த பாட்டை நான் பாடி இருந்தான்னு நடக்காததை பத்தி யோசிச்சிட்டு காவியா பாடினதை நம்ப இறக்கி சொல்ல வேண்டாமே.. நல்லா தானே இருந்தது அந்த பாட்டு.. கேட்டப்போ நான் அப்படியே உருகி போயிட்டேன்…”
யாழினி சொல்லவும் “உன் தன்னடக்கத்துக்கு வரவர அளவே இல்லாம போச்சு.. நீ சொல்றதை ஒத்துக்கிறேன்.. அந்த பாட்டு கேட்கும் போது மனசு அப்படியே உருகி போச்சு.. ஆனா அது காவியா குரலால இல்ல.. மகிழன் போட்ட மியூசிக்னால.. ஒவ்வொரு வரி அவ பாடும்போதும் அதுக்கு பின்னாடி ஒரு பேக்ரவுண்ட் மியூசிக் அப்படியே நம்மை எல்லாம் கட்டி இழுத்து வச்சிருந்தது.. இது எல்லாருக்கும் தெரிஞ்சதுனால தான் எல்லாரும் ஆர்யனோட மியூசிக் பத்தியும் உன்னோட குரல் பத்தி மட்டுமே பேசிகிட்டு இருக்காங்க..”
அவன் சொன்னதைக் கேட்டு அவன் தோளில் தட்டியவள் “உன் மியூசிக்கும் ரொம்ப நல்லா இருந்தது.. அதனாலதான் என் பாட்டு எடுபட்டுது.. நீயே உன்னை ஏன் இவ்ளோ குறைச்சி பேசுற.. நீ நல்லா மியூசிக் போடுற.. பெரிய மியூசிக் டைரக்டரா வருவ பாரு..”
“ஹான்.. நான்லாம் படிச்சு முடிச்ச அப்புறம் தான் சான்ஸ் கேட்டு போய் ம்யூஸிக் டைரக்டர் ஆகணும்.. மேடம்க்கு தான் அந்த ஆஃபர் அப்படியே காலேஜ் தேடியே வந்துருச்சே.. இன்னும் ரெண்டு மாசத்திலேயே மேடம் பெரிய ப்ளே பேக் சிங்கர் ஆயிடுவீங்க போல..”
அவன் சொன்னதை கேட்டு அவள் மனதிற்குள் ஆனந்தமாக தான் இருந்தது.. அவளின் எத்தனை வருட கனவுகள் இவை.. என்றைக்கு இசைப் பயிற்சியை தொடங்கினாளோ அன்றிலிருந்தே அவளோடு வளர்ந்து கொண்டே வந்த கனவு இது.. இன்று அது நிறைவேறும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது அவளை பேரானந்தத்திற்குள் ஆழ்த்தி இருந்தது என்பதில் துளியும் ஐயமில்லை..
ஆனால் இந்த சந்தோஷத்தை இந்த குதூகலத்தை மகிழன் அவளோடு சேர்ந்து மனம் நிறைய கொண்டாடாமல் அவளுக்கு ஏதோ அந்த மகிழ்ச்சியை முழுதாய் அனுபவிக்க முடியாது அதில் கொஞ்சமாக இழந்துவிட்டது போலவே இருந்தது..
அதன் பிறகு ஒரு மாதம் கண்மூடி திறப்பதற்குள் ஓடி இருந்தது.. யாழினிக்கு ஏனோ மகிழன் தன்னை சந்திப்பதை வலுக்கட்டாயமாய் தவிர்ப்பது போல் தோன்றியது.. அப்படியே சந்தித்தாலும் அவள் பார்வையில் படாமல் காவியாவோடு மட்டும் பேசி விட்டு அந்த இடத்திலிருந்து நழுவி விடுவான்..
அவள் ஒவ்வொரு நாளும் அவனை எப்போது கண் கொண்டு பார்ப்போம் என்று தவித்துப் போய் இருக்க அவனோ அதற்கு வாய்ப்பே அளிக்காமல் பௌர்ணமி நிலவாய் என்றோ ஒரு நாள் அவள் கண்ணுக்கு தரிசனம் தந்திருந்தான்..
ஆனால் முழுவதுமாய் அவனோடு ஒரு நாள் முழுவதும் இருக்கும் வாய்ப்பு விரைவிலேயே கிட்டியது அவளுக்கு..
அவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை நாட்களாய் அமைந்திருக்க தங்கள் வீட்டிற்கு செல்வதற்கு மூவருமே தயாராகிக் கொண்டிருந்தார்கள்..
காவியா ஆரியனிடம் “ஏய் ஆரி.. உங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வரியா? வந்தா என் வீட்டுல இருக்கிறவங்க அப்புறம் யாழினியோட வீட்ல இருக்குறவங்க அவங்க எல்லாரையும் மீட் பண்ணி பேசிட்டு அப்புறம் உன் வீட்டுக்கு போகலாம் இல்ல..? நம்ம மூணு பேரும் ஒண்ணா டிராவல் பண்ணி ஒரு நாள் ஃபுல்லா எங்க வீட்ல இருக்கலாம்ல?”
காவியா கேட்க ஆர்யன் “எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல காவி.. உங்க வீட்ல ஏதாவது நினைச்சுக்க போறாங்க.. ஒரு பையன் உங்களோட வந்து உங்க வீட்ல..”
“ஹையோ.. எந்த காலத்தில இருக்க நீ? அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. யாழி எப்படி எங்க வீட்டுக்கு வராளோ அதே மாதிரி தான் நீ வரதும்.. அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இருக்காது.. எங்க அப்பா அம்மா அண்ணன்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. அப்படியே சொன்னாலும் அதை எல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன்.. ஆனா யாழி வீட்டுக்கு போக போறதை பத்தி நீ அவ கிட்ட தான் கேக்கணும்.. ஏன்னா அவங்க வீட்ல கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டு தான்”
“அதனால என்ன.. பரவால்ல.. யாழினிக்கு நான் அவங்க வீட்டுக்கு போறதுனால ஏதாவது அவங்க வீட்ல ப்ராப்ளம் வரும்னா நான் உங்க வீட்டுக்கு வந்துட்டு அப்படியே எங்க வீட்டுக்கு கிளம்பிடறேன்.. அதான் ட்ரெயின்ல ஒன்னா டிராவல் பண்ண போறோம் இல்ல.. அது போதும்..”
அவன் சொல்ல “அப்படி எல்லாம் இல்லை.. எங்கள் வீட்டுக்கும் நீ வரலாம்” என்று சொல்ல யாழினிக்கும் ஆசையாக தான் இருந்தது.. ஆனால் கல்லூரிக்கு வரும் முன் ரயில்வே நிலையத்தில் அவளுடைய தந்தை அவளிடம் சொன்ன வார்த்தைகள் இன்னும் கூட அவள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு தான் இருந்தன..
யாழினி மகிழனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் தந்தை ஏதாவது அவனை அவமானப்படுத்தும் விதமாக பேசி விட்டால் என்ன செய்வது என்று யோசித்து கலங்கி போயிருந்தவள்
“அ..அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ..” என்று இழுக்க மகிழனும் புரிந்து கொண்டது போல் “ப்ச்.. ஐயோ பரவாயில்லை யாழினி.. அதான் காவியா வீட்டுக்கு வர போறேன் இல்ல..? அது போதும்.. உங்க வீட்ல சங்கடப்படுவாங்கன்னா வேண்டாம்..”
அவன் இப்படி புரிந்து கொண்டு பளிச்சென சொல்லி விடவும் அந்த பதில் அவளுக்கு என்னவோ போல இருந்தது.. உடனேவே காவியா வீட்டுக்கு மட்டும் வருகிறேன்.. உன் வீட்டுக்கு வரவில்லை.. என்று பட்டென அவன் சொன்னது அவளுக்கு ஏனோ மனதில் கொஞ்சம் வலியை தான் தந்தது..
உன் வீட்டில் என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை.. நான் உன் வீட்டுக்கு வந்தே தீருவேன் என்று அவன் அடம் பிடித்திருந்தால் தனக்கு அது அதீத மகிழ்வை அளித்திருக்குமே என்று எண்ணினாள் அவள்..
ஆனால் அவன் ஏன் இப்படி தன் மீது அவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது போல் நடந்து கொள்கிறான் என்று அவளுக்கு புதிராகவே இருந்தது..
அவன் தன்னை விரும்ப வேண்டாம்.. தன்னுடைய நெருங்கிய தோழி என்ற விதத்தில் தன் வீட்டிற்கு வந்தே தீருவேன் என்று அடம் பிடித்து இருக்கலாமே என்று தோன்றியது அவளுக்கு..
அவன் வாயால் உன் வீட்டில் யார் சங்கடப்பட்டாலும் பரவாயில்லை.. என்னை என்ன வார்த்தை பேசினாலும் பரவாயில்லை.. நான் உனக்கு நண்பன்.. அந்த விதத்தில் எப்படி காவியா வீட்டுக்கு போகிறேனோ அதேபோல் உன் வீட்டிற்கும் வருவேன் என்று அவன் பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று ஏனோ அவள் மனம் தீவிரமான ஏக்கம் கொண்டிருந்தது..
ஆனால் அவன் அதற்கெல்லாம் வாய்ப்பு அளிக்காமல் அப்படியே எளிதாக காவியா வீட்டுக்கு மட்டும் வருகிறேன் என்று சொல்லிவிடவும் அது ஏனோ கண்ணாடியில் விரிசலை ஏற்படுத்தியது போல் அவள் மனதில் சின்னதாக துன்ப கீறலை உண்டாக்கி இருந்தது..
இருந்தாலும் தன் வீட்டு நிலைமையையும் நன்கு அறிந்தவள் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை.. மூவரும் ஊருக்கு கிளம்பினார்கள்..
ரயில் நிலையத்துக்கு செல்ல வாடகை காரில் மூவரும் ஏறி அமர யாழினியும் காவியாவும் பின் இருக்கையில் அமர்ந்து இருக்க மகிழன் முன் இருக்கையில் அமர்ந்திருந்தான்.. காலை காற்று இதமாய் வீசவும் ஏனோ அந்த குளிர் காற்று காவியாக்கும் யாழினிக்கும் பிடித்திருக்க காரின் கண்ணாடி கதவை இறக்கி வைத்துக் கொண்டுதான் பயணப்பட்டார்கள் இருவரும்..
வண்டி செல்லும்போது அவ்வப்போது மகிழன் பின்னால் திரும்பி இருவரையும் பார்த்துக் கொண்டே வர காவியா “என்ன அப்படி திரும்பி திரும்பி பார்த்துட்டு வரே.. ஏதாவது சொல்லனுமா..?” என்று கேட்க மகிழனோ “இல்ல.. அதெல்லாம் ஒன்னும் இல்ல..” என்றவன் முன்பக்கமாய் பார்த்து திரும்பி அமர்ந்து கொண்டான் இறுக்கமாக..
சற்று நேரத்தில் அவர்கள் வண்டியை முந்திக்கொண்டு ஒரு பள்ளி குழந்தைகளின் சுற்றுலா வாகனம் செல்ல அதிலிருந்த பிள்ளைகள் இவர்கள் வண்டியில் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்து கையை ஆட்ட காவியாவும் பதிலுக்கு “ஹே.. ஏஏஏஏ” என்று கத்திய படி கையை ஆட்டினாள்..
அப்போது அவளை திரும்பி முறைத்த ஆரியன் “கொஞ்சமாவது அறிவு இருக்கா? அந்த பிள்ளைங்க தான் வெளியில கை தலையை எல்லாம் நீட்டிக்கிட்டு அதோட ஆபத்து தெரியாம செய்றாங்கன்னா நீயும் அவங்களுக்கு ஏத்தா மாஇரி கையை வெளியில நீட்டி ஆட்டிட்டு இருக்கே.. ஏன் சின்ன வயசுல இருந்து உங்களுக்கெல்லாம் கை தலை இதெல்லாம் வெளியே நீட்ட கூடாதுன்னு சொல்லி தரலையா.. அவ்வளவு கூட அறிவு கிடையாதா?”
அவன் காவியாவை சரமாரியாய் திட்டிக் கொண்டிருக்க அதே நேரம் தானும் வெகு நேரமாய் காரின் கதவில் தலை வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வர தன் தலை லேசாக வெளியே நீட்டி இருப்பதை அப்போதுதான் உணர்ந்து சட்டென தன் தலையை உள்ளிழுத்துக் கொண்டாள் யாழினி..
“நல்ல வேளை.. மகிழன் நம்பளை கவனிக்கல.. இல்லனா இன்னைக்கு பெரிய அர்ச்சனையே நடந்து இருக்கும் நம்மளுக்கு..” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் அதன் பிறகு நன்கு உள்ளே தள்ளி அமர்ந்து கொண்டாள்..
காவியா அவன் திட்டியது பிடிக்காமல் “என்ன.. ரொம்ப தான் கத்துற..? அவங்க சின்ன புள்ளைங்க.. அவங்களுக்கு தெரியாது.. நாங்க பின்னாடி வண்டி வர்ற சத்தம் கேட்டா டக்குனு கை தலை எல்லாம் உள்ள இழுத்துக்க மாட்டோமா? அவ்வளவு கூடவா எங்களுக்கு அறிவு இருக்காது..? ஏதோ சின்ன பிள்ளைகளை விரட்டற மாதிரி விரட்டுற?”
அவள் முகம் சுருக்கி ஆர்யனை கேட்கவும் “இங்க பாரு.. நீ செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா ஒத்துக்க பழகு..” என்று அவன் அதட்ட யாழினி காவியாவிடம் “ஏய் காவி.. அவன் நம்ப நல்லதுக்கு தானே சொல்றான்.. அவன் சொல்றது கரெக்ட் தானே..? தலை கை காலெல்லாம் வெளியில நீட்ட கூடாது தானே?”
யாழினி மகிழனுக்கு பரிந்து பேச “அவன் சொன்னது தப்புன்னு நான் சொல்லல அதுக்கு இப்படி வள்ளுன்னு விழணும்னு ஏதாவது இருக்கா? நான் என்ன அவ்வளவு நேரமா கையை வெளியில நீட்டி வச்சுக்கிட்டு இருந்தேன்..? அப்பதான் ஏதோ பசங்களை பார்த்த குஷில கொஞ்சம் ஜாலியா அவங்களுக்கு கை ஆட்டுனேன்.. அதுக்கு என்னவோ அந்த கத்து கத்தறான்..?”
அவள் பெரிதாய் சண்டை போட ஆரம்பித்தாள் அவனோடு.. அவனோ அதோடு பேசாமல் வாயை மூடிக்கொண்டு முன்னே திரும்பி அமர்ந்து கொண்டான்.. ஆனால் அதற்கு முன் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் இப்போது இல்லை..
ஒரு சிறு புன்னகை இருந்தது போல் யாழினிக்கு தோன்றியது..
“ம்ம்.. காவியா உரிமையோட சண்டை போடறது கூட அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல..” என்று எண்ணியபடி ஒரு பெருமூச்சை விட்டு மறுபடியும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.. ஆனால் இம்முறை தலையை மட்டும் கவனமாக உள்ளே தான் வைத்துக் கொண்டாள்..
ரயில் நிலையம் வரவம் மூவரும் இறங்கி தங்கள் ரயில் நின்று கொண்டு இருந்த இடத்திற்கு விரைந்தார்கள்.. அவன் சக்கரம் வைத்த பெட்டியை கொண்டு வந்திருக்க யாழினியும் காவியாவும் அவர்கள் பெட்டியை மிகவும் சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்தார்கள்..
அதை கண்டவன் “ப்ச்.. ஏ காவ்யா.. உங்களுக்கெல்லாம் வீல் வெச்ச பேக்ஸ் எல்லாம் கொண்டு வர தெரியாதா? இப்போ ஸ்டேஷனுக்கு அவசரமா போகணும்னா எவ்ளோ கஷ்டமா இருக்கு..? சரி.. என் பேகை நீ தள்ளிட்டு வா.. நான் உங்க ரெண்டு பேரு பேகையும் தூக்கிட்டு வரேன்..” என்று சொல்லி காவியாவின் பையையும் யாழினியின் பையையும் தன் கையில் வாங்கி அவற்றை தூக்கிக் கொண்டு வேகமாக நடந்தான்..
அவனுடைய இரண்டு பைகளையும் காவியா இரண்டு கையில் பிடித்து தள்ளிக் கொண்டு வர “காவி.. ஒரு பெட்டியை என்கிட்ட கொடுடி.. நான் தள்ளுறேன்..” என்று யாழினி சொல்ல காவியா அவளிடம் பெட்டியை கொடுக்கப் போனாள்..
“இல்ல காவியா.. ரெண்டு பெட்டியையும் நீயே தள்ளிக்கிட்டு வா.. நம்ம டிக்கெட் புக் பண்ணல.. அதனால யாழினி போய் டிக்கெட் வாங்கட்டும்..”
அவன் சொன்னதும் காவியா யாழினிக்கு கண்ணை காட்ட அவளும் வேகமாய் பயணச்சீட்டு வாங்கும் முகப்பிற்கு சென்று பயணச்சீட்டை வாங்கி வந்தாள்..
இருவரும் அதற்குள் அவர்கள் ரயில் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.. யாழினியும் பயணச்சீட்டு வாங்கி வந்திருக்க அதை அவளிடம் இருந்து பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டான் மகிழன்..
தங்கள் பெட்டிக்குள் ஏறி யாழினி ஜன்னல் ஓரமாக இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர அவளுக்கு எதிர் இருக்கையில் காவியாவும் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டாள்..
ஆரியன் பைகளை எல்லாம் இருக்கைக்கு அடியில் தள்ளிவிட்டு ஏற கட்டி அதன் பிறகு காவியாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்..
அவ்வப்போது அவன் பார்வை யாழினியின் பார்வையை தொட்டு மீள அவனோ அவள் அவனைப் பார்க்கும் நேரம் அவள் பார்வையை தவிர்த்து வந்தான் முற்றிலுமாக..
“ஓ.. என்னை பாக்க கூட பிடிக்கலையா இவருக்கு?” என்று எண்ணியவள் சட்டென அங்கிருந்து எழுந்து அந்தப் பெட்டியின் வாயில் அருகே சென்று அங்கிருந்த கம்பியில் சாய்ந்து நின்று கொண்டாள்..
அப்போது பெட்டிக்கு அந்த பக்கம் இருந்த நான்கு விடலை பையன்கள் அவள் எதிரில் வந்து நின்று கொண்டு அவளை வார்த்தையால் சீண்ட ஆரம்பித்தார்கள்..
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
சில காலமாய் நானும்
சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே
உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள்தானே
மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ
உதிர்கின்றது
பதில் என்ன கூறு..
பூவும் நானும் வேறு…
தொடரும்..