11

உணர்வுகளின் உறவாடல்..

என் அத்தனை துன்பங்களையும்
ஒற்றைப் புன்னகையில்
விழுங்கிவிடுகிறாய்..
உன் இதழில் இருப்பது
புன்னகையா!!
புதைகுழியா!

ராதா சொல்லிச் சென்றது போல் விதுரன் குடும்பத்திற்கு வேண்டிய  உணவை தயாரித்து வந்தவருடன்  அவரின்  பிள்ளைகள் ஹரிதரனும், தருணிகாவும் வந்திருந்தனர்.

கொழுகொழு கன்னத்துடன்  மழலை குரல் மாறாத நான்கு  வயது தருணிகா  ஹனிகாவை கண்டதும் ஒட்டிக்கொண்டிட  ஹனிகாவிற்கும்   அவளை    பிடித்துப்போனது. 

உணவைப்  பரிமாறியபடி, “என்ன விதுரா, உன் கல்யாணத்துக்கு வரலைன்னு கோபமா? வந்ததும் வராததுமா கண்டுக்காம கூட உள்ளே போயிட்ட?” என்று விதுரனிடம் உரிமை வாதம்  புரிந்தாள் ராதா.

“கோபமா? உங்க மேல கோபப்பட்டுட்டு உங்க  சூப்பர் ஹீரோகிட்ட  யாரு வாங்கிக்கட்டுகிறது, கார் ஒட்டிட்டு வந்தது கொஞ்சம்  டயர்டா இருந்தது அக்கா”, என்று  காரணம் சொன்னவனை நம்பாமல் பார்த்தவர், “ யாரு நீ அவருக்கு பயப்படுற ஆளு, இதை நான் நம்பனும்?”  என்றவர் ஹனிகா புறம் திரும்பி, “இதுங்க சரியான கூட்டு களவாணிங்க ஹனி.  ரெண்டு பேரும்  சேர்ந்தா போதும் நேரம் காலமே தெரியாம, மொட்டை மாடில பொண்ணுங்க  மாதிரி பொரணி பேசிட்டு இருப்பாங்க,  ஒர்க்ல கொஞ்சம் டென்ஷன்,  ரொம்ப நாள் கழிச்சு லீவு கிடைச்சதுன்னு வை,  குடும்பத்தை கூட  கண்டுக்காம இரண்டு பேரும் சேர்த்து ஊர் சுத்த கிளம்பிடுவாங்க, நானும் என்னையும் பிள்ளைங்களையும் கூட கூட்டிட்டு போங்கன்னு  கெஞ்சி  பார்த்துட்டேன்,  மிஞ்சி பார்த்துட்டேன் ஒரு தடவை அவர அடிக்க கூட செஞ்சிட்டேன், ஹுக்கும் எதுக்கும் அசரவே இல்ல மனுஷன்.  இனி நீதான் என்னோட பார்ட்னர், நாம ரெண்டு பேரும் சேர்ந்து இவங்க ரெண்டு பேரையும் ஒரு வழி பண்ணுறோம்” என்று ஹனிகாவை  தன் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டார் ராதா.

“ நீங்க கவலைய விடுங்க அண்ணி, அதான் இப்போ உங்க சப்போர்ட்டுக்கு நான் வந்துட்டேன்ல! வேலைய தவிர   வேற வேலைக்கு நாம இல்லாம  வெளிய  கிளம்பட்டும் ஒரு கை பார்த்திடுவோம்”, என்று சம்மதம் சொன்னாள் ஹனிகா. 

“அட! அக்கா உங்களுக்கு கூட்டு சேர்க்க வேற ஆள் கிடைக்கலையா,  இவ உங்களுக்கு ஒருபடி மேல போவா, நீங்க ஹீரோவ அடிக்க  மட்டும் தான்  செஞ்சீங்க, இவ என்னை அடக்கமே செஞ்சுடுவா”, என்று விதுரன்  பயந்தவன் போல செய்கை செய்ய, “ ரெண்டு பேரும் சேர்த்துட்டு என்  பிள்ளைய மிரட்டுறீங்களா?” என்று விதுரனுக்கு பேசிட முன்வந்தார் தேன்மொழி.

“ ஆமா மிரட்டுனதும்  மிரளுறதுக்கு உங்க பிள்ளை  பச்சை குழந்தை பாருங்க!” என்று அவரை அடக்க  முயல, “ எவ்ளோ வளர்ந்தாலும் என் பிள்ளை எனக்கு குழந்தை தான்” என்று விடாமல் தேன்மொழி பேசிட, “அத்தை!  பெண் குலத்துக்கு எதிரா நடக்குற அநியாயத்துக்கு  குரல் கொடுக்க போறோம், இதுல உங்க  சப்போர்ட் எங்க பக்கம் தான் இருக்கனும், பிள்ளை பாசத்துல கட்சி மாறுனீங்க,   உங்களுக்கான தண்டனையும் உங்க பையன் தான்  அனுபவிக்கனும்.   அந்த   சேதாரத்துக்கு   சங்கம்  பொறுப்பு ஏத்துக்காது”, என்று  மறைமுக  மிரட்டல் விடுக்க,

“என்னை  மன்னிச்சிடுடா மகனே, இதுக்கு மேல உனக்காக பேசினா,  அதிகமான சேதாரம் வரும்போல”, என்று அமைதியாய் பின்வாங்கி கொண்டார் தேன்மொழி.

“ அந்த  பயம் இருக்கட்டும்! அத்தையும் இனி நம்ம பக்கம்,  அண்ணி ஹைபை!” என்று ஹனிகா கை   உயர்த்த,   “சரியான  கூட்டணி, இனி இவங்க பாடு தான் திண்டாட்டம்”, என்று அவரும்  ஹைபை கொடுக்க, “என்ன அண்ணியா? காலையில அக்கான்னு சொன்ன, மதியம்  அண்ணின்னு சொல்லுற, சாயந்தரம் பாட்டின்னு சொல்லுவியா?, பாருங்க  ராதா அக்கா அவள சின்ன பொண்ணுன்னு காட்டிக்கிறதுக்காக கொஞ்சம் கொஞ்சமா உங்க  வயச  ஏத்திக்கிட்டே போறா, இப்படி ஒரு  கூட்டாளி  உங்களுக்கு தேவையா?”   என்று  தன்னை கவிழ்க்க திட்டம் தீட்டிய கூட்டணியை கலைக்கும் முயற்சியில் இறங்கினான் விதுரன்.

மற்ற இருவரும் புரியாமல்  பார்த்திருக்க,  “அட மக்கு விது மாமா! நீங்க அக்கான்னு சொல்லும்போது நானும் அக்கான்னு சொன்னா முறை மாறிடாது?” என்று ஹனிகா  விளக்கம் கொடுக்க, “ அப்படி சொல்லுடா என் செல்லக்குட்டி, நம்மள பிரிக்க திட்டம் போடுறான், இதுக்கெல்லாம் அசருற ஆளா நானு, நீ  இல்ல உன் சூப்பர் ஹீரோவே வந்து, சொன்னாலும் எங்க முடிவுல எந்த மாற்றமும் இல்லை,” என்று  தெளிவாக நின்றார் ராதா.

“பாரு   தருகுட்டி!   உங்க அம்மாவுக்கு  ஹனி தான்  செல்லமாம்  நீ இல்லையாம்”,  என்று ஹனிகா மடியில் உரிமையாய் அமர்ந்திருந்த  சிறு குழந்தையை தூண்டிவிட்டு  காரியம் சாதிக்க முயன்றான் விதுரன்.

“அம்மாக்கு  தரு செல்லம் இல்லையா”, என்று மழலை குரலில் தருணிகா சிணுங்கிட, “அம்மாவுக்கு நீயும் செல்லம் தான் செல்லம்!  நீ, அம்மா பாப்பா தான, உன் மாமா பேச்சை கேட்காத!” என்று சிணுங்கிய மகளை சமாதானம் செய்ய ராதா முயல, “அப்போ நானு” என்று தான் அங்கிருப்பதை காட்டிக் கொண்டான் ஆறு வயதாகும் ஹரிதரன், ராதாவின் மூத்த பிள்ளை.

“அப்படி கேளு டா என் சிங்கக்குட்டி” என்று விதுரன் சட்டை காலரை தூக்கிவிட  அவன்   கால்களில்  கிள்ளியவள், “எங்ககிட்ட மோத முடியலன்னு சின்ன குழந்தைய தூண்டி விட்டு காரியம் சாதிக்க பாக்கிறீங்களா?”என்று ஹனிகா கோபம் கொள்ள, “இந்த தூண்டிவிடுற வேலை எல்லாம் எனக்கு தெரியாது, அதெல்லாம் உங்கள மாதிரி  ஆளுங்களுக்கு  தான் கை வந்த கலை”, என்று வலியை பொருட்படுத்தாது சிரித்தபடி  கூறினான் விதுரன்.

“ நாங்க யார தூண்டிவிட்டோம்?” என்று இரு பெண்களும் ஒன்றிணைந்து வினவிட, “நீங்க தூண்டிவிட  வெளி ஆள்  வேணுமா?   அதான்  உங்களுக்கு நீங்களே இருக்கீங்கல்ல!   ஒருத்தருக்கு ஒருத்தர்  மாத்தி மாத்தி தூண்டி விட்டுட்டு எங்க தலைய உருட்ட போறீங்களே!”   என்று அலுத்துக்கொண்டான் விதுரன்.

“அண்ணி,  இவர் சரிப்பட்டு வரமாட்டாரு, இன்னைக்கு மதியம்  நான் சமைக்கிறேன், அப்போ தான்  பழிக்குப்பழி வாங்குன   திருப்தில என் மனசு நிம்மதி அடையும்”,  என்று ஹனிகா அறிவிக்க, “ என்ன நீ சமைக்க  போறியா? முன்ன பின்ன கிச்சன் பக்கம் போயிருக்கியா?”, என்று பயந்தபடி விதுரன் வினவிட,  இல்லை என்பது போல் தலையை அசைத்து உதட்டை சுளித்து, “அதனாலதான் உங்கள பழிவாங்க அந்த வழிய தேர்ந்தெடுத்து இருக்கேன், எப்படி என் ஐடியா?” என்று கர்வத்துடன் புருவம் உயர்த்த. “நீ சமையல் செஞ்சு நான் சாப்பிட உன் மனசு நிம்மதி அடையுதோ இல்லையோ என் ஆத்மா சாந்தியடைஞ்சிடும், எல்லாத்துல  இருந்தும் ஒரேடியா    விடுதலை கிடைச்சிடும்”, என்று விதுரன்  சொல்லி முடிப்பதற்குள்  அவன் வாயை விரல் கொண்டு   மூடியவள், “ பைத்தியம் மாதிரி உளராதீங்க மாமா, நீங்க எங்க போனாலும் பின்னாடியே நானும் வந்துருவேன்”,  என்று உணர்வுபூர்வமாக கூறினாள் ஹனிகா.

“செத்தாலும் விடாம துரத்திட்டு வந்து தொந்தரவு பண்ணுவேன்னு சொல்ற,  அப்படித்தான!”  என்று விதுரன் அதையும்  கிண்டல் செய்ய   “அப்படி என்ன தொந்தரவு பண்ணிட்டேன்னு அடிக்கடி சொல்லி காட்டுறீங்க”, என்று  ஹனிகா  கோபத்தை கையில் எடுக்க, “ஹே.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் இதுக்கெல்லாமா கோபிப்பாங்க”,  என்று சமாதானம் செய்ய முயன்றான் விதுரன்.

“  இது உங்களுக்கு விளையாட்டா?”  என்று ஹனிகா பாதி உணவில் எழுந்து செல்ல முயல, அவள் கரம் பற்றி தடுத்து மீண்டும் அமர செய்தவன், “இனி இந்த மாதிரி பேசமாட்டேன், சாப்பிடு”,  என்றிட  அப்போதும் கோபம் குறையாமல் முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்த ஹனியை பார்த்து மென்மையாய் புன்னகை செய்து “ அடியே ராட்சசி, கெஞ்ச விடாதடி, எல்லாரும் பாக்குறாங்க!” என்று மெதுவாய் கூறிட, “பண்ணுன தப்புக்கு தப்பாம தண்டனைய அனுபவிச்சு  தான் ஆகணும்,  நீ உன் பொண்டாட்டி கையில காலுல விழுந்து கூட சமாதானம்   பண்ணு,  எங்களுக்கு என்ன வந்தது,  நாங்க எதையும் பாக்கல,  கிளம்புறோம்” என்று தேன்மொழி  அங்கிருந்து  விலக, “ அதுதானே!  எங்களுக்கு என்ன வந்தது,  வாங்கடா  செல்லங்களா, உன் மாமா அத்தை   காலுல  விழுந்து  கெஞ்சுறத  நாம கண்ணால  பார்க்க வேணாம்”  என்று நமட்டு சிரிப்புடன்  பிள்ளைகளை இழுத்துக்கொண்டு தேன்மொழியை  பின் தொடர்ந்தார் ராதா. 

மற்றவர்கள் விலகி சென்றதை உறுதி செய்து கொண்டவள்,  வேகமாய் விதுரன் புறம் திரும்பி, அவன்  தலையில் வலிக்கும் படி நறுக்கென்று கொட்டி, “ என்னை  பார்த்தா உங்களுக்கு தொந்தரவா தெரியுதா?” என்றிட.. “ஏய் என்ன  புருஷன்ங்கிற  மரியாதை கொஞ்சம் கூட இல்லாம   சட்டுன்னு கைய நீட்டுற, இது  தொல்லை இல்லாம வேற என்ன?” என்று வலியை பொறுக்க முடியாமல் சிடுசிடுத்தான்  விதுரன்.

“ ஓ..   நல்லது! உங்களுக்கு நான் தான தொந்தரவு நீங்க எதுக்கு போறீங்க ஒரேடியா நான் போயிடுறேன்”,  என்ற   ஹனிகாவை வலிகளை கண்களில்  தேக்கியபடி  வெறித்தவன்,  “நான் அந்த வார்த்தைய சொல்லும் போது உனக்கு எப்படி  வலிச்சிருக்கும்ன்னு என்னால உணர முடியுது ஹனி.   இனி விளையாட்டுக்கு கூட அந்த  வார்த்தை சொல்லமாட்டேன்.”  என்று கண்களால் கெஞ்சிட அவன் வருந்துவது தாங்க முடியாமல், “ சரி சரி மன்னிச்சுட்டேன், இந்த சாப்பாட்டை ஊட்டி விடுங்க” என்று அதிகாரம் செய்தாள் ஹனிகா.

“ ஹே.. அம்மா அக்கா குழந்தைங்க எல்லாம் கிச்சனுக்குள்ள தான்     இருக்காங்க” என்று விதுரன் தயங்கிட, “இருக்கட்டும் அதுனால என்ன? நான் சாப்பாட ஊட்டிவிடத்தான்  சொல்லுறேன், சமாதானம் பண்ண ஐஸ்கிரீம் கேட்கல” என்று ஹனிகா கண்ணடிக்க, “ வரவர உன் நடவடிக்கை கொஞ்சம் கூட  சரியில்ல”, என்று விதுரன் உணவை ஊட்ட துவங்க மெதுவாய் மென்று விழுங்கியவள்,

என்னை  சரி செய்ய
நீ இருக்கும் தைரியத்தில் தான்
சரியாய் தவறான வழியில் செல்கிறேன்..
வழிநடத்த  என்னோடு  பயணித்திடு
என் வாழ்க்கை பயன் பெரும்..

என்றாள் ஹனிகா.  “ எப்படி எல்லாத்துக்கும்   கவிதையில பதில் சொல்லுற” என்று  விதுரன் நிறுத்த,

நான் உதிர்ப்பது வெறும்
உளறல்  வார்த்தை தான்..
உன் இதயம்  வருடும்  போது..
கவிதை வரிகளாய் உருமாறி
மோச்சம் பெறுகிறது..

என்று அதற்கும் ஹனிகா கவி வரிகள் கூற, “அது சரி இதுக்கும் கவிதை தான் பதிலா? கவிதையா பேசுனா தான் உனக்கு புரியும் போல! உன் அளவுக்கு கவிதை சொல்ல வராது. இனி நானும் கொஞ்சம்   கவிதை எழுத முயற்சி பண்ணுறேன்” என்றிட..  

உன்னோடு பேசிட..
என்னக்குள்
வார்த்தைகளை
தேடிப்பிடித்து
கோர்க்கிறேன்..
நான் பார்த்து பார்த்து
கோர்த்துவைத்த
வார்த்தைகள் எல்லாம்
உன் செவிகளை வருடும் போது
கவி முத்துகளாய்
சிதறுகிறது.. 

அவள் உதிர்க்கும் உளறல்  வரிகளையும்  கவிதையென ரசித்து கன்னம் குழிவிழ சிரித்தபடி அடுத்தடுத்து விதுரன் ஊட்டிவிட, தன்னை கொள்ளைகொள்ளும் கன்னத்தின் குழியை  கண் இமைக்காமல் ரசித்து, உணவினை மென்று விழுங்கியபடி, விழிகளால் விதுரனை  பருகிக்கொண்டாள்  ஹனிகா. 

“ நீங்க  கல்யாணம் பேசி முடிச்சுட்டு வந்து  சொல்லும் போது கூட நான்  நம்பல அம்மா, இப்போ நம்புறேன், ஹனி உண்மையிலேயே விதுரனை உயிருக்கு உயிரா காதலிக்கிறா!, விதுரன் அனுபவிச்ச கஷ்டத்தை பார்த்து கடவுளே மனசு இறங்கி ஹனிகாவை அவன் கையில பிடிச்சு கொடுத்திட்டார் போல.  வந்த முதல் நாளுலயே அவங்களுக்குள்ள  எவ்ளோ அந்நியோன்யம் பார்த்தீங்களா?, இப்படி உரிமையா  ஒருதடவையாவது அந்த சந்தியா  பொண்ணு நடந்திருக்குமா? அச்சோ என் கண்ணே பட்டுடும் போலயே. என் காலடி மண்ணை எடுத்தே சுத்தி போடுங்க” என்று  ஹனிகாவிற்கு விதுரன் அன்பாய் ஊட்டிவிடுவதை  கண்டு   உவகையுடன் பேசினார்  ராதா.

“ சொன்னா நம்பமாட்ட! கட்டுனா மாமனை தான் கட்டிக்குவேன்னு சாகப்போனா. அவ பிடிவாதத்தால தான்  விதுரனே கல்யாணத்துக்கு  சம்மதிச்சான்,  நான் கூட முதல்ல பயந்தேன், பிள்ளை பிடிவாதம் பிடிச்சவனாச்சே  எப்படி   சந்தோசமா வாழப்போறான்னு, ஹனி அவன்  மேல  வைச்சிருக்க  அன்பை பார்த்ததும் என் பயம் பறந்திடுச்சு ராதா. இப்போ தான் நிம்மதியா இருக்கு. என்  பையன் இனி சந்தோசமா இருப்பான்” என்று   கலங்கிய விழிகளுடன் பேசினார் தேன்மொழி.

“நீங்க சொல்றது உண்மைதான்.  அன்புதான்  எல்லா காயத்துக்கும் மருந்து, ஹனி அன்பு நிச்சயம் விதுரன்  காயத்துக்கு மருந்தா இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம் ஹனி  நல்ல பொண்ணுதான் நம்ம விதுரனை  நல்லா பாத்துக்குறா அதுக்குன்னு அஜாக்கிரதையா இருக்காதீங்க. ரெண்டு பேரையும் கொஞ்சம் கண்காணிச்சுட்டே இருங்க.   சின்ன உரசல் வந்தாலும் உடனே சரி செஞ்சிடனும்,  புருஷன் பொண்டாட்டி பிரச்சினைக்குள்ள நாம எதுக்குன்னு ஒதுங்கி நிக்ககூடாது. போன தடவை மாதிரி எல்லா கைமீறிப் போனதுக்கப்புறம் எதுவும் செய்யமுடியாம தடுமாறக்கூடாது” என்று தேன்மொழிக்கு அறிவுரை வழங்கினார் ராதா.

“நீ சொல்லுறது  சரிதான்”,  என்று அதனை ஆமோதித்தவர், “மாதவன் தம்பி எப்போ வருவாரு?  தம்பி கல்யாணத்துக்கு வரலனு  விதுரன் ரொம்பவே  சங்கடப்பட்டான்” என்று தேன்மொழி விசாரிக்க “ஒரு கேஸ் விஷயமா பொள்ளாச்சி வரைக்கும் போயிருக்காரு அம்மா, இன்னைக்கு  நைட்  வந்திடுவாரு, வந்ததும் முதல இங்க தான் விதுரனை பார்க்க வருவாரு” என்று விபரம் கூறினார் ராதா.

சாமானிய மனிதனாய்
இருந்த என்னை
என்னென்னவோ செய்து..
நிலைகுலையச் செய்யும்
உன் அன்பினால்
நிலை தடுமாறி
உனக்குள் விழுந்து எழுகிறேன்
புனிதனாய்..