Advertisement

தூரம் 3

சக்திவேலுக்கு  சரோஜினியை விட லாலா என்ன  நினைப்பான் என்ற கவலையே அதிகம். தன் நட்பை அவன் எவ்வளவு மதிக்கிறான் என்று தெரியும்.

சரோஜினிக்கும் அவனுக்குமான காதல் இந்த ஐந்து வருடமாகத்தான். சக்திவேல் சென்னையில் படிப்பு முடிந்து, எஸ்.ஐ தேர்வுக்காக அகாடமியில் படித்தான். லாலா படிப்பு முடிந்ததும் ஊருக்கு வந்துவிட, சரோஜினி படிக்க சென்னை வந்தாள்.

லாலாவின் தங்கை என்பதால் கொஞ்சம் பாசமுண்டு, அதைத்தாண்டி அவளும் இவனிடம் விரோதம் பாராட்ட மாட்டாள். பார்த்தால் சிரிப்பு, பேச்சு என்று இருப்பாள். அவளுக்குத்தான் காதல் முதலில் பூத்தது, சக்தியிடம் சொல்ல அந்த பூவாசம் அவனுக்கும் பிடித்துப்போனது. 

வேறு ஊரில் அவன் வேலையில் இருந்தவரை போனில் காதல் வளர்த்தார்கள், அப்போது நண்பனையும் காதலியையும் சமாளிப்பது  எளிதாக இருந்தது. இப்போது சவால்தான், ஆனால் சக்திக்கு சவால் பிடிக்குமே! 

அவன் வீட்டில் இன்னும் பெண்பார்க்கவில்லை, சரோஜினிக்கும் வரன் பார்க்கவில்லை. அதனால் பொறுமையாக இருக்கிறான், பார்க்கிறார்கள் என்று தெரிந்தால் நேராக திலகர் வீட்டு வாசலில் நின்றுவிடுவான்.

நிச்சயம் அன்று ஊரே வேடிக்கைப் பார்க்குமளவு, இந்தியா பாகிஸ்தான் சண்டை உண்டு.

சக்திவேல், “சரிடி, போ தூக்கம் வருது” என்றதும் சரோஜினி வெளியே வந்தாள்.  இருவீட்டு மனிதர்கள் பிரிந்து இருந்தாலும் சுவர்கள் இரண்டும் அன்றிலாய் ஒட்டியிருந்தது.

ஆம்! இந்தியா பாகிஸ்தான் ராட்கிளிஃப் கோடு கூட இத்தனை ஒட்டி இருக்காது போல, என் பங்கை விட மாட்டேன் என்று இருவீட்டு பெரியவர்களும் அவரவர் பங்குக்கு இடைவெளி விடாது வீடு கட்டியிருந்தனர்.

சரோஜினி அந்த இருளில் வெளியே வந்து, மாடிப்படி சுவரில் கால்வைத்து காம்பவுண்ட் சுவரில் குதித்து பின் அவர்கள் மாடிக்குத் தாவினாள். சக்தி அவள் போனதும் தன் அறைக்குள் போனான்.

அடுத்த நாள் காலையில் வழக்கம்போல், சக்தி அவன் வீட்டு மொட்டை மாடியில்  தாண்டால் எடுத்தான். சரோஜினி இவன் வருகைக்காவே அந்த நேரம் மாடி வர, அவளை கண்டதும் சக்திக்கு உற்சாகம். 

சரோஜினியைப் பார்த்ததும் புன்னகைத்தான். அவன் கண்காட்டிய இடம் பார்க்க, இவர்கள் வீட்டு மாடி சுவரில் சிவப்பு ரோஜா இருந்தது.

சரோஜினி ரோஜாவைப் பார்வையால் வருடி, போனை எடுத்து அவனுக்கு அழைக்க, விசிலடித்தபடியே அழைப்பை எடுத்தான்.

சரோஜினி, “என்ன எங்க வீட்டு மாடியில ரோஜா பூ பூத்திருக்கு?” என்று கேட்க

“சரோசாவுக்கு ரோசாப்பூ பிடிக்கும்னுதான், எங்கம்மா அதுவும் வைச்சுக்காத, நேரா சாமி படத்துக்கு வைக்கும். உங்க வீட்ல பூ பூக்கல, அதான் காலையில பார்த்ததும் பறிச்சிட்டேன்” என்றான்.

“சரோஜினி!” என்று அழுத்தி சொன்னவள் சக்தியை கிண்டலாகப் பார்த்தவாறே,

“போலீஸ்காரனுக்கு திருட்டுப்புத்தி” என்றாள்.

“போடி, போய் குளிச்சிட்டு பூ வைச்சிக்க” என்றான் சக்திவேல். காலையில் குளித்து சரோஜினி சக்தி கொடுத்த பூவை ஆசையாய் வைத்துக்கொண்டாள்.

சக்திவேலின் அம்மா சசிகலா  காலையில் பூ பறிக்க வந்தவர், நேற்றிரவு வரை இருந்த பூ காணாமல் போனது கண்டு கடுப்பாகிவிட்டார். அதில் சரோஜினியின் தலையில் இருந்த சிவப்பு ரோஜா கண்ணில் பட்டுவிட, திண்ணையில் உட்கார்ந்திருந்த சரோஜினியை காம்பவுண்ட் அருகே நின்று அழைத்தார்.

“ஹேய் இந்தாருடி சரோஜினி, எங்க வீட்டு பூவை ஏண்டி பறிச்ச?” என்று சத்தம் போட

“ஊர்லயே உங்க வீட்லதான் பூ பூத்திருக்கா அத்த? எங்க வீட்லயும் ரோஜா செடி இருக்கு, அதுல உள்ள பூ இது” என்றாள் சரோஜினி.

“ஏண்டி எங்க வீட்டுப்பூ எதுனு எனக்குத் தெரியாதா?” என்று கேட்க, இந்த சத்தம் கேட்டு திலகரின் மனைவி அஞ்சம்மாள் வந்துவிட்டார்.

“எவடி அவ? என் பேத்தியைப் பேசுறவ?” என்று சசிகலாவைப் பார்த்து கேட்க

“நான் செடி  நட்டு தெனைக்கும் தண்ணீ ஊத்தி பார்த்து, பூவுக்காக காத்து கிடந்தா உன் பேத்தி நோகாம பறிச்சி வைச்சிட்டு லாத்துவாளா(சீன் போடுவாளா?) என்றார் கோபத்துடன்.

“உன் வூட்டு பூவை வைக்கணும்னு அஞ்சம்மா பேத்திக்கு என்னாடி தலையெழுத்து, என் புருஷன் பெங்களூர் தோட்டத்து பூவை கொண்டு வந்து வைச்சிருக்கார், என் பேத்தி ஏண்டி உம்மூட்டு பூவை பறிக்கிறா?” என்று அஞ்சம்மாளும் பதிலுக்குப் பேச, நல்ல நேரமாக இந்தியாவும் இங்கிலாந்தும் வீட்டில் இல்லை. அதற்கு பதில் சக்தி சத்தம் கேட்டு வெளியே வந்தான்.

“என்னம்மா சத்தம்?” என்று யுனிஃபார்மில் கிளம்பி வந்தவன் கேட்க, சரோஜினி சக்திவேலை முறைத்தாள். அதனை சசிகலாவும் பார்த்துவிட்டார்.

“டேய் சக்தி! ஆசையா ரோஜா செடி வளர்த்து பூ பூக்கிறதுக்காக காத்திருந்தா,  இந்தா நிக்கிறாளே இவ, நம்மூட்டு பூவை திருடி வைச்சிருக்காடா” என்றதும்

“ம்மா, பூவுல எது நம்ம பூவுனு நமக்கு தெரியும்? அப்படியே பறிச்சாலும் பூவுதானே விடும்மா” என்றான் சக்திவேல். அவரோ

“பூவுதானே வா? போலீஸ்காரன் வீட்ல பூவை திருடினா உனக்கு அவமானம் இல்லையாடா? இன்னிக்குப் பூவை திருடினவ நாளைக்கு என்னத்த தூக்குவாளோ?” என்று சசிகலா பேசிக்கொண்டு போக

“ஏட்டி! இன்னொருவாட்டி எம்மூட்டு பேத்தியை திருடினு சொன்ன பேசின வாயைத் தைச்சுப்புடுவன் பார்த்துக்க” என்றார் அஞ்சம்மாள்.

‘திருட்டுப் போலீஸ்’ என்று சரோஜினி இதழ்கள் இதனை கண்டு முணுமுணுத்தன. சக்தியோ அம்மாவை எப்படி சமாளிப்பது என்று பார்த்தான். 

 

 

 

 

 

 

Advertisement