Advertisement

அத்தியாயம் 15
ஐவியின் இறுதிச் சடங்கு அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தது.
ஜெராடும் பராவும் டேவிடோடு உள்ளே நுழைய “இவன் எதற்காகு இங்கே வந்தான்? என் பொண்ண கொலை செய்தவனே இவன் தான். இவன் மாளிகையில் என் மகள் இறந்து கிடந்தது இவனுக்குத் தெரியாது என்று சொல்வதை எனக்கு நம்பச் சொல்லுறீங்களா? முதல்ல இவன இங்க இருந்த போகச் சொல்லுங்க” என்று ஐவியின் அன்னை லூசி கத்த ஆரம்பித்தாள்.
பரா பயந்தது போல் நிகழ்ந்து விட்டது. ஜெராட் தான் ஐவியை கொலை செய்திருப்பான் என்ற குற்றச்சாட்டு ஜெராட் மீது வந்து விடக் கூடாது என்றுதானே அஞ்சினாள். போலீஸ் விசாரித்து உண்மையை கூறினாலும், மகளை இழந்தவர்கள் பேசத்தான் செய்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை அறிந்திருந்தாலும் கோபத்தில் வார்த்தைகள் கணக்கத்தான் செய்யும் உண்மை என்னவென்று அறியாதவர்கள் ஜெராடை குற்றவாளியாகத்தான் பார்ப்பார்கள்,
டேவிடோடு ஜெராட் மட்டும் ஐவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கிளம்ப, பரா தானும் வருவதாக பிடிவாதமாக வண்டியில் ஏறி அமர்ந்திருந்தாள்.
எங்கே வெளியே சென்றாலும் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதே இல்லையே ஜெஸியும், லெனினும் வேறு தாங்களும் வருவதாக அடம்பிடக்கலாயினர்.
குழந்தைகளையே காரணமாக வைத்து பராவை வர வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தான் ஜெராட்.
பராவை கண்டு ஐவியின் வீட்டார்கள் ஏதாவது பேசிவிடுவார்கள் என்று ஜெராட் பரா வராமல் இருப்பது நல்லது என்று நினைக்க, அவனை தனியாக அனுப்ப பராவுக்கு இஷ்டமில்லை.
ஜெஸியை சமாளிப்பதுதான் கஷ்டம். லெனிடம் பேசி புரியவைத்து தங்கையை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வேலையாட்களிடம் ஒப்படைத்து விட்டு ஒருவாறு இருவரும் கிளம்பி வந்து விட்டார்கள்.
இப்படி ஒருவரைப்பற்றி இன்னொருவர் நினைக்கும் இவர்கள் மனதாலும், உடலாலும் எப்பொழுதுதான் இணைவார்களோ? 
“லூசி காம் டவுன். அதான் போலீஸ் விசாரிச்சு அவர் மேல எந்த தப்பும் இல்லனு சொல்லிட்டாங்களே. அவங்க விசாரணைல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. எதுக்கு இப்போ வீணா சத்தம் போடுற? நம்ம பொண்ண ஒழுங்கா பாதுகாக்க முடியல. அமைதியா வழி அனுப்பி வைக்கலாம்” என்றார் ஐவியின் தந்தை ஆல்பர்ட்.
பிரச்சினை செய்வதாக இருந்தால் கோபக்காரரான ஆல்பர்ட் தான் பிரச்சினை செய்தாக வேண்டும். அவரே ஜெராடை புரிந்துகொண்டு விட்டார் என்றதும் டேவிடுக்கு சற்று நிம்மதி.
எந்த பிரச்சினை வந்தாலும் ஐவியின் இறுதிச் சடங்கில் தான் கலந்து கொண்டேயாக வேண்டும் என்றுதான் ஜெராட் வந்திருந்தான்.
“அவர் மேல எந்த தப்பும் இல்ல பெரியம்மா உங்க பெண்ணுக்குத்தான் அவர் கூட வாழ கொடுத்து வைக்கல” என்று அங்கு வந்து நின்றாள் வான்யா.
“என்னடி பேசுற?” லூசி வான்யாவை முறைக்க,
“உங்க பொண்ண பத்தி உங்களுக்குத் தெரியாது. முதல்ல அவரை அவளோட இறுதிச் சடங்குள கலந்துகொள்ள விடுங்க அப்பொறம் நான் உங்களுக்கு உங்க பொண்ண பத்தி சொல்லுறேன்” என்றாள்.
“இங்க பாருங்க நான் இங்க பிரச்சினை செய்ய வரல. ஐவிய நல்ல முறையா அனுப்பி வைக்கணும். அவ போகும் போது நான் கூட இருக்கணும். அது என்னோடு ஆசை மட்டுமல்ல கடமையும் கூட. நான் கூட இருக்கணும் என்று கண்டிப்பா அவ ஆசைபடுவா. அவ ஆசையை நிறை வேத்துறது தான் என்னோட கடமை. அவளை கஷ்டப்படுத்தாதீங்க” கவலையாக கூறிவிட்டு ஐவியை வைத்திருக்கும் சவப்பெட்டியில் அருகில் சென்றான்.
ஐவியின் உடல் ஏற்கனவே சேதமடைந்ததால் சவப்பெட்டி மூடப்பட்டுதான் இருந்தது.
“கடைசியாக உன் முகத்தக் கூட பார்க்க முடியாதபடி பண்ணிட்டல்ல” வரும் கண்ணீரை அடக்கியவன் பெட்டியை தடவியவாறே பேச, பரா ஜெராடின் அருகிலையே நின்றிருந்தாள்.
ஐவியின் தம்பி அன்றோ ஊரில் இல்லாததால் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கவில்லை. இருந்திருந்தால் ஜெராடை இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள விட்டிருப்பானா?
ஆல்பர்ட்டின் அனுமதியோடு பராவும், ஜெராடும் நல்லமுறையில் ஐவியின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள முடிந்தது.
மயானத்துக்கு சென்று அடக்கம் செய்து, மலர்வளையம் வைத்த பின் தான் ஜெராட் பராவோடு மாளிகைக்குத் திரும்பினான்.
டேவிடோடு அவன் வண்டியில் தான் மூவரும் ஐவியின் இறுதிச் சடங்குக்கு சென்றிருந்தனர்.
வரும் பொழுது டேவிட் வண்டியோட்டிக் கொண்டு வர, வண்டியில் மயான அமைதியே நிலவியது.
ஜெராட் ஐவியின் நினைவுகளில் உழன்றுக் கொண்டிருக்க, பரா என்ன பேசுவது என்று புரியாமல் யோசனையில் அமர்ந்திருந்தாள்.
“நம்ம கொலிக்ஸ் எல்லாருமே இறுதிச் சடங்குக்கு வரணும் என்று சொன்னாங்க. நான் தான் வேணாம் என்று சொன்னே” அமைதியை உடைத்தது டேவிட் தான்.
ஜெராடிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஏன் “ம்…” என்ற சத்தம் கூட வரவில்லை.
ஜெராட் கலகலவென்று பேசும் ரகம் கிடையாது என்றாலும் பேசினால் பதில் கூறுபவன், யாரிடமும் மரியாதை குறைவாக நடந்துகொள்ள மாட்டான்.
அப்படிப்பட்டவன் டேவிட் சொன்னதுக்கு எந்த பதிலையும் கூறவில்லையென்றால் அவன் இந்த உலகத்துலயே இல்லை. டேவிட் கூறியது அவன் காதில் விழவே இல்லை என்று தான் அர்த்தம்.
அவன் நிலையறிந்து டேவிட் அவனை தொல்லை செய்யாமல் அமைதியாக வண்டியை ஓட்ட, ஜெராடை எப்படி மீட்டெடுப்பது என்று புரியாமல்  பரா முற்றிலும் உடைந்து போனாள். 
இருவரையும் மாளிகையில் விட்ட டேவிட் “நான் இப்படியே வேலைக்கு போறேன். நீ ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வா. ஆபீஸ்ல நான் சொல்லிக்கிறேன்” என்று விட்டு கிளம்பி சென்றான்.
மாளிகைக்குள் வந்த ஜெராட் பின்னால் பரா வருகின்றாளா என்றும் பார்க்கவில்லை. தன்னிடம் ஓடி வந்த குழந்தைகளையும் கண்டு கொள்ளவில்லை. அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டவன் கட்டிலில் சரிந்தான்.
துணியை மாற்ற பரா அறைக்கு செல்லப் பார்த்தால் அறை பூட்டியிருந்தது. தட்டவும் தோன்றவில்லை. அமைதியாக வந்து குழந்தைகளோடு அமர்ந்து விட்டாள்.
இரவாகியும் ஜெராட் வெளியே வருவது போல் தெரியவில்லை. பரா சென்று கதவை தட்டி தட்டிப் பார்த்தாள் ஜெராட் கதவை திறக்காமல் “என்னை தொந்தரவு செய்யாமல் இங்க இருந்து போ” என்று கத்தினான். குளியலறை வழியாக அறைக்கு செல்லலாம் என்று பார்த்தால் குளியலறையையும் வெளிப்பக்கமாக தாப்பாள் போட்டு வைத்திருக்கிறான். குழந்தைகளின் அறை வழியாக செல்லாம் என்று பார்த்தால் அவ்வழியும் பூட்டியிருந்தது. 
ஒரு வழியோ, இரண்டு வழியோ பூட்டியிருந்தால் சாதாரணமாக நடந்திருக்கும் என்று எண்ணலாம். எல்லா வழியும் பூட்டியிருப்பது என்பது அது ஜெராட் வேடண்டுமென்றே செய்தது தானே.
ஜெராட் ஒருநாளும் இவ்வாறு நடந்து கொண்டதுமில்லை, பேசியதுமில்லை. ஐவி இறந்ததினால் அதுவும் தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து செய்யக் கூடாததை செய்து, இறுதியில் அவளுக்காக வாங்கிய மாளிகையில் தன்னந்தனியாக ஆட்டிக்கிள் இறந்து போனது ஜெராடால் தாங்கவே முடியவில்லை. அதனால்தான் தனிமையை நாடி ஓடுகிறான். அதற்காக அவனை அப்படியே விட முடியுமா?
“முதல்ல கதவை திறங்க. பகலும் ஒன்னும் சாப்பிடல. இப்படி சாப்பிடாம இருந்தா சரியா வாங்க வெளிய” பரா கதவை தட்டவும் குழந்தைகளும் வந்து கதவை தட்டலாயினர்.
“என்ன நிம்மதியா இருக்க விடவே மாட்டீங்களா? ஏன் தான் உங்கள என் வாழ்க்கைல கொண்டு வந்தேனோ” என்றவன் கதவை பட்டென்று திறந்து “இப்பொழுது உங்களுக்கு என்னதான் வேணும்?” என்று கேட்டான்.
“என்ன சொன்னான்? இப்பொழுது நாங்கள் அவன் வாழ்க்கையில் வந்தது தொல்லையாக தெரிகிறதமா?” ஜெராட் சொன்னது பாராவின் காதில் நரசமாக விழுந்திருந்தது. ஆனாலும் அவள் அதை அவன் கோபத்தில் சொல்லியிருப்பானென்று காதில் விழாதது போல் அவனை பார்த்தாள்.
லெனின் “அப்பா, அப்பா.. ” என்று ஜெராடின் கையில் தொங்க, ஜெஸி வளமை போல் அவனை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் 
“வந்து சாப்பிடுங்க” என்றாள் பரா.
எல்லோரும் ஒன்றாகத்தானே உணவருந்துவார்கள். அதனால்தான் மூவரும் அழைக்க வந்திருப்பார்களென்று எண்ணி “எனக்கு பசிகல. நீங்க போய் சாப்பிடுங்க” என்றான் ஜெராட்.
“சாப்பிடறது மட்டுமில்ல. இது என் ரூமும் கூட, நான் துணி மாத்ததும். அடிக்கடி வர தேவை இருக்கும். இப்படி ரூமை பூட்டிக்கிட்டு இருந்தா நான் என்னோட வேலைகளை எப்படி செய்யிறது?” பரா கோபமாக சொல்லவில்லை. அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் கூறினாள்.
அவளை ஒரு பார்வை பார்த்த ஜெராட் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
துணி மாத்திக் கொண்டு வந்தவள் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு ஜெராடுக்கு சாப்பாடு கொடுக்கலாமென்று அவனை மாளிகை முழுவதும் தேடினால் அவனை காணவில்லை.
வண்டி வெளியே இருக்க, அவன் மாளிகை விட்டு சென்றிருக்கவும் வாய்ப்பில்லை. எங்கே சென்றிருப்பான்? என்று cctvயை பார்த்தால் அவன் அட்டிக்கு செல்வது தெரிந்தது.
“ஓஹ்… ஜீசஸ். அங்க என்ன பண்ணுறாரோ…” என்று பரா அட்டிக்குக்கு விரைந்தால் அட்டிக்கில் ஜெராட் ஐவி இறந்த இடத்தில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான்.
“ஜெராட் இங்க என்ன பண்ணுறீங்க? முதல்ல கீழ இறங்கி வாங்க” என்று பரா அவனை உலுக்க,
“இங்கயும் வந்துட்டியா? என்ன தொல்லை செய்ய இங்கயும் வந்துட்டியா? என்ன நிம்மதியா இருக்கவே விடமாட்டியா? என் கண்ணு முன்னால நிற்காத போ…” என்று அவளை பிடித்து தள்ளி விட்டான்.
அதை சற்றும் பரா எதிர்பார்த்திருக்கவில்லை. அட்டிகிள் எந்த பொருட்களும் இல்லை. அதனால் விழுந்தவளுக்கு அடியேதும் படவில்லை. அதிர்ச்சி மட்டும்தான்.
“என்ன பண்ணுறீங்க. முதல்ல கீழ வாங்க. சாப்பிடாம இப்படி இங்கயே இருக்க போறீங்களா?” விழுந்த இடத்திலிருந்து எழாமல் அவனை அழைத்தாள் பரா.
பராவை தள்ளி விட்ட ஜெராட் அவளை பார்த்திருந்தால் தானே அவள் விழுந்தது தெரியும் கண்களை மூடி படுத்தவாறே பதில் சொல்பவனுக்கு அவளை பார்க்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. ஐவியின் நினைவுகளோடு தொலைந்து போகவே விரும்பினான்.
“எனக்கு பசிச்சா நானே வந்து சாப்பிடுறேன். நான் ஒன்னும் கொழந்த இல்லையே. இப்போ என்ன தொந்தரவு செய்யாம போறியா?” கடுப்பில் கத்தினான் ஜெராட்.
அவன் சொல்வது உண்மைதான். குழந்தை என்றாலும் பசி வந்தால் அழும். இவன் பசித்தால் சாப்பிட மாட்டானா?
ஆனால் அவன் இருக்கும் மனநிலையில் பசி, தூக்கம் மறந்து தன்னை வருத்திக் கொள்வானென்றுதானே பரா வற்புறுத்தி சாப்பாடு கொடுக்க முனைகின்றாள்.
“சரி சாப்பிட வேணாம். அதுக்காக இந்த அட்டிக்லயா தூங்கணும்? குளிருமில்ல. கீழ வாங்க” அமைதியாக அழைத்தாள்.
“பரவால்ல நான் பார்த்துகிறேன். முதல்ல என்ன தொல்லை செய்யாம போ…” வார்த்தைக்கு வார்த்தை பராவை தொலையென்று துரத்துவதில்லையே குறியாக இருந்தான் ஜெராட்.
ஆனால் பரா விடவில்லை. வேலையாட்களை அழைத்து அட்டிக்கிள் ஜெராட் தூங்க கனமான கம்பளிப் போர்வைகளையும், தலைகாணிகளும் கொண்டு வந்து போட்டதுமல்லாது, அவன் குடிக்க, சாப்பிட என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து கடைபரப்பலானாள்.
சத்தம் வருது, டிஸ்டாப்பாக இருக்கு என்று அதற்கும் அவளுக்கு திட்டுதான் கிடைத்தது.
அதையெல்லாம் அவள் கண்டுகொள்ளாது தன் கடமையை சரியாக செய்தாள்.
தானும் சாப்பிட்டவள் அறையில் தூங்காது குழந்தைகளோடு சென்று தூங்கினாள்.
நேற்றிரவு சிந்தித்தவாறே தூங்கியதில் ஒழுங்காக தூங்காதவள் நேரம் சென்று எழ, ஜெராட் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.
நேற்று அவன் இருந்த மனநிலையில் வேலைக்கு எல்லாம் செல்வானென்று பராவுக்கு தோன்றவில்லை. குழந்தைகளை இன்று பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று எண்ணியிருந்தாள்.
அவனே ஆபீஸ் செல்ல தயாராகும் பொழுது குழந்தைகளை தயார்படுத்தலாம் என்று பரா நினைக்க, இன்று நீயே அழைத்து செல் என்று விட்டு காலை சாப்பாடையும் சாப்பிடாமல் கிளம்பியிருந்தான் ஜெராட்.
இங்கிலாந்து வந்து இத்தனை நாட்களில் ஜெராட் காலை உணவை வீட்டில் சாப்பிடாமல் சென்றதே இல்லை.
குழந்தைகளை தயார் செய்து பாடசாலை அழைத்து சென்று விட்டவள் முதலில் வந்தது அட்டிக்குக்குத்தான்.
நேற்றிரவு ஜெராட் எதையும் சாப்பிட்டிருக்கவில்லை. வேலையாட்களை அழைத்து அட்டிகை சுத்தம் செய்ய சொன்னவள் பெரிய ஒரு பூட்டைக் கொண்டு வந்து வெளியில் அட்டிக்கை பூட்டி விட்டாள்.  
இரவு ஜெராட் நேரம் சென்று வந்தது மட்டுமல்லாது நன்றாக குடித்தும் இருந்தான்.
வந்தவன் அவ்வளவு போதையிலும் அட்டிக்கு செல்ல பரா அவனை இழுத்து வந்து அறையில் தூங்க வைத்தாள்.
காலையில் எழுந்தவன் “நான் அட்டிக்ல தானே தூங்கினேன். ரூம்க்கு எப்போ வந்தேன்” என்று பராவை கேட்டான்.
“நான் அட்டிக பூட்டு போட்டு பூட்டிட்டேன். நேத்து நைட் நீங்க ரூம்லதான் தூங்கினீங்க” என்றாள்.
“பரா விளையாடாம சாவிய கொடு” கோபத்தில் சீறினான் ஜெராட்.
“ஏன் அங்க குடித்தனம் நடாத்த போறீங்களா? ஒழுங்கா ரூம்ல இருங்க” என்றாள்.
கோபத்தில் அறையை விட்டு வெளியேறியவன் பங்களாவின் மேற்கு பக்கமாக உள்ள ஒரு அறையில் தன்னுடைய பொருட்களோடு தங்கிக் கொண்டான்.
இருவரும் ஒரே அறையில் ஒன்றாக இருக்க முடிவு செய்ததே குழந்தைகளுக்காக, அதையும் அவன்தான் கூறியதே. இப்பொழுது அவனே அதை மீறி வேறொரு அறையில் தங்கிக் கொண்டதை பார்த்த பராவுக்கு கண்ணீர் முட்டிக்கு கொண்டு வந்தாலும், பரா அவனை அறைக்கு வருமாறு அழைக்கவில்லை. அவனாகவே வரட்டும் என்று இருந்து விட்டாள்.
ஜெராட் இரவில் குடித்து விட்டு வருவது தினமும் தொடர்ந்தது.
குடிப்பவன் ஐவி, ஐவி என்று புலம்பினான். ஐவிக்கு தான் துரோகம் இழைத்து விட்டதாக புலம்புவான். அதுவும் பராவை திருமணம் செய்ததனால் பெரிய துரோகம் இழைத்ததாக கதறுவான்.
இதை பார்த்து பாராவின் நெஞ்சுக்குள் இரத்தக்கண்ணீரே வரும்.
பரா எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வாள். குழந்தைகளை கவனிக்காததுதான் அவளால் பொறுக்கவே முடியவில்லை.
ஜெராட் ஜெஸியையும் லெனினையும் ஸ்கூலுக்கு அழைத்து சென்று வந்ததே ஜெஸி தன்னிடம் நெருங்க வேண்டும் என்பதற்காகத்தானே. இப்பொழுது என்னவென்றால் ஸ்கூல் வேனில் சேர்த்து விட்டிருக்க, இருவரும் அதில் தான் சென்று வருகின்றனர்.
காலை உணவின் பொழுதும் இரவு உணவின் பொழுதும் குடும்பமாக அனைவரும் அமர்ந்து உணவுண்பது தானே இந்த ஆறேழு மாதங்களாக கண்டிப்பாக கடைபிடிக்கும் வழக்கம்.
ஜெராட் இரவில் நேரம் சென்று வருவதுமல்லாது, குடித்து விட்டு வந்து தூங்கியும் விடுகிறான். இதில் இரவுணவை அவன் எங்கே இவர்களோடு அமர்ந்து உண்பான்.
“ஏன்மா  அப்பா இன்னும் வரல” லெனின் தான் தினமும் கேட்பான்.
“அப்பா ஆபீஸ் போறாருல்ல. வேலை அதிகம் அதான் நேரமாகுது” பரா சமாளித்து விட்டாள்.
குழந்தையைத்தான் பாடசாலை அழைத்து செல்வதில்லை காலை உணவையாவது ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டுமல்லவா. அனைவரும் அமர்ந்திருப்பது தெரிந்தும், கண்டுகொள்ளாது சாப்பிடாமல் கிளம்பி செல்வான்.
“ஏன் அப்பா சாப்பிடாம போறாரு?” லெனின் இந்த கேள்வியையும் தினமும் கேட்க ஆரம்பிக்க, இதற்கும் வேலை என்றுதான் பரா காரணம் கூறினாள்.
இது தொடர்ந்தால் வளரும் குழந்தை லெனின் அப்பா, அம்மாவை சந்தேகமாக பார்க்க மாட்டானா? கேள்வி மேல் கேள்வி கேட்க மாட்டானா? இதையும் அவன் தானே அவளுக்கு கூறினான்.  
நம்முடைய ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் கவனிப்பார்கள் கேள்வி கேட்பார்கள். நமக்கு பிரச்சினைகள் இருக்கிறது என்று அவர்கள் மீது எரிந்து விழ கூடாது. அப்பொழுதுதான் வழமைக்கு மாறாக அன்பு காட்ட வேண்டும். அவர்கள் கேள்வி கேட்க்கும் அளவுக்கு நடந்து கொள்ளவும் கூடாது.
இப்பொழுதும் அவன் கூறிய அனைத்தும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க,  இது குறித்து ஜெராடோடு பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள் பரா.
குழந்தைகள் இல்லாத நேரத்தில் தான் பேச வேண்டும். ஆனால் ஜெராட் குழந்தைகள் செல்லும் முன் சென்று இரவில் நேரம் சென்று வருகிறான்.
குழந்தைகள் தூங்குவதால் பேசலாம் என்று பார்த்தால் அதுவும் முடியாது. ஏனெனில் குடித்து வந்து குப்பறக்கவுந்து படுப்பவனிடம் என்ன பேசுவது?
இப்படியே நாட்கள் செல்ல, பொறுமையை இழந்த பரா ஆஃபீஸ் செல்ல வெளியே கிளம்பிய ஜெராடை நிறுத்தி “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்
“இப்போ எனக்கு நேரமில்லை. ஆபீஸ் போகணும்” முகத்தில் அடித்தது போல் கூறியவன் வண்டியில் ஏற
வண்டிக்கு முன்னால் வந்து நின்றவள் “எப்போ நேரம் கிடைக்கும் என்று சொல்லிட்டு போங்க” என்று கேட்டாள்.
“ஈவ்னிங் பேசலாம்” என்றவன் ரெண்டு நாளாக வீட்டுக்கே வரவில்லை. 
இரண்டு நாட்களுக்கு பிறகு ஜெராட் வீடு வரும் பொழுது பரா குழந்தைகளோடு விமானநிலையம் செல்ல தயாராக நின்றிருந்தாள்.
புருவம் உயர்த்திப் பார்த்தவனிடம் “அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு போன் வந்தது. அதான் நாங்க போறோம்” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேச நேரமில்லாமல் விமானநிலையம் செல்ல வண்டி வந்திருக்க குழந்தைகளோடு பயணமானாள்.
லெனின் மட்டும் பை ப்பா… என்று கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு போனான். ஜெஸி வளமை போல் அவனை கண்டுகொள்ளவே இல்லை.
“போறியா போ… போ… நீயும் என்ன விட்டு போகணும் என்று முடிவு பண்ணிட்டல்ல. அம்மாவுக்கு உடம்பு முடியாதாமே. ரெண்டு நாளா நான் வீட்டுக்கு வரலைனா ஏன் வரல. எங்க இருக்கீங்க என்று போன் பண்ணி கேட்க மாட்டாளா? போகணும் என்று முடிவு பண்ணிட்டா, அம்மாக்கு உடம்பு முடியல, ஆட்டுக்குட்டிக்கு உடம்பு முடியலன்னு காரணம் சொல்லிட்டு கிளம்ப வேண்டியதுதான்”
தன் மேல் இருக்கும் கோபத்தில் பரா பொய் கூறி குழந்தைகளை இலங்கைக்கு அழைத்து செல்வதாக எண்ணினான் ஜெராட்.

Advertisement