என் ஆசைகள் நிராசை என்று புரிந்தும்… ஆயுள் முழுவதும் உன்னுடன் வாழ்ந்திட ஆசை கொண்டேனடி…
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் சோத்துப்பாறை அணைக்கட்டுக்கு செல்லும் வழியில், சுற்றிலும் மா மரங்கள் சூழ்ந்திருக்க அவற்றின் நடுவில் அரண்மனை போன்ற தோற்றத்துடன் பரந்து விரிந்த வீட்டின் முன் கீர்த்தன் பயணித்த வாகனம் வந்து நின்றது.
” பாஸ்.. சுஹனி மேம் வீட்டுக்கு வந்துட்டோம், இங்க எந்த கல்யாண ஏற்பாடும் நடக்கிற மாதிரி தெரியலையே பாஸ். ” என்றான் சித்தேஷ்.
” நடக்கிறது கட்டாய கல்யாணம் ஊருக்கே சொல்லிட்டா செய்வாங்க, சரி வா உள்ள போய் பார்க்கலாம். ” என்று காரை வீட்டு கீழே இறங்கிய கீர்த்தன், பலவகை மா மரங்களைக் கொண்ட தோப்பை கடந்து வீட்டை நெருங்கினான்.
வந்தாரை வரவேற்கும் வகையில் பாரம்பரிய கலையம்சத்துடன் அமைந்திருந்த வீட்டின் நுழைவு வாயிலின் இருபுறமும், அமர்ந்து இளைப்பாற ஏதுவாய் கம்பீரமான மர தூண்கள் தாங்கிப் பிடித்திருந்த திண்ணையை கடந்து நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்ட கதவினை தொட்டுப் பார்த்தபடி, வீட்டினுள் நுழைந்தனர் கீர்த்தன் மற்றும் சித்தேஷ்.
” யாருயா நீங்க திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி நீங்க பாட்டுக்கு வீட்டுக்குள்ள வந்து நிக்கிறீங்க?, வெளிய போங்க இங்கெல்லாம் வரக்கூடாது, சின்ன ஐயா பாத்தா கோபப்படுவாரு, ” என்றபடி வந்தவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி செய்கை செய்தான் வீட்டின் பணியாள்.
” நாங்க உங்க சின்ன ஐயாவை தான் பார்க்க வந்திருக்கோம், அவர கொஞ்சம் வர சொல்றீங்களா?” என்று சித்தேஷ் கூறிட..
” சின்ன ஐயா ஊர்ல இல்ல, வந்ததும் வந்து பாருங்க…” என்று இருவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தான் அந்த பணியாள்.
” ஊர்ல இல்லைன்னு சொல்றீங்க?, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… நாங்க வீட்டுக்குள்ள வந்ததை பார்த்தா கோவப்படுவாருன்னு சொல்றீங்க எது உண்மை..?” என்று அதிகாரத் தோரணையுடன் வினவினான் கீர்த்தன்.
” எது உண்மையா இருந்தா உங்களுக்கென்ன முதல்ல வீட்டை விட்டு வெளியே போங்க” என்று பயம் கலந்த பதற்றத்துடன் அவசரப்படுத்தினான் பணியாள்.
பணியாளனின் பயத்தின் காரணம் போல்… ” என்ன பழனி இங்க என்ன சத்தம்? யார் இவங்க?, முன்ன பின்ன தெரியாதவங்கள வீட்டுக்குள்ள விட்டுடுவியா?, தீபேந்திரன் ஐயாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியும் தானே!, ஐயாவுக்கு தெரிஞ்சா உன் உயிரையே எடுத்துருவாரு. சட்டுபுட்டுன்னு பேசி வெளிய அனுப்பு, ‘ என்று உத்தரவு பிறப்பித்து விட்டு வந்தவர்களை மேலும் கீழும் ஆராய்வது போல் நோட்டமிட்டபடி அங்கிருந்து நகர்ந்தார் ராஜதுரை அந்த வீட்டின் எல்லாமுமாய் இருப்பவர்.
” அவர் யாரா இருந்தா உங்களுக்கு என்ன?, முதல்ல இங்க இருந்து கிளம்புங்க, இல்ல, என் உயிர் போயிடும்” என்று வந்தவர்களை தள்ளிக் கொண்டே வாசல் அழைத்துச் சென்றான் பழனி.
” என்ன பாஸ் இது முதலாளி வேலை விட்டு தூக்குவாருன்னு பயந்தா அது நியாயம் உயிரையே எடுத்துருவாருன்னு பயப்படுறாங்களே!, அப்போ அந்த சின்ன ஐயா தான் உங்களுக்கு வில்லனா இருப்பாரோ!” என்று கீர்த்தனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாய் கிசுகிசுத்தான் சித்தேஷ்.
” எனக்கு நானே தான் வில்லன்.. புதுசா எவனும் வர முடியாது புரிஞ்சதா!” என்று சித்தேஷ்ற்கு பதில் கூறியபடி பழனி காட்டிய வழியில் நடந்தான் கீர்த்தன்.
வீட்டை கடந்து மாந்தோப்பு பகுதிக்கு வந்ததும்… “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே!, பழனி” என்றான் கீர்த்தன்.
” அதெல்லாம் முடியாது… சீக்கிரம் கிளம்புங்க மனுஷனுக்கு ஆயிரத்து எட்டு வேலை கிடக்கு ” என்று வெடிக்கென்று பதில் தந்த பழனி.. மாமர தோப்புக்குள் நுழைந்தான்.
தான் அறிய விரும்பும் விபரங்களை கேட்டு அறிந்திட இதுவே தக்க தருணம் என்று யோசித்தவன், “சித்தேஷ் நீ கார்ல வெயிட் பண்ணு, நான் கொஞ்சம் டீடைல் விசாரிச்சுட்டு வரேன்.” என்றான் கீர்த்தன்.
” நானும் கூட இருக்கேன் பாஸ்.. ” என்று ஆர்வக் கோளாறாய் சித்தேஷ் கூறிட.. ” நீ இருந்தா இங்க ஒன்னும் நடக்காது கிளம்பு..” என்று அதிகாரமாய் குரலை உயர்த்தினான் கீர்த்தன்.
எஜமானனின் குரலுக்கு பணிந்து சித்தேஷ் அங்கிருந்து நகர்ந்து விட.. மெதுவாய் பழனியை பின் தொடர்ந்த கீர்த்தன், ” இந்த வீடு யாரோடது?, சுஹனி இங்க தான் இருக்காளா?, தீபேந்திரன் சுஹனிக்கு என்ன வேணும்?” என்று அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றான்.
” யார் நீங்க உங்களுக்கு எப்படி சுஹனி பாப்பாவை தெரியும். ?, ” என்று குழப்பமாய் வினவினான் பழனி.
” நான் சுஹனியோட ஃப்ரெண்ட், நான் அவளுக்கு ஹெல்ப் பண்றதுக்கு தான் ட்ரை பண்றேன் , சோ உங்களுக்கு தெரிஞ்ச விபரம் எல்லாத்தையும் என்கிட்ட தயங்காம சொல்லுங்க அப்போ தான் என்னால சுஹனிக்கு உதவி பண்ண முடியும்.” என்றான் கீர்த்தன்.
சொல்வோமா வேண்டாமா என்பது போல் தயக்கத்துடன் தனக்குள் யோசித்தவன், விபரங்களை வெளியிட்டது யார் என்று தீபேந்திரன் அறிய நேர்ந்தால் பின் விளைவு மோசமாக இருக்கும் என்ற பயத்துடன், ” நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்கு புரியல, சுஹனி பாப்பா இங்க இல்லையே!, அது சென்னையில படிச்சிட்டு இருக்கு” என்று உண்மை கூற மறுத்து பொய் உரைத்தான்.
” பொய் சொல்லாதீங்க பழனி, சுஹனி சென்னையில இல்ல, இங்க என்ன நடக்குது?, நீங்க எதை மறைக்க முயற்சி பண்றீங்க?” என்று கீர்த்தன் வினவ.. ” இங்க என்ன நடக்குது?, ஒன்னும் நடக்கலையே! நான் எதையும் மறைக்க முயற்சி பண்ணலையே..!, ” என்று பதட்டமாய் பேசினார் பழனி.
இதற்குமேல் இவரிடம் உண்மையை பெற முடியாது என்று புரிந்து கொண்ட கீர்த்தன் தனது முறையில் முயற்சிக்க முடிவெடுத்தான்.
தயக்கமும் தடுமாற்றமுமாய் எதிரில் நின்றிருந்தவன் விழிகளை கூர்ந்து கவனித்தவன், ” இப்போ நீங்க என்னோட கட்டுப்பாட்டுல இருக்கீங்க பழனி. உண்மையை சொல்லுங்க இங்க என்ன நடக்குது?, சுஹனி எங்க?, அவளை கல்யாணம் பண்ணனும்னு இங்க கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தது யாரு?, கல்யாணம் முடிஞ்சிடுச்சா?, ” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான் கீர்த்தன்.
” தீபேந்திரன் சுஹனி பாப்பாவோட மாமா பையன். சின்ன வயசுலயே தீபேந்திரன் அப்பா அம்மா தவறி போய்ட்டாங்க, அப்போ இருந்து அந்தப் பையன சுஹனி பாப்பாவோட அப்பா சுதாகர் ஐயா தான் தன் பிள்ளை மாதிரி வளர்த்திட்டு வராரு. தீபேந்திரன் ஐயாவுக்கு சுஹனி பாப்பான்னா உசுரு. ஆனா பாப்பாவுக்கு சின்ன ஐயா மேல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல, இருந்தாலும் தன்னோட அப்பா அம்மாவுக்காக கல்யாணத்துக்கு சம்மதிச்சது, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு பேருக்கும் தடபுடலா கல்யாண ஏற்பாடும் நடந்தது. திடீர்னு என்ன நடந்ததுன்னு தெரியல, சுதாகர் ஐயா காரணம் எதுவும் சொல்லாம.. கல்யாணத்தை நிறுத்திட்டாரு, அடுத்த மாசமே… சுதாகர் அய்யாவும், சுமதி அம்மாவும் கார் ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டாங்க… அம்மா அப்பாவை இழந்துட்டு தவிச்சிட்டு இருந்த பொண்ணுக்கு தீபேந்திரன் ஐயா ஆறுதலா இருந்தாரு. ஆனா திடீர்னு ஒரு நாள் பாப்பா எங்க யார்கிட்டயும் சொல்லாம ஊர விட்டு போயிடுச்சு… அதுக்கப்புறம் எங்க தேடியும் பாப்பா இருக்கிற இடம் எங்க யாருக்கும் தெரியல, நாலு நாளைக்கு முன்னாடி பாப்பா இருக்கிற இடம் தீபேந்திரன் ஐயாவுக்கு தெரிய வந்தது. உடனே ஆட்களோட போயி பாப்பாவ கூட்டிட்டு வந்துட்டாரு. இன்னும் ரெண்டு நாள்ல சின்ன ஐயாவுக்கும் பாப்பாவுக்கும் கல்யாணம்னு மட்டும் தெரியும். ஆனா பாப்பா இப்போ எங்க இருக்குன்னு எங்க யாருக்கும் தெரியாது. ” என்று தன்னை மறந்த நிலையில் தான் பணிபுரியும் வீட்டில் நிகழ்ந்த உண்மைகளை உளறிக் கொண்டிருந்தார் பழனி.
‘ அப்போ இன்னும் கல்யாணம் நடக்கல’ என்று எண்ணிக் கொண்டவன் மனம் அளவில்லா நிம்மதியை உணர்ந்தது.
“இப்போ சுஹனி எங்க இருக்கான்னு யார்கிட்ட கேட்டா தெரியும்?, என்று கீர்த்தன் கேள்வி எழுப்ப..
” ராஜதுரை ஐயா கிட்ட கேட்டா தெரியும் , அவர் தான் சின்ன ஐயாவுக்கு வலது கை இடது கைனு எல்லாம். அவருக்கு தெரியாம இந்த வீட்ல எதுவும் நடக்காது. ” என்று கீர்த்தன் விபரம் அறியக்கூடிய நபரின் விபரங்களை கூறினான் பழனி.
” அந்த ராஜதுரை நான் மீட் பண்ணனுமே!, இப்ப எங்க இருப்பார்?.. ” என்று கீர்த்தன் எழுப்பிய கேள்விக்கு, ” இப்போ வீட்டுக்குள்ள தான் இருக்காரு, நீங்க வீட்டுக்குள்ள வரும் போது கூட உங்களை யாருன்னு கேட்டாரே அவர் தான் ராஜதுரை… ” என்றான் பழனி.
” நான் அவர தனியா மீட் பண்ணனும்.. அவர் வீடு எங்க இருக்கு” என்றான் கீர்த்தன்.
” பண்ணை வீட்ல தான் இருப்பாரு..” என்று ராஜதுரையின் இருப்பிட விபரத்தை கூறினான் பழனி.
ராஜதுரையின் வீட்டு முகவரியை பழனியிடமிருந்து பெற்றுக் கொண்டவன், ” இப்போ நீயும் நானும் பேசிக்கிட்ட விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாது, நாம ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருந்தோம்னு யாராவது கேட்டா.. இந்த இடத்தை வாங்குற விஷயமா விபரம் கேட்டுட்டு இருந்தேன்னு சொல்லணும் புரிஞ்சதா..” என்றவன் பழனியை தன் வசியப்பிடியிலிருந்து விடுவித்தான் கீர்த்தன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மாத்திரை சாப்பிட்டவுடன்,அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. அதனால் தான் தலைவலி கால் வலி போன்ற வலியிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.