10…

கவலையில் நீ

கலங்கும் போதெல்லாம்

உன் கரம் பற்றிக் கொள்ள

துடிக்கிறேன்…

இருந்தும் விதியை

எண்ணிப் பார்த்து

என் விருப்பத்தை

தவிர்க்கிறேன்..

            தேடி வந்த உதவி கிட்டவில்லை என்ற விரக்தியுடன் விடுதி பொறுப்பாளர் அங்கிருந்து வெளியேற, ” ஒரு நிமிஷம் நில்லுங்க மேம். எங்க பாஸ் எப்பவும் இப்படித்தான், யோசிக்காம பேசிடுவாரு அதுக்கு அப்புறம் பொறுமையா யோசிச்சு தேடி வந்து ஹெல்ப் பண்ணுவாரு… நீங்க என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லுங்க, பாஸ் நல்ல மூட்ல இருக்கும்போது நான் அவர்கிட்ட விஷயத்தை சொல்லிடுறேன். ” என்றான் சித்தேஷ்.

            தன்னால் நேர்ந்த பிழையை எண்ணி கலங்கிய விழிகளுடன் நடந்த விபரம் அனைத்தையும் கூறி முடித்த விடுதி பொறுப்பாளர், ” இது சுஹனி என்கிட்ட கொடுத்த உங்க அட்ரஸ், இதுக்கு பின்னாடி அவளோட அட்ரஸ் எழுதி இருக்கேன். எப்படியாவது அவளை காப்பாத்திடுங்க. ” என்று கெஞ்சலுடன் வேண்டுகோள் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார் விடுதி பொறுப்பாளர் அகிலா.

            விடுதி பொறுப்பாளர் சொன்ன விவரங்களை கேட்டு அதிர்ச்சி அடைந்தான் சித்தேஷ். ‘ இந்த பொண்ணுக்கு மட்டும் எப்படி தான் இப்படி பிரச்சனை மேல பிரச்சனை வந்துகிட்டே இருக்கோ!’ என்று தனக்குள் எண்ணி கொண்டவன் தன் முதலாளியை தேடிச் சென்றான்.

            அவசரமாய் வெளியே எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தவன் வழியை மறைத்து வந்து நின்றபடி, ” பாஸ் அவசர அவசரமா எங்க கிளம்பிட்டீங்க?” என்றான் சித்தேஷ்.

            ” நான் எங்க போனா உனக்கு என்ன?, உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு தேவையில்லாம என்னை கேள்வி கேட்கிற வேலை வச்சுக்காத!” என்று எரிந்து விழுந்தான் கீர்த்தன்.

            ” எங்க போறீங்கன்னு தானே கேட்டேன், இதுக்கு எதுக்கு இவ்வளவு கோவப்படுறீங்க?” என்று சகஜமாகவே சித்தேஷ் வினவ..

            “இங்க நான் தான் பாஸ், என்னை நீ அதிகாரம் பண்ணக் கூடாது புரியுதா?” என்று கோபம் குறையாமல் பேசினான் கீர்த்தன்.

            ” நான் ஒன்னும் உங்கள அதிகாரம் பண்ணல, நீங்க பண்ற தப்பை உங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அடிக்கடி யாராவது ஹெல்ப் கேட்டு வந்தாங்களான்னு கேட்டுட்டே இருந்தீங்க!, உண்மையிலேயே ஒருத்தவங்க ஹெல்ப் கேட்டு வந்து நிக்கும் போது உதவி பண்ண முடியாதுன்னு சொல்லி அனுப்புறீங்களே ஏன் பாஸ்?” என்றான் சித்தேஷ்.

            ” அது உனக்கு தேவையில்லாத விஷயம்.. ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாது என் விஷயத்துல தலையிடாத!” என்று கோபமாய் எச்சரித்தான் கீர்த்தன்.

            ” எதுக்கு இவ்வளவு கோபம்..” என்று கீர்த்தனின் கோபத்தை பொரிதாக எடுத்துக் கொள்ளாமல் சித்தேஷ் பேசிட… இரு வேறு மன நிலையில் தவித்துக் கொண்டிருந்தவனோ தன் உள்ளத்தின் தவிப்பை அப்பட்டமாய் முகத்திலும் பிரதிபலிக்க.. ” தப்பு பண்ணிட்டோம்னு மனசு உறுத்துதா பாஸ், நான் ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க!, தப்பா எடுத்துக்கிட்டாலும் அத பத்தி எனக்கு கவலை இல்லை. உங்களுக்கு சுஹனியை பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. யூ ஆர் இன் லவ் வித் ஹெர், ” என்றான் சித்தேஷ்.

            ” ச்சே..ச் சே.. என்ன உளருற?, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல” என்று மழுப்பினான் கீர்த்தன்.

            ” பொய் சொல்லாதீங்க பாஸ், சுஹனி உங்களைத் தேடி வரணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க, அதே நேரத்துல அவங்கள அவாய்ட் பண்ணவும் நினைக்கிறீங்க?, ஏன் பாஸ்? எதுக்கு இந்த ரெட்டை வேஷம்?, பிடிச்சிருக்குனா பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே.. எதுக்காக தயங்குறீங்க?” என்றான் சித்தேஷ்.

            ” எனக்கு என்ன தயக்கம்? அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா கண்டதையும் உளறாத..” என்றான் கீர்த்தன்.

            “சும்மா நடிக்காதீங்க பாஸ், உண்மை என்னன்னு உங்க கண்ணே காட்டிக் கொடுக்குது, உங்க தயக்கத்துக்கான காரணத்தை நான் சொல்லவா.. சுஹனியை உண்மையா காதலிக்க ஆரம்பிச்சுட்டா அது உங்க முதல் காதலிக்கு செய்யுற துரோகம்னு நினைக்கிறீங்க!, அதனால தான் உங்க மனசுல இருக்குற விருப்பத்தை வெளிய காட்டாம மறைக்கிறீங்க” என்றான் சித்தேஷ்.

            ” என் சூழ்நிலை புரியாம பேசாத.. நான் அவளை காதலிச்சாலும் சரி, அவ என்னை காதலிக்க ஆரம்பிச்சாலும் சரி.. ரெண்டுல எது நடந்தாலும் சுஹனிக்கு தான் பிரச்சனை. ” என்றான் கீர்த்தன்.

            ” என்ன பிரச்சனை அவங்க உயிரா போயிடும்!” என்று உண்மை அது தான் என்பதை அறியாமலேயே பேசினான் சித்தேஷ்.

            ‘ ஆமா அவ உயிர் தான் போயிடும். அதுவும் என் கையால போயிடும். என் சுயநலத்துக்காக என் சுஹனியை நானே பலி கொடுக்க வேண்டியதாயிடும். என்னால அவ உயிருக்கு எந்த ஆபத்து வரக்கூடாது. அதனால தான் விலகிப் போறேன். அத சொன்னாலும் உனக்கு புரியாது’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டு கீர்த்தன அமைதியாய் இருக்க..

            ” என்ன அமைதி ஆயிட்டீங்க?, அப்படி என்ன பிரச்சனை வரும்னு பயப்படுறீங்க, ஸ்டேட்டஸ் பாக்கறீங்களா பாஸ்” என்று புரியாமல் பேசினான் சித்தேஷ்.

            ” என் கூட இத்தனை வருஷமா இருந்திருக்க உனக்கு என்னைப் பத்தி தெரியாதா?, நான் ஸ்டேட்டஸ் பார்த்து பழகுற ஆளா.. நீ சொல்ற மாதிரி எனக்கு அந்த பொண்ணு மேல எந்த ஃபீலிங்கும் இல்ல, அதனால தான் அந்த பொண்ணை அவாய்ட் பண்றேன். அவ்வளவு தான் விஷயம். மத்தபடி நீ நினைக்கிற மாதிரி எனக்கும் அந்த பொண்ணுக்கும் நடுவுல எதுவும் இல்லை. ” என்று மனம் அறிந்த உண்மையை மறைத்து பொய் உரைத்தான் கீர்த்தன்.

            ” அவ்வளவு தானா, நான் கூட உங்களுக்கு சுஹனியை பிடிச்சு போயிட்டா அது உங்க முதல் காதலுக்கு செய்ற துரோகம் நினைச்சு அவாய்ட் பண்ணுறீங்களோனு நினைச்சுட்டேன்.” என்று சித்தேஷ் கூறிட, ” இப்போ உனக்கு உண்மை என்னன்னு தெரிஞ்சிருச்சுல, குழப்பம் தீர்ந்துடுச்சுல, இதுக்கு மேலயாவது என்னை தொந்தரவு பண்ணாம இரு.. ” என்றான் கீர்த்தன்.

            ” அதான் உங்களுக்கு அந்த பொண்ணு மேல எந்த ஃபீலிங்கும் இல்லன்னு சொல்லிட்டீங்களே!, இதுக்கு மேல நான் எதுக்கு உங்களை தொந்தரவு பண்ண போறேன். நீங்க அந்த பொண்ண லவ் பண்ணலனு உறுதியாகிடுச்சு. இதுக்கு மேல அந்த பொண்ணுக்கு யார் கூட கல்யாணம் நடந்தா நமக்கு என்ன?, எங்கிருந்தாலும் வாழ்கனு இங்க இருந்தே பாட்டு பாடி வாழ்த்திட்டு அமைதியா இருந்துக்குவோம். ” என்றான் சித்தேஷ்.

            ” என்ன சொல்ற சுஹனிக்கு கல்யாணமா?” என்று அதிர்ச்சியுடன் வினவினான் கீர்த்தன்.

            ” ஆமாம் பாஸ் அதுவும் சாதாரண கல்யாணம் இல்ல, கட்டாயக் கல்யாணம், ஹாஸ்டல்ல இருந்து அந்த பொண்ண கட்டாயப்படுத்தி ஊருக்கு கூட்டிட்டு போயி கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க. ” என்றான் சித்தேஷ்.

            ” உண்மையை தான் சொல்றியா?, நிஜமாவே சுஹனிக்கு கல்யாணம் நடக்க போகுதா?” என்று அதிர்ச்சியும் தவிப்பமாய் வினவினான் கீர்த்தன்.

            ” அட ஆமாம் பாஸ், நான் எதுக்கு உங்க கிட்ட பொய் சொல்ல போறேன்.. நடக்கப் போறக் கட்டாய கல்யாணத்துல இருந்து சுஹனியை காப்பாத்த சொல்லி கேட்டு தான் ஹாஸ்டல் வார்டன் நம்மள தேடி வந்திருக்காங்க. ” என்றான் சித்தேஷ்.

            ” என்னடா சொல்ற கொஞ்சம் தெளிவா சொல்லு” என்று கீர்த்தன் அவசரம் காட்டிட.. ” அட அதான் பாஸ், போலீஸ் கேஸ் விஷயமா நாம ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டோம்ல, என்ன காரணம்னு தெரியல சுஹனியும் அவங்க வீட்ல ஹெல்ப் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க போல.. இந்த வார்டன் மேம் சுஹனிக்கு ஹெல்ப் பண்றதா நினைச்சு அவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிட்டாங்க, அவ்வளவு தான் அடுத்த நாளே தடி மாடு மாதிரி இருந்த பத்து பதினஞ்சு அடியாட்களோட வந்த ஒரு கெடா மாடு ஹாஸ்டல் உள்ள நுழைஞ்சு சுஹனியை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு

போயிட்டானாம். ஹாஸ்டல்ல இருந்து கிளம்பும் போது யாருக்கும் தெரியாம வார்டனை மீட் பண்ணுன சுஹனி, நான் அங்க போய் ரெண்டு நாள் ஆனதுக்கு பிறகும் உங்களுக்கு காண்டாக்ட் பண்ணாம இருந்தா உடனே இந்த அட்ரஸ்க்கு போங்க, அங்க கீர்த்தன் சாரை பார்த்து எல்லா விபரமும் சொல்லுங்க, அவர் எனக்கு ஹெல்ப் பண்ணுவாருன்னு சொல்லிருக்காங்க, உங்க மேல அவங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை பாருங்க. அவ்வளவு நம்பிக்கை இருந்தும் என்ன பிரயோஜனம், அதான் நாம ஹெல்ப் பண்ண போகலையே!, அதுவும் நல்லதுக்கு தான்..” என்று விடுதி பொறுப்பாளர் கூறிய விபரங்களை கூறி முடித்தான் சித்தேஷ்.

            ” என்ன நல்லதுன்னு சொல்ற?” என்று புரியாத குழப்பத்துடன் கீர்த்தன் கேள்வி எழுப்ப.. ” அதான் பாஸ் நீங்க ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டீங்கல, அதைத் தான் நல்லதுன்னு சொல்றேன். வார்டன் மேம் பேச்சைக் கேட்டு தேவையில்லாம ஹெல்ப் பண்ண போயிருந்தா அநியாயமா ஒரு பொண்ணோட கல்யாணம் நின்னு போயிருக்கும் பாருங்க.” என்றான் சித்தேஷ்.

            ” கல்யாணத்துக்கு அவ எப்படி சம்மதிச்சா?” என்று ஆற்றாமையுடன் கீர்த்தன் வினவிட.. ” என்ன பாஸ் சின்னப்புள்ள தனமா பேசுறீங்க, நடக்க போறது கட்டாய கல்யாணம்னு சொல்றேன், அதுக்கு எதுக்கு பாஸ் அவங்க சம்மதம்.. கையையும் காலையும் கட்டி கழுத்துல தாலிய கட்ட வேண்டியது தான்” என்றான் சித்தேஷ்.

            ” நாம உடனே ஊருக்கு கிளம்பனும் சீக்கிரம் லக்கேஜ் பேக் பண்ணு..” என்று பொறுமை இழந்த தவிப்புடன் உதவியாளனுக்கு உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தன்.

            ” ஊருக்கா! எந்த ஊருக்கு பாஸ்?, எங்கேயாவது வெக்கேஷன் ட்ரிப் போறோமா?” என்று முதலாளியின் தவிப்பை அலட்சியப்படுத்தி அசட்டையாக வினவினான் சித்தேஷ்.

            ” என்ன விளையாடுறியா?, இப்போ நீ தான சொன்ன சுஹனிக்கு கட்டாய கல்யாணம் நடக்க போகுதுன்னு, நாம போய் அந்த கல்யாணத்தை நிறுத்தி சுஹனிக்கு ஹெல்ப் பண்ண வேணாமா?” என்றான் கீர்த்தன்.

            ” வேணாம் பாஸ், எதுக்கு தேவையில்லாம கண்டவங்களுக்கும் ஹெல்ப் பண்ணிட்டு.. விடுங்க பாஸ் கல்யாணம் தானே நடந்தா நடந்துட்டு போகுது. ” என்றான் சித்தேஷ்.

            ” மடையா நான் தான் உன் பாஸ்.. நான் சொல்றத மட்டும் கேளு, ஒழுங்கா போய் லக்கேஜ் பேக் பண்ணு, நாம ரெண்டு பேரும் இப்போ ஊருக்கு கிளம்புறோம்” என்று எஜமானனாய் உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தன்.

            ‘ இவ்வளவு லவ்வ வச்சுக்கிட்டு, ரெண்டு பேருக்கும் நடுவுல ஒண்ணுமே இல்லைன்னு கதையா விடுறீங்க… இப்ப வந்தீங்களா வழிக்கு…’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டவன் தனது முதலாளியின் உத்தரவை ஏற்று பயணம் செல்வதற்கு தேவையான உடைமைகளை எடுத்து வைக்க கிளம்பினான் சித்தேஷ்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~