10

மோதலில் மலரும்  காதல்..



உன்னை விட்டு
விலக மனமில்லாமல்
விட்டுக்கொடுக்கின்றேன்
என் விருப்பங்களை..

கல்லூரி படிப்பு முடிந்து கட்டுமானப்பணி பயிற்சி மேற்கொள்ளும் எண்ணத்தில்   கோயம்புத்தூர் தனியார் அலுவலகத்தில்  சிலகாலம் பணிபுரிந்து அதன் பயனாக மதுரையில் சொந்தமாய்  கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி துவங்கியவன் சிறுகச்சிறுக வளர்ச்சியடைந்து தன் தொழிலை விரிவுபடுத்த கோயம்புத்தூரில்  அலுவலகம்  துவங்கினான். அந்த ஊரின் தட்பவெப்பநிலையும் மனிதர்கள் பழகும் விதமும் தொழில் வளர்ச்சிக்கான சூழ்நிலைகளும் பிடித்துப்போக அங்கேயே சொந்தமாக வீடுகட்டி குடியேறினான் விதுரன். 

சரவணம்பட்டி ஐடி கம்பெனிகள் பல புதிதாய் அவதரித்து அந்த பகுதியை அசுர வளர்ச்சி அடைய செய்திருந்தது. ஐடி கம்பெனிகள் பல அடுக்குமாடி கட்டிடங்கள்,   மால் என்று     நவநாகரிகத்தில்   திளைத்தது அந்த பகுதி.  சந்தியாவுடன் திருமண ஏற்பாடு நடக்கும் முன்பே இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தவன், திருமண முடிவானதும் அவளுடன் வாழப்போகும்  வாழ்க்கையின்   கனவுகளுடன் அவளுக்கு பிடித்த விதத்தில்  பார்த்து ரசித்து கட்டிய கனவு இல்லத்திற்கு  புது மனைவியுடன்   வந்து சேர்ந்தான். 

மகனின் பிடிவாத குணம் தெரிந்ததால் மறுத்து  எதுவும் கூறாமல் இரவோடு இரவாக ஊருக்கு கிளம்பிய தேன்மொழி  அவர்கள்  அண்டை  வீட்டார்களுடன் அலைபேசியில் தொடர்புகொண்டு மணமக்கள்  காலையில் வரும்போது  வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்.  

முதல்முறை புகுந்த வீடு புகுந்திடும் ஹனிகாவிற்கும் அவளை தன்  வாழ்வில் இணைத்துக்கொண்ட விதுரனுக்கும் அண்டை வீட்டு  பெண்ணொருத்தி இன்முகமாய் ஆலம் சுற்றி வரவேற்க, விதுரன்   கொண்ட காதல்   கனவுகள் கனவுகளாகவே கலைந்து போக    அவன்  வாழ்வில் இருந்து தொலைந்து போனவளின் நினைவுகளை சுமந்து நின்ற வீட்டினுள் புது கனவுகளை கண்களில் ஏந்தி மனம் நிறைந்த காதலை சுமந்தபடி  உரிமையாய் விதுரன் கரம்கோர்த்து காலடி எடுத்துவைத்தாள் ஹனிகா.

வீட்டினுள் நுழைந்ததும் வரவேற்பின் இடது பக்கத்தில்  ஆக்சிஜன் பொருத்தப்பட்டு பல வண்ண கற்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட  அகலமான கண்ணாடி தொட்டியில் பல வண்ணங்களில் துள்ளித்திரிந்த மீன்களை கண்டு ஆர்வத்துடன் அதன்  அருகில் சென்ற ஹனிகா  சிறு குழந்தையின் ஆர்வத்துடன் வியப்பாய் கண்கள் விரித்து ஒவ்வொரு மீனையும் ரசித்து பார்த்திட, ஹனிகாவின்  குழந்தைத்தனமான செயலை தன்னை மறந்து ரசித்து பார்த்தவன், மனதில்  பழைய நினைவுகள் வந்து சென்றிட, அதற்கு மேல் அங்கு நிற்க மனமில்லாமல் தனது அறைக்குள் சென்றான் விதுரன். 

 ஹனிகாவை  அழைத்துச் சென்று பூஜை  அறையில்      விளக்கு ஏற்ற செய்தனர்.  வீட்டிற்குள் அழைத்து வந்ததுடன்  தன் கடமை முடிந்தது என்பதுபோல்   விதுரன் விலகிச்  சென்றிட    பூஜையறையில்  விளக்கேற்றும்போது தன்னருகில் கணவன் இல்லை என்பதை உணர்ந்து   ஹனிகா விதுரனை  தேடிட, அவள்  தேடல் புரிந்து     ஹனிகாவை  நெருங்கிய தேன்மொழி, “நைட்டு ஃபுல்லா கார் ஓட்டிட்டு வந்திருக்கான், அலுப்பா இருக்கும் ரூம்ல ரெஸ்ட் எடுக்க போயிருப்பான், நீ விளக்கேத்து”, என்றிட அவளும் உள்ளுக்குள் உண்டான  ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அலங்கரிக்கப்பட்ட சாமி படங்களுக்கு முன் விளக்கேற்றி, உன் முன் ஏற்றி வைத்த விளக்கின் ஒளி போல் என் வாழ்விலும் ஒளி நிறைந்து இருக்க வேண்டுமென்று கண்மூடி வேண்டிக்கொண்டு   அறையை விட்டு வெளியேறினாள். 

காலை உணவை கவனிக்க தேன்மொழி ஆயத்தமாக, “இப்போ தான் ஊருல இருந்து   வந்திருக்கீங்க நீங்க எதுவும் சமைக்க வேணாம், இன்னைக்கு உங்களுக்கு   சாப்பாடு எங்க வீட்டுல இருந்து வரும்” என்று அன்பு கட்டளையிட்டார் அண்டை வீட்டு உரிமையாளர் ராதா. 

“அதெல்லாம்  வேணாம்  ராதா,  நானே…”, என்று தேன்மொழி தயங்க, “நீங்க சும்மா இருங்க நமக்குள்ள என்ன தயக்கம்?”,  என்று தேன்மொழியை அன்பால் அடக்கி சம்மதிக்க வைத்தவர் ஹனிகா அருகில் வந்து அவள் கன்னம் தொட்டு திருஷ்டி கழித்து, “பொண்ணு நம்ம விதுக்கு ரொம்ப  பொருத்தமா இருக்கு, என் கண்ணே பட்டுடும் போல, நைட்டு முதல் வேலையா  திருஷ்டி சுத்தி போடுங்க”,  என்று இருவரின் பொருத்தத்தை புகழ்ந்து பேசினார்.

முதல் முறை இருவரின் பொருத்தத்தை புகழ்ந்து கொண்ட ராதாவை கண்டதும் பிடித்துவிட்டது ஹனிகாவிற்கு, “அப்பாடா” என்று ஹனிகா மகிழ்ச்சியடைய  புதிராய் பார்த்தவர்களை பார்த்து மேலும் புன்னகை செய்தபடி, “கல்யாணம் முடிஞ்சதுல இருந்து   யாராவது ஒருத்தராவது பொருத்தமான ஜோடின்னு சொல்லமாட்டாங்களான்னு எதிர்பார்த்துட்டே இருத்தேன், யாரும் சொல்லல, நீங்க சொல்லிட்டீங்க”, என்று தன் மகிழ்ச்சியின் காரணம் கூறினாள் ஹனிகா.

ஹனிகாவின்  குழந்தைத்தனமான வார்த்தையில் கவரப்பட்ட ராதா, “உருவம் மட்டுமில்ல குணமும் எங்க விதுரனுக்கு ஏத்ததுதான்,  அவனுக்கு நீ தான்  சரியான ஆளு” என்றார் ராதா.

“அச்சோ அக்கா, நீங்க ஏன் அக்கா கல்யாணத்துக்கு வரல, நீங்க மட்டும் கல்யாணத்துக்கு வந்து  இந்த வார்த்தைய சொல்லி இருந்தீங்கன்னா, இப்படி ஒரு கல்யாணம் அவசியமான்னு  புகைஞ்சுட்டு இருந்த  சொந்தபந்தம்  முன்னாடி என் மாமா கைய பிடிச்சுட்டு  பந்தாவா திரிஞ்சிருப்பேன்”,  என்று தன்  வெகுளி மனதை வெளிப்படுத்தினாள் ஹனிகா. 

“கல்யாணத்துக்கு வரணும்னு நினைச்சோம், ஹனிகா, அது தான உன் பேரு” என்று   அவள் பெயரை உறுதி செய்து கொண்டவர், “ பிள்ளைங்க கூட விது  மாமா கல்யாணத்துக்கு போகணும்னு ஆசைப்பட்டாங்க, அடம்பிடிச்சாங்க,  ஹரியோட அப்பாவுக்கு  திடீர்னு  வேலை வந்துடுச்சு,   இல்லைனா  வந்திருப்போம்” என்று காரணம்  சொன்னார் ராதா.

“உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க அக்கா,  அவங்க எங்க?” என்று நெடுநாள் பழக்கமானவர்களுடன் உரையாடுவது போல் ஹனிகா உறவாடிட, “பார்த்ததும் ஒட்டிக்கிட்டயே.” என்று அவரும் அன்புடன்  மேலும் தொடர்ந்தார்”,  இரண்டு பிள்ளைங்க ஹனி, இரண்டும் அறுந்த வாலுங்க,   உன்னை பார்த்ததும் பிடிச்சுடும், அப்புறம் விடவே  விடாதுங்க,  நீங்க இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு   தெரியாது, நேத்து   நீங்க வந்த  விஷயத்தை கூட நான்  அவங்ககிட்ட சொல்லவே இல்ல, சொல்லிருந்தா காலையிலயே வந்து உங்கள தொந்தரவு பண்ண  ஆரம்பிச்சிடுவாங்க” என்றவர்  “பிள்ளைங்க  தொந்தரவு பண்ணுவாங்கன்னு சொல்லிட்டு நானே  இவ்வளவு நேரம்  பேசி உங்களை தொந்தரவு பண்ணிட்டு இருக்கேன் பாருங்க, சரி நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, நான் போய்  சமையல கவனிக்கிறேன்,   ஆமா விதுரன் எங்க? ” என்று சொல்லிக்கொள்ள  தேடியவர், அவன் அங்கு இல்லை என்று தெரிந்ததும்,  தேன்மொழி முகத்தில் இருந்த கவலை புரிந்தவர் போல, அவரை நெருங்கி, “கொஞ்சம் கொஞ்சமா தம்பி மாறிடும், உங்க மருமக  மாத்திடுவா கவலைப்படாதீங்க”,  என்று   ஆறுதல் கூறி விடை பெற்று சென்றார் ராதா.

வீட்டின் ஒவ்வொரு அறையையும் தேன்மொழி மருமகளுக்கு   காட்டிட ஆர்வத்துடன்  பார்த்தாள் ஹனிகா. “ கட்டிக்கப் போற பொண்ணுக்கு  பிடிக்கணும்னு  அவ விருப்பத்த கேட்டு  ஆசை ஆசையா   கட்டுனான்,  ஹம்…  வாழ குடுத்து வைக்கல, வீட்டுக்குள்ள வந்ததும் யாருக்காக  கட்டுனோம்னு நியாபகம் வந்திருக்கும், அதான் உள்ள போயிட்டான் போல” என்று மாமியார் அலுத்துக்கொள்ள,  கண்கள் சுருங்க கள்ளம் நிறைந்த புன்னகை உதட்டில் ஏந்தி, “ அதுக்கு   எதுக்கு இப்போ இவ்ளோ பெரிய பெருமூச்சு விடுறீங்க, அதான் அவர் கட்டிக்க போறவளுக்காக பார்த்து பார்த்து கட்டுன வீட்டுக்கு அவரை கட்டிக்கிட்டு வந்துட்டேன்ல”,  என்று  பதில்   தந்தவளை   புரியாமல்   பார்த்த தேன்மொழி   தோள்களில் இடித்து, “பழச விடுங்க! அத்தை,  ட்ராவல்  பண்ணுனது டையர்டா  இருக்கும், நீங்க போய் ரெஸ்ட் எடுங்க, நான் போய் உங்க பையனை பாக்குறேன்”, என்று விதுரன் இருக்கும் இடம் வந்தாள் ஹனிகா.

அறையின் ஓரத்தில் இருந்த சந்தியா புகைப்படத்தின் முன் நின்ற  விதுரனை கண்டதும்  பெண்ணவள் மனம்  வாடியது,  அதை வெளிக்காட்டாமல், “ வீடு சூப்பரா இருக்கு மாமா” என்று  பால்கனியில் போடப்பட்டிருந்த  மர ஊஞ்சலில் வந்து உரிமையாய் அமர்ந்தவளை வியப்புடன் பார்த்தவன், “உனக்கு ஊஞ்சல் பிடிக்குமா?” என்றிட “ என்ன மாமா இப்படி கேட்குறீங்க,  சின்ன வயசுல இந்த மாதிரி மர ஊஞ்சல் கேட்டு வீட்டுல அடம்பிடிச்சேன்ல, நீங்க கூட சேலையில தொட்டில் காட்டிவிட்டு, இப்போதைக்கு  இதுல  விளையாடு,  மாமா சம்பாதிக்கவும் உனக்கு மர ஊஞ்சல் வாங்கித்தரேன்னு சொன்னீங்களே!  மறந்துட்டீங்களா?” என்றாள் ஹனிகா.

“ சந்தியாவுக்கு ஊஞ்சல்  ஆடப்  பிடிக்காது, ஒரு தடவை கூட அவ இதுல உட்கார்ந்தது இல்ல”, என்று   இறுகிய  குரலில்  விதுரன் பேசிட, அவன் குரலில் இருந்த வேறுபாட்டை உணராமல், “ சந்தியாவுக்கு  ஊஞ்சல் ஆடுறதுன்னா பயம் மாமா, கொஞ்சம் வேகமாக ஆடினாலும்  போதும் தல சுத்துதுன்னு கத்த ஆரம்பிச்சுடுவா.  ஒரு தடவை ஊஞ்சல்ல இருந்து தவறி விழுந்து காலுல பயங்கர காயம் அதுல இருந்து ஊஞ்சல்ல உட்காரவேமாட்டா. ஊஞ்சல் மட்டுமில்ல திருவிழாக்கு போனா ராட்டினத்துல  கூட ஏறமாட்டா”, என்றாள் ஹனிகா.

“ வீட்டுக்குள்ள வந்ததும், நேரா  மீன் தொட்டிக்கு போன.  மீன பார்த்து சின்ன குழந்தை மாதிரி  சந்தோஷப்பட்ட. அப்போ கலர் மீன்  வளர்க்கிறது உனக்கு தான் பிடிக்கும் சந்தியாவுக்கு அதுல அந்தளவுக்கு விருப்பம் இல்ல, அப்படித்தான?” என்று குரலில் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாய் விதுரன் வினவிட, “ஆமா மீன் வளர்க்க எனக்கு தான் பிடிக்கும், கலர் கலர் மீனுங்கள பார்க்கும்போது  எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? மனசுல எவ்வளவு கஷ்டம் குழப்பம் இருந்தாலும் மீன் தொட்டி முன்னாடி போய் உட்கார்ந்து, துள்ளிக்கிட்டு சுத்தி வர மீன்கள பார்க்கும்போது  இருக்கிற குழப்பம் எல்லாம் மறந்து போயிடும் கஷ்டம் பறந்து போயிடும்”, என்று ஹனிகா கண்களை விரித்து விவரிக்க  “டெரஸ் கார்டன், தோட்டத்துல மல்லிகை பந்தல், ரூம்க்கு பிங்க் கலர்,  சாமி ரூம்ல பெரிய முருகன் படம், மாடுலர் கிச்சன், இதெல்லாம் உன் விருப்பம்? அப்படித்தான!” என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் சற்று அழுத்தத்துடன் வினவினான் விதுரன். 

அவன் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்தவள் அவன் கேட்க வருவது என்னவென்று புரிந்து, குற்ற உணர்வுடன் தலைகவிழ்ந்து மெலிதான குரலில், “சாரி மாமா, உங்ககிட்ட நேரடியா பேச சந்தியா சங்கடப்படறான்னு  அவளுக்காக கட்டுற வீடு எப்படி இருக்கணும்னு  என்னைய கேட்டுச் சொல்ல சொன்னீங்க! நானும் சந்தியாகிட்ட எவ்வளவோ கேட்டு பார்த்தேன்,  எனக்கு  இதுலயெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல எப்படி இருந்தாலும் எனக்கு ஓகேன்னு சொல்லிட்டா,அதான்”,  என்று ஹனிகா தயக்கத்துடன் நிறுத்த,  இடையில் நுழைந்த விதுரன், “சந்தியா சொன்ன விஷயத்தை நீ என்கிட்ட அப்படியே சொல்லி இருக்கலாம்ல, அத விட்டுட்டு உனக்கு புடிச்ச விஷயத்தை  அவளுக்குப் பிடிச்சதுன்னு  ஏன் பொய் சொன்ன?” என்று சற்று கோபமாகவே வினவினான் விதுரன்.

“நானும் அக்காகிட்ட  உனக்கு இதுல  விருப்பம் இல்லைன்னு  சொல்லிடலாம்னு சொன்னேன்.  அவதான் வேணா,    மாமாகிட்ட சொல்லிட்டா, விஷயம் அப்பாவுக்கு போகும். கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை வந்துடும், அப்புறம் அம்மா அவங்க அண்ணன்  பையன் கூட கல்யாண ஏற்பாடு பண்ணிடுவாங்க, அது அப்பாவுக்கு பிடிக்காது.   எல்லோரோட  சந்தோஷத்துக்காகவும் இந்த கல்யாண கண்டிப்பா நடக்கணும்னு.  உனக்கு தான்  இந்த மாதிரி விஷயத்துல இன்ட்ரஸ்ட் அதிகமே நீயே ஏதாவது சொல்லி சமாளிச்சுடுன்னு சொன்னா. எனக்கும் வேற வழி தெரியல” என்று விளக்கம் கொடுத்தாள் ஹனிகா.

“நீ இதை அன்னைக்கே   என்கிட்ட  சொல்லியிருந்தா,     அப்பவே பேசி   எல்லா  பிரச்சினையையும் முடிச்சிருக்கலாம்,  யாருக்கும் எந்த கஷ்டமும் இருந்திருக்காது, உன் அக்காவும் இன்னேரம் அவளுக்கு பிடிச்ச  வாழ்க்கைய சந்தோசமா வாழ்ந்துட்டுயிருந்திருப்பா” என்று விதுரன் நிறுத்த., “நான் தான் சொல்லுறேன்ல மாமா எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல”, என்று  ஹனிகா பாவமாய் கூறிட, “நீ என்ன பச்சைக் குழந்தையா இதை செய்யணும்,  செய்யக்கூடாதுன்னு சொல்லி குடுத்துட்டே இருக்குறதுக்கு. காதல்னா என்னன்னு தெரியாத வயசுல காதலிக்க தெரியும். இதுக்கு என்ன செய்யலாம்னு வேற வழி யோசிக்க தெரியாது, நல்ல கதையா இருக்கு”, என்று  கோபத்தை கட்டுப்படுத்தாமல் குரலை உயர்த்தினான் விதுரன்.

குனிய குனிய கொட்டும் விதுரன் கோபத்தை பொறுக்க முடியாமல்,  “நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன், என்னை எது வேணாலும் சொல்லுங்க தேவையில்லாமல் என் காதலை கொச்சைப்படுத்தாதீங்க, அப்புறம் நான்  மனுஷியா இருக்கமாட்டேன், ஆமா காதல்னா என்னன்னு தெரியாத வயசுல தான் உங்களை காதலிக்க ஆரம்பிச்சேன், ஏன்னா நீங்க கண்ணீர்விட்டு கலங்கும் போது எனக்கும் வலிச்சது, அந்த வலி தான் காதல்ன்னு எனக்கு அப்போ தெரியல. என் அக்கா ஞாபகம் வரும்போதெல்லாம் அவளுக்காக கதறுன  உங்க முகம் தான்  மனுசுல வந்து நிக்கும், எதுக்கும்  கலங்காத என் மாமா கலங்கி நின்னாரே, என்னால ஒன்னும் செய்ய முடியலன்னு பலநாள் தவிச்சேன்”,  என்று ஹனிகாவும்  பதில் தர  துவங்கிட,

விதுரன்   என்னவோ சொல்ல வாய் திறக்க, “போதும் நீங்க எதுவும்  சொல்ல வேணாம் ஏற்கனவே அளவுக்கதிகமாக பேசிட்டீங்க!, நான் இப்ப என்ன பண்ணிட்டேன், வீடு கட்டுறதுக்கு  ஐடியா கொடுத்தேன், இது ஒரு குத்தமா? இந்த குதி குதிக்கிறீங்க, ஒரு  கொத்தனார் கூட இந்த இடத்துக்கு இது நல்லா இருக்கும், இருக்காதுன்னு  ஐடியா கொடுப்பாங்க. கன்ஸ்டிரக்ஷன் பிசினஸ் பண்ணுனா  மட்டும் போதாது, கொஞ்சம் யோசிக்கவும் தெரியனும், சின்ன  விஷயத்தை கூடப் பெரிசு படுத்திட்டு”, என்று கோபத்தில் ஹனிகாவும் குரலை  உயர்த்த, “ உனக்கு இது சின்ன   விஷயமா தெரியுது, என் இடத்துல இருந்து யோசிச்சு பார்த்தா தான்  என்னோட வலி என்னன்னு புரியும்”  என்று விதுரன் விடாமல் வாதம்  செய்தான்.

“நான் உங்க இடத்துலயிருந்து யோசிக்கிறது இருக்கட்டும், நீங்க என் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்களா?,  இன்னைக்கு தான் முதல் தடவையா  வீட்டுக்குள்ள வந்திருக்கேன், சாமி படத்துக்கு முன்னாடி விளக்கேத்தும் போது  கூட என் பக்கத்துல இல்லாம விலகி வந்துட்டீங்க. எனக்கும் வலிச்சுது, ஆனா அதுக்காக  வந்து உங்ககிட்ட சண்டை போட்டேனா? சும்மா குரலை   உசத்தி கத்தக்கூடாது! எனக்கு அது புடிக்காது. நான் ஒண்ணும் உங்க அடிமை இல்ல, ஏதாவது கேட்டதும்  சொல்லுங்க எசமான்னு கையை கட்டிட்டு நிக்கிறதுக்கு,. நீங்க எனக்கு என்ன தரீங்களோ  அதைத்தான் நானும் திருப்பி தருவேன்”, என்று ஹனிகாவும்  கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் பதிலடி கொடுத்தாள்.

கொஞ்சம் அதிகமாகத்தான் பேசிவிட்டோம் என்பது புரிய விதுரன் அதற்குமேல் வாதம் செய்யாமல் அமைதியாய் அறையை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்குச்சென்றான். ஹனிகாவோ, மீண்டும் ஊஞ்சலில் அமர்ந்து  விதுரனின் கோபத்திற்கான காரணத்தை ஆராயத் தொடங்கினாள்.

இருவரும் தனிமையில் சிலநேரம் அமர்ந்து சிந்திக்க  தன் உணர்வை அடுத்தவர் மதிக்கவில்லை என்று கோபப்பட்டோமே  தவிர அவர்கள் நிலையில் இருந்து யோசிக்கவில்லை என்பது புரிந்ததும் தன் துணையின் மனநிலையிலிருந்து சிந்திக்கத்துவங்கினர். இருவருக்கும் அவர்கள் தவறு எதுவென்று புரிந்தது, மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த விதுரன் கட்டிலில் வந்து  அமர அவன் முன் வந்து நின்றவள், “சாரி, சந்தியாவை நீங்க எந்த அளவுக்கு காதலிச்சீங்கன்னு தெரியும், அவளுக்காக கட்டுன வீட்டில அவளுக்கு பிடிச்சது மட்டும்   இருக்கணும்னு    ஆசையா கட்டி இருப்பீங்க அது இல்லன்னு தெரிஞ்சது எவ்வளவு ஏமாற்றமா இருந்திருக்கும். நீங்க சொன்னது  சரிதான், நான் உங்க இடத்திலிருந்து யோசிக்கும் போதுதான் உங்க வலி என்னன்னு புரிஞ்சுக்க முடிஞ்சது, நானா இருந்தா இதைவிட அதிகமாகவே  கோபப்பட்டு உங்கள உண்டு இல்லைன்னு ஒருவழி ஆக்கியிருப்பேன்”, என்று  தன் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டினாள் ஹனிகா. 

எப்படி தொடங்குவது என்று தெரியாமல் தயங்கிக்கொண்டிருந்த விதுரன், ஹனிகாவே முதலில் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கவும்  தன் தயக்கம் உடைத்து, அவள் கரம் பற்றி தன் அருகில் அமர்த்திக் கொண்டவன்,  “நான் தான்  உன்கிட்ட சாரி கேட்கணும், எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்த உன்கிட்ட கோபமா வெளிப்படுத்திட்டேன், சாரிடா உண்மையிலேயே உன்னை காயப்படுத்தனும்னு  அப்படி  பேசல”, என்று விதுரன் நிறுத்த, “உங்க கோபத்துல  இருந்த நியாயம் புரிஞ்சுதான் நான் அமைதியா இருந்தேன்,  ஆனா நீங்க என் காதல தப்பா பேசவும்  என்னால தாங்கிக்க முடியல, அதனாலதான் நானும்  கோபமா திருப்பி கொடுக்க வேண்டியதா போச்சு,” என்று தன் கோபத்தின் காரணம் கூறினாள் ஹனிகா. 

“சாரிடா..” என்று  கெஞ்சலுடன் பேசிய விதுரன் கைக்குள் தன் கரத்தினை புகுத்திக்கொண்டு, “இந்த ஒரு தடவை போனா போகட்டும் பொழைச்சு போங்கன்னு மன்னிச்சு விடுறேன், இன்னொரு தடவை நான் உங்க மேல வச்சிருக்க காதலை ஏதாவது தப்பா பேசுனீங்க, உங்கள என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”, என்று   மனமிறங்கி வர, “ஹனிமா.. உண்மைய சொல்லனும்னா, கொஞ்சம் கொஞ்சமா நான் உன்  காதல காதலிக்க  ஆரம்பிச்சுட்டேன்”, என்றான் விதுரன்.

“காதல மட்டும் தானா!” என்று  குழந்தையாய் சிணுங்கியவள், பிடிகொடுக்காமல் பிடிவாதமாய் அமர்ந்திருந்த விதுரனை கண்டு உதடு சுழித்து, ‘சரியான அழுத்தக்காரன்,  காதல மட்டும் இல்ல,  உன்னையும் தான்   காதலிக்கிறேன்னு சொன்னாதான் என்னவாம்?, வாயில இருக்க முத்தா உதிந்திரும்!’  என்று வாய்க்குள் முனுமுனுக்க, “என்கிட்ட ஏதாவது சொன்னியா?” என்றான் விதுரன்.

“சுரக்காவுக்கு  உப்பு இல்லன்னு சொன்னேன்”, என்று மீண்டும் உதட்டை   சுழித்து, “உங்க ஊர்ல இப்படித்தான் சமாதானப்படுத்துவாங்களா!” என்று சொல்லி வாய் மூடும் முன் கன்னத்தில் முத்தம் பதித்து, “இப்படி சமாதானப்படுத்தினா ஓகே வா” என்றான் விதுரன் சிறு வெட்க குரலில்.

எதிர்பாராது கிடைத்த முத்தத்தில்  கிறங்கி தவித்தவள்,  “நான் ஐஸ் கிரீம்  கேட்டேன்”, என்று  சிணுங்கிட . “ என்ன?” என்று முதலில் அதிர்ந்தவன் பின் தன்னை சரி செய்து கொண்டு, “ நாளைக்கு ஃபேமிலி   பேக்  வாங்கித்தரேன்”  என்றிட, “ ஃபேமிலி பேக் இருக்கட்டும், அது என்ன  ஐஸ்கிரீம்ன்னு சொன்னதும் உங்க முகம்  அப்படி போச்சு?” என்று ஹனி விசாரணையில் இறங்கிட, “அதுவா” என்று தலையைச் சொறிந்தபடி தயங்கிக் கொண்டே, “காலேஜ் படிக்கும்போது நிறைய ரகசிய வார்த்தை வைச்சு  எல்லாரையும்  கலாய்ப்போம், அதாவது கோர்ட் வேர்ட் அதில இந்த ஐஸ்கிரீமும் ஒன்னு”, என்றவனை புரியாமல் பார்த்தவள்,  “அவ்ளோ தான அதை சொல்ல எதுக்கு இந்த நெளி நெளியுறீங்க” என்றாள் ஹனிகா.  “ லிப் லாக் கிஸ்க்கு பேர் தான்  ஐஸ்  கிரீம்”  என்று பதில் கூறி விதுரன் எழுந்து கொள்ள..

அடிக்கடி
கஞ்சன் என்று
நிரூபிக்கிறாய்..
கன்னத்தில்
ஒற்றை முத்தமிட்டு.. 

என்று கவிதையாய் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினாள் ஹனிகா.

வாய்விட்டு  கேட்ட பின்பும் வாய்மூடி அமர்ந்திருப்பது ஆண்மைக்கு அழகல்ல என்று எண்ணி, தான் கஞ்சன் இல்லை காதலில் உன்னையே மிஞ்சும் வல்லவன் என்று முதல் இதழ் முத்தம் பதித்து, “இப்போ சொல்லு நான் கஞ்சனா?” என்றிட,   முதல் முறை வெட்கத்தை அரிதாரமாய் பூசிக்கொண்டவள் அந்திவானமாய் சிவந்து போனாள் ஹனிகா. 

எனக்காக
உன் நிஜத்தை மாற்றி
போலி முகமூடி
அணியாதே…
நான் என்னை
மறந்து நேசித்தது..
உன் நிஜத்தை தானே தவிர
போலி  நிழலை அல்ல..