உதிரம் பருகும் உயிரே…

1……

ஒரு தேடல் முடிந்ததும்..

மற்றொரு தேடலை துவங்கிவிடும்

விசித்திர குணம் கொண்டது மனம்…

கி.பி. 1974…

மனித நடமாட்டமே இல்லாத இருள் படர்ந்த அடர் வனம்… நிலவில்லா வானத்தின் இருள் அந்த வனத்தை மேலும் இருளில் மூழ்கடிக்க…

ஒரு கையில் தீப்பந்தம் ஏந்திக்கொண்டு மறுக்கையால் அழகு மங்கை ஒருவள் கரம் பற்றி.. காரிருள் காட்டுக்குள் நடந்து சென்றான் ஒருவன்.

சிதலமடைந்த கட்டிடத்தின் அமைப்புகளையும் அங்கங்கு சிதறிக் கிடந்த மனித எலும்புத்துண்டுகளையும் கண்டு… அதுவரை காதலன் கரம் பற்றி நடந்து வந்தவள் மனதில் நடுக்கம் பிறந்தது, மனதில் உணர்ந்த நடுக்கத்தை குரலில் தேக்கிக் கொண்டு, ” என்னங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு, வீட்டுக்கு போயிடலாமே!” என்றாள்.

“நான் உன் பக்கத்துல இருக்கும் போது உனக்கு எதுக்கு தேவையில்லாத பயம், எதுவா இருந்தாலும் என்னை மீறி தான் உன்னை நெருங்க முடியும்.. ” என்றவன், அவள் கரம் பற்றி இருந்த கரத்தை விலக்கி அவள் தோள்களில் மாலை போல் போட்டுக் கொண்டு மேலும் அவளை முன் நடத்தி செல்ல… தூரத்தில் ஓர் ஓநாய் அதன் ஒய்யாரக் குரலில் ஓங்கி ஊளையிட்டது.

காதலன் அணைப்பு இதம் தந்தாலும், ஓநாயின் கூக்குரல் அந்த இதத்தையும் மீறிய பயத்தை உள்ளக்குள் விதைத்தது, நடந்து கொண்டிருந்த பாதங்கள் நடுக்கத்துடன் நின்ற இடம் விட்டு நகர மறுக்க… ” போதும், உங்க வீட்டை விடிஞ்சதும் காலையில வந்து பார்த்துக்கலாம், இப்போ திரும்ப போகலாம்” என்றாள் அவள்.

” இவ்ளோ தூரம் வந்துட்டு இப்போ என்ன தயக்கம்?, இன்னும் கொஞ்ச தூரம் தான், நான் நினைச்சு வந்தது நடந்ததும், நானே உன்னை நீ போக வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைச்சுடுறேன்” என்றவன் இடிப்பாடுகளுக்கு நடுவில் குற்றுயிராய் கிடந்த மதில்களின் மத்தியப் பகுதியை கடந்து அவளை அழைத்து வந்தான்.

பயத்தில் மிரண்டு விழித்த பெண்ணவள் விழிகள் சுற்றும் முற்றும் பார்வையில் அலசிட.. ” என்ன அப்படிப் பார்க்கிற?” என்றான் அவன்.

” இது என்ன இடம்னு பார்க்கிறேன்..” என்றாள் அவள்.

” இது என்ன இடம்னு தெரியனும்!, அவ்வளவு தானே!, நான் சொல்றேன்.. ” என்றவன்.. கையில் இருந்த தீபந்தத்தை உயர்திக் காட்டி, ” சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த செங்கோட தேசிங்க புரத்தை சீரும் சிறப்புமாய் ஆட்சி புரிந்து வந்த கீர்த்தி வர்ம தேசிங்கன், தன் ராஜ்ஜிய மக்களுக்கு இன்னல் விளைவித்த கொடூரர்களை ஈவு இரக்கமே இல்லாமல் கொடூரமாய் கொலை செய்த கொலை களம் இது. இதோ இங்கு தான் கழுவேறு மரம் இருந்தது, தலை வேறு உடல் வேறாய் துண்டிக்க கூடிய கொடும் கூர் வாள் இங்கு தான் பதிக்கப்பட்டிருந்தது, இவ்விடத்தில் தான் மன்னனுக்கு எதிராக சதி செய்த கயவர்களுக்கு யானை கொண்டு மிதிக்கச் செய்யும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.” என்று மன்னர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட கொடூர தண்டனைகள் குறித்து விவரித்தான் அவன்.

” ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நடந்த சங்கதிங்க உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அத்தனை பயத்திலும் அசட்டு சிரிப்புடன் வினவினாள் அவள்.

” ஏன் தெரியாது…?, இந்த இடத்தில் கொடூரக் கொலைகள் புரிய உத்தரவிட்ட மன்னன் நான் தானே!” என்று அச்சுறுத்தும் குரலில் கூறினான் அவன்.

“சும்மா பொய் சொல்லாதீங்க!, என்னை பயமுறுத்தணும்னு தானே இப்படி எல்லாம் சொல்றீங்க?,” என்று உள்ளுக்குள் உணரும் பயத்தை மறைத்து வினவினாள் அவள்.

” நான் ஏன் பொய் சொல்லப் போகிறேன், இதோ இங்கு தான், என் நாட்டு மக்களை பல காலமாக மூட நம்பிக்கையால் நரபலி கொடுத்து கொலை செய்து கொண்டிருந்த நயவஞ்சக் கொடூரனை கழுவேற்றி கொலை செய்தேன். கழுவேற்ற உத்தரவிட்ட அன்றிரவு வலியிலும் வேதனையிலும் அக் கொடியவன் என்னை சபித்து கூறிய வார்த்தைகள் இன்னும் இந்த வனத்தில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவனின் கொடிய வார்த்தைகள் உன் செவிகளில் விழவில்லையா?” என்றான் அவன்.

” என்னங்க என்னென்னவோ சொல்லுறீங்க!, நீங்க பேசுற விதம் கூட வித்தியாசமா இருக்கு, எனக்கு ரொம்ப பயமா இருக்கு!, என்னை கொண்டு போய் என் வீட்டுல விட்டுடுங்க,” என்றாள் அவள்.

” உன் காதல் உண்மை தானே?” எனும் குரல் அவளுக்கு பின்னிருந்து கேட்க… ” அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்?” என்று அத்தனை பயத்திலும் தன் காதல் உண்மையென உறுதியுடன் அறிவித்தாள் அவள்.

” அப்போ எனக்காக எதையும் செய்வாயா?” என்று அவன் வினவ, ” உங்களுக்காக என் உயிர கூடக் கொடுப்பேன்” என்று அவள் கூறிய அடுத்த நொடி… அவளுக்கு பின் இருந்தவன் கண்கள் அளவில்லா மகிழ்ச்சியில் மிளிர்ந்தது.

” எனக்கும் அது தான் தேவை…” என்றவன் அவள் சுதாரிக்கும் முன் கூரிய பற்களால் கழுத்தின் நரம்புகளை கடித்து, அவள் செங்குருதி அக் கொலை களம் முழுவதும் படரும் படி செய்தான்.

‘ஆ’ எனும் பெண்ணின் அலறல் குரல் காடெங்கும் எதிரொலிக்க…உயிர் பிரிந்த உடல் மண் மீது சரிந்து விழுந்தது.

குருதி பருகிய கோரப் பற்களை உள் இழுத்துக்கொண்டவன் எதையோ எதிர்பார்த்து ஆவலுடன் அவ்விடத்தை சுற்றி வந்தான்.

‘ என்னை வதைத்ததற்கான பலன்களை நீ கூடிய விரைவில் அனுபவிக்கப் போகிறாய் தேசிங்கா!, எவரும் வாழ விரும்பாத வாழ்க்கை, எவரும் அனுபவித்து பாராத வேதனைகளை நீ அனுபவிக்க போகிறாய். உனக்கு வேண்டியவர்கள் எல்லோரும் உன் கண் முன் மடிந்து கொண்டிருக்க, அத்தகைய கொடிய வேதனையை அனுபவித்தபடி நெருப்பில் இட்ட அற்ப புழு போல் நீ பரிதவிக்கப் போகிறாய். எந்த மக்களுக்காக என்னை வதைக்க துணித்தாயோ!, அதே மக்கள் உன்னை வெறுத்து ஒதுக்குவர், அன்புடன் உன்னை அணுகுபவர்கள் அனைவரும் உன் உண்மை அறிந்ததும் அச்சத்துடன் விலகி ஓடுவர். வாழும் ஒவ்வொரு நாளும் நீ உன் மரணத்தை வேண்ட, நீ வேண்டும் மரணம் மட்டும் என்றும் உன்னை நெருங்காது. இறப்பை எதிர்பார்த்து காலம் முழுவதும் நீ காத்துக் கிடக்க போகிறாய். என் காதலின் அருமை புரியாது என்னை கொலை செய்த பாவத்திற்காக காலம் முழுவதும் உனது உண்மை காதலை தேடி அலையப் போகிறாய்..’ என்று அன்று கொலையுண்டவன் உச்சரித்த வரிகள் மீண்டும் அவன் காதுகளில் எதிரொலிக்க, எதிர்பார்த்தது நடக்காத ஏமாற்றத்துடன் ஓ.. வென கோபமாய் கர்ஜித்தான்.

‘ இன்னும் எத்தனை காலம் நான் இத்தகைய வேதனையை அனுபவிக்க வேண்டுமோ!, உண்மைக் காதலை தேடி இன்னும் எத்தனை ஆண்டுகள் தவம் கிடக்க வேண்டுமோ!’ என்று பல ஆண்டுகளாய் அடக்கி வைத்த வேதனையுடன் அரற்றினான் அவன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது என்றால்.. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~