Advertisement

தாயாய் என் தாரமாய்..

1 முதல் சந்திப்பு..

ஒருநொடி இமைமூடி உன் மடிசாயும் வேளை

என் அன்னையின் ஸ்பரிசத்தை உணர்கின்றேன்..

ஆதரவாய் உன் விரல் என் தேகம் தீண்டும் வேளை..

என் சோகம் முழுதும் முழுதாய் கரைந்திடக் காண்கின்றேன்…

கடற்கரை மணலில் கால்கள் புதைய, நிலவின் அழகை ரசித்தபடி, குளிர்ந்த காற்று முகத்தில் மோதிட மெதுவாய் நடந்தாள் மதுரிமா.

“போதும் மது, இன்னும் எவ்வளவு தூரம் இப்படி நடப்ப.., கிளம்பலாம் வா” என்று வம்படியாய் கைபிடித்து இழுத்தாள் மதுவின் ஆருயிர் தோழி, சரிகா.

“நாளைக்கு எக்ஸாம் ஆரம்பிச்சுட்டா, அடுத்து ஒருவாரத்துக்கு மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி வேற எந்த நினைப்பும் இல்லாம திறியப்போறோம், எக்ஸாம் முடிஞ்சு ஊருக்குப்போனா இதைச்செய்யாத! அதைச்செய்யாதன்னு தொட்டத்துக்கெல்லாம் கட்டளை போடுற பாட்டியோட கெடுபிடி, இங்க இருக்கும் போதாவது கொஞ்சம் சந்தோசமா இருந்துக்கிறேன் விடேன்டி, நீயும் என் பாட்டி மாதிரி ஆர்டர் போடாம.. கொஞ்சம் இந்த இயற்கைய ரசி, என்னையும் ரசிக்க விடு” என்று மீண்டும் மணலில் நடக்க துவங்கினாள் மதுரிமா.

சற்றுநேரம் ஆசை தீர நடந்தவள் மீண்டும் விடுதி திரும்ப ஆள் அதிகமில்லாத பகுதியை கடக்கையில், சாலையோரத்தில் ஒருகார்.. மரத்தின் மீது மோதி நிற்கக் கண்டு வேகமாய் அதன் அருகில் சென்றவர்கள், காரின் உள்ளே மயங்கிய நிலையில் கிடந்தவனை கண்டு பதற்றம் அதிகமாக, “ ஆள் காலிபோல மது வா, ஓடிடலாம்” என்றாள் சரிகா.

“ஒருத்தர் அடிபட்டு கிடக்கிறத பார்த்தும் பார்க்காத மாதிரி போகச்சொல்லுற, என்ன மனுசி நீ? உன்னை மாதிரி என்னால இருக்க முடியாது“ என்றவள் அடிபட்டு கிடந்தவனை நெருங்கிட.. “ இந்த உலகத்துல நீ ஒருத்தி தான் மனுஷி மாதிரி நடந்துக்காத, நமக்கு முன்னாடி இந்த ரோட்டுல எத்தனை பேர் போயிருப்பாங்க, அவங்களும் கண்டும் காணாம தான் போயிருப்பாங்க, அவங்க எல்லாம் மனுசங்க இல்லையா?, ” என்று கேட்டபடி தோழியின் கரம் பற்றி தடுத்து நிறுத்தினாள் சரிகா.

தோழியின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் “ உன் போன் ஆன் ஆகுதா பாரு?, ஆம்புலன்சுக்கு கூப்பிடு” என்றவள் காரின் கதவை திறக்க, மயக்கத்தில் இருந்தவன் அவள் மீதே சரிந்து விழுந்தான்.

அவனை மெதுவாய் தாங்கிப் பிடித்தபடி, காரினுள்ளிருந்து வெளியே இழுத்தாள் மதுரிமா. “நீ என்ன பைத்தியாமா மது! அவனை பார்த்தா குடிபோதையில விழுந்து கிடக்குற மாதிரி தெரியுது, கழுத்து வரைக்கும் குடிச்சுட்டு காரை மரத்துக்கு முட்டுக்குடுத்து வைச்சுருக்கான், இந்த காலத்துல நார்மலா இருக்கிற மனுஷங்களையே நம்பமுடியாது, இதுல சரக்கு வேற உள்ள போயிடுச்சுன்னா பாதி மிருகம்தான், நமக்கு எதுக்கு வீண் வம்பு, வா போகலாம்” என்று பதறினாள் சரிகா.

“இவன் நல்லவனா, கெட்டவனான்னு உன்கிட்ட ஜோசியம் கேட்டேனா? ஆபத்துல இருக்கிறார், உதவப்போறோம்.. அவ்ளோ தான், இதுக்கு எதுக்கு நீ தேவையில்லாத ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க?” என்று தோழிக்கு பதில் கொடுத்துக்கொண்டே, காயம் பலமா? தலையில் தவிர வேறு எங்கும் அடிபட்டுள்ளதா? என்று ஒருமுறை மேலோட்டமாக ஆராய்ந்துவிட்டு, “ நல்லவேல சகா, தலையில் மட்டும் அடிபட்ட மாதிரி இருக்கு. அடிபலமா இருக்கும் போல.. அதனாலதான் மயக்கம் போட்டுட்டார்,!” என்றாள் மது.

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன செய்ற?, வா மது இங்கயிருந்து கிளம்பலாம்” என்று கைபிடித்து இழுத்தாள் சரிகா.

தோழியின் உளறல்கள் எதையும் காதில் வாங்காமல், தன் மீது சரிந்துக் கிடந்தவனை ஆதரவாய் பற்றிக்கொண்டு, “ உன் போன் ஆன் ஆனதா? இல்லையா?, பக்கத்துல யாரும் துணைக்கு இருக்காங்களான்னு பாரு” என்று படபடத்தாள் மது.

“நமக்கு எதுக்கு வீண் வம்பு மது, தொல்லைய தூக்கி தோளுல போட்டுக்காத..! உன் நல்லத்துக்கு தான் சொல்லுறேன், என் நல்ல மனசு புரியாம நீ என்னையவே திட்டுற!” என்று சலித்துக்கொண்டே மதுவின் கோபத்திற்கு பயந்து.. சுற்றும் முற்றும் பார்வையில் துளவியவள், “ இந்த பக்கம் யாருமே வரல மது, ஒரு தெருநாய் கூட இல்ல.. எனக்கு என்னவோ பயமா இருக்கு, இவன் உண்மைலேயே மயங்கித் தான் கிடக்குறானா! இல்ல இப்படி நடிச்சு அழகான பொண்ணுங்கள கடத்துற கும்பலை சேர்ந்தவனான்னு தெரியல!, வாடி ஓடிடலாம்” என்று பயத்துடன் கூறினாள் சரிகா.

“அது அழகான பொண்ணுங்களுக்கு வரவேண்டிய கவலை.. உனக்கு எதுக்கு?, சும்மா லொடலொடன்னு பேசாம உன் போனை குடு.. “ என்றாள் மது.

“என் போன் சார்ஜ் இல்லாம சுவிட்ச்ஆப் ஆகிடுச்சு, பேசாம ஒன்னு செய்யலாம், நாம இங்கயிருந்து போய் வேறு யாரையாவது உதவிக்கு அனுப்பலாம்” என்று யோசனை சொன்னாள் சரிகா.

“நாம போயிட்டு திரும்பி வரவரைக்கும் இவரை இப்படியே இங்கயே தனியா விட்டுட்டு போக சொல்லுறியா? “ என்று மது கோபமாய் வினவிட.. “அப்போ இந்த துரைக்கு துணைக்கு என்னைய இருக்க சொல்லுறியா?” என்று பதில் கொடுத்தாள் சரிகா.

“ உனக்கு உதவ விருப்பம் இல்லைனா கிளம்பு நான் பார்த்துகிறேன்” என்று வெடுக்கென்று மது பதில் தர, “ உன்னை எப்படி தனியா விட்டு போகமுடியும்?” என்று அக்கறையுடன் பேசிய தோழியை கண்டு கோபம் சற்று தணிந்து.. “உனக்கு கார் ஓட்டத் தெரியுமே!, இந்த கார் ஸ்டார்ட் ஆகுதான்னு பாரு, நாமலே ஹாஸ்பிட்டல்ல சேர்த்திடலாம்,” என்றாள் மது.

“நான் சொன்னா நீ எங்க கேட்க்கப் போற.., எனக்கு என்னவோ இவனால பெரிய பிரச்சனை வரும்னு தோணுது! விதி யாரை விட்டது வரது வரட்டும்!”, என்று தன் பேச்சுக்கு பணியாத தோழியின் செயலை எண்ணி புலம்பியபடி காரின் அருகில் சென்று அதனை உயிர்ப்பிக்க முயற்சித்தாள் சரிகா.

முதல் முறை முயலும்போது முக்கலும் முனகலுமாய் இருந்த காரின் ஓசை, மூன்றாவது முறை முயலும்போது பெரும் கர்ஜனை போல் சீறியபடி புறப்பட தயார் நிலையில் இருப்பதை உறுதி படுத்தியது. “ இவனுக்கு நேரம் கொஞ்சம் நல்லாதான் இருக்கு போல! இவன் அளவுக்கு காருக்கு எந்த சேதாரமும் இல்ல, நீ அவனை பின் சீட்டுல படுக்கவை.. போற வழியில ஏதாவது ஒரு ஹாஸ்பிட்டல்ல தள்ளிவிட்டு, நாம நம்ம வழியை பார்த்து போகலாம்” என்றாள் சரிகா.

“ஏய் என்ன ஒய்யாரமா காருல ஏறி உட்கார்ந்துட்ட, ஒரு கைபிடி” என்று தோழியை அழைத்து அவள் உதவியுடன் காரின் பின் சீட்டில் அடிப்பட்டவனை படுக்கவைத்துவிட்டு திரும்பியவள், அவன் முகம் வலியில் சுருங்கக்கண்டு அவன் அருகிலேயே அமர்ந்துகொண்டு, இருக்கையின் கீழே விழுந்து கிடந்த சிறு தலையணையை எடுத்து, அதில் அவன் தலையை தூக்கிப் பத்திரமாய் படுக்கவைத்தாள் மது.

மதுரிமாவின் செயலை கவனித்து, “அடியே அன்னை தெரசா அடுத்த வாரிசே!, உன் கருணை உள்ளத்துக்கு கடிவாளமே இல்லையா? யார்னு தெரியதவனுக்கே இப்படி கருணை கடலை கட்டவிழ்த்து விடுற!, இதெல்லாம் என்னால பாக்க முடியல? நான் காரை எடுக்கவா.. இல்ல ஹாஸ்பிடல் வரைக்கும் தள்ளிக்கிட்டே வரவா” என்ற சரிகாவைப் பார்த்து, மதுரிமா கோபமாய் முறைக்க..

“ஏன்டி முறைக்கிற?, இல்லை கார் ஓட்டும்போது குலுங்கினா, அதுவும் இந்த துரைக்கு நோகும்னு சொல்லுவியே!, அதான் தேர் மாதிரி தள்ளிக்கிட்டே வரட்டுமானு கேட்டேன்” என்றாள் சரிகா.

“எந்த நேரத்துல விளையாடுறதுன்னு விவஸ்தை இல்ல.. ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது தான் உன் வாய் சவடாலை காட்டுவியா?” என்று கோபமாய் கடிந்தாள் மது.

“அடடா, என்னவோ உன் புருஷன் உயிருக்காக எமன் கூட போராடிக்கிட்டு இருக்குற மாதிரி பதறுற.. அவனே அடிச்ச போதையில ரோடு எது? வீடு எதுன்னு கூட தெரியாம மயங்கிக்கிடக்கிறான், இந்த தண்ணியை முகத்துல அடி, போதை தெளிஞ்சு எந்திரிச்சு உட்கார்ந்து.. என் காருக்குள்ள நீங்க என்ன பண்ணுறீங்கன்னு திமிரா கேட்டு உதவி பண்ணுன நம்மலையே கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுவான்.” என்று அவள் கோபத்தையும் கேலி செய்துவிட்டு, காரினுள் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மதுவிடம் நீட்டினாள் சரிகா.

“உன்னை திருத்தவே முடியாது” என்று தனக்குள் முணுமுணுத்தபடி தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்க, மயக்கம் கலைந்து லேசாய் அசைந்தவன், கண்ணை திறக்க முடியாத வலியையும் பொருட்படுத்தாது மெதுவாய் திறந்து பார்க்க முயற்சித்து, காயத்தின் வலி மிகுதியாகவும் “அம்மா, அம்மா” என்று மெதுவாய் வாய்க்குள்ளேயே முணங்கிக்கொண்டே முயற்சியை கைவிட்டு மீண்டும் கண்மூடிக் கொண்டான்.

“சகா, காரை எடு, ரொம்ப வலிக்குது போல இவரால கண்ணையே திறக்க முடியல.. “ என்று படபடப்பாய் கூறியவள், எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாய் இருந்த தோழியை கண்டு கோபமாய்.. ” இன்னும் என்னடி யோசிச்சுட்டு இருக்க.. நல்லது செய்யக்கூட நாள் கிழமை பார்ப்பியா?” என்று அதட்டிவிட்டு, வலி மிகுதியில் சுருங்கிய நெற்றியை நீவி விட்டபடி, “ உங்களுக்கு ஒன்னுமில்ல இன்னும் கொஞ்ச நேரத்துல, ஹாஸ்பிட்டல் போயிடலாம்.. எல்லாம் சரியாகிடும்” என்று காயத்தின் வலியில் முணங்கியவனுக்கு ஆறுதல் கூறினாள் மது.

தோழியின் செயலைக் கண்டு உள்ளம் கடுத்தாலும், இதற்கு மேலும் ஏதும் வாயடித்து நேரத்தை கடத்தினால் அவளே இறங்கி வந்து அடித்து துவைத்துவிடுவாள் என்று புரிய அதற்கு மேலும் மதுவின் பொறுமையை சோதிக்காமல் காரை எடுத்தாள் சரிகா.

வேதனையில் துடித்தவன் வலியை குறைத்திட ஆதரவாய் வருடிய விரல்களைப் பற்றி தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து பிடித்துக்கொண்டு, “அம்மா, அம்மா” என்ற முணங்களை மட்டும் விடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்க, வலியின் தாக்கத்தில் இப்படி நடந்துகொள்கின்றான் என்று புரிந்துகொண்ட மது, ”உங்களுக்கு ஒன்னுமில்ல.. சின்ன காயம் தான். இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணை திறந்து பார்க்கும் போது எல்லாம் சரியாகிடும், ” என்று அவன் வேதைனையை குறைக்க இதமாய் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தாள் மது.

தனக்கு ஆதரவு கூரியவளின் வரிகளில் தன் உடல் வேதனை மறந்து ஒருநொடி சுருங்கி விரிந்த புருவமும், புன்னகையின் சாயலாய் மலர்ந்த இதழும் மறுநொடி வாட, விழியின் ஓரம் சில கண்ணீர் துளிகள் கசிந்தது அவனுக்கு.

வலியின் வேதனையில் வடியும் கண்ணீரை மெதுவாய் துடைத்துவிட்டு.. “பயப்படாதீங்க, நான் இருக்கேன், உங்களுக்கு ஒன்னும் ஆகாது,” என்று அவளையும் மீறி மது ஆதரவாய் கூறிட.. கண்ணீர் வடிந்த விழிகளை திறவாமலேயே.. “ என்னை விட்டு போகாத மா.. என்கூடவே இரு” என்று கெஞ்சலாய் கூறி நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினான்.

மெலிதாய் ஒலித்த அவன் குரல் மதுவின் காதில் எட்டவில்லை.. ஒருவேளை அவன் வரிகள் அவள் செவிகளை எட்டியிருந்தாலும் அதை சூழ்நிலை பயத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் என்றே தவிர்த்திருப்பாள்.

செல்லும் வழியிலிருந்த ஒரு மருத்துவமனை முன் காரை நிறுத்திவிட்டு, “ நீ இங்கேயேயிரு உதவிக்கு யாரையாவது இழுத்துட்டு வரேன், இந்த தடிமாடை எல்லாம் என்னால தூக்கி சுமக்கமுடியாது” என்று கூறி மதுவின் முறைப்பை பெற்றுக்கொண்டு உள்ளே சென்ற சரிகா. மருத்துவமனையில் பணியாற்றும் இரு வார்டு பாய்யுடன் வந்து அவர்களின் உதவியுடனே கண்விழிக்காமல் கிடந்தவனை ஹாஸ்பிட்டலுக்குள் கொண்டு சென்றனர்.

மதுவின் கையை பற்றியிருந்தவன், கரத்தினை விலக்காமல் இன்னும் இறுக்கமாய் பற்றிட, மதுவின் விரல்கள் வலியுடன் சிவக்க துவங்கியது.

ஒருவழியாய் சரிகா கஷ்டப்பட்டு அவன் கையை விலகிவிட்டு, மதுவின் கையையும் விரல்களையும் இரும்பு பிடியிலிருந்து மீட்டு “ உன் பொது நல சேவை முடிஞ்சுடுச்சுன்னா, நாம கிளம்பலாமா? லேட்டா போனா மெஸ்ல சாப்பாடு கிடைக்காது. உன் தொண்டு உள்ளத்தால என் வயித்துல துண்டு போட்டுடாத!, சாப்பாடு இல்லாம ஈரத்துணி கட்டிக்கிட்டு தூங்க என்னால முடியாது” என்று புலம்பினாள் சரிகா.

“சும்மா புலம்பாத, என்னவோ தினமும் மெஸ்ல தர காஞ்சு போன சப்பாத்தி மட்டும் தான் சாப்பிட்டு உயிர் வாழுற மாதிரி நடிக்கிற!, டெய்லி எக்ஸ்ட்ரா லார்ஜ் சாப்பிடற உனக்கு .. ஒருநாள் மெஸ் சாப்பாடு இல்லைனா ஒன்னும் ஆகாது, எப்பவும் அங்க கிடைக்கிறதையும் முழுங்கிட்டு ரூம்க்கு வந்து யாருக்கும் தெரியாம எஸ்ட்ரா ஸ்னாக்ஸ் வேற நொறுக்குவியே, இன்னைக்கும் அதே மாதிரி ஏதாவது நொறுக்கு தீனிய வைச்சு உன் வயித்தை நிறைச்சுக்கோ ” என்று நகராமல் அவனுக்கு மருத்துவ உதவி செய்துகொண்டிருந்த அறையின் வாசலில் காத்திருந்தாள் மது.

“ இன்னும் என்ன மது.. அவனே எழுந்திருச்சு வந்து உங்க உதவிக்கு நன்றினு சொன்னா தான் இங்கயிருந்து வருவியா?” என்றவள், அறையிலிருந்து டாக்டர் வெளிவருவதை கண்டு வேகமாய் அவர் முன் சென்று “ அவருக்கு ஒன்னுமில்லையே!,” என்று விசாரித்துவிட்டு அவர் பதில் தரும் முன் மதுவிடம் திரும்பி “பார், டாக்டரே சொல்லிட்டாரு, ஒன்னும் பிரச்சனை இல்லையாம் நாம கிளம்பலாம்,” என்றாள் சரிகா.

“நீ கொஞ்சம் அமைதியாயிரு” என்று தோழியை அடக்கிவிட்டு, “ அவருக்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர், மயக்கம் தெளிச்சிடுச்சா?” என்று அக்கறையாய் வினவினாள், மது.

“தலையில சின்ன அடிதான் பயப்படுற அளவுக்கு பெரிய பிரச்சனையில்ல , வலி தெரியாம இருக்க மருந்து கொடுத்திருக்கேன், அதனால அசந்து தூங்குவார், இது ஆக்சிடென்ட் கேஸ் போலீஸ் கம்பிலைன்ட் கொடுத்துட்டு வந்தா தான் ட்ரீட்மெண்ட் பார்க்க முடியும்..? ஆனா பொண்ணுங்க தனியா வந்தால ரொம்ப பார்மாலிட்டி பார்க்காம அட்மிட் பண்ணிட்டோம். உங்க சைடுல இருந்து எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கோங்க.. கொஞ்சம் பணத்தை கட்டிட்டா, அடுத்தடுத்த ட்ரீட்மெண்ட் கொடுக்க வசதியா இருக்கும்” என்று கூறி நகர்ந்தார் டாக்டர்.

“ என்னடி டாக்டர் போலீஸ் கேஸ்னு என்னென்னவோ சொல்லுறாரு.. “ என்று சரிகா மிரள.. கையிலிருந்த பணத்தை பார்த்தவள், “ இது பத்தாதே, சகா உன்கிட்ட ஏதாவது பணம் இருக்கா? “ என்றாள் மதுரிமா.

“இதுல இந்த தொல்லை வேறயா? பாரு நல்லா பாரு, அப்பாவி மக்கள் உயிரை காப்பாத்துறேன்னு பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு வரவங்களே!, பணம் இல்லாம எந்த வேலையும் செய்றது இல்ல, நீ என்னன்னா.. பத்து பைசா கூட லாபம் இல்லாம ஓடிவந்து உதவியும் செஞ்சுட்டு இப்போ கையில இருக்குற காசையும் கொடுக்குறேன்னு சொல்லுற, பேசாம ஒரு கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் போயிருக்கலாம், அங்கயும் பணத்தை பார்த்தா தான் வேலை நடக்கும், இருந்தாலும் இந்த அளவுக்கு செலவு ஆகாது” என்று புலம்பிக்கொண்டே தன் கைபையை மெதுவாய் மறைத்திட முயல.. அதை கவனித்த மது அவள் மறைக்க நினைத்த பணத்தையும் பறித்து தன் கையில் இருந்த பணத்துடன் சேர்த்து ட்ரீட்மென்ட்டிற்கான தொகையைக் கட்டி வந்தாள்.

பணம் கட்டிய ரசீதைக் காட்ட காயம் கண்டவனுக்கான மருத்துவம் துவங்கியது, “ மது கிளம்பு கிளம்பு இன்னும் இங்கயே நின்னுட்டு இருந்தா… கையில காதுல கழுத்துல இருக்கிறதையும் குடுத்துட்டு தான் இங்கயிருந்து வெளியேற வேண்டிய நிலைமை வரும்” என்று அவசரபடுத்தினாள் சரிகா.

“பொறுடி செய்றத திருந்த செய்யணும், அவர் வீட்டில் யாருக்காவது தகவல் சொல்லிட்டு கிளம்பலாம்” என்றாள் மது. “ உன் திருத்தம் எனக்கு தான் வருத்தம்! உன் கடமை உணர்ச்சிய பார்க்கும் போது என் கண்ணு வேர்குது” என்று வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு.. “என்ன தகவல் சொல்லப்போற? இப்படி இப்படி வழில பார்த்தோம் அப்படி அப்படி ஹாஸ்பிட்டல் வந்து சேர்த்தோம்னு வரலாறு வாசிக்க போறயா..? நீ பேசாம ஒன்னு செய், அவன் குணமாகி வீட்டுக்கு போறவரைக்கும் கூடவேயிருந்து தொண்டு செஞ்சுட்டுயிரு… , என்னை ஆளைவிடு சாமி, அப்படி முறைச்சா என்ன அர்த்தம்?, பின்ன என்ன? அவன் என்னவோ உன் சொந்தமாமன் மகன் மாதிரி இவ்வளவு அக்கறை காட்டுற..! இவனையே இன்னைக்கு தான் பார்த்தோம், இவன் சொந்தத்தை எங்க போய் தேடப்போறயாம், அங்க பாரு நர்ஸ் உள்ள போறாங்க, இதுதான் சரியான நேரம், இங்கயிருந்து நழுவிடலாம்” என்று யோசனை சொன்னாள் சரிகா.

“காருக்குள்ளேயே தான மயங்கிக் கிடந்தார், அப்போ அவரோட பொருளும் காருக்குள்ள தான கிடக்கும், அவர் மொபைல் கிடைச்சா அதுலயிருந்து யாரையாவது கூப்பிட்டு தகவல் சொல்லிட்டு கிளம்பிடலாம்,” என்று மது கூறிட, திருதிருவென விழித்தபடி “அதெப்படி அங்க இருக்கும்!!,” என்று அசடுவழிந்தபடி ஒரு மொபைல் எடுத்து கையில் கொடுத்தவளை குழப்பமாய் மது பார்க்க, “காருக்குள் அனாதையா கிடந்தது ஆதரவு கொடுக்கலாம்ன்னு பத்திரமா எடுத்துவைச்சேன்.. ஏய் என்ன அப்படி பார்க்குற?.. நீ பார்கிறதை பார்த்தா என்னை சந்தேகப்படுற மாதிரி தெரியுது!!, நானெல்லாம் அரிசந்திரன் அடுத்த வீடு, கர்ணனுக்கு கஷின் பாரு, இந்த நாள் இப்படி ஒருத்தரை காப்பாத்தினோம்னு! ஒரு நினைவுச் சின்னம் வேணாமா?, வரலாறு முக்கியம் அமைச்சரே?” என்றவள்.. மது இன்னும் அதிக கோபமாய் முறைப்பதை கண்டு “ஆனா ஊனா முட்டை கண்ணை முறைச்சு பயமுறுத்தாத! நீ தியாகச் செம்மல்லா இருக்குறது பத்தாதுன்னு என்னையும் ஏன்டி அப்படி இருக்கனும்னு எதிர்பார்க்குற?” என்றவள் கையிலிருந்து அலைபேசியை பிடுங்காத குறையாய் வாங்கி, அதை உயிர்பித்தவள், அது தன்னைத் திறந்து காட்ட கடவுச் சொல் கேட்க அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றவள், எமர்ஜென்சி என்று முன் திரையில் தெரிந்த எண்ணிற்கு மருத்துவமனை போனிலிருந்து அழைத்து விபரம் சொல்லிவிட்டு, கவலை அகன்றவளாக கிளம்பிச் சென்றாள் மதுரிமா.

 

Advertisement