Advertisement

வேடந்தாங்கல்
(ஒருக்கூட்டுப் பறவைகள்)
நெடும்தொடர்
சிறகு – 6

குமணா…. கை அலம்பாமே எதுவும் தொடக்கூடாது… எத்தனை விசை உனக்கு சொல்லுறது… என்று அதட்டிய ராக்கம்மா கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டான் குமணன்….

ஆத்தா… பசிச்சுது… அதேன் எடுத்துட்டேன்… வையாதீக ஆத்தா என்று சிணுங்கினான் குமணன்… தாய் உருகிப் போனாள்…. சரி சரி… நான் உனக்கு, தம்பிக்கு அப்பாருக்கு மூணு பேருக்குமே சாப்பாடு கட்டி வெச்சு இருக்கேன்… பெரிய தூக்குலே சாதம் இருக்கு சின்னதுலே குழம்பும் கூட்டும் இருக்கு எடுத்துகிட்டு களத்துக்கு போங்க… அப்பாருக்கும் பசிக்குமில்லே ராசா என்றாள் ராக்கம்மா…

முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த ஜெகன்,…. “எனக்கு ஒன்னும் வேணாம்!!!!… நான் போகல….!!!! இவனயே போக சொல்லுங்க ஆத்தா… !!!! “, என்றபடி வாயிலை நோக்கி ஓடிப்போக இருந்தவனை தாவிப் பிடித்து நிறுத்தினான் குமணன்….

“ஏண்டா சின்ன அப்பு விசனம் வந்துடுச்சாக்கும் துரைக்கு ?!!!!…. ரோசமோ?!!!…”, என்றான் குமணன்.

அதற்குள் விஷயத்தை கிறகித்துக்கொண்ட ராக்கம்மா குமணனிடம்.. “பெரியவனே தம்பி பாவமில்லே… இன்னைக்கு தம்பி அப்பாருக்கு சாப்பாடு தரட்டும். நீ கூடப் போ” என்று குழைந்து கூறி சம்மதிக்க வைத்தாள்.

ஆனாலும் குமணனுக்கு எப்படியும் ஜெகனை ஏமாற்றி அப்பாருக்கு தானே உணவு கொண்டுபோய் கொடுக்கவேண்டும் என்று ஆசை உள்ளுக்குள் தகித்தது…. எனினும் தாயிடம்… “சரி ஆத்தா நீங்க சொன்னா சரிதேன்”, என்று சொல்லி சிரித்தான்.

முதுகுளத்தூர் கிராமம்

ஜெகன் அரைமனதாக ஒப்புக்கொள்ள இருவரும் தூக்குவாளிகளை சுமந்தபடி ஏரிக்கரையில் இருக்கும் அவர்களின் வயற் காட்டை நோக்கி நடந்தனர்…..

உச்சியில் சூரியன் தகித்து கொண்டிருக்க, ஏரியில் இருந்து எழுந்த வந்த குளிர்காற்று தகிப்பை போக்கியது… முந்திரிக்காட்டில் பருப்பு எடுத்துக் கொண்டிருந்த சில தாய்மார் தங்கள் கைக்குழந்தைகளை அருகில் இருந்த மரங்களின் கிளைகளில் தூரி கட்டி போட்டு விட்டு வேலை செய்ய…. சிலர் தாலாட்டுப் பாடியது தேவ கானமாக இருந்தது.

ஆட்டுக்குட்டிகளை மேய்க்கும் சில பெரியவர்களும், சிறுவர்களும் சுமைதாங்கி கல் அருகில் அடர்ந்து வளர்ந்து இருந்த ஆலமர திண்டில் உட்காந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். சில சிறுவர்கள் தாங்கள் செய்த பட்டங்களை பறக்கவிட ஆயத்தமாக தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.

ஜெகன் மற்றும் குமணன்

குமணன் ஒரு கையில் தூக்குவாளியும் மறு கையில் கவண் கல்லும் வைத்துக் கொண்டும் நடந்துவர… ஜெகன் ஒருகையில் முயல் குட்டியும் மறு கையில் தூக்கு வாளியுமாக பட்டம் விடும் சிறுவர்களை பார்த்துக் கொண்டே நடந்து சென்றான். அவனுக்கும் பட்டம் விட ஆசை.

மண் பாதை முந்திரிக் காட்டை கடந்து ஒரு வளைவு எடுத்து,  ஏரிக்கரை மேட்டை அடைந்த போது,  சில சிறுவர்கள் சைக்கிள் டயரை கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டு வந்தனர். அதை கண்டதும் ஜெகனுக்கு வண்டி ஓட்டி விளையாடும் ஆசை வந்துவிட்டது. அந்த டயர் வண்டியையே பார்த்து கொண்டிருந்த அவனை குமணன் உசுப்பினான்.

“என்னடா சின்ன அப்பு??!! .. வண்டி ஓட்ட ஆசையாக்கும்!!, என்றான் குமணன்.

ஜெகன் குமணனை பரிதாபமாக பார்த்தான். அதில் ஏக்கமும் ஆர்வமும் விஞ்சி நின்றது…. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள குமணன் திட்டமிட்டான்.

“ஏலே… செவத்தி… இங்கன வா…லே?!!” என்று உரிமையுடன் அந்த சிறுவர்களில் ஒருவனை அழைத்தான். அருகில் வந்த செவத்தி ஒட்டு போட்ட அரைக்கால் ட்ரவுசர் அணிந்து சிவந்த தேகமும், சுருட்டை முடியுமாக இருந்தான். ஆயினும் வறுமை அவனது உடையிலும் வயிற்றின் ஒட்டிபோன தோற்றத்திலும் தெரிந்தது…

“செவத்தி எங்க சின்ன அப்பு உன்னோட ரப்பர் வண்டி ஓட்ட ஆசப்படுறான்… கொஞ்சநேரம் கொடுலே…” என்றான். செவத்திக்கோ ஜெகன் கையில் வைத்திருந்த முயல் மீதே கண்… அதை கவனித்த குமணன், “லேய்… நீ வண்டிய தம்பி ஓட்ட குடு. அவன் ஓட்டி விளையாடுற வர நீ அவனோட வெள்ளச்சி முயல் கூட விளையாடு” என்றான்.

செவத்திக்கும் ஜெகனுக்கு ஒரே சந்தோஷம்… இருவரும் ஒப்புக்கொள்ள முயல் செவத்தியிடமும், டயர் வண்டி ஜெகனிடம் கைமாறியது….

ஜெகன் டயர் வண்டி ஓட்டும் காட்சி

ஜெகன் சந்தோசமாக வண்டியை குச்சி வைத்து தள்ளிக்கொண்டு ஓட, செவத்தி முயலுடனும் தன் சகாக்களுடனும் விளையாட குமணன் சாமர்த்தியமாக மற்ற தூக்குவாளிகளுடன், ஆனந்தமாக தந்தையின் வயலை நோக்கி ஓடினான். குமணனுக்கு ஜெகனை ஒவ்வொரு முறையும் வீழ்த்தி, தந்தையிடம் நல்ல பேர் வாங்குவதில் அலாதிப்பிரியம்.

தான் ஏமாற்றப்பட்ட விஷயமே தெரியாமல் ஜெகன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தான்….

சிறகுகள் விரியும்…….

Advertisement