Advertisement

வேடந்தாங்கல்
(ஒருக்கூட்டுப் பறவைகள்)
நெடும்தொடர்
சிறகு – 5

ரூபாவின் வார்த்தைகள் காட்சிகளாக விரியத் தொடங்கியது. 1925 ஆம் ஆண்டு. சுதந்திரம் பெறாத பாரத தேசம்…. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சிறிய கிராமம்….முதுகுளத்தூர். சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியை தாங்கி நிற்க, முதுகுளத்தூர் மட்டும் கொஞ்சம் விதிவிலக்காக பார்க்கும் திசையெங்கும் பச்சை ஆடைபோர்த்தி நிற்கின்றது….

முதுகுளத்தூர் கிராமம்

வயல்வெளிகள் ஒருபுறம் பசுமையை காட்டி குளிர்ச்சியூட்ட, மறுபுறத்தில் பெரிய ஏரிகளும், ஏரியில் இருந்து மரமதகுகள் வழியே வெளியேறும் உபரி நீர் வாய்க்கால்களில் வெள்ளை பனியை குழைத்தது போல் சோ… வென்று பாயும் அழகுக்கும் அதன் சப்தத்திற்கும் ஈடு இணையே இல்லை. ஆடிமாத காற்றில் ஆர்ப்பரித்து, இந்த ஏரி வாரி இறைக்கும் நீர் திவளைகள்கலந்த காற்றுக்கு, இன்றைய குளிர்சாதன கருவி அனைத்தும் வெட்கிப் போகும்.

வரப்புகளை ஒட்டிய மேட்டில் அமைக்கப்பட்ட மண் பாதைகளின் ஓரத்தில் உயர்ந்து வளர்ந்த தடித்த மரங்களும், அதில் தொங்கும் புளியம் பழங்களும், அதை உண்டு மகிழ கூடுகட்டி வாழும் கிளிகள் பாடும் மெல்லிசைகளும் ஆனந்தம் கூட்டும் அற்புத காட்சிகள். பனை மரங்களில் ஏறி நுங்கு வெட்டும் ஆண்கள், உண்ட நுங்கின் இடையே குச்சி செருகி கொண்டு வண்டி செய்து, அதை கவை குச்சியை வைத்து தள்ளிக்கொண்டு ஓடும் சிறுவர்கள் போடும் கூக்குரல் வேறுவிதமான நாதம்….

இசக்கிசாமியின் வயல்

வளைந்து செல்லும் மண் பாதையின் நடுவே முந்திரி தோப்புகளும், தோப்பின் முடிவில் வரும் ஊரின் நேர்த்தியான அமைப்பும், கிராமங்களின் அமைப்பிற்கு சரியான எடுத்துக்காட்டாக இருந்தது.
சிறிய ரக குடிசை வீடுகள். தென்னை ஓலை கொண்டும், பனை ஓலை கொண்டும் அமைக்கப்பட்ட கூரைகள், சுட்ட செம்மண் சுவர்கள் தாங்கி நிற்க, அவற்றை சுண்ணாம்பில் வெள்ளையடித்து அழகாக பூசி விட்டு இருந்த வீடுகள். வீடுகளின் முற்றங்களை சாணம் கொண்டு மொழுகிவிட்டிருந்த அழகு, அதை மேலும் சிறப்பாக்கிய கோலங்கள்…. அடடா…. இந்த கிராமங்களை இன்று பார்க்க முடிவதில்லையே… சென்ற பகுதியில் நாம் பார்த்து வியந்து போன சலவைக்கல் மாளிகை ஒரு ரகம். அங்கே தென்றலுக்கு செயற்கைத்தனம் இருந்தது. இங்கோ எளிமையான அழகான வீடுகள், அற்புதமான இயற்கை காற்றோடு…. விதவிதமான இன்னிசை நாதங்கள் இலவசமாக….


ஆடுகளின் மே… குரலும், பசுவின் மா…. குரலும் மாறி மாறி தாலாட்டு பாட தூரியில் உறங்கி மகிழும் பச்சிளம் பிள்ளைகள்…. ரூத் விவரிக்க…. விவரிக்க.. நாமும் அந்த கிராமத்திற்குள் நுழைந்து கொண்டு இருக்கின்றோம். அதோ அந்த ஊரின் மையப்பகுதியில் வளர்ந்து செழித்த தென்னை மரங்கள் நடுவில் தெரியும் ஒரு பெரிய வீட்டை நோக்கிப் பயணப்படுகின்றோம். வீட்டின் தோற்றமும், அந்த வீட்டில் அமைந்திருக்கும் மாட்டுத்தொழுவம், களத்து மேட்டில் குவிந்து கிடக்கும் நெல்மணிகள், மறுபுறத்தில் வேலையாட்கள் உரித்துக் கொண்டிருக்கும் தேங்காய் குவியல்கள், சுற்றிலும் ஓடிக்கொண்டிருக்கும், கோழிகள், முயல்கள் அனைத்தும் வெளிப்படுத்துகின்ற விஷயம்…. இதுதான் நம் கதைக்களம் ஆரம்பிக்கப்போகும் வீடு என்பதாகும்…


ஆம்… இசக்கி சாமி இந்த ஊரின் தலைவர். பரம்பரை பரம்பரையாக இந்த ஊருக்கு படியளக்கும் குடும்பத்தின் தற்போதைய வாரிசு. ஊரில் நடக்கும் அத்தனை நன்மை தீமைக்கும் பொறுப்பானவர். இவரின் ஒற்றை சொல்லுக்கு ஊர் முழுக்க அடங்கி நிற்கும். சிறந்த இறை பற்றாளர். 5 தலைமுறை சொத்துக்கு அதிபதி. முதுகுளத்தூர் கிராமத்தின் 70 சதவீத நிலம் இவருடையது தான். வெளியூரில் இருந்து இங்கு பிழைப்புக்கு வருபவர்களுக்கும், அக்கம் பக்கத்து கிராமத்து மக்கள் அனைவருக்கும் இவரின் மீது அவ்வளவு மரியாதை….


வீட்டை நாம் நெருங்கிய பொழுது வீட்டிற்குள் இருந்து ஒரு குரல் உச்ச ஸ்தாதியில் ஒலித்தது….. ஏலே…. செகநாதா…. எங்க ராசா… இருக்கே……?????!!!!

ஒலித்த குரலில் பிசிரில்லை…. கொஞ்சமும் இளமை குறைவு இல்லை… யார் இந்த பெண் குரலுக்கு சொந்தக்காரி? ராக்கம்மா…. இசக்கி சாமியின் அன்பில், அவரின் துணையில் நிறைவாய் வாழும் குடும்பத்தலைவி. இளம்வயதிலேயே திருமணம். 12 ஆண்டுகள் குழந்தைகள் இல்லை என்று ஏக்கம். தினம் தோறும் இதற்காக இவளும், இசக்கி சாமியும் உறவுகளிடத்தில் வாங்கிய சொல்லடிகள் ஏராளம். ஆயினும் இவளது நம்பிக்கை வீணாகவில்லை. இறைவன் இரட்டை பிள்ளைகளை கொடுத்து இந்த தம்பதியை மகிழச்செய்தார்…
ஆம் இரட்டை குழந்தைகள். குமணன் மூத்தவன். வெகு சுட்டி… அப்பா செல்லம். இவனுக்கு வீரதீர செயல் செய்வதும், வேட்டையாடுவதும் பிடிக்கும். வயது 10…. இளையவன் ஜெகன் என்னும் ஜெகந்நாதன்… அம்மாவின் செல்லம். மென்மை தன்மை உடையவன். விளையாட்டு மட்டுமே பிடிக்கும்.

இசக்கிசாமியின் வீடு

குரல் வந்ததை கேட்ட அந்த சிறுவன் தலை தூக்கிப் பார்த்தான். முகத்தில் புன்னகை பூக்க அழகாய் சிரித்தவன். தான் தூக்கி வைத்திருந்த ஒரு முயல் குட்டியை சுமந்தபடியே வீட்டை நோக்கி ஓடினான்…


ஜெகன்… 10 வயது நிரம்பிய அந்த சிறுவன் தன் தாயின் குரலொலிக்கு உடனே செயல்பட்டான். வீட்ற்குள் ஓடியவன் முற்றத்தை கடந்து சமையலறைக்குள் புள்ளி மான் போல ஓடிக்கடந்தான்.


ஆத்தா… வந்துட்டேன்… ஏன் என்னை கூப்பிட்டீங்கோ… என்றான். அவனை கண்ட ராக்கம்மா மகிழ்வு மட்டும் அல்ல சிரிப்பும் வந்தது… அரைஞான் கயிற்றில் 6 இன்ச் அகலத்தில் ஒன்னரை அடி நீளத்தில் அவன் அணிந்திருந்த கோவணமும், அவன் தூக்கி சுமந்து கொண்டிருந்த முயலும் அவளுக்கு அவளை அறியாமல் சிரிப்பை தந்தது..


என்ன ராசா… இப்படி வந்து நிக்கறீக… உடுப்பெல்லாம் எங்க… என்ற ராக்கம்மாவிடம்…

ஆத்தா இந்த வெள்ளச்சி இல்லே… அங்கன இருக்கற சேத்துக்குள்ள சிக்கிக்கிட்டா… இவள நான் தூக்க இறங்குனன்.. சொக்கா, உடுப்பெல்லாம் சேறாயிருமில்லே… அத்தேன்… உருவி வெச்சுட்டேன் என்ற தன் மகனின் செயலுக்கு சிரித்து மகிழ்ந்த ராக்கம்மா…
ராசா நீ அப்பாருக்கு சோறு கொண்டுபோய் கொடுத்துடறியா? என்று கேட்டாள்….


ஆத்தா தினமும் தான் என்ன நீங்க சோறு கொண்டு போவ சொல்லுதீக… இடையில குமணன் என்கிட்ட இருந்து வாளிய பறிச்சிக்கறான்… அப்புறம் ஏன் ஆத்தா என்னையவே போவ சொல்லுதீக என்றான் அப்பாவியாக…


ராசா நீ இன்னைக்கி அவன் கூடயே போங்க… அப்பாருக்கு நீங்களே சோறு கொடுங்க… நான் அவன்கிட்ட சொல்லிடுதேன் என்றாள் ராக்கம்மா….


வேணாம் ஆத்தா… நான் வெளையாடுதேன்… அவனே கொண்டு போகட்டும் என்றான் ஜெகன்….
ராசா இல்லே… நீ சோறு கொண்டு போ..ப்பு.. அப்பாரு உன்னையதான் கொண்டு வரச்சொல்லி கருக்கல்ல சொல்லிட்டு போனாவிய என்றாள் ராக்கம்மா… மேலும் “உனக்கு கருப்பட்டி பணியாரம் பிடிக்கும் இல்லே… அப்பாரு பொழுதோட வரும்போல உனக்கு வாங்கியாருவாக” என்றாள்…

குமணனும், ஜெகனும் இரட்டைப் பிறவிகள்


பணியாரம்… அதுவும் கருப்பட்டி பணியாரம்… தொப்பி ராசு கடை பணியாரம் அவ்வளவு ருசி…. அதை சுட சுட அவர் இலையில் வைத்துக் கொடுக்கும் போதே எச்சில் ஊறத்துவங்கி விடும்… அவ்வளவு பிரபலம்…. ஜெகன் இதயம் பணியாரத்தில் திளைக்கத் துவங்கிய வேளையில் சமைலறைக்குள் ஓடி வந்தான் குமணன்…. ஒரு நிமிடம் ஜெகனுக்கு முன் பிறந்தவன்….

ஜெகனின் கனவு கலைந்தது… தலையை குனிந்து கொண்டு நின்றவனை… அலட்சியமாக பார்த்தபடி சென்ற குமணன், தாய் செய்து வைத்திருந்த, மீன் குழம்பின் வாசத்தில் சட்டியை திறந்து ஆப்பை கொண்டு இரண்டு மீன் துண்டுகளை எடுத்து ருசித்து…. ருசித்து சாப்பிடத் துவங்கினான்….


ஜெகன் முட்டிக்கொண்டுவந்த அழுகையை அடக்க முடியாமல் நிற்க…. குமணன் அவனை பார்த்து சிரிக்க…..

சிறகுகள் விரியும்…..

Advertisement