Advertisement

வேடந்தாங்கல்
(ஒருக்கூட்டுப் பறவைகள்)
நெடும்தொடர்
சிறகு – 4

சலவைக்கற்கள் போர்த்தப்பட்ட அந்த கட்டிடம் மிகுந்த கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தேக்கு மரத்தாலான அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு இருந்த அந்த வாயிலை கடந்து ரூபா வசந்தையும் மற்றவர்களையும் வீட்டின் உள்ளே அழைத்து சென்றாள்….

மிகவும் விசாலமான வரவேற்பு அறையில் நடுவில் சுற்றி சோபாக்கள் அமைக்கப்பட்டு இருக்க, நடுவே ஒரு சிறிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு அது முழுதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த நீர்தேக்கத்தை மிகவும் தடிமனான கண்ணாடி கொண்டு போர்த்தி இருக்க அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் உறைந்து போனது.

அந்த விசாலமான அறையை சுற்றிலும் அறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அறையின் வலது பக்கத்தில் 2 படிகள் ஏறி செல்லும் வகையில் மேடை போன்ற ஒரு அறை தென்பட அதில் மிகப்பெரிய உணவு அருந்தும் மேஜையும் சுற்றிலும் அலங்கார நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது. அதற்கு அடுத்தது இருப்பது சமையலறை போலும்….

இடதுபுறத்தில் வளைந்து செல்லும் மாடிப்படி முதல் தளத்தையும், இரண்டாவது தளத்தையும் இணைத்து. முதல்தளத்தை காண இயன்றாலும் முழுமையாக அதன் தோற்றத்தை கீழிருந்து பார்க்க இயலவில்லை.

அனைவரையும் அமரும்படி கூறிய ரூபா வேலைக்கார பெண் ஒருவரை அழைத்து அனைவருக்கும் குடிக்க நீர் கொண்டுவர கூறினாள்… பின் அருகில் இருந்த இன்டர்காமில் சில எண்களை தட்டிய ரூபா மறுமுனை அழைப்பை ஏற்றவுடன்……

தாத்தா என்ன செய்யறார் மித்ரா என்று கேட்டாள்….. மறுமுனையில் பதில் வந்தவுடன்

சரி அவர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். நீங்கள் தயாராகுங்கள். தாத்தாவை அவர்கள் பார்க்கும் முன் உங்கள் அனைவரையும் அவர்களிடம் அறிமுகம் செய்து விடுகின்றேன் என்றாள்….. பின் இணைப்பை துண்டித்த ரூபா, வசந்திடம்…..

உங்களின் நோக்கத்தையும், உங்களின் படைப்பை குறித்தும் அப்சல் கூறினார். எங்களின் குடும்பத்திற்கும் உங்கள் படைப்புக்கும் உள்ள தொடர்பு என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்ற ரூபாவின் கேள்வி நிதானமாக ஆனால் நிறைய கேள்வி ரேகைகளை உள்ளடக்கியதாக இருந்தது.

வசந்த் நிமிர்ந்து அமர்ந்தான். பின் தெளிவாக விளக்கத் தொடங்கினான்.

நான் மனித உழைப்பையும், அதன் வாழ்வியல் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு, வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறுவயது முதலே வாழ்ந்து மறைந்த சிறந்த மனிதர்கள் பற்றிக் கேட்டு வளர்ந்தவன். அதில் சில கதாபாத்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சிலநாட்களுக்கு முன் எங்கள் ஐவருக்கும் புதிய கோணத்தில், அதே வேளையில் இதுவரை மக்கள் சிறிதும் அறிந்திராத புதிய கதாபாத்திரங்களை கொண்டு ஒரு வெப் சீரியஸ் செய்யவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது…..

அப்போது தான் நான் உண்மையில் வாழும் மனிதர்களையும் அவர்களை, அவர்கள் வாழ்க்கையை நேரடியாக ஏன் கதையாக்கம் செய்யக் கூடாது என்று என் நண்பர்களிடம் கூறினேன்… என்னைத் தவிர மற்ற நால்வருக்கும் தோன்றிய விஷயம்…… “இது ஒரு தனிமனித போற்றலான விஷயம் என்ற படைப்பாக மாறிவிடுமோ” என்ற அச்சம் .

உண்மையில் இது ஒரு மனிதன் குறித்ததாக இருந்தாலும் கதாபாத்திரங்களையும் அந்த பாத்திரங்களின் பின்னணி கதையையும் எடுத்துக்கொண்டு, அவர்கள் இன்று வாழ்ந்தால் எப்படி இருந்து இருப்பார்கள் என்ற கற்பனை கலந்து யோசிப்போம் என்றேன்.

மேகா அந்த பாத்திரங்கள் இப்போது நிஜமாகவே வாழ்ந்து கொண்டிருந்தால் அதுவும் ஒரே குடும்பமாக வாழ்ந்தால் என்று திருத்தம் கொண்டு வந்தாள்…..

முமைனா அந்த கதாபாத்திரங்களை இப்போது அவர்கள் வாழும் சூழல், வாழ்வியல் தன்மைகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கலாம் என்றாள்……

ரூபா அவனை பார்த்து ஒரு நம்பிக்கை புன்னகை உதிர்த்துவிட்டு, உங்கள் அனைவரின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் என்றாள்…..

மேகா ரூபாவை நோக்கி…. ஆண்டி உங்கள் குடும்பத்தை குறித்து கூறுங்களேன் என்றாள்…..

நிச்சயமாக மேகா…. இது ஒரு கூடு… இந்த கூட்டில் வாழும் நாங்கள் அனைவரும் ஜெகந்நாதன் என்னும் ஒரு மனிதனால் ஒன்று கூட்டப்பட்டு இங்கே ஒன்றாக வாழ்கின்றோம்… எங்கள் அனைவருக்கும் அந்த மாமனிதனே அடிப்படை…. அவர் ஒருவரால் தான் இது சாத்தியம் ஆனது என்று நிறுத்திய ரூபாயின் எண்ணங்கள் நிழலாக பின் நோக்கி சென்றது…

அவளின் நினைவுகள் சுழன்று பின்னோக்கி செல்ல காட்சிகள் விரிந்தது… கனி அனைத்தையும் தனது கேமிராவில் படமாக பதிக்க, முமைனாவும் வசந்தும் அதை தங்கள் கையேடுகளில் குறிப்பாக எழுத துவங்கினர்.

1925 ம் ஆண்டு…. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் கிராமத்தில் ஜெகந்நாதனின் கதையை ரூபா சொல்லத் துவங்கினாள்…. காட்சிகள் சிறகுகளாக விரிந்து பறந்தன

சிறகுகள் விரியும்

Advertisement