வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்)

916
கோடையின் கோரமுகம் காட்டி சோர்ந்து போன ஆதவன் தன் செந்நிற தோற்றத்தை வங்கக்கடலில் அமிழ்த்தி மறையத் தொடங்கிய முன் இரவு வேளையில்……. பரபரப்பாய் உழைத்து களைத்த எரும்புக்கூட்டமாக மக்கள் இல்லம் திரும்பும், சென்னையின் அக்மார்க் பரபரப்பு நகரெங்கும் ஆரம்பித்திருக்கும் நேரம்….

 மெரினாவின் மணல்பரப்பை மனித தலைகள் ஆக்கிரமித்து, வருடிவிடும் வங்கக்கடலில் இதமான காற்றை அனுபவித்து கொண்டிருக்கும் வேளை…. 
 சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதையில் அசுரவேகத்தில் ஓடியும், வேகமாக நடந்தும், பறக்கும் தொடரியையும்.. புறநகர் தொடரியையும்.. அடைந்து பயணிக்க மக்கள் கூட்டம் அலைமோதும் உச்சகட்ட நேரம்….


சுரங்கப்பாதையிலும், நடைமேடைகளிலும் கையேந்தி நிற்கும் வழக்கமான இரவலர்கள்… வண்ண விளக்குகளிலும், கவர்ச்சியான கண்ணாடி பேழை அறைகளிலும் ஜொலிக்கும் வணிக வளாகங்கள், எப்போதும் போல கடமை செய்யும் காக்கிச்சட்டை காவலர்கள்…. ஒருபக்கம் சரிந்தபடி சாலையில் அழுக்கான தன் உடலில் மனித சதைகளை அடைத்தவண்ணம் பயணிக்கும் மாநகர பேருந்துகள்….
கண்ணகி சிலை தொடங்கி கலங்கரை விளக்கு வரை நீடித்த அகன்ற சாலையில், கலங்கரை விளக்கின் எதிரில்… வலதுபுறத்தில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் ” தி லைட் ஹவுஸ் கிராண்ட் பிளாசா” ஆடம்பர சொகுசு விடுதியின் குளிர்சாதன கூட்ட அறை…….


முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அதீத சிந்தனையில், ஆர்வமும், குழப்பமுமாக அமர்ந்திருக்கின்றனர். அனைவரையும் உற்றுப் பார்த்தால் ஒன்று தெளிவாக புரிகின்றது. அவர்களின் தோற்றமும், உடைகளும், அவர்களின் கரங்களில் வைத்திருக்கும் சில சாதனங்களும் இவர்கள் ஏதோ ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திற்கு கூடியிருப்பது போல தோன்றுகின்றது…..
மேடையில் 30 வயது மதிக்கத்தக்க, சராசரி உயரமும் அதற்க்கேற்ற பருமனும் உடைய ஒரு இளைஞன் மைக்கில் உரையாற்றிக் கொண்டிருக்கின்றான். அவன் அருகில் இரண்டு இளம் பெண்களும், இரண்டு வாலிபர்களும் நின்று கொண்டிருக்கின்றார்கள். கூட்டத்தினர் அனைவரின் பார்வையையும் சிந்தனையையும் அந்த இளைஞன் ஈர்த்துக் கொண்டிருக்கின்றான்……


யார் இவன்? வசந்தகுமார். வளர்ந்துவரும் எழுத்தாளன், இயக்குனர் அவதாரம் எடுக்க தன்னை தயாராக ஆக்கிக்கொண்டிருக்கும் நியாயம் தவறாத படைப்பாளி….. பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வாய்ப்புகள் தேடும் சராசரி இளைஞன்..பெற்றோரின் ஒரே வாரிசு. அப்பாவின் வேலையை மட்டுமே நம்பி வாழும் நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவன்.


வசந்தகுமார் பேசத் தொடங்கினான்….. என்னுடைய வேண்டுதலை ஏற்று இங்கே வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி….


இது எப்போதும் நடக்கும் பத்திரிக்கையாளர் கூட்டம் இல்லை… இது எனது படைப்பை உங்களிடம் காட்டி உங்களின் ஒருமித்த ஆதரவை வேண்டுவதற்கான எளிய முயற்சி. இன்றைய நாளில் ஒவ்வொரு படைப்புக்கும் எதிர்ப்புகள் கிளம்புவது சகஜமாகிவிட்டது. அப்படி ஒன்று ஏற்படாது இருக்கத்தான் இந்த முயற்சி என்று விளக்கினான் வசந்தகுமார்….


நான் ஏற்றுக்கொண்டிருக்கின்ற, நீங்களும் நானும், பிற இனத்தவரும் நம்புகின்ற உழைப்பை, உழைத்து முன்னேறிய மனிதர்களை குறித்த ஒரு கற்பனைப் படைப்பு…
தயவு செய்து இந்த முழு படைப்பையும் இறுதிவரை காணுங்கள். இது குறித்து உங்களின் கருத்துக்களையும், ஆதரவையும் அன்புடன் வேண்டுகின்றேன்….. வசந்த் பேசி முடித்தவுடன் அறையில் சில நிமிடம் நிசப்தம்…. பின் சலசலப்பு… பலரும் கிளம்பலாம் இது வீணான செயல் என்று கிளம்ப எத்தனிக்க….

நீண்ட தலைமுடியை கொண்டையாக முடிந்து சல்வாரின் சால்வையை தலைமுடியை கட்டியிருந்த, நெடிய உயரமும், உயரத்துக்கேற்ப உடலமைப்பும் கொண்ட மூத்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மட்டும் எழுந்து அனைவரையும் கையமர்த்திவிட்டு வசந்தை நோக்கித் திரும்பினார்…
” தம்பி உன்னுடைய படைப்பை நீ நல்ல தயாரிப்பாளரிடம் இல்லையா காட்டவேண்டும்? எதற்காக எங்களின் நேரத்தை வீணடிக்கின்றாய்… இதில் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று நம்புகின்றாய்…. குரல் தீர்க்கமாகவும் தெளிவாகவும் வந்து விழுந்தது…..


மதிப்பிற்குரிய சகோதரி அவர்ளே, உழைக்கும் மனிதர்களின் வாழ்வியல் விழுமியங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படைப்பு, இதன் சாராம்சம், இதன் நோக்கம் முதலில் உங்களுக்கு அல்லவா புரிய வைக்கப்படவேண்டும்…. இன்றுவரை இப்படி எந்த ஒரு படைப்பும் சமகாலத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்ததே இல்லையே…. வசந்தின் வார்த்தைகள் நிதானமாக, அதேவேளையில் அழுத்தமாக, இப்படி எதிர்ப்பும் வரும் என்று எதிர்பார்த்து அதெற்கென்றே தயாரித்து வைத்த வார்த்தைகள் போல வெளிவந்தது……


அந்த பெண் பத்திரிக்கையாளர் முகத்திலும் அங்கே கூடியிருந்த அனைவர் முகத்திலும் இப்போது யோசனைகள் தோன்ற தொடங்கியது… வசந்த் தொடர்ந்தான்.
நான் என்ன செய்துள்ளேன் என்றே நீங்கள் பார்க்கவில்லையே? கேட்கவில்லையே? புரிந்துகொள்ளவில்லையே? நிச்சயமாக நீங்கள் பார்க்க, கேட்க, உணரப்போகும் எனது படைப்பு உங்களது நேரத்தை வீணடிக்காது… நம்புங்கள்… கொஞ்சம் நேரம் எனக்காக பொறுத்தருளுங்கள்…. என்றான் வசந்த்…


இப்போது அந்த பத்திரிக்கையாளர்கள், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்…


பிறகு அந்த பெண் பத்திரிக்கையாளர்… சரி நேரத்தை வீணாக்க வேண்டாம் உங்கள் படைப்பை காட்டுங்கள் பார்க்கலாம். ஆனால் எங்களுக்கு இதில் உடன்பாடில்லை என்றால் நாங்கள் உடனே கிளம்பி விடுவோம் என்றார்…. அனைவரும் அவரது கருத்தை ஆதரித்தனர்…
வசந்திற்கும் அவன் நண்பர்களுக்கும் சந்தோஷமும், உற்சாகமும் முகத்தில் தோன்றி உற்சாகம் கொடுத்தது….

யப்பாடா… எங்கே இந்த பெண் எல்லா கஷ்டத்தையும் பீச் மணலோடு கரைத்துவிடுவாரோ என்று நினைத்தேன்… சூப்பர்… என்று அருகில் நின்ற எழில் அரசனிடம் கிசுகிசுத்துக் கூறினான் கனி…. இருவரும் வசந்தின் நண்பர்கள்…


மிகுந்த நன்றி… உங்களின் அன்பை மதிக்கிறேன்.. இதோ எனது படைப்பு என்று சொல்லி விட்டு வசந்த் முமைனாவை பார்க்க அவள் எல். ஈ. டி திரையை ஒளிரவிட்டாள்….


இறைவனுக்கு நன்றி கூறி தொடங்கிய காணொளியில்
“வேடந்தாங்கல்”….. ஒருக்கூட்டுப் பறவைகள் என்று தலைப்பு ஒளிரத்தொடங்கியது….


சிறகுகள் விரியும்……