“என்ன நிலா தானா சிரிக்கிற”வரலக்ஷ்மியின் குரலில் சுயம் திரும்பியவள் “எதுவும் இல்லை த்தை”என்று வேலையை கவனித்தாள்.

    

    வரலக்ஷ்மிக்கு அதில் நிறைவு தான். திருமணம் ஆகி வந்ததில் இருந்த வெண்ணிலாவின் முகம் தற்போது இன்னும் தெளிவாய் வால்பாறையில் இருந்தது போல இருக்க, தன்னை அதிரடித் திருமணத்தின் தாக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டார் வரலக்ஷ்மி.

    

    இயல்பு திரும்பி விட்டால் இலகுநிலை திரும்புவதற்கு என்ன வந்தது.

    

    *******

    

    மங்கைக்கு காலையிலேயே அத்தனை எரிச்சல். சமையலறையில் கடுகடுத்தபடி அப்பளம் பொரித்துக் கொண்டிருந்தார்.

    

    “ம்மா இன்னைக்கும் அப்பளமா?.அப்டினா எனக்கு டிஃபன் பாக்ஸே வேண்டாம்”என்றான் அவரது மகன் பவேஷ்.

    

    “இதுதான் இருக்கு ஒன்பது மணிக்குள்ள காய் கூட்டு எல்லாம் செய்ய முடியாது. இன்னைக்கு மட்டும் நீ டிஃபன் கொண்டு போகலை இனி எப்பவும் செய்ய மாட்டேன்”என்று எச்சரிக்கை விடுக்க 

    

    அவனோ “ரொம்ப நல்லதா போச்சு. இதைக் கொண்டு போறதுக்கு நான் கேன்டீன்லயே சாப்பிடுவேன்”என்று முறைத்து விட்டுப் போனான்.

    

    

    பவேஷுக்கு அன்னையின் சமையல் சுத்தமாக பிடிக்கவில்லை. அங்கே இருந்த போது அவனின் சித்தி தான் முழு சமையலும். மங்கையும் என்ன செய்வார் அவர் சமையலறைக்கு செல்வதே இன்னது சமைக்க வேண்டும் என்று சொல்வதற்கு மட்டும் தான். பல வருடங்களாக அப்படியே ஓட்டி விட்டவருக்கு சமையலே மறந்திருந்தது. இப்போது தனியே வரவும் சமைக்க ஆரம்பித்தாலும் அந்த சுவை கை வரவில்லை. இளையவனுக்கு புளிப்பும் உப்பு குறைவாக இருக்கும் இந்த பண்டங்கள் தொண்டைக்குள் இறங்க மறுக்கிறது. நூடுல்ஸ் என்றால் தப்பித்து கொள்வான். மற்றபடி எந்த குழம்பு வைத்தாலும் அதில் வெறும் புளிப்பு சுவையை மட்டுமே உணர்ந்தால் அவனும் வேறு என்ன தான் செய்வான். தர்மதுரைக்கு வேறு வழியில்லை. நாக்கிற்கு ருசியாக வேண்டும் என்று கேட்டால் உடனே அவரது வருமானம் விவாதப் பொருள் ஆகி விடும். ஏன் வம்பு என்று போடுவதை உண்டு விட்டு செல்வார் தேவையெனில் இருக்கவே இருக்கிறது பல கையேந்தி பவன்கள்.

    

    மகனின் கடுகடுப்பு வார்த்தைகளில் துவண்டு தான் போனார் மங்கை. ஆனாலும் அந்த அதிகார தோற்றம் அவரைக் கீழிறங்கி வரவே விடவில்லை. அடுப்பை அணைத்து விட்டு வந்து நடுக் கூடத்தில் அமர்ந்து கொண்டார்.

    

    

    *********

    

    “வெண்ணிலா”சத்தமாய் அழைத்தான் மேகன்.

    

    

   “எல்லாரும் எவ்வளவு அழகா நிலான்னு கூப்பிடறாங்க இவருக்கு மட்டும் வெண்ணிலா அப்படியே முழுசா தான் சொல்லுவார். வேணும்னே பண்றாரு”முனகிக் கொண்டே அறைக்குள் செல்ல, மேகன் எதையோத் தேடிக் கொண்டிருந்தான்.

    

    

    “ஏன் கூப்பிட்டிங்க?”சலிப்பாக வந்து நின்றாள்.

    

    “காலையிலேயே என்ன இவ்வளவு சலிப்பு?”என்று சிரிக்க 

    

    “ஏன் உங்களுக்கு நிலான்னு கூப்பிட வராதா எப்போ பார்த்தாலும் வெண்ணிலானு முழுசா தான் சொல்லணுமா?”சட்டென்று சண்டைக்குச் செல்ல 

    

    “எனக்கு அது தான் பிடிச்சு இருக்கு”என்றிட, இன்னும் கோபமாய் முறைத்தாள் நிலா.

    

    “வெண்ணிலானு பேர் வச்சுட்டு முறைச்சா, சந்திர முகி ஆகிடுவியா?”என்று கிண்டல் வேறு செய்ய 

    

    “உராங்குட்டான்”என்று முனகியபடி “இன்னும் எதுக்கு கூப்பிட்டேன் னு சொல்லவே இல்லை நீங்க”என்றாள் முறைப்பை கைவிடாமல்.

    

    

    “என் பாஸ்போர்ட் தேடினேன். ஆமாம் ஹேய் உன் கிட்ட பாஸ்போர்ட் இருக்கா?”

    

    “எதுக்கு நாடு எதுவும் கடத்தப் போறீங்களா என்னை”

    

    “உன்னை கடத்திட்டாலும்.”என்றவன் “ஆன்சைட் போற சிச்சுவேஷன் வந்தா உன்னை கூட்டி போற மாதிரி இருந்தா வேணுமே அதான் கேட்டேன்”

    

    

    “எதுக்கு அங்கே போயும் சண்டை போடவா”என்று இடக்காய் அவள் கேட்க 

    

    “நானா ஸ்டார்ட் பண்றேன். நீ தான் வாய் கொள்ளாம பேசற அது சண்டையில் முடியுது”என்றபடி பாஸ்போர்ட்டை எடுத்தான்.

    

    

    “அடேங்கப்பா நீங்க எதுவுமே தெரியாத பச்சை மண்ணு தான். வானரம் னு சொல்லி ஆரம்பிச்சு வைக்கறதே நீங்க தான். உராங்குட்டான்”என்று முனக 

    

    

   “வாய் கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு உனக்கு. நீ வானரமே தான் இல்லைன்னுவியா நீ”என்று மல்லுக்கு நிற்க 

    

    “இதோ பாருங்க”என்று எச்சரித்தவள் “ப்ப்ச் எதுக்கு கூப்பிட்டீங்கன்னு சொல்லுங்க உங்க கூட சண்டை போடற மூட்ல நான் இல்லை”என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.

    

    “அப்போ நான் அப்படி இருக்கேனா?”அவளிடம் பொரியத் துவங்க இருவருக்கும் முட்டிக் கொண்டது.

    

    “உங்க கிட்ட மனுஷி பேசுவாளா”என்று திட்டியபடி கதவை சாத்தி விட்டு போய் விட, எதற்கு அழைத்தோம் என்பதே அவனுக்கு மறந்திருந்தது‌.

    

    “ரொம்ப ஓவரா பண்றா”என்று கடுப்பாய் மொழிந்தவன் பாஸ்போர்ட்டை தனது பேகில் வைத்தான்.

    

    “வர்மா”என்று தந்தை அழைக்கும் சத்தம் கேட்கவே அறையை விட்டு வெளியே சென்றான்.

    

  

    

    இருவருக்குமான ஊடல் தொடர்ந்தாலும் முன் போல இருவருமே அதை மனதில் ஏற்றவில்லை.‌ அன்றைய சண்டை அன்றே மறந்து போய் அடுத்த முறை தானே பேசி விடுவது அவர்களுக்கே விநோதமாக தான் இருந்தது.

    

    இருவரின் சண்டை எப்போதும் அறைக்குள் மட்டும் தான் இருந்தது. அறைக்கு வெளியே இருவரும் அமைதியின் தத்துப் பிள்ளைகள். இவர்கள் தான் திருமணத்திற்கு முன்பு தொட்ட தொன்னூறுக்கும் அடித்துக் கொண்டு மல்லுக்கு நின்றவர்கள் என்றால் கடந்த காலம் கூட நம்பாது அத்தனை பதவிசாய் நடந்து கொண்டார்கள்.

    

   ***********

    “சொல்லுங்க ப்பா”என்றவன் வந்தமரவுமே அவனுக்கும் ஒரு தட்டை வைத்தாள் வெண்ணிலா.

    

    

    “இப்பவேவா வேண்டாம் லேட் ஆகட்டும் “என்றவன் “நீங்க சொல்லுங்க ப்பா”என்றான்.

    

    “அத்தைக்கு வாஷிங் மெஷின் வேணுமாம்.இன்னைக்கு ஈவ்னிங் வரும் போது ஆர்டர் பண்றியா”எனும் போதே மங்கை உள்ளே நுழைந்தார்.

    

    “என்ன வர்மா கிளம்பியாச்சா”என்றவர் “தம்பி சொல்லிட்டியா”என்றார்.

    

    “இப்ப தான் பேசிட்டு இருந்தேன்க்கா நீங்க வந்துட்டீங்க”என்ற வேலவனிடம் “அதுவும் நல்லதுதான் வர்மா நானும் உன் கூடவே கிளம்பி வர்றேன் அப்ப தான் எனக்கு புடிச்ச மாதிரி எடுக்க முடியும்”என்றார்.

    

    

    “சரிங்க த்தை நான் போய் ரெடி ஆகறேன். சேர்ந்தே போகலாம்”என்றவன் எழுந்து போய் விட மங்கை சாப்பிட துவங்கி விட்டார் தம்பியுடன் சேர்ந்து ‌

    

    வரலக்ஷ்மியோ நிலாவை அழைத்து வர்மனுக்கு அறைக்கு உணவை எடுத்துக் கொண்டு செல்லும்படி கூற அவளும் மறுக்காமல் எடுத்துச் சென்றாள்.

    

    

    அறையினுள் தலையை தாங்கிப் பிடித்தபடி கவிழ்ந்து அமர்ந்திருந்தான் மேகவர்மன்.

    

    “சாப்பாடு இங்கேயே எடுத்துட்டு வந்துட்டேன் கை வாஷ் பண்ணுங்க”என்றாள்.

    

    “ப்ப்ச் எனக்கு எதுவும் வேணாம் முகி”என்றவனை விநோதமாக பார்த்தவள் “என்னாச்சு பசிக்கலையா”அவன் முகத்தைக் கண்டு தன்மையாக விசாரிக்க 

    

    “அதெல்லாம் இல்லை”என்றவன் “இந்த அத்தை வந்து டென்ஷன் பண்றாங்க”என்றான் சலிப்பாக.

    

    மேலும் அவனேத் தொடர்ந்து “தனியா போனதும் எல்லா திங்க்ஸும் வாங்கி தந்தார் அப்பா ஒரு வாரம் முன்னாடி வாஷிங் மெஷின் ஓடலைனு சர்வீஸ் பண்ண ஆள் அனுப்பினா அது சரி வராது புதுசா எடுக்கணும்னு நிக்கிறாங்க. அப்பாவும் தலையாட்டறார்”என்றான்.

    

    

    “அந்த மெஷின் இப்போ வாங்கி தந்தது தானே அதுக்குள்ள ரிப்பேர் ஆகிடுச்சா”என்றவளிடம் “அது நியூ டெக்னாலஜி ல இல்லையாம் அதான் ரிப்பேர் ஆகிடுச்சாம். ஃபார்ட்டி எய்ட் தவுசண்ட்ல ஒரு மெஷின் வாங்கி தரணுமாம்”என்றான்.

    

    

    “என்னது அவ்வளவா”என்றவள் அவனருகில் அமர்ந்து தட்டை நீட்ட பேச்சுவாக்கிலேயே வாங்கி உண்ணத் துவங்கி விட்டான்.

    

    

    “நீயே பாரு என் முக்கால்வாசி சம்பளத்தை ஒரு மெஷின் ல போட சொல்றாங்க அப்பாவும் தலையாட்டறார். இன்னும் எத்தனை நாளைக்கு தான் இவங்க பேச்சுக்கு ஆடறதோ தெரியவில்லை”என்றவன் “காசு என்ன மரத்திலா காய்க்குது. எல்லா ஹோம் அப்ளையன்ஸஸும் வாங்கி தந்து வேதாக்கா டெலிவரி செலவு பேபிக்கு கொலுசு ஹிப் செயின் எல்லாம் வாங்கி தந்து போன மாசம் அவ்வளவு செலவு. இப்ப மறுபடியும். ஐடில தான் வேலை பார்க்கிறேன் நான். பணம் அச்சடிக்கிற ஆபிஸ் ல வேலை பார்த்து அங்கே சிந்தறது சிதறுறது எல்லாம் எடுத்து வைக்கிற மாதிரி இருக்கு இவங்க நினைப்பு”என்று அலுப்பாய் கூற வெண்ணிலா சிரித்து விட்டாள்.

    

    “என் பொலம்பல் உனக்கு சிரிப்பா இருக்கா”என்றவனிடம் “இதை நான் பார்த்துக்கிறேன் நீங்க ஆபிஸ் கிளம்புங்க”என்றாள்.

    

    அவளை புருவம் முடிச்சிடப் பார்த்தவன் “உன் வால்பாறை வாலுத்தனத்தை காட்டிட மாட்டியே”என்றான் இதழ்களில் நெளிந்த சிரிப்பை மறைத்துக் கொண்டு.

    

    

    “உங்களுக்கு போய் ஹெல்ப் பண்றேன் னு சொன்னேன் பாருங்க”என்று சடைத்தவளை இழுத்துப் பிடித்தவன் “சும்மா நிலா. சரி சொல்லு என்ன செய்வ”என்று கேட்க 

    

    “அது ஈவ்னிங் வந்து பாருங்க இப்போ இந்த உம்மாணமூஞ்சியை சிரிச்சா மாதிரி வச்சுட்டு கிளம்புங்க”என்று நக்கலடிக்க 

    

    “கொழுப்பு உனக்கு வேற எதுவும் இல்லை”என்றவன் “சரி ஏதோ செய் என் பட்ஜெட் ல போர்வை விழாம இருந்தா சரி. ஓகே பாய்”என்று அவளின் கன்னத்தில் தட்டி விட்டுச் சென்றான்.

    

   அறையினுள் இருந்து வெளியே வந்தவன் மங்கையிடம் வெண்ணிலா வரலக்ஷ்மி இருவரையும் அழைத்து கொண்டு ஷோரூமிற்கு வாருங்கள் என்று கூறி விட்டு அலுவலகம் கிளம்பி விட்டான். 

    

    மங்கைக்கு பொடுபொடுவென வந்தது. நிலா தான் ஏதோ சொல்லி இருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டவர் அவள் மீது வீணான வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

    

    வெண்ணிலாவிற்கு கோபமோ கோபம். ஆனால் சட்டென அதை வெளிக்காட்ட முடியாதே. வேலனின் மனது புண்பட்டுப் போகும். அவரும் வருந்தாமல் வர்மனின் சேமிப்பும் கரையாமல் மங்கையை தன் வழிக்கு கொண்டு வருவது எப்படி என்று சிந்தித்தவளுக்கு தன் தாயின் நினைவு வந்தது. 

    

    “நம்ம அகி இருக்கும் போது நமக்கு என்ன கவலை. இதெல்லாம் லெஃப்ட் ஹேன்ட் ல அசால்டா சமாளிப்பாங்க”என்று சொல்லி சிரித்தவள் அகிலாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

    

    ….. தொடரும்