வெண்ணிலாவும் மங்கையும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்க மேகனுக்கு மறுபடியும் சண்டையா என்று தான் தோன்றியது.

    

    

    “வெண்ணிலா ஏன் சாப்பிடாம நிக்கற”இயல்பாய் கேட்டவன் இருவரின் முறைப்பையோ சூழலையோ கண்டு கொள்ளாமல் தட்டை எடுத்து வைத்தான்.

    

    

    “வர்மா தோசை ஊத்தவா”என்று வரலக்ஷ்மி வர 

    

    “இட்லி தானே அவனுக்கு பிடிக்கும்”என்று வேகமாய் ஹாட்பாக்ஸை திறந்தார் மங்கை.

    

    “ப்ப்ச் அவர் தோசை சாப்பிட்டுப்பார்.”என்று வெண்ணிலா முறைக்க 

    

    என்னை வச்சு தான் சண்டையா சுத்தம் என்று முனகியவன் “ம்மா ஊத்தப்பம் கொண்டு வாங்க. ரெண்டு போதும்”என்று சொல்லி விட்டான் இரண்டு பேருக்கும் பொதுவாக.

    

    “ஏன் வர்மா நைட்ல இட்லி தானே சாப்பிடுவ இதென்ன புதுசா. வரா நீ போய் இட்லி கொண்டு வா”என்று அதிகாரம் செய்ய வெண்ணிலா பல்லைக் கடித்தாள்.

    

    மேகன் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க இன்னுமே கோபம் வெண்ணிலாவிற்கு. 

    

    அதற்குள் வேலவன் வந்துவிடவே மேகனின் இறுக்கமான முகத்தைக் கண்டு மனைவியிடம் பார்வையால் வினவினார் என்னவென்று.

    

    வரலக்ஷ்மியோ மங்கையை கண்காட்ட வேலவன் “வர்மா சாப்பிட வேண்டியது தானே. அம்மாடி நிலா எடுத்து வைம்மா.”என்றதும் ஹாட் பாக்ஸை திறந்தவளைத் தடுத்து “வர்மனுக்கு தோசைன்னா இஷ்டம் மா நான் இட்லி சாப்பிடுறேன் அவனுக்கு தோசை போடு”என்றார் அவர்.

    

    “வேலா”என்று ஏதோ சொல்ல வந்த மங்கையை “அக்கா நீயும் உட்காரு வரு அக்காவை சாப்பிட வை ஏன் நிக்கிற”என்று அடுத்தடுத்து சொல்லவே மங்கையால் எதுவும் சொல்ல இயலாது போனது.

    

    “வெண்ணிலா நான் அங்கேயே வந்து சாப்பிடறேன் நீ அலைய வேண்டாம்”என்று மேகன் தட்டோடு சமையலறைக்குள் சென்று விட்டான்.

    

    அதற்குள் தோசைக்கல்லில் மெலிதாக தோசையை வார்த்திருந்தவள் அவனைப் பார்த்தபடி “ஊத்தப்பம் போடவா”என்று கிண்டலடிக்க 

    

    “வானரம் அப்புறம் பார்த்துக்கோ”என்று மிரட்டியவனை தோசைக் கரண்டியைக் காட்டி “நீங்க தானே கேட்டீங்க இட்லி வைக்க சொல்லவும் சொல்ல வேண்டியது தானே. அப்போ மட்டும் வாயை மூடிட்டு உட்கார்ந்து இருந்தீங்க”என்று கடுகடுத்தாள்.

    

    “ப்ப்ச் கத்தாத வெண்ணிலா.”என்றவன் “எல்லாம் தெரிஞ்சுட்டே வம்பு பண்ணாத ஓகே”என்றான்.

    

    “ஆமாம் ஆமாம் தெரிஞ்ஞுக்கிறாங்க”என்று சிடுசிடுத்தவள் “சண்டைக்காரி எனக்கே நீங்க நைட் இட்லி ஊத்தப்பம் சாப்பிட்டா தண்ணி தாகம் தீராம அவஸ்தை படுவீங்கனு ஞாபகம் இருக்கு உங்க பாசமான அத்தைக்கு ஞாபகம் இல்லையா”என்றாள் கிண்டலாக ‌.

    

    

    “ப்ப்ச் விடேன்.”என்றவன் மனதில் இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்காளே இந்த வாண்டு. என்று ஆச்சரியமாக நினைத்துக் கொண்டான்.

    

    “உங்க ஃபேவரைட் நெய் பொடி தோசை”என்று தட்டில் போட இன்னும் ஆச்சரியம் மேகனுக்கு.

    

    “இதெல்லாம் உனக்கு எப்படி ஞாபகம் இருக்கு”என்று வியந்தவனை முறைத்து விட்டு “ஏன் இருக்காது உங்க ஆன்ட்டி தான் இருக்காங்களே தோசை ஊத்தும் போதெல்லாம் ப்ப்ச் வர்மனுக்கு நெய் பொடி தோசை ரொம்ப பிடிக்கும் னு உச்சு கொட்டிட்டே தான் எங்க தட்டில் வைப்பாங்க”என்றாள் முறைப்புடன்.

    

    

    “பொறாமை”என்று சிரித்தவன் “என்ன இருந்தாலும் ஆன்ட்டி ஊத்தற மாதிரி வராது அப்படியே அந்த கார்னர் எல்லாம் நெய்ல மினுங்கும்”என்று சிலாகித்தபடி உண்ண வெண்ணிலாவிற்குமே தன் அம்மாவின் நினைவு.

    

    அவள் அப்படியே நிற்பதை கண்டவன்”ஆன்ட்டியை மிஸ் பண்றியோ”என்றான் கனிவாக 

    

    “கண்டிப்பா.”என்றவள் சட்டென்று “ஓகே இன்னொரு தோசை”என்று அடுத்ததை வைத்தாள்.

    

    “போதும் வெண்ணிலா இதுவே அஞ்சு ஆகிடுச்சு இவ்வளவு எல்லாம் சாப்பிடவே மாட்டேன்”என்று கூற இருவரும் இலகுவாய் பேசிக் கொண்டு நின்றனர்.

    

    வரலக்ஷ்மி அதுவரை சமையல் அறை பக்கம் கூட வரவில்லை. எட்டிப் பார்க்கிறேன் பேர்வழியாக பார்வையை அங்கே பதித்த மங்கையையும் ஏதேதோ பேசி வேலவன் திசை திருப்பியிருந்தார். 

    

    நாட்கள் கடந்திருக்க வேதாவிற்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் அனுமதித்து அவளுக்கு ஆண் பிள்ளையும் பிறந்து விட்டான். குடும்பத்தினருக்கு அத்தனை மகிழ்ச்சி. விஷ்ணுவின் அம்மா பேரன் பெற்றெடுத்த மருமகளைக் கொண்டாடித் தீர்த்து விட்டார். வேதாவே சலிப்பாக “ஹப்பா அத்தையோட முடியலைங்க இந்த சந்தோஷத்தில் 45 நாள் ல வீட்டுக்கு கூப்பிட போறாங்க நான் எல்லாம் வர மாட்டேன். அட்லீஸ்ட் அஞ்சு மாசமாவது நான் இங்கே தான் இருப்பேன்”என்றிருந்தாள் கண்டிப்புடன்.

    

    “அஞ்சு மாசமா வேது என்னை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு”விஷ்ணு பரிதாபமாக கேட்டு வைக்க பக்கென்று சிரித்தவள் “நீங்க இங்க வந்து பார்த்துட்டு போங்க”என்றாள்.

    

    “பார்க்கலாம் தான்”என்று இழுத்த விஷ்ணு மனைவியின் முகத்தில் தெரிந்த சோர்வில் கனிந்தவனாய் “ரெஸ்ட் எடு வேது”என்று மகனின் பக்கம் சென்று அமர்ந்து கொண்டான்.

    

    குழந்தையைக் காண நரசிம்மன் அகிலா சஞ்சய் மூவரும் வந்து சென்றனர்.

    

    *******

    

    மங்கையை சொன்னது போலவே வேலவன் தனியாக குடித்தனம் வைத்திருந்தார். இடையில் தர்மதுரை வீட்டினர் பெயரளவில் கூட சமாதானம் செய்ய வரவில்லை என்பது தான் வேலவனையே உறுத்தியது. மங்கைக்கு அதில் அத்தனை ஆற்றாமை கோபம். 

    

    நன்றி கெட்டவர்கள் என்று நாள் தவறாமல் தர்மதுரைக்கு தான் பேச்சு விழுந்தது. 

    

    அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. 

    

    நீ எதுவோ பேசிக் கொள் என்பது போல தான் இருந்தார். பண விஷயத்தில் நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்று தான் அத்தனையும் சகித்துக் கொண்டார்.

    

    வரலக்ஷ்மிக்கு வேதாவை கவனிப்பதே முழு வேலை ஆகிப் போக, மற்ற இருவரையும் கவனிப்பது வெண்ணிலாவின் வசம் வந்தது. 

    

    வேதாவிற்கு பத்திய சமையலும் மற்றவர்களுக்கு தனி சமையலும் என்று வரலக்ஷ்மி செய்தாலும் முழு உதவியும் வெண்ணிலா செய்தாள். 

    

    “நிலா நீயும் இல்லைனா ரொம்ப அவஸ்தை ஆகியிருக்கும் டா.”என்று மருமகளை பாராட்டியபடி பூண்டு குழம்பிற்கு தாளித்து கொண்டிருந்தார்.

    

    “காய் கட் பண்றது எல்லாம் ஒரு உதவியா அத்தை.”என்று சிரித்தவள் “அத்தை மாமா கிட்ட கேட்டீங்களா?”என்றாள் ரகசியமாக.

    

    

    “பாரேன் சுத்தமா மறந்து போயிட்டேன். சரி வர்மன் என்ன சொன்னான்?”என்று அவர் கேட்க 

    

    “அவர் உன் இஷ்டம் னு சொல்லிட்டாரு”என்றவள் முதல் நாள் இரவு நடந்ததை நினைத்துக் கொண்டாள்.

    

    “ஏன் சஞ்சய் கிட்ட பணம் கேட்ட நீ “என்று அவள் அறைக்குள் வந்ததும் வராததுமாய் கேட்க 

    

    “ஏன் கேட்க கூடாது”என்றாள் பதிலுக்கு கேள்வியாக 

    

    “ப்ம்ச் வெண்ணிலா நான் பீஸ் கட்ட மாட்டேனா அவனை ஏன் தொல்லை செய்யற”என்று கடுகடுக்க

    

    “இது தொல்லையா எங்கண்ணன் என்னைப் படிக்க வைக்கிறான் லாஸ்ட் இயர் பீஸ் அவன் தான் கட்டினான்”என்று இலகுவாக கூற 

    

    “அது அப்போ வெண்ணிலா இப்போ”

    

    “ஏன் இப்போ என்னாச்சு”

    

    “இப்போ உனக்கு மேரேஜ் ஆகிடுச்சு. எதுவா இருந்தாலும் நீ என்னைக் கேட்கணும்”என்றான் அழுத்தமாக 

    

    

    “என் படிப்புக்கு நான் என் அண்ணனைக் கேட்கறதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. மேரேஜ் ஆகிட்டா எல்லாம் மாறிடுமா. அதெல்லாம் இல்லை நான் எப்போதும் போல தான் இருப்பேன் இருக்கேன். எனக்கு சஞ்சு பீஸ் கட்டுவான்”என்றாள் பிடிவாதமாக 

   

    

    “லூசு மாதிரி பேசாத வெண்ணிலா”என்றதும் அவளுக்கு கோபம் வந்துவிட “யார் நான் லூசா…இப்ப என்ன லூசுத்தனமா நான் பண்ணேன். என் படிப்புக்கு அவங்க பீஸ் கட்டுவாங்க அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு”என்று மல்லுக்கு நின்றாள் ‌

    

    

    “ஏன் எனக்கு அந்த உரிமை இல்லையா சொல்லப் போனால் எனக்கு தான் ரைட்ஸ் ஜாஸ்தி நான் உன் ஹஸ்பண்ட்”

    

    நக்கலாய் சிரித்து விட்டாள் வெண்ணிலா.

    

    அவள் சிரித்ததில் கோபம் கொண்டவன் “இப்ப எதுக்கு சிரிக்கிற”என்று பல்லைக் கடிக்க 

    

    “ப்ப்ச் சாரி”என்றதில் இலகுவானவன் “இப்போ  வெண்ணிலாவுக்கு சாரி எல்லாம் கேட்க தெரியுதே”என்றான்.

    

    

    “ஏன் நான் தப்பு செஞ்சா கேட்பேனே”என்றாள் துடுக்காக 

    

    “பிஃபோர் மேரேஜ் நான் வால்பாறையில் இருந்தப்ப ஒரு தடவை கூட உன் வாயில் இருந்து சாரி வந்ததே இல்லை அதுவும் என் கிட்ட சுத்தம்”என்றிட 

    

    “அப்போ நான் மிஸ்டேக் பண்ணலைனு அர்த்தம் அதுவும் உங்க விஷயத்தில் நான் எந்த தப்பும் செய்யலைனு அர்த்தம்”என்றாள்.

    

    

    “இது ஓவர். பொய் பேசாத வெண்ணிலா. சாரி கேட்காதது உன் ஈகோ. அதுக்காக நீ தப்பே பண்ணலைனு சொல்லாதே”என்று சொல்லி விட வெண்ணிலா சண்டை மோடுக்கு மாறினாள்.

    

    

    “நான் என்ன தப்பு செஞ்சேன். நீங்க தான் எப்போ பார்த்தாலும் வேதாக்கா கிட்ட பேசினா என் கிட்ட சண்டைக்கு வருவீங்க”சண்டைக்கோழியாய் சிலிர்த்து நிற்க

    

    

    “ஏன்னா அவ என் அக்கா”

    

    “அது போல தான் சஞ்சயும் என் அண்ணன் நீங்க எப்படி அவனை கூட்டிட்டு போகலாம்”பழைய பிரச்சினைகளை வரிசைப்படுத்த இருவருக்கும் சண்டை தொடர்ந்தது.

    

    “ஷ்ஷப்பா போதும் வெண்ணிலா எதையோ பேசி எங்கையோ கொண்டு வந்து நிறுத்தற”என்று சலித்து சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றவனிடம் “நானா ஸ்டார்ட் பண்ணேன்”என்று சண்டைக்கான முற்றுப்புள்ளியின் அருகில் ஒரு கமாவைப் போட்டாள்.

    

   “நீ சரியான வெந்நீர். அதான் பேர்லயே வச்சிருக்கியே வெண்ணி அதான் எப்போ பார்த்தாலும் கொதிநிலையிலேயே இருக்க”என்றவன் படுத்துக் கொள்ள 

    

    

    “இதோப் பாருங்க மறுபடியும் ஏதாவது பழசை ஆரம்பிச்சீங்க அவ்வளவு தான்”என்று அவனை தன் பக்கம் இழுக்க முயன்று அவன் மீதே விழுந்து வைக்க மேகனின் நெஞ்சில் வெண்ணிலாவின் வதனம்.

    

    சட்டென்று உணர்ந்த இதத்தில் மேகனின் முகத்தில் சிரிப்பு படர இதழ் வளைத்து புன்னகை சிந்தியவன் “சண்டையா போடாதடி. அப்புறம் போர் அடிக்கும்”என்றான்.

    

    

    “டி போட்டீங்க அவ்வளவு தான் நான் ரெஸ்பெக்டா தானே கூப்பிடுறேன்”என்று அதற்கும் சண்டை போட்டவளை மேலும் சீண்டி விட்டான்.

    

    

    “அப்படி தான் டி கூப்பிடுவேன் நான் உன் ஹஸ்பண்ட் டி”என்று வேண்டும் என்றே வம்பு செய்ய “நீ நீ சரியான ம்ஹூம் திருந்தாத கேஸ்”என்று தள்ளிப் படுத்துக் கொண்டாள்.

    

    

    “என்ன சண்டை போட்டாலும் உனக்குப் பீஸ் நான் தான் கட்டுவேன்”என்றவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

    

    

    “இதுக்குன்னே செலவை இழுத்து வைக்கிறேன். நல்லா செலவு பண்ணுங்க யார் வேண்டான்னா”என்று அவளும் சொல்ல மேகனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு. 

    

    

    ….. தொடரும்.