மேகவர்மன் குடும்பம் வால்பாறைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிவு பெற்றிருந்தது. 

    

    விசாலம் வீட்டில் இருந்தபடியே அவர்கள் கொடுத்த பூர்வீக நிலத்தில் மேகன் வீடு கட்டும் வேலையையும் துவங்கி இருக்க நரசிம்மனும் வேலவனுமே மேற்பார்வை செய்து கொண்டனர். மேகவர்மன் இன்னும் சென்னையில் தான் இருக்கிறான். வெண்ணிலாவிற்கு வளைகாப்பு போட்டு வால்பாறைக்கு அழைத்துச் செல்லும் போது ஒரு வாரம் மட்டும் தான் அவளோடு இருந்தான்.

    

    “டெலிவரி டேட்க்கு முன்னாடியே வந்திடறேன் வெண்ணிலா. அப்பா அம்மா அப்புறம் உன்னை பார்த்துக்கோ சரியா”என்றவன் மனதேயின்றி தான் கிளம்பி இருந்தான். அவனோடு சஞ்சயும் இருக்க மாமனும் மைத்துனனும் தனி சமையலில் இருந்தனர். 

    

    

    இடையே தர்மதுரை வர்மனை வந்து பார்த்து விட்டு மங்கையின் நிலை பற்றி கூற”இதுல நாங்க என்ன செய்ய முடியும் னு நீங்க நினைக்கிறீங்க “என்றான் உறவு வைத்து அழைக்காமல். அதிலேயே அவருக்கு புரிந்து விட்டது இனி தங்கள் இடம் எதுவென்று.

    

    

    “இப்பவும் நாங்க அவங்க கிட்ட எதுவும் கேட்காம இருக்கிறதுக்கு காரணம் எங்கப்பாவை வளர்த்து விட்டது மட்டும் தான். இதுக்கு மேல ஃபேவர் பண்ண எங்களால முடியாது. இங்கே வந்து அவங்களை பத்தி பேசறது வேஸ்ட் தான்”என்றான் வெறுமையாக 

    

    “எனக்கும் புரியுது வர்மா. இருந்தாலும் ஒரு நப்பாசை. இப்போ கூட பணத் தேவைக்காக வரலை. முடிஞ்சா அவளை மன்னிச்சிடு. மனம் அழுத்தம் கூடிப் போய் ஏதேதோ செஞ்சுட்டா. அவ நெலைமைக்கு நானும் ஒரு காரணம். நான் வசதி வாய்ப்பை பெருசா நினைக்கலை. ஏன்னா எனக்கு இருந்த வசதியே போதும் னு தோணுச்சு. அவ உங்க வசதி வாய்ப்பு பார்த்து இப்படி ஒரு குணத்தை வளர்த்திருப்பானு நினைக்கலை”என்றவர் வேறெதுவும் பேசிடவில்லை. கிளம்பி போய் விட்டார்.

    

    

    மங்கை பேச்சு எதையும் கேளாமல் இடத்தை அப்படியே கடன் வாங்கிய வட்டிக்காரனிடமே விலைபேசி முடித்த தர்மதுரை கடனை அடைத்து விட்டு மீதி இருந்த பணத்தில் ஒத்திக்கு ஒரு வீட்டை வாங்கி குடி வந்தவர் இரண்டு லட்சத்தை மட்டும் மகன் பெயரில் டெபாசிட் செய்தார். அந்த கடன் கொடுத்தவனுக்கு இடம் அவன் எதிர்பார்த்த அளவுக்கு அமைந்ததில் மார்க்கெட் வேல்யூவிற்கு சற்று அதிகமாக பணம் கொடுத்தே வாங்கிக் கொண்டான். ஏனெனில் அது நகரத்தின் மையத்தில் அமைந்திருக்க அதன் மதிப்பு இன்னும் இன்னும் அதிகமாகும் அதனாலேயே அதிகப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டான் அவன்.

    

    மங்கைக்கு அதில் அத்தனை பொடுபொடுப்பு. ஆனாலும் வேறு வழியின்றி முனகிக் கொண்டே அலைந்தார். மங்கையால் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன … இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தர்மதுரை வேலவனின் மீதான கோபத்தை குறைய விடாமல் காத்து வேலவனின் பக்கம் செல்ல விடாமல் தடுத்தது தான். வேண்டுமென்றே தான் இதனைச் செய்தார் அவர். இனியும் சென்று அவரோடு உறவாட முயற்சி செய்ய விட்டால் இன்னும் இன்னும் அந்த உறவு கசந்து போகும். ஏற்கனவே போய் விட்டதே… அதற்குமே தர்மதுரை பேச்சு வாங்கிக் கொண்டார்.

    

    

    “இதுக்கெல்லாம் காரணமே நீதான் யா”என்று கடுகடுக்க

    

    “ஆமா ஆமா நான் தான் காரணம்”என்று கணவன் உடனே ஒப்புக் கொண்டதில் அவரை முறைக்க

    

    “நெசம் தான் மங்க. தம்பி தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு போதும் டா ஒழைச்சதுனு நிறுத்தினது நான் தானே… அதான் இத்தனைக்கும் பிரச்சினையா ஆகிப் போச்சு”உண்மையை ஒப்புக் கொண்டார் தர்மதுரை.

    

    

    இளமையில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தவருக்கு ஒரு கட்டத்தில் எதுவும் முடியாமல் போக மனைவியும் தம்பி வீட்டில் இருந்து சலுகையாக அத்தனையும் வாங்கிக் கொண்டு வர சற்று அவர் இளைப்பாறியதில் இத்தனை நிகழ்வுகளும் நடந்தேறி விட்டது. தர்மதுரையும் தன் தம்பிகளிடம் இருந்து இது போல வாங்கி இருக்கலாம் தான். ஆனால் அந்த அளவிற்கு தாமரை விட்டதில்லை என்பதே நிதர்சனம். மதிப்பு மரியாதை உண்டு உங்கள் பேச்சை கேட்போம் ஆனால் எங்களின் சம்பாத்தியம் நாங்கள் தீர்மானிப்பது போல தான் செலவும் இருக்கும் என்பதில் தெளிவாய் நின்றார். மங்கை பஞ்சப் பாட்டு பாடினால் அதற்கு ஈடு கொடுத்தே தாமரையும் பேசுவார். அந்த நுணுக்கம் தான் வரலக்ஷ்மிக்கு வரவில்லை. வரவில்லை என்பதை விட வேலவனின் அக்கா பக்தி அவரை அந்த நிலைக்கு வரவில்லை என்பதே உண்மை. வேலவனிடம் இருந்து கிடைக்கும் சில்லறை உதவி மகிழ்ச்சியை தந்தது என்றால் வர்மன் லகரத்தில் வாங்கிய சம்பளம் பேராசையை தந்தது மங்கைக்கு. பேராசை பெரிதாக நட்டத்தை உண்டாக்கியதோடு மட்டுமின்றி உறவின் பிரிவிற்கும் வழி வகுத்துவிட்டது. இந்த பிரிவில் விடுதலை அடைந்தது வர்மனின் குடும்பம். இல்லையேல் பாசவலை எனும் பெயரில் இன்னும் எவ்வளவு வருடங்கள் அவனின் உழைப்பை மங்கை உறிஞ்சி இருப்பாரோ அது மங்கை மட்டுமே அறிந்த ஒன்று.

    

    

    ஒட்டுண்ணி வாழ்வு எத்தனை நாட்களுக்கு மிஞ்சும். அது ஒட்டிய உயிர் உதறித் தள்ளும் வரைக்கும் தான் அதற்கு வாழ்க்கை. உதறினால் முடிந்து போகும் ஒட்டுண்ணியின் மொத்த வாழ்வும். இங்கே மங்கையின் உயிர் போகவில்லை அவ்வளவு தான் அவர் படைத்த ஆணவன் அதிகாரம் திமிர் எல்லாம் சருகாய் காய்ந்து விட்டிருந்தது அவர் நினைக்காமலேயே. உதறிய உறவுகளின் உன்னதம் அறியாமல் போன மங்கையைப் போல பலரும் வாய்சவடாலில் தான் இன்னும் மிச்ச வாழ்வை நகர்த்துகின்றனர். இவர்கள் எல்லாம் இறுதி வரை உன்னதம் அறியாதவர்கள் தான். மங்கை போன்ற சிலரை காலம் தான் திருத்த வேண்டும்.

    

    

    ***********

    

   “வால்பாறை வானரக்குட்டி என்ன செய்யுது” என்று அழைப்பு விடுத்ததுமே கிண்டல் அடித்தான் வர்மன்.

    

    “பேபி உராங்குட்டானை தூங்க வைக்குது”என்று பதிலுக்கு பேசியவளை முறைத்தவன் “எம்புள்ள உராங்குட்டானாடி உனக்கு”என்று கேட்க 

    

    “ஆஹாங் அப்புறம் நாங்க மட்டும் எந்த சாடையில் வானரமா தெரிஞ்சோமாம். நாங்களும் என் அப்பாக்கு பொண்ணு தான் மிஸ்டர் மேகவர்மன்”என்று மல்லுக்கு நின்றவளை விழிகளில் நிரப்பிக் கொண்டபடி “ஐ மிஸ் யூ போத்”என்றான் ஏக்கமாக

    

    

    “என்னவாம். வாய்ஸ் டல்லடிக்குது. எங்க இருக்கீங்க”என்று அவள் மல்லுக்கு நின்றதை மறந்து அவனின் ஏக்கத்தில் இளக

    

    “வீட்டில் நம்ம ரூம்ல”என்றவன் அறையை காண்பிக்க வெண்ணிலா கனிவாய் அவனைப் பார்த்தாள்.

    

    

    பிரசவ தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பே வந்துவிட்டவன் அவளை விட்டு அங்குமிங்கும் நகரவே இல்லை. தூங்க கூட சிரமப்பட்டவளை அத்தனை பாந்தமாக அணைத்து உறங்க வைப்பான். பேறுகால வலி எடுத்ததுமே வெண்ணிலா சண்டை போட்டது அவனிடம் தான். மற்றவர்கள் பரிதாபமாக அவனைப் பார்க்க மேகனோ முகம் வாடாமல் “தண்ணி குடிச்சிட்டு திட்டுடா”என்று நிற்க

    

    

    “நீ என் கிட்ட இப்படி பேசாத. பேசி தான் இப்படி கொண்டு வந்து நிறுத்தி இருக்க. உன்னை யாருடா என்னை கல்யாணம் பண்ண சொன்னது”என்று வலியின் ஊடே அம்மா ப்பா என்று அனத்தினாலும் அவனைத் திட்டுவதை விடவில்லை. 

    

    “அடியேய். அந்த பையனை என்ன பாடுபடுத்துற”என்று அகிலா அதட்ட “எல்லாம் உன்னால தான் மா.”என்று அவரிடமும் வலியில் கத்தினாள்.

    

    

    “அத்தை விடுங்க அவ என்ன வேணும்னா திட்டுறா” திட்டுக்களை வாங்கிக் கொண்டு மனைவிக்கு ஆதரவு தந்தான் மேகன்.

    

    

    நல்ல வேளை மற்றவர்கள் எல்லாம் அங்கு இல்லை. இவர்கள் இருவர் மட்டும் இருக்க அப்போது தான் மேகனுக்கு அத்தனை திட்டு விழுந்தது.

    

    

    வெண்ணிலா படுத்திய பாட்டோடு பிறந்தான் அவர்களின் மகன்.  

    

    பிறந்த ஒரு வாரத்திலேயே வர்மன் மீண்டும் ஆன்சைட் கிளம்பி விட்டவன் மூன்று மாதங்கள் கழித்து இதோ இப்போது தான் சென்னை வந்து சேர்ந்திருக்கிறான்.

    

    

    உடனேயே வெண்ணிலாவிற்கு அழைத்து பேசத் துவங்கி விட்டனர்.

    

    

    சென்னை வீட்டில் மேல் ஃப்ளோரை மட்டும் வாடகைக்கு விட்டு விட்டனர். இங்கே வால்பாறையிலும் வீடு வேலை முடிந்து கிரகப்பிரவேசம் செய்ய வர்மனின் வருகைக்குத் தான் காத்திருக்கின்றனர் வீட்டினர்.

    

    

    மங்கையோடு தான் பேச்சு வார்த்தை இல்லையே தவிர பவேஷிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறான் வர்மன். தீபாவின் மூலம் அவனுக்கு கல்லூரி செல்வதற்கு தேவையான உதவிகளை செய்து தான் தந்தான். தீபவர்ஷினி இன்னும் திருமணம் ஆகாமல் தான் இருக்கிறாள். தாமரை வரன் தேடிக் கொண்டிருப்பதாக கேள்வி.

    

    

    வரலக்ஷ்மி வேறு தீபாவுடன் பேசாதே என்று வெண்ணிலாவிற்காக கூற அவளோ “அத்தை அந்த பொண்ணு என்ன செய்யும் பாவம். விடுங்க அவங்க மூலமா தான் பவேஷுக்கு தேவையானதை அவர் செய்றார்”என்று சொல்லி சமாதானப் படுத்த

    

    

    

    வரலக்ஷ்மியோ “இல்லை மா”என்று தயங்க வெண்ணிலாவுக்கு அத்தனை சிரிப்பு.

    

    

    “உங்க புள்ள அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் னு எப்படி பா சொல்வேன்”என்று மேகனிடம் தான் கலாய்ப்பாள்.

    

    

    “அடிங்க கொழுப்பு டி உனக்கு.”என்றவன் “ஆமா வெண்ணிலா ஒரு வேளை அம்மா பயப்படுற மாதிரி நான் இருந்துட்டா என்ன செய்வ”என்றிட அவனை நக்கலாக பார்த்து விட்டு “கண்ணகி கோவலனை போட்டு தள்ளி இருக்கலாம் அதை செய்யாமல் நீதி கிடைக்கலைனு மதுரையை எரிச்சுட்டாங்க. நான் எல்லாம் அப்படி இல்லப்பா உன்னை கொளுத்தி விட்ருவேன் சிம்பிள்”என்றதும் மேகன் சிரித்தான்.

    

    

    “இந்த மேகத்துக்கு வெண்ணிலவோட கலக்க தான் பிடிக்கும்”என்றிட 

    

    “இல்லாட்டா இடி மின்னல் தாக்குதல் நடக்கும் தம்பி.”என்று மிதப்பாக கூறியவளை அணைத்துக் கொண்டான்.

    

    

    வாய்க்கு வாய் சண்டைக்கு நிற்கும் அவனின் வால்பாறை வானரத்தை எல்லாம் வர்மன் இப்போதெல்லாம் அதிகமாக மிஸ் செய்கிறான். அவளுக்கு தான் பிள்ளையோடு மல்லுக்கட்டவே சரியாக இருக்கிறதே எங்கிருந்து அவனோடு வம்பு வளர்க்க

    

    

    எதிர்பாராத திருமணம் எதிர்பாராத விதமாக தன் எதிரியோடு நடந்தாலும் அழகாய் அணுக்கமாய் ஒருவரையொருவர் அன்பால் அரவணைத்துக் கொள்ள இதோட கூடடையும் பறவையாய் இருவரின் வாழ்வும் ரசனையெனும் புள்ளியில் இணைந்து திளைக்கிறது. 

    

    

    நிலவுப்பெண்ணை தன்னுள் ஒளித்து கலந்த மேகனின் வாழ்வு அவளோடு நிறைந்தது.