வரலக்ஷ்மிக்கு ஏதோ பெரிய தளையில் இருந்து மீண்டு வந்த உணர்வு. வெண்ணிலாவைக் கண்டதும் அப்படி தான் உணர்ந்தார் அவர்.
“நிலா”என்று அழைத்தவருக்கு சட்டென விழிகளில் மழை
“நான் தான் வந்தாச்சே அத்தை”என்றவள் மங்கையின் முகத்தை பார்த்து நின்றாள்.
“எல்லோரும் வாங்க”என்ற வரலக்ஷ்மியின் குரலில் உற்சாகம் ததும்பியது என்றால் மங்கையின் குரல் கிணற்றுக்குள் கேட்டது.
வேலவன் வழக்கம் போல நண்பனின் மகளாகவே வெண்ணிலாவை வரவேற்றார்.
வரவேற்பு முகமன் முடிந்ததுமே நரசிம்மனிடம் பொதுவாக பேசத் துவங்கிய வேலவன் பழைய நினைவுகளை அசை போட்டார்.
விஷாலம் வரலக்ஷ்மி யின் கைகளைப் பிடித்துக் கொண்டு “இப்படியும் தான் பொம்பள இருப்பியா…ஏங்கண்ணு ஒத்த ஃபோனு போட்டா சிட்டா வந்திருக்க மாட்டேனா…ஆளே வத்திப் போய் நிக்குறியே இங்கிட்டு இனி ஒத்த நிமிஷம் நீ நிக்க கூடாது. இனிமே நாந்தான் ஆக்குவேன் நீ போய் என்ர மவனை மட்டும் பாருகண்ணு”என்றார் கண்கலங்க.
“அத்தை”என்று கண்கலங்கிய வரலக்ஷ்மிக்கு எதையும் சொல்லவும் முடியவில்லை.
இதற்கெல்லாம் தன் உணர்வுகளை எதிரொலித்தால் மகனின் வாழ்க்கை மொத்தமாக மூழ்கி போகுமே என்று யோசித்து அமைதி காத்தார் விசாலம்.
அகிலாவோ,”உங்களுக்கு உங்க தம்பி வீட்டில் சாப்பிட எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு கொறையாம மகன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட அவங்களும் உரிமை இருக்கு இது என் மக வீடும் கூட. என்னையும் கேட்க முடியாது.”என்றார் மங்கைக்கு மட்டும் கேட்கும்படி.
“என்ன அகிலா பேச்சு ஒரு மாதிரி இருக்கு”
“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல மங்காக்கா. நீங்க சொன்னதுக்கு பதில் சொன்னேன் நான்”என்றவர் “ஏன் வேலண்ணா உங்க வீட்டில் நான் என் மக எல்லாம் தங்கக் கூடாதா என்ன”என்று சத்தமாக வேலவனிடம் கேட்டு விட
அவரோ”உங்களுக்கு இல்லாத உரிமையா மா. என் தங்கச்சி நீ என் மருமக நிலா. அவங்களுக்கு இல்லாத உரிமை யாருக்கு ன்னேன். நிலாமா நீ எவ்வளவு நாள் வேணும்னாலும் எங்க கூட இருடா”என்றார்.
மங்கை திகைத்து ஏதோப் பேசப் போக “அண்ணி அவர் ஹெல்த்”என்று வழக்கமாக மங்கை சொல்லும் அதே வரியை அவருக்கே திருப்பிப் படித்தார் வரலக்ஷ்மி.
மங்கைக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
அதற்குள் வெண்ணிலாவோ “இதோப் பாருங்க மாமா இப்போதிலிருந்து உங்களுக்கு சாப்பாடு டேப்லட் எல்லாம் உங்க மருமக நான் தான் தருவேன்.”என்று சிரித்த முகத்துடன் அவள் சொல்லிக் கொண்டிருக்க வேலவன் “சரிடா நிலாம்மா”என்றார் வாஞ்சையாக.
“என்ன மருமகளா?!”என்று மங்கை அதிர்வாய் கேட்க
“ஆமாம். மாமா என்னை எப்போதும் அப்படி தான் சொல்வாங்க. என்ன மாமா சொல்லுங்க மறந்து போயிட்டீங்களா…? வால்பாறையில் இருக்கும் போது எல்லார் கிட்டயும் அப்படி தானே சொல்வீங்க”என்று புன்னகைக்க
“ஆமாம் க்கா, நரசிம்மன் பொண்ணு எனக்கு மருமகள் தான். இல்லையா பின்னே நான் தானே நிலாக்கு மாமா”என்று கூற மங்கைக்கு அதற்குமே பேச முடியவில்லை.
அவர்கள் எல்லாம் வந்த சிறிது நேரத்திலேயே மங்கைக்கு அங்கே இருக்க முடியவில்லை ஆனாலும் வேறு ஏதேனும் பேசி வேலவனை குழப்பி அல்லது வரலக்ஷ்மியை குழப்பி விடுவார்களோ என்ற பயம் அவருக்கு.
அனைவரும் இருக்கவே மங்கை தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தார். விசாலத்தின் துளைக்கும் பார்வையில் இருந்து தப்பிக்கவும் அவர்கள் முன்பு தன் கோபதாபங்களை காட்டி விடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார். காட்டி விட்டால் தான் வைத்திருக்கும் இலக்கை அடைய முடியாமல் போய் விட்டால். அதனாலேயே விலகிச் சென்றார். இவர்கள் என்ன ஒரு ஒரு வாரம் தங்குவார்களா அதற்குள் வரலக்ஷ்மியை பேசி சரி செய்து விடலாம் என்ற மெத்தனம் அவரிடத்தில்.
வெண்ணிலா வந்ததும் முதலில் சமையலறையை தான் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாள்.
“நீங்க சொல்லுங்க அத்தை நான் சமைக்கிறேன்”என்றவள் சட்டென “இல்லை இல்லை மாமாவுக்கு பிடிச்சதை நானே பண்றேன்”என்றாள்.
“நிலா”என்ற வரலக்ஷ்மி மெதுவே அவளின் கையை பிடித்துக் கொண்டு “காலையில் உன் ரூமில் இருந்து வாமிட் பண்ற சத்தம் கேட்டது உடம்புக்கு என்ன நிலா”என்றார் சந்தேகமாக
வெண்ணிலாவின் வதனம் செந்தூரம் பூச நமட்டுச் சிரிப்புடன் “அதை நான் வந்து சொல்வேனாம்”என்று அவரை கிச்சனை விட்டு வெளியே அமர வைத்தாள்.
புன்னகையுடன் பாலை காய வைத்து பாயசம் செய்தவள் பூஜையறையில் ஒரு டம்ளரை வைத்து வணங்கி விட்டு நேரே வரலக்ஷ்மியிடம் தான் கொண்டு வந்து கொடுத்தாள்.
“காலையிலேயே பாயசம் என்ன நிலா”என்றவருக்கு புரிந்தும் புரியாத நிலை.
“சும்மா நான் ஊருக்கு வந்திருக்கேனே அதனால”என்று கண் சிமிட்டியவள் அவரின் காதில் விஷயத்தைக் கூறினாள்.
“நிலா!!!”என்று ஆவலும் தவிப்புமாய் மருமகளைக் காண கண்ணில் நீர் திரண்டது அவருக்கு.
“ஷ்ஷ்ஷ் அத்தை ப்ளீஸ் அமைதியா இருங்க. வேற யார் கிட்டயும் ஷேர் பண்ண வேண்டாம் அவர் வந்ததும் பார்த்துப்போம்”என்று அமைதி படுத்தினாள்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷம் நிலா. எனக்கு எனக்கு”என்றவருக்கு உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
சொந்தமும் நட்பும் வந்திருந்ததாலோ என்னவோ வேலவன் அநேக நேரங்களில் உற்சாகமாகவே இருந்தார் வேலவன்.
நரசிம்மனிடம் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் என்னவோ பழைய வேலவனை மீட்டெடுத்த உணர்வு வரலக்ஷ்மிக்கு.
சமையல் எல்லாம் முடித்து மாமனார் மாமியாருடன் வளவளத்துக் கொண்டிருந்த வெண்ணிலா வர்மனை வெகுவாக மிஸ் செய்தாள்.
‘எப்போ தான் வருமோ இந்த உராங்குட்டான் ‘என்று சலித்துக் கொண்டாள் மனதில்.
அன்று வார இறுதி என்பதால் முதலில் வரலக்ஷ்மிக்கு அழைத்து இருந்தான் வர்மன்.
“ம்மா எப்படி இருக்கீங்க அப்பா”என்று பேசத் துவங்கும் போதே”அம்மா அப்பா நல்லா இருக்காங்க வீட்டில் ஆடு கோழி எல்லாம் நல்லா இருக்கு. அங்கே மாதம் மும்மாரி பொழியுதா”என்று கிண்டலான வெண்ணிலாவின் குரலில் சிலிர்த்தான் மேகன்.
“டேய் முகி வெண்ணிலா…நீ நீ இங்கே…எப்போ டி வந்த “என்று அத்தனை உற்சாகமாக பேச மெலிதான அவனின் பேச்சு சத்தம் கேட்ட வரலக்ஷ்மிக்கு அவ்வளவு வேதனை தொண்டையடைத்தது.
மகன் மருமகளை எத்தனை தேடி இருந்தால் இவ்வளவு ஆவலாக பேசுவான் என்று நினைத்தவர் “நீ பேசிட்டு அப்புறம் கொண்டு வந்து குடு நிலா”என்று வெளியே செல்ல முற்பட
“இருங்கத்தை நீங்க பேசுங்க நான் அப்புறம் பேசறேன்”என்று கைபேசியை கொடுத்தாள்.
“தம்பி”என்று அழைக்கவுமே வர்மன் அவ்வளவு ஆசையுடன் பேசினான்.
“எப்போ வந்தாங்க மா…அப்பா”என்று இழுக்க
“அதெல்லாம் எதுவும் பிரச்சினை இல்லை வர்மா. அப்பா எல்லார் கிட்டயும் நார்மலா தான் பேசுறாங்க. வால்பாறையில் இருந்து பார்க்க வந்ததா நினைச்சு இருக்கார். நிலா தான் இங்கே ஒரு வாரம் தங்கறதா சொல்லவும் சரின்னு சொல்லி சந்தோஷப்பட்டார்”என்றார் மகனின் கேள்வி உணர்ந்தவராய்.
“நிஜமாவா ம்மா?!”என்றவன் வெண்ணிலாவிடம் பேசும் ஆசையும் ஆவலும் இருந்தாலும் அம்மாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.
அவர் கைபேசியை கொடுத்ததும் அதுவரை இல்லாத நாணமும் தயக்கமும் போட்டிப் போட வெண்ணிலா மௌனித்தாள் என்றால் மேகன் அவள் பேசட்டும் என்று மனம் துடிக்க காத்திருந்தான்.
இருவரிடத்திலும் நீடித்த மௌனம் கலையாத நிலையில் சில நொடிகளில் அவனே அதனைக் கலைத்தான்.
“அடுத்த நிமிஷம் வீடியோ கால் வருவேன் நேர்ல”என்று சற்று நிறுத்தி பின் “அடுத்த வாரம் வருவேன்”என்றான்.
“அப்போ அப்பவே பேசறேன்”என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசியவளை அந்த நொடியே காணும் ஆவல் அவனிடம்.
“வானரக்குட்டி என்னை உசுப்பி விடறியா நீ”என்று பரிதவிப்பாய் கேட்க
“பார்த்தா இன்னும் டெம்ப்ட் ஆகிட்டா”இன்னும் சிரிப்புடன் கேட்டாள்.
“ஆனா பரவாயில்லை நீ ஒழுங்கா வீடியோ கால் வா நம்ம வீட்டில் நம்ம ரூமில் உன்னைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு”என்றதும் மறுக்க முடியாமல்”இருங்க வர்றேன்”என்று எழுந்து தங்கள் அறை நோக்கி நடந்தாள்.
வேலவன் அங்கே வந்தவர் “நிலா என்னடா எதுக்கு வர்மன் ரூம் போற நீ”என்று தடுக்க வெண்ணிலா திடுக்கிட்டு நின்று விட்டாள்.
“அது வந்து மாமா”என்று அவள் தடுமாற மேகனுக்கு அங்கே நிலைகொள்ள முடியவில்லை.
எப்படியான இக்கட்டான நிலை அவளுக்கு என்று வெதும்பியவன் “வெண்ணிலா வேண்டாம் போக வேண்டாம்”என்றான் மனதேயின்றி
அங்கே ஆபத்பாந்தவனாய் வந்த வரலக்ஷ்மி”என்ன நிலா நிற்கிற போய் கொஞ்ச நேரம் படுக்க வேண்டியது தானே”என்று வர்மனின் அறைக் கதவை அவரேத் திறந்து விட்டார்.
“வரு அது வர்மன் ரூம்”என்று வேலவன் தடுமாற
“அச்சோ பாருங்க உங்களுக்கு சொல்லவே இல்லை நான். வர்மன் மாடி ரூமில் இருக்கான் வேதா ப்பா. இங்கே கெஸ்ட் வந்தா தங்கட்டும்னு சொல்லிட்டான் அதான் நிலா அந்த ரூம் போறா. வந்ததும் மாத்திப்பான். நிலா நீ உள்ள போடா. நீங்க வாங்க மாத்திரை போடலாம்”என்று கணவனை கையோடு அழைத்துச் சென்று விட்டார் வரலக்ஷ்மி.
இருவரிடமும் நிம்மதி பெருமூச்சு.
“சாரிடா முகி”என்றதும் “இப்போ என்ன விடுங்க மாமாவே பாவம்”என்று சமாதானம் செய்தாலும் வெண்ணிலாவின் மனம் வெகுவாய் வருந்தியது.
சண்டை போட்ட நாட்களும் சமாதானமாய் வாழ்வைத் துவங்கிய நாட்களும் சுமந்த அவர்களின் பிரத்யேக அறை அல்லவா அது. அங்கையே உரிமையாக செல்ல முடியாத வருத்தம் அவளுக்கு.