“நான் இனிமே அந்த வீட்டுக்கு வர மாட்டேன். கால்வயித்து கஞ்சியா இருந்தாலும் என் தம்பி போடுவான். அந்த வீட்டில் காலடி எடுத்து வச்சா என்னன்னு கேளுங்க”என்று தன் கணவரிடம் ஆவேசமாய் மங்கை பேச 

    

    “நீ வந்துட்டா எனக்கு மட்டும் அங்கே என்ன இருக்கு மங்க. உன் இருப்பிடம் தானே எனக்கு சொர்க்கம்”என்று டயலாக் அடித்தார் மங்கையின் கணவன்.

    

    பார்ப்பவர்களுக்கு ஆஹா என்ன ஒரு ஆதர்ஷ தம்பதி என்று தான் தோன்றும். ஏன் வேலவனே அந்த ரீதியில் தான் அக்காவையும் அவரின் கணவரையும் பார்த்து நின்றார்.

    

    ‘இங்கேயே தங்கிடுவாங்களோ இவர் இங்க இருக்கான்னு சொல்லிடுவாரோ’என்ற பீதியோடு வரலக்ஷ்மி நாத்தனார் குடும்பத்தையும் தன் கணவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

    

    

    அவர் நினைத்தது போல தான் வேலவன் உருகிப் போய் வரலக்ஷ்மி யின் எண்ணத்தை வேறு வகையில் கூறினார்.

    

    “விடுக்கா. உன் நல்ல மனசு புரியாம பண்ணிட்டாங்க. இதுக்காக நீ அங்கிருந்து கோவிச்சுட்டு வந்திருக்க வேணாம் க்கா அது மாமாவோட உரிமை இல்லையா அதை விட்டுட்டா வருவ”என்று பாங்காய் சொல்ல

    

    

    “ஏன் வேலா நம்ம வர்மனை வேண்டாம் னு சொன்ன பிறகு அந்த வீட்டில் நான் இருப்பேனா… என் தம்பி மகனை விட வேற என்ன பெருசு எனக்கு. எவ்வளவு ஆசையா மணமேடைக்கு வந்தான் அவனைப் போய்”என்று மூக்கை சிந்தியதுமே அந்த பக்கம் வெண்ணிலா மேகனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

    

    ‘நேரங்கெட்ட நேரத்தில் இவங்க வேற’என்று மனதில் சலித்துக் கொண்டான் வர்மன்.

    

    “சரி விடு மங்கை. நடந்தது நடந்து போச்சு இப்ப என்ன எம்பேரனை ஒத்தையாவா நிக்க வச்சோம். அந்த கோணியம்மனா பாத்து நரசிம்மன் பொண்ணை குடுத்துருக்கா. மகாலெட்சுமி மாதிரி இருக்கு இதை விட ஒரு பொண்ணு கிடைச்சிடுமா”என்றார் வேலனின் சித்தி.

    

    மங்கை வெடுக்கென வெண்ணிலாவைப் பார்க்க அவளோ அங்குமிங்கும் பார்த்தபடி பூவை சரி செய்தாள் கிண்டலாக.

    

    

    ‘உன்னை கவனித்துக் கொள்கிறேன்’என்பதாக ஒரு பார்வை பார்த்தார் மங்கை.

    

    ‘நீயெல்லாம் ஒரு ஆளா’என்பது போலான அலட்சிய பாவனை வெண்ணிலாவிடம் அதுவே மங்கைக்கு இன்னும் ஆத்திரத்தைக் கிளப்பியது.

    

    

    ஒரு வழியாக பேச்சை முடித்து சமாதான படலம் எல்லாம் ஓய்ந்து மங்கை இப்போதைக்கு குடும்பத்துடன் அங்கேயே இருப்பதாக முடிவு செய்து விட்டனர். இல்லை இல்லை செய்ய வைத்து விட்டார் மங்கை.

    

    

    அடிக்கடி வந்தே நம்மை இத்தனை அடிபணிய வைத்திருக்கிறார் இதில் இனி கூடவேவா என்று மலைப்பாக இருந்தது வரலக்ஷ்மிக்கு. ஆனால் கணவனிடம் சொல்லி விட முடியாதே… மங்கை அங்கே சண்டையிட்டு வந்ததே ஏதோ தனக்காக என்பது போலான பெருமிதத்துடன் நிற்கிறார் வேலவன் இதில் எங்கே போய் மங்கை இங்கு இருக்கக் கூடாது என்று மறுப்பது. மறுத்துச் சொன்னால் தான் எடுபடுமா என்று வாயை மூடிக் கொண்டார் வரலக்ஷ்மி.

    

    “சரிக்கா அழுவாத அழுதழுது மொகமே வீங்கிப் போச்சு. நீ வா சாப்பிடு முதல்ல”என்று வேலவன் அழைக்க மங்கை எழுந்து கொள்ளவும் அகிலா கையைப் பிசைந்து கொண்டு நின்றார். நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது. இப்போது வால்பாறை செல்வோமா மாட்டோமா… பொண்ணு மாப்பிள்ளை எப்படி வருவார்கள் என்ற குழப்பம் அவருக்கு.

    

    

    மங்கை நரசிம்மனை கவனித்து விட்டு “ஏன் வேலா இவங்க இங்கே”என்று இழுக்க 

    

    

    “பாருக்கா மறந்து போய் நானும் நின்னுட்டேன்.”என்றவர் “நரசி…பேசாம காலையில் எல்லாரும் வால்பாறைக்கு கெளம்புவோம். இப்ப இங்க தங்கிடுங்க”என்று சொல்ல 

    

    

    “என்ன வேலா புரியாம பேசுற. அப்படி எல்லாம் சம்பந்தி வீடு தங்கக் கூடாது.பொண்ணு மாப்பிள்ளையை விருந்துக்கு அழைப்பு வச்சுட்டு கெளம்ப சொல்லு அதுதான் சரியா இருக்கும்”என்று மங்கை குறுக்கிட 

    

    “பாரு அதுக்கு தான் மங்கை வேணும்ங்கறது சடங்கு சம்புரதாயம்லாம் மங்கைக்கு தெரியாததா. ஆனா கண்ணு மங்க இன்னும் அவங்க மறு வீட்டுக்கு போவல கண்ணு. போனா தானே விருந்துக்கு மொறையா அழைச்சு வுடுவாங்க மூணு அழைப்பு வைக்கோணுமல்லோ… “

    

    “எவ்வளவுக்கு எவ்வளவு தூரம் சித்தி அலையறது. அதெல்லாம் வேணாம்”என்றார் கடுப்பாக

    

    

    “அதுக்குத்தான் கண்ணு நா ஒரு ரோசன (யோசனை) சொன்னேன்”என்றதும் என்னவென்பது போல பார்க்க 

    

    

    “என்ன இருந்தாலும் நம்மூட்டுக்கே மொதோ பேராண்டி கலியாணம். அதுக்கு நடக்குற நல்லது எல்லாம் பரம்பரை வூட்ல தான் நடக்கணும். சம்பிரதாயம் ஒனக்கு தெரியாதாம்மணி.”என்றவர் “அட லட்சுமி என்ன பராக்கு பாக்குற வெள்ளாவெட்டுனு கெளம்புங்க. ராவுக்குள்ள வீடு போவோணும்ல”என்று மற்றவர்களை பேசவே விடாமல் கிளப்பினார் வேலவனின் சித்தி 

    

    

    மங்கைக்கு பொடுபொடுவென்று வந்தது. 

    

    

    கொஞ்ச நேரம் இங்க இல்லை அதுக்குள்ள கெழவியோட நாட்டாமைத்தனம் பறக்குதே. இதுகளை இப்படியே விட்டா அவ்வளவு தான். என்று எண்ணியபடி வேலனைப் பார்த்து விட்டு ‘இவன் வேற ஏதோ கொத்து சாவியை தூக்கிக் குடுத்த மாதிரி ஏஏஏ னு பாக்குறான். அந்த வரா ஏதோ முகத்தையே பாக்காம ஓடுறா இருக்கட்டும் கவனிச்சுக்கிறேன்’என்று சூளுரைத்தபடி வால்பாறைக்கு அனைவரோடும் கிளம்பி விட்டார் மங்கை.‌ 

    

    

    வேலனின் சித்தி வரலக்ஷ்மியிடம் “உன்ர நாத்தி ஓரியாட்டம் பண்ணுவானு நெனைச்சேன் கண்ணு ஆனா பொட்டாட்டம் வாரதை பாரு. அக்கட இவ பவுசு போச்சல்லோ அதேங்கண்ணு”என்று களுக்கி சிரித்து சொல்ல

    

    “ஏனுங்கத்த கம்முனு வாங் காதுல கீதுல வாங்குனா இன்னிக்கு அந்திக்கு முடியாது அவங்க அக்கப்போரு”என்று வரலக்ஷ்மியும் சிரிப்போடு தான் சொல்லியபடி வந்தார்.

    

    வேன் ஒன்றைத் தான் ஏற்பாடு செய்து இருந்தனர். அனைவரும் செல்ல வேண்டுமே… மணமக்களுக்கு தனியாக கார் ஏற்பாடு செய்யலாம் என்றதை மேகவர்மன் மறுத்து விட்டான்.

    

    “எதுக்கு ப்பா எல்லோரோடையும் சேர்ந்தே போகலாம்.”என்றிட 

    

    “இல்ல தம்பி வாரப்ப நாம மட்டும் தானே வர்ற மாதிரி இருக்கும்”என்று அவர் தயங்கவே “பரவாயில்லை ப்பா. அதுவும் தான் பதினோரு பேர் கணக்கு வருதே பார்த்துக்கலாம்”என்று சொல்லி விட வேலவன் வேனையே புக் செய்து வால்பாறை கிளம்பி விட்டார்.

    

     அவர்கள் வால்பாறை வந்து சேருகையில் நன்கு இருள் கவ்வியிருந்தது. எனினும் அங்கே உள்ள ஆட்கள் அங்கும் இங்கும் நின்று கொண்டு தானிருந்தனர். 

    

    “சாமி மீனா. அந்த ஆளாத்திய எடுத்தா கண்ணு.”என்று வேலனின் சித்தி குரல் கொடுத்து கொண்டே வேகமாய் சென்று கதவைத் திறந்து வைத்தார்.

    

    “எல்லாம் ரெடியா வச்சிருந்தேனுங்கப்பத்தா.ண்ணோவ் கெழக்கமா நில்லுங்”என்ற மீனா “வேதாக்கா நீங்க தான் சுத்தோணும் அட வாங்க”என்று வேதாவையும் துணைக்கழைத்து மற்றொரு பெண்ணையும் அழைத்து மூவராய் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தனர்.

    

    

    பூஜையறையில் விளக்கேற்ற சொல்லி அடுத்த அடுத்த சடங்குகள் முடித்து நரசிம்மன் வீட்டிற்கு மணமக்களை அனுப்பி வைத்தனர்.

    

    நரசிம்மன் உறவுகளுக்கு முன்பே சொல்லி இருந்ததால் பலர் அங்கே காத்திருந்தனர்.

    

    

    “ஏனப்பா பொசுக்குனு கண்ணாலம் ஆகிப் போச்சுன்னதும் நாங்க என்னமோ ஏதோனு வந்தோமப்பா. பெறவு நம்ம சீதரன் தான் சேதி சொன்னான்.”என்று ஆளாளுக்கு தனக்கு தெரிந்ததை சொல்லி நல்ல வரன் தான் முன்பே இதை செய்து இருக்கலாம் என்றெல்லாம் பேசி முடிய நேரமே ஆகிப் போனது.

    

    “வெள்ளா வெடுக்குனு பொண்ணு மாப்ளையை அனுப்போனும் இப்பவே நேரமாச்சுது பாருங்க காலையில பேசிக்கலாம் அகிலா. நீ ஒரு பொட்டியில் துணிய எடுத்து போட்டு அனுப்புத்தா மத்தது எல்லாம் பாத்துக்கிணுவோம்”என்று அவரின் மதுரைக்கார அத்தை ஒருவர் கூற மீண்டும் மீண்டும் பால் பழமா என்று சோர்ந்தே போயினர் மேகனும் வெண்ணிலாவும்.

    

    

    “இதெல்லாம் எப்படா முடிப்பாங்க”என்று சஞ்சயிடம் கேட்க 

    

    “அவ்வளவு தான் னு நினைக்கிறேன் மச்சான். மத்த நாளா இருந்தா இங்கேயே தூங்குனு சொல்லிடுவேன் இப்ப ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க தலை சுத்துது”என்றான் சஞ்சயும்.

    

    

    “என்னை விடு உன் தங்கச்சி விட்டா இங்கேயே சாஞ்சிடுவா போல அங்க பாரேன்”என்று அகிலா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவளைக் கை காட்டினான்.

    

    வெண்ணிலா முகம் அத்தனை சோர்வாய் இருக்க சஞ்சய் மெதுவாக “உன் கிட்ட ஒண்ணு கேட்கணும் னு தோணுது மச்சி கேட்கவா”என்று பீடிகை போட

    

    

    “என்னன்னு கேளுடா”வெண்ணிலாவைப் பார்த்தபடியே பதிலிறுக்க 

    

    

    “என் தங்கச்சியை நிஜமாவே பிடிச்சிருக்கா”

    

    “இந்த கேள்வி உனக்கு அபத்தமா இல்லையாடா. எங்களைப் பத்தி உங்களுக்கு தெரியாதா”என்று மேகன் கேட்கவும் சஞ்சய்க்கு இந்த உறவு இனி எப்படி போகுமோ என்ற கவலை தொற்றிக் கொண்டது.

    

    “கவலைப்படாதே மச்சி உன் தங்கச்சியை கொடுமை எல்லாம் படுத்த மாட்டேன் ஆனா அவ ஏதாவது வம்பு செஞ்சா நிச்சயம் திருப்பி குடுப்பேன்”

    

    “சுத்தம்”என்று தலையில் அடித்துக் கொண்டான் மானசீகமாக.

    

    

    எல்லாம் முடித்து மேகவர்மனும் வெண்ணிலாவும் தனியறை செல்ல ஏற்பாடு செய்யப்பட அங்கே மங்கை ஜாதகம் பார்க்காமல் நடந்த திருமணம் அதனால் இந்த சடங்கு எல்லாம் இப்போது வேண்டாம் என்று தர்க்கம் செய்து கொண்டிருந்தார்.

    

    

    வெண்ணிலா மேகவர்மன் இருவரின் முகம் பளிச்சென்று மின்னியது அந்த சோர்விலும்.

    

    

    

    

    

    இவர்கள் உறவு இனி எவ்வாறோ