சட்டென அவன் சமீபித்ததில் வெண்ணிலா தன்னை அறியாமல் விலகி பின்னே சென்று விட மேகனின் முகத்தில் நக்கல் சிரிப்பு படர்ந்தது.    

    

    “பயம் இல்லை”என்று அவளைப் போலவே சொல்லிக் காட்டியவன் “அப்புறம் ஏன் பின்னாடி போற? தைரியமா நில்லு பார்ப்போம்”என்று வம்பு செய்தான்.

    

    

    “உங்களுக்கு பயந்துட்டாலும்”என்று இழுத்தவள் “எனக்குத் தூக்கம் வருது”அங்கிருந்து சென்று விட்டாள்.

    

    “சீட்டிங் சிந்தாமணி”என்று முணுமுணுக்க அவள் காதில் அது ஸ்பஸ்டமாய் விழுந்தது.

    

    “ஹப்பா இவர் பெரிய நேர்மை நெல்லையப்பன் தான்”என்று அவனுக்கு கேட்கும்படி முனகி விட்டு படுத்தவள் பயணம் தந்த களைப்பில் உறங்கியிருந்தாள்.

    

    மேகனுக்குமே களைப்பாய் இருக்க படுத்த நிமிடம் உறங்கியிருந்தான்.

    

    ***********

    “இந்தாளுக்கு எல்லாம் எப்படி தான் தூக்கம் வருமோ தெரியலை”என்று குறட்டை விடும் கணவனை வசைபாடிக் கொண்டே அமர்ந்திருந்தார் மங்கை.

    

    வெளியே தான் புழுக்கம் என்றால் மனதிலும் அத்தனை புழுக்கம் அவருக்கு. நடுக் கூடத்தில் தான் குடும்பமாய் படுத்திருந்தனர்‌. 

    

    வேலவன் வீட்டில் இருந்ததோ மூன்று அறைகள். மேலே மாடியில் ஒரு அறை விஸ்தாரமான நடுக்கூடம் இப்படி மேலே வடிவமைக்கப்பட்டு இருக்க எப்போதும் மாடியில் இருக்கும் அறையில் தான் மங்கை வந்தால் தங்குவார்.‌ இப்போது திருமணம் என்றதும் அந்த அறையை திருமணத்திற்கான துணிகள் சில பொருட்கள் என்று வைத்திருக்க இன்று வெண்ணிலாவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசையும் அவ்வறையில் நிரப்பப்பட்டு இருந்தது. உடனேயும் அதை எடுக்க முடியாத நிலை. உறவினர்கள் வந்தால் கூடத்தில் உறங்க தான் அவ்வளவு பெரிய இடத்தில் எதுவும் செய்யாமலேயே விட்டு வைத்திருந்தார் வேலன். அது போக மங்கையும் திருமணத்தில் பிஸியாக இருந்ததால் இங்கு வந்து தங்காமலேயே போக அவ்வறையை வரலக்ஷ்மி இதற்கென பயன்படுத்தி கொண்டார். வேறு வழியும் அவருக்கு இருக்கவில்லை. சீர்வரிசை பொருட்களை நடுக்கூடத்திலா வைக்க முடியும். அதனாலேயே அறைக்குள் பூட்டி இருந்தார். மங்கையும் இப்படி குடும்பத்துடன் கோபித்துக் கொண்டு இங்கே வந்து டேரா போடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லையே. வேதாவின் அறையில் அவள் கணவனோடு இருக்க வேலவன் தன்னறை தருகிறேன் என்றதற்கு மங்கையின் மகன் “அச்சோ அங்கே ஏசி இல்லை என்னால தூங்க முடியாது”என்று மறுத்தான். வேறு வழி நடுக்கூடத்தில் ஃப்ளோர் பெட்டை விரித்து மகனுக்கு மட்டும் ஏர்கூலரை அவன் பக்கம் திருப்பி போட்டு விட்டார் மங்கை. 

    

    குடும்பத்தில் ஒருத்தியாக இருந்து தனியறை வாசம் செய்தவருக்கு இப்போது நடுக்கூடத்தில் உறவினர் போல் உறங்குவது அத்தனை கடுப்பை விளைவித்தது.

    

    இனியும் தனியறை கேட்க முடியாது அதுதான் தம்பியானவர் தனியே அருகிலேயே வீடு பார்த்து வைப்பதாக கூறி விட்டாரே. வீட்டிற்கு வாடகை கூட வேலவனைக் கொடுக்க வைக்கலாம் ஆனால் அன்றாட செலவுகள் மளிகை அது இதுவென எத்தனை இருக்கிறது எப்படி சமாளிப்பது என்ற எண்ணம் தான் மங்கைக்குள். இத்தனை நாளும் அந்த குடும்பத்தில் நிர்வகிக்கிறேன் என்ற பெயரில் தங்கள் வருமானத்தை எவ்விதத்திலும் இழக்காமல் தன் கணவரின் தம்பி வருமானத்திலேயே மொத்த குடும்பத்தையும் நிர்வகித்தார் . இப்போது தனியே அதுவும் கணவனின் பென்ஷன் பணத்தை மட்டும் வைத்து குடும்பத்தை சமாளிப்பது ஆகாத காரியம். இதில் மகனை வேறு கொள்ளை பணம் கொட்டிக் கொடுத்து இஞ்சினியரிங் படிக்க வைக்கிறார். இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் மூன்று வருடங்கள் இருக்கிறது எப்படி சமாளிப்பது என்றெல்லாம் யோசனை ஓடியது அவருக்கு.

    

    படிப்பிற்கு கூட வேலவனை தாஜா செய்து கொள்ளலாம் ஆனால் தினசரி செலவு என்ற யோசனையில் எப்போது உறங்கினார் என்றே தெரியாமல் உறங்கிப் போயிருந்தார்.

    

    

    *********

    

    வேலவனின் சில உறவினர்கள் மேகவர்மனையும் வெண்ணிலாவையும் விருந்திற்கு அழைத்திருக்க விடுமுறை இல்லாததால் அன்று மட்டுமே மூன்று பேரின் வீட்டிற்கு செல்லும் படி சொல்லி இருந்தார் வரலக்ஷ்மி.

    

    

    காலையிலேயே மேகன் நிலா இருவரும் கிளம்பி வெளியே வர அப்போது தான் எழுந்த மங்கை இருவரையும் குறுகுறுவென்று பார்க்க தர்மதுரை அதை கேட்கவும் செய்தார்.

    

    

    “விருந்துக்குப் போறாங்க மாமா.”என்ற வேலவன் மேகனை அங்கே நிற்க விடவில்லை.

    

    

    “நேரம் ஆகுது கிளம்புங்கப்பா. அம்மாடி நிலா போகும் போது ஸ்வீட் பழம் பூ எல்லாம் வாங்கிக்கங்க சரியா”என்றவர் மகனிடம் பணத்தை கொடுத்தார். 

    

    இருவரும் கிளம்பி விட வரலக்ஷ்மி மற்றவர்களை சாப்பிட அழைத்தார்.

    

    “சோறு தானே தின்னுக்கலாம் அது ஒண்ணு தான் குறையா போச்சு எனக்கு”என்று சலிப்புடன் அமர வேதாவிற்கு அத்தனை கடுப்பு. 

    

    

    “ம்மா அத்தைக்கு எதுவும் செரிமானக் கோளாறு போல அவங்களுக்கு அந்த கசாயம் போட்டு தருவியே அதைக் குடு.”என்ற வேதா “அத்தை மறுபடியும் பசிக்கற வரை சாப்பிடாதீங்க அப்போ தான் சரி ஆகும்.”என்றாள்.

    

    

    விட்டால் இவள் என்னை சீக்குக்காரி ஆக்கிடுவா போலவே என்று யோசித்த மங்கை மறுமுறை அழைத்தால் போகலாம் என்று அமைதி காக்க 

    

    வரலக்ஷ்மி “நான் அண்ணிக்கு கசாயம் தர்றேன் நீங்க எல்லாம் வாங்க”என்று அழைத்துச் சென்று விட மங்கைக்கு இதென்னடா இது என்பது போலானது. 

    

    

    பசிக்கிறது என்று போகலாம் என நினைத்தால் ஒருவர் கூட மீண்டும் அழைக்கவில்லை அவரை. ஏன் கட்டின கணவன் பெத்த பிள்ளை இருவருமே கூட அழைக்கவில்லை.

    

    “நான் காலாற நடந்துட்டு வந்து சாப்பிடுறேன்”என்று யாரும் மீண்டும் பேசுவதற்குள் வெளியேறியிருந்தார் மங்கை.

    

    ********

    

    “வெண்ணிலா இப்போ போறது எனக்கு மாமா வீடு அவங்களை சித்தப்பா அல்லது பெரியப்பா இது போல சொல்லி கூப்பிடு சரியா”‌என்று செல்லும் வழியெல்லாம் பாடம் எடுத்துக் கொண்டு சென்றான் மேகன்.

    

    “கடவுளே போதும் எவ்வளவு விளக்கம் என்னால முடியல”என்று சலித்துக் கொண்டவள் வேடிக்கை பார்க்க துவங்கி விட்டாள்.

    

    “உன் கிட்ட போய் சொன்னேன் பாரு”என்றவன் அதன் பிறகு எதுவும் பேசவில்லை.

    

    

    அன்றைய நாள் முழுவதும் உறவினர் வீட்டிற்கு செல்வதிலேயே முடிந்து போனது.

    

    வீட்டிற்கு வந்ததும் பயணக் களைப்பு என்று போய் படுத்து விட வெண்ணிலா வரலக்ஷ்மியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

    

    “நிலா அம்மா சொன்னாங்க நீ சர்டிபிகேட் இன்னும் வாங்கலைனு அது எப்போ வாங்கணும் மா”என்று வரலக்ஷ்மி கேட்க 

    

    “ஃப்ரெண்ட்ஸ் கால் பண்ணி சொல்வாங்க அத்தை அப்போ போனா போதும்.”

    

    “மறுபடியும் படிக்கிறியா வேலைக்கு எதுவும் போறீயாடா உன் இஷ்டம் தான்”என்றதில் முகம் மலர்ந்தவள் “எம்ஃபில் போடலாம்னு யோசிக்கிறேன் த்தை. சஞ்சு கிட்ட கேட்டிருக்கேன்”என்றாள்.

    

    

    “என்ன செஞ்சாலும் ஓகே நிலா. இந்த மேரேஜ்னால உனக்குத் தடை வராது”என்று வேதாவும் கூற 

    

    மங்கை வாயிருக்க மாட்டாமல் “மறுபடியும் படிக்கணுமா அதுக்கு எல்லாம் செலவு எவ்வளவு ஆகும். இப்போ நீ படிச்சு என்ன செய்ய போற பேசாம குடும்பத்தை பாரு.”என்று கூறிவிட 

    

    “பணம் எல்லாம் என் அண்ணன் செலவு செய்வான் உங்க கிட்ட கேட்கலையே நான்”என்று சொல்லி விட்டாள் வெடுக்கென்று.

    

    அதில் மங்கைக்கு கோபம் வந்தாலும் “செலவுக்காக யார் சொன்னது. என் தம்பி மகன் சம்பாத்தியத்துக்கு ஒரு ஊரையே படிக்க வைப்பான். உங்க வீட்டுல உன்னை இங்க கட்டிக் குடுத்தது குடும்பம் நடத்த தான். படிக்க வைக்க இல்லை”என்றார் முறைப்புடன்.

    

    

    இருவருக்குள்ளும் சண்டை பெரிதாகி விடப் போகிறது என்று பயந்த வரலக்ஷ்மி “நிலா இதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம். அமைதியா இரும்மா”என்றார் மங்கையை கண்காட்டியபடி.

    

    படிக்க போகும் முன்பே இந்த அம்மாவின் வாயில் விழ வேண்டுமா தேவையே இல்லை என்று யோசித்த வெண்ணிலாவும் எழுந்து சென்று விட்டாள்.

    

    “இதெல்லாம் சரியில்லை வரா.இப்பவே கண்டிச்சு வை . அதென்ன அப்புறம் பேசலாம் னு சொல்ற.எந்தம்பி வர்மனுக்கு கல்யாணம் பண்ணி வச்சது பேரன் பேத்தியை பார்க்க தான். இங்கே என்ன ஹாஸ்டலா நடத்துறோம். படிக்கிறேன் புடிக்கிறேன்னுட்டு.”என்று வரலக்ஷ்மியை மிரட்ட 

    

    “நான் பேசறேன் அண்ணி”என்ற வரலக்ஷ்மி “நாளைக்கு உங்க தம்பி உங்க வீட்டுக்கு தேவையான ஹோம் அப்ளையன்ஸ் எல்லாம் வாங்கலாம் னு சொன்னார் அண்ணி அதை என்னன்னு பாருங்க”என்று கூற மங்கை அதில் ஆர்வம் ஆகிவிட்டார். ஆனாலும் ஒரு மனத்தாங்கல் அவருக்கு 

    

    “என்னவோ கடைசி காலத்தில் என் தம்பியோட இருக்கலாம் னு நினைச்சேன். அவன் என்னடான்னா தனிக் குடித்தனம் வைக்கிறேன்னு சொல்லிட்டான்”என்று பெருமூச்செறிந்தார்.

    

    “என்னத்தை பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு”என்ற வேதா “ஆனாலும் நீங்க அதிர்ஷ்டசாலி அத்தை”என்றாள்.

    

    

    “ஏன்டி”என்று மங்கை கேட்க 

    

    “இந்த வயசுல கூட தம்பி சீர்வரிசை செஞ்சு தனிக் குடித்தனம் அனுப்பறார் உங்களை. என் தம்பி எல்லாம் எனக்கு செய்வானோ என்னவோ”என்றவள் மங்கை பேச வரும் முன்பே “நான் எல்லாம் என் தம்பியை சொகுசா இருடா இவ்வளவு செய்யாதடா னு சொல்லிடுவேன். ஏன்னா என்ன இருந்தாலும் பிறந்த வீட்டில் புருஷனை புருஷன் சம்பாத்தியத்தை விட்டுக் குடுத்து பேசக் கூடாது பாருங்க. நாளைக்கு ஒரு வார்த்தை சொல்லி காட்டிட்டான்னா… ஆனா உங்க தம்பி கிரேட் அத்தை அதான் உங்களை எதுவுமே சொல்ல மாட்டாரு”என்று சொல்லி விட்டு அவள் பாட்டிற்கு சென்று விட, வரலக்ஷ்மியோ,’ தான் அவ்விடத்திலேயே இல்லை’ என்பது போல எப்போதோ அங்கிருந்து சென்று இருந்தார்.

    

    அறையினுள் சென்ற வெண்ணிலாவிற்கு கோபம் குறையவே இல்லை.

    

    இந்த அம்மா என்ன எல்லாத்திலையும் மூக்க நொழைச்சு கருத்து சொல்லுது சும்மாவே இருக்காதா இனிமே என் கிட்ட ஏதாவது பேசட்டும் வாயிலேயே வசம்பை வச்சு தேச்சிடுறேன் என்று முணுமுணுக்க மேகன் வந்துவிட்டான்.

    

    “யாரை இவ்வளவு பாசமா பாராட்டிட்டு இருக்க”என்றபடி தனது லேப்டாப் பேகை மேசை மீது வைத்தான்.

    

    “எல்லாம் உங்க நொத்தையை தான்”என்றவள் அவசரப்பட்டு உளறி விட்டோமோ என நாக்கைக் கடித்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

    

    “அதான் சொல்லிட்டியே அப்புறம் என்ன நாக்கை வேற கடிக்கிற என்னவோ எனக்கு பயந்த மாதிரி தான்”என்றவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறை புகுந்தான்.

    

   “இவருக்கு பயந்துட்டாலும்..”என்றபடி அவனுக்கான உணவை எடுத்து வைக்கச் சென்றாள். உள்ளே இருந்த மேகன் சிரித்துக் கொண்டான்.

    

    

    ‘என்ன பிரச்சினை பண்ணாங்கன்னு தெரியலையே’என்று நினைத்தபடி வெளியே வர மங்கையும் வெண்ணிலாவும் ஒருவரை ஒருவர் முறைத்து நின்றிருந்தனர்.

    

    

    ….. தொடரும்.