Advertisement

ஓம் நமச்சிவாய..

வீணை.07..

 பாரதி மணல் கொள்ளை கேஸ் ஃபைலை எடுத்துக்கொண்டு அங்கு செல்லும் வழியில் அவனுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது..

அதை எடுத்து பேசியவன் அழைத்த இடத்திற்கு சென்றான்..

அங்கு இரு தரப்பு கூட்டத்திற்கு இடையில் சண்டை நடந்தது.. அதில் சிலருக்கு கத்தி வெட்டுக்காயம்.. சிலர் மண்டை உடைந்து இரத்தம் சொட்ட கிடந்தனர்..

எஞ்சி இருந்தவர்களும் சண்டை பிடித்தபடி இருந்தார்கள்.. ஸ்பார்டிற்கு சென்ற பாரதி கலவரத்தை அடக்க பெரும் சிரமப்பட்டான்.. ஆம்புலன்ஸ்க்கு அழைத்து அது வந்ததும் காயமடைந்தவர்களை அதில் ஏற்றி அனுப்பிவிட்டு மற்றவர்களை ஸ்டேஷன் அழைத்துவந்தான்..

அழைத்துவந்ததும் அவர்களிடம் விசாரித்தான் ” டேய் தடி மாடுகளா?.. என்னடா தகராறு உங்களுக்குள்ள?..” என்றான்..

அதில் ஒருவன் ” சார் இதுல நீ தலப்போடாத.. ஒதுங்கிக்கோ.. நாங்க பார்த்துப்போம்..” என்றான்..

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ” அடிங்க எடுபட்ட நாயே யார்கிட்ட டா வாய் பேசுற?.. இருக்கிற இடம் தெரியாம தொலைச்சிடுவேன்..” என்றான்..

 அவரை பாரதி அடக்கிவிட்டு ” சொல்லுடா என்ன பிரச்சினை?..” என்றான்..

” சார் அவனுங்க வேற யாரும் இல்ல எங்க மச்சானுக தான்.. எங்க வீட்டு கோழி அவங்க வீட்டுல முட்டை போடுது.. அவங்க வீட்டு ஆடு எங்க பயிர்களை மேயுது.. அதுதான் ஆட்டை அடிச்சு கொழம்பும் . சூப்பும் வச்சி குடிச்சிட்டோம்.. இப்ப வந்து அவங்க முட்டையை தருவாங்களாம்.. எங்களை அதே ஆட்டை தரட்டுமாம்.. அப்படினு கேட்டு சண்டையை ஆரம்பித்தாங்க.. நாங்க என்ன சொம்பைகளா?.. அதுதான் ரெண்டு தட்டு தட்டி நாங்க யாருனு காட்டிட்டோம்ல..” என்றான் கைதி ஒருவன்.. அதை கேட்ட பாரதி அடிவெழுத்துவிட்டான்..

” நான் என்ன ஒரு அவசரமாக போகவேண்டிய என்னுடைய வேலை நேரத்தை முட்டை ஆடு அப்படினு வீணா சண்டைபோட்டு அடிச்சிகிட்டு கெடுத்துட்டிங்களே கழுதைகளா?.. உங்களை..” என்று அடித்துவிட்டு கான்ஸ்டபில் ஒருவரை ஜீ எச் சென்று அடிபட்டு சேர்த்தவர்களின் நிலையை என்னவென்று பார்க்கும் படி அனுப்பிவிட்டான்..

” அவனுகளில் ஒருத்தனுக்கு உயிர் ஆபத்து வந்தாலும் நீங்க என்கையால அடிபட்டே செத்தீங்கன்னு நினைச்சிகோங்க..” என்று கோபத்தில் உருமிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் பார்த்துக்கொள்ளும்படி கூறி மீண்டும் மணல் கொள்ளை நடக்கும் இடத்திற்கு சென்றான் பாரதி..

மாலை நேரம். பாரதிக்கு பாராட்டு விழாவுடன் கூடிய பார்ட்டி ஹால் அலங்காரத்தால் ஜொலித்தது..

பாரதியும் சரியான நேரத்திற்கு அங்கு வந்தான்.. நீதிபதி, கமிஸ்னர் என பெரிய அதிகாரிகளே வந்து அழைத்துச்சென்றார்கள்.. உள்ளே சென்றதும்.. நீதிபதி பாரதியை பற்றி பாராட்டி சில வார்த்தைகள் பேசினார்..

அதன் பின் கமிஸ்னர் பேசினார்.. பேச்சு முடிந்ததும்.. பார்ட்டி கலைகட்டியது.. பாரதியை ட்ரிங் பண்ணுமாறு கூறினார்கள்.. அவனோ பழக்கமில்லை என கூறி மறுத்துவிட்டு பழச்சாறு குடித்தான் ..

நேரம் இரவு பத்துமணியை நெருங்கியதும் பார்ட்டி முடிந்து அனைவரும் கலைந்து சென்றார்கள்..

பாரதியும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டான்.. அதை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றான்..

வீட்டிற்கு சென்றவனை அர்ச்சனாதான் வரவேற்றார்.. ” என்ன கண்ணா இவ்வளவு லேட்டா தான் வீட்டுக்கு வருவியா?.. செல்வி இவ்வளவு நேரம் இங்கதான் இருந்துச்சி.. நான்தான் பிள்ளைதாச்சி இவ்வளவு நேரம் கண்முழிக்ககூடாதுனு அனுப்பிவச்சேன்.. இதுக்கு முன்ன நீ தனி ஆள்.. இப்ப குடும்பஸ்தன். வேலை குடும்பம் இரண்டையும் சமமா நடத்தனும்.. அப்பதான் சந்தோசம் நிரந்தரமா இருக்கும்.. இல்லைனா கவலைதான் மிச்சமாகும்.. நீ எல்லாத்தையும் புரிஞ்சி நடக்குற பிள்ளை.. உனக்கு சொல்லணும்னு இல்ல.. நீ தான் செல்வியை அன்பால உன் பக்கம் இழுத்துகணும்.. இப்படி லேட்டா வந்தா அது எங்க நடக்கிறது.. வா கண்ணா சாப்பிடுவியாம்..” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டபடி மகனை அழைத்தார் அர்ச்சனா..

“இல்ல மா பார்ட்டில சாப்பிட்டேன்.. நீங்க போய் தூங்குங்க காலையில் பார்க்கலாம்.. ” என்று தாயின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவனின் அறைக்கு சென்றான்..

செல்வி காலை குறுக்கி படுத்திருந்தாள்.. அதை ரசித்து பார்த்துவிட்டு சத்தமில்லாமல் குளித்து லுங்கிக்கு மாறி கீழே படுத்துக்கொண்டான் பாரதி..

அடுத்த நாள் காலையில் வழமை போன்று செல்வி கண்விழித்தாள்.. கீழே பாரதி படுத்திருப்பதை பார்த்து. ” தூங்கும் போதும் போலீஸாவே தூங்குறான் கருவாப்பய.. இவன் பக்கம் நம்ம மனசு சாஞ்சிடுமோ!..” என நினைத்துவிட்டு பாரதியை பார்த்திருந்தாள் செல்வி..

எழுந்து தினமும் செய்யும் வேலையை செய்ய ஆரம்பித்தாள்..

பாராதியும் எழுந்து அவனது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வேலைக்கு செல்வதற்கு தயார் ஆகி வந்து டைனிங் டேபிளின் முன் அமர்ந்து அவளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு எழுந்து ” போய்டுவர்றேன் டி கண்ணம்மா சீக்கிரமாக வரபார்க்கிறேன் இன்னைக்கு.. ” என்று கூறிவிட்டு சென்றான்..

எஸ் கே புதிதாக ஆரம்பிக்கும் எஸ் கே பில்டர்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை இன்றும் l நாளையும் காலை பத்துமணிக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.. என்று முகவரியுடன் உடனடி விளம்பரம் கொடுத்திருந்தான்..

தற்போது ரெடியாகி இருந்த தற்காலிக ஆபிஸில் அவனின் பி ஏ மாலீக் அனைத்தையும் ரெடிபண்ணி தயாராக வைத்திருந்தான்..

வேலை தேடும் இளம் சிட்டுகள் இந்த தகவலை பார்த்து அவர்களுக்கு இங்காவது வேலை கிடைத்துவிடாதா? என்கிற ஆர்வத்தோடும் ஏக்கத்தோடும் நேர்முகத்தேர்விற்கு சென்றார்கள்..

நேரம் ஒன்பது மணியை நெருங்கியதும்.. அனைவரும் பாஃர்ம் வாங்கி அவர்களின் தகவல்களை நிரப்பினார்கள்..

 முருகனுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகை இன்று அர்ச்சனா முருகன் கோவிலுக்கு சென்றார்..

பூஜையை பார்த்து விட்டு.. கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றிவந்து.. உள் மண்டபத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்து மகனின் குடும்ப வாழ்வு செழிக்க வேண்டும் என மனதில் முருகனை நினைத்து வணக்கியபடியே இருந்தார்..

அருகில் யாரோ அமர்வது போன்று இருக்கவும் திரும்பி பார்த்தார்..

” என்ன கண்ணா கோவிலுக்கு வந்திருக்கிற?..” என்றார் மகனைப் பார்த்து அர்ச்சனா..

” ஐயோ அச்சும்மா சும்மா ஒரு கேஸ்விசயமா இந்த பக்கம் வந்தேன்.. சரி அம்மா கோவிலுக்குள்ள போய் ரொம்ப நேரமாகிடுச்சே முருகனை ரொம்ப தொல்லை பண்ணி பழனிக்கே பார்ஸல் பண்ணிடுவாங்கன்னு உங்ககிட்ட இருந்து முருகனை காப்பாத்த வந்தேன் அச்சும்மா..” என்றான்..

அர்ச்சனா சிரித்தபடி ” போடா கேடி.. எல்லாம் நீ நல்லா இருக்கணும்னு தானே முருகனை வணங்குறேன்.. அது தப்பில்ல கண்ணா.. சரி எழுந்து வா..” என்று மகனிடம் கூறி அவரும் எழுந்து சன்னதிக்கு முன் நின்று அவனுக்கு திருநீர் வைத்து கைவைத்து ஊதிவிட்டு.. ” சீக்கிரம் நீயும் செல்வியும் சந்தோசமா வாழ ஆரம்பிக்கணும் அதுதான் கண்ணா அம்மாக்கும் சந்தோசம்..” என்றார்..

” ஒகே மா அது நடக்கும்போது நடக்கும்… நீங்க கண்டதையும் போட்டு மனசை குழப்பிக்காதீங்க.. என் செல்ல அச்சும்மா ஹாப்பியா இருந்தால் தான் நானும் ஹாப்பி.. ஸ்மைலி ப்ளீஸ்..” என்றான்..

” உனக்கு ரொம்ப அடாவடி அதிகமாகிடுச்சு கண்ணா.. சரி நீ இப்ப எங்க போகணும்?..” என்றார் அர்ச்சனா..

” வந்த கேஸ் இன்னும் முடியல அச்சும்மா நான் ஸ்டேஷன் போக லேட் ஆகும்.. நீங்க வீட்டுக்கு போங்க..” என்றான்..

” மதிய சாப்பாடு ஸ்டேஷனுக்கு குடுத்தனுப்பவா? கண்ணா..”

” வேணாம் அச்சுமா நான் எப்ப ஸ்டேஷன் போவேன்னு தெரியாது.. சாப்பாடு வீணாப்போயிடும்.. நான் கடையில பார்த்துக்கிறேன்..” என்றான்..

” கடையில தினமும் சாப்பிட்டா உடம்பு கெட்டுடும் கண்ணா..” என்றார் தாயாய் மகனின் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் அர்ச்சனா..

” ஐயோ அச்சும்மா தினமும் காலையிலையும் இரவும் உங்க கையாலதானே சாப்பிடுறேன்.. அது இதை பேலன்ஸ் பண்ணிடும்.. சரி நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க.. நான் போறேன்..” என்றான்..

அவனின் வாயில் அடிபோட்டு ” என்ன பழக்கம் கண்ணா எப்பவும் போயிட்டுவர்றேன் தான் சொல்லணும்..” என்று மகனை திருத்தினார் அர்ச்சனா..

அவனும் நேரம் போவதை உணர்ந்து தாயை வெளியே அழைத்துசென்றான்..

அர்ச்சனா ஆட்டோவில் ஏறி செல்வதை கண்ணில் வலியுடன் பார்த்தான்..

தாய்க்கு ஒரு கார் வாங்கி கொடுக்கணும்.. என்பது அவனது மனதில் பதிந்துவிட்டது.. அதற்கு என்ன பண்ணவேண்டும் என்றும் முடிவெடுத்துவிட்டான்..

அதன் பின் அவனும் அங்கிருந்து சென்றான்..

எஸ் கே பில்டர்ஸில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.. எஸ் கே சரியாக பத்து மணிக்கெல்லாம் வந்துவிட்டான்.. இன்டர்வியூ ஆரம்பித்துவிட்டது.. மாலீக்கின் கையிலிருந்த பார்ம் வரிசைப்படி அழைத்தான்..

அலசி ஆராய்ந்து இன்றைய நேர்முகத்தேர்வில் ஆபீஸ் வேலை மற்றும் பீல்ட் ஆபீசர்-களை தேர்வு செய்தார்கள் மூவர் இருந்து.. இதை உள் அறையில் இருந்து எஸ் கே. கணனி திரையில் பார்வையிட்டான்…

அதன் பின் அவனின் தந்தை சர்ஜித் கபூர்-க்கு அழைத்தான். ” ஹாய் ஹவ் ஆர் யூ? டாட்.. ” என்றான்.

” ஃபைன் மை டியர் சன்.. வேலை எப்படி போகுது?.. சென்னை செட் ஆகிடுச்சா?..” என்றார்..

” எஸ் டாட் வந்த வேலையை ஆரம்பித்துவிட்டேன்..”

” ஓகே குட் பீ கேர் ஃபுல் மை சன்.. ” என்றார் எஸ் கே..

” ஓகே டாட்.. உங்களுக்கு அங்க மேனேஜ் பண்ண கஷ்டம்ன்னா சொல்லுங்க இங்க மாலீக்கை விட்டு நான் அங்க வந்துடுவேன்..”என்றான் எஸ் கே.

” ஒ நோ. நானே பார்ப்பேன்.. நீ போன வேலையை கவனமாக முடிக்கும் முழு முயற்சியில் ஈடுபடனும்.. உன் கவனம் வேறு பக்கம் போகக்கூடாது..” என்று பேசிவிட்டு வைத்தார் எஸ் கே..

அவனின் அடுத்த வேலை திட்டத்தை பற்றி தீவிரமாக சிந்தித்தபடி இருந்தான் எஸ் கே..

நீண்ட நேரமாக சரவணன் பாரதிக்கு அழைத்தபடி இருந்தான்.. பாரதியின் கைபேசிக்கு அழைப்பு போகவில்லை..

நேராக பாரதியின் வீட்டிற்கு வந்தான்..

” வா பா சரவணா.. இரு காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்..” என்றார் அர்ச்சனா..

” அச்சும்மா பாரதி எங்க போயிருக்கானு தெரியுமா?..” என்றான்..

அவரும் ” என்ன சரவணா ஏதாவது பிரச்சினையா? நான் இப்ப அரைமணி நேரம் முன்னதான் கோவில்ல பார்த்து பேசிட்டு வர்றேன்.. ஏதோ கேஸ் விசயமா அங்க வந்ததா கண்ணா சொன்னானே..” என்றார் மகனுக்கு என்னானதோ என்ற தவிப்புடன் அர்ச்சனா..

” பிரச்சினை இல்ல அச்சும்மா.. ஆனா நானும் அவனும் ஒன்னாதான் காலையில ஸ்டேஷன் போனோம்.. அங்க இருந்து வேற கேஸ் விசயா இரண்டு பேரும் போகணும்.. ஆனா இன்னும் அவன் வரக்காணோம்.. அழைப்பும் போகல அதுதான் இங்க வந்தேன்.. வீட்டுக்கு வந்தா நான் வந்ததா சொல்லுங்க.. ” என்று வைதேகி கொடுத்த காஃபியை குடித்துவிட்டு சென்றான் சரவணன்..

நேரம் மதியம் இரண்டு மணி.. பாரதி மிகுந்த சோர்வுடன் வீட்டுக்கு வந்தான்..

ஹாலில் டீவி பார்த்து வைதேகியும் செல்வியும் அதை பற்றி பேசி சிரித்தபடி இருந்தார்கள்..

அவன் வரும் சத்தம் கேட்டுதான் செல்வி நிமிர்ந்து பார்த்தாள்.. அவனின் முகத்தில் களைப்பு சோர்வு அப்பிக்கிடந்தது..

எழுந்த செல்வியை கையை காட்டி இருக்கும் படி கூறிவிட்டு ” எங்க கண்ணம்மா அம்மா அத்தை இரண்டு பேரையும் காணோம்..” என்றான்..

” அச்சும்மாவும் அம்மாவும் படுத்துட்டாங்க..” என்றாள்..

” ஓ நான் குளிச்சிட்டு வர்றேன் சாப்பாடு எடுத்துவை..” என்று கூறிவிட்டு அறைக்கு சென்றான்..

மகனின் குரல் கேட்டு வெளியே வந்தார் அர்ச்சனா…

அப்போதுதான் அவன் அவர்களின் அறைக்கு செல்ல படியில் ஏறிக்கொண்டிருந்தான்..

அவரின் கண்ணிற்கு அந்த காக்கி சட்டையையும் மீறி அவனின் கையில் இரத்தம் வந்ததை பார்த்துவிட்டார்..

” கண்ணா இங்க வா!..”என்றார்..

அவனும் அம்மா பார்த்தால் பயந்துவிடுவார் என தெரிந்துதான் இந்த நேரம் வீட்டிற்கு வந்தான்.. அவனுக்கு தெரியும் இந்த நேரம் அர்ச்சனா ஓய்வாக இருப்பார் என.. தெரிந்தேதான் வந்தான் பாரதி..

தாயிடம் மாட்டிய குழந்தை போன்று விழித்தபடியே வந்தான்..

” என்ன கையில் காயம் காட்டு..” என்றார் அதட்டலோடு..

அவரின் சத்தம் கேட்டதும் டீவி யை ஆஃப் பண்ணிவிட்டு வைதேகியும் செல்வியும் அங்கு வந்தார்கள்..

அர்ச்சனாவின் அதட்டலில் மேல் சட்டையை கழட்டினான்.. வலது தோள்பட்டையில் இருந்து முழங்கை வரை தோல் சிராய்த்து இரத்தம் வந்தபடி இருந்தது..

அதை பார்த்ததும் அர்ச்சனா பயந்து ” என்ன இது? எப்படி இந்த காயம் வந்தது?” என்று கேட்டபடி அவனை அவரின் அறைக்கு அழைத்துசென்று காயத்தை கழுவி பின் முதலுதவி செய்தார்..

” அச்சும்மா இது என்ன பெரிய காயம் சும்மா தோல் கிழிஞ்சி இரத்தம் வருது.. இதுக்கு போய் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்..” என்றான் பாரதி..

” அச்சுமா வை உனக்கு தெரியாதா அண்ணா.. கத்தியால் கை வெட்டினாலே பதட்டமாகிடுவாங்க.. உனக்கு இவ்வளவு இரத்தம் வருது பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா?..” என்றாள் வைதேகி..

” நீ சும்மா இரு… நீயே அச்சும்மாவை தூண்டிவிட்டு என்னை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போக வச்சிடுவ போலயே இந்த சின்ன காயத்துக்கு..” என்று வைதேகியை அதட்டினான் பாரதி..

” ஆமா இல்லையா பின்ன.. செல்விக்கு சென்னையில இதுதான் முதல் கிளினிக்.. சாயந்திரம் ஐந்து மணிக்கு தான் டாக்டர் வரச்சொல்லி இருக்கிறார்.. நீதான் செல்வியை அழைச்சிட்டு போகணும்.. போய் நீயும் கையை ஸ்கேன் பண்ணி பார்க்கணும் கண்ணா.. பாரு செல்வி பயந்துட்டு..” என்று மகனிடம் பேசிவிட்டு..

செல்வியின் பக்கம் திரும்பி ” போம்மா போய் முகம் கழுவி கொஞ்ச நேரம் படுத்து தூங்கு நாலுமணிக்கு நான் எழுப்புறேன்.. ” என்றார்..

அதன் பின் அவரின் அறையில் மகனை கையில் தண்ணீர் படாமல் குளிக்க சொல்லிவிட்டு அவர்களின் அறைக்கு சென்று செல்வியிடம் அவனின் உடையை வாங்கிவந்து அவனை மாற்றவைத்து.. அவரே சாப்பாட்டை பிசைந்து ஊட்டிவிட்டார்.. பாரதியும் நீண்ட காலத்தின் பின் தாயின் கையால் உணவை வாங்கி ரசித்து உண்டான்..

சிறுவயது நியாபகம் வரவும் வைதேகியும் வந்து வாய்திறந்து நின்றாள்..

ராதாவோ விமாலோ இல்லையென்றால் இருவருக்கும் அர்ச்சனா உணவு ஊட்டுவார்.. விமலா இருந்தால் ஊட்டிவிட மாட்டார்.. விமலா அருவருப்படைவார்.. அவர்கள் உண்ணும்போது சண்டையிடுவார்..

இது பாரதி மேல் படிப்பிற்கு ஹாஸ்டல்கு சென்றுவிட்டபின் இது மிகவும் குறைந்து தற்போது இல்லாமலே போய்விட்டது..

இதோ தாயின் கை பட்ட உணவே தனி ருசி.. அதை இருவரும் ரசித்து உண்டார்கள்..

மகனுக்கு வயிறு நிறையும் வரை உணவை ஊட்டிவிட்டுதான் ஆரம்பித்தார் அர்ச்சனா..

” கையில எப்படி காயம் வந்தது?.. சரவணன் வந்துட்டு போனான்.. உன் கைபேசி வேலை செய்யலன்னு சொல்லிட்டு போறான்.. அதுக்குள்ள என்ன நடந்தது? ” என்றார் சற்று அதட்டும் தொனியில்…

” ஐயோ அச்சும்மா வேலைனு வந்தா கயம் வருவது இயல்பு தானே.. ஒரு தறுதலையை துரத்திட்டு போனேன்.. எதிர்ல ஒரு பைக் வந்தது நானும் ஒதுங்கிதான் போனேன் அப்படி இருந்தும் அதுல மோதி கீழ விழுந்துட்டேன்.. ஆனாலும் அவனை பிடிச்சி ஸ்டேஷன்ல ஒப்படைத்துட்டுதான் வர்றேன்.. ஒரு பொண்ணோட தாலியை அறுத்துட்டு ஓடினான்.. நான் அந்த வழியாதான் சரவணனை பார்க்கப்போனேன்.. கூட்டமாக இருக்கவும் என்னன்னு விசாரித்து பார்த்து அவனை துரத்திட்டு போகும்போது தான் இப்படி ஆகிடுச்சு.. போலீஸ்காரன் அம்மாவும் பயந்தாங்கோலி.. பொண்டாட்டியும் பயந்தாங்கோலி.. என்பாடு ரொம்ப கஷ்டம் போலயே முருகா..” என்றான்..

கையை மேல தூக்கும் போது அவனின் முகத்தில் வந்து போன வாலியை பார்த்தார் அர்ச்சனா ” சரி கண்ணா நீ போய் கொஞ்சம் ஓய்வெடு.. நாலுமணிக்கு எழுப்புவேன் இரண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போயிட்டு வரணும்..” என்று கூறிவிட்டு அவரின் அறைக்குள் சென்றார்..

வைதேகி மீண்டும் டீவியில் ஆழ்ந்துபோனாள்..

 அறைக்கு போனதும் செல்வி கட்டிலில் இருந்து நகம் கடித்தபடி இருந்தாள்..

அதை பார்த்ததும் ” என்ன லோட்டஸ் தீவிர யோசனை எந்த கோட்டையை பிடிக்க போறியாம்..” என்றான்..

அதற்கு அவனை பார்த்து முறைத்துவிட்டு ” கையில அடி பட்டதுக்கு பதில் வாயில அடி பட்டிருக்கணும் அப்பதான் இவன் வாய் கொழுப்பு குறையும்..” என்று நினைத்தாள் செல்வி..

அவள் அவனை மனதில் திட்டுகிறாள் என தெரிந்து சிரித்தபடி கீழே படுக்க போனான்..

” ஐயோ வேணாம் நீங்க மேலயே வாங்க கை வலிக்கும்..” என்றாள்..

தற்போது புரிந்துகொண்டான்.. இதை சொல்லத்தான் இந்த தீவிர யோசனை என தெரிந்துகொண்டான்..

” இல்ல பரவாயில்லை நான் கீழ படுத்தே பழகிக்கிறேன்.. அப்பதானே உனக்கு என்மேல காதல் வரும் வரை நான் காத்திருக்கமுடியும்..” என்றான்..

” அது வரும்போது வரும் இப்ப அது பேச்சில்ல நீங்க மேலவந்து தூங்குங்க..” என்றாள் செல்வி..

அவர்களின் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போது பாரதிக்கு கமிஸ்னரிடம் இருந்து உடனடியா வரும் படி அழைப்பு வந்தது..

அவனும் மீண்டும் தயாராகி தாயிடம் கூற வேண்டாம் என செல்வியிடம் கூறிவிட்டு மீண்டும் அவனின் கடமை அழைக்க சென்றுவிட்டான்..

அவனுக்கு அங்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல் அவனும் புறப்பட்டு சென்றான்..

 பாரதிகிருஷ்ணா டி சி பி..

வீணை இசைக்கும்

Advertisement