Advertisement

நினைவுகள்:: 181

 

மையூவின் ஓங்கிய கதறல் கேட்டு அக்கம் பக்கம் இருந்த சனங்கள் வெளியே வர அங்கே கீழே சடலங்களாக இருந்த கணவன் மனைவியை பார்த்து எல்லோருமே உறைந்தனர்.

 

மையூ தன் பெற்றோர்களின் அருகே வந்து எழுப்ப அவர்களின் இறுதி பார்வை மையூவை பார்த்துவிட்டு இவ்வுலகை விட்டு செல்ல அவளோ ஊரே அதிரும்படி கதறினாள்.

 

சில நிமிடம் முன்னேதான் மதிய உணவை மூவருமாக ஒண்ணே அமர்ந்து சாப்பிட அன்று அசைவம் வேறு. ராஜேந்திரன் மகளுக்கு அதை பார்த்து பார்த்து சாப்பிட கொடுக்க சங்கரி இருவரையும் முறைத்தார்.

 

அம்மா! அப்பா இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கறதால என்னை அதிசயமா திட்டாம என்கிட்ட பேசறாரு… அதை பார்த்து ஏன் பொறாமைப்படற?”

 

வளர்ந்த பொண்ணுக்கு இந்த மீனுல இருக்க முள்ளையெடுத்து சாப்பிட தெரியாதா? ஏதோ போனா போகட்டும்னு எடுத்து வைச்சா உங்க அம்மாவையே பேசுவியா?” என்று ராஜேந்திரன் அதட்ட சங்கரியோ சிரித்தார்.

 

அப்பவே நினைச்சேன் என்னடா அதிசயம் இன்னைக்கு மழை வரப்போகுதுன்னு… அதுக்குள்ள சங்கரி காத்து பலமா வீசி புயலாகிடுச்சு…என்று மையூ முணுமுணுக்க,

 

சாப்பிடாம அங்க என்ன முணுமுணுப்பு?” என்ற குரலில்,

 

இதோ சாப்பிட்டேன்ப்பா…என்று தாயை முறைத்தவாறே சாப்பிட்டாள் மையூ.

 

எல்லாமே சில நிமிடம் முன்புதான் ஆனால் இந்த நிமிடம் அவர்களின் பெற்றோர் நிலை கண்டு அதை நம்ப இயலாமல் கதறியவளைப் பார்த்து எல்லோருக்கும் கண்ணீர் பணித்தது.

 

சுற்றி என்ன நடக்கிறது என்ற சுயநிலையில் அவள் இல்லாமல் போக மக்கள் எல்லோரின் பார்வையும் குமார் முருகன் மேல பாய உடனே சுதாரித்த இருவரும்,

 

ஐயோ! நானே என் பங்காளியையும் அண்ணியையும் கொன்னுட்டேனே… இன்னைக்கு அந்த எமன் எங்க ரூபத்தில்தானா இவங்களுக்கு வரணும்… இந்த பாவம் காலம் முழுக்க என்னை சுத்தும் போலவே… என்று குமார் அழ ஆரம்பிக்க,

 

முருகனோ, “அண்ணா அண்ணி என்னை மன்னிச்சுடுங்க… போயும் போயும் இந்த நிலத்துக்கு ஆசைப்பட்டு இப்படி உங்களை கொன்னுட்டோமே… என்று அவன் பங்கிற்கு அடித்துக் கொண்டு அழுதான்.

 

விஷயம் காட்டுதீ போல பரவி ஊரே அங்கே குழுமியிருக்க அதில் பெரியவர் ஒருவர், “ஏன்ப்பா என்ன நடந்துச்சு?” என்றும், இன்னொருத்தர் ஏன்ப்பா போலீசுக்கு சொல்லிட்டீங்களா?” என்று கேட்டதும் குமாரும் முருகனும் மறுபடியும் அழுதவாறே அடுத்ததை யோசித்தனர்.

 

குமார் அழுதவாறே, “எப்பவும் போல எங்களுக்குள்ள சண்டைதான்… ஆனா அதுக்கு முன்னாடியே இவங்க ரெண்டு பேருக்கும் இதால மனஸ்தாபம் போல…

 

அண்ணா அண்ணிகிட்ட அமைதியா இருக்க சொல்லி கத்திட்டே இருந்தாரு… ஆனா அண்ணி கேட்கல… அப்பதான்… அப்ப… என்று அவன் இழுக்க,

 

அண்ணா அண்ணியை நோக்கி அருவா வீசவும் ஏற்கனவே மரம் வெட்டிக்கிட்டு இருந்த அண்ணி கையிலும் அருவா இருக்க அண்ணாகிட்ட இருந்து தப்பிக்க அண்ணியும் கையை ஓங்கினாங்கஆனா அவங்க ஓங்கின கையில இருந்த அருவாவை அப்ப அவங்க கவனிக்கல…

 

அதனால ரெண்டு பேரோட அருவாவும் எதிர்பார்க்காம ஒருத்தரை ஒருத்தர் ஆழமா சீவிடுச்சு… என்று முருகன் அழுதவாறே சொல்லவும் ஊர் மக்கள் நம்பியும் நம்பாமலும் இருந்தனர்.   

 

எல்லாம் எங்களால்தான் நாங்க சண்டை போட்டதாலதான் அவங்களுக்குள்ள சண்டை… அதான் இப்படி ஆகிடுச்சு… என்று குமாரும் முருகனும் மாற்றி மாற்றி புலம்ப மையூவோ இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.

 

போலீஸ் வந்து களத்தில் இறங்க விசாரணை தீவிரமாகியது… இரண்டு நாள் முன்பு ராஜேந்திரன் மனைவியிடம் சும்மா வம்பிழுக்க அருவாளை காட்டி பேசியதும் இன்று வெட்டுப்பட்ட அருவாளில் கணவன் மனைவியின் கைத்தடமுமே அவர்களுக்கு எதிராகிப் போனது.

 

எதிராக்கியது குமார் மற்றும் முருகனின் பணபலம்… அன்று ஊர் மக்கள் கேள்வி கேட்கும் போது ஊர் ஆள் ஒருத்தர், ஆமாப்பா! நான் கூட ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்தேன்… ராஜேந்திரன் கையில அரிவாளை வைச்சுக்குட்டு இந்த பொண்ணுகிட்ட ஏதோ கோபமா பேசிட்டு இருந்தான்… இப்ப இப்படி நடந்துடுச்சே… முன்கோபம் பொல்லாததுப்பா… என்று சொல்லவும் கொலையாளிகள் அதையே பிடித்துக் கொண்டனர்.

 

சகோதரர்கள் தங்கள் குற்றத்தை மறைக்க அவர்களை வெட்டிய அரிவாளை நேரம் பார்த்து அழித்தது எல்லாம் தம்பதியருக்கே எதிரானது.

 

கடைசியில் நிலத் தகராறில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர் என்று தீர்ப்பாக அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அப்புறம் ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

 

அதுவரை மருத்துவமனையின் மூலையில் அந்த பங்காளி மனைவியின் பாதுகாப்பில் இருந்தாள் பதினைந்து வயது மைவிழிசெல்வி.

 

ஒரே நாளில் தான் அனாதையான சம்பவமும் பெற்றோரின் இழப்பு கொடுத்த வலியால், அடுத்து என்ன? சுற்றி என்ன நடக்கிறது? என்று யோசிக்கும் நிலையில் அவள் சிறிதும் இல்லை.

 

தாங்கள் செய்த பாவத்திற்கு புண்ணியமாக சொல்லி  குமாரும் முருகனுமே அவர்களின் இறுதி சடங்கை முன்னின்று நடத்தி முடித்தனர்.

 

அழுதழுது அவளின் கண்ணில் நீர் எல்லாம் வற்றி போய் எங்கோ வெறித்தவாறு தன் வீட்டின் கூடத்தில் பெற்றோரின் புகைப்படத்தின் முன்பு விழுந்து கிடந்தாள் மைவிழிசெல்வி.

 

பதினாறு நாள் காரியம் என்று ஊரில் அனைவரும் அங்கு வந்து போக இருக்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லி சென்றனர் கூடவே மையூவின் மீதான பரிதாப பார்வையும்…

 

தன் பெற்றோரின் மரணத்தை எல்லோரும் விமர்சிக்கும் போதுதான்  அவளுக்கு சந்தேகம் எழுந்தது எப்படி அதற்கான வாய்ப்பு என்று?

 

அன்றுதான் அவள் சுயநினைவில் இல்லை இப்போது யோசிக்கும் போது தன் பெற்றோரின் மரணத்திற்கு முருகனும் குமாரும் காரணம் என்று அறிந்து கொண்டவள் அதை வெளிப்படுத்தவும் செய்தாள்.

 

ஏன்டா? இப்படி பண்ணீங்க? என் அம்மா அப்பாவை ஏன்டா கொன்னீங்க?” என்று ஆவேசமாக கேட்டவளைப் பார்த்து அதிர்ந்தாலும் உடனே சுதாரித்து,

 

ஆமாமா செல்வி! எங்க முன்கோபத்தாலதான் இப்படி நடந்துபோச்சு… நீ இப்படி நிற்கதியா நிற்க நாங்கதான் காரணம்… இந்த பாவத்தை எங்க போய் கழுவோமோ… உன்னை நல்லபடியா வளர்த்து அந்த பாவத்தை சரி செய்துடறோம் செல்வி… இனி உனக்கு நாங்க இருக்கோம்…என்று குமாரும் முருகனும் அவளுக்கு இணையாக அழுவது போல் பேச யாருக்கும் எந்த குறையும் தெரியவில்லை.

 

பெற்றோரை இழந்த வருத்தத்தில் மையூ பேசுவதாகவே எல்லோரும் நினைக்க மையூவின் கோபமோ கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக் கொண்டே இருந்தது.

அடுத்த பதினாறாம் நாளே தான் கேட்ட செய்தியின் வீரியத்தில் இத்தனை நாள் கவலை என்ற போர்வைக்குள் இருந்த அவளின் கோவம் பெரும் சூறாவளியாய் வீறிட்டு எழுந்தது.  

 

ஆம்! பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும் அவள் வீட்டிற்கு வருகை ஊர் மக்கள் வருகை நின்று போயிருந்தது. முருகனும் குமாரும் மையூவை அவர்கள் வீட்டிற்கு அழைக்க வரமுடியாது என்று மறுத்தவள் சிறு பிள்ளைகளோடு உள்ளே படுத்துக் கொள்ள முருகன் வெளியே படுத்திருந்தான்.

 

இரவு சரியாக உறக்கம் இல்லாமல் பெற்றோரின் நினைவில் புரண்டுக் கொண்டிருந்த மையூவிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க எழுந்து கதவருகே வந்தவள் அவர்களின் பேச்சை உள்வாங்க,

 

முருகனும் குமாரும் அன்றைய அவர்களின் செயலில் வாக்குவாதத்தில் இருக்க அதை கேட்ட மையூவோ திகைத்து நின்றாள்.

 

ஏன்டா இப்படி பணம் பணம்னு இருக்க? இந்த முறை எப்பவும் போல வெறும் சண்டையோட நின்னிருந்தா பரவாயில்ல… நம்ம கையால ரெண்டு உயிர் போயிருக்கு… ஏதோ அந்த நேரம் யார் கண்ணுலையும் மாட்டாததால தப்பிச்சோம்… இல்லைன்னா இந்நேரம் ஜெயில்ல கம்பி எண்ணிட்டிருப்போம்… அவங்களை கொன்னுட்டோம்னு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம இப்பவும் வந்து அவங்க நிலத்து பத்திரத்தை தேடணும்னு சொல்ற?” என்றான் முருகன் காட்டமாக.

 

இங்க பாரு சந்தர்ப்பம் கிடைக்கற வரைக்கும்தான் எல்லாரும் நல்லவங்க… இவ்வளவு பேசறவன் நீதான் கொலை பண்ணேன்னு போய் சரணடைய வேண்டியதுதானே… அதைவிட்டுட்டு வியாக்கினம் பேசிட்டு இருக்க?

இதை வைச்சு அந்த பொண்ணை பாதுகாக்கறன்னு அப்படியே மொத்த இடத்தையும் எடுத்துக்கலாம்னு நினைக்கறியா? அது ஒன்னும் தப்பில்ல என்னையும் அதுல கூட்டு சேர்த்துக்கோ கொஞ்சம் நாள் போனதும் ரெண்டு பேருக்கும் எழுதி வாங்கிக்கலாம்…

 

இல்ல இப்படித்தான் நியாயம் பேசிட்டு ஏதாவது ஏடாகூடம் பண்ணுவேன்னு சொன்னா, நீதான் அவங்களை கொலை பண்ணன்னு போலீஸ்ல சொல்லிடுவேன்… என்று குமார் சொல்ல அதற்கு முருகன் ஏதோ சொல்ல மையூவிற்கோ கோபம் பெருகியது.

 

இப்போது அவர்களின் பேச்சில் முழு  உண்மையை அறிந்தவள் தன் பெற்றோர்களை கொன்றுவிட்டு மறுபடியும் அந்த நிலத்திற்கு அவர்கள் பங்குபோடுவதை பற்றி பேசவும் அவளுள் வெறியே எழுந்தது.

 

அதன் செயலால் சுற்றும் முற்றும் தேடி கையில் அகப்பட்ட சிறு கத்தியை கொண்டு ஆவேசமாக வெளியே வந்தாள். அதே வெறியில் அவளுக்கு வாகா கையை நீட்டி பேசிக் கொண்டிருந்த முருகனின் கையில் ஓங்கி ஒன்று போட்டாள்.

 

அமைதியாக வந்து அவள் செய்த செயலில் ஆண்கள் இருவரும் அதிர்ந்து அவளை அதட்டி அருகே வர அவளோ சற்றும் பதறாமல்,

 

எங்க அப்பா அம்மாவை கொன்ன  உங்களை கொல்லாமல் விடமாட்டேன்… என்று அவளும் முன்னேற,

 

முருகனுக்கு கையில் விழுந்த ஆழமான காயத்தில் ரத்தம் வழிய விண்ணென்று உடல் முழுவதும் பரவிய வலியில் அவன் அதனை கவனித்தான்.

குமாரோ சுற்றும் முற்றும் பார்த்தவாறு  மையூவின் கையை மடக்கி பிடித்து அவளை ஓங்கி கன்னத்தில் அறைய அவள் ஒரு ஓரமும் கத்தி ஓரம் சென்று விழுந்தது.

 

ஏற்கனவே சோர்வாக இருந்த மையூ இதில் இன்னும் மயக்க நிலைக்கு செல்ல அப்படியும் எழுந்து வர முயற்சித்தவள் குமார் மறுபடியும் கொடுத்த அடியில் மயங்கிவிட்டாள்.

 

ஆனால் அது சில நிமிடமே என்ற நிலையில் அவள் விழிக்கும் போது ஊர் மக்கள் அவள் அருகே கூட்டமாக நின்றிருக்க, பக்கத்தில் முருகன் உடலில் அங்கங்கே குத்தப்பட்டு இறந்து போயிருக்கவும் எங்கோ சென்று விழுந்திருந்த கத்தி மையூவின் கையில் இருந்தது.

Advertisement