Advertisement

“என்னடா, விசாரணை எல்லாம் பலமாருக்கு…”

“ப்ச்… தெரிஞ்சுக்க வேண்டி கேட்டேன், சொல்ல விருப்பம் இல்லன்னா விடு… பாரதி கோபப்படாம உன்னோட பேசினதுல எனக்கும் சந்தோஷம்…”

“ம்ம்… நானும் ஹாப்பி, வீட்டுக்கு கிளம்பலாமா…?” ரிஷி கேட்கவும் மூவரும் அவரவர் வண்டியில் கிளம்பினர்.

“ரதி என் பிரண்ட்ஷிப்க்கு ஒத்துகிட்டதுக்கே இன்னைக்கு குடிக்கத் தோணலை, அவ என்னை லவ்வுக்கு ஒத்துகிட்டு  என் மனைவியா வந்துட்டா, குடியைப் பத்தி யோசிக்கவே மாட்டேன் போலருக்கே…” தனது அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி யோசித்துக் கொண்டிருந்தான் ரிஷி.

“ரதிக்கு என் உடல் குறை பெருசு இல்லேன்னா, அப்புறம் என் காதலை மறுக்க என்ன காரணமா இருக்கும்…?”

“ஒருவேளை, நான் வேலை வெட்டிக்குப் போகாம தண்ணி அடிச்சிட்டு சுத்துறதால பிடிக்கலன்னு சொல்லுறாளா…? அவளுக்கு கால் பண்ணிப் பார்ப்போமா…?” யோசித்து சுவரில் கடிகாரத்தைப் பார்க்க நேரம் ஒன்பதை நெருங்கி இருந்தது.

அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான் ரிஷி. அவன் அழைப்பைக் கண்டதும் தயக்கமாய் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி.

“நான் செய்வது சரியா…? என்னதான் காதலிக்கவில்லை, நட்பாய் இருக்கலாம் என சொல்லிக் கொண்டாலும் அவனைக் கண்டாலே உருகும் மனது அப்படியே நின்று விடுமா…? அம்மா, அக்காவுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் எத்தனையோ இருக்கும்போது இந்த நட்பும், காதலும் சுமையாய் மாறிடுமோ…? வான்மதி சொல்லியது போல் நான் ரிஷியுடன் பேசாமல் இருந்திருக்க வேண்டுமோ…?” யோசனையுடன் கையிலிருந்த செல்லைப் பார்த்துக் கொண்டிருக்க அது அடித்து ஓய்ந்து மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது.

“எடுக்காமல் விட மாட்டானே…” இதழ்கள் செல்லமாய் சலித்துக் கொண்டாலும் மனது அழைப்பை எடுக்க கெஞ்ச, தயக்கத்துடனே எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

“ஹ..ஹலோ…!” மென்மையாய் ஒலித்த அவள் குரலுக்கு உற்சாகமாய் எதிர்ப்புறம் பதில் வந்தது.

“ஹல்லோ ரதி… நல்லபடியா ஹாஸ்டல் போயாச்சா, சாப்டியா, அங்கே புட் எல்லாம் பரவால்லியா…? இல்லன்னா சொல்லு, நல்ல மெஸ் பார்த்து ஏற்பாடு பண்ணிக்கலாம்… உன்னை டிஸ்டர்ப் பண்ணலியே…” அக்கறையான குரலில் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போனான்.

“இருங்க, இருங்க… எல்லாம் ஓகேதான், முதல்ல எதுக்கு கால் பண்ணீங்கன்னு சொல்லுங்க…?”

“அ..துவந்து… நானும் ரொம்ப நேரமா யோசிச்சுப் பார்த்தேன்…”

“என்ன யோசிச்சுப் பார்த்தீங்க…?”

“உனக்கு ஏன் என்னைப் பிடிக்கலன்னு தான்…”

“இங்க பாருங்க ரிஷி, எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்கணும்னு அவசியம் இல்லை, உங்களைப் பிடிக்கலன்னு நான் சொல்லவும் இல்லை, காதலிக்கலைன்னு தான் சொன்னேன்… நான்தான் உங்க நட்பை ஏத்துகிட்டனே, பிறகு எதுக்கு இந்தக் கேள்வி…?”

“அதான், ஏன் என் காதலை ஏத்துக்கலன்னு யோசிச்சேன்…”

அவள் பதில் சொல்லாமல் இருக்க அவனே கேட்டான்.

“ஒருவேளை, என்னைக் குடிகாரன்னு நினைச்சுதான் வேண்டாம்னு சொல்லறியோ…?” அவன் சொல்லவும் திகைத்து யோசித்தவள் அதையே பிடித்துக் கொண்டாள்.

“நான் எதையும் நினைச்சு வேண்டாம்னு சொல்லல, ஆனா குடிச்சிட்டு போதைல என்கிட்ட லவ் யூன்னு சொன்ன போல வேற பொண்ணுங்க கிட்ட சொல்லி இருக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்… எனக்கு குடிக்கிறவங்களைக் கண்டாலே அலர்ஜி, உங்களுக்கு அதில்லாம இருக்க முடியாது… நமக்கு எப்படி ஒத்து வரும்…?”

“ஹலோ, ஹலோ… என்ன ரதி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட, நான் ஒண்ணும் பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் லவ் யூன்னு சொல்லிட்டுத் திரியறவன் கிடையாது… அன்னைக்கு ரெஸ்டாரண்டுல நீ பேசறதைக் கேட்டு நீதான்னு தெரிஞ்சுதான் ஐ லவ் யூ சொன்னேன்… ப்ளீஸ், இந்த அப்பாவியைக் கொஞ்சம் கன்சிடர் பண்ணக் கூடாதா…?”

“அடப்பாவி… நீங்க அப்பாவியா…?”

“பின்ன, உன் காதல் கருணைக்காக கெஞ்சிட்டு இருக்கற நான் அப்பாவி இல்லியா…?” பாவமாய் கேட்டான்.

“ப்ச்… இதுக்குதான் நாம பேசவே வேண்டாம்னு சொன்னேன், பிரண்ட்சா இருக்கலாம்னு சொல்லிட்டு மறுபடி காதல்னு தொடங்கிட்டிங்க… உங்களைப் போல நான் ப்ரீ இல்லை, நாளைக்கு ஆபீஸ் போகணும், தூங்கப் போறேன்… வச்சிடறேன்…”

“ஹூம், மேடம் என்னை வேலை வெட்டி இல்லாத வெட்டிப் பையன்னு சொல்ல வர்றிங்க…”

“ப்ச்… நான் அப்படி எல்லாம் சொல்லல, சொன்னாலும் தப்பு ஒண்ணும் இல்லையே…”

“ஹூம், சரிதான்…”

“சரி, நான் வச்சிடட்டுமா…?”

“இரு, இரு… ஒரே நிமிஷம், நீ எந்த ஆபீஸ்னு சொல்லயே…?”

“எதுக்கு அதெல்லாம் தெரிஞ்சுட்டு… அங்க வந்து என்னை டிஸ்டர்ப் பண்ணவா…? ஒண்ணும் தெரிஞ்சுக்க வேண்டாம்…”

“என்ன ரதி, என்னை இவ்ளோ கேவலமா நினைக்கற… நான் அப்படிலாம் பண்ண மாட்டேன் மா…”

“ம்ம்… சரி, எனக்கு தூக்கம் வருது… குட் நைட்…” சொன்னவள் அழைப்பைத் துண்டிக்க போனை முறைத்தான் ரிஷி.

“என் செல்ல ராட்சஸி… ரொம்ப தான் பண்ணுற, உன் ஆபீஸ் எதுன்னு கண்டு பிடிக்கிறதா பெரிய விஷயம்…” சொல்லிக் கொண்டவன், “நம்மளை வெட்டிப் பையன்னு சொல்லிட்டா… இவ காதலுக்காக நாமளும் ஆபீஸ் எல்லாம் போக வேண்டி வரும் போலருக்கே…” யோசித்தான். ரிஷி இதுவரை இதைப் பற்றி எல்லாம் யோசித்ததில்லை. அவன் வாயை அடைக்க வேண்டி பாரதி சொன்னது அவளுக்காய் யோசிக்க வைத்தது.

வாசலில் கார் ஹாரன் கேட்க, “அண்ணா வந்துட்டார் போல, குளிச்சிட்டு சாப்பிட வந்ததும் பேசணும்…” என நினைத்தவன் சற்று அவகாசம் கொடுத்து டைனிங் ஹாலுக்கு வந்தான்.

ஹரிக்கு கங்கா உணவு பரிமாற, தம்பியைக் கண்டவன் புருவத்தைத் தூக்கி ஆச்சர்யமாய் கேட்டான்.

“என்னடா ரிஷி, அதிசயமா இந்த நேரத்துல வீட்டுல இருக்க… சாப்பிட்டியா…?”

“ம்ம்… ஆச்சு அண்ணே, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்…!”

“பார்றா… அண்ணிதானே உன் தோஸ்து, எங்கிட்ட எதுவும் கேக்க மாட்டியே…?”

“ப்ச்… குழந்தை என்னவோ சொல்ல வர்றான்… என்னன்னு கேக்காம கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க, நீ சொல்லுடா ரிஷி…” கங்கா சொன்னாள்.

“அது வந்துண்ணா, நான் படிச்சு முடிச்சதில் இருந்து ஆபீஸுக்கு வா… ஏதாச்சும் பொறுப்பெடுத்துக்கோன்னு நீங்க நிறைய முறை சொல்லியிருக்கீங்க, நான் அதை செய்யலன்னு கோபப்படவும் செய்திருக்கீங்க…!”

“ஆமா, நீதான் என் பேச்சை கேட்கவே இல்லியே… ஒருவேள, நீ சரின்னு நினைச்சாலும் இவ உன்னை செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காளே…!”

“சாரிண்ணே, உங்க பேச்சைக் கேட்காம இருந்தது தப்புதான்… நம்ம கம்பெனில எனக்கும் சில பொறுப்புகளைக் கொடுங்க, நானும் இனி வொர்க் பண்ணறேன்…”

ஹரி தன் கைகளைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.

“கங்கா… இது கனவில்லையே, என் தம்பியா சொல்லுறான்… நம்ப முடியலியே…? நீயே கேளு அவனை…”

கங்காவின் முகம் சட்டென்று மாறிவிட, அதிலிருந்த சிரிப்பு அணைந்து போய் யோசனையுடன் நின்றாள்.

“என்ன கங்கா, உன்னாலயும் இவன் சொன்னதை நம்ப முடியலையா…?”

“சேச்சே, நான் நம்பறேங்க… நம்ம குழந்தையை நான் நம்பாம யாரு நம்புவா… அவனுக்குன்னு ஒரு நாள் பொறுப்பு வரும்னு நம்பி தான் நான் காத்திட்டு இருந்தேன், நாளைக்கே கம்பெனிக்கு வந்து பொறுப்புகளை ஏத்துகிட்டும்… இதைவிட பெரிய சந்தோஷம் நமக்கு என்ன இருக்கு…?”

“தேங்க்ஸ் அண்ணி..! நீங்கதான் எப்பவும் என்னை சரியா புரிஞ்சுக்கறிங்க…” என்றவனை நோக்கி சிரித்தாள்.

“எப்படியோ இப்பவாச்சும் நல்ல முடிவுக்கு வந்தியே, ரொம்ப சந்தோஷம்டா ரிஷி…” என்ற ஹரி உறங்க செல்ல ரிஷியும் சந்தோஷமாய் தனது அறைக்கு சென்றான். சிறிதுநேரம் கழித்து கங்கா பால் கிளாசுடன் ரிஷியின் அறைக்கு வந்தாள்.

“ரிஷி…! இந்தா, பாலைக் குடி…! என்ன ஆச்சு உனக்கு, திடீர்னு ரொம்ப பொறுப்பு வந்துட்ட போல பேசற…” சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“சாரி அண்ணி, இவ்ளோ நாளா பொறுப்பில்லாம உங்களை எல்லாம் வருத்தப்பட வச்சிட்டேன்… அதான், இனியாச்சும் பொறுப்பா ஆபீஸ் வரலாம் நினைக்கிறேன்…”

“ம்ம்… டேய் ரிஷி, நிஜமாலுமே பொறுப்பு காரணமா தான் ஆபீஸ் வரியா, எனக்கென்னவோ ஏதோ பொண்ணுகிட்ட லவ்ல கமிட் ஆகி தான் இந்த முடிவுன்னு தோணுது…”

“ஹாஹா, கிரேட் அண்ணி… உங்ககிட்ட என் மனசை மறைக்க முடியுமா…? இப்போதைக்கு வெயிட்டிங்ல இருக்கேன், கன்பர்ம் ஆனதும் சொல்லறேன்…” என்றான்.

“யாரு அந்தப் பொண்ணு…? அண்ணிகிட்ட சொல்ல மாட்டியா…?”

“சேச்சே, நான் நல்லாருக்கணும்னு உங்களை விட யாரு அண்ணி நினைக்கப் போறாங்க, இவ்ளோநாள் என் வருத்தத்தைப் புரிஞ்சுகிட்டு நான் பண்ணுற தப்பைக் கூட பெருசா எடுத்துக்காம ஏத்துகிட்டது நீங்க… என் அம்மாவா இருக்கிற உங்ககிட்ட முதல்ல சொல்லிட்டு தான் அண்ணனுக்கே சொல்லுவேன்…” கள்ளம் இல்லாமல் நெகிழ்ச்சியுடன் சொன்னான் ரிஷி…

“ம்ம்… சரி தூங்கு, குட் நைட்…!” என்றதும் அவன் படுக்கைக்கு செல்ல கதவை சாத்திவிட்டு வெளியே வந்த கங்காவின் முகத்தில் கோபத்தின் நிறக்கூட்டு.

எத்தனை காலம் தான்

நேசமென்னும் முகமூடி

நிறமிழக்காமல் இருக்கும்…

பொய்யென்னும் சாயம்

வெளுக்கத் தொடங்கினால்

உண்மையான நிறம்

தெரியத்தானே செய்யும்…

Advertisement