Advertisement

அத்தியாயம் – 12

ரிஷி சொன்னதை வியப்புடன் கேட்டிருந்த பாரதியின் மனதுக்குள் சில காட்சிகள் வந்து போக அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் கலைத்தது.

“என்ன ரதி, ப்ரீஸ் ஆகிட்ட… ஏதாவது சொல்லு, அன்னைக்கு உடல் ஊனமுற்றோர் தினத்துல நீ என்னைப் பார்த்தியான்னு தெரியல… ஆனா, நீ பேசினதைக் கேட்டு நான் உன்னைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன், முடியல…”

அவள் அமைதியாகவே இருக்க அவளது கையிலிருந்த காப்பிக் கோப்பையில், ரிஷி தனது காப்பிக் கோப்பையால் மெல்லத் தட்ட நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன ரதிமா, எதுவும் சொல்லாம சைலன்ட் ஆகிட்ட…” என்றவனை நோக்கி மென்மையாய் பேசத் தொடங்கினாள்.

“ரிஷி… உங்களுக்கு நான் பேசினது பிடிச்சிருக்கலாம், அதனால என்னைப் பிடிச்சிருக்கலாம், அதுக்காக எனக்கும் உங்களைப் பிடிக்கணும்னு எந்த நிர்பந்தமும் இல்லியே…”

“நிச்சயமா நிர்பந்தம் கிடையாது…”

“என்னால இப்ப காதல், கல்யாணம்னு எதையும் யோசிக்க முடியாது, எனக்கான கடமைகள் நிறைய இருக்கு…”

“நல்ல விஷயம் தானே, என்ன கடமைகள்னு சொல்லு… நானும் சேர்ந்து முடிக்கறேன்…”

“நீங்க யாரு, என்னன்னு எல்லாம் எனக்குத் தெரியாது… எந்த நம்பிக்கைல இப்படி என்கிட்ட பேசறீங்கன்னும் புரியல…”

“என் பயோடேட்டா வேணும்னா தரட்டுமா…? உனக்கும் என்னைப் பிடிச்சிருக்குங்கற நம்பிக்கைல தான் பேசறேன்…”

“ப்ச்… இப்படி விளையாட்டுத்தனமா பேசினா எப்படி…? நான் மிடில் கிளாஸ்க்கும் கீழ உள்ள குடும்பத்தை சேர்ந்த பொண்ணு… இன்னைக்கு தான் ஒரு ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கேன்… என்னால உங்களைப் போல விளையாட்டா இருக்க முடியாது, தயவுசெய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாம விலகி நில்லுங்க…”

“லுக் ரதி… ஒருமுறை காதல்ங்கற பேர்ல தப்பான பொண்ணைத் தேர்ந்தெடுத்து சூடு பட்டவன் நான்… மறுபடி காதல்ல விளையாடுவேன்னு நினைச்சியா…? நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுல இருந்து வந்தது, அதை உன்னால உடனே ஏத்துக்க முடியாம இருக்கலாம்… ஆனா, என் காதலை விளையாட்டா மட்டும் நினைச்சுடாத… சின்ன வயசுலயே அப்பா, அம்மாவை இழந்து அண்ணன், அண்ணி ஆதரவுல வளர்ந்தவன் நான்… பணத்துக்குக் குறை இல்லன்னாலும் அன்புக்கான தேடல் மட்டும் எப்பவும் போகல, அது உன்கிட்ட தான் நிறைவு பெறும்னு தோணுது… நீ என்னைப் புரிஞ்சுக்கற வரை காத்திருப்பேன்…”

நிதானமாய் அழுத்தமான குரலில் தன் மனதை சொல்லி முடித்தவன் எழுந்து காலை சாய்த்தபடி வெளியே நடந்தான். அவன் சொன்ன வார்த்தைகள் காதுக்குள்ளேயே ஒலிக்க பாரதி வேதனையுடன் அவன் செல்வதைப் பார்த்திருக்க, சட்டென்று திரும்பிய ரிஷியை அவள் வியப்புடன் பார்க்க புன்னகையுடன் அவளிடம் மீண்டும் வந்தான்.

“ரதி… உனக்கு என்னைப் பிடிக்கும்போது பிடிக்கட்டும்,  அதுவரைக்கும் நாம ஏன் நல்ல நண்பர்களா இருக்கக் கூடாது…?” கன்னத்தில் குழி விழ புன்னகையுடன் அவள் முன்னே கை நீட்டியவனை வியப்புடன் பார்க்க, “ப்ளீஸ் ரதி…” என்றவனின் கெஞ்சல் குரல் அவளை ஏதோ செய்ய, மறுத்து பேசாமல் தயக்கத்துடன் பார்த்தாள்.

“இந்த மௌனத்தை நான் சம்மதமா எடுத்துக்கலாம் தானே…?” கண்ணில் கெஞ்சியவனை அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தாள் பாரதி.

“ஹேய்… இப்போதைக்கு இது போதும், நம்ம பிரண்ட்ஷிப்க்கு அடையாளமா இன்னைக்கு உன் காபிக்கு நான்தான் பே பண்ணுவேன்…” என்றான் ரிஷி உற்சாகத்துடன்.

“ம்ம்…” அவள் சம்மதம் சொல்ல, குழந்தை போல் சிரித்தான். இருவருக்குமான காபிக்கு ரிஷி பணத்தைக் கொடுக்க வெளியே வந்தனர்.

“ரதி, பேஸிக்கா நான் நட்பை ரொம்ப மதிக்கிறவன்… என்னை நேசிக்கிறவங்களுக்கு நல்ல நண்பன் தெரியுமா, உனக்கும் நல்ல நண்பனா இருப்பேன்…” அவன் பெருமையாய் சொல்ல,

“ஓ பார்க்கலாம்… சரி இன்னைக்கு எங்க, உங்க பாடி கார்ட்ஸ் யாரையும் காணோம்…” என்றாள் அவளும் இயல்பாக.

“பாடி கார்ட்ஸ்…?” யோசித்தவன் கன்னத்தில் குழி விழ மீண்டும் சிரித்தான்.

“ஹாஹா… நம்ம பசங்களைக் கேக்கறியா…?”

“நம்ம பசங்க இல்ல, உங்க பிரண்ட்சைக் கேட்டேன்…”

“ஹாஹா… வாவ், உனக்கு கூட நல்ல சென்ஸ் ஆப் ஹ்யூமர் இருக்கும் போல… ஆக்சுவலா ஒரு பிரண்டு பர்த்டே பார்ட்டிக்கு கிப்ட் வாங்கனும்னு நாங்க எல்லாரும் ஒண்ணா தான் வந்தோம், அவங்க ரெண்டு பேரும் ஷாப்புக்குப் போனாங்க, நான் கார்ல இருந்தேன்… சரி, அந்த கேப்புல ஒரு காபி குடிக்கலாம்னு இங்க வந்தேன், எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நீ உக்கார்ந்திருக்க…”

“ஓ… ஓகே டைம் ஆச்சு, நான் கிளம்பறேன்…”

“ரதி… இங்க எங்க தங்கிருக்க, இருட்டாகிடுச்சு… வாயேன் நானே உன்னை டிராப் பண்ணிடறேன்…”

“இ..இல்ல வேணாம், ஹாஸ்டல்க்கு இங்கிருந்து ரெண்டு ஸ்டாப் தான்… நான் பார்த்துக்கறேன்…”

“ஓ… எந்த ஹாஸ்டல்…?” ரிஷி கேட்க முறைத்தாள் பாரதி.

“என்னமா, இதுக்கெல்லாம் முறைக்கற… நண்பன்கிட்ட இதைக் கூட சொல்லாம எப்படி…?”

“சொன்ன வரைக்கும் போதும், இப்ப நான் கிளம்பறேன்…”

“ஓகே, அப்புறம்… நான் கால் பண்ணா போன் எடுப்ப தான…?”

“ம்ம்…” என்றவள் பேருந்து நிறுத்தம் நோக்கி புன்னகையுடன் நடக்கத் தொடங்கினாள். இதழ்களும், இமைகளும் ஒரு சேரப் புன்னகைக்க அவளையே பார்த்து நின்றான் ரிஷி. சிறிது தூரம் நடந்த பாரதி திரும்பிப் பார்க்க, ரிஷி அப்போதும் அவளையே பார்த்தபடி நிற்பதைக் கண்டு புன்னகைக்க அவன் கையசைத்தான்.

மனது ஏனோ இறக்கை இல்லாமலே வானத்தில் பறப்பது போல் தோன்றியது பாரதிக்கு.

“ரிஷி… எத்தனை நாளாய் உன்னைக் காண வேண்டுமென்று தவித்திருக்கிறேன், இப்போது நீயே என்னைத் தேடி வந்தாலும் என் சூழ்நிலை உன்னிடம் என்னைக் காட்டிக் கொள்ள அனுமதிக்கவில்லை… உன் குரலையே காதலித்த எனக்கு உன் காதலா புரியாது… வலியோடு ஒலித்த உன் குரல் இப்போதும் என் காதில் ஒட்டிக் கொண்டு இம்சை செய்கிறதே…” யோசித்தபடி நடந்தவளின் அருகே கார் ஒன்று உரசியபடி வந்து நிற்க, திடுக்கிட்டுத் திரும்பியவள் உள்ளே இருந்த ரிஷியைக் கண்டதும் திகைத்தாள்.

கார் கண்ணாடியை இறக்கியவன், “ரதி, பஸ் ஸ்டாப் அங்க இருக்கு, நீ எங்க நடந்து போயிட்டு இருக்க…” என்றதும் தான் குழம்பி திரும்பிப் பார்க்க பேருந்து நிலையத்தைக் கடந்து நடந்து கொண்டிருப்பது புரிய தலையில் தட்டிக் கொண்டாள்.

“ச..சாரி, ஏதோ யோசனைல அப்படியே நடந்துட்டேன்…”

“ம்ம்… பார்த்து மா, யோசிச்சுட்டு காஞ்சிபுரத்துக்கே நடந்து போயிடாத…” எனவும் நாணத்துடன் சிரித்தாள்.

“ஆமா, நீ எந்த ஆபீஸ்ல வொர்க் பண்ணற…” அவன் கேட்கும்போதே தான் ஏற வேண்டிய பேருந்து வருவதைக் கண்டவள், “பஸ் வந்திருச்சு, நான் கிளம்பறேன் ரிஷி…” என்றபடி வேகமாய் ஓடி ஏறிக் கொண்டாள்.

அவனது காரைக் கடக்கையில் கையசைத்தவளை சிரிப்புடன் பார்த்த ரிஷியின் மனது, “என் காதலை ஏற்றுக் கொள்ள முடியாதவளுக்கு என் நட்பை இத்தனை சீக்கிரமாய் எப்படி ஏற்றுக் கொள்ள முடிந்தது…” என்று யோசனையாய் வந்தது. அதைத் தொடர முடியாமல் அவனது அலைபேசி சிணுங்கி சூர்யா அழைப்பதாய் சொல்ல காரைத் திருப்பிக் கொண்டு அவர்களிடம் சென்றான் ரிஷி.

அன்று பாருக்கு செல்ல விரும்பாமல் வீட்டுக்குக் கிளம்பலாம் என்ற நண்பனை அதிசயமாய் பார்த்தான் சூர்யா.

“என்னடா ரிஷி, தினம் ரெண்டு பெக்காச்சும் உள்ளே தள்ளாம வீட்டுக்குப் போக மாட்ட… நான் வேண்டாம்னு சொன்னாலும் கேக்காதவன் இன்னைக்கு நீயே வேண்டாம்னு சொல்லற…” நம்பாமல் கேட்ட நண்பனை முறைத்தான் ரிஷி.

“ப்ச் நீயெல்லாம் நண்பனாடா, குடிக்க வேண்டாம்னு  நினைக்கறவனை திருந்த விடுங்கடா… நல்லாருப்பிங்க…” என்றதும் ரகுவும் சூர்யாவும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொள்ள சிரித்தான் ரிஷி.

“ஹஹா… கொஞ்சம் ஓவரா பில்டப் கொடுத்துட்டனோ…! அது ஒண்ணும் இல்லடா, இன்னைக்கு மனசு ரொம்ப லேசா, சந்தோஷமா இருக்கு… அதான், குடிச்சு அந்த பீலை மாத்தத் தோணலை…” என்றவனை யோசனையாய் பார்த்தான் சூர்யா.

“என்னடா, நாங்க கிப்ட் வாங்கப் போன கேப்ல என்ன நடந்துச்சு… பிடிச்சவங்க யாரையாச்சும் மீட் பண்ணியோ…?”

“நண்பேன்டா, சரியா யோசிக்கற… ரதியைப் பார்த்தேன்…”

“பாரதியா…? மறுபடி சென்னை வந்திருக்காங்களா…?”

“ம்ம்… இன்னைக்கு புதுசா இங்க வேலைல ஜாயின் பண்ணதா சொன்னா…”

“ஓ… உன்னோட பேசினாங்களா…?”

“ம்ம்… நாங்க பிரண்ட்ஸ் ஆயிட்டோம் தெரியுமா…?” என்றவன் காபி ஷாப்பில் நடந்ததைக் கூறினான்.

“ஹூம், நம்ப முடியலியே… ஆமா, எந்த ஆபீஸ்ல ஜாயின் பண்ணிருக்காங்க…?” என்றான் ரகு.

“டேய் நம்புங்கடா, நாடு உருப்படும்… எந்த ஆபீஸ்னு தெரியல, பட் இந்த ஏரியா தான்னு தோணுது… அவ தங்கிருக்கற ஹாஸ்டல் கூட ரெண்டு ஸ்டாப்னு சொன்னா…”

“ஹூம்… இவ்ளோ பேசிக்கற அளவுக்கு பிரண்டாகிட்டியா… பாரதி மட்டும் தான் வந்திருக்காங்களா, அவங்க பிரண்டு வான்மதியும் இருந்தாங்களா…?” சூர்யா கேட்க அவனை யோசனையாய் பார்த்தான் ரிஷி.

Advertisement