Advertisement

அத்தியாயம் 30
சில வருடங்களுக்குப் பிறகு
சத்யாவின் இரண்டாவது குழந்தையின் காது குத்தும் விழா பாண்டிராஜின் குலதெய்வ கோவிலில் நடைபெற்றுக்கொண்டிருக்க, வாசன், ஸ்ரீராம் மற்றும் ராமநாதன் சென்றிருந்தனர்.
சத்யாவின் மூத்த மகனுக்கு காதுகுத்தும் பொழுது வாசனின் மகன் வாசவ்கு உடம்பு முடியாமல் இருக்க, வாசுகியால் வர முடியவில்லை. இருந்தாலும் வாசன் வந்ததோடு தன்னுடைய கடமையை சரியாகத்தான் செய்தான்.
கவிதாவை திருமணம் செய்யவில்லையே! என்ற கடுப்பில் புஷ்பா சத்யாவை உசுப்பேத்தி ஸ்ரீராமின் மடியில் குழந்தையை வைத்து காதுகுத்த வைத்திருந்தாள்.
“இந்த முறையும் அண்ணி வரலையா?” என்று குறைபட்ட சத்யாவுக்கு வாசனிடம் அடுத்து பேசக்கூட நேரம் இருக்க வில்லை. தனியாகத்தான் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள். ரமேஷோட அண்ணிகள் விருந்தாளிகள் போல் அமர்ந்திருந்தனர்.
கவிதாவைக் காணவில்லை. போன தடவை அவள்தான் சத்யாவோடு கூடமாட இருந்து எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.  
“என்ன வாசன் ஒதுங்கி இருக்க, உன் மடிலதான் குழந்தையை உக்கார வச்சி காது குத்தணும்” என்று பாண்டிராஜ் வர
“கவிதா எங்க மாமா? காணவே இல்ல” என்று அவரிடமே! கேட்டான் வாசன்.     
அவனை ஆழ்ந்து பார்த்தவர் “ஒரு பொண்ணு புருஷன் கூட வாழ்ந்தாதான் மரியாதை இல்லனா ராசி இல்லாதவனு சொல்றாங்க.
என் மகளுக்கு தங்கமான மாப்பிளையத்தான் பார்த்தேன். எக்சிடன் ஆனபோ என் பொண்டாடி அவரை விட்டுட்டு வானு சொல்லியும் அவ வரல கூடவே! இருந்து பார்த்துக்கிட்டா. ஆனா மருமகனோட அம்மா என் பொண்ணோட ராசிதான் மகனுக்கு இப்படி ஆச்சுன்னு தினமும் பேசி அவளை கஷ்டப்படுத்தி இருக்காங்க போல.
ஒரு கட்டத்துக்கு மேல மாப்பிளையே அவளை வீட்டை விட்டு போய்டுனு சொல்லி இருக்காரு. புருஷன் இப்படி சொல்லிட்டாரேன்னு வந்தவளத்தான் புஷ்பா உனக்கு கட்டி வைக்கணும்னு பார்த்தா.
கொஞ்சம் நாள்  போன பிறகுதான் அவளுக்கே புரிஞ்சது தன்னோட அம்மா பேசுறத தாங்க முடியாமத்தான் மாப்பிள ஏதேதோ பேசி அவளை வீட்டை விட்டு போக வச்சிருக்காருனு. டிவோர்ஸ் நோட்டீஸ் கூட வந்தது கவிதா கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா. 
என்னெல்லாமோ! வைத்தியம் பார்த்தாங்க ஒன்னும் ஆகல. கை விட்டுட்டாங்க, கவிதாதான் கேரளாகு கூட்டிட்டு போனா குணப்படுத்தலாம்ப்பா மாமா கிட்ட பேசி பாருங்கன்னு சொன்னா… நானும் பேசி பார்த்தேன். கடைசி நம்பிக்கையா சம்மந்தி சரினு சொல்லிட்டாரு. அங்கதான் போய் இருக்காங்க. கேரளால வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சதுக்கு பிறகு அவருக்கு இப்போ பரவால்ல. இனியாச்சும் என் பொண்ணு நல்லா வாழ்வா”
யாருக்கு என்ன நடந்தாலும் பெண்களை தப்பாக பேசுவதையும், பார்ப்பதையும் இந்த சமூகம் என்றுதான் நிறுத்துமோ! பெருமூச்சு விட்டுக்கொண்டான் வாசன்.
சத்யாவின் பெண்குழந்தையை மடியில் அமர்த்தி காது குத்திய பின் விருந்தும் உண்டு விட்டு ரமேஷோடு பேசிக்கொண்டிருந்தான்.
“நீங்க சொன்னது போல ஏரியாவை மாத்தினதுல வியாபாரம் இப்போ நல்லா போகுது” என்று ரமேஷ் சொல்ல வாசன் புன்னகைத்தானே! தவிர எதுவும் பேசவில்லை.
வாசனும் கடை கடை என்று கடையை கட்டிக்கொண்டு அலைபவன்தான். ஆனால் கடையை விரிவு படுத்த வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ரமேஷ் குண்டுசட்டியிலையே! குதிரை ஓட்டுவதைக் கண்டு சத்யாவிடம் பேசினால் அவள் என்னமோ! மகாராணி போல் வாழ்வதாக பீத்திக்கொள்ள ரமேஷிடம் பேசினான் வாசன்.
ரமேஷின் கடையை பற்றியோ! தொழிலை பற்றியோ! எந்த குறையும் சொல்ல முடியாது. கடை இருக்கும் ஏரியாதான் சரியில்லை என்று புரிய, வாசன் அதை பேசி புரியவைத்து ஏரியாவை மற்ற வைத்திருந்தான்.
இன்னும் வாடகை வீடுதான். கடை வாடகை, வீட்டு வாடகை என்று அதிகம் இருந்தாலும், கடையில் வரும் இலாபம் அதிகம் அதனால் அவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் சத்யா இன்னும் குடும்பத்தாரின் அருமையையோ! ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையோ!  உணரவில்லை. சகோதர்களிடம் குறைகூறித் திரிவதையும் இன்னும் விடவில்லை.
அவள் என்று புரிந்துகொள்ள போகிறாளோ! அவள் குழந்தைகள் வளர்ந்து திருமணமான பிறகுதான் புரிந்துக்கொள்வாளாக இருக்கும். அவளை திருத்த மருமகளோ! மருமகனோ! தான் வரவேண்டி இருக்கும்.
அங்கிருந்து நேராக ஸ்ரீராமும் ராமநாதனும் அவர்களின் கடைக்கு செல்ல வாசனும் அவர்களை கடையில் விட்டுவிட்ட வீடு செல்வதாக வண்டியை கிளப்பி இருந்தான்.
ராமநாதனின் கடையையே! ரோஹன் வாங்கி இருந்தான். ரோஹன் வாங்கினான் என்றாலும் அது அபர்ணா வாசனின் பெயரில் வாங்கி இருந்தாள்.
“ஏன் அத்த எங்க சொத்தையெல்லாம் மீட்டுக் கொடுக்கவென்றே கங்கணம் கட்டி அலையிறீங்களா?” வாசன் புன்னகை முகமாகத்தான் கேட்டான். ஆனாலும் வாசுகியை பார்த்த பார்வையில் “என்ன டி இது” என்று இருந்தது.
“ஆமா சம்மந்தி இப்போ வாசன் அவனோட கடைய கட்டி கிட்டு இருக்கான். அவனோட ஆசைப்படி அவன் கடை இருக்கும் பொழுது இது எதுக்கு?” ராமநாதனும் பேச
“நீங்க எவ்வளவு ஆசையா உருவாக்கின கடைன்னு தெரியும் சம்மந்தி. மாப்பிளையோட மளிகை கடைக்கு போட்டியா இந்த கடை வந்திடக் கூடாதுன்னுதான் வாங்கினேன்” அபர்ணா சொல்ல
“என்ன சொல்லுறீங்க ..ம்மா..” வாசுகி அபர்ணாவின் முகம் பார்க்க,
“அந்த கடை இருக்குற ஏரியாவுக்கு, கடையும் நல்ல இலாபம் பார்க்கக் கூடியது. ஆனா அத நடத்துறவருக்கு அத எப்படி நடத்தணும்னு சரியா தெரியல. எந்நாளும் அப்படி இருக்காது. மாப்பிளையோட கடைக்கு போட்டியா இன்னொரு கடை உருவாகக் கூடாதில்ல. அதான் வாங்கிட்டேன்”
“என்ன அத்த புரியாம பேசுறீங்க நாம என்னதான் ஓடி ஓடி உளைச்சலும் நமக்குன்னு கடவுள் அளந்ததுதான் கிடைக்கும்” வாசன் கொஞ்சம் கோபமாக பேச
“ஆகா.. எப்படி பேசினாலும் அசர மாட்டாரு போலயே! ரோஹன் சொன்னது சரிதான்” உள்ளுக்குள் தடுமாறிய அபர்ணா “அதில்ல மாப்புள உங்க அப்பா ரொம்ப வயசாகிட்டாரு தோட்டம்,தொரவுனு சுத்த முடியுமா? ஒரு இடத்துல உக்கார வைக்கணும், ஸ்ரீராம்கு ஒரு நல்ல வாழ்க அமைச்சு கொடுக்கணும் அதுக்குதான் இந்த கடை”
“புரியல” என்ற வாசன் வாசுகியை முறைத்தான் “உன் அம்மா உன்ன மாதிரியே! பிடிவாதம் பிடிக்கிறாங்க, அவங்க நினைக்கிறது செய்யாம விட மாட்டாங்க” என்றது அவன் பார்வை.
“இப்போ இருக்குற பொண்ணுங்க, ஹேர் பேண்ட், லிப்டிக்கு, நைல் போலிஷ் அது இதுனு போடுவாங்க இந்த ஊர்ல அப்படி ஒரு கடை இல்ல. நாம போட்டா நல்ல ஊருக்கும். வியாபாரமும் நல்லா நடக்கும்”
“இதெல்லாம் சரிவருமா சம்மந்தி” ராமநாதன் புரியாது கேக்க,
“இந்த ஊருல எது இல்லனு பொண்ணுங்க நினைக்கிறார்களோ! அதெல்லாம் நம்ம கடைல கிடைக்கும். கண்டிப்பா வியாபாரம் நடக்கும். கடை பொறுப்பு ஸ்ரீராம் மற்றும் சம்மதியுடையது”
“எனக்கு இது சரியா படல” வாசன் சொல்ல
“அதான் அம்மா சொல்லுறாங்கல்ல” வாசுகி அன்னைக்காக பேச
கடையை வாங்கிய பின் தான் அபர்ணா கூறுகிறாள் ஆகா வாசன் என்ன கூறினாலும் கேட்கப்போவதில்லை என்று புரிய “என்னமோ! பண்ணிக்கோங்க, என்ன விடுங்க” என்றவன் எழுந்து சென்று விட்டான்.
ஒருவாறு அபர்ணாவின் எண்ணப்படி கடைதிறப்பு விழாவும் சிறப்பாக செய்து கடையும் ஆரம்பிக்கப்பட்டு, ஸ்ரீராமுக்கு உறுதுணையாக அவளே! நின்றாள்.
அவள் சொன்னது போல் இலாபமும் நல்லாகவே! இருந்தது.
வாசுகிக்கும் தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொடுக்க, அவளும் சிலசமயம் கடையில் இருப்பாள். குழந்தை உண்டாகி இருப்பதால் வாசன் அவளை கடைக்கு அனுப்புவதில்லை.
“நா சொன்னப்போ மாட்டு படிக்க மாட்டேன்னு சொன்ன. உன் அம்மா சொன்ன உடனே! அப்படியே! ஓடுற…”
“எங்கம்மா.. என்ன தேவையோ! அதைமட்டும் கத்துகிட்டா போதும்னு சொல்லிட்டாங்க, நீங்க பத்தாவதுதான், நான் பன்னெண்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். முதல்ல உங்களைத்தான் படிக்க வைக்கணும்” என்றவள் அத்தோடு விடாமல் அபர்ணாவிடம் கோர்த்தும் விட
வாசனின் கடையில் சீசீடிவி வைக்க வேண்டும், அது இது என்று பேசி எதையெதையோ! கற்றுக்கொடுத்திருந்தாள்.
வாசனும் தன்னுடைய கடையை கட்டி முடித்து அவன் ஆசைப்படி மூணாவது தளத்தில் சமையலறை உபகரணங்கள் மாத்திரம் உள்ள தளத்தை அமைத்தான். அதில் மற்பாண்டங்கள், சில்வர், அலுமினியம், நான்ஸ்டிக் பாத்திரங்கள், மற்றும் மின்சாதன பொருட்கள் என்று எல்லாமே! கிடைக்க, அவன் கடை அந்த ஊரில் தனி சிறப்பு பெற்றது.
கடை திறப்புவிழாவின் பொழுது அபர்ணாவின் பரிசாக ஒரு வண்டியை வாங்கிக் கொடுக்க “அத்த…” என்றான் வாசன்.
“இருக்கட்டும் மாப்புள நம்ம குடும்பம் ரொம்ப பெருசு போக வர வண்டி வேண்டாமா?” என்றாள் அபர்ணா.
அந்த வண்டியில்தான் வாசன் அப்பா, தம்பியோடு காதுகுத்துக்கு சென்று வந்துகொண்டிருந்தான்.
ஸ்ரீராமையும், ராமநாதனையும் கடையில் இறக்கி விடும் பொழுது மித்ரா குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே செல்வதைக் கண்ட வாசன்
“என்ன ஸ்ரீராம் நா வேணா மித்ரா கிட்ட பேசட்டுமா?” என்று தம்பியின் முகம் பார்த்தான்.
“வேணாம் ..ண்ணா..” என்றவன் ராமநாதனோடு உள்ளே சென்றான்.
மித்ரா ராமசாமியின் இரண்டாவது மகள். ராமசாமி ஊர் எல்லையில் இயற்கை விவசாயம் செய்துகொண்டு ஊரிலுள்ளவருக்கும் அதை கற்றுக்கொடுத்தவர். மூத்த மகள் செவ்வந்தியை சொந்த அக்கா மகன் தனபாலுக்கே! கட்டிக்  கொடுத்திருக்க, அவனோ! குடி, சூது என்று மனைவியை போட்டு அடிக்க, விவாகரத்து பெற்று வந்து விட்டாள்.
ஒருவாறு பேசி மகளை மறுமணம் செய்து அனுப்பி விட்டார் ஆனால் அவள் பெற்ற மகள் கிருத்திகா ராமசாமியின் பொறுப்பானது.
மித்ராவுக்கு அக்காவின் மேல் கடுங்கோபம் பிள்ளையை விட்டுவிட்டு அப்படி என்ன இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள தேவை இருக்கு? அதுவும் பெண் குழந்தை. காலேஜ் படிப்பை முடித்து விட்டு வந்த மித்ரா குழந்தையோடு நன்கு ஒட்டிக்கொள்ள திருமணத்தை மறுக்கலானாள்.
இதற்கிடையில் தனபால் குழந்தையை சாக்காக வைத்து மித்ராவை திருமணம் செய்துகொள்ள ராமசாமியின் வீட்டுக்கு வந்துபோக, தனபாலன் தொல்லையிலிருந்து தப்பிக்கவாவது திருமணம் செய்துகொள் என்று ராமசாமி மித்ராவிடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் வாங்கி இருந்தார்.
மித்ராவும், க்ரித்திகாவையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்பந்தமாக இருந்தால் திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டிருந்தாள்.
ஸ்ரீராமின் கடைக்கு குழந்தையோடு வந்து செல்பவள் ஸ்ரீராம் விவாகரத்து ஆனவன் என்று அறிந்துக்கொண்டதோடு அவன் பெண்களோடு பேசும் முறையிலும், நடந்துக்கொள்ளும் முறையிலும் க்ரித்திகாவை அவன் நன்றாக பார்த்துக்கொள்வான், தன்பாலின தொல்லையிலிருந்து விடுதலைக்கு கிடைக்கும் என்று மித்ராவே! அவனிடம் பேசி இருந்தாள்.
“என்ன பத்தி என்ன தெரியும்னு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குற?”
ஸ்ரீராமுக்கு மித்ராவை பத்தி ராமநாதனின் மூலம் எல்லா விஷயமும் தெரியும். அக்கா பெண்ணுக்காக திருமணத்தை மறுத்தவள் சொந்த பிள்ளையை தத்து கொடுத்ததை தெரிந்தால் கண்டிப்பாக இந்த திருமண பேச்சை எடுத்திருக்க மாட்டாள் என்று எண்ணியே! இந்த கேள்வியை கேட்டிருக்க, அவளும் திருமணமாகி, மனைவியின் போக்கு சரியில்லாததால் விவாகரத்து பெற்று மறுமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பதாக கூறினாள்.
இருவரும் ஒரே மனநிலையில் இருப்பதாக எண்ணியிருந்தாள் மித்ரா.
புன்னகைத்தவன் விதுவை தத்துக்கொடுத்ததை பற்றி கூற க்ரித்திகாவை தூக்கிக்கொண்டு சென்றவள்தான் அன்றிலிருந்து ஸ்ரீராமோடு பேசுவதையே! நிறுத்தி இருந்தாள்.
வாசனிடம் மனம் விட்டு பேசுவதால் மித்ரா கேட்டதையும், நடந்துகொண்ட முறையையும் ஸ்ரீராம் சொல்லி இருக்க,
“விதுவ தத்து கொடுத்ததை பத்தி கவலை படுறியா?”
“சே சே… அப்போ நான் இருந்த மனநிலைல எடுத்த முடிவு சரினு நினச்சேன். இப்போவும் சரின்னுதான் நினைக்கிறன். அதுல எந்த மாற்றமும் இல்ல. விதுக்கு அண்ணிய விட பெஸ்ட் அம்மா இந்த உலகத்துல கிடைக்க மாட்டாங்க”
“ஏன் டா.. அவளை பத்தி மட்டும் சொல்லுற? அப்பா என்ன பத்தியும் சொல்லு” வாசன் முறைக்க,
“கூடவே! இருக்கும் பொழுது புகழக் கூடாது ..ண்ணா..” என்றவன் சத்தமாக சிரித்தான்.
மித்ரா கடைக்கு வந்து சென்றாலும் ஸ்ரீராம் அவளோடு பேச முற்சி செய்யவில்லை. அவளும் பேசவில்லை.
ராமநாதனிடம் இதை பற்றி பேசிய வாசன் இருவரையும் கண்காணிக்கும் படி கூறி இருக்க, எந்த முன்னேற்றமும் இல்லை என்றதும் இன்று மித்ரா கடைக்கு வந்ததைக் கண்டு மித்ராவிடம் பேச எண்ணினான் வாசன்.
“வா வீட்டுல விட்டுடுறேன்” என்று வண்டியில் ஏற்றிக்கொண்டவன் அவளுடைய திருமணத்தை பற்றி பேச
“வீட்டுல மாப்புள பாத்துக்கிட்டுதான் இருக்காங்க” என்றாள்.
அவளை வீட்டில் விட்டவன் நேரடியாக ராமசாமியிடம் ஸ்ரீராமை பற்றியும் மதுவுடனான அவனது வாழ்க்கையை பற்றியும் கூறியவன், விதுவை பற்றியும் கூறி, “ஸ்ரீராம் தப்பானவன் கிடையாது. நல்ல மனைவி அமஞ்சி இருந்தா நல்லா வாழ்ந்திருப்பான். நம்ம வாழ்க்கைல என்ன எல்லாம் நடக்கும்னு விதிப்படிதான்! நடக்கும்” என்று மித்ராவின் முகம் பார்க்க 
“என்ன இருந்தாலும் விதுவ தத்துக்கொடுத்தது தப்பு” என்றாள் மித்ரா.
“அப்போ அவன் இருந்த மனநிலையையும் புரிஞ்சிக்க மித்ரா… யாருக்கே பொறந்தானு தெரியல்னு கட்டின மனைவியே! சொன்னா எப்படி ஏத்துப்பான். விதுவ அங்கேயே! விட்டுட்டு வரமா தூக்கிட்டு வந்தானே! அதிலையே! அவன் நல்ல மனசு உனக்கு புரியலையா?” மித்ராவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
“விது என் பொண்ணு, இது கடைசியாக இருக்கட்டும், இனிமேல் யார் கிட்டயும் விது நான் தத்தெடுத்த பொண்ணுன்னு சொல்ல வேண்டிய நிலமை எனக்கு வரக் கூடாது” என்று வேண்டியும் கொண்டான்.
ராமசாமிக்கு, ராமநாதனை நன்கு தெரியும் வாசனையும்தான். இந்த சம்பந்தத்தை மறுக்க அவருக்கு எந்த காரணமும் இல்லை. முடிவு மித்ராதான் எடுக்க வேண்டும் என்று விட்டார்.
மித்ராவின் முகம் பார்த்த வாசனுக்கு தெளிவாகத்தான் இருப்பதாக தோன்றியது.
“அப்போ நான் வரேன் ” என்றவன் வீடு நோக்கி வண்டியை கிளப்பி இருந்தான்.    
“அப்பா…”
“அப்பா..” என்று ஒரு பக்கம் விது ஏறிக்கொள்ள வாசவ் ஒரு பக்கம் ஏறிக்கொள்ள வீட்டுக்குள் நுழைந்தான் வாசன்.
வாசனை உரித்து வைத்தது போல் சுகப்பிரசவத்தில் பிறந்தவன்தான் வாசவ். 
“அம்மா… எங்க?”
“அத்தையோட அலோ பேசிட்டு இருக்காங்க” என்றான் வாசவ்.
ராஜமும் அபர்ணாவும் தோட்டத்தில் இருக்கிறார்கள் போலும் குழந்தைகள் இருவரும்  வாசனின் கையிலிருந்தவற்றை பெற்றுக்கொண்டு தந்தைக்கு முத்தமும் கொடுத்து விட்டு பாட்டியை தேடி ஓடியிருந்தனர்.
சஹானா மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றிருக்க, நித்யாவும் கொஞ்சம் நாள் அவளோடு இருந்துட்டு வரலாமே! என்று சென்றிருந்தாள்.
ஆதி லண்டனில் ஒரு வேலையையில் சேர்ந்து செட்டில் ஆகிவிட்டான். ஸ்ரீவத்சன் அங்கு இருப்பதால் நித்யாவுக்கு நிம்மதி.
ஸ்ரீவத்சனுக்கும் ஒரு பையன் ஒரு பொண்ணு என்று அழகான குடும்பம் இரண்டு தடவை குடும்பத்தோடு இந்தியா வந்து சென்றவன் ராமநாதனை அங்கு வருமாறு அழைத்துக்கொண்டுதான் இருக்கின்றான்.
அக்ஷரா நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் லா தான் படிப்பேன் என்று லா காலேஜில் சேர்ந்தவள் சஹானா வெளிநாடு சென்றால் அன்னை அக்காவிடம் செல்ல தான் தடையாக இருக்க கூடாதென்று ஹாஸ்டலில் தங்கிக்கொள்ள ஆத்மநாதன்தான் அம்போ என்று விடப்பட்டான்.
குடும்பத்தை பிரிந்து தனிமையில் அந்த பெரிய வீட்டில் மூச்சு முட்டுவது போல் இருந்தது அவனுக்கு.
சிறுவயதில் குழந்தைகளோடு கழிக்க வேண்டிய பொழுதுகளை இழந்து, அவர்கள் வளர்ந்த பின் ஏங்குவது முட்டாள்தனம்.
அழகான குடும்பம், அன்பான மனைவி, அருமையான குழந்தைகள் அருகில் இருக்கும் பொழுது அனுபவிக்க தெரியாமல் இல்லாத பொழுது தனிமையில் ஏங்கித் தவிக்கிறான்.   
சஹானாவுக்கு ஒரு நல்ல வரன் வேறு வந்திருந்தது மாப்பிள்ளையின் குடும்பம் ஆஸ்திரேலியாதான். அவளும் படித்து முடித்து அங்கேயே! வேலை பார்ப்பதாக சொல்ல நித்யாவுக்கு அந்த சம்பந்தம் சரியென்று தோன்ற அது விஷயமாகவும் பேச வேண்டி இருக்கவே சென்றிருந்தாள். 
சஹானாவுக்கு திருமணமான பின், குழந்தை உருவானால், குழந்தை கிடைத்த பின் என்று நித்யாவின் நாட்கள் மகளோடு சென்று விடும். அதன் பின் ஆதி, அக்ஷராவின் கல்யாணம். பேரப்பிள்ளைகள். இதுதான் வாழ்க்கை. 
“பேசாம போய் ஊருல அப்பா, அம்மாவோட இருங்க ஆத்மா” என்றும் நித்யா சொல்லிப் பார்த்து விட்டாள்.
மாதம் மூன்று நாள் விடுப்பில் ஊருக்குத்தான் செல்கின்றான். ஆதிக்கு இங்கு வேலை தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்துகொள்ள சொல்லி நச்சரித்துக்கொண்டுதான் இருக்கின்றான். இவ்வளவு பெரிய வீட்டை எத்தனை நாட்களுக்கு பூட்டி வைக்கிறது என்ற பிரச்சினை வேறு.
அவனோ! இப்போ தான் சம்பாதிக்கவே! ஆரம்பித்தேன். அதுக்குள்ளே கல்யாணமா? முடியவே! முடியாது. என்கின்றான்.
“காலெல்லாம் ரொம்ப வீங்கிப் போச்சா வாசுகி” நித்யா வீடியோ காலில் கேட்பததை கேட்டவாறு வந்தமர்ந்தான் வாசன்.
“இதோ இவர் வந்துட்டாரு. பேசுங்க” என்றவள் எழுந்து செல்ல போக, அவள் கைப்பிடித்து தடுத்தவன் அருகில் அமர்த்திக்கொண்டு  
“சொன்னா கேக்க மாட்டேங்குறா… ஒன்னு பசங்க பின்னாடி ஓடிக்கிட்டு இருக்கா… இல்ல தோட்டத்துல வேல பாக்குறா. கால் வீங்காம என்ன செய்யும். குடும்பத்துல ஒரு டாக்டர் இருக்குறது எவ்வளவு நல்லதா போச்சு நித்தி… சஹானா சொன்ன மாதிரியே சுடு தண்ணீருல கால நனச்சி கிட்டு இருந்தா இதமா இருக்கு வீக்கம் குறையுதுனு சொல்லுறா”  வாசனின் முகம் சந்தோசத்தில் பூரித்துப் போய் இருக்க, நித்யாவுக்கும், வாசுகிக்கும் சிரிப்பாக இருந்தது.
வாசுகி மூன்றாவது குழந்தையை சுமந்திருக்க, எட்டு மாதம் ஆகும் பொழுதே! அவள் கால்கள் வீங்க ஆரம்பித்திருந்தது. சஹானா கைனலோஜிஸ்ட்குக் படிப்பதால் வாசன் போனை போட்டு அவளிடம் அது இது என்று கேட்டு அவள் ஆலோசனைப்படி செய்வதோடு பெருமையும் பட்டுக்கொள்வான்.
“காலம்காலமாக கால் வீக்கத்துக்கு சுடுநீர் ஒத்தடம்தான் கொடுப்பாங்க இத போய் அவ கிட்ட கேட்கணுமா?” என்று பெண்கள் சிரிப்பது வாசனுக்கு தெரியவில்லை. அவன் கண்களுக்குள் எல்லாம் படிக்காத நித்யா தனது குழந்தைகளை எப்படியோ! படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டாள். தங்கள் குடும்பத்தில் டாக்டர், லாயர் என்று இருக்கிறார்களே! என்ற பெருமிதம்தான் தெரிந்தது.   
போனை அனைத்தவாறே “பங்க்ஷன் சிறப்பா முடிஞ்சிருச்சா?” கண்களாளேயே! பதில் சொன்ன வாசன் வாசுகியையே! பாத்திருக்க,
“என்ன ரொம்ப ஓவரா சைட் அடிக்கிறீங்க?”
குளித்து விட்டு முடியை உலர விட்டவள் இன்னும் பின்னாமல் அப்படியே விட்டிருந்தாள். அது வேற அப்போ அப்போ முகத்தில் வேறு விழுந்து இம்சை செய்ய ஒதுக்கியவாறே பேசும் அழகு வாசனின் மனதை கொள்ளை கொண்டது.
“என் பொண்டாட்டிய நான் பாக்குறேன். உனக்கென்ன?”
“பாருங்க, பாருங்க, சந்திரா போன் பண்ணி இருந்தா.. அவ வீட்டுக்கு நாம வராதே! இல்லனு குறை சொன்னா…”
“போறது ஒன்னும் பிரச்சினை இல்ல. உன் அப்பன் வூட்ட தாண்டி போகணுமே! போகும் போது அவரு உன் கைய புடிச்சி இளுத்தார்னுனா என்ன பண்ணுறது?” என்று சிரிக்க,
கணவனை முறைத்தவள் “அந்த சிரமத்தை நமக்கு கொடுக்க கூடாதுனு ஜெயமணி அத்தான் வேற வீடு பார்த்து குடியேற போறாராம் கிராபிரவேசத்துக்கு கூப்பிடத்தான் போன் பண்ணா”
“நல்லதா போச்சு… அத்தையையும் கூட்டிகிட்டு போயிட்டு வரலாம். போகும் போது வீட்டுக்கு என்ன வாங்கணும்னு சொல்லு வாங்கலாம். குட்டிஸுக்கு என்ன வாங்கணுமோ! வாங்கிக்கலாம். சரியா?”
சந்திரா மற்றும் ஜெயமணிக்கும் இரண்டு ஆண்குழந்தைகள் இருக்க, நாதனின் பக்கத்து வீடு என்றாலும் குழந்தைகளை கூட சந்திரா விடுவதாயில்லை.
பேரக்குழந்தைகளை ஆசையாக கொஞ்ச முடியாமல் பூர்ணா ஏக்கமாக பார்க்க, “உன் பார்வை பட்டாலும் என் குழந்தைகள் வாழ்க்கை வீணாகும்” என்று அனுப்ப மாட்டாள் சந்திரா. ஜெயமணியை பற்றி சொல்லவே! வேண்டாம். பூர்ணா மீது தனது காதல் விவகாரத்தில் கடுப்பில் இருந்தவன் இந்த விஷயத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு தன் குடும்பத்தாரையும் அண்டவிடாமல் பார்த்துக்கொண்டான்.
“மந்த்ராவும், ரோஹனும் அடுத்த வாரம் வராங்களாம் கிராபிரவேசத்துக்கு இருந்துட்டுதான் போறதாக சொன்னாங்க. ராஜேந்திரன் மாமாவும், சரளா அத்தையும் வராதா சொல்லி இருக்காங்க. அம்மாவை அனுப்புறது இல்லனு ரோஹன் திட்டுறான். கொஞ்சம் என்னனு கேளுங்க” கோபமாக வாசுகி சொல்ல வாசனுக்கு சிரிப்பாக இருந்தது.
ரோஹன் மற்றும் மந்த்ராவுக்கு தேவதை போல் ஒரு பெண் குழந்தை சமீத்தில்தான் பிறந்தாள். 
அபர்ணா வாசுகியோடு தங்கி விட ரோஹானால் அபர்ணாவோடு இருக்க முடியவில்லை என்று வாசுகியை திட்ட ஆரம்பித்திருந்தான்.
“இது வேறயா? அன்னக்கி போன போட்டவன் கல்யாணத்த நிறுத்தி உன்ன கல்யாணம் பண்ணி இருந்தா? எனக்கு தலைவலி மிச்சம் இருந்திருக்கும். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் பஞ்சாயத்து பண்ண வேண்டி இருந்திருக்காது”
“என்ன சொன்னீங்க? என்ன சொன்னீங்க?” என்றவாறே வாசுகி வாசனை அடிக்க ஆரம்பிக்க,
“ஹே பார்த்து பார்த்து வயித்துல அடிபட்டுட போகுது”
“இப்படி பேசுவீங்களா? பேசுவீங்களா?” தலையனையாலையே! மொத்த
“ஏன் டி பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?” என்று வாசன் சிரிக்க,
“ஆமா..” எனறவள் கணவனை அணைத்துக்கொண்டு “என் வாழ்க்கைல வந்த வரம் நீங்க ஸ்ரீநி. உங்கள மாதிரி புருஷன் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வைக்கணும்” என்று ஆத்மார்த்தமாக சொல்ல வாசன் மனைவியை காதலாக பார்த்திருந்தாள்.  
வாசனின் வாழ்வில் வந்த வசந்தம் வாசுகி
வாசுகியின் வாழ்வில் வந்த வரம் வாசன்.
வாசனின் வாசுகி

Advertisement