Advertisement

அத்தியாயம் 28
இரண்டு வருடங்கள் கடந்தும் அபர்ணாவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. சாவி கொடுத்த பொம்மை வாழ்க்கைதான். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அவனிடத்தில் கேட்காமல் இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை.
இந்த இரண்டு வருடங்களில் அந்த தீவை தாண்டி எங்கயும் அவன் செல்லவும் இல்லை. அவளை அழைத்து செல்லவும் இல்லை. மாதம் தவறாமல் பொருட்கள் மட்டும் வந்து கொண்டுதான் இருந்தன.
அபர்ணாவின் கழுத்தில் தாலி கட்டியதோடு சரி கையை கூட தொட்டு பேச தயங்கினான் அவன். அது ஏன் என்று அவளுக்கு புரியவே! இல்லை. தனக்கு அதுவே! பாதுகாப்பு என்று இருந்தவளுக்கு நாளாக, நாளாக வீட்டுக்கு செல்லவே! முடியாமல் போய் விடுமோ! கணவன் குழந்தையை பார்க்க முடியாமல் போய் விடுமோ! என்ற அச்சம் மனதில் தோன்ற ஆரம்பித்தது.
கூடவே! குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருப்பார்களோ! என்னை காணாமல் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்களோ! அல்லது நான் இறந்து விட்டதாக நினைத்து அவர் வேறு திருமணம் செய்துகொண்டு இருப்பாரா?
அபர்ணாவின் அச்சம் போல் நாதன் வேறு திருமணம் செய்துகொண்டார் என்பதை அபர்ணா அறிந்திருக்கவுமில்லை. நாதன் திருமணம் செய்தது தனக்கு துரோகமிழைத்த தன் தங்கையை என்பதையும் அபர்ணா அறிந்திருக்கவில்லை.
சிறு வயதிலிருந்தே! அக்கா பாவித்த பொருட்களின் மேல் வெறுப்பில் இருந்த பூர்ணா அக்கா புருஷன் மேல் மட்டும் அன்பு செலுத்துவாளா? அதீத வெறுப்பில்தான் அவள் திருமணம் நடந்தது. அதுவும் அவள் காதலிப்பவனிடமிருந்து எந்த ஒரு கடிதமும் வராத சோகத்தில் அக்கா அவனோடு ஓடிவிட்டாளோ! என்று சந்தேகம் வேறு கொண்டு எல்லார் மீதும், எல்லாத்தின் மீதும் ஒரு வித வெறுப்பில்தான் இருந்தாள்.
அவள் சுமந்த பெண்கள் மீது பாசம் இருந்தாலும், அது நாதனின் குழந்தைகள் என்ற வெறுப்பும் தலை தூக்க அவர்களையும் விடாது திட்டுவதால் வாசுகியின் மீதான வெறுப்பு யாருக்கும் பெரிதாக தெரியவுமில்லை.
இப்படியே! நாட்களை கடத்திய அபர்ணா….. கூட இருந்தவன் என்ன எதிர்பார்க்கின்றான் என்பதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யலானாள். ஆனால் அது மட்டும் அவளால் முடியாமல் போனது. அவன் ஒரு இயந்திரம் போல் செயல் பட்டு அவளை இயக்கினான்.
அவனிடம் தோழமையாகப் பழகி பார்க்கலாம் என்று முடிவெடுத்தவள் சமையலில் அவனுக்கு உதவி செய்யலானாள். அப்படி ஒரு நாள் அவள் உதவிய பொழுது கத்தி அவள் கையை பதம் பார்த்து விட்டது. அதற்கு அவன் துடி துடித்து கண்ணீர் வடித்தான்.
துணுக்குற்ற அபர்ணா அவன் அன்பை புரிந்துக்கொண்டதோடு அவன் ஒரு சைக்கோ என்றதை நன்றாக உணர்ந்தும் கொண்டாள். அவனிடமிருந்து தப்பிக்க ஒரே வழி தன்னைத் தானே! காயப்படுத்திக்கொள்வது.
அப்படி செய்தால் மட்டும் தான் அவன் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்வான். செல்லும் வழியில் அல்லது மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அபர்ணா என்ன செய்வது? எவ்வாறு தன்னை காயப்படுத்திக்கொள்வது என்று யோசிக்கலானாள். 
கால் இடறி படியில் உருண்டு ஏதாவது செய்துகொள்ளலாம் என்று பார்த்தால் அந்த வீட்டில் படிக்கட்டுகளும் இல்லை. சமயலறையில் எண்ணெய் வழுக்கி விழுந்து எதிலாவது தலை மோதினாலும் பெரிதாக அடிப்பட ஒன்றும் இல்லை. என்ன செய்வது என்று இரண்டு நாட்கள் யோசித்தவளுக்கு ஒருவாறு யோசனை தோன்ற அவ்வாறு செயல் படுத்த முடிவெடுத்தவளாக நிம்மதியாக தூங்கியும் போனாள்.
அவன் என்ன செய்தாலும் கூடவே! சுத்துவதால் அவன் உடற்பயிற்சி செய்யும் பொழுதும் கூடவே இருக்க துணியை கொண்டு பொருட்களை துடைப்பத்தை வழமையாக வைத்திருந்தாள்.
பொதுவாக அவன் மாலை ஐந்து மணியளவில்தான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பான். அன்றும் அவன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க அபர்ணாவும் அவன் பின்னால் நுழைந்தவள் பொருட்களை துடைக்கலானாள்.
அவன் ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருக்க, துடைத்துக்கொண்டிருந்தவள் அங்கே கொட்டிக்கிடந்த எண்ணெய்யில் வழுக்கி, இரும்பில் பின்னந்தலை மோதுண்டு மயக்கத்துக்கு சென்றாள்.
அவளும் அதை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சமாக ஊற்றிய எண்ணெய்யில் சற்று வழுக்கி நெற்றி பட்டு மயங்குவது போல் நடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தாள்.
இயந்திரங்களுக்கு ஒருவகையான எண்ணெய் ஊற்றுவதால் சிலமணிநேரத்துக்கு முன்பே சென்று அதை ஒரு இடத்தில் கொட்டி விட்டு வந்தவள் ஒன்றும் அறியாதது போல் துடைத்துக்கொண்டு இருக்க, இவளும் வழுக்கி விழுவது போல் பாசாங்கு செய்ய எத்தனிக்க, எண்ணெய் உண்மையாகவே! வழுக்கி விட, சமநிலை தவறியவள் “அம்மா..” என்று கத்தியவாறு விழ ஓடிக்கொண்டிருந்தவன் கண்டது இரத்த வெள்ளத்தில் இருந்த அபர்ணாவைத்தான். 
அதிர்ச்சியடைந்தவன் சில நிமிடங்கள் கத்தி அழலானான். அவள் மயக்கத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்த பின்தான் அவளை தூக்கிக்கொண்டு வெளியே வந்து மறைத்து வைத்திருந்த படகில் கிடத்தி அதை செலுத்த ஆரம்பித்தான்.
அவன் சிறிதும் பதட்டமடையவில்லை. ஒரு ரோபோ போல் செய்துகொண்டிருந்தவன் கரைக்கு வந்ததும் அங்கே இருந்த காரை திறந்து முன் பக்க இருக்கையில் அவளை அமர்த்தி பட்டியையும் போட்டு விட்டவன் வண்டியை மருத்துவமனைக்கு செலுத்தலானான்.
அந்த மாலை வானமும் மப்பும் மந்தாரமுமாகத்தான் காணப்பட்டது. இரவு வரும் முன்பாகவே! சூரியனை மறைத்துக்கொண்டு அபர்ணாவின் வாழ்க்கை இருண்டு விட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தது.
அபர்ணா அவனிடமிருந்து எதிர்பார்த்த சுதந்திரம் அவளுக்கு கிடைக்கப் போகிறது. அந்த விடியலோடு அவளுக்கு விடிவுகாலம் காத்திருக்கிறது. ஆனால்…
வண்டி அதி வேகமாக அந்த சாலையில் சென்று கொண்டிருக்க, அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள். அவன் ஒரு முடிவோடுதான் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான் போலும்.
அவன் சிந்தனையை தடுக்கும் விதமாக வேகமாக வந்தது அந்த ட்ரன்கர் லாரி. அதன் வெளிச்சமும், வேகமும், சத்தமும், சொல்லியது கட்டுப்பாட்டை இழந்து விட்டது என்று. வண்டியை எந்த பக்கம் திருப்பினாலும் லாரியில் மோதிவிடும் அபாயம் இருப்பதால், அபர்ணாவின் பட்டியை கழற்றி கதவை திறந்து அவளை தள்ளி விட்டவன் அவன் குதிக்கும் பொழுது வண்டி லாரியில் மோதியதில் படுகாயமடைந்து தூக்கி எறியப்பட்டிருந்தான்.   
பின்னாடி அதி வேகமாக வந்த காரும் சடன் பிரேக் போட்டு நிறுத்த, மழையும் சோவென பொழிய ஆரம்பித்திருக்க, ட்ரன்கர் லாரி வேகம் குறைந்து சரிந்து நின்றது.
பிரேக் போட்ட வண்டியில் ஒரு பெண் பிரசவ வழியில் கத்திக்கொண்டிருக்க, வண்டியை நிறுத்திய ராஜேந்திரன் திகைத்து நின்று விட்டார். அவர் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் மனைவியை காப்பாற்றி விட்டு உயிர் நீத்த கணவன் தான்.
அவசரமாக வண்டியை விட்டு இறங்கியவர் அபர்ணாவை ஆராய மயங்கி இருக்கிறாள் என்று புரிய, அது அவள் வண்டியிலிருந்து விழுந்ததால் என்று கருதியவர் அவளை தூக்கி தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
“டேய்  ராஜேந்திரா அபி ரொம்ப சீரியஸா இருக்கா.. அவளை வீட்டுல வச்சி பாத்துக்க முடியலைன்னா ஹாஸ்பிடல்ல சேர்க்க சொன்னேனே கேட்டியா?” ராஜேந்திரனின் நண்பரும், மருத்துவருமான விக்னேஷ் கூறியவாறே உள்ளே வந்து “யார்டா இந்த பொண்ணு” என்றவாறு அந்த மருத்துவர் அபர்ணாவை பரிசோதிக்க,
“ஆக்சிடென்ட் ஆனா இடத்துல இருந்த பொண்ணு” என்ற ராஜேந்திரன் தங்கையை அபியை பற்றி பேசவில்லை.
“நல்லவேளை நீ தகவல் கொடுத்ததனால் எக்சிடன் நடந்த இடத்துக்கு அம்பியூலன்ஸ் போச்சு. இந்த பொண்ணு தலைல இரும்பால் அடிச்சிருக்குற மாதிரி இருக்கு”
“என்ன சொல்லுற?” என்ற ராஜேந்திரன் அதிர்ச்சியாக நண்பனை ஏறிட
“ஆமா இரும்புதான்”
“இல்ல. இவ புருஷன் வண்டில இருந்து தள்ளி விட்டான். நான் கண்ணால பார்த்தேன். புதர்லதான் விழுந்தா…”
“டேய் நான் சொல்லுறேன் இரும்பால் அடிச்சிருக்கான்னு”
“யார் அடிச்சிருப்பாங்க?” ராஜேந்திரன் கொஞ்சம் அதிச்சியான முகபாவனையில் கேக்க,
“யாருக்கு தெரியும்?”  அந்த மருத்துவனோ! இந்த மாதிரியான கேஸ்களை அடிக்கடி பார்ப்பவர் போலும் அசால்டாக பதில் சொல்லியவாறு அபர்ணாவுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார்.
ராஜேந்திரனின் தங்கை பிரசவத்தின் போது இறந்து விட குழந்தையும் வெண்டிலெட்டரில் வைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கு அழைத்து தகவல் சொல்ல மறுமுனையில் அன்னை கத்தவும் அலைபேசியை அனைத்தவர் அடுத்து என்ன என்று அமர்ந்திருக்க,  மருத்துவமனையை பரபரப்பாக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தார் மினிஸ்டர் கங்காதரன்.
கங்காதரன் நல்ல வழியில் அரசியலுக்கு வந்தவரல்ல என்று ராஜேந்திரனுக்கு தெரியும். தனது சொந்த அக்காவையும், மாமாவையும் கொண்டதாக ஒரு வதந்தி வேறு ஊருக்குள் பரவி இருக்க, இவர் எதற்காக இங்கே! வந்திருக்கார் என்று யோசனையாக பாத்திருந்தார் ராஜேந்திரன்.
ராஜேந்திரன் அமர்ந்திருந்த இடத்துக்கு அரக்கப்பரக்க ஓடி வந்தார் விக்னேஷ்.
“டேய் உனக்கு விஷயம் தெரியுமா? எக்சிடன்டுல இறந்தது அந்த மினிஸ்டரோட அக்கா மகன் குருமூர்த்தி. அவன் பேர்லதான் எல்லா சொத்தும் இருக்காம். இவரு காடியன் மட்டும்தானாம். அதுலயும் அவன் பாட்டி வேற குருமூர்த்திக்கி பொறக்க போற குழந்தைக்குத்தான் எல்லா சொத்தும் சேரணும்னு உயில் வேற எழுதிட்டாங்க போல மருமகன் ஆசைப்படி கல்யாணம் பண்ணி வச்சவரு குழந்தை பொறந்த உடனே! ரெண்டு பேரையும் கொல்ல திட்டம் வேற போட்டிருந்ததாக உள்ள பேசிக்கிறாங்க”
“என்ன டா சொல்லுற? அப்போ அந்த பொண்ணு தலைல அடிச்சது அந்த மினிஸ்டரா?”
“அவரில்லை. அந்த மனுசனுக்கு குருமூர்த்தியோட சம்சாரம் யார்னே! தெரியல. குழந்தை இல்லாததால எந்த பிரச்சினையும் வராதுன்னு சொல்ல முடியாது. அவன் ஒரு கேடு கெட்டவன் அந்த பொண்ண கொன்னாலும் கொன்னுடுவான்” என்று விக்னேஸ்வரன் முடிக்க,
ஒரு கணமேனும் யோசிக்காமல் “அபி… என் தங்கச்சி அபிதாதான் குருமூர்த்தியோட வைய்ப்னு சொல்லு. அந்த பொண்ண காப்பாத்து”
“டேய் என்ன டா சொல்லுற?”
“நீ சொல்லு. கூடவே நான் அவ அண்ணனு சொல்லு பாடிய நான் கொண்டு போறதாகவும் சொல்லு.
“இல்ல. நீ அண்ணனு சொன்னா உன்னையும் ஏதாவது பண்ணுவான்”
“இல்ல. பண்ணாத படி நான் பேசுகிறேன்”
டாக்டர் விக்னேஸ் உதவியோடு கங்காதரன் முன்னிலையில் ராஜேந்திரன் குருமூர்த்தியின் மச்சினனாகி, அவர் தங்கை அபிதா அவன் மனைவியாகி இருவரும் இறந்துவிட்டார்கள் என்றும் கூறப்பட கங்காதரன் அதை நம்பினாலும் ராஜேந்திரனை எடைபோடலானான்.
“தங்கச்சிக்காகத்தான் சார் இங்க இருந்தோம். நான் குடும்பத்தோடு அமெரிக்கால செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன்” என்று கண்ணீரோடு சொல்ல மினிஸ்டர் எதுவும் பேசவில்லை.
இறுதிக் காரியங்களை இருவரும் ஒன்றாக இருந்து செய்து முடிக்கும் வேளையில் ராஜேந்திரனை பற்றி கங்காதரனின் கைக்கு தகவல் வந்திருக்க வேண்டும்
“அப்போ அமெரிக்கால போய் மனைவிக்கு மருத்துவம் பாருங்க மிஸ்டர் ராஜேந்திரன். பிஸினஸும் தொடங்க போறதா கேள்விப்பட்டேன். சந்தோசம்” என்றதோடு விடை பெற ராஜேந்திரன்தான் பதிலற்று நின்றார்.
மினிஸ்டர் சென்றதும் குடும்ப லாயர் வேறு வந்து “சொந்த அக்காவையும், மாமாவையும் கொன்னவன் சார் அந்த ஆளு, அத குருமூர்த்தி தம்பி பார்த்திருக்கு போல, அதனால மனசு பாதிக்க பட்டு இருந்தாரு. அதனாலதான் அந்தம்மா பேரன் பேர்ல சொத்தை எழுதாம அவருக்கு பொறக்க போற குழந்தை மேல சொத்தெல்லாம் சேரணும்னு எழுதிட்டாங்க, தம்பிய கொன்னா சொத்து கிடைக்காதுனு அந்தமாவ கொன்னு தம்பிக்கு காடியனா வந்துட்டாரு. தினம் தினம் நரக வாழ்க்கைதான்.
அவரு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு கிட்ட இருந்து என் வீட்டுக்குத்தான் கடிதம் வரும். ஒரு மாசத்து ஒருக்கா போய்தான் என்னாலையே! அவரை பார்க்க முடியும். அங்க இருந்து தப்பிச்சு அந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த மினிஸ்டர் கண்ணுல படாம ரெண்டு பேரும் ரெண்டு வருசமா சந்தோசமாதான் வாழ்ந்தாங்க, இருக்குற சொத்தே ஐஞ்சி தலை முறைக்கு தாங்கும்.
எல்லாம் நேரம் சார். இப்படி போய் சேர்ந்துட்டாங்க, குழந்தை இல்லாததுனால, சொத்தெல்லாம் அரசாங்கத்துக்கும், அனாதை ஆசிரமத்துக்கு போக போகுது. இந்த மினிஸ்டர் அத எப்படி சுருட்டலாம்னு பாப்பான்” அவருக்கு தெரிந்த உண்மையின் பக்கத்தை ராஜேந்திரனிடம் சொல்லி விட்டு சென்றிருந்தார். 
அபிதா யாரையோ காதலித்து ஏமாந்து குழந்தையை சுமந்திருந்தாள். ராஜேந்திரனின் அன்னை கருவை கலைக்க முனைந்து அவள் உடல்நிலை மோசமானதுதான் மிச்சம். ஏற்கனவே! சரளாவும் நோயில் படுத்திருப்பவள் மாமியாரின் வசவுகள் முடிந்த பாடில்லை. ஏழாம் மாதம் முடிவடைந்த நிலையில் கழிவறைக்கு சென்ற அபிதா வழுக்கி விழுந்திருப்பாள் போலும் நல்லவேளை ராஜேந்திரன் வீட்டில் இருந்தான். இல்லையென்றால் அவன் அன்னை செத்துத் தொலையட்டும் என்று முகம் திருப்பி இருப்பாள்.
ஆனால் அவள் அன்னையின் ஆசைப்படி செத்துத்தான் போய் விட்டாள். வெண்டிலெட்டரில் இருந்த அவள் குழந்தையும் இறந்து விட்டது. செத்தவள் அபர்ணாவுக்கு பெரிய உதவியும் செய்துவிட்டுத்தான் போனாள். 
கண்விழித்த அபர்ணாவுக்கு தான் யார் என்ன என்ற எதுவும் நியாபகத்தில் இல்லை. ராஜேந்திரன் அவளை தன்னுடைய தங்கை அபிதா என்றுதான் கூறி வீட்டுக்கு அழைத்து சென்றான். செல்லும் அவனுக்கு ஒரே சிந்தனைதான் அவன் அன்னை எந்த பிரச்சினையும் பண்ணி விடக் கூடாதே! என்பதுதான்.
அவன் நினைத்ததற்கு மாறாக அவன் அன்னை சரளாவுக்கு இருக்கும் நோய்க்கு அவள் இறந்து விடுவாள் என்று அபர்ணாவை திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தலானாள். ராஜேந்திரனின் அன்னை குடும்ப கௌரவம், மானம், மரியாதை என்று பார்த்து குழந்தைகளிடம் பாசத்தை இழந்து நிற்பவர். ஆனால் ராஜேந்திரன் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தங்கைக்கு நடந்ததும் அன்னை மட்டுமே! காரணம் என்று அவருக்கு பாடம் புகட்ட அன்னையை விட்டு விட்டு மனைவி, மகன் மற்றும் அபர்ணாவை அழைத்துக்கொண்டு அமெரிக்க சென்று விட்டார் ராஜேந்திரன்.
ரோஹன் வாசனிடம் கூறியது போல அவர் ஒன்றும் குடிக்கு அடிமையானவர் கிடையாது. மனைவியின் மேல் உண்மையான அன்போடு இருந்ததால் அவளை குணப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க செல்ல முடிவெடுத்திருந்தவர் குடும்பத்தோடு செட்டில் ஆனார். கூடவே அபர்ணாவும்.
“அப்போ உங்களுக்கு எந்த நியாபகமும் இருக்கலையா? அதான் என்ன தேடி வரலையா?” வாசுகி கவலையாக கேக்க, அபர்ணா ஆமாம் என்று தலையசைத்தாள்.
“அப்போ அத்தைக்கு எப்போ எல்லாம் நியாபகத்துல வந்தது” வாசன் யோசனையாக கேக்க,
“உங்களுக்கும் வாசுகிம் கல்யாணம் பேசிய போது முகம் இறுக்கியவாறு ரோஹன் கூற,
“எல்லாம் சரியா பண்ண நான் அபி கழுத்துல இருந்த தாலிய மறந்துட்டேன். அவ புருஷன் எங்க என்று கேட்டதும் குருமூர்த்திய பத்தின உண்மைகளை சொல்ல வேண்டியதா போச்சு. எனக்கு தெரிஞ்சதும் அவ்வளவுதான். அபியோட பேர் கூட தெரியாம அவ யார் என்ன என்று கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம், நீங்க யாரும் போலீஸ் கம்பளைண்ட் கூட கொடுக்கல, கொடுத்திருந்தாலாவது அவள உங்க கூட சேர்த்திருந்திருப்பேன்” என்று ராஜேந்திரன் குறைபட நாதனால் எதுவும் பேச முடியவில்லை.
பூர்ணா கூனிக் குறுகி நிற்க ராஜம் தன் கை வலிக்கும் வரை அவளை அடித்துக்கொண்டிருந்தார். அவரை யாரும் தடுக்கவுமில்லை. பூர்ணாவுக்காக பரிந்து பேசவுமில்லை.   
ரோஹன் நாதனை முறைத்தவாறு “பத்து மாசத்துக்கு முன்னாடிதான் அவங்களுக்கு எல்லாம் நியாபகத்துல வந்தது வந்த உடனே! வாசுகியை பத்திதான் கேட்டாங்க, அமெரிக்கால இருந்த விசாரிச்சப்போ அவளுக்கு கல்யாணம் நடக்க இருந்தது தெரியவந்தது. அம்முமா ஓடி போய்ட்டாங்கனு சொல்லி சொல்லியே! வாசுகியோட படிப்பை நிறுத்திட்டீங்க, வெளில இருந்து விசாரிச்சப்போவே! வாசுகியை நடத்துற விதம் சரியில்லைன்னு புரிஞ்சது. அம்மு என் கிட்ட கேட்டுகிட்டே என் பொண்ண என்கிட்டே கூட்டிட்டு வந்துடு என்று மட்டும்தான். அப்போ எனக்கு தோணினது வாசுகியை கல்யாணம் பண்ணிக்கிறத தவிர வேற வழி இல்லன்னுதான்.
அதனால… என்ன மன்னிச்சிடுங்க ..ண்ணா” என்றவன் வாசனின் முகம் பார்த்து சங்கடமாக “அண்ணாக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்குனு போன் பண்ணி இவருக்கு சொல்லி கல்யாணத்த நிறுத்த பார்த்தேன். ஆனா நான் நினைச்சது நடக்கல. நான் இந்தியா வர்றதுக்குள்ள கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு” நாதனை மாமா என்று ரோஹன் அழைக்கவே இல்லை. அவன் குருமூர்த்தியை கூட மன்னித்து விட்டான். நாதனை அவனால் மன்னிக்க முடியவில்லை.
“இந்தியா வந்து அம்மு குடும்பத்தை பத்தி விசாரிச்சதுல எல்லார் மேலையும் கோபம்தான் வந்தது. குறிப்பா இவர் மேல, கல்யாணமாகி குழந்தையும் பிறந்து எத்தனை நாள் கூட வாழ்ந்திருப்பாரு அம்முவை புரிஞ்சிக்காம, ஓடிப்போய்ட்டாங்கனு நினனைச்சாரு சரி. எங்க இருக்காங்கனு யாருமே! தேடல. அந்த கோபம் இந்த குடும்பத்தை ஏதாவது பண்ணணும்னுதான் சந்திராவை கல்யாணம் பண்ணனும்னு நினச்சேன்” என்றதோடு முடித்துக்கொள்ள, மந்த்ரா ரோஹானை விழி அகற்றது பார்த்துக்கொண்டிருந்தாள்.
“உடம்பு முடியாம இருந்த என் மனைவியை பார்த்துக் கொண்டது அபி தான். அவளையும் அவ பொண்ணையும் சேர்த்து வைக்கணும், அவ மனசுல பெத்த அம்மாவை பத்தி என்ன நினைக்கிறானு தெரியாம, பக்கத்துல நெருங்காம ஒன்னும் பண்ண முடியல அதனாலதான் இந்த குடும்பத்துல பொண்ண கட்டணும்னு முடிவு பண்ணோம். ஆனா அதற்கு முன்னாடியே! வாசனும் ரோஹனும் நெருங்கிட்டாங்க, ரோஹன் அவன் நினைச்சதை சாதிச்சிட்டான்” என்றவர் குறிப்பிட்டது வாசுகியின் வாழ்க்கையை மேம்படுத்த வீடு வாங்க உதவியத்தையும், பணத்தேவை என்று வரும் பொழுது உதவுவதையும்.
“என்ன பெத்தது எங்க அம்மான்னா என்ன வளர்த்தது அம்மு தான்” என்ற ரோஹன் அபர்ணாவைக் கட்டிக்கொண்டான்.  
வாசனை பற்றி விசாரித்ததில் ராஜேந்திரனுக்கு முழு திருப்தி. அபர்ணாவிடமும் வாசனை பற்றி கூறியவர் “நல்ல பையன்தான் குடும்பம்னு வாழ்ந்துட்டான். காசு கொடுத்தாலும் வாங்க மாட்டான் தெரியாமத்தான் உதவனும்” வாசுகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது ரோஹன்தான் பணம் கட்டி இருந்தான். வாசனின் வீட்டை இரண்டரை கோடிக்கு வாங்கி வாசனிடம் ஒரு கோடி என்று சொல்லி இருந்தார் அதைத்தான் ரோஹன் சாதித்தான் என்று ராஜேந்திரன் குறிப்பிட, ஆனால் மந்திரா வாசுகியையும், அபர்ணாவையும் சேர்த்து வைக்க நடந்த திருமணம் என்று தவறாக புரிந்துக்கொண்டாள்.
“அப்போ வாசுகிக்காகத்தான் எல்லாம் பண்ணியா?” வாசன் “உர்ர்” என்று முகத்தை வைத்துக் கொண்டு கேட்க
“வாசுகிக்காக எல்லாம் பண்ணனும்னு நினைச்சது உண்மை …ண்ணா  அத நான் மறுக்க மாட்டேன். நீங்க வேற வாசுகி வேற இல்லையே! உங்க கூட பழகின பிறகு உங்கள என் அண்ணனாகவே! பார்த்துட்டேன். உங்களுக்காகவும் எல்லாம் செய்வேன்” என்றான் புன்னகை முகமாகவே!
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க, பூர்ணாவை அடித்து ஓய்ந்துப்போன ராஜம் “என் பொண்ணு வாழ்க இப்படி ஆகிருச்சே என்று புலம்ப”
“அதான் நான் வந்துட்டேனே! மா…” என்று அபர்ணா சொல்ல
“ஆ… அபி” என்று நாதன் கமறிய குரலில் சொல்ல
வெறுப்பாக அவரை பார்த்த அபர்ணா “இதோ இவள தொறத்திட்டு நான் வாழ வேண்டிய வாழ்க்கைய எனக்கு திருப்பி கொடுத்து விடுவீங்களா? நான் ஓடிப்போகல, என்ன கடத்திட்டு போய்ட்டாங்கனு எல்லார் கிட்டயும் சொல்லுவீங்களா?” என்று நாதனின் முகம் பார்க்க, கண்டிப்பாக சொல்வதாக அவர் முகம் சொல்ல பூர்ணா முற்றாக உடைந்தாள்.
“ஏன் குருவோடு நான் வாழ்ந்த வாழ்க்கைல எந்த மாதிரியான உறவு இருந்ததுன்னு தெரிஞ்சிகிட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்தீங்களா?” என்று கசப்பாக புன்னகைக்க, நாதன் பேச்சற்று நின்று விட
ரோஹன் அவரை முறைக்க, வாசன் “என்ன மனிதர் இவர்” என்று நாதனை வெறுப்பாக பார்த்தான்.
“மூர்த்தியோட அம்மாவாவையும் அப்பாவையும் கொன்னத தன் கண்ணால பார்த்தால அவர் ஒரு வித மனப்பிறழ்வுக்கு ஆளாக்கிட்டாரு. அதனால நான் அவர ஏமாத்திட்டதாக நினைச்சாரு. அவரு சரியான மனநிலைல இருந்திருந்தா அவரே! என்ன கொண்டு வந்து விட்டிருப்பாரு. விட்டிருந்தாலும் நீங்க என்ன ஏத்துக்கிட்டு இருந்திருப்பீங்களோனு எனக்கு சந்தேகம்தான் வருது” என்ற அபர்ணா நாதனை தீர்க்கமாக பார்க்க, கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்று அவர் பார்வையே! சொன்னது.
“இதோ இவள் என் வாழ்க்கையில் விளையாடாமல் இருந்திருந்தால். ஒருவேளை மூர்த்தியையே! நான் நல்லமுறையில் திருமணம் செய்து முறையாக வாழ்ந்திருப்பேனோ! என்னவோ! எது என்னவாக இருந்தாலும் நான் இங்க வந்தது என் பொண்ணுக்காக, அவ உண்மைய தெரிஞ்சிக்கிட்டு, என்ன புரிஞ்சி ஏத்துக்கிட்டா போதும்” என்று அபர்ணா சொல்ல வாசுகி அன்னையை அணைத்துக்கொண்டாள்.
“என்னம்மா நீ… ஒண்ணுமே! சொல்லாம நீ வந்தாலே உன் கிட்ட நான் வந்திருப்பேன். உன் போட்டோ கூட வீட்டுல இல்ல. உன்ன அடையாளம் தெரியாம உன்ன எப்படி கண்டு பிடிப்பேன்” என்று வெறுமையான குரலில் சொன்னவள் தன் குடும்பத்தாரை முறைக்கலானாள். அபர்ணா ஓடிப்போனதாக நினைத்து அவர்கள்தானே! ஒரு புகைப்படத்தைக் கூட விட்டு வைக்காது எரித்து விட்டிருந்தனர். இதில் அபர்ணா முகத்தை மறைத்துக்கொண்டு வர தேவையே இருக்கவில்லை.
பெத்து வளர்த்த அன்னையும் தன்னை நம்பவில்லை. கட்டிய கணவனும் நம்பவில்லை. ஒரு உறவு நீடிக்க நம்பிக்கை எவ்வளவு முக்கியம். அபர்ணா ஓடிப் போய்விட்டாள் என்று பூர்ணாவை கல்யாணம் செய்தவர் அபர்ணா மீது எந்த தவறும் இல்லை பூர்ணாவல் தான் எல்லாம் என்று அவளை ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் அபர்ணாவோடு வாழ தயாராகி விட்டார். அதுவும் அவள் குருமூர்த்தியோடு எந்த வாழ்க்கையும் வாழவில்லை என்பதனால் மட்டும். அபர்ணா மட்டும் தனக்கு துரோகமிழைத்த பூர்ணாவோடு வாழ்ந்தவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். தன்னை நம்பாதவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“முதல்ல இவங்கள இங்க இருந்த போக சொல்லு வாசுமா… என்னால முடியல” என்று அபர்ணா அமர்ந்து விட வாசன் பேச ஆரம்பித்தான்.
“இது என் வீடு. இங்க நான் சொல்லுறதுதான் சட்டம்” என்றவன் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க வாசன் “என் வீடு” என்றதில் வாசுகி கணவனை முறைக்கலானாள்.
“என் மனைவியோட அம்மா… அதாவது என் அத்த எங்க கூட இருக்காங்க, அதனால இந்த பொம்பள எந்த காரணத்தைக் கொண்டும் என் வீட்டுக்கு வரக் கூடாது” என்று பூர்ணாவைக் கைகாட்டி சொன்னவன் “பேத்திய பார்க்க நீங்க எப்போ வேணாலும் வரலாம்” என்று ராஜத்திடம் சொன்னவன் “நீங்க பொண்ண பார்க்கணும்னு தோணிருச்சுனா… எனக்கு போன் பண்ணுங்க பொது இடத்துக்கு கூட்டிட்டு வரேன். இங்க வராதீங்க.. அத்தைக்கு சங்கடமாக இருக்கும். இப்போ கிளம்புங்க” என்று கறாராக சொல்ல பொறுமையாக பேசும் வாசன் இப்படிக்கு கூட பேசுவானா என்று அனைவரும் பார்த்திருந்தனர்.
நாதனும், பூர்ணாவும் வெளியேற, மந்த்ராவும் அவர்களின் பின்னால் செல்லலானாள். அவள் கையை பிடித்துத் தடுத்த ரோஹன்
“நீ எங்க டி போற?” என்று கேட்க,
கோபத்தில் முகம் சிவந்தவளாக “அதான் சொன்னீங்களே! பெரியம்மாக்கு நியாயம் கிடைக்கத்தான் இந்த கல்யாணம்னு. கிடைச்சிருச்சே!” என்றவாறு கையை இழுக்க, அவளை தரதரவென இழுத்துக்கொண்டு சென்று கதவை சத்தியவான் இழுத்தணைத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தான்.

Advertisement