Advertisement

அத்தியாயம் 27
மண்டபத்திலிருந்து வரும் பொழுதே! விது நன்றாக தூங்கி இருக்க, வாசன் குழந்தையை தன் தோளில் போட்டுக்கொண்டு சோர்ந்திருந்த மனைவியையும் மறுகையால் அணைத்தவாறுதான் வீட்டுக்குள் வந்தான்.
மந்த்ரா திடிரென்று இப்படி செய்வாளென்று எதிர்பார்க்காத அபர்ணா சுதாரிக்கும் முன் மூவரும் அவளை பார்த்து விட்டதில் இதற்கு மேலும் எதற்கு முகத்தை மறைக்க வேண்டும் என்று தலையில் இருந்த தொப்பியையும் நீக்க,
“அபி….” என்று நாதன் கண்கலங்க,
நீண்ட நாட்களுக்குப் பின் மகளைக் கண்டு “அம்மு…” என்று ராஜம் துடிக்க, 
“வெக்கமா இல்ல… உங்க ரெண்டு பேருக்கும். ஓடிப்போனவளுக்காக இப்படி துடிக்கிறீங்க, என்ன மாஜி பொண்டாட்டி மேல பாசம் பொங்குதா?” அபர்ணா அடித்த அடியும் நியாபகத்தில் வரவே! பூர்ணா நாதனை முறைக்கலானாள்.
தன்னோடு இத்தனை நாட்கள் இருந்த அம்மு தன்னை பெற்ற அம்மாவா? என்ற அதிர்ச்சியில் வாசுகியின் உடல் ஆட்டம் காண விதுவை ராமநாதனின் கையில் கொடுத்த வாசன் அறைக்கு செல்லுமாறு கூறியவாறே! மனைவியை தாங்கிப் பிடித்துக்கொண்டான்.
பாய்ந்து அவள் கன்னத்தில் அறைந்த அபர்ணா “யாரு டி ஓடிப்போனா… எல்லாம் உன்னாலதான்” ஆவேசமாக கத்த, அபர்ணா என்ன புதுக் கதை கூறுகிறாள் என்று அனைவரும் திகைத்துப் பார்த்துக்கொண்டிருக்க,
“நீங்க தான் என் அம்மாவா… ஏன் மா…. என்ன விட்டுட்டு போய்ட்டிங்க? உங்க கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாம்ல” என்று வாசுகி அபர்ணாவின் கையை பிடித்துக்கொண்டு கதற, வாசனின் நெஞ்சங் கூடு வெற்றிடமான உணர்வு.
“நான் எங்கம்மா போனேன்…. என்ன கடத்திக் கொண்டு போய்ட்டாங்க” என்று அபர்ணா அன்று நடந்தவைகளுக்காக வாய் விட்டு கதறி அழலானாள்.

 

அபர்ணாவை விட இரண்டு வயது சிரியவள்தான் பூர்ணா. அவர்களுக்கு ஒரு தம்பி. அப்பா சுந்தரம் விவசாயி. அம்மா ராஜம். ஆண் குழந்தையிடம் செல்லம் கொஞ்சும் ராஜம் பெண்கள் இருவரிடமும் மிகவும் கண்டிப்போடுதான் இருப்பார். சுந்தரம் குழந்தைகளை கொஞ்ச மாட்டார் ரொம்பவே! கண்டிப்பானவர். அதற்காக அடிக்கவோ! திட்டவோ! அதட்டவோ கூட மாட்டார்.
பொதுவாகவே! வீட்டில் மூத்த பெண் அமைதியாகவும் இரண்டாவது பெண் வாயாடியாகவும் அமைந்து விடுவது இயல்பு. இங்கேயும் அதே நிலைதான். ராஜம் உட்பட பாட்டிகள், அத்தைகள் என்று பூர்ணாவை அடக்க, கோபம் எல்லாம் அக்கா அபர்ணா மேல்தான் திரும்பியது.
“அவளை பார்த்து கத்துக்க, அவளை மாதிரி நடந்துக்க, அவளை மாதிரி, இருந்துக” கேட்டுக்கேட்டு பூர்ணாவின் கோபம் வன்மமாக அவள் நெஞ்சில் ஏறியிருந்தது.
சின்ன வயதில் அக்காவின் நோட்டை கிழிப்பது, பென்சிலை உடைப்பது என்ற ஆரம்பித்தது வளர்ந்த பின்னும் தொடர்ந்தது. அபர்ணா ராஜத்திடம் முறையிட்டாள் பூர்ணாவுக்கு செம்மையாக அடி கிடைக்கும். அதற்கும் சேர்த்து இன்னும் ஏதாவது செய்வாள் பூர்ணா.
வளர்ந்த பின் அபர்ணா தங்கை புரிந்துகொள்வாள் என்று விட்டு விட பூர்ணா அப்படி விடவில்லை. 
சின்ன வயதிலிருந்தே! அபர்ணாவுக்கு வாங்கும் துணி, செப்பல் எல்லாம் ராஜத்தால் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டு பூர்ணாவுக்கு கொடுக்கப்பட்டு வந்தன. ஒரு வயதில் அக்காவின் பொருட்கள் மேல் ஆசை வந்தாலும், ஒரு வயதுக்கு மேல் “அவள் பாவித்தவற்றைத்தான் நான் போட வேண்டுமா?” என்ற கோபமும் எட்டிப்பார்களானது.
இதனால் ராஜத்திடம் சண்டையிடும் பூர்ணா “அவ வாங்கி ஒரு வருஷம் கூட ஆகல அவளுக்கு பத்தல, உனக்கு சரியா இருக்கு. யாருக்கோ கொடுக்குறத நீ போட்டாதான் என்ன? தீபாவளி, பொங்கல்னு புதுசு வாங்குறதுதானே!” ராஜம் கூறியதும் அமைதியாகி விடுவாள்.
நாளாக நாளாக அபர்ணா பாவித்த பொருட்கள்தான் அவளுக்கு சொந்தம் என்ற ஒரு விஷயம் அவள் மனதில் ஆழமாக பதிந்துப் போனது. அப்படி கிடைக்கும் துணிகள் போட்ட இரண்டாவது நாளே! கிழிந்து போய் இருக்கும், அல்லது சாயம் பட்டிருக்கும். இப்படி ஏதாவது செய்து தன் மனத்தாங்கலை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருந்தாள் பூர்ணா.
அபர்ணா கல்லூரி செல்ல ஆரம்பித்திருக்க, பூர்ணா ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள். பாடசாலை விட்டு வந்து கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றது ஒரு வண்டி. ஹெல்மட்டை கழட்டி அவளை பார்த்து ஒருவன் ஹாய் சொன்னதும் பதின் வயதில் இருந்தவளுக்கு அவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
“ஹேய் பாப்பா… இந்த சாக்லட். இன்னும் வேணாலும் கேளு நிறைய வாங்கித் தரேன்”
“நான் ஒன்னும் பாப்பா இல்ல” என்றவள் அவன் கொடுத்த சாக்லட்டை வாங்கி சாப்பிடவும் ஆரம்பித்திருக்க, 
“எனக்கு ஒரு உதவி பண்ணுறியா?” அவன் வந்த வேலையில் கவனமானான்.
“அதுக்கு தானே! இந்த சாக்லட். சரி என்னனு சொல்லுங்க”
“இந்த லெட்டரை உங்க அக்கா கிட்ட கொடுத்துடுறியா?” என்றவன் ஒரு சின்ன பெட்டியோடு கடிதமொன்றையும் கொடுக்க, மறுப்பு தெரிவிக்காமல் வாங்கிக் கொண்டு வீடு வந்தவள் அதை அபர்ணாவிடம் கொடுக்காமல் அதில் என்ன இருக்கிறது என்று பார்க்கலானாள்.
ஒரு செட் வளையல்கள், எல்லா நிறத்திலும் இருக்க, பூர்ணாவின் கண்கள் விரிந்தது. கடிதத்தை எடுத்து படித்தவளுக்கு அந்த வயத்துக்குண்டான மாற்றங்கள் எல்லாம் நிகழ ஆரம்பித்திருந்தது.
அபர்ணாவை எங்கு பார்த்தான், எப்பொழுது பார்த்தான், காதல் வயப்பட்டது… என்பதையெல்லாம் குறிப்பிட்டிருந்தவன், அன்று அவள் அணிந்திருந்த வளையல்கள் அவளுக்கு சிறிதும் பொருத்தமில்லையென்று அவன் அனுப்பிய வளையல்களை பரிசாக பெற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டிருந்தான்.
உருகி உருகி கவிதைகள் என்று அந்த கடிதம் நாலு பக்கத்துக்கு இருக்க, பதில் வேறு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தான்.
கண்டிப்பாக அபர்ணாவுக்கு தெரிந்தால் தன்னை திட்டி விடக் கூடும். வளையல்களின் பக்கம் கண்கள் செல்ல, அதை இழக்கவும் மனம் விரும்பவில்லை. அபர்ணா எழுதுவது போல் கடிதமொன்றை எழுதியவள் அடுத்தநாள் காத்திருந்தவனிடம் சேர்த்திருந்தாள்.
தினமும் அவனால் சந்திக்க முடியாதாம். ரொம்ப தூரத்தில் இருக்கிறதாக சொன்னவன் அடுத்த மாதம் வருவதாக கூறி சென்றான்.
சொன்னது போல் அடுத்த மாதம் வந்தவன் அபர்ணா எங்கு எனக்கேட்க, அவளுக்கு உடம்பு முடியவில்லை என்றாள் பூர்ணா. வந்தும் அவளை பார்க்க முடியவில்லை என்றதும் கவலையடைந்தவன் தொலைபேசியிலாவது பேச முடியுமா என்று கேட்க, வீட்டில் தொலைபேசி இல்லை என்றாள்.
தன்னால் வர முடியாமல் போனால் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று யோசித்தவன் அவனுடைய விலாசத்தைக் கொடுத்து பூர்ணாவிடம் விலாசத்தை பெற்றுக்கொண்டு சென்று விட்டான்.
ஒரு வருடமாக இவர்கள் கடித உறவில் இருக்க, அபர்ணாவுக்கு இந்த விஷயம் தெரியவே! இல்லை. வீட்டாருக்கும் சுற்றுலா சென்ற போது சந்தித்த தோழிதான் கடிதம் அனுப்புவதாக பூர்ணா கூறி இருந்தாள். மாதம் ஒருமுறை வருவதால் வீட்டாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
பூர்ணாவும் காலேஜ் செல்ல ஆரம்பித்திருக்க, அவள் மனதில் கடித உறவில் இருந்தவன் மீது காதல் முளைத்திருந்தது. அவன் பேசுவது அக்காவிடம் இல்லை தன்னிடம் என்று கூறினால் ஏற்றுக்கொள்வானா? என்ற டென்ஷன் அவளை தொற்றிக்கொள்ள எதற்கெடுத்தாலும் சிடுசிடுக்கலானாள். சதா டென்ஷனில் இருந்தவள் கண்ட கண்ட சினிமாவை பார்த்து அவன் புரிந்துக்கொள்வான், ஏற்றுக்கொள்வான் என்று நம்பி தன் மனதை தேற்றிக்கொண்டாள்.
இதற்கிடையில் வீட்டார் நாதனுக்கு, அபர்ணாவுக்கும் முடிச்சு போட பூர்ணாதான் முதலில் சந்தோஷமடைந்தாள்.
கடிதம் எழுதுபவன் வேறு அபர்ணாவை சந்திக்க வேண்டும் என்று நச்சரிக்க, தான் காலேஜ் செல்வதில்லை. வீட்டில் நிறுத்தி விட்டார்கள் அதனால் சந்திக்க வர முடியாது. என்று பூர்ணா கடிதம் எழுத அப்படியாயின் பெண் கேட்டு வீட்டுக்கு வரவா? என்று அவன் கடிதம் மூலமாக கேட்டிருந்தான். 
வீட்டுக்கு வந்தால் தன் குட்டு தெரிந்து விடும் என்று பூர்ணா, தனக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் இன்னும் இரண்டு வருடங்களில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வீட்டில் பேசிக்கொண்டதாகவும், அதனால் இப்பொழுது வர வேண்டாம் என்று பதில் கடிதம் எழுதி இருந்தாள். அதற்குள் அபர்ணாவின் படிப்பும் முடிந்து நாதனோடு திருமணமும் முடிந்து விடும் என்ற நம்பிக்கையில்.
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும் தருவாயில் சுந்தரம் திடிரென்று நோய் வாய்ப்பட்டு, இனி தான் உயிரோடு இருக்க மாட்டோம் என்று புரிய அபர்ணாவின் திருமணத்தை அவசர அவசரமாக செய்யலானார்.
அபர்ணாவின் திருமணமும் இனிதே! நிறைவடைந்து, சுந்தரமும் மகளின் திருமணத்தை பார்த்த நிம்மதியில் கண்ணை மூடினார். கல்யாணமன்றே தந்தையை இழந்த துக்கத்தில் அபர்ணா இருக்க, வாழ்க்கையை தொடங்க முடியாமல் திண்டாடினான் நாதன்.
நாட்கள், வாரங்களாகி, மாதங்களாக, வாசுகியை வயிற்றில் சுமந்து நாதனோடு சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.
கடிதம் தீட்டியவன் மாயமாய் மறைந்தும் போய், எந்த கடித்த தொடர்பும் அற்று பூர்ணா சோகக்கடலில் மூழ்கி இருக்க, வாசுகியை பெற்றேடுத்தாள் அபர்ணா.
குழந்தைக்கு நான்கு மாதம் முடிவடையும் தருவாயில் வயிற்றுப்போக்கு ஆரம்பித்து ரொம்பவே! கஷ்டப்பட கடவுளை வேண்டி நேர்சை வைத்தவள் குழந்தை குணமடைந்த உடன் அதை நிறைவேற்ற கோவிலுக்கு கிளம்பினாள் அபர்ணா.
எல்லாம் முடித்துக்கொண்டு வந்தவளின் அருகில் ஒரு கார் வந்து நிற்க, ஒதுங்கிப்போனவளை கதவு திறந்து உள்ளே இருந்தவன் இழுத்து உள்ளே போட்டுக்கொண்டு காரை கிளப்பி இருந்தான்.
சில கணங்களில் நடந்த நிகழ்வால் அதிர்ச்சியடைந்த அபர்ணா என்ன ஏது என்று கேள்வி எழுப்பும் முன் அவள் முகத்தில் மயக்க மருந்து தெளிக்கப்பட்டு மயக்கத்துக்கு சென்றாள்.
கோவிலுக்கு சென்ற அபர்ணாவை காணாது குழந்தையை வைத்துக்கொண்டு ராஜம் நிற்க, மனைவியையும், குழந்தையையும் பார்க்க, நாதன் வீட்டுக்கு வந்திருந்தார்.
ஐந்தாம் மாதத்தில் குழந்தைக்கு பெயரிடும் விழா எடுக்க வேண்டும் அத்தோடு மனைவியையும் குழந்தையும் தன்னோடு அழைத்து செல்ல வேண்டும் என்ற சொல்லவே! வந்திருந்தார்.
அபர்ணாவை காணாது காத்திருந்து, காத்திருந்து இரவானதும் வீடே பரபரப்பானது. விசாரித்ததில் அபர்ணா யார் வண்டியிலையோ! ஏறிச் செல்வதை பார்த்ததாக ஒருவர் கூறி இருந்தார்.
தூரத்திலிருந்து பார்த்ததால் அவள் ஏறிச் சென்றாளா? உள்ளே இருந்தவன் இழுத்தானா என்று அந்த வயதானவருக்கு தெரியவில்லை.
“ஏறிச்சென்றாளா?” என்றதும் அவள் அறையை பரிசோதிக்க, அவன் அனுப்பிய கடிதங்கள் அந்த அலுமாரியில்தான் இருந்தன. பூர்ணாவும் அந்த அலுமாரியை பாவித்தாலும் கடிதங்கள் அபர்ணாவின் பெயரில் உள்ளதால் நொடியில் ஒன்றும், ஒன்றும் இரண்டு என்று கணக்குப் போட்டு அபர்ணா காதலனோடு வீட்டை விட்டு ஓடி விட்டாள் என்று இவர்களே! முடிவு செய்திருந்தனர்.
கல்யாணமான நாள் முதல் சில நாட்கள் வரை தந்தைக்காக அபர்ணா சோகமாக இருந்தது கூட காதலனுக்காக என்று திரித்தும் பேசப்பட்டது.
ராஜம் பூர்ணாவை தீப் பார்வை பார்க்க,
“என்ன மன்னிச்சுடு அபி… அந்த கடிதத்தை எல்லாம் பார்த்ததும் நான் நம்பிட்டேன். நான் ஒரு பாவி, பாவி” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதவாறு அபர்ணாவின் கையை நாதன் பிடிக்கப் போக கையை இழுத்துக்கொண்ட அபர்ணா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“உங்கள நான் முழுசா நம்பினேன். ஆனா நீங்க என்ன நம்பள, ஒரு பேப்பரை பார்த்து என்ன சந்தேகப் பட்டுடீங்க, அது கூட பரவால்ல என் மேல உண்மையான அன்பு இருந்திருந்தா என்ன தேடி வந்திருப்பீங்க, என்ன கூட்டிட்டு போக இல்லாட்டியும் கோபமா நாலு அடி அடிக்கவாக வேண்டியாவது தேடி இருப்பீங்க. அந்த கடிதத்துல இருக்குற அட்ரசுக்கு வந்தாவே! எனக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிருந்திருக்கும்” முழுவதுமாக மனம் வெறுத்து அபர்ணா பேச வாயடைத்துப் போனார் நாதன்.
“அம்மு உன்ன கடத்திட்டு போனவன்…” ஒரு அன்னையாக ராஜம் கலங்கி நிற்க,
“என்ன பார்க்கவும், பேசவும் வந்தவன் என் கழுத்துல தாலிய பார்த்ததும் என்ன கடத்திட்டு போய்ட்டான். நான் அவனை ஏமாத்திட்டதாக கத்தினான். எனக்கு ஒன்னும் புரியல” என்ற அபர்ணா அன்று நடந்ததை சொல்லலானாள். 
மயக்கம் தெளிந்து அபர்ணா கண்விழித்த பொழுது ஒரு கட்டிலில் படுத்திருந்தாள். அறை கும்மிருட்டில் இருக்க, தலை வேறு விண்விண் என்று வலிக்க ஆரம்பித்திருந்தது.
தான் எங்கே இருக்கின்றோம்? யார் கடத்தினார்கள் என்று ஒன்றும் புரியாமல் அபர்ணா தட்டுத்தடுமாறி அறைக் கதவை திறக்க முயற்சிக்க, கதவு பூட்டி இருந்தது. ஒருவாறு தேடி மின் விளக்கை போட்டவளுக்கு அறையை பார்க்க சற்று வியப்பாக இருந்தது.
எல்லா வசதிகளும் கூடிய அறை ஆனால் ஜன்னல் மட்டும் இல்லை. இப்படி ஒரு அறை எந்த வீட்டிலாவது இருக்குமா? இப்பொழுதே! மூச்சு முட்டுவது போல் இருக்க, குழந்தை பசியால் அழும், தன்னை தேடும், என்ற எண்ணம் வர அந்த இடத்தை விட்டு வெளியேறினால் போதும் என்று தோன்ற இருக்கும் எல்லா கதவுகளையும் திறக்க முயற்சித்தாள்.
ஒரு கதவு குளியலறையாக இருக்க, மறுகதவு இன்னொரு அறைக்கான வழி. அந்த அறை இந்த அறையை விட பெரியதாக இருக்க, அந்த அறையிலிருந்து வெளிய போக முடியுமா என்று இடது புறம் இருந்த கதவை திறக்க அது ஒரு சிறிய ஜிம் என்று கண்டவள் அங்கு எந்த வழியும் இல்லை.
மீண்டும் பெரிய அறைக்கு வந்தவள் வலது புறம் இருந்த கதவை திறக்க, அது தொலைக்காட்ச்சி பார்க்கவென அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அறை, திரும்ப அறைக்குள் வந்து அவள் இருந்த அறைக்கு நேராக இருந்த கதவை திறக்க, அது ஒரு வரவேற்றப்பறை.
அங்கும் மூன்று பக்கமாக மூன்று கதவுகள் இருக்க நொந்து விட்டாள் அபர்ணா. “வாசல் கதவு எதுவாக இருக்கும்? ஒவ்வொருகாதவாக திறக்கும்வேளையில் அவன் வந்து விட்டால்? அல்லது கதவு பூட்டி இருந்தால்?” அவள் மனது கேள்வி எழுப்ப “திறந்துதான் பார்க்க வேண்டும். இங்கயே நின்றாள் எப்படி சீக்கிரம், சீக்கிரம் அவன் வந்துவிடப் போகிறான்” மூளை அவளுக்கு எச்சரிக்கை செய்ய ஓடிச்சென்று அறைக்கு எதிர்புறமாக இருந்த கதவை திறக்க அது சமையலறையும் சாப்பாட்டறையும்.
“ஹேய் அபி எந்திரிச்சிட்டியா?…. வா…வா சாப்பிடலாம்” உணவுப் பாத்திரங்களை அடிக்கிக் கொண்டிருந்தான் அவன்.
தூக்கிவாரிப்போட அபர்ணா பின்னாடி அடியெடுத்து வைத்தவள் மற்ற கதவை நோக்கி ஓட அவனோ எந்த பதட்டமும் இல்லாமல் அவள் ஓடுவதை சமையலறை கதவில் சாய்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
ஓடி ஓடி கலைத்தவள் அவனிடமே வந்து கதவை திறந்து விடும்படி கெஞ்ச
“பசிக்கலயா? வா முதல்ல வந்து சாப்பிடு” சர்வசாதாரணமாக சொல்ல அபர்ணாவுக்கு அடுத்து என்ன பேசுவதென்று புரியவில்லை.
“என்ன பாக்குற? எனக்கு ரொம்ப பசிக்குது. என்ன பேசுறதா இருந்தாலும் சாப்பிட்டுட்டு பேசலாம்” என்றவன் சாப்பாட்டு மேசையை நோக்கி நடக்க அபர்ணாவும் அமைதியாக நடந்தாள்.
அவளுக்கு பார்த்துப் பார்த்து பரிமாறியவன் ஒரு வார்த்தை பேச வில்லை. சாப்பிட்டுக்கொண்டிருந்த அபர்ணாவின் சிந்தனையில் பார்க்க, நல்லவனாகத் தெரிகின்றான். ஆள் மாறி கடத்திக் கொண்டு வந்து விட்டான் போலும், சொன்னால் புரிந்துக்கொள்வான் என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் சாப்பிட்டு முடிந்ததும் அவன் பாட்டுக்கு நடக்க அபர்ணா அவன் பின்னால் ஓடிச்சென்று வீட்டுக்கு செல்ல வேண்டும், குழந்தை அழுதுகொண்டு இருப்பாள் என்று சொன்னதும் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவன் அரக்கனாக மாறி இருந்தான்.
“ஏன்.. ஏன் இப்படி பண்ண? நான் உனக்கு என்ன துரோகம் பண்ணேன். என்ன எதுக்கு ஏமாத்தின?” என்று கத்தியவாறு அபர்ணாவின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்திருந்தான்.
அவன் கையை பிடித்து தடுக்கும் பொழுதுதான் உணர்ந்தாள் அவள் கழுத்தில் இருந்த தாலி கழுத்தில் இல்லை என்பதை.
அவள் மூச்சு விட சிரமப்படும் பொழுது அவளை விட்டவன் இழுத்துச்சென்று அவள் இருந்த அறையில் விட்டு “நாளைக்கு காலையில் நமக்கு கல்யாணம்” என்று விட்டு செல்ல அபர்ணா தரையில் மடிந்து அழலானாள்.
அழுதவாறே தரையிலையே! தூங்கிப் போய் இருந்தவளை அவன் தான் உலுக்கி எழுப்பி இருந்தான். அவனை பார்த்ததும் எல்லாம் நியாபகத்தில் வர
“எனக்கு நீங்க யாருன்னே! தெரியல” என்று அபர்ணா சொன்னதும் “பளார்” என்று அவள் கன்னத்தில் அறைந்தவன்
“என்ன காதலிச்சு ஏமாத்தி வேற ஒருத்தன கல்யாணம் பண்ணதுக்கே! உன்ன கொன்னு குழி தோண்டி புதைச்சு இருக்கணும். இங்க…இங்க.. உன்ன வச்சதால அத பண்ண முடியல” என்று அவன் நெஞ்சை தொட்டுக்க காட்டியவன். “எவன்கூடயோ புள்ளய வேற பெத்து வச்சிருக்கானு சொல்லுற? முதல்ல உன் புள்ளய போடுறேண்டி…”
“ஐயோ.. அப்படி ஏதும் பண்ணிடாத… சத்தியமா எனக்கு நீ யார்னு தெரியாது..”
“தெரியாது.. தெரியாது..” என்று கேட்டவாறு கன்னம் கன்னமாக அறைந்தவன் “எக்சிடண்ட் ஏதாவது ஆகி பழசெல்லாம் மறந்துட்டியா?” என்று அவள் தலைக் கோதி அவன் கைத்தடம் இருந்த கன்னங்களையும் வருடி விட அபர்ணாவோ!  “தெரியாது.. தெரியாது” என்றவாறே மயங்கி இருந்தாள்.
அவள் கண்விழிக்கும் பொழுது அவள் கழுத்தில் புதுத் தாலி தொங்கிக் கொண்டிருந்தது.  வாசலில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு எல்லாம் நடந்து முடிந்திருந்ததோடு. வாசலில் யாரும் இல்லை. அவள் சோபாவில் அமர்ந்தவாக்கில் தான் இருந்தாள். அந்த இடத்தை விட்டு சென்றால் போதும் என்று வெளியே! ஓடியவளுக்கு அதிர்ச்சி. அது ஒரு குட்டி தீவு. அந்த வீடும், சுற்றிலும் காடு, அதை சுற்றி நீர், அதை தவிர கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஒன்றுமில்லை. அங்கிருந்து தப்பி செல்ல எந்த வழியும் இல்லாமல் சோர்ந்து போய் அங்கேயே! அமர்ந்து விட்டாள் அபர்ணா.
இரவானதும் உடல் எல்லாம் உதற ஆரம்பித்தது. தாலியை கட்டியவன் கணவனாக உரிமையை நிலைநாட்ட முனைந்தால் என்ன செய்வது? “உயிரைத்தான் மாய்த்துக்கொள்ள வேண்டும்” அவள் மனம் சொல்ல “இல்லை. இது கல்யாணமே! இல்ல. எனக்கு ஏற்கனவே! கல்யாணம் ஆகிருச்சு. இது என் சம்மதம் இல்லாம, எனக்கு தெரியாம நடந்தது. என்னை தேடி என் கணவன் வருவார். என் குழந்தைக்காக நான் உயிரோடு இருக்க வேண்டும்” என்று தனக்கு சொல்லிக்கொண்டவள் உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்து கையில் தூக்கக் கூடிய டம்பல் {உடற்பயிற்சி செய்ய உதவும் இரு முனை பளுக்கருவி} ஒன்றை கொண்டுவந்த கட்டிலுக்கு கீழே மறைத்து வைத்தாள்.
இரவு உணவுண்டு பின் அபர்ணாவை அவளறையில் விட்டவன், அவனறையில் தூங்கி இருந்தான். அவளோடு அன்பாக நடந்துக்கொண்டான். ஒன்றாக உணவுண்டான். சினிமா பார்த்தான். கூடவே! இருந்தான். அவனை தெரியாது என்றாலோ! அவள் வீட்டுக்கு போக வேண்டும் என்றாலோ! மட்டும் சரமாரியாக அடிக்கலானான். அந்த தீவை விட்டு அவன் எங்கும் செல்லவும் இல்லை. தேவையான பொருட்கள் அனைத்தும் ஒரு போட்டில் வந்து இருவர் கொடுத்து விட்டு சென்றனர்.
மூன்று மாதங்கள் கடந்திருக்க, இவன் யார் என்றும் தெரியவில்லை. தன்னை பற்றி பேசினால் தானே! அடிக்கின்றான் என்று அவனை பற்றி பேச ஆரம்பித்தாள் அபர்ணா. பெயரை கேட்டால் அடிப்பான் என்று அம்மா.. அப்பாவை பற்றிக் கேக்க அவள் கழுத்தை பிடித்து இறுக்கலானான்.
மூச்சு விட முடியாமல் அவள் திமிரவும் விட்டவன் “எனக்கு நீ, உனக்கு நான். வேற யாரும் வேணாம்” என்று ஒன்றும் நடவாதது போல் வேறு பேச ஆரம்பித்தான். அபர்ணாவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது அவன் நார்மலாக இல்லை. ஒரு சைக்கோ என்று.
பகல் முழுவதும் அவன் கூடவே! இருப்பதால் அந்த வீட்டை சோதனையிட்டு ஏதாவது கிடைக்குமா என்று கூட பார்க்க முடியவில்லை. அப்படியும் அவன் அறியாமல் அவன் அறையை துளாவியத்தில் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை.
எல்லா நாளும் ஒரே மாதிரிதான் எல்லா வேலைகளையும் செய்து வருகிறான். இந்த நேரத்தில் எழுந்து, சமைத்து, சாப்பிட்டு, தூங்குறது என்று குறிப்பிட்ட நேரத்தில் செய்யலானான். அதை மாற்றினால் என்ன செய்வான் என்று சோதித்துப் பார்க்க, பகல் உணவு உண்ட உடன் அபர்ணா தூக்கம் வருது என்றவள் அவன் கட்டிலில் போய் படுத்துக்கொள்ள அவளையே! சில நிமிடங்கள் பார்த்திருந்தவன் பக்கத்து அறைக்கு சென்றிருந்தான்.
உலுக்கி எழுப்புவான் என்றுதான் அபர்ணா எதிர்பார்த்தாள். ஆனால் அப்படி அவன் செய்யவில்லை என்றதும் உண்மையில் இவனுக்கு மனநல பாதிப்பு இருக்கா, இல்ல இவன் குணம் இப்படியா என்று குழம்பினாள்.        
பக்கத்து அறையில் அவன் என்ன செய்கின்றான் என்று பார்க்க மனம் தூண்ட அறை மணித்தியாலத்தை எப்படியோ தள்ளியவள் மெதுவாக அடியெடுத்து வைத்து கதவின் கைப்பிடியை திருக, கதவும் சத்தமில்லாமல் திறந்துக்கொண்டது. அறையில் காயிதங்களுக்கு நடுவே அமர்ந்த வாக்கில் தூங்கி இருந்தான்.
“என்ன இவ்வளவு பேப்பர்ஸ்? என்ன இதெல்லாம்” என்ற சிந்தனையோடு எடுத்துப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி எல்லாம் அவள் அனுப்பியது போல் அனுப்பப்பட்ட கடிதங்கள். சுவரில் அவளுடைய புகைப்படம் ஒன்று பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. அந்த புகைப்படம் கூட பூர்ணா அவளை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு ஸ்டூடியோவுக்கு சென்று எடுத்தது நியாபகம் வரவே! எல்லா கடிதங்களையும் எடுத்து அவசரமாக பார்கலானாள். ஆம் அது அவள் தங்கையின் கையெழுத்து.
“துரோகம், பச்சை துரோகம். எதோ சின்ன பெண் கோபத்தில் எதோ செய்கிறாள் என்று கண்டும் காணாது இருந்தால் என்ன வேலை செய்து வைத்திருக்கிறாள். இங்க இருந்து போன உடன் அவளை நல்ல சாத்தானும்”
அதிர்ச்சியும், கோவமும் ஒன்று சேர கண்ணீரும் வழிய நின்றவளைக் கண்டு கண்விழித்தவன் “எண்ணனாச்சு இப்போ எதுக்கு அழகுற?” என்று கேக்க
“பேப்பரும் பேனாவும் கொடுங்க” என்றவள் மளமளவென கையிலிருந்த கடிதத்தில் இருந்ததை பார்த்து எழுதி அவன் கையில் இரண்டையும் கொடுத்து “நல்லா பாருங்க இதுதான் என் கையெழுத்து. உங்களுக்கு கடிதம் நான் அனுப்பவே! இல்ல. நீங்க யாருன்னே! எனக்கு தெரியாது” என்று கண்ணீரோடு சொல்ல
“நோ…..” என்று கத்தியவன் தலையை பிடித்து அமர்ந்து விட்டான். ஒரு பைத்தியம் போல் ஏதேதோ புலம்பலானான்.
உண்மையை புரிந்துக்கொண்டான் அவன் தன்னை விட்டு விடுவான் என்று அபர்ணா நினைக்க, அவனோ! “இல்ல… இல்ல…. நீ என்ன ஏமாத்த பாக்குற” கத்தினான்.  
“இல்ல. நான் ஏமாத்தல. சத்தியமா… எனக்கு நீங்க யார்னு தெரியாது” என்றாள் அபர்ணா. 
“நான் உன் புருஷன். மூணு மாசத்துக்கு மேலா என் கூட இருக்க, இன்னுமா உனக்கு என்ன தெரியாது” என்று குரூரமாக சிரித்தவன் “எனக்கு நீ… உனக்கு நான்… வேற யாரும் இங்க இல்ல. வரவும் மாட்டாங்க. வா நேரமாச்சு டி சாப்பிடலாம்” என்றவன் அவள் கையை பிடித்து இழுக்காத குறையாக சமயலறைக்கு செல்ல இந்த ஜென்மத்தில் இவன் தன்னை விட மாட்டான் என்று மட்டும் அபர்ணாவுக்கு புரிந்தது.
நாட்கள் மட்டும் நகர்ந்துக் கொண்டே இருக்க, அபர்ணாவின் வாழ்க்கை சிறைப்பறவை வாழ்க்கைதான். அந்த தீவுக்குள் மட்டும் தான் அவளுக்கு சுதந்திரம் இருந்தது. அவனும் எங்கும் செல்வதில்லை. அவனை அடித்துப் போட்டு விட்டு தப்பி செல்லவும் முடியாது. அவனை வைத்தேதான் தப்பிக்க வேண்டும்.
இத்தனை நாள் அவன் கூடவே! இருந்ததில் ஒன்றை நன்றாக புரிந்துக் கொண்டிருந்தாள் அபர்ணா. அது அவள் வீட்டை பற்றியோ! அவன் வீட்டை பற்றியோ! பேசினால் அவளுக்கு சரமாரியாக அடி விழும். மற்றபடி. ஒரு குழந்தையை பாதுகாப்பது போல், அவன் அவளை பார்த்துக்கொண்டான்.  
அபர்ணா கூறியவைகளைக் கேட்டு மேனி நடுங்கியவாறு “அங்க இருந்து எப்படி மா.. தப்பிச்சு வந்தீங்க?” என்று வாசுகி கண்கள் கலங்கி நிற்க,
அபர்ணா தொடர்ந்தாள்.

Advertisement