Advertisement

அத்தியாயம் 26
மண்டபத்தின் வாசலில் பெரிய பேனர் கட்டி மணமக்களின் பெயர் தாங்கி நிற்க, ரோஹன் குடும்பம் வண்டியை விட்டு இறங்கியதும், மேளதாலோத்தோடு உள்ளே அழைத்து செல்ல, மணமேடையில் ஜெயமணி அமர்ந்திருந்தான்.
“என்ன அண்ணா  நாமா லேட்டா…” என்று ரோஹன் கேட்க,
“லேட் எல்லாம் ஒன்னும் இல்ல. சரியான டைமுக்குதான் வந்திருக்கோம் ஏதாச்சும் சாப்பிடுறியா? சாப்பிட்டுட்டு மணமேடைல போய் உக்காரு” என்று வாசன் சொல்ல எதுவும் வேண்டாம் என்றவனின் மனதுக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் திருமணம் நடந்தால் போதும் என்றுதான் இருந்தது.
இரண்டு திருமணமும் ஒரே மேடையில் தான் நடைபெறுவது என்றாலும் வெவ்வேறாகத்தான் மணமேடை அமைக்கப்பட்டு இரண்டு புரோகிதர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்க, இரண்டு மணமகன்களும் அமர்ந்து தங்களது மணமகளுக்காக காத்திருந்தனர்.
மண்டபம் முழுவதும் நாதனின் சொந்தபந்தங்களால்தான் நிரம்பி வழிந்தனர். நாதனோடு பிறந்தவர்களே! பன்னிரண்டு பேர் அதில் கலைவாணி குடும்பம் மாப்பிள்ளையின் குடும்பம் என்றாகிப்போக, கலைவாணியின் கணவனரும் அவர்களின் உறவினர்! அதனால் ரோஹனின் குடும்பம் மட்டும்தான் வெளியாட்கள்.
இளசுகள் மாறி, மாறி நின்று வரவேற்ப்பில் மண்டபத்துக்குள் வரும் விருந்தினரை உபசரிக்க, கனமான பட்டு சாரி சரசரக்க பெண்கள் அங்கும் இங்கும் பொருட்களை சுமந்தவாறு செல்ல, பட்டு வேட்டி சட்டையில் ஆண்கள் வந்தோரை வரவேற்று அமரவைப்பதும், குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும்,  மண்டபமே! சற்று சத்தமாக, மொத்த குடும்பமும் ஒன்றாக இருந்துதான் கல்யாண வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
ரோஹனின் சார்பாக சிலர் வருகை தந்திருந்தாலும், அவர்கள் நெருங்கிய சொந்தங்களாக தெரியவில்லை. அநேகமாக ராஜேந்திரனின் தொழில் சம்பந்தமானவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் ராஜேந்திரன் சார்பாக அவர் பி.ஏ அவர்களை வரவேற்று அமரவைத்து குடிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அவரோ மகனை விட்டு அசையவில்லை.   
“சம்மந்திக்கும், சம்மந்தியம்மாக்கும் கூடப்பொறந்தவங்க யாருமில்லையா?” நாதனின் உறவுகள் நாதனிடம் கேட்க, நாதன் என்னவென்று சொல்வார். வாசனிடம்தான் போய் நின்றார்.
“யாரும் இல்லனு அன்னைக்கே! சொன்னாங்களே! மாமா. மத்த சொந்தகாரங்களுக்காகத்தான் சென்னைல ரிஷப்சன் வைக்கிறதாகவும் சொன்னாங்களே!” என்று வாசன் சொல்ல நிச்சயதார்த்தமன்று ராஜேந்திரன் தெளிவாக சொன்ன விஷயங்கள்தான். சொந்தபந்தங்கள் கேட்கும் பொழுது ஏனோ இன்று பூதாகரமான விஷயமாக தோன்றுகிறது. சரி என்றவாறே நாதன் நகர்ந்து விட வாசனின் கவனம் மனைவியின் பக்கம் சென்றது.
குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு விளையாட்டுக் காட்டியவாறு அமர்ந்திருந்தாள் வாசுகி. குழந்தை வந்ததிலிருந்து வேற எந்த சிந்தனையும் இல்லை. சதா குழந்தையையின் நினைப்பு மட்டும்தான். என்ன பெயர் வைக்கலாம் என்று வாசனை நச்சரித்தவள் ஒருவாறு விதுரங்கனா என்று பெயரிட்டிருக்க, என்ன மாதிரியான உணவு வகைகளை கொடுக்க வேண்டும் எப்படிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அம்முவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அம்முவும் வாசுகியை விட்டு நகராது குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய பையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். தலையை மறைத்து கவசம் அணிந்திருந்தவள், முகத்தையும் மறைத்து கவசம் அணிந்து புடவை முந்தியாலும் முகத்தி மூடி இருந்தாள்.
வாசுகியின் முகத்தில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தாலும் விதுவோடு இருப்பதால் மகிழ்ச்சியாகவே! காணப்பட்டாள். அவள் மூக்கில் இருந்த வைர மூக்குத்தியும் ஜொலித்தது. ஆளாளுக்கு நலம் விசாரிக்கிறேன் என்று அவளின் மூக்குத்தியை பற்றி விசாரிப்பது வாசனின் கண்களுக்கு புலப்பட்டது. அவர்கள் விசாரிக்கும் ஒவ்வொரு தடவையும் மூக்குத்தியை தொட்டு காட்டியவாறே கணவனை பெருமிதமாக பார்த்து வைக்கவும் தவறவில்லை வாசனின் வாசுகி.
அன்று சொன்னது போல் மூக்குத்தியை தொட்டுக்கு தொட்டு காட்டியவாறு கணவன் வாங்கிக் கொடுத்ததாக பெருமைதான் பாடிக்கொண்டிருக்கிறாள் என்று வாசனுக்கு புரிந்து போக குறுநகை உதடுகளில் மலர்ந்தது.
டில்லியிலிருந்து வந்த உடனே! பெண் பார்க்க சென்றதும் அதை தொடர்ந்து வீடு மாறியதும், நிச்சயதார்த்தம் என்றும் வேலைகள் இழுத்துக்கொள்ள வாசன் வாசுகிக்கி கூறியது போல் மூக்குத்தியோ! கொலுசோ வாங்கிக் கொடுக்க முடியாமல் போனது.
வாசுகியும் வாங்கிக் கொடுக்கவில்லையென்று குற்றம் சாட்டவுமில்லை. குறை சொல்லவுமில்லை. சொல்லப் போனால் மறந்துதான் போய் இருந்தாள்.
திடிரென்று மாலை வந்த வாசன் “வா வெளிய போயிட்டு வரலாம்” என்று அழைக்க,
“கோவிலுக்கா?” என்று இவள் கேக்க
“சொன்னாதான் வருவியா?” என்று அவன் தீர்க்கமாக பார்க்க,
“ரொம்ப கோபமாக இருக்காரு போல” என்றெண்ணிய வாசுகி அமைதியாக அவனோடு கிளம்ப அவன் அழைத்து சென்றதோ ஆசரியிடம்.
மிரண்டாவளை “மூக்குத்தி போட முதல்ல மூக்குல ஓட்ட போடணும், கடப்பாரை இருக்கு இல்ல கடப்பார….” வாசன் சொன்ன விதத்தில் எழப்போனவளை இழுத்து அமர்த்தியவன் “எங்க ஓடுற?”
“எனக்கு ஊசினாவே! பயம். டாக்டர்கிட்டயே! கைல ஊசி போட மாட்டேன். நீங்க மூக்குல போட சொல்லுறீங்க” என்று முறைக்க,
சிரித்தவன் “அன்னைக்கி என்னமோ! பெரிய இவ மாதிரி பேசின… மச்சான் மடில மயங்கி இருந்தா சொல்லுறதெல்லாம் கேப்ப, மயக்கம் தெளிஞ்சா…”
வாசனின் வாயை பொத்தியவள் சுற்றிலும் பார்வையை சுழற்றியவாறு “யார் காதிலயாவது விழுந்துட போகுது. மானத்த வாங்கிடாதீங்க” வெக்கத்தில் கன்னங்கள் சிவந்து வாசனை “வா..வா” என்று அழைக்க, உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தாலும் அவளை சீண்டவேன்றே அவள் கைக்கு முத்தம் வைக்க, வாசுகி கையை இழுத்துக் கொண்டாள்.
ஆசாரி வரவே! வாசனின் முகம் பார்த்த வாசுகி மாட்டேன் என்று தலையால் சொல்ல, அவனும் “முடியாது” என்று தலையாட்ட ஆசாரி அவளை கிழக்கு பார்த்து அமர சொல்லி மூக்கில் எதையோ! தடவ வாசனை பார்த்து கண்களாளேயே! கெஞ்சலானாள்.
“மூக்கு குத்துவதற்கு சிறந்த பக்கம் இடதுப் பக்கம்தான். ஏனெனில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் மூக்கின் இடதுப்பக்கத்தோடு தொடர்புடையதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இதனால் பிரசவக்காலத்தில் வலி குறைந்தும் எளிதாகவும் குழந்தைப் பிறக்கும் என்பது ஐதீகம். அதோடு மாதவிடாய் பிரச்சனைகளும் தீரும் என்றும் காலம் காலமாக நம்பப் படுகிறது.” என்று விளக்கமளித்தவாறே!
“இங்க பாருமா..” என்றவர்  அவள் முகம் பார்த்தே பயம் புரிய “கண்ண மூடிக்கோ” என்று விட்டு மூக்கில் துளையிட வாசுகிக்கி வலிக்கவே! இல்லை.
வாசன் கொடுத்த வைர மூக்குத்தியை போட்டு விட்டவர் “ரெண்டு நாளைக்கு கொஞ்சம் வலி இருக்கும். அப்பொறம் சரியாகிடும்” என்று சொல்ல அவருக்கு பணம் கொடுத்து விட்டு வாசுகியை அழைத்துக்கொண்டு வீடு வந்தான் வாசன்.
வரும் வழியெல்லாம் வலிக்கவில்லை என்றவாறே வந்தவள் அவர் தடவிய மருந்தால்தான் என்று மறந்து போய் இருந்தாள். அதன் வீரியம் குறையவே! வலிக்க ஆரம்பிக்க வாசனை வசைபாட ஆரம்பித்திருக்க, வாசன் வீட்டில் இருந்தால்தானே! மருந்தின் வீரியம் குறையும் பொழுது அவன் மனையாளின் மறுமுகத்தை பார்க்க நேரிடும் என்று அறிந்தவனாக கடைக்கு ஓடிவிட்டான்.
குழந்தை உண்டான பிறகுதான் கொலுசு வாங்கி வந்திருந்தான். பதினைந்து வருடங்களாக அவள் காலில் இருந்த கொலுசை டில்லியில்லையே கழட்டி எறிந்து விட்டுத்தான் வந்திருந்தான். அவள் சொன்னது போல் கடை கடையாக ஏறி இறங்கி பார்த்துப் பார்த்துதான் வாங்கியும் வந்திருந்தான்.
இரண்டு சங்கிலி ஒன்றோடு ஒன்று பிணைத்தது போல் தோற்றமளித்தாலும் ஒன்று முத்தாலானதும், ஒன்று வேலைபாடோடும் கூடவே வெள்ளை கற்களும் கோர்க்கப்பட்டு அழகாக இருந்தது.
“என்னங்க இது? வீட்டுக்கு போட இவ்வளவு விலை உயர்ந்ததா வாங்கிட்டு வந்திருக்குறீங்க? தண்ணி பட்டு, பட்டு கல்லெல்லாம் நாசமாகிடும்” என்று வாசுகி கவலையாக சொல்ல
“நாசமான நாசமாகட்டும், வேற வாங்கிக்கலாம். இல்ல இதையும் பதினஞ்சு வருசத்துக்கு கால்லயே! போட்டிருக்கலாம்னு யோசிக்கிறியா? எப்போவும் போட்டுக்கிட்டே இருக்குற மாதிரி தங்கத்துல கொலுசு வாங்கித் தாரேன் டி” என்று கிண்டலடிக்க கணவனை முறைத்தவள் நகர அவளை இழுத்து அமர்த்தியவன் கொலுசை மாட்டி விடலானான்.
“மெட்டி போடும் போது இவ கால புடிச்சதோட சரி” என்று புன்னகைத்துக்கொள்ள
“அப்போ கூட அந்த பழைய கொலுசு உன் கண்ணுல சிக்கலையே! வாசா…” என்றது அவன் மனம்.
அன்னக்கி அத பார்த்திருந்தா எப்பயோ! கொலுசு வாங்கி கொடுக்க தோணி இருக்கும், படிப்படியா ஒன்னு, ஒண்ணா வாங்கிக் கொடுக்க தோணி இருக்கும். ரொமான்ஸும் டெவலப் ஆகி இருக்கும்” பெருமூச்சு விட்டுக் கொண்டான் வாசன்.
“என்ன மளிகை கடைக்காரரே… கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா…னு டூயட் மூடுக்கு போய்ட்டிங்களா?” வாசுகி வாசனை உலுக்க,
“காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்….” என்று வாசன் பாடியவாறு நெருங்க வாசுகி அவனை தள்ளி விட்டு ஓடியிருந்தாள்.
விது அவர்களின் வாழ்க்கையில் வந்த பிறகு கல்யாணத்துக்கு துணி வாங்கும் பொழுது அவளுக்கும் ஒரு குட்டி கொலுசு வாங்கி இருக்க, அதை தொட்டு தொட்டுத்தான் வாசனின் வாசுகி குழந்தையிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
“வாசுகிமா… குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரவா?” அம்மு கேட்க,
தாகமாத்தான் இருக்கு, யாராவது வந்தால் சொல்லலாம் அம்முமா…” என்று வாசுகி சொல்ல
“இல்ல. நீ அமைதியா இங்கயே! இரு. நான் எடுத்துக்கிட்டு வரேன்” என்ற அம்மு ஜூஸ் எல்லாம் வைத்திருக்கும் இடத்துக்கு செல்ல
“என்ன உங்க பொண்ணு வந்ததிலிருந்து உக்காந்துக்கிட்டே இருக்கா? வேள கள்ளிக்குப் பிள்ளை சாக்கா?” என்று பூர்ணா நாதனிடம் பொரும
“நீ அடங்கவே! மாட்டியா? அவ திரும்பவும் உண்டாகி இருக்கா.. மாப்புள அவள எந்த வேலையும் பார்க்காம உக்கார வச்சிருக்காரு. நீ போய் உன் பொண்ணுங்க கல்யாண வேலையை பாரு” என்று பூர்ணாவை துரத்த அம்முவின் காதில் இவர்களின் பேச்சு விழுந்தாலும் அவர்களின் பக்கம் பார்க்காதவாறு வாசுகிக்கி குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தவள் மணமேடையை நோக்கலானாள். 
ரோஹன் புரோகிதர் சொல்வதை செய்து கொண்டிருந்தாலும், ஒருவித பதட்டத்திலையே! இருக்க,  அவர் “பெண்ணை அழைச்சுண்டு வாங்கோ” என்றதும்தான் பதட்டமாக இருந்த ரோஹன் நிமிர்த்து அமரலானான்.
ராஜேந்திரன் கூட “டென்ஷனாகாத ரோஹன் எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று கூற
“அம்மு எங்க?” என்று அந்த நேரத்திலும் அம்முவை கேக்க,
“அங்க பாரு வாசுகி பக்கத்துலதான் உக்காந்து இருக்கா… டென்ஷனாகாத” ராஜேந்திரன் ரோஹானை அமைதி படுத்த வாசனும் அவன் அருகில் வந்து நின்று கொண்டான்.
ரோஹன் வாசுகி இருக்கும் திசையை நோக்குவதைக் கண்ட வாசன் “அவ கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கா, இங்க வந்தா புகையில ஒரு மாதிரியா ஆகிடுவா அதான்” என்று இழுக்க,
“பரவால்ல ..ண்ணா..” என்ற ரோஹன் அடுத்து எதுவும் சிந்திக்க முடியாத படி மந்திரா… மேடைக்கு அழைத்து வரப்பட்டாள்.
இளம்சிவப்பு தங்க நிற கரை பட்டுடுத்தி, அழகிய ஆபரணங்கள் பூட்டி தேவதையாய் நடந்து வந்தவளை கண்சிமிட்டாது ரோஹன் பார்த்திருக்க, அவன் டென்ஷன் கூட பறந்தோடி இருந்தது. 
“ரொம்ப அழகா இருக்க” மந்த்ராவின் புறம் குனிந்து கூற புடவையின் நிறத்துக்கு சிவந்தாள் அவள். இப்பொழுது வெட்கத்தால் சிவந்தவள் தான் ஏமாற்ற பட்டுவிட்டதாக அறியும் பொழுது இதே நிறத்துக்குத்தான் கோபத்தால் சிவந்து விடுவாள்.
கெட்டிமேளம் முழங்க, ஐயர் மந்திரம் சொல்ல, கூடி நின்ற சொந்தபந்தம் மொத்தமும் அச்சதை தூவி ஆசிர்வதிக்க, ஜெயமணி சந்திராவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதியாக்கிக்கொள்ள, ரோஹன் மந்த்ராவின் கழுத்தில் பொன்தாலி பூட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான்.
மணமக்களுக்கான சடங்குகள் ஆரம்பமாக இந்த பக்கம் பந்தியும் பரிமாறப்பட பாதி பேர் சாப்பிட கிளம்பி இருந்தனர்.  
“வாசுகிமா… காலைல குடிச்ச இலைக்கஞ்சியோடயே! இன்னமும் இருக்க, ஏதாச்சும் கொஞ்சமா சாப்பிடுறியா? ரொம்ப சோர்வா தெரியிற” என்று அம்மு கேட்க,
“இல்ல அம்முமா…. பசிக்கல. அப்பொறம் சாப்பிடுறேனே!”
“பசிச்சா சாப்பிட நீ நோர்மலாவா இருக்க? வயித்துல குழந்தய சுமந்துக்கிட்டு இருக்க, கொஞ்சமா ஏதாச்சும் சாப்பிட்டுட்டு மாத்திரை போடலாம் சரியா? நீ பந்தில உக்கார கூட வேணாம். நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று அம்மு கையிலிருந்த பையை அமர்ந்திருந்த கதிரையில் வைத்து விட்டு வாசுகியின் பதிலையும் எதிர்பார்க்காது பந்திப் பரிமாறும் இடத்துக்கு சென்றாள்.
போகும் வழியில் ஜூஸ் பரிமாறும் இடத்தில் பூர்ணா இருப்பதைக் கண்டவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
ஒரு தட்டில் கொஞ்சமா நெய் பொங்கல் மற்றும் கேசரி, இரண்டு மெது வடை, இரண்டு இட்லி, சட்னி, இரண்டு கப் டீ எடுத்து வந்தவர் வாசுகி எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு டீயையும் குடிச்சாலும் சரியாவா, என்றெண்ணியவாறே வர பூர்ணா வாசுகியிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அங்கே செல்லலாமா? வேண்டாமா? என்று யோசிக்க, அவள் எதோ! ஜூஸ் கிளாஸை வைத்துக்கொண்டு வாசுகிக்கி குடிக்கும் படி வற்புறுத்துவது தெரியவே!
“ஐயோ… இப்போ அத குடிச்சா.. வாசுகிமா… சாப்பிட மாட்டாளே!” என்று கையிலிருந்த தட்டோடு வாசுகிடம் ஓடி இருந்தாள்.
“இத குடி வாசுகி ரொம்ப டயடா தெரியிற” பூர்ணா அன்பாக சொல்லிக்கொண்டிருக்க,
“இல்லம்மா இப்போ வாசுகிமா சாப்பிட்டு மாத்திரை போடணும்” என்று வந்த அம்மு ஜூஸ் வேண்டாம் என்று சொல்ல
“நீ வேலைக்காரிதானே! வாய மூடிக்கிட்டு இரு. எங்க வீட்டு பொண்ண எப்படி பாத்துக்கணும்னு எனக்கு தெரியும்” என்று பூர்ணா அம்முவை திட்ட வாசுகிக்கும் கோபம் வந்தது.
இத்தனை நாளா அம்முதான் பார்த்துக்கொண்டாள். இவங்க ஒரு ஜூஸ் கிளாஸை நீட்டினால் கவனிச்சு பார்த்துக்கொண்டதாக அர்த்தமா?
“சித்தி பார்த்து பேசுங்க. அவங்க என்ன பார்த்துக்க, என் புருஷன் கூட்டிட்டு வந்தவங்க” வாசுகி அடிக்குரலில் சீற
“என்ன டி…. போயும் போயும் ஒரு வேலைக்காரிக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குற? பாதி மூஞ்சி இல்லாதவளுக்கு வாய் இவ்வளவு நீளுது” என்று அம்முவை மீண்டும் திட்ட ஆரம்பித்தாள்.
பூர்ணாவுக்கு தான் நினைத்தது நடக்காத கோபத்தில் தான் இருப்பது கல்யாண மண்டபத்தில் என்றதை மறந்தாள்.
அம்முவின் முகம் எரிந்ததால் அவள் மனம் எவ்வளவு பாதிப்படைந்திருக்கும், அதை பேசி அவள் மனதை காயப்படுத்தும் சித்தியை வெறுப்பாக பார்த்த வாசுகி “என்ன இப்போ உங்களுக்கு இந்த ஜூசை நான் குடிக்கணும் அவ்வளவுதானே! குடிக்கிறேன்” என்று வாங்கிக்கொள்ள பூர்ணாவுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.
வாசுகி ஜூஸை வாங்கிக் கொள்ளும் பொழுது கவனித்த அம்மு அதை தட்டி விட, பூர்ணாவின் கோபம் தலைக்கேறி அம்முவை அடிக்க கையோங்க அவளை தடுத்த அம்மு பூர்ணாவின் கன்னத்தில் அறைந்திருந்தாள். இதை வாசுகியும் எதிர்பாத்திருக்கவில்லை.
வாசுகி “ஜூசை ஏன் தட்டிவிட்டீங்க அம்மு” என்று கேக்க வாய் எடுக்கும் பொழுது அம்மு பூர்ணாவை அடித்திருக்க, அதை கண்டு கூட்டமும் கூடியது.
“ஏய்.. வேலைக்கார நாயி என்னையே! அடிக்கிறியா?” என்று பூர்ணா மீண்டும் கையோங்க அம்மு இந்த முறை கன்னம் கன்னமாக ஆத்திரம் தீரும்வரை அறையலானாள்.
வாசுகி அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அவளருகில் ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்ட வாசன் என்ன நடந்தது என்று விசாரிக்க,
நாதன் பூர்ணாவிடம் வந்திருக்க பூர்ணா நடந்ததை கூற, தன்னுடைய அத்தனை சொந்தபந்தமும் இருக்கும் பொழுது தன் மனைவியை ஒருத்தி அடிப்பதா என்று நாதன் கோபத்தில் அம்முவை அடிக்க போக, வாசன் அம்முவை இழுத்திருக்க, ரோஹன் நாதனை எட்டி உதைத்திருந்தான்.
“மாப்புள… மாப்புள… மாப்புள…” என்ற குரல்கள்தான் நாளா பக்கமும் ஒலித்தன.
வேட்டியை மடித்துக் கட்டிய ரோஹன் “என்ன மாப்புள அம்மு மேல கைய வச்சீங்க, எவனும் உசுரோட போக மாட்டீங்க” விரல் நீட்டி கீழுதட்டை கடித்து மிரட்ட, அப்படியொரு ரோஹானை வாசன் கூட இதுவரை பார்த்ததில்லை.
“ரோஹன் அமைதியா இருப்பா…” அம்மு அவனை அமைதி படுத்த
“அட நீங்க சும்மா இருங்க அம்மு… அதான் கல்யாணம் ஆகிருச்சேன் இனி எதுக்கு பொறுமையாக இருக்கணும்” ரோஹன் பற்களை கடிக்க,  நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மந்த்ரா ரோஹன் பேசியத்தைக் கேட்டு யோசனைக்குள்ளானாள்.
பிரச்சினை வேறு விதமாக போகும் என்று அஞ்சிய அம்மு “வாசுகிக்கி அன்னாசி பழச்சாறு கொடுத்தா.. அவ உண்டாகி இருக்குற விஷயம் தெரிஞ்சேதான் கொடுத்தா…இவங்க வீட்டுக்காரர் வாசுகிமா உண்டாகி இருக்குறத இவங்க கிட்ட சொன்னத நான் என் காதால கேட்டேன். அதான் ஜூஸ் கிளாசை தட்டி விட்டேன். வாசுகி குழந்தையை கலைக்க பார்த்தங்கனதும் கோபம் வந்துச்சு. அதான் அடிச்சேன். வாசன் தம்பிக்கு வாசுகியையும், குழந்தையையும் பாத்துகிறதா நான் வாக்கு கொடுத்து இருக்கேன்” படபடவென பேசியவள் கொட்டிக்கிடந்த ஜுஸைக் காட்ட அங்கே அன்னாசித் துண்டுகள் பாவமாய் சிதரிக் கிடக்க,  பூர்ணாவின் மேல் அனைவரின் பார்வையும் திரும்பியது.
வாசுகி மீண்டும் குழந்தை உண்டாகி இருப்பது காலையில்தான் நாதனிடம் கூறி இருக்க, பூர்ணாவிடம் நாதன் கூற, அவள் குழந்தையோடு இருப்பதால்தான் அமர்ந்திருக்கிறாள் என்று அனைவரும் நினைத்திருந்தனர். அவள் குழந்தை உண்டாகி இருக்கிறாள் என்பது மகிழ்சசி என்று அவளிடம் சிலர் பேச பூர்ணா அவள் கருவை கலைக்க நினைத்தாளா? அதிர்ச்சியாக அனைவரும் பூர்ணாவை பார்க்க,
ரோஹன் நாதனை தள்ளி விட்டது கூட போய், அம்முக்கும் அவனுக்கும் என்ன உறவு என்பது கூட மறந்து பூர்ணாவை எதிரியாக அனைவரும் முறைக்க,
நாதன் சொல்லவில்லை என்று பூர்ணாவால் சொல்ல முடியாதே! “இவர் சொன்னார்தான். நான்தான் மறந்து போனேன்” என்று பூர்ணா சமாளிக்க,
“அது எப்படி அத்த அங்க வித விதமா, ஜூஸ் கொடுக்குறப்போ! அன்னாசி மட்டும் உங்க கண்ணுக்கு ஜூசா தெரிஞ்சிருக்கு” நக்கலாக கேட்டு கடுப்பில் இருந்த ஜெயமணி ஏற்றிவிட
“அதானே!” என்று சிலர் சந்தேகமாக பார்க்க,
“அப்போ வாசுகிக்கி ஏற்கனவே! கரு கலைந்ததற்கும் பூர்ணாதான் காரணமா?” யார் கேட்டதென்று தெரியவில்லை. கூட்டத்தில் யாரோ கேட்க, குசுகுசுவென அனைவரும் பேச நாதன் பூர்ணாவை சரமாரியாக அடிக்க ஆரம்பித்திருந்தார்.
வாசன் வாசுகியை கதிரையில் அமர்த்தி இங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தானே! தவிர எதுவும் பேசவும் இல்லை. அவர்களுக்கிடையில் சமாதானம் செய்ய முனையவுமில்லை.
போனதடவை பூர்ணா ஏதாவது செய்து வாசுகியின் கருவை கலைத்தாளா என்று தெரியாது. ஆனால் இந்த தடவை தெரிந்தேதான் செய்து இருக்கிறாள். ஸ்ரீவத்சனின் திருமணத்தின் போது பேசியதற்கே நாலு அறை விட்டிருக்க வேண்டும். இன்று செய்தது அறையோடு விடக் கூடிய விஷயமா?
பூர்ணாவை கொல்லும் வெறியில் வாசன் இருந்தாலும் அவன் அமைதியாக இருப்பது ரோஹன் என்ற ஒருவனுக்காக, வாசன் வாசுகியிடம் “வா போலாம்” என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் மறு பேச்சின்றி அவள் அவன் பின்னால் சென்றிருப்பாள்.
“வாசுகி வாங்க போலாம்” என்று வாசனை அழைத்திருந்தாலும் வாசன் கிளம்பி இருப்பான். இருவரும் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அங்கே இருப்பது ரோஹனுக்காக மட்டுமே!
ரோஹனும் அம்முவின் அருகில் வந்து அமர்ந்துகொண்டு “என்ன அம்மு நீங்க இப்படி பண்ணிடீங்க? இப்பயாச்சும் உண்மைய சொல்லி இருக்க வேண்டாமா?” கோபமாக பேச  
“உண்மைய சொல்லி என்ன ஆகா போகுது ரோஹன்? நடந்த ஒன்னத்தையும் மாத்த முடியாது. குடும்பம் மொத்தம் முன்னாடி அவ முக மூடி கழண்டுருச்சே! அது போதும்” என்று சிரிக்க,
“நீங்க இத எப்பயோ! பண்ணி இருக்க வேணும்” என்று வாசுகியை பார்க்க,
“எல்லாத்துக்கும் நேரம், காலம்னு ஒன்னு இருக்கு ரோஹன்”
“அவங்க ரெண்டு பேர்கிட்டயாவது உண்மைய சொல்லுங்க அம்மு, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி முகத்தை மூடிக்கிட்டு இருக்க போறீங்க?”
“என் பொண்ணு கிட்ட என்னெல்லாம் சொல்லி வச்சிருக்காங்கனு தெரியலையே! என்ன ஒரேயடியா ஒத்துக்கிட்டா என்ன பண்ணுறது ரோஹன். அதான் சின்ன வேஷம், எனக்கு வேற வழியும் தெரியல. ஆனா எனக்காக நீ இவ்வளவும் செய்ய வேணாம்” அவனை செல்லமாக முறைக்க,
“என் அம்முக்காக நான் என்னவேனா செய்வேன்” ரோஹன் கடைசியாக சொன்னது மட்டும் மந்த்ராவின் காதில் தெளிவாக விழ, யோசனையாகவே! அவனருகில் வந்து அமர்ந்துகொள்ள அவர்களின் பேச்சும் நின்றது.
“அப்போ நாங்க கிளம்புறோம்” ரோஹனின் குடும்பம் நாதனிடம் வந்து விடை பெற
“சம்மந்தி வீட்டுக்கு வராம போறீங்க?” என்று நாதன் ராஜேந்திரனை பார்த்துக் கேட்டார்.
மற்ற எல்லா சடங்குகளும் பெண் வீட்டில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடந்த களோபரத்தில் ரோஹன் அந்த வீட்டுக்கு வர மாட்டேன் என்று மறுத்து விட வேறு வழியில்லாததால் நாதன் அவர்கள் சொல்வதை செய்ய ஆளாக்கப்பட்டார்.
ராஜேந்திரன் என்ன சொல்வதென்று யோசிக்கும் போது மந்திரா பேசினாள். “அதனால என்னப்பா நீங்களும் அம்மாவும் மட்டும் என்ன இவங்க வீட்டுல விட வர மாட்டீங்களா?” மறந்தும் உறவுமுறை சொல்லி அழைக்கவில்லை. 
“பாட்டி நீங்களும் எங்க கூட வாங்க” என்று ராஜத்தையும் அழைக்க, பூர்ணா செய்ததில் கோபத்தில் இருந்தவர் அவர் முகம் பார்க்க மறுத்து மந்த்ரா அழைத்தது காதில் விழாதவாறு இருக்க, ராஜத்திடம் சென்றவள் “இப்போ நீங்க வரலைனா… இன்னிக்கிதான் நீங்க என்ன கடைசியா பார்த்ததா இருக்கட்டும்”
“ஏய் என்ன டி பேசுற?” கல்யாண ஆனா உடனே! அபசகுனமாக பேசுவதாக பேத்தியை அதட்ட மந்த்ராவின் முகத்தில் சிரிப்பே இல்லை.
யோசனையாக அவள் முகம் பார்த்த ராஜம் “வரேன். வா” என்று அவளோடு ரோஹன் குடும்பம் இருக்கும் இடம் செல்ல அனைவரும் வாசனின் வீடு நோக்கி புறப்பட்டனர். 
ஆரத்தியெடுத்து உள்ளே சென்ற உடனே! மந்த்ரா அம்முவை இழுத்து அணிந்திருந்த முகக்கவசத்தை இழுத்துக் கழட்ட அபர்ணாவைக் கண்டு நாதன், பூர்ணா, ராஜம் மூவரும் அதிர்ச்சியடைய, முகம் எரிந்ததாக மறைத்துக்கொண்டிருந்த அம்முவின் முகமோ! அழகாக இருப்பதைக் கண்டு வாசனும், வாசுகியும் புரியாது பார்த்திருந்தனர்.

Advertisement