Advertisement

அத்தியாயம் 25
இரண்டு நாளாக வாசுகி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வாசனோடு பேசாமல் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தாள்.
ரோஹனும் சென்னையில் இருப்பதால் அவனை அழைத்துப் பேசிய வாசன் ஸ்ரீராமின் விஷயத்தை கூறி இருக்க, மதுவிடமிருந்து விவாகரத்து வாங்கும் வேலையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி இருந்தான்.
அதோதோடு இல்லாமல் வேரோரு வேலையாக ஸ்ரீராமோடு அலைந்து திரிந்த வாசன் வீட்டுக்கு வர இரவாகியதால் மனைவியோடு சரியாக பேச கூட முடியவில்லை. குழந்தையை அணைத்தவாறு தூங்குபவளை பார்பவனின் மனதில் இந்த விடயத்தால் மனதை போட்டுக் குழப்பிக்கொள்வதில் வயிற்றில் இருக்கும் கருவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ! என்ற அச்சம் உருவாக துரிதமாக செய்ய வேண்டியதை செய்து விட்டு உன்னிடம் பேசிக்கொள்கிறேன் என்று கருவிக்கொள்வான்.
ராமநாதன் ஆசையாக குழந்தையை தூக்க வரும் பொழுது அவரை முறைக்க முடியாமல் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று விடுபவளை பெருமூச்சோடு கடந்து விடுபவர் சிறு குழந்தை போல் வாசனிடம் முறையிடலானார்.
“அவள….” என்று வாசன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சட்டை கையையும் மடித்துக்கொண்டு அடிக்கப் போவது போல் பொய்யாய் பாசாங்கு செய்ய, எங்கே வாசுகியை வாசன் அடித்து விடுவானோ! தன்னால் இருவருக்குமிடையில் சண்டை வந்து விடுமோ! குழந்தை உண்டாகி இருக்கும் இந்த நேரத்தில் வாசுகி கோபித்துக்கொண்டு அப்பா வீட்டுக்கு சென்று விடுவாளோ! என்று ராமநாதன் பயந்து வாசனை சமாதனப் படுத்த
“சும்மா…” என்று தந்தையின் கன்னம் கிள்ளி விட்டு செல்ல ராமநாதனுக்கு தன்னையே! பார்ப்பது போல் இருக்க சிரித்துக்கொள்வார்.
ராமநாதனுக்கு வீட்டை விற்றதாக ஸ்ரீராம் மீது கடுங் கோபம் இருந்தது, வத்சனின் திருமணத்தின் போது ஸ்ரீராமின் குழந்தையின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், ஸ்ரீராமை திட்டாமல் ஒதுங்கி இருந்தவர், ஸ்ரீராம் குடித்து விட்டு நடு இரவில் வந்து மயங்கிக் கிடந்ததை பார்த்த பின் தன்னை போல் ஆகிவிடுவானோ! என்ற அச்சம் வேறு வாட்ட, எதோ ஒரு பிரச்சினையில் இருக்கின்றான் என்று புரிந்துக் கொண்டவராகத்தான் அமைதியானார்.
விசாரித்த பின் ஸ்ரீராமின் மேல் இருந்த கோபம் கூட கரைந்தோடி இருந்தது. ஒரு தந்தையாக அவன் எதிர்காலத்தை நினைத்து அச்சம்தான் மேலோங்கியது. தன்னை போலவே! குடித்து விட்டு வாழ்க்கையை சீரழித்துக்கொள்வானோ! என்று வாசனிடம் புலம்ப ஆரம்பித்திருந்தார். ஒரே! ஆறுதலாக இருந்த குழந்தையையும் வாசுகி கொடுக்காமல் அவரின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றாள்.
அன்று கடைக்கு சாப்பாடு கொண்டு சென்ற சத்யன் திரும்பி வந்து பாத்திரங்களை வைக்க,
“என்ன தம்பி இன்னக்கி சாப்பிடாலய?” என்று அம்மு கேக்க
குழந்தையை தூங்க வைத்து விட்டு வந்த வாசுகியின் காதில் அது விழவே! கடைக்கு கொண்டு சென்ற பாத்திரங்களைக் திறந்துப் பார்க்க அன்று வாசன் சாப்பாட்டை தொட்டும் பார்க்கவில்லை என்று புரியவே! ஆத்திரமாத்திரமாக வாசுகிக்கு வர, கூடவே கண்ணீரும் முட்டிக்கொண்டு வந்தது.
குழந்தையை கவனிக்கிறேன் என்று சமயலறைப் பக்கம் செல்லாதவள் இன்று ஆசையாசையாக கணவனுக்கு பிடித்தது போல் ஏதாவது சமைத்து அனுப்பலாம் என்று சமைத்து கொடுத்து அனுப்பி இருக்க, சமைத்தது அவள்தான் என்று அறிந்து அவள் கணவன் தொட்டும் பார்த்திருக்கவில்லை என்றதும் தான் அவ்வளவுக்கு வேண்டாதவளாகிப் போய் விட்டேனா என்று எண்ணியவள் “வரட்டும் இன்னைக்கி ரெண்டுல ஒன்னு பேசிக்கிறேன்” என்று பொரும
“தம்பி கடைல இல்ல வாசுகிமா… காலைல போனவர் இன்னும் வரலன்னு சொன்னாங்க. எங்க போனானு தெரியலையே!” என்று சத்யன் சொல்ல
யோசனைக்குள்ளான வாசுகியோ “அவர் தம்பி கடைல இருந்தாரா?” என்று கேக்க
“அவரும் இல்ல. ரெண்டு பேரும்தான் கிளம்பிப் போய் இருக்காங்க” என்கிறார் சத்யன்.
எங்கு போய் இருப்பான்? டிவோர்ஸ் கேஸ் விஷயமாக அலைவது தெரியும். அதற்காக போய் இருப்பாங்கலாய்க்கும் என்றெண்ணியவள் கோபம் தணிந்தவளாக அறைக்குள் நுழைந்தாள்.
  பசியோடு வந்த ஸ்ரீராமும், வாசனும் அம்முவிடம் சாப்பாடு போடுமாறு சொல்வது காதில் விழவும் வாசுகி சென்று பரிமாற வாசுகியின் முகத்தை பார்த்து புன்னகைத்த வாசன் அமைதியாகவே! சாப்பிட, கணவனை முறைத்தவள் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். 
சாப்பிட்டு விட்டு கையை துடைத்துக்கொண்டவாறு அறைக்கு வந்த வாசன் வாசுகி புத்தகம் படிப்பதைக் கண்டு “ஸ்ரீராம்” என்று அழைக்க ஸ்ரீராம் வந்து ஒரு கோப்பை கொடுக்கவும் கதவை சாத்தியவன் அதை வேண்டுமென்றே வாசுகியின் மீது வீசியடித்தான். 
அது என்னவென்று  பார்க்கக் கூட வாசுகிக்கி இஷ்டமில்லை. குழந்தையை காப்பகத்தில் சேர்ப்பதற்கான ஆவணங்களோ! என்று மனம் பதைபதைக்க, கணவனை முறைத்தவாறே அதை படிப்பதற்காக கையில் எடுக்கப்போக
“ஒருநிமிஷம் அத படிச்சிட்டு ஒரு கையெழுத்து போடு” என்று வாசன் பேனாவையும் நீட்ட
குழந்தையை தான் வைத்துக் கொள்வதாக கூறியதால் விவாகரத்து செய்ய போகிறானா? அதற்கான ஆவணங்களா இது? அதற்காகத்தான் கையெழுத்துக் கேக்கின்றானா? என்றெல்லாம் அவள் சிந்தனை தறிக்கெட்டு ஓட கோப்பை தொடக் கூட இல்லை.
“அப்படி என்ன பாவம் பண்ணிச்சி இந்த குழந்தை, உங்க குடும்ப இரத்தம் இல்லை என்றதும். அனாதை ஆசிரமத்துல கொண்டு போய் விட போறீங்க, உங்க கிட்ட நான் இத எதிர் பார்க்கல, இந்த குழந்தை மேல பாசம் வச்ச ஒரே காரணத்துக்காக என்னையும் வேணாம்னு ஒதுக்க போறீங்க இல்ல” என்றவள் அழவே! ஆரம்பித்திருக்க, வாசன் தான் குழம்பி நின்றான்.
பேசாமல் படுத்துறாளே! என்ற கடுப்பும், கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றத்தான் கோப்பை வீசி இருந்தான். அதுக்கே! இவள் என்ன என்னமோ! பேசுறாளே! என்று நொந்தவன் மேலும் சிந்திக்கும் முன் வாசுகி தொடர்ந்தாள். 
“என் அம்மாவும் இப்படித்தான் என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டாங்க, இந்த குழந்தையும் அம்மா இல்லாம வளர வேணாம். நாங்க ரெண்டு பேரும் கண் காணாத இடத்துக்கு போயிடுவோம்” என்று ஏதேதோ பேச
கோபம் தலைக்கேற “அறைஞ்சேனா பல்லு மொத்தமும் பேர்ந்துடும். வயித்துல குழந்தையை சுமக்குறாளே! எதுவும் பேசிடக் கூடாதுனு எல்லாரும் பொறுமையா போனா, கண்டதையும் யோசிச்சிட்டு இப்படித்தான் மனச போட்டு குழப்பிக்கிறீயா?” அடிக்குரலில் வாசன் சீற அழுதுகொண்டிருந்தவள் சட்டென்று நிறுத்தி அவனை பயப் பார்வை பார்கலானாள் வாசுகி.
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை ஒரு பார்வை பார்த்தவன் வாசுகியின் அருகில் அமர்ந்து கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்தவாறு “அன்னைக்கே! சொன்னேனே! கண்டதையும் போட்டு மனசுல உருட்டாத, அது நம்ம குழந்தைக்கு ஆகாதுன்னு. குழந்தை உண்டான உடனே பிரச்சினை உன்ன தேடி வருது போல” என்று தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்து புன்னகைத்தவன்
“அன்னக்கி என்ன நடந்தது தெரியுமா? மேடம் கோபிச்சிக்கிட்டு பாப்பாவை தூக்கிகிட்டு வந்துடீங்க, வாசல்ல ஸ்ரீராம் நீ அடிச்ச அடில அதிர்ச்சியா நின்னுட்டான் அவனை சமாதானப் படுத்தினேன்” என்று அன்று நடந்ததை வாசன் சொல்லலானான். 
“ஸ்ரீராம் அண்ணி எதோ ஒரு மனநிலைல அடிச்சிட்டா, மனசுல வச்சிக்காத, மது மாதிரி ஒருத்திக்கிட்ட இந்த குழந்தை வளரக்கூடாதுனு நீ தூக்கிட்டு வந்ததே! பெரிய விஷயம்” என்று வாசன் சொல்ல
“இல்ல ண்ணா.. நான் தப்பா நினைக்கல, அம்மா இல்லாம வளர்ந்திட்டேன். அண்ணிக்கு இல்லாத உரிமையா” கன்னத்தை நீவி விட்டவாறே அவன் பேச
“இல்ல ஸ்ரீராம் நீதான் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க, இது உன் அம்மா கலாவதியே! தான். வத்சன் கல்யாணத்தப்போ! உன்ன பார்த்து கோபப்பட்ட எனக்கு குழந்தையை பார்த்ததும் உங்கம்மாவ பார்த்த மாதிரியே! இருந்தது. உன் மேல கோபமா இருந்தாலும், குழந்தையை தூக்காம இருக்க முடியல” என்று ராமநாதன் சொல்ல,
ஐந்தே மாதமான அந்த குழந்தையின் சாயல் அன்னையின் சாயலா என்று வாசனுக்கு தெரியவில்லை. வத்சனின் கல்யாணத்தின் போது வாசுகி கூட குழந்தையை தூக்கியவாறு “நம்ம வீட்டு சாயலே! இல்லையே! ஒரு வேல மது வீட்டு சாயலோ!” என்று கேட்டிருந்தாள். அந்த நேரத்தில் வாசனுக்கும் யார் போல் என்று தெரியவில்லை. குழந்தை தானே! வளர்ந்த பிறகுதான் தெரியும் என்று விட்டான்.
“ஸ்ரீராம் உனக்கு சந்தேகமா இருந்தால் டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து பார்த்துடலாம்” என்று நிறுத்தியவன் சில நிமிட மௌனங்களுக்கு பின் “நான் ஒன்னு சொன்னா கேப்பியா” என்று வாசன் தம்பியின் முகம் பார்க்க
“நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் ண்ணா..” என்று ஸ்ரீராம் அழுதே! விட்டான்.
அவனை சிறிது நேரம் அழ விட்ட வாசன் தண்ணீரும் புகட்டி “உனக்கு இப்போதான் இருபத்தி அஞ்சு வயசாகுது. இப்போவே வாழ்க்கைல ரொம்ப பட்டுட்ட, பாப்பா… உன் பாப்பாவோ! இல்ல, யார் பாப்பாவோ வேணா இருக்கட்டும் நானும் வாசுகியும் தத்தெடுத்துகிறோம். குழந்தையை பத்தி யோசிக்காம உன் வாழ்க்கையை முறையா அமைச்சிக்க பாக்குறியா?” என்று வாசன் கேக்க, ராமநாதனுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது.
ஒரு குழந்தையை தனியாக வளர்க்க, ஸ்ரீராமால் கண்டிப்பாக முடியாது. மது செய்த துரோகத்தை எண்ணி குடித்தே தன்னை அழித்துக்கொள்ளுவான், அந்த கோபத்தை குழந்தையின் மீதும் காட்டுவான். அவன் மனக்காயங்களை ஆற அவனுக்கு கால அவகாசம் தேவை. வாசன் குழந்தையை தத்தெடுத்துக்கொண்டால் ஸ்ரீராம் இன்னொரு திருமணம் செய்துகொள்ளவும் குழந்தை இடைஞ்சலாக இருக்காது என்று ஒரு தந்தையாக ராமநாதன் எண்ணினார்.
“அப்போ இந்த பைல்ல இருக்குறது” கணவனின் முகம் பார்த்து வாசுகி கேக்க,
“பாப்பாவ சட்டப்படி தத்தெடுக்க தேவையான எல்லா பேப்பர்ஸும். நீ சைன் பண்ணினா ஓகே, உடனே வக்கீலுக்கு அனுப்பிடுறேன்” என்று வாசன் புன்னகைகைக்க
“சாரி” என்றவாறு கணவனைக் கட்டிக் கொண்டவள், “மது.. மது பிரச்சினை ஒன்னும் பண்ண மாட்டாளே!” அச்சத்தை விழிகளில் நிரப்பியவாறு கேட்டாள் வாசுகி.
“ரோஹன் சென்னைல இருக்குற பெரிய லாயர புடிச்சி பேசி இருக்கான். டிவோர்ஸுக்கும் சைன் பண்ணினவ, குழந்தைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு சைன் பண்ணி கொடுத்து இருக்கா. எந்த பிரச்சினையும் பண்ண மாட்டா” என்றவன் மது பெரும் தொகையான பணம் கேட்டதை மட்டும் மனைவியிடமிருந்து மறைத்து விட்டான் வாசன். 
“உங்க தம்பி மனசு மாறி பாப்பாவை கேட்டுட்டு மாட்டாரே!” சந்தேகமாக வாசுகி கேக்க,
கேக்க மாட்டான் என்று வாசனால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் ஸ்ரீராம் டி.என்.ஏ டெஸ்டுக்கு சம்மதிக்கவும் இல்லை.
“அவ என் குழந்தையாகவே! இருக்கட்டும். நான் உனக்கு தத்து கொடுத்ததாகவே! இருக்கட்டும் …ண்ணா” என்று விட்டான்.
“பாப்பா உண்டானதுல இருந்து அவங்க ரெண்டு பெருக்கிடையிலும் பெருசா ஒட்டுதல் இருந்ததில்ல, பொறந்த பிறகும் சண்டைதானாம். குழந்தை மேல பெருசா பாசம் வரவும் இல்லனு சொல்லுறான். யாருக்கு பொறந்தானு தெரியலனு மது சொன்னதுல இருந்து கொஞ்ச, நஞ்ச பாசமும் விட்டு போச்சுன்னு சொல்லுறான். அவ்வளவுக்கு மனம் வெறுத்து இருக்கான். பாப்பாவை கேக்க மாட்டான். நீ கவலை படாத, கேட்டா அன்னைக்கி அறஞ்ச மாதிரி நல்லா சாத்து” என்று புன்னகைக்க, வாசுகி முறைத்தாள்.
அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டவன் “பாப்பாவை சட்ட படி தத்தெடுக்க போறோம். பேர் கூட மாத்திடலாம். நல்ல அழகான தமிழ் பேரா வைக்கலாம். ட்ரெஸ்ஸு வாங்கணும். ஒரு பெரிய தொட்டில் வாங்கணும்னு நினைக்கிறேன் வாசு நீ என்ன நினைக்கிற”
“நான் பாப்பா கூட தூங்குறது உங்களுக்கு பிடிக்கலையா?” வாசுகி முறைக்க,
அவள் கழுத்தில் கைபோட்டு தன் புறம் இழுத்தவன் “இது உனக்கே!! நியாயமா இருக்கா? டாக்டர் வேற நமக்குள்ள எதுவும் கூடாதுனு சொல்லிட்டாங்க. பாப்பா வந்ததிலிருந்து என்ன தள்ளியே! வச்சிருக்க, குட்டி பாப்பா வந்தா பக்கத்துல கூட வர முடியாது. நைட்டு மட்டும்தான் உன் பக்கத்துல வர முடியும் இனிமேல் அதுவும் போக போகுது. கொஞ்சமாச்சும் புருஷன் மேல கருணை காட்டுமா” சோகமான முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல வாசுகிக்கி சிரிப்புதான் வந்தது.
தான் ஆசை பட்டதற்காக குழந்தையை தத்தெடுக்க நினைத்திருக்கிறான் அதை கூட புரிந்துக்கொள்ளாமல் முறைத்துக்கொண்டு இருந்திருக்கிறேன். சொல்வதுபோல் எனக்கு கோபம் அதிகமாகத்தான் வருகிறது. யோசிக்காமல் என்னவெல்லாம் பேசிவிட்டேன்.
“இப்படியே! என் முகத்தை பார்த்துகிட்டே! இருந்தா என்ன அர்த்தம்” வாசனும் மனைவியின் முகத்தை ஏறிட
“என் புருஷன் சொன்னதெல்லாம் சரி அப்படியே செய்யுறேன்னு அர்த்தம்” என்றவள் வாசனின் கன்னத்தில் முத்தம் வைக்க,
“அட என் பொண்டாட்டிக்கு இப்போதான் என்னைய கண்ணுக்கு தெரிகிறேன் போலயே! ஒரு முத்தம் வாங்க எவ்வளவு வேல பாக்க வேண்டி இருக்கு சே..சே..சே..” அலுத்துக்கொண்டவனாய் நடிக்க,
“நான் கோபமா இருந்தா நீங்க வந்து பேச மாட்டேங்களா? நிங்களும்தான் முறிக்கிகிட்டு திரிஞ்சீங்க” வாசுகி முறைக்க,
“என்ன வெளிய அனுப்பி கதவ மட்டும்தான் டி சாத்தல, மத்தபடி என்ன ஒதுக்கித்தானே! வச்சிருந்த. அம்முமா புண்ணியம் மூணு வேல சாப்பிட்டேன். இல்லனா அதுவும் இல்ல. இன்னக்கி பாப்பா தூங்குறா இல்லனா எனக்கு சோறு போட்டிருப்பியா? சொல்லு” நொந்தவனாக சொல்ல
“அதான் கொட்டிக்கிட்டீங்கல்ல அப்பொறம் என்ன?” சிரிப்பாக இருக்கவே! இன்னும் சீண்டினாள்.
“வழக்கமா குளிக்க போகும் போது துண்டு, துணியெல்லாம் ரெடியா இருக்கும். இந்த ஒரு வாரமா நான் தான் எடுத்துட்டு போனேன். சாப்பாடு கூட நீ சமைக்கல, பரிமாறல, சேர்ந்து கூட சாப்பிடல. இதெல்லாம் ரொம்ப தப்புமா…  சொல்லிட்டேன்”
“நான்தான் உங்க மேல கோவமா இருந்தேனே!” வாசுகி அவன் முகம் பார்த்து சொல்ல
கோவமா இருந்தாலும் எல்லா வேலையும் பார்க்கணும்” மனைவின் முகத்தை தீர்க்கமாக பார்த்து வாசன் கூற
“இது எந்த ஊரு நியாயம்?” சட்டென்று சிரித்தாள் அவள்.
வாசனுக்கு சிரிப்பாக இருந்தாலும் “நீங்க மட்டும் கோவம் வந்தா அடிப்பீங்க, அநியாயம் பண்ணுவீங்க அது எந்த ஊரு நியாயம்? அதே ஊரு நியாயம்தான்”
“நான் இந்த தடவ அடிக்கவே! இல்லையே!” முகத்தை சுருக்கியவாறு சொல்ல
தாடையை தடவியவன் “அப்படியெல்லாம் நீ ரொம்ப நல்லவ கிடையாதே! ஒன்னு பாப்பாவ கைல வச்சிக்கிட்டு அடிக்க முடியாம இருந்திருக்கும். இல்ல அடிச்சா பாப்பாவை தூக்கிட்டு போய்டுவேனோனு பயந்திருப்ப” என்று சிரிக்க,
கணவன் கண்டுகொண்டதில் அசடு வழிந்தவள் அதை மறைக்க கோபமாக “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா கத விடாம போய் வேற வேல இருந்தா பாருங்க” என்று அதட்ட
“ஏய்…ஏய்.. உன்ன பத்தி எனக்கு தெரியாதா…” என்று அவளை கிச்சு கிச்சு மூட்ட வாசுகி சத்தமாக சிரித்ததில் குழந்தையும் சினுங்க கணவனை முறைத்தவள் குழந்தையை கவனிக்கலானாள்.
பணத்தை ரோஹன் வக்கீல் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பான். மதுவிடம் பேசிய வக்கீல் ரோஹானை அழைத்த போது அவன் மீட்டிங்கில் இருப்பதாக அவனது பி.ஏ. தெரிவித்திருக்க, அவர் வாசனை தொடர்பு கொண்டிருந்தார்.
பணத்துக்கு என்ன செய்வது என்று வாசன் யோசிக்க, ஸ்ரீராம் தொழிலை விற்க ஏற்பாடு செய்ததையும், ஸ்ரீவத்சன் பணம் போட்டிருப்பதையும் கூற ஸ்ரீவத்சனின் பணத்திலிருந்து தான் மதுவுக்கு பணம் கொடுத்திருந்தனர்.
வாசன் பணம் கொடுத்ததை அறிந்த ரோஹன் வக்கீலை பிடி பிடி என்று பிடித்தும் கொள்ள, எரிச்சலடைந்த அவர் “நீங்க அவருக்கு தெரியாம காசு கொடுக்கலாம் சார். ஆனா எழுதி வாங்கும் பொழுது அவங்க படிப்பாங்களே! அப்போ பிரச்சினை வராதா?” என்று கேட்டதும் அமைதியானான் ரோஹன். 
ஸ்ரீராமின் பிரச்சினை முடிவடைவதோடு ரோஹனின் திருமண வேலைகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் வாசன்.
கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரமே! இருக்க, ரோஹன் குடும்பத்தோடு ஊருக்கு வந்திருந்தான்.
வாசுகி உண்டான சேதி கேட்டு ரோஹன் மகிழ்சசியாகி வாசனை கட்டிக்கொள்ள, சரளா வாசுகியை நெட்டி முறித்து அவள் சாப்பிட கொண்டு வந்தவைகளை கடை பரப்பி இருந்தாள்.
இவங்களுக்கு ஏற்கனவே! தெரியுமா என்று வாசுகி சந்தேகமாக பார்க்க, “முதல்லயே! சொல்லி இருந்தா நிறைய கொண்டு வந்து இருப்பேன்” என்று சமாளித்து, தங்களை குடும்பமாக நினைக்கவில்லையா என்றும் கேட்டு வைத்தாள்.
வாசுகி கணவனைத்தான் முறைத்தாள். சொல்லலாம் என்று கூறியும் ஊருக்கு வந்த பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று வாசன் தானே! கூறி இருந்தான்.
ரோஹன்தான் “என்னம்மா அண்ணா.. காரணம் இல்லாம ஏதும் செய்ய மாட்டார் என்று தெரியாதா?” என்று சொல்லியவாறே கண்களாலும் சைகை செய்ய,
“இல்ல டா…  சொல்லி இருந்தா வாசுகிக்கி சாப்பிட என் கையாலையே! செஞ்சி எடுத்துட்டு வந்திருப்பேன் இல்ல” என்று சமாளிக்க,
“அதான் வந்துட்டியே! பக்கத்துலயே! இருந்து பாத்துக்க, யாரு வேணாம்னு சொல்ல போறா” என்று ரோஹன் சொன்னதும்
“என்ன அம்முமா… பாத்துப்பாங்க… நீங்க கல்யாண வேலைய பாருங்க” என்று வாசுகி சொல்ல அன்னை, மகன் இருவரினதும் முகம் மலர்ந்தது.
  கல்யாண ஷாப்பிங் சென்னையிலையே! முடித்துக்கொண்டு வந்திருந்ததால் சரளா கொண்டுவந்திருந்த துணிமணிகளை கடைபரப்பி வாசுகி வாங்கிய பட்டு சாரிகளை அவளிடம் கொடுக்க,
“என்னமா அஞ்சி சாரி வாங்கி இருக்கீங்க? கல்யாணத்துக்கு ஒன்னு வாங்கினா போதாதா?” என்று கேட்டாள்.
ஒவ்வொரு புடவையும் ஒவ்வொரு நிறத்திலும், ஒவ்வொரு வேலைப்பாடுகளோடும் அவ்வளவு நேர்த்தியாக கண்ணை கவர்ந்ததிலையே! அதன் விலை என்னவாக இருக்கும் என்று எடுத்துக் காட்ட சங்கடமாகவே உணர்ந்தாள் வாசுகி.
சரளாவுக்கு அப்படியெல்லாம் தோணவில்லை போலும் “அம்மா வீட்டு சீர்ன்னு நெனச்சுக்கேயென்மா… உனக்கு எவ்வளவோ! செய்யணும்னு ஆச..” என்றவர் சுதாரித்து “எனக்குதான் பொண்ணு இல்ல. வர்ர மருமகளுக்குத்தான் செய்யணும். வாசன் எனக்கு மூத்த மகன் உனக்கு செய்யாம இருந்தா இதோ இவன் முறிக்கிகிட்டு என் கூட பேச மாட்டான்” என்று மந்த்ராவுக்கு வாங்கிய புடவைகளையும் காட்ட வாசுகிக்கி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“வாசுகி இதெல்லாம் எங்கம்மா வாங்கினதா தப்புக்கணக்கு போட்டுடாதீங்க, எக்சுவலி மந்த்ராவை கூட்டிகிட்டு போய் புடவை வாங்கணும்னு நான் ஆச பட்டேன். அதுக்கு உங்க அப்பா சென்னை வரைக்கும் அனுப்ப மாட்டாருனு எங்க அம்மாவே சொல்லிட்டாங்க, அதான் வீடியோ கால் பண்ணி அவதான் செலெக்ட் பண்ணா” என்று ரோஹன் சொல்ல
தங்களது இஷ்டத்துக்கு வாங்காமல் மந்த்ராவின் விருப்பப்படிதான் வாங்கியதாக கூறவும் வாசுகிக்கி சந்தோஷமும், நிம்மதியும் பிறந்தது.
 சத்யன், அம்மு என்று அனைவருக்கும் வாங்கிய துணிகளை சரளா கொடுக்க ராமநாதன், ஸ்ரீராம், வாசனுக்கு வாங்கியதை தான் கொடுப்பதாக ரோஹன் கூறினான்.
மணப்பெண்ணின் தாய், தந்தை, மற்றும், சந்திரா,ஜெயமணி என்று அனைவருக்கும் துணிமணிகளை வாங்கி வந்திருந்தனர்.
அடுத்த நாள் காலையிலையே முகூர்த்தக்கால் ஊன்ற ஆயத்தமானார்கள் முள்முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டி விட்டு ராமநாதன் வீட்டில் பெரியவர் என்பதால் அவரை கொண்டு அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி நவதானியத்தொடு நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி மூன்று சுமங்கலிப்பெண்கள்  திருநீறு, சந்தனம், குங்குமம் சாத்தினார்.
இவ்வாறு சரளாவும் தன் ஒரே மகனின் திருமணச்சடங்கை எந்த குறையும் இல்லாது ஒன்றன் பின் ஒன்றாக செய்து வர கல்யாண நாளும் அழகாக விடிந்தது.
வாசனின் வீடு கல்யாண வீடாக காட்ச்சி தர, அதிகாலையிலையே! குளித்து அனைவரும் மண்டபத்துக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். வாசுகி இளம் பச்சை நிறத்தில் நீல நிற கரை பட்டில் தயாராகி வர வாசன் வேட்டி சட்டையில் தயாராகி வந்தான்.
“கோட் சூட் போடுவீங்கன்னு நினச்சேன்” என்று வாசுகி கிண்டலடிக்க,
“சென்னைல ஒரு ரிசப்ஷன் இருக்காம் அங்க போடுறேன்” என்று அவள் கன்னம் கிள்ளியவன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வர அனைவரின் கண்களும் அவர்களை ஆசையாக பார்க்க, சரளா அவர்களுக்கு த்ரிஷ்டி சுத்திப் போட
“ம்மா.. கல்யாணம் எனக்கு” என்று ரோஹன் முனங்க
“கல்யாணம் முடிஞ்ச பிறகு உனக்கு சுத்தி போடுறேன் டா.. இப்போ என் மூத்த பையனுக்கு பண்ண விடு. பொறாமை புடிச்சவன்” என்று திட்ட
“என்னாலதான் உனக்கு இந்த வளர்ந்த பையன் கிடைச்சான்” என்று ரோஹன் சொல்ல
“உன்னால எங்க கிடைச்சான்? வாசுகியாலதான் கிடைச்சான்” என்றுவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.
மண்டபத்துக்கு செல்லும் பரபரப்பில் இவர்களின் பேச்சு யார் கவனத்தில் இல்லை.
வாசுகி பெண் வீடாக இருந்தாலும், அவளுடைய நிலையை ஒட்டி நாதனிடம் பேசிய வாசன் அவளை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட நாதனும் வேறு வழியில்லாது வாசுகியை பத்திரமாக மண்டபத்துக்கு அழைத்துவருமாறு கூறி இருந்தார்.
நாதன் குடும்பத்தாரும், கலைவாணியின் குடும்பத்தாரும், முன்தினமே! மண்டபத்துக்கு சென்றிருக்க, காலை எட்டு மணிக்கு முகூர்த்தம் என்பதால் ரோஹன் குடும்பம் அதிகாலையில் மண்டபத்துக்கு வருவதாக கூறியிருந்தனர்.
வாசுகி கர்ப்பமாக இருப்பதால் வாசனுக்கும் அதுதான் சரி என்றும் தோன்றியது. குழந்தையையும் வைத்துக்கொண்டு அந்த இடத்தில் இரவில் தங்கினால் குழந்தையும் அவஸ்தைக்குள்ளாவாள் என்று எண்ணின்னான்.
அம்மு தான் கல்யாணத்து வர மாட்டேன் என்று கூற, வந்தே! ஆகா வேண்டும் என்று ரோஹன் அடம்பிடிக்க, வாசுகியும் வற்புறுத்தியதால் மண்டபத்துக்கு செல்ல வண்டியில் ஏறி இருந்தாள்.

Advertisement