Advertisement

அத்தியாயம் 24
மதுஷா பிறந்தது, வளர்ந்து என்னமோ! நடுத்தர வர்க்க குடும்பத்தில்தான். இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்ததினாலும் தந்தை வழியில் அவள்தான் முதல் பெண் வாரிசு என்பதினாலும் வீட்டில் அதீத செல்லமாகிப் போக, அவள் கேட்பதையெல்லாம் தந்தை நிறைவேற்றலானார்.

 

ஒரே பெண் பிள்ளை ஆசைப்படுகிறாள் என்று செய்ய ஆரம்பித்தவர் அவளின் ஆசைகளுக்கு அளவுமில்லை. எல்லையுமில்லை என்பதை உணரத் தவறினார்.

 

நிறம் மா நிறத்துக்கு குறைவான நிறமாக இருந்தாலும், கலையான முகம்தான். ப்ளஸ் டூ படிக்கும் பொழுதே பாலர் செல்ல ஆரம்பித்தவள் தன்னை அழகாக காட்டிக்கொள்வதில் பெரிதும் சிரமப்பட்டாள்.

 

“நீங்க இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க” என்று அன்னை திட்டுவதும்

 

 

“அவ என் பொண்ணு டி. அவளுக்காக என்னவேனாலும் பண்ணுவேன்” என்று தந்தை கண் மூடித்தமாக செலவழிப்பதும் மதுஷாவின் ஆசைகளை தூண்டி விட்டிருந்ததென்றே சொல்லலாம்.

 

காலேஜ் செல்ல ஆரம்பித்த பின் ஒரு பணக்காரனை மணந்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் அவளது ஒரே குறிக்கோளாகிப்போனது அவள் மனதறிந்த ரகசியம்.

 

 

ஆனால் அந்த பருவத்தில் ஏற்படும் காதல் அவளையும் விடவில்லை. அவள் வகுப்பில் இருந்த பேரழகன், பெண்கள் சைட்டடிக்கும் ஆணழகன் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு. தனது ஆசைக்கும், ஈர்ப்புக்கும் மத்தியில் வெகுவாக போராடலானாள் மதுஷா. ஆசைதான் முக்கியம் என்று அவனிடமிருந்து ஒதுங்கித்தான் போனாள். அந்த ஒதுக்கம்தான் அவனை இவள் புறம் ஈர்த்ததென்று இவளுக்குத்தான் தெரியவில்லை.

 

அன்னையின் அழகை கொண்டு பிறந்த ஸ்ரீராம் ஊரில் இருக்கும்வரை தான் ஒரு அழகன் என்றோ! தன்னை எத்தனை பெண்கள் சைட் அடிக்கிறார்கள் என்றோ! எண்ணிப் பார்த்ததில்லை. பாடசாலையிலும் எல்லாம் அறிந்தவர், தெரிந்தவர். காலை, மலையென தினமும் சந்தித்துக்கொள்பபவர்கள், சண்டை போட்டுக்கொள்பவர்கள். ஆண்கள், பெண்கள் என்ற பேதமும் இல்லை.

 

 

காலேஜ் வந்த பின்தான் வெளியூர், வித்தியாசமான மனிதர்கள் என்று சந்தித்தவன், பெண்கள் அவனை வட்டமிடவும் கொஞ்சம் மமதையில் மிதந்தான். மதுஷா அவனை ஏறெடுத்தும் பார்க்காததால் நண்பர்கள் அவனை தூண்டி விடவும் அவளை காதலிக்க வைப்பேன் என்று சவால் விட்டவன் அவள் பின்னால் அலையலானான்.

 

 

ஸ்ரீராமின் குடும்பம் வசதியான குடும்பமா என்று மதுஷா அவனிடமே! கேட்க, அவன் சொன்ன தகவல்கள் அவளுக்கு உவப்பாக இல்லை.

 

“இங்க பாரு ஸ்ரீராம் நான் ரொம்ப வசதியானவள் இல்ல. வசதியான வாழ்க வாழணும்னு ஆச படுறேன். உனக்கும் எனக்கும் செட் ஆகாது என்ன விட்டுட்டு” என்று தெளிவாக கூறினாள் மதுஷா

 

 

அப்பொழுதே ஸ்ரீராம் அவள் உறவை துண்டிருத்திருந்தால் இன்று அவனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அந்த வயதுக்கே! உரிய மோகமும் ஆசையும் கண்ணை மறைக்க,  ஸ்ரீராமுக்கு அவள் ரொம்பவும் துணிச்சலான பெண் என்று எண்ணத் தோன்றியதே! ஒழிய அது அவளின் உண்மையான குணம் என்று தோன்றவில்லை.

 

 

“நானும் வசதியான வீட்டு பிள்ளை இல்லையே! எனக்கும் வசதியாக வாழ வேண்டும் என்று ஆசை. அதுக்குத்தான் படித்துக்கொண்டே தொழில் பார்க்கலாம் என்று இருக்கேன்” என்றான்.

 

 

மதுஷா அவனை விட்டு விலக்குவதில்லையே! குறியாக இருக்க, அவளை நெருங்கவென அவளுக்காக அவன் எல்லாம் செய்ய அவள் புத்தி வேறு விதமாக சிந்திக்கலானது. காசு, பணம் இருந்து வயதான ஒருவனையே! அல்லது மனசுக்கு பிடிக்காத ஒருவனையே! திருமணம் செய்வதை விட தன்னை நேசிக்கும் ஒருவனை அதுவும் தந்தை போலவே! தனக்காக எதையும் செய்ய காத்திருக்கும் ஒருவனை திருமணம் செய்வது இரட்டிப்பு மகிழ்ச்சியும் வாழ்வில் வெற்றியை மட்டுமே! கொடுக்கும் என்று எண்ணியவள் அவளும் அவனை காதலிப்பதாக கூறினாள்.

 

ஸ்ரீராம் நம்பர்களிடம் போட்ட சவாலால் காதலிக்க தூண்டப்பட்டான். மது காதலிப்பதாக கூறினாள் அதாவது “மீ டூ” என்று வாய் வார்த்தையாக கூறினாளே! தவிர மனதில் ஸ்ரீராமுக்கு இடமே! கொடுத்திருக்கவில்லை.

 

இப்படி உருவான இவர்களின் காதல் ஒரு மாதம் பெரிதாக எந்த சிக்கலும் இல்லாமல்தான் போய்க் கொண்டிருந்தது. வாரம் தோறும் ஸ்ரீராமோடு ஊர் சுற்ற ஆரம்பித்தவளை அவளது அண்ணன் ஒருவன் பார்த்து நடு ரோட்டில் வெளுத்து வாங்க, வீட்டுக்கு போக முடியாது என்று அழுது கரைந்தவளை அவசர அவசரமாக கரம் பிடித்தான் ஸ்ரீராம்.

 

கொஞ்சம் காலம் ஒன்றாக இருந்தாலே! அவர்களுக்குள் இருப்பது காதலே! இல்லை என்று அவர்களே! பிரிந்து சென்றிருப்பார்கள். விதி சேரவே! கூடாத இருவரை சேர்த்து வைத்திருந்தது.

 

 

  இவர்களின் திருமணம் இரு வீட்டாருக்கும் தெரியாமலையே! இரு வீட்டாரின் அனுமதியின்றியே! நடந்தேறி இருக்க, தனது செல்ல மகள் செய்த காரியத்தை தாங்க முடியாமல் மதுஷாவின் தந்தை உயிரையே! நீத்திருக்க, மதுஷாவின் குடும்பம் அவளை எக்காரணத்தைக் கொண்டும் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர்.

 

ஸ்ரீராம் திருமணம் செய்தது குடும்பத்தார் அறிந்துகொள்ளும் பொழுது ஆறு மாதம் கடந்திருந்தது. எதோ ஒரு சூழ்நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டியதாக்கிப் போனது என்று ஸ்ரீராமின் குடும்பத்தார் நினைத்து அவனை மன்னித்தாலும் சத்யாவின் திருமணம் நடக்கும் வரையில் யாருக்கும் இந்த விஷயம் தெரியாமல் இருப்பது நல்லது என்று முடிவு செய்தும் கொண்டனர். ஆனால் இந்த மாதிரியான விஷயங்கள் மூடி மறைக்க கூடிய விஷயமா?

 

அப்படியும் இப்படியும் ஸ்ரீராமின் படிப்பு முடியும்வரை யாருக்கும் தெரியாமல் இருந்த விஷயம் படிப்பு முடிந்த பின் சொந்த பந்தங்களுக்கு தெரியவர ஆளாளுக்கு கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, ஸ்ரீராம் மதுவோடு தனிக்குடித்தனமும் சென்றிருந்தான்.

 

 ஆரம்பத்தில் ஸ்ரீராம் இரு நண்பர்களோடு சேர்ந்துதான் தொழில் ஆரம்பித்தான். இவர்கள் தொழிலுக்கு புதிது அதனால் உடனே! நிலைத்து நிற்பது கொஞ்சம் கஷ்டமான காரியம், சில இடங்களில் வளைந்து போகவும், வளைந்து கொடுக்கவும் சூழ்நிலைகள் உருவாக எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இலாபம்தான் பெரிதாக இவர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை.

 

மதுவுக்கு தனது செலவுகளுக்கு பணம் தேவைப்பட ஸ்ரீராமை தனியாக தொழில் தொடங்குமாறு தூண்டினாள். ஸ்ரீராமும் அவள் வலையில் விழுந்து நண்பர்களிடமிருந்து பிரிந்து தனியாக தொழில் ஆரம்பித்தான். ஓரளவுக்கு தொழிலை கற்றுக்கொண்டவனால் சமாளிக்க முடிந்ததனால் நிலைத்தும் நின்றான்.

 

மதுவுக்கு ஆசைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. கார், பங்களா என்று வாங்க வேண்டும் என்று கணவனை நச்சரிக்க ஆரம்பித்தாள். ஸ்ரீராமும் அவனின் வசதிக்கு ஏற்ற மாதிரிதான் ஒரு வீட்டை வாடகைக்கு பாத்திருந்தான்.

 

லோனில் கார் என்று ஆரம்பித்து கடன் சுமையும் சேர்ந்துகொண்டிருக்க, மேல்தட்டு மக்களின் கலாச்சாரம் என்று தொழில் பார்ட்டிகளில் கலந்துக்கொண்டு குடி, ஆட்டம்பாட்டம் என்று வாழ்க்கையையும் என்ஜோய் பண்ணிக்கொண்டிருந்தனர் இந்த இளம் ஜோடி.

 

 

தொழில் பார்ட்டிகளில் பெண்கள் விதவிதமாக அணிந்து வரும், வைரம், மற்றும் அவர்கள் சொல்லும் வெளிநாட்டுப் பயணங்களின் பற்றி கூறுகையில் அவற்றின் மேல் மதுவுக்கு மோகம் அதிகரிக்க, கணவனை நச்சரிக்கலானாள். அவளின் ஆசையை நிறை வேற்றுகின்றேன் என்று இவர்கள் ஊர் சுற்ற, மேனேஜர் சரக்கோடு பணத்தையும் எடுத்து சென்று விட, லெதர் கம்பனியை மூட வேண்டியதாக்கிப் போக, கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்ய ஆரம்பித்திருந்தனர்.

 

மதுவின் ஆலோசனைப்படிதான் ஊரிலிருக்கும் வீட்டை விற்று சமாளித்தான் ஸ்ரீராம். அதன்பின்னாவது மது திருந்தி இருக்கலாம். ஸ்ரீராம் சுதாரித்துக்கொண்டு தொழிலை ஒழுங்காகத்தான் பார்த்து வந்தான். அவன் முதலில் செய்தது மதுவின் ஆடம்பர செலவுகளுக்கு பணம் கொடுப்பதை தவிற்பதையே!

 

அவனிடம் கேட்டுப் பார்த்தவள், சண்டையும் பிடித்துப் பார்த்துவிட்டு அமைதியானாள். திடிரென்று அவனோடு நல்ல முறையில் நடந்துக்கொள்ள ஆரம்பித்தவள் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினாள்.

 

 

ஆனால் இதற்கிடையில் ஸ்ரீராமுக்கு தொழிலில் வேறுவகையான பிரச்சினைகள் தலை தூக்க பணம் தேவைப்பட்டது. வட்டிக்கு வாங்கினால் தன்னால் தலை தூக்க முடியாமல் போய்விடும் என்பதை நன்கு உணர்ந்தவன் முடிந்தளவு சமாளித்து வர, குழந்தையும் பிறந்திருந்தாள்.

 

 

கர்ப்பம் என்று கூறி ஆறே மாதத்தில் குழந்தை பிறந்து விட்டாளே! என்ற சிந்தனையெல்லாம் அவன் புத்தியில் இல்லை. அவள் வீட்டாரோடு எந்த தொடர்பும் இல்லை. இவன் வீட்டாரோடும் சமீப காலமாக எந்த தொடர்பும் இல்லை. யார் கேள்வி கேப்பார்கள். காதல் மனைவியை அவன் சந்தேகத்ததும் இல்லை.

 

தொழில் பிரச்சினையை ஒரு புறம் இருக்க, குழந்தை பிறந்த பின்னால் மது மீண்டும் பழைய முகத்தை காட்டலானாள். இரண்டையும் சமாளிக்க முடியாமல் குடித்து விட்டு வருபவன் மது பேசினால் அடிக்க ஆரம்பித்திருந்தான்.

 

 

இப்படியே போனால் வாழ்க்கை நரகமாக்கி விடும் என்று புரிய என்ன செய்வது என்று யோசித்த நேரம்தான் ஸ்ரீவத்சன் தொடர்புகொண்டு அவனது திருமணத்துக்கு ஊருக்கு வருமாறு அழைத்திருந்தான். நலம் விசாரிக்கும் பொழுதே இவன் பிரச்சனைகளை சொல்லி இருக்க “ஊருக்கு வா பார்த்துக்கொள்ளலாம்” என்றான் ஸ்ரீவத்சன்.

 

சமாளிக்கவே! முடியாது என்று தோன்றிய நேரத்தில்தான் அண்ணன்களிடம் பணம் கேட்கலாம் என்று முடிவு செய்தான் ஸ்ரீராம். ஸ்ரீவத்சன்! மொத்த பணத்தையும் தந்து விடுவதாகவும், கொஞ்சம் நாள் பொறுமையாக இருக்கும்படியும் கூறிச்செல்ல ஸ்ரீராமும் சரியென்று விட்டான். 

 

எல்லாம் நல்லபடியாக நடந்துவிடும் என்று ஸ்ரீராம் நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு ஸ்ரீவத்சன் அழைத்து இன்னும் ஒரு வாரத்தில் பணம் போட்டு விடுவதாக கூறி இருந்தான். அந்த சந்தோசத்தில் குடிக்காமல், நேரங்காலத்தோடு வீடு வந்தால் மனைவியை காணவில்லை. குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு வயதான பெண்மணியையை ஏற்பாடு செய்து விட்டு எங்கோ! வெளியே சென்றிருந்தாள்.

 

 

எங்கு சென்றிருப்பாள் என்று சிந்தித்தவனுக்கு ஒன்றும் தோன்றவுமில்லை. அந்த பெண்மணியிடம் ஒன்றும் சொல்லிக்கொண்டு சென்றிருக்கவுமில்லை. ஆட்டோ பிடித்துத்தான் சென்றாளாம். உடம்புக்கு முடியாம போய் இருப்பாளோ! என எண்ணம் தோன்ற அவள் வரும்வரை காத்திருக்கலானான்.

 

 

வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் அறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீராமுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் மனைவிதான் யாரோ ஒருவனின் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். சேலைதான் அணிந்திருந்தாள். அப்படியொரு மெல்லிய சேலையை அவன் எங்கும் பாத்திருக்க மாட்டான். அவள் அங்கமெல்லாம் அப்பட்டமாக தெரிய அவன் கை அவள் மேனியில் ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது.   

 

அவர்களை பார்க்கப் பார்க்க இரத்தமும் சூடாக்கி வாசலுக்கு வர வண்டிக்காரன் கிளம்பிச் சென்றிருக்க, மது ஸ்ரீராமைக் கண்டு ஒரு நொடி திகைத்தவள், மறுநொடி அலட்ச்சிய முகபாவனையில் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

 

 

ஸ்ரீராம் என்னதான் குடித்து விட்டு வந்து மதுவை அடித்தாலும், அவளால்தான் தன் வாழ்க்கை கெட்டு சீரழிந்து போய் விட்டது என்று தூற்றினாலும், பெயருக்கு ஏற்றது போல் ஸ்ரீராமாகத்தான் இருந்தான். அவன் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணையும் அவன் திரும்பிக்கூட பார்த்ததில்லை. பார்ட்டிகளில் டான்ஸ் ஆட அழைத்தாலும் நாசுக்காக தவிர்த்து விடுவான். பெண்கள் விஷயத்தில் ஸ்ரீராமனாகவேதான் இருந்தான். ஆனால் அவன் மனைவி?

 

கண்கள் இருவரின் நெருக்கத்தையும் பார்த்திருந்தாலும் பொறுமையாக மனைவியை விசாரிக்க எண்ணி “நில்லு டி? யார் டி அவன்? எங்க போயிட்டு வர?” என்னதான் பொறுமையாக கேட்க நினைத்தாலும் குரலில் கோபம் அப்பட்டமாக எதிரொலித்தது.

 

“நான் ரொம்ப டயடா இருக்கேன். அப்பொறம் பேசிக்கலாம்” அவனை ஒரு பொருட்டாகவே! மதிக்காமல் மது உள்ளே செல்லப் போக

 

“முதல்ல வெளியே போடி. என் வீட்டுல உனக்கு இடம் இல்ல” கோபம் தலைக்கேற கத்தியே! விட்டான் ஸ்ரீராம்.

 

அவனை ஒரு நொடி அற்ப புழுவை பார்ப்பது போல் பார்த்தவள் “என்ன? சொன்ன? உன் வீடா? நீ காசு கொடுத்து வாங்கினியா?” கிண்டலாக சிரிக்க,

 

“காசு கொடுத்து நிக்குறேன்” வாடகை வீடு என்று ஸ்ரீராம் கூற

 

சத்தமாக சிரித்தவள் “இது என் வீடு. வீட்டு ஓனர் கூட…”  வாக்கியத்தை முடிக்காமல் “எழுதி வாங்கிட்டேன்” கண் சிமிட்டி கேவலமான ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

 

 

பணத்தாசையில் யாரோ ஒரு பணக்காரனுக்கு வலை விரித்திருப்பாள் என்று ஸ்ரீராம் எண்ணி இருக்க, பல பேரோடு உல்லாசமாக இருப்பவள் என்று அவள் வாயாலே கேட்டது கணவனானவனுக்கு மாபெரும் அதிர்ச்சியென்றால் அவள் அடுத்து சொன்னதைக் கேட்டு அவளைக் கொல்லும் வெறியில் இருந்தான் ஸ்ரீராம்.

 

“சும்மா.. பிஸ்னஸ் பண்ணுறேன், பிஸ்னஸ் பண்ணுறேன்னு ஒண்ணுத்துக்கும் லாயக்கில்ல. ஒன்னு பண்ணு நாளைல இருந்து என் மேனஜரா ப்ரொமோட் ஆகிடு” என்றவள் வீட்டுக்குள் சென்றிருந்தாள்.

 

 

இத்தனை நாள் பணம், பணம் என்று இவளுக்காகவா சம்பாதிக்க எண்ணினேன் என்று நினைத்தவனுக்கு தன்னை நினைத்தே கோபம் வந்தது. நீண்ட நேரம் யோசனையில் இருந்தவன் அவன் செய்யும் தொழிலை விற்றால் கடன் தொல்லையிலிருந்து மீளலாம், ஊருக்கு சென்று வாசன் கடையில் கூலி வேலையாவது பார்க்கலாம். இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவுக்கு வந்தவன். ஒரு முடிவோடு அறைக்குள் சென்று தன்னோடு துணிமணி, சாமான் என்று என்று எல்லாவற்றையும் பேக் பண்ணலானான்.

 

எல்லாவாற்றையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கே வந்து விட்டவன் குழந்தை அழும் சத்தம் கேட்டது. “இவளை எப்படி மறந்தேன். பெண் பிள்ளை. குழந்தையை இவளிடம் விட்டுச்சென்றால். நாளை இவளையும் அவளை மாதிரியே! வளர்த்து விடுவாள்” என்ற எண்ணம் தோன்ற உள்ளே செல்ல அடியெடுத்து வைத்தான் ஸ்ரீராம்.

 

 

“சனியன், சனியன் எப்போ பார்த்தாலும், அழுதுகிட்டு” என்று மது குழந்தையை போட்டு அடிக்க,

 

அவளிடமிருந்து குழந்தையை பிரித்தெடுத்த ஸ்ரீராம் “அறிவிருக்க, பச்சை குழந்தையை போட்டு அடிக்கிற” என்று கத்த

 

“நான் தூங்கணும், குழந்தையை பாத்துக்க” என்றவள் கட்டிலில் விழ

 

“டிவோர்ஸ் நோட்டீஸ் வரும். நான் என் குழந்தையை எடுத்துட்டு போறேன். நீ எப்படி வேணாலும் ஆட்டம் போடு” என்று ஸ்ரீராம் நகர,

 

“நயா பைசா இல்லாத உன்னயெல்லாம் புருஷனா வச்சிக்கிறதும் ஒண்ணுதான் விட்டுடுறதும் ஒண்ணுதான். போறதுக்கு முன்னால அவளை கூட்டிட்டு போகணுமான்னு யோசிச்சிக்க” என்று நக்கலாக கூற ஸ்ரீராம் புரியாது பார்த்தான்.

 

 

“உனக்கு பொறந்தான்னு நினைச்சுகிட்டு இருக்கியா? யாருக்கு பொறந்தான்னே! தெரியல” என்றவள் கதவடைத்துக்கொள்ள ஸ்ரீராம் கதவருகிலையே! தொப்பென்று அமர்ந்து விட்டான்.

 

வாழ்க்கையில் பணம் சம்பாதிக்கணும் நல்ல நிலைமைக்கு வரணும், நல்லா வாழனும், வாழ்க்கையை என்ஜோய் பண்ணனும் என்று நினைத்தது தவறா? அதற்காக பல தில்லு முள்ளு, தில்லாலங்கடி வேலைகளை கூட பார்த்திருக்கிறான். ஏன் சொந்த குடும்பத்தை, கூடப் பிறந்தவர்களையே! ஏமாற்றி இருக்கின்றான். எல்லாம் இவளுக்கா. ஆனால் இவள்.    

 

யாருக்கோ பிறந்த குழந்தையை இந்த ஐந்து மாதமாக தன்னுடைய குழந்தையென்று ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறாள். எவ்வளவு திமிர் பிடித்தவளாக இருப்பாள். யாருக்கோ! பிறந்த குழந்தையை நான் எதற்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற குழந்தையை அங்கேயே! விட்டு செல்ல எண்ணினான்.

 

குழந்தை அவன் கைக்கு வந்ததும் அமைதியாகி இருக்க, அந்த பிஞ்சு முகத்தை பார்த்தவனுக்கு குழந்தையை மதுவிடம் விட்டு செல்ல தோன்றவே! இல்லை. ஒரு கேப்பை புக் செய்து குழந்தையோடு ஊருக்கு வர கிளம்பினான். வரும் வழியில் குழந்தை தூங்கி இருக்க, டாஸ்மார்க்கை கண்டதும் இப்பொழுது இருக்கும் மனநிலைக்கு ஒரே மருந்து இதுதான் என்று குடித்தவாறே வந்தவன். வீட்டை அடைந்த உடனே! கதவை பலமாக தட்டி இருந்தான்.

 

கதவை தட்டி விட்டு உடலிலும், மனதிலும் தெம்பில்லாமல் அங்கேயே அமர்ந்தவன் மயங்கி இருந்தான்.

 

“யாரு… யாரு… யாருனு கேக்கிறேன்னில்ல” என்று வாசன் சத்தமாக கத்தவும் அந்த சத்தத்தில் விழித்துக்கொண்ட குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது.

 

 

“எதோ குழந்தை அழுதுங்க” வாசுகி பதறியவாறு சொல்ல வாசனும் திகைத்தான். அந்த நொடி அவனுக்கு வாசுகியை திருமணம் செய்யும் பொழுது யாரோ! அவனுக்கு திருமணமாகி குழந்தையும் இருப்பதாக போன் செய்து சொன்னது நியாபகத்தில் வந்தது. ஒருவேளை யாராவது வேண்டுமென்றே! குழந்தையொன்றை கொண்டுவந்து போட்டுவிட்டு சென்று விட்டார்களோ! என்று வாசனின் உள்ளம் பதற,

 

 

“இது இது நம்ம ஸ்ரீராமோட குழந்தையோட குரல் மாதிரி இல்ல இருக்கு” என்றார் ராமநாதன்.

 

அது ஸ்ரீராமின் குழந்தையின் குரல்தானா? என்று வாசன் உன்னிப்பாக கேட்க முட்படுகையில் வாசுகி கதவை திறந்திருந்தாள். வாசன் அவளை பிடித்து தன் புறம் இழுத்து நிறுத்திக்கொள்ள, சத்யன் சென்று எட்டிப்பார்த்து அங்கு யாரோ விழுந்து கிடப்பதாக கூற வாசனும், ராமநாதனும் ஒன்று சேர சென்று பார்த்தனர்.

 

ராமநாதன் குழந்தையை தூக்கிக் கொள்ள சத்யனும், வாசனும் ஸ்ரீராமை எழுப்பலாயினர்.

 

 

ஸ்ரீராம் குளறியவாறே இருக்க, குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்தது.

 

“குழந்தையை இங்க கொடுங்க, ரொம்ப பசியா இருக்கா” என்று அம்மு வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல,

 

“மது எங்க டா? இவன் மட்டும் வந்திருக்கான்” ராமநாதன் புரியாது கேக்க,

 

“அவன் கண்ணு முழிச்சா தான் என்ன நடந்ததுன்னு தெரியும்” வாசன் சொல்ல

 

“இப்போதைக்கு எழுந்துக்க மாட்டாரு தம்பி. இப்போ தூங்கட்டும், காலைல விசாரிங்க” என்ற சத்யன் ஸ்ரீராமை கைத்தாங்கலாக பிடிக்க வாசனும் மறுபுறம் வந்து பிடித்துக்கொண்டு சென்று ஒரு அறையில் தூங்க வைத்தனர். 

 

 

நல்லவேளை வாசுகிக்கு கொடுக்க பால் காய்ச்சியத்தில் மீதமிருந்தது அதை குழந்தைக்கு கொடுத்து பசியாற்றிய அம்மு மீண்டும் குழந்தையை தூங்க வைத்துக்கொண்டிருந்தாள்.

 

வாசுகிக்கு குழந்தையை பார்க்கும் பொழுது ஆசையாசையாக இருந்தது. தூங்கும் குழந்தையை தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டு தூங்க முற்பட,

 

“அதான் அம்முமாவே! குழந்தையை வச்சிக்கிறேன்னு சொன்னாங்களே!  விட வேண்டியதுதானே!” மனைவியை அணைக்க முடியவில்லையே! என்ற பொறாமையில் வாசன் சொல்ல கணவனை வாசுகி முறைக்க, “

 

 

உனக்கும் எனக்கும் நடுவுல யாரும் வர மாட்டாங்க, வர இன்னும் ஏழு மாசமாகும்னு வீராப்பா இருந்தேன். இந்த குட்டி வந்துட்டா…” என்று சமாதானமாக புன்னகைத்தான். 

 

“இப்போவே ட்ரைனிங் எடுத்துக்கோங்க ஸ்ரீநி” என்று சிரித்தவள் காலை தூக்கி கணவனின் மேல் போட வாசன் எட்டி மனைவியை அணைத்துக்கொள்ள இருவரும் கண்ணயர்ந்தனர்.

 

 

ஸ்ரீராம் கண் விழிக்கும் பொழுது காலை பத்து மணியையும் தாண்டி இருந்தது. குழந்தையின் மழலைக் குரல் மட்டும்தான் அவன் காதை தீண்டியது. மணியை பார்த்தவனுக்கு வீட்டில் வாசுகி மட்டும்தானே! இருப்பாள் என்று எண்ணம் தோன்ற சங்கடமாக உணர்ந்தவன் அறையை விட்டு வெளியே வர வாசுகி வாசலில் குழந்தையோடு கீழே அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

 

ஸ்ரீவத்சனின் திருமணத்தின் பொழுது சத்யா, மற்றும் ஸ்ரீராமின் குழந்தைகளைக் கண்டு அவர்களை தூக்க முயற்ச்சி செய்ததில் சத்யாவின் பையன் கொஞ்சம் வளர்ந்ததால் தூக்கிய உடனே! அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, வாசுகியால் சமாளிக்க முடியாமல் சத்யாவிடம்! கொடுத்து விட்டாள்.

 

ஸ்ரீராமின் குழந்தை ஐந்து மாதங்கள் என்பதால் யார் தூக்கினாலும் சமத்தாக பொக்கை வாய் திறந்து சிரிக்க, வாசுகியோடு நன்கு ஒட்டிக்கொண்டதில் குழந்தையை அவளுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் ரொம்பவே! பிடித்திருந்தது.

 

 

“எந்திரிச்சிட்டீங்களா? குளிச்சிட்டு வாங்க. ப்ரெஷ்ஷா இருக்கும். சாப்பிட்டு சூடா இஞ்சி டீ குடிக்கலாம். கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவீங்க” என்று சொல்ல

 

 

“அண்ணா…” என்றவனுக்கு அடுத்து என்ன பேசுவதென்று புரியவில்லை.

 

“அவர் கடைக்கு போய்ட்டாரு. மாமா தோட்டத்துல இருக்காரு. குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு பேசலாம்” மெதுவாக புன்னகைத்தவள் குழந்தையின் மீது கவனமாக ஸ்ரீராம் குளிக்க சென்றான்.

 

குளித்து விட்டு வந்தவனுக்கு அம்மு பரிமாற திருப்தியாக உண்டு முடிக்கும் பொழுது கையில் சூடான இஞ்சி டீயும் கொடுக்கப்பட அதை பருகப்பருக்கத்தான் அவன் மூளையும் விழித்துக்கொண்டு நேற்றைய சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நியாபகத்தில் வந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சித்தித்தவன் அலைபேசியில் வக்கீலை அழைத்து டைவோர்ஸுக்கு ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு அலைபேசியை அனைக்க வாசன் அவன் பின்னாடி நின்றிருந்தான்.

 

ஸ்ரீராம் எழுந்த உடன் தன்னை அழைக்குமாறு வாசுகிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தான் வாசன். அதன்படியே வாசுகியும் கணவனின் சொல்லை தட்டாது செய்திருந்தாள். ஸ்ரீராம் பேசியது அனைத்தும் வாசனின் காதில் விழுந்ததுதான். விவாகரத்து வாங்கும் அளவுக்கு இவர்களுக்கு என்ன பிரச்சினை என்ற எண்ணத்தில் தம்பியை பார்த்திருக்க அவன் புறம் திரும்பிய ஸ்ரீராம் அண்ணனைக் கண்டதும் கட்டிக்கொண்டு ஓவென அழுது கரையலானான்.

 

குழந்தை போல் அழுது கரைபவனை வாசன் சமாதானப் படுத்த வாசுகி அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க, ராமநாதனும் உள்ளே வந்திருந்தார்.

 

“என்ன டா பிரச்சினை” என்று வாசன் கேட்டதுதான் மடை திறந்த வெள்ளமாக எல்லாவற்றையும் ஸ்ரீராம் கொட்டித் தீர்க்க, அதிர்ச்சியடைந்தான் வாசன்.

 

 “எனக்கு அப்போவே! அந்த பொண்ணு சரியில்லைன்னு தெரியும். ஆனா இவ்வளவு கேடு கெட்டவளா இருப்பான்னு எதிர்பார்க்கள” என்று ராமநாதன் சொல்ல

 

“என்னால இந்த குழந்தையை வளர்க்க முடியல அண்ணா…. இந்த குழந்தையை பார்க்கும் பொழுது அவ பண்ண துரோகம்தான் கண்முன் வருது. ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துல விட்டுடலாம்னு இருக்கேன்” என்று ஸ்ரீராம் சொன்னதும் பாய்ந்து வந்த வாசுகி அவனை கன்னம் கன்னமாக அறைந்திருந்தாள்.

 

ஸ்ரீராம் அதிர்ச்சியில் உறைய, வாசன் அவளை பிடித்து இழுக்க “குழந்தையை வளர்க்க முடியலைன்னா அவ அம்மா கிட்டயே! விட்டுட்டு வர வேண்டியது தானே! ரொம்ப ஈஸியா சொல்லிட்ட, அனாதை ஆசிரமத்துல விட்டுடுறேன்னு. அம்மா இல்லாம வளருறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” யாரையும் ஒருமையில் பேசியிராத வாசுகி கோபத்தில் ஸ்ரீராமை ஒருமையில் பேசி இருந்தாள். என்னதான் மது கெட்டவளாக இருந்தாலும் தன் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதால் என்று எண்ணி வாசுகி பேச

 

“என்ன பேசுற வாசு.. இவ்வளவு நேரமும் அவன் சொன்னது உன் காதுல விழுந்ததா? இல்லையா? அவ இந்த குழந்தையையும் அந்த மாதிரிதான் வளர்ப்பா” என்று வாசன்  மனைவியை முறைக்க,

 

“இங்க பாருங்க உங்க மனைவியை நீங்க விவாகரத்து பண்ணிக்கோங்க, என்னவேனாலும் பண்ணிக்கோங்க, இந்த குழந்தை இந்த வீட்டுலதான் இருப்பா.. மீறி ஏதாச்சும் பண்ணனும்னு நினச்சா நானும் குழந்தையும் வீட்டை விட்டு போயிடுவோம்” என்றவள் குழந்தையை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று கதவடைத்துக்கொள்ள,

 

பெற்றால் மட்டும்தான் குழந்தையா? எந்த குழந்தைக்கா வேண்டியும் கரைவதுதான் தாயுள்ளம். உள்ளே செல்லும் மனைவியை காதலாக பார்த்திருந்தான் வாசன்.

Advertisement