Advertisement

அத்தியாயம் 23
நாட்கள் அதன் போக்கில் அழகாகத்தான் நகர்ந்துக்கொண்டிருந்தன. நிச்சயதார்த்தம் முடிந்த கையேடு ரோஹன் குடும்பத்தோடு சென்னை சென்று விட்டான். அங்கு அவன் தொழிலை பார்க்க வேண்டிய கட்டாயம் என்று ராஜேந்திரன் அழைக்கவும் சென்று விட வீட்டில் இவர்கள் மூவரும் மட்டும்தான்.
திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது வந்து விடுவதாகவும் மாப்பிள்ளை வீடு இதுதான் என்றும் கூறியவாறுதான் விடைபெற்று சென்றனர் ரோஹனின் குடும்பம்.
வாடகைக்கு இருந்த வீடோ! இரண்டு அறைகளும் சின்ன வாசலும் சின்ன சமையலறையும் சின்ன முற்றமும் என்றிருக்க, சுத்தம் செய்வது வீட்டு வேலை, சமையல் வேலை என்று எல்லா வேலைகளையும் வாசுகி ஒருத்தியே! தனியாக பார்த்திருக்க எந்த சிரமமும் இருக்கவில்லை. இந்த வீடோ! நான்கு அறைகளோடு சமையலறை, வரவேற்பறை, வராந்தா, சாப்பாட்டறை, முற்றம், தோட்டம் என்று அளவில் பெரிதாகவே! இருக்க,  விடிந்ததிலிருந்து அவளுக்கு வேலை இழுத்துக்கொண்டுதான் இருந்தது.
மரத்திலிருந்து விழும் இலைகள் முற்றம் முழுக்க விழுந்துக் கிடக்க, காலையும் மாலையும் முற்றத்தை பெருக்க வேண்டும் இல்லையாயின் இலைகளால் முற்றம் நிரம்பி விடும். பூமரங்கள், பழமரங்கள், செடி கொடிகள் என்று எல்லாவற்றையும் பராமரிப்பதில் அவள் நேரம் ஓடி விடுவதால் வேறு எதிலும் அவள் மனதை செலுத்த முடியவில்லை.
ராமநாதன் தோட்ட வேலைகளில் உதவுவதால் வீட்டு வேலைகள் குறைவில்லாமல் நடைபெறுகின்றன.
குளித்து விட்டு வந்த வாசன் மனைவியை தேட அவள் சமயலறையில் இல்லை, தங்களது அறையிலும் இல்லை என்றதும் வீடு முழுக்க தேடியவன் கண்டது அந்த காலை சூரியனின் கதிர்களின் வீச்சால் பொன்மேனி மின்ன விளக்குமாறை கையில் ஏந்தியவாறு முற்றத்தை பெருக்கிக் கொண்டிருப்பவளைத்தான். பெயர் சொல்லி அவளை அழைக்க நா எழுந்தாலும் புடவை முந்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் பூக்க அவள் நின்ற தோற்றம் நெஞ்சம் கொள்ளை கொள்ள வாசனின் கால்கள் தானாக அவளருகில் நடையை எட்டிப்போட்டது.
“ஒய்.. பொண்டாட்டி என்ன டி பண்ணுற?” என்றவாறு இடுப்பிலிருந்த அவள் புடவை முந்தியை பிடுங்கியவன் முகத்தை துடைத்து விட மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கி நின்றாள் வாசுகி. 
“குளிச்சிட்டு வந்துடீங்களா? நீங்க குளிச்சிட்டு வர்றதுக்குள்ள பெருக்கிடலாம்னு பார்த்தேன், வாங்க சாப்பிடலாம்” என்றவள் விளக்குமாறை வைத்து விட்டு முன்னால் நடக்க காலையிலையே இருந்து வேலையை செய்ததன் காரணமாக அவள் முகத்தில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தது.
வீட்டுக்கு குடிவந்த புதிதில் வாசனும் வீட்டு வேலைகள், தோட்ட வேலை என்று அனைத்து வேலைகளிலும் பங்கேற்றவன்தான். இந்த ஒரு வாரமாக கடையில் கொஞ்சம் வேலை அதிகமானதால் வீட்டை பற்றி சிந்திக்க தவறினான்.
செல்லும் மனைவியை பார்த்து பெருமூச்சு விட்டவன் “நிற்க கூட நேரமில்லாம இவளுக்கு இவ்வளவு வேல இருக்கே! நாளைக்கு குழந்தைனு உண்டானா அவளை பாத்துக்கணும். கடைக்கும் போய்கிட்டு, வீட்டு வேலையையும் செஞ்சிகிட்டு வாசுவையும் பாத்துக்க முடியுமா?” தன்னால் தனியாக சமாளித்துக்கொள்ள முடியமா? என்று தன் மனதோடு கேட்டுக்கொள்ள “முடியாது” என்றுதான் பதில் வந்தது. என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட தோன்றவில்லை.
“யோவ் ஸ்ரீநி… என்னய்யா.. எந்த கோட்டையை புடிக்க இவ்வளவு யோசிக்கிறீங்க? முதல்ல சாப்பிடுங்க” வாசுகி கணவனை வம்புக்கு இழுத்தாள்.
இருவரும் தனியாக இருக்கும் பொழுது வம்பிழுப்பவள்தான். ரசித்தாலும் வாசனின் மனம் அதில் லயிக்கவில்லை. “நீயும் உக்காரு” என்றவன் அவளையும் அருகில் அமர்த்திக்கொண்டு “அப்பா சாப்பிட்டுட்டு கிளம்பிட்டாரா?”
“இப்போதான் போனாரு. பாவம் அவரு. அவரால முடியல இருந்தாலும், தோட்ட வேல எல்லாம் பண்ணுறாரு” வாசுகி கவலையாக கூறியவாறே தட்டில் இட்லியை வைக்க, வாசன் சாம்பாரை ஊற்றிப் பிசைந்து மனைவிக்கு ஊட்டலானான்.
“நீங்க சாப்பிடுங்க, கடைக்கு போக நேரமாகுதுல்ல” வார்த்தைகள் அவ்வாறு வந்தாலும் கணவன் கொடுத்ததை வாங்கிக்கொண்டாள்.
“கொஞ்சம் நேரம் லேட்டா போனா குடிமுழுகி ஒன்னும் போகாது. நீ சாப்பிடு. பாரு எப்படி வேற்குதுனு உன்னால முடிஞ்ச வேலைய மட்டும் செய் வாசு… எல்லா வேலையையும் பார்க்கணும்னு ஒன்னும் அவசியமில்லை. காலையும், மாலையும் முத்தத்த பெருக்கியே! ஆகணுமா என்ன? ஒருநாள் விட்டு ஒருநாள் பெருக்கிக்கலாம். நம்ம வீட்டு வேலைதானே! எப்போ வேணா பார்த்துக்கலாம்”
“என்னங்க நீங்க யாராவது வந்து பார்த்தா வீட்ட இப்படியா வச்சிக்கிறதுனு கேப்பாங்க” வாசுகி முறைக்க,
“கேக்குறவங்க வேலையெல்லாம் செஞ்சி கொடுத்துட்டு போவாங்களா? கூடமாட ஒத்தாசையா இருப்பாங்களா? இல்லையே! அவங்க சொல்லுறாங்க, இவங்க சொல்லுறாங்கனு பார்த்தா நாம பிணில படுக்க வேண்டி இருக்கும். புரிஞ்சிக்க, இப்போவே! நீ ஒரு மாதிரிதான் இருக்க, டேப்ளெட்ஸ் எல்லாம் சரியா போடுறியா?” கடிந்தவாறு கூறினாலும் அக்கறை கொட்டிக்கிடக்க,
கணவனை காதலாக பார்த்தவள் “அதெல்லாம் சரியா போடுறேங்க” என்றவள் யோசனையில் விழ
“என்ன டா..” ஒருவாய் சாப்பாட்டை முழுங்கியவன் யோசனையான அவள் முகத்தை தன் புறம் திருப்பிக் கேட்டான்.
“இல்லங்க… ஒரு வாரம் நாள் தள்ளி போய் இருக்கு” வாசுகி சொல்லி முடிக்கவில்லை.
“ஏய் என்ன சொல்லுற?” என்று சந்தோசமாக அவளைக் கட்டிக்கொண்டான் வாசன்.  
“இல்லங்க… வேல அதிகம்னா சில நேரம் முன்ன பின்ன ஆகும் அதான் இன்னும் ஒரு வாரம் பார்க்கலாமேன்னு. அதுவும் போன தடவ இருந்த எந்த சிம்டம்ஸ்சும் இல்ல. அதான்” என்று இழுத்தவள் கணவனின் முகம் பார்த்து நிற்க  
“முதல்ல சாப்பிடு” என்று அவளுக்கு ஊட்டி விட்டவன் அமைதியாக சாப்பிடலானான். ஆனால் அவன் மனதில் ஆயிரம் பிரளயம் நடப்பது அவன் மட்டுமே! அறிவான்.  
சாப்பிட்டு முடித்த உடன் மாத்திரைகளையும் எடுத்துக் கொடுத்தவன் அவள் கைபிடித்து அழைத்து வந்து “வாசு போன முறை மாதிரி ஏதாச்சும் மனசுல போட்டு உருட்டிக்கிட்டு இருக்கியா?” என்று தன்மையாக கேக்க,
“ஐயோ இல்லைங்க” உடனே! மறுத்தாள் அவன் மனையாள்.
“உன் கிட்ட எதோ! வித்தியாசம் இருக்கு. அதிக வேலையால சோர்வா இருக்கியோனுதான் நினச்சேன். தனியா இவ்வளவு வேல பாக்குற, அப்பாவாலையும் முடியாது. நானும் இந்த கொஞ்ச நாளா கடை கடைனு அலையுறேன். அதான் எல்லா வேலையையும் இழுத்து போட்டு பண்ணாதேனு சொன்னேன். பிரேக்னன்ட்டா இருந்தா இந்த குழந்தை நமக்கு எவ்வளவு முக்கியம்னு நான் சொல்லி உனக்கு புரிய வேண்டியதில்ல சரியா” அவள் கண் பார்த்து சொல்ல, பழைய நியாபகங்கள் ஒரு நொடி கண் முன் வர வாசுகியின் கண்கள் கலங்கி மூக்கு விடைக்க, விம்மலானாள்.
“ஹேய் உன்ன அழவைக்க இப்படி நான் பேசல டா…” என்று அணைத்துக்கொண்டவன் “யார் யாரோ பேசுறதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத, எதுவானாலும் என் கிட்ட சொல்லு. முக்கியமா என்ன விட்டு போகணும்னு நினைக்காத. உன்ன பாத்துகிறத தவிர எனக்கு வேற எந்த வேலையும் முக்கியமில்லை. புரியுதா? என்ன இருந்தாலும் என் கிட்ட சொல்லிடு” வாசனின் அச்சம் வார்த்தைகளாக மாறி வாசுகி இடத்தில் கொட்டிக்கொண்டிருக்க, வாசுகிக்கு கணவனின் மேல் மேலும் காதல் பெருகியது.
வாடகை வீட்டில் கூட சமாளித்து விடலாம். இந்த பெரிய வீட்டில் எப்படி தனியாக செய்துகொள்வது என்ற அச்சம் தோன்ற அவள் மேனியில் ஒருவித குளிர் பரவ ஆரம்பித்தது. போன தடவை மசக்கையால் வாந்தியும், மயக்கமும் என்று படுத்தியெடுத்து இருக்க, கட்டிலில் சுருண்டு படுத்துக்கொண்டே! தானே! இருந்தாள். இந்த முறை அப்படி இருக்க முடியுமா?
கணவனும், மாமனாரும் பார்த்துக்கொள்வார்கள்தான். அதில் எந்தக் குறையும் கூறிவிட முடியாது. ஏனோ முதல் முறையாக அன்னை இல்லை என்ற ஏக்கமும் அபர்ணாவின் மேல் கோபமும், வெறுப்பும் வந்தது.
வாசனுக்கு உதவுவதற்காகவே! அவதாரம் எடுத்தது போல் ரோஹன் இருந்தான். சந்திரா விஷயத்தில் பெருந்தன்மையாக ஒதுங்கிக் கொண்டவன் வாசனின் மனதிலும் இடம் பிடித்து வாசன் அறியாமலையே! அவனுக்கு உதவிக்கொண்டிருக்க, இந்த தடவையும் அதைத்தான் செய்யலானான். சொல்லப்போனால் வாசன் நினைப்பதை மோப்பம் பிடிக்கும் மோப்ப நாய் என்று கூட சொல்லலாம்.  இல்லையாயின் வாசனுக்கு உதவி தேவை படும் பொழுது ரோஹனின் மூக்கு வேற்குது என்று கூட சொல்லலாம். 
வாசனை அழைத்த ரோஹன் நலம் விசாரித்து விட்டு “அண்ணா… ஒரு சின்ன உதவி பண்ணித் தர முடியுமா?” என்று கேட்க,
“என்ன டா… தம்பி நான் கேட்காமலே! எனக்கு ஹெல்ப் பண்ணுவ, இப்போ உனக்கு என் கிட்ட என்ன உதவி தேவபடுது?” வாசனுக்கு சிரிப்பாகவும் இருந்தது. ரோஹன் கேட்ட விதத்திலையே! புரிந்தது வாசன் மறுத்து விடக் கூடாதே! என்று அவன் குரல் கரகரத்தது.
“அது வந்து …ண்ணா… இங்க என் லேபர் ஒருத்தங்களுக்கு பயர் ஆக்சிடன்ட் ஆச்சு. அதுல அவங்க மூஞ்சி பாதி எரிஞ்சு போச்சு. அவங்கள எங்கயும் வேலைக்கு சேர்த்துக்க மாட்டேங்குறாங்க, என் கிட்டயும் இப்போதைக்கு எந்த வேலையும் இல்ல. காசு கொடுத்தாலும் வாங்க மாட்டேங்குறாங்க, வீட்டு வேலைனாலும் பரவால்ல, பணம் வேணா ரெண்டு வேல சாப்பாடு போடுங்க போதும்னு சொல்லுறாங்க, என்ன பண்ணுறதுன்னு புரியல. அம்மா தான் ஊர்ல, நம்ம வீடும் பெருசா இருக்கு, வாசுகிக்கு கூட மாட ஒத்தாசையா இருக்கட்டுமே! வாசன் கிட்ட கேட்டு பாருன்னு சொன்னாங்க, அவங்க அண்ணன் ஒருத்தங்களும் இருக்காங்க, தோட்ட வேலையெல்லாம் பாத்துக்குவாரு. தேவ பட்டா கடை வேலையையும் சேர்த்து பாப்பாரு. உங்களுக்கு சம்மதம்னா அனுப்பி வைக்கிறேன்” என்று வளமை போல் நீளமாக பேச
வாசனை பிரித்துப் பார்க்காமல் உரிமையாக சரளாவும் நம்ம ஊர், நம்ம வீடு என்று பேசியது வாசனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்க மறுக்க தோன்றவில்லை. அதற்காகவே! சரி என்று சொல்லியும் இருப்பான். முகம் பாதி எறிந்த நிலையில் ஒரு பெண் என்று கூறுகிறானே! பார்க்க பயங்கரமா இருந்தால் வாசுகி கண்டு அலறமாட்டாளா? குழந்தை உண்டாகி இருந்தால்,  இந்த மாதிரி ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்வது சரிவருமா? அந்த பெண்ணின் முகத்தை பார்ப்பதால் குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமா? என்ற கலக்கம் வாசனின் மனதில் உருவாக வாசுகியிடம் கேட்டுவிட்டு சொல்வதாக கூறினான். 
ரோஹன் விடுவதாக இல்லை. அவன் வாசனிடம் பேசும் நேரத்தில் சரளா வாசுகியிடம் பேசி இருப்பாள் என்று கூற, மறுப்பதற்கான காரணத்தை தேடியவனுக்கு ஒன்றும் தோன்றாமல் வாயில் வந்ததை உளறினான். “தங்க வைக்கிறது ஒன்னும் பிரச்சினை இல்ல ரோஹன் சம்பளம் கொடுக்கணும். இல்லனா மனசு சங்கடப்படும் இல்லையா?” என்று வாசன் சொல்ல பல்லைக் கடித்தான் ரோஹன்.
“இவரு எல்லாம் காச வச்சே! பாக்குறாரே! எப்படி சொல்லி புரிய வைக்கிறது?” மண்டையை குடைந்தவன் “அண்ணா இப்போ அவங்களுக்கு தேவ பாதுகாப்பான ஒரு இடம். பணம் இல்ல. நீங்களும், வாசுகியும் அன்பா பாத்துக்கிட்டா போதும்” என்று ரோஹன் சொல்ல
“அட நீ வேற நானே! அவளை பாத்துக்கதான் ஆள் இருந்தா நல்லா இருக்குமேன்னு யோசிக்கிறேன்” என்று வாசன் சொல்ல
“என்ன சொல்லுறீங்க?” என்று ரோஹன் யோசனையாக கேக்க
“இல்ல டா.. நானும் கடைக்கு போயிட்டு வாரேன்… அப்பாகும் முடியல. திடிரென்று அவளுக்கு உடம்பு முடியாம போனா வீட்டுல யாரு இருக்கா? சொல்லு. இல்ல ப்ரெக்னன்ட் ஆனா அவள பாத்துக்கணுமே! நீ சொல்லுற லேடிய பாத்துக்க ஆள் வேணும் போல இருக்கு” என்று வாசன் மறைமுகமாக மறுக்க அது ரோஹனின் மரமண்டைக்கு எட்டவில்லை.
“ஆமா கூடவே! யாரவது இருக்குறது நல்லது தான். இல்லனா போன தடவ நடந்தது மாதிரி ஆகிடும்” என்றவன் நாக்கை கடித்துக்கொண்டான்.
“உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்ட வாசன் “ஓஹ் மந்த்ரா சொன்னாளா?” என்று பதிலையும் அவனே! சொல்ல நிம்மதி பெருமூச்சு விட்டான் ரோஹன்.
“அண்ணா.. நீங்க வாசுகி கிட்ட பேசுங்க, பேசிட்டு சொல்லுங்க” என்று அலைபேசியை அனைத்து விட்டான். இன்னும் பேசினால் தான் ஏதாவது உளறி விடக் கூடும் என்று அஞ்சினான் ரோஹன்.
வாசுகியும் இளகிய மனம் படைத்தவள். வாசன் கூறிய உடனே! சரளாவும் விலாவரியாக எல்லாவற்றையும் கூறியதாக சொன்னவள் சரி என்று விட்டாள்.
“இல்ல வாசு அந்த அம்மா மூஞ்சி வேற எறிஞ்சி போச்சுன்னு சொல்லுறான். பார்க்க பயங்கரமா இருக்கும். நீ வேற பயந்திட்டீனா? பிரேக்னன்ட்டா வேற இறுக்கியோனு தெரியல, இந்த நேரத்துல இது தேவையானும் தோணுது” என்று வாசன் சொல்ல
“என்னங்க நீங்க… இப்படி பேசுறீங்க… உதவின்னுதானே! கேக்குறாங்க.. இருந்துட்டு போகட்டு. நமக்கு பிடிக்கலைன்னா கொஞ்சம் நாள் பார்க்கலாம் அப்பொறம் ரோஹன் கிட்ட சொல்லி வேற இடம் பார்க்க சொல்லலாம். ரோஹனுக்காக இந்த உதவிய செஞ்சிதானே! ஆகணும்” என்று வாசுகி சொல்ல வாசன் அரைமனதாக சம்மதித்திருந்தான். 
ஆயிற்று ரோஹன் சொன்ன அந்த பெண்மணியும் அவரின் அண்ணனும் வாசனின் வீட்டில் அடைக்கலம் தேடி வந்து ஒரு வாரம் ஓடி இருந்தது.
வாசன் பயந்தது போல் அந்த பெண்மணி முகத்தை காட்டியவாறு அவன் முன் வந்து நிற்கவில்லை. ஒல்லியான தேகம்தான். முக்காடு போட்டு முகத்தை நன்கு மறைத்தவாறுதான் புடவையை அணிந்திருந்தாள். வயது கூட ஐம்பதுக்குள் இருக்கும். அவள் அண்ணனும் அறுபத்துக்குள் இருக்கும் சாதாரண உயரம் கொஞ்சம் குண்டாக இருந்தார்.
வந்த உடனே பொறுப்புக்களை கையில் எடுத்து வேலைகளை பார்க்க ஆரம்பித்தும் விட்டனர். “பயணக்களைப்பு போகட்டும் நாளையிலிருந்து வேலை பாருங்கள்” என்று வாசுகி கூறியும் பார்த்து விட்டாள். இருவரும் கேட்டபாடில்ல.
அந்த பெண்மணியின் பெயர் என்னவென்று கேட்டதற்கு “அம்மு” என்றதும் அவரை எவ்வாறு அழைப்பதென்று வாசுகி யோசிக்க,
“அம்மா என்றே கூப்பிடுமா.. எனக்கு ஒரு பொண்ணு இருந்தா அம்மான்னுதானே! கூப்பிடுவா” என்று சொல்லிவிட்டு செல்ல வாசுகிக்கு கண்கள் கலங்கியது.
பிறந்ததிலிருந்து இதுவரை யாரையும் அம்மா என்று அழைத்ததில்லை. அழைக்கத் தோன்றியதுமில்லை. “அம்மா” என்ற வார்த்தை ஒன்றும் சாதாரண வார்த்தை இல்லையே! இந்த பெண்மணி அறியாமல் சொல்லி விட்டு சென்று விட்டார். தன்னால் அவ்வாறு அழைக்க முடியுமா என்றுதான் அவளின் கண்கள் கலங்கியது.
அந்த பெண்மணியை அம்முமா என்றும் அவருடைய அண்ணனை சத்யன் மாமா என்றும் அழைக்கப் பழகி இருந்தாள் வாசுகி.
அவர்கள் இருவரும் வந்த பிறகு வாசுகிக்கு வீட்டு வேலைகள் உட்பட தோட்ட வேலையென பாதிக்கும் மேல் வேலைகள் குறைந்துதான் போயின. காலையில் தினமும் சாமிப்பாடலோடு சாம்பிராணி மனத்தோடு பூஜையறையில் அம்முவின் குரலைக் கேட்டுக்கொண்டுதான் கண்விழிப்பாள் வாசுகி.
சமயலறைக்கு சென்றால் முதல் நாள் இரவே! என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு சமைப்பதற்கு தேவையான அத்தனை பொருட்களும் தயாராக எடுத்து வைத்து ஆயத்தமும் செய்து வைத்திருப்பார். வாசுகி சமைத்து, கணவனுக்கும், மாமனாருக்கு பரிமாறி கடைக்கு அனுப்பி வைக்கும் நேரத்தில் துணிகளையும் துவைத்து காயவும் போட்டுவிடுபவர். காலை உணவின் பின் வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலை என்று சென்று விட்டு மதியம் சமைக்க தோட்டத்தில் பறித்த காய்கறிகளோடு வந்து விடுவார். வாசன், வாசுகி அல்லது ராமநாதன் வந்து பேசினால் முதுகைக் காட்டி நின்று பேசுபவர் அமர்ந்திருந்தாள் மட்டும் தலையை நன்றாக குனிந்துக்கொண்டு பேசுவார் ஒழிய எக்காரணத்தைக்கொண்டும் தனது எரிந்துப்போன முகத்தை அவர்களுக்கு காட்ட விரும்பவில்லை.
சத்யனும் காலையில் முற்றத்தை பெருக்கி தோட்ட வேலைகளை செய்து விட்டு கடைக்கு செல்பவர் மதியம் வந்து கடைக்கு சாப்பாட்டை எடுத்து சென்று விடுவார். மாலையானால் மீண்டும் அவருக்கு தோட்டத்தில் வேலையிருக்கும், வீட்டு வேலைகள் முடிந்தால் அம்முவும் அண்ணனோடு தோட்டவேலைகளில் ஈடுபடுவார். ஆகா மொத்தத்தில் குடும்ப உருப்பினர்களாகவே! மாறியிருந்தார் இருவரும்.
இவ்வாறு இவர்களால் வாசுகியின் வேலைப்பளு குறையவே! ஓய்விலிருந்தவள் நாள் தள்ளிபோனதன் காரணம் குழந்தை உண்டாகி இருப்பதால்தானோ! என்று சந்தேகமும் கொண்டு அதை உறுதி செய்துகொள்ள டாக்டரிடம் செல்லலாம் என்று சொல்லி இருக்க, வாசனும் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று கர்ப்பம்தான் என்று உறுதி செய்துகொண்டு சந்தோசமாக வீடு திரும்பிய பின் வாசன் மனைவியை கட்டிலில் அமர்த்தி அவள் காலடியில் அமர்ந்துகொண்டு
“வாசு…. நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா நினைக்க மாட்டியே!” என்று அவள்  பாதங்களை மெதுவாக வருடி விடலானான்.   
“ம்ம்.. இல்ல சொல்லுங்க” என்றவளின் முகம் மலர்ந்தே! இருந்தது. 
எவ்வாறு சொல்வதென்று ஒருநொடி யோசித்தவன் “குழந்தை உண்டான விஷயம் யாருக்கும் தெரிய வேணாம்” என்று சொல்ல
“என்ன சொல்லுறீங்க?” கணவனை புரியாது பார்த்த வாசுகி “குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோனு நினைக்கிறீங்களா?” என்றவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க,
“எனக்கு பயமா இருக்கு. நீ உண்டாகி இருக்கும் செய்தியை கேள்வி பட்டதும் உங்க வீட்டாளுங்க வந்து உன்ன கூட்டிட்டு போய்டுவாங்க, அங்க உன்ன சரியா பத்துக்கவும் மாட்டாங்க” என்று சொல்ல மருத்துவமனையிலிருந்து வந்தவர்களுக்கு அருந்த ஜூஸ் எடுத்து வந்த அம்முவின் காதிலும் இது விழ
“தம்பி” என்று அழைத்து ஜூஸை கொடுத்தவர் “போன தடவ என்ன நடந்ததுன்னு தெரியல. இப்போ நான் இருக்கேன் இல்ல. நான் பாத்துக்கிறேன்” என்று விட்டு செல்ல செல்லும் அவரை நன்றி கலந்த பார்வை பார்த்து வைத்தான் வாசன்.
வாசுகி உண்டாகி இருக்கும் சேதி ராமநாதனுக்கு மட்டும் கூறிய வாசன் வேறு யாரிடமும் கூற விரும்பவில்லையென்றும், நான்கு மாதங்கள் செல்லட்டும் என்றும் கூற, அவரு அதை ஏற்றுக்கொண்டு அமைதியாகி விட்டார்.
சென்ற தடவை போல் வாசுகிக்கு பெரிதாக வாந்தி இருக்கா விடினும், காலையில் எழுந்துகொள்ள முடியாமல் மயக்கம் வருவது போல் இருந்ததால் காலை வேளையில் படுத்த படுக்கையாக இருந்தாள்.
காலை சமையல் அம்மு வசம் ஆகா, வாசனும், ராமநாதனும் எந்த குறையும் கூறாது உண்டு விட்டு சென்றனர். வாசுகி காலையில் வெறும் வயித்தோடு தூங்குகிறாள் என்று தினமு அவளுக்கு இலைகளை பறித்து கஞ்சி காய்ச்சி வாசனின் கையில் கொடுத்து கொடுக்குமாறு சொல்லும் அம்மு “தூங்கி எந்திரிச்சி பிறகு சாப்பிடுவா, நீங்க கடைக்கு போங்க, தம்பி, மாத்திரையெல்லாம் நான் கொடுக்குறேன்” என்று கூற வாசனுக்கும் நிம்மதியாக கடை வேலைகளை பார்க்க முடிந்தது.
சத்யன் ராமநாதனின் அறையிலும், அம்மு சமையலறையின் பக்கத்திலுள்ள அறையிலும் தங்கியிருந்தனர், வழக்கமாக ராமநாதன் மாத்திரை போட்ட உடன் தூங்கி விடுபவர் இப்பொழுதெல்லாம் சத்தியன் இருப்பதால் வானொலியில் பழைய பாடல்களை கேட்பதும், சத்யனோடு சேர்ந்து பாடுவதுமாக ஒன்றியிருந்தார்.
வானொலியில் தவழ்ந்து வந்த பாடலை ரசித்தவாறே தூங்க ஆயத்தமான வாசுகிக்கு வலுக்கட்டாயமாக குடிக்க பழச்சாறை கொடுத்த வாசன் குவளையை மேசையின் மீது வைக்க,
“இதெல்லாம் ரொம்ப ஓவருங்க ரெண்டு மாசம் கூட ஆகல இப்படி கவனிச்சீங்கன்னா.. நான் குண்டாகிடுவேன்” சிணுங்க
“நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்கன்னு நெனப்போ” சிரித்தவன் அவளிடமிருந்து சில அடிகளையும் பெற்றுக்கொண்டான்.
கல்யாணமாகி முதல் குழந்தை உண்டாகும்வரை இருவருக்கிடையில் பேச்சு வார்த்தை இருந்தாலும், கொஞ்சல் மொழிகளோ! கேலி கிண்டல்களோ! இருந்ததில்லை. கரு கலைந்த பின் ஒருவருக்கொருவர் மீதிருந்த அன்பை புரிந்துக்கொண்ட பின் உண்டான நெருக்கம் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்திருந்தது.
“அப்பா போன் பண்ணி இருந்தாரு. இன்னும் பத்து நாள்ல கல்யாணம் ரோஹன் குடும்பம் எப்போ ஊருக்கு வரங்கனு கேட்டாரு. நம்ம குடும்பத்துல யார்,யாருக்கெல்லாம் பத்திரிக்கை வைக்கணும்னும் கேட்டாரு”
“ரோஹன் அடுத்த வாரம் வந்துடுவான். நித்யா வர மாட்டா, சத்யாக்கு சொன்னா..அவ மாமனார், மாமியாருக்கும் சேர்த்து சொல்லணும் இல்லனா வர மாட்டா. ஸ்ரீராம் வருவானானு தெரியாது” வாசன் யோசனையாக சொல்ல
“அது சரி உங்க அருமை தம்பி ரோஹனுக்கு நீங்க அப்பாவாக போற விசயத்த சொல்லலைனு கோவப்பட மாட்டாரா?” குறும்பாகக் கேட்டாலும் அன்பாக பழகும் அவர்களிடம் கூட சொல்லாமல் இருப்பது தவறு என்பது போல் கூறினாள் வாசுகி. 
“ஊருக்கு வந்த உடனே! சொல்லிக்கலாம் வாசு. சரளா அம்மாவும் தப்பா நினைக்க மாட்டாங்க, புரிஞ்சிப்பாங்க, ரோஹன சமாதானப் படுத்திடலாம்” என்று சிரிக்க,
“போன ஜென்மத்துல ரெண்டு பேரும் ஒண்ணா பொறந்திருப்பீங்களோ! இப்படி பாசத்தை பிழியறீங்க” என்று கேலி செய்தவள் “சரி வாங்க வாங்க தூங்கலாம்” என்று சொல்லவும் கதவு பலமாக தட்டப்படவும் சரியாக இருந்தது.
அந்த சத்தத்தில் வாசுகி அதிர்ச்சியடைய வாசன் அவளை அணைத்துக்கொண்டு ஆறுதல் படுத்தியவன் “இங்கயே இரு நான் யாருனு பாக்குறேன்” என்னு சொல்ல வாசுகிக்கு உள்ளுக்குள் குளிரெடுக்க ஆரம்பித்திருந்தது.
வாசன் வம்புதும்புக்கு போகாதவன் இருந்தாலும் இந்த நேரத்தில் கதவு தட்டப்படவும் சினிமாவில் வருவது போல் யாராவது ஆயுதத்தோடு வெளியே நிப்பார்களோ! என்ற எண்ணம்தான் வாசுகியின் மனதில் வந்தது. கணவன் சொல்வதைக் கேட்காமல் அவன் பின்னால் வரலானாள்.
கதவு தட்டப்படும் சத்தத்தில் ராமநாதன், சத்யன், அம்மு கூட வாசலுக்கு வந்திருக்க, “தம்பி நீங்க ஒதுங்கி இருங்க நான் பாக்குறேன்” என்று சத்யன் சொல்ல
“யாரு… யாரு… யாருனு கேக்கிறேன்னில்ல” என்று வாசன் கத்த எந்த சத்தமும் இல்ல.
யார் கதவை தட்டினார்கள்? தட்டினவர்கள் சென்று விட்டார்களா? என்று யோசிக்கும் பொழுதே! சிறு குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது.

Advertisement