Advertisement

அத்தியாயம் 22
சந்திரா மற்றும் ஜெயமணியின் நிச்சயதார்த்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. நாதனின் குடும்பம் பெரிய குடும்பம் என்பதால் இரு வீட்டார்களும் மண்டபத்தில் தான் நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தனர். வாசன் எல்லா வேலைகளையும் பார்க்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டான்.
ஒரு காரணம் மாப்பிள்ளை மற்றும் பெண் வீடு நெருங்கிய சொந்தம் என்பதால் தான் முன் நின்று செய்ய அங்கு ஒன்றுமில்லை என்ற எண்ணம்தான். மற்றது அவன் வீடு குடிபுகும் வேலை, ரோஹனின் குடும்பத்தாரை கவனிக்கும் வேலை என்று அவனது சொந்த வேலைகளே! அவனுக்கு தலைக்கு மேல் இருந்தது.
வீடு வேண்டாம் என்று வாசன் விட்டு சென்றாலும் ரோஹன் விட வில்லை. வாசன் கடையிலிருந்து வரும் பொழுது ராமநாதனோடு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவனை முறைத்துப் பார்த்தான்.
வாசனிடம் தன் வாய் பேச்சு பலிக்கவில்லை என்றதும் என்ன செய்வது என்று யோசித்தவன் வாசுகியை தேடி சென்றிருந்தான். வாசுகியை தனியாக சந்தித்து பேசுவதை விட ராமநாதனும் கூடவே! இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் தோன்ற அவரையும் அழைத்தவன் எங்கே! இருந்தாலும் உடனே! வீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொள்ள ராமநாதனும் உடனே! வீடு வந்திருந்தார்.
ராமநாதன் வீட்டுக்கு வந்த பின்புதான் ரோஹன் வாசனின் வீடு வந்தான். வாசுகி தனியாக இருக்கும் வீட்டுக்கு ஒரு அந்நிய ஆடவன் வந்தால் அவளை பற்றி அந்த தெருவில் உள்ளவர்கள் எவ்வாறெல்லாம் பேசக்கூடும் என்று அவனுக்கு தெரியும்.
வாசனும் வாசுகியும் டில்லி சென்ற பொழுது இந்த வீட்டில் ராமநாதனோடு ஐந்து நாட்கள் தங்கியவன் தானே! மாலை கேட் அருகே அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவனை சில வீட்டுப்பெண்கள் ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க, ஒரு பெண்மணி வந்து
“தம்பி யாரு” என்று கேட்க,
“என் பேர் ரோஹன்” என்றான் இவனும் எதற்கு கேட்கிறாள் என்று அறியாமல்
“வாசுகியை பார்க்க வந்தீங்களா?” என்று நமட்டு சிரிப்பு சிரிக்க,
“இல்ல, அவங்க அண்ணா கூட டில்லி போய் இருக்காங்க, நானும் பெரியப்பாவும்தான் வீட்டுல இருக்கோம்” என்றான் இவனும் புரியாது.
“என்ன சார் இவங்கதான் வேல வெட்டி இல்லாம கேள்வி கேக்குறாங்கன்னா நீங்களும் பதில் சொல்லிக்கிட்டு” என்று வந்த பக்கத்து வீட்டு நிர்மலா “இப்போ உனக்கு என்ன தெரிஞ்சிக்கணும்? சார் வாசுகிக்கா அத்த பையன். வாசன் அண்ணாவும் அக்காவும் டில்லி போய் இருக்காங்க மாமாவ பாத்துக்க இவர் இருக்காரு. போவியா போய் உன் வீட்டு பிரச்சினையை பாரு” என்று அந்த பெண்ணை துரத்தி விட்டு “வாசுகிக்கா  அம்மா கல்யாணத்துக்கு பிறகு ஓடி போன விஷயம் இந்த தெருவில இருக்குறவங்க எல்லாருக்கும் தெரியும். வாசுகிக்கா பகல் நேரத்துல தனியா வேற இருக்காங்க, அவங்களும் யாரையாச்சும் வீட்டுக்கு கூப்பிடுறாங்களானு இந்த வீட்டு வாசல்லயே! கண்ண வச்சிக்கிட்டு இருப்பாளுங்க,வாசன் அண்ணாக்கு இதெல்லாம் தெரியாது, இன்னக்கி நீங்க நின்னதால வந்து விசாரிக்கிறாளுங்க, அவங்க பேர கெடுதுடாதீங்க” என்ற அந்த பெண் பதினெட்டு வயதில் இருந்தாள்.
ரோஹனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பார்கள்? வாசுகியின் அன்னை தப்பு செய்தாளா? இல்லையா? என்பது கூட இவர்களுக்கு தெரியாது. அப்படியே செய்திருந்தாலும் வாசுகியும் அதே! தப்பை செய்வாள் என்று கதை கட்ட காத்திருக்கிறார்கள் என்ன மனிதர்கள் இவர்கள்.
ஒரு காலத்தில் வாசுகியை திருமணம் செய்துகொள்ள வாசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்று சொன்னவன்தான், வாசன் நல்லவனாகிப் போனதில் அவனோடு சுமூகமான உறவை ஏற்படுகிக் கொண்டிருக்கின்றான். அவர்களின் பெயருக்கு களங்கம் வரக்கூடாதென்றும் நினைக்கின்றான். அதனாலயே! ராமநாதன் வீடு வரரும் வரைக்கும் வண்டியில் அமர்ந்திருந்தவன் அவர் வீடு செல்வதை பார்த்து விட்டு பதினைந்து நிமிடம் கழித்து வாசனின் வீடு இருக்கும் தெருவுக்குள் வண்டியை விட்டிருந்தான்.
வெளியே இருந்து குரல் கொடுக்க வெளியே வந்த ராமநாதன் அவனை வரவேற்க அதை சில கண்கள் எட்டிப்பார்த்து விட்டு உள்ளே செல்ல அதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான் ரோஹன்.
இதுவே! வாசன் கெட்டவனாக இருந்திருந்தால்? அவனிடமிருந்து பிரித்து வாசுகியை மணக்க முயற்சி செய்திருக்கவும் கூடும். அதற்காக யார் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும் என்று வீடு புகுந்திருப்பான். ஆனால் இன்று வாசன் என்ற ஒருவனால் அவன் முடிவுகள் மாறி இருந்தன.
வீடு வந்தவனை வரவேற்று வாசுகி அருந்தவும் கொடுக்க, நலம் விசாரித்தவன் தான் வந்த விஷயத்தை பேச ஆரம்பித்தான்.
வாசனுக்கு சொன்ன அதே! கதை. மந்த்ராவை திருமணம் பேசியதால் பெண் பார்க்க வேண்டும், நிச்சயதார்த்தம், கல்யாணம் என்று எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் அதற்காக வீடு பார்த்தேன். வாடகைக்கு கிடைக்கவில்லை. வாங்கிவிட்டேன். அது உங்க வீடு என்று ராமநாதனை ஏறிட, அவரும் புரியாது பார்க்க, வாசனை அழைத்துக்கொண்டு வீடு பார்க்க, சென்றதை சொன்னவன்
“வீட்டை வாசன் அண்ணாவே! வாங்கிக்கிட்டா நல்ல இருக்கும். அவரு காசு இல்லனு சொல்லுறாரு. எங்க நான் காசு வாங்காம இருந்திடுவேனோனு நினைக்கிறாரு. நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேக்காம போய்ட்டாரு. நீங்களாச்சும் கேளுங்க பெரியப்பா” வாசனை உரிமையாக அண்ணா என்று எவ்வாறு அழைக்கப் பழகி இருந்தானோ! அவ்வாறே! எந்த தயக்கமும் இல்லாமல் ராமநாதனை பெரியப்பா என்று அழைக்கலானான் ரோஹன்.
ரோஹன் சொன்னது சந்தோசமான விஷயம்தான். தான் ஆசையாசையாக வாங்கிய வீடு பறிபோனதும் எவ்வளவு மனமுடைந்து போனார் என்பது அவர் மட்டுமே! அறிவார். அந்த வீட்டில்தான் தன் ஜீவ நாடியே! இருக்கிறது. வீடு திரும்ப கிடைக்கிறது என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றாமலில்லை. அப்படி இருக்க, வீடு கிடைக்க வழி சொல்கிறேன் என்று ரோஹன் சொன்னதும் கலாவதியிடமே! திரும்ப செல்வது போல் தோன்ற ஆவலாக அவனை ஏறிட்டார்.    
“வீடு நமக்கு திரும்ப கிடைக்குமா பா…” ராமநாதன் கண்களில் நீர் நிறைத்துக் கேக்க வாசுகிக்கு நெஞ்சு அடைத்துக்கொண்டது.
“கண்டிப்பா கிடைக்கும்பா… அது உங்க வீடு. அதுக்கு வாசன் அண்ணா சம்மதிக்கணுமே!” என்று ரோஹன் சொல்ல
“அவன் கிட்ட நான் பேசுறேன் பா…” என்ற ராமநாதன் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க,
வாசுகியை ஒரு பார்வை பார்த்தவன் “இப்போ இந்த வீட்டுல நீங்க வாடகைக்கு இருக்கீங்க இல்லையா?”
“ஆமா” வாசுகி கண்களை அகல விரித்துப் பார்த்துக்கொண்டிருக்க ராமநாதன்தான் பேசிக்கொண்டிருந்தார்.
“அதே மாதிரி சொந்த வீட்டுல வாடகைக்கு இருக்கணும்”
“என்னப்பா சொல்லுற?” ராமநாதன் தலையை சொறியாத குறையாக அவனை ஏறிட
“வீட்டை ஒரு கோடி ரூபாக்குதான் வாங்கினேன். அத தாண்டி நயா பைசா எனக்கு வேணாம். வீட்டுல தங்கிக் கொண்டு மாசா மாசம் வாடகை மாதிரி பணத்தைக் கொடுங்க, வட்டி ஒன்னும் இல்ல. அசல் மட்டும் தான். கொஞ்சம் வருசத்துல மொத்தத்தையும் கொடுத்துடுவீங்க, வீடும் உங்களுடையது”
“இது சரிப்பட்டு வருமா?” ராமநாதன் யோசிக்க,
“என்னப்பா நீங்க? நானும் உங்க பையன் தானே! சும்மா கொடுத்தாலே! வாங்கி இருக்கணும். வாசன் அண்ணா வாங்க மாட்டாரு. வீட்டை வாங்கி பூட்டி வைக்கிறதும் நல்லதில்லை, உங்க கண்ணு முன்னாடி இன்னொருத்தருக்கு வாடகைக்கு விடவும் மனசில்ல. அதுக்காக வீட்டை இன்னொருத்தருக்கு வித்திடவும் முடியாதே! அது உங்க வீடு. எதோ என்னாலான உதவி. அண்ணா பணத்தை கண்டிப்பா கொடுத்துடுவாரு. என்ன வாசுகி கொடுத்துடுவார் தானே!’ என்று வாசுகியையும் இழுக்க,
தன் புருஷன் பண மோசடி செய்வான் என்றா சொல்வாள். “ஆமா கொடுத்துடுவார்” என்று வாசுகி மண்டையை நன்றாக உருட்டலானாள்.
“பாத்தீங்களா? உங்க மருமகளே! சொல்லிட்டா கொடுத்திடுவார்னு, அத ஒரேயடியாக கொடுக்க முடியலைனாலும், கொஞ்சம் கொஞ்சமாக கொடுங்க, எனக்கு எந்த பிரச்சினையும் இல்லனு சொல்லுறேன். எனக்கு பணம் வந்திடும், உங்களுக்கு வீடு” வந்த வேலையை சரியாக பார்த்து விட்ட நிம்மதியில் வாசுகி கொடுத்த ஆறிப்போன டீயை அருந்தலானான்.
இவர்கள் வாசனிடம் பேசட்டும் என்று கிளம்பும் பொழுது அன்று வாசன் நேரங்காலத்தோடு வீடு வந்திருந்தான். வந்தவன் ரோஹானை முறைத்துக்கொண்டிருக்க, “ஆகா வந்துட்டாரே…. என் சோலி முடிஞ்சிடுமே!” என்று ரோஹன் நினைக்க
“ரோஹன் அதான் வாசன் வந்துட்டான்! நீயே சொல்லுப்பா…” என்று ராமநாதன் சொல்ல “அய்யோடா…” என்றான் ரோஹன்.    
வீட்டை பார்த்ததிலிருந்து வாசனால் நிம்மதியாக கடையில் வேலைப் பார்க்க முடியவில்லை. சரக்கு எதுவும் இன்று வராததால் ரகுவிடம் கடையை அடைக்க சொல்லி விட்டு வீடு வந்தால் ரோஹன் அமர்ந்திருக்கிறான்.
“இவன் அடங்கவே! மாட்டானா?” என்று வாசன் முறைக்க,
“வாங்க வந்து சாப்பிடுங்க” என்று வாசுகி பொதுவாகவே! மூவரையும் அழைக்க, முதல் ஆளாக ரோஹன் சென்று அமர்ந்துக்கொண்டான்.
மூவரும் சாப்பிடும் பொழுது ராமநாதன் பேச்சை ஆரம்பிக்க, மெல்ல, மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக ரோஹன் வாசனின் தலையில் தன் திட்டத்தை ஏற்றினான்.
“ஏன் டா… எங்களுக்கு செய்ய உனக்கு என்ன தலையெழுத்தா? உங்க அப்பா கேள்வி கேக்க மாட்டாரா?” என்று வாசன் கேக்க
“எங்க அப்பா பிரச்சினை பண்ணுவார்னு நினைக்கிறியா ….ண்ணா வேணும்னா அப்பா கிட்ட பேசு. அவர் வேணாம்னா நான் இந்த விசயத்த இனிமேல் பேசல சரியா” என்ற ரோஹன் சாப்பிட்டு முடிந்ததும் தந்தையை அழைத்து அலைபேசியை வாசனிடம் கொடுக்க,
“வாசா… எப்படிப்பா.. இருக்க? நல்லா இருக்கியா?” ரொம்ப நாள் பழகிய உறவினர் போல் ராஜேந்திரன் பேச அலைபேசியை காதிலிருந்து கையிலெடுத்துப் பார்த்தவன் “சரியான நம்பர்தானே! போட்ட” என்று ரோஹானை கேட்டும் வைக்க மறுமுனையில் ராஜேந்திரன் புன்னகைக்கலானார்.
“ரோஹன் எல்லாம் என் கிட்ட சொன்னான் பா.. எப்போ போன் பண்ணாலும் வாசன் அண்ணா.. வாசன் அண்ணான்னு உன் புராணம் தான். நான் உன்ன பிரிச்சுப் பார்த்தா என் பையன் எனக்கு இல்லாம போய்டும் பா…” என்று சிரித்த ராஜேந்திரன் “தெரிஞ்சிருந்தா வீட்டை உன் பெயரிலேயே! வாங்கி இருப்பேன். தெரியலையேப்பா..” என்று சொல்ல என்ன மாதிரியான அன்பு இவர்களுடையது என்று மலைத்து நின்றான் வாசன்.
ஆதாயமில்லாமல் இந்த காலத்தில் யாரும் எதுவும் செய்து விட மாட்டார்கள். அப்படி இருக்க, வாசனிடம் என்ன எதிர்பார்த்துக் கொண்டு ரோஹன் இதெல்லாம் செய்கின்றான்.
“ரொம்ப யோசிக்காத ..ண்ணா… சொந்தமும் ஆகா போறோம். சோ ப்ளீஸ் டோன்ட் சே நோ” என்று ரோஹன் சொல்ல “ஓகே” என்றான் வாசன்.
அதன்பின் வீட்டுப்பத்திரம் வாசன் மற்றும் வாசுகியின் பெயரில் மாற்றப்பட்டது. ராமநாதனின் பெயரில் வாங்க தான் வாசன் விருப்பப்பட்டான். அவரோ! தன் பெயரில் இருந்தால் மற்ற பிள்ளைகள் உரிமை கூறுவார்கள் அதனால் வாசன் மற்றும் வாசுகியின் பெயரில் இருக்கட்டும் என்று விட ரோஹனும் அதுதான் சரி என்று விட்டான். கடையை கட்ட சேமித்திருந்த பணம் ஐந்து லட்சத்தை வாசன் வங்கியிலிருந்து எடுத்துக் கொடுக்க ரோஹன் மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.
அதோடு ரோஹன் விடவில்லை. வீட்டுக்கு வெள்ளை அடிக்க வேண்டும், கல்யாண வீடு வேற என்று தேவையான பொருட்களை வாங்கிப் போட்டு கிரகப்பிரவேசமும் செய்தான். வாசனால் ஒன்றும் சொல்லவும் முடியவில்லை. எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துக்கொண்டவன் பணத்தை கொடுத்து விடலாம் என்று நினைக்க,
“என்ன ..ண்ணா உன் வீட்டுக்கு பரிசா நான் பொருட்கள் வாங்கித்தரக் கூடாதா? நான், மந்த்ரான்னு ஒவ்வொருத்தரா வாங்கிக் கொடுத்ததா நினைச்சுக்க” என்று சொல்ல
அதை கேட்டு மந்த்ரா… “நான் வாங்குற சம்பளத்துக்கு இந்த சோபா செட் வாங்க ஒரு வருஷம் வேல பார்க்கணுமே!” என்று சிரிக்க,
“போமா.. போ… போய் வந்தவங்கள கவனி, சரியா எதக் கேட்கக் கூடாதோ! அத மட்டும் இந்த பொம்பளைங்க காது எப்படித்தான் கேட்டுடுதோ!” என்று புலம்ப வாசன் வாய்விட்டே சிரித்தான். 
ரோஹனுக்கும் அவனுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது என்று வாசன் அடிக்கடி நினைப்பதுதான் அதில் ஒன்று ஒட்டு மொத்த பெண்களையும் நொடியில் தூற்றுவது, அதுவும் மனைவியிடம் பேசும் பொழுது. அதையே! ரோஹனும் செய்ய வாசனால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.            
கிரகப்பிரவேசத்துக்கு வாசனின் மொத்த குடும்பத்தையும்தான் அழைத்திருந்தான். நித்யா குடும்பம் குழந்தைகளின் படிப்பு என்று வரவில்லை. ஸ்ரீவத்சன் வெளிநாட்டில், ஸ்ரீராம் வரேன் என்றவன் கடைசி நேரத்தில் வரவில்லை. சத்யா மட்டும் ரமேஷோடு வந்தவள் வாசுகியின் மொத்த குடும்பத்தோடு ரோஹன் உரிமையாக நடமாடுவதைக் கண்டு போதாததற்கு ரோஹனின் அன்னை சரளாவும், தந்தை ராஜேந்திரனும் வாசனுக்கு இன்னொரு தாய், தந்தையாக அனைத்து வேலைகளையும் பார்க்க, சொந்த வீட்டில் அந்நியத்தன்மையை நன்கு உணர்ந்தவளாக ஒதுங்கியே! நின்றுவிட்டு சென்றாள்.
புஷ்பா-பாண்டிராஜ், ஆவுடையப்பன்- பத்மா என அனைவரும் வந்திருந்தாலும் புது உறவுகளுக்கு மத்தியில் அவர்கள் விருந்தாளிகளாக வரவேற்று கவனிக்கப்பட்டகள்.
பூர்ணா தான் மந்த்ராவை அழைத்து “ரோஹனுக்கு புத்தி பேதலிச்சு போச்சா? வீட்டை உன் பேர்ல மாத்தி இருக்க வேண்டியது தானே! எதுக்கு இதெல்லாம் செய்கிறார்? இப்பவே! இப்படி என்றால் கல்யாணத்து பிறகும் வாசனுக்கு சேவகம் செய்வான், முந்தானையில் முடிஞ்சிக்க” என்று மகளுக்கு புத்தி மதி சொல்ல அவளிடம் பேசி புரிய வைக்க முடியாது என்பதால் தான் பார்த்துக் கொள்வதாக கூறியவள் அகன்றாள்.
வாசனுக்கு சொந்த வீடு இல்லை என்ற குறை தீர்த்தத்தில் மகிழ்ந்தது ராஜமும் நாதனும்தான். அதுவும் அவர்களது வீடே அவர்களுக்கு கிடைக்க செய்த ரோஹானை மேலும் பிடித்து விட கிரகப்பிரவேசம் அன்றே ரோஹனின் பெற்றோர்கள் மந்த்ராவை பார்த்து விட்டதில் நிச்சயதார்த்தையே! வைத்துக்கொள்ளலாம்! என்றும் கேட்டிருந்தனர்.
“முறைப்படி பொண்ணு பார்த்து பேச வேண்டியதை பேச வேண்டாமா?”
சந்திரா காதலித்ததால் சதா சண்டையும் சச்சரவுமாகி அவள் கல்யாணம் பூர்ணாவின் விருப்பம் இல்லாமலையே! நடைபெற, மந்த்ராவின் திருமணமாவது, முறைப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று பூர்ணா கேட்க,
“என் பையனுக்கு பிடிச்சிருந்தா நேரடியாக மண்டபத்தை புக் பண்ணி எங்களை கூப்பிட்டிருந்தாலும் வந்திருப்போம். எங்களுக்கு அவன் கல்யாணம் பண்ணிக்கொண்டாலே! போதும்” என்று ராஜேந்திரன் சிரிக்க, முகம் சுணகினாள் பூர்ணா.
“பெண்ணை பார்த்து பிடித்திருந்தால், பூ வைக்க போகிறோம். அத இங்கயே! பண்ணலாமே! இது பொண்ணோட அக்கா வீடுதானே! நிச்சயார்த்ததை அன்னைக்கே! பண்ணிடலாம். கல்யாணத்தையும் பண்ணிட்டா, மருமகள் கையோட நான் கூட்டிட்டு போய்டுவேன்” என்று சரளா சொல்ல நாதன் புரியாது பார்க்க,
“இல்லனா என் பையன் இந்த ஊற விட்டு வர மாட்டான்” என்று சிரிக்க,
“வாசனை விட்டு வந்துடுவானா?’ என்று ராமநாதன் கேக்க அனைவரும் சிரிக்கலாயினர்.
வாசனின் வீடு தோட்டத்தோடு நான்கு அறைகளைக் கொண்ட தனி வீடுதான். ராமநாதன் முன்னறையில் தங்கிக்கொள்ள, வாசனும் வாசுகியும் பெரிய அறையில் தங்கிக்கொள்ள, ஒரு அறையில் ரோஹனும், மற்ற அறையில் ரோஹனின் பெற்றோரும் தங்கியிருந்தனர்.
“என்னங்க தூக்கம் வரலையா?” வாசுகி கணவனின் புறம் திரும்பிக் கேட்டாள். வீட்டுக்கு பொருட்களை மாற்றவென வந்த நாளிலிருந்து குடிபுந்த நாள் வரைக்கும் ஏன் இதோ சற்று முன் சாப்பிடும் வரைக்கும் இந்த வீட்டு கதைகளைத்தான் வாய் ஓயாது வாசன் வாசுகியிடம் கூறிக்கொண்டிருந்தான்.
“அதீத சந்தோசம் அதான் தூக்கம் வரல. ரெண்டர வருசத்துக்கு முன்னாடி ஸ்ரீராம் வீட்டை வித்துட்டான்னு கேள்விப் பட்டதும் இதயமே! வெடிச்சு சுக்குநூறா போச்சு. எவ்வளவு நினைவுகள் பொக்கிஷமா இந்த வீட்டுல இருக்கு தெரியுமா? சொந்தமா வீடு கூட இல்லனு சொல்லுறது வருத்தமான விஷயம் இல்ல வாசு…. சொந்தமா வீடு இருந்து அது இல்லாம நிர்கதியா நிக்குறதுதான் ரொம்பவே! வருத்தமான விஷயம். அந்த வலி, வேதனை வார்த்தைகளால் சொல்ல முடியாதது.
வீடு வாங்கவோ! கட்டவோ! இப்போ இருக்குற நிலமைல என்னால யோசிச்சுக்கூட பார்க்க முடியல. ஆனா கடவுள் நான் பொறந்து வளர்ந்த வீட்டையே! எனக்கு திரும்ப கொடுத்துட்டான்” என்றவனின் நெஞ்சம் கனத்து குரல் கமறி கண்களின் ஓரம் கண்ணீர் துளியும் எட்டிப்பார்த்திருக்க, கணவனை அணைத்துக்கொண்டவள் கண்களில் மெதுவாக முத்தமிடலானாள்.
 “கடவுள் நல்லவங்கள கைவிட மாட்டாருங்க உதவி செய்ய யாரையாவது அனுப்பிகிட்டுதான் இருப்பாங்க, உங்களுக்கு உதவி செய்ய ரோஹன அனுப்பி இருக்காரு” வாசுகி ஆத்மார்தமாக சொல்ல
“பார்த்த நொடியிலையே! அண்ணான்னு கூப்பிட்டான். இன்னக்கி வரைக்கும் அன்ப மட்டும்தான் காட்டுறான், அவனுக்கு கைமாறா என்ன செய்ய போறேன்னு தெரியல” என்றவனின் விரல்களோ! மனைவியின் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தது 
  “அதான் என் தங்கச்சியையே! கட்டிக் கொடுக்க போறோமே! வேறென்ன வேணும். அவ அவரை நல்ல பாத்துப்பா” என்று புன்னகைக்க
“அப்படிங்கிற?” என்ற வாசனின் பார்வை கணவனின் பார்வையாக மாறி அவள் முகத்தை ரசனையாக பார்த்தான். வாசுகி அவன் வாழ்க்கையில் வந்த பின் அவன் வாழ்க்கை பெரிதாக மாற்றம் இல்லை என்று அவன் எண்ணி இருந்தாலும், குழந்தையின் இழப்பின் பின்னால் அவர்களின் நெருக்கம் அதிகரித்திருக்க, அவள் பேச்சு, செய்கைகள் என்று அவளை அணுவனுக்காக ரசிக்க ஆரம்பித்தவனுக்கு அவன் வாழ்க்கையே! அவள்தான் என்று புரிந்து போனது.  
“அது மட்டுமா? நீங்க பொறந்து வளர்ந்த வீட்டு உங்க பசங்க பொறுக்க போறாங்க அது கூட சந்தோசமான விஷயம் தானேங்க” வாசுகி சந்தோசமாக பேச
அவள் இடையில் கைபோட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன் “அதுக்கு மொதல்ல குழந்தை உருவாக்கணும் வாசு… நம்ம வீட்டுலயே! நம்ம குழந்தை உருவாக போறதும் சந்தோசமான விஷயம்தான்” என்றவாறே அவளை முத்தமிட முயல
“அப்பப்பப்பா… உங்களுக்கு எப்போ பார்த்தாலும் அதே! நினைப்பா.. ஆள விடுங்க நிச்சயதார்தத்துக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு, தலைக்கு மேல வேல இருக்கு, ரெண்டு வீட்டு வேலையும் நாமதான் பார்த்தாகணும், பேசாம தூங்குங்க” கணவனை தள்ளி விட
“அதான் அன்னைக்கே! சொன்னேனே! சும்மா எல்லாம் வேல பார்க்க முடியாது, வட்டியும் முதலும் உன்கிட்டத்தான் வசூலிக்கனும் வாடி…” என்று இழுத்தணைத்தவன் அவள் இதழில் கவி எழுத ஆரம்பித்தான்.
 சந்திரா-ஜெயமணி மற்றும் மந்திரா-ரோஹன் ஆகிய இரு ஜோடிகளின் நிச்சயதார்த்த நாளும் அழகாக விடிந்தது.
மண்டபத்துக்கு செல்ல ரோஹன் பெற்றோரோடு தயாராகி வர வாசன் வேட்டி சட்டியில், வாசுகி பட்டு சாரியிலும் தயாராகி வர
“அண்ணா.. இன்னக்கி நிச்சயதார்த்தம் எனக்கு” என்று ரோஹன் கிண்டல் செய்ய ஆரம்பிக்க
“உன்ன யாரு கோட் சூட் போட சொன்னா நீயும் வேட்டி சட்ட போட வேண்டியது தானே! என்று வாசன் வார
“அது ஒன்னும் இல்ல வாசா வேட்டி சட்ட போட்டா எங்க உன் பக்கத்துல நிக்க முடியாம போய்டுமோனு இவனுக்கு பயம் அதான் பய கோட் சூட் போட்டிருக்கான்” என்று ராஜேந்திரன் சொல்ல
“அப்பா…” என்று ரோஹன் முறைக்க.. வாசுகி சிரித்தாள்.
“அண்ணா.. கல்யாணம் அன்னக்கி நீங்க கோட் சூடுதான் போடணும் சரியா” என்று ரோஹன் சொல்ல
“அத அன்னைக்கி பார்க்கலாம் இப்போ போலாம் வா.. இல்லனா நிச்சயதார்த்தம் முடிஞ்சிடும்” என்ற வாசன் வாசுகியை பார்க்க உதடு குவித்து கண்ணை சுருக்கி “கோட் சூட்” என்றவள் பார்வையோ! கணவனை அந்த ஆடையில் பார்க்க பேராவலாக உள்ளதாக சொல்ல வாசனும் சிரித்தவாறு வண்டியை நோக்கி நகர்ந்தான்.
இவர்கள் மண்டபத்தை அடையும் பொழுது நாதன் குடும்பம், கலைவாணியின் குடும்பம் உட்பட நாதனின் மொத்த சகோதர, சகோதரரிகளின் குடும்பமும் அமர்ந்திருக்க, இவர்களையும் வர வேற்று அமர வைத்தனர்.
“என்ன வாசுகி நீ மாப்பிள்ளை வீட்டுக்காரரே! ஆகிட்ட போலிருக்கு” என்று இளசுகள் கேலி செய்ய கணவனின் அருகிலையே! அமர்ந்திருந்தவளின் புன்னகை மட்டும் மாறவே இல்லை.
நல்ல நேரத்தில் நிச்சயதார்த்த விழாவும் ஆரம்பமாக, திருவிளக்கு ஏற்றப்பட்டு, தீபம், சூடம் எல்லாம் காட்டி வழிபட்டவர்கள் முகூர்த்த பட்டோலை எழுத ஆரம்பமானார்கள்.
சிவப்பு மையால் எழுதப்பட்ட பட்டோலையை வாசிக்கும் பொழுது “ஒரு நிமிஷம் என்ன பொண்ணு பேர் மகாலக்ஷ்மினு சொல்லுறீங்க, நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு பெயர் மந்த்ரா” என்று ரோஹன் சொல்லவும் இளசுகள் “கொல்” என சிரிக்க,  “என்ன வாசன் அண்ணா தங்கச்சிய காட்டி அக்காவை கட்டி கொடுக்குற மாதிரி ஏதாச்சும் பண்ணுறாங்களா” என்று ரகசியம் பேச வாசுகியும் சிரித்து விட்டாள்.
வாசனுக்கும் ஒன்றும் புரியவில்லை. என்னவென்று வாசுகியை ஏறிட இருவர் புறமும் குனிந்து “அது வந்து மந்த்ரா பெயர் மகாலக்ஷ்மி, சந்திரா பெயர் சந்திர லக்ஷ்மி, சின்ன வயசுல ரெண்டு பேரும் தூங்கி கிட்டு இருக்கும் பொழுது எந்திரிச்சாங்களானு பார்க்க சொல்லி இருக்காங்க, நானும் போய் பார்த்துட்டு வந்து சந்த்ரா, மந்த்ரா, எந்திரிச்சிட்டாங்கனு சொல்லி இருக்கேன் போல, அன்னைல இருந்து அது அவங்க பெயராகிருச்சு. உண்மையான பெயர் குடும்பத்துல உள்ள பாதி பெருக்கும் கூட தெரியாது” வாசுகி சொல்லி சிரிக்க, அசடு வழிந்தான் ரோஹன்.
“மாப்புள நிச்சயதார்த்தம் முடிஞ்சா உடனே! மந்த்ரா போன் நம்பர் வாங்கி பேரு, வயசு, எல்லாம் கேட்டுக்கோங்க, கல்யாணத்துக்கு அப்பொறம் பிரச்சினையாகிடப்போகுது” என்று ஒரு இளசு கேலி செய்ய வாயை இறுக மூடிக்கொண்டு ரோஹன் மந்த்ராவை பார்த்து புன்னகைக்க, அவளும் புன்னகைத்துக்கொண்டிருந்தாள். 
பன்னீர், சந்தானம், குங்குமம் கொடுத்து மரியாதை செய்து கொண்டதோடு தாம்பாளத் தட்டுக்களும் மாற்றப்பட்டது. அதன்பின் இரு ஜோடிகளும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். நல்ல நாள் பார்த்து கல்யாணத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பின்  வைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டனர்.

Advertisement