Advertisement

அத்தியாயம் 21
வாசனும் வாசுகியும் ஊர் திரும்பி இரண்டு நாட்களாகி இருந்தன. விமானத்தில் வர ரோஹன் டிக்கட் போட்டிருந்தாலும், வாசுகி ட்ரைனில் பயணம் செய்ததே! இல்லை என்று அடம்பிடிக்க, ட்ரைனில் ஊர் திரும்பி இருந்தனர்.
வாசன் வேறு கூறிப்பார்த்தான். “அடுத்த தடவ வரும் பொழுது ட்ரைன்ல வருவோம் டி.. இப்போ விமானத்துலையே! போலாம்” என்று
பிடிவாதக்காரியோ! “முடியாது, முடியாது அத அடுத்த தடவ வரும் பொழுது பார்த்துக்கலாம், இப்போ ட்ரைன்லயே! போலாம்” என்று விட வாசனும் அவளை ட்ரைனிலையே! அழைத்து வந்திருந்தான். வந்தவள் பயனக் களைப்பில் ஒரு நாள் முழுக்க தூங்கிக் கொண்டிருக்க, வாசன் கடைக்கு சென்றிருந்தான்.
ரோஹனும் ராமநாதனையும், கடையையும் நன்றாகவே! பார்த்துக்கொண்டிருந்தான். வாசன் வந்த உடன் கணக்கு வழக்குகளை காட்டியவன் விடைபெற முற்பட
அவனின் நேர்த்தியைக் கண்டு வியந்தவாறே!  “என்ன டா… கடையிலையே! இருந்துட்ட போல, நீ இங்க வந்தது உங்க தொழில கத்துக்க இல்ல, உங்க அப்பா கேள்வி கேக்க மாட்டாரா?”
“ஹாஹாஹா கடைல சம்பளம் இல்லாம வேல பார்த்தேன்னு நினச்சியா ..ண்ணா.. வேலைதான் கத்து கிட்டேன்” ரோஹன் கலாரறை இழுத்து விட
“அடப்பாவி உன்ன நம்பி கடைய விட்டதுக்கு எனக்கு எதிர்த்தால கடை திறந்துடுவ போல இருக்கே!” என்று வாசன் கிண்டல் செய்ய
“போ …ண்ணா…” என்று ரோஹன் வெக்கப்பட்டான்.
“மதியம் ஒரு இடத்துக்கு போகணும் எங்க போனாலும் டான்னு இங்க வந்துடு” வாசன் சிரித்தவாறே சொல்ல
“எங்க …ண்ணா… போறோம்?” ரோஹன்
“உனக்கு பொண்ணு பார்க்க” வாசன் சிரிக்க,
“என்ன ..ண்ணா சொல்லுற?” அதிர்ச்சியடைந்தான் ரோஹன்
“என்னடா.. ஷாக் ஆகுற? அதான் சொன்னேனே டில்லில இருந்து வந்ததும் உனக்கு பொண்ணு பாக்குறதுதான் மொத வேலைனு”
“சரிணா .. சரிணா..” என்று கிளம்பிப் போனவனின் மனமோ! “அப்போ அண்ணா பார்த்த பொண்ணு அவ இல்லையா?” என்று கேட்டது.
நாதனை அழைத்துப் பேசிய வாசன் நாளை மாலை சந்திராவின் திருமண விஷயமாக பேச வீட்டுக்கு வருவதாக கூறி வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொண்டான்.
இரவில் கடையை சாத்திவிட்டு வீடு சென்ற வாசன் வாசுகியிடம் ரோஹானை அழைத்துக்கொண்டு பெண் பார்க்க சென்றதை சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசிக்கலானான்,
ரோஹனுக்கும் பெற்றோர் இருக்க, பெண்ணுக்கும் பெற்றோர் இருக்க, “அதென்ன, பெரியவங்களுக்கு தெரியாம ரெண்டு பேரையும் பேச வச்சி இருக்கீங்க” என்று திட்டித் தீர்ப்பாள் என்று மெளனமாக அவளோடு உணவுண்டவன் தந்தையை பற்றி விசாரித்து விட்டு உறங்கச் செல்ல,
“என்ன மச்சான் உடம்புக்கு ஏதும் முடியலையா? ஒரு மாதிரியாக இருக்கிறீங்க?” என்று அவன் தலையை பிடித்து விட
“எப்போல இருந்து இவ நம்மள இவ்வளவு கவனிக்க ஆரம்பிச்சா?” என்று நொந்து கொண்டவன் “அது வாசு நாளைக்கு உங்க வீட்டுக்கு போய் சந்திரா கல்யாணத்த பத்தி பேசலாம்னு இருக்கேன். உங்க அப்பா கிட்டயும் போன் பண்ணி சொல்லிட்டேன்” கண்களை மூடியவாறு கூறியவன் அவள் விரல் நுனிகள் கொடுக்கும் இதத்தை அனுபவித்துக்கொண்டிருந்தான்.
“நல்ல விஷயம் தானேங்க, பேசுங்க”
“உன்ன கூட்டிட்டு போக எனக்கு விருப்பம் இல்ல” என்று பட்டென்று சொன்னவன் ஜன்னலினூடாக வரும் வெளிச்சத்தில் அவள் முகம் பார்த்தான்.
வாசன் நினைத்திருந்தால் நாதனை அவன் வீட்டுக்கு அழைத்து பேசி இருக்கலாம், அவ்வாறு செய்யாமல் அங்கு சென்று பேசுவதே! அவனுக்கு இன்னும் அவர்கள் மேல் மரியாதை இருக்கிறது அதை தான் புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும் என்று வாசுகிக்கி தெரியாதா?
அதே நேரம் கணவனின் பார்வையை தங்கி நின்றவளோ! “ஆகா நான் என்ன சொல்வேனோன்னுதான் தொர இம்புட்டு யோசிக்கிறீங்களோ!” கிண்டலாக கேட்டவள் “நீங்க மட்டும் போயிட்டு வாங்க நான் வந்தேன்னு கல்யாணம் பேசவா போறேன்? ஒரு ஓரமா உக்காந்து இருக்கப்போறேன். அதுக்கு நான் வீட்டுலையே! நிம்மதியா இருக்கலாம், மனச போட்டு குழப்பிக்காம தூங்குங்க”
“தூங்கவா? பாப்பா வேணும்னு சொல்லிட்டு தூங்க சொல்லுறியே! வாசு” மன பாரம் நீங்கியவனாக கணவனாகி அவளை ஆழத்துவங்கினான்.
அடுத்த நாள் மாலை வாசுகியின் வீடு செல்ல வாசன் கடையிலிருந்து கிளம்பும் பொழுது ரோஹன் வண்டியை கொண்டு வந்து நிறுத்த
“பன்னண்டு கிலோ மீட்டர் தானே டா.. பஸ்ஸுளையே! போய் இருக்கலாம் கார் எதுக்கு” என்றவாறு வாசன் ஏறி உக்கார
“கல்யாண விஷயம் பேச போறோம் கெத்தா போக வேணாமா” என்று இவன் சொல்ல
“அப்படிங்குற?” என்ற வாசன் சிரித்தான்.
இவர்கள் இருவரும் நாதனின் வீட்டை அடைய கலைவாணியும் குடும்பத்தோடு அங்குதான் இருந்தாள். வாசன் அலைபேசியில் சந்திராவின் திருமண விஷயம் என்றதும் அக்காவையும் வர வைத்திருக்க, ரோஹானோடு வரும் வாசனை புரியாது அனைவரும் பார்த்து வைத்தனர்.
எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவன் தலைசைப்பினூடாக வணக்கத்தை வைத்தவாறு சோபாவில் அமர ரோஹனும் வாசனின் அருகில் அமர்ந்துக்கொண்டான்.
ரோஹன்தான் சந்திராவை பெண் கேட்டு வீட்டுக்கே வந்திருந்தானே! அதில் பூர்ணாவுக்கும் அவனை தெரியும். வத்சனின் கல்யாணமன்று கல்யாண வேலைகளை ஓடியாடி பார்த்தவனை வாசனின் கடைப்பையன் என்று கண்டுகொள்ளவில்லை. வாசுகியை தூற்றிய போது அவன் அவளை புழுவை பார்ப்பது போல் பார்த்து விட்டு சென்றதும் ரோஹனின் சம்பந்தம் நடக்காது என்று புரிந்தது. கூடவே! இவன் எதற்கு வாசனோடு சுற்றிக்கொண்டிருக்கின்றான் என்ற கேள்வியும் எழுந்தது.
பூர்ணாவின் சிந்தனையை தடுக்கும் விதமாக வாசன் பேச ஆரம்பித்திருந்தான். “கலைவாணி அத்த உங்க பையனுக்கு சந்த்ராவ கட்டி வைக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?” நாதனிடம் கூட பேசவில்லை. அவர்கள் இருவரும் காதலிப்பதுதான் பிரச்சினை என்று நாதன் கூறுவதாக வாசுகி கூறி இருந்தாளே!
கலைவாணியோ! “எனக்கென்ன பிரச்சினை இருக்கப் போகிறது. அவளும் என் தம்பி பொண்ணுதான். அவனுக்குத்தான் பொண்ணு கொடுக்கிறதுல இஷ்டமில்ல. என் வீட்டுக்காரரும் இதுல எதுவும் சொல்ல போறதில்ல” என்று புருஷனையும் ஒரு பார்வை பார்க்க, அவரும் தலையை ஆட்டி வைத்தார்.
“அப்போ மாமா உங்களுக்கு சந்திரா காதலிக்கிறதுதான் பிரச்சினை, இல்லனா உங்க அக்கா பையனுக்கு கட்டி கொடுத்திருப்பீங்க இல்லையா?” என்று மாமனாரை பார்க்க, நாதனும் “ஆமாம்” எனும் விதமாக தலையசைக்க,
 “மாமா மணி உங்க அக்கா பையன், உங்க கண் பார்வைல வளர்ந்தவன். உங்க  அக்கா வளர்ப்பு எப்படி? எப்படி பட்ட பையன்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டியதில்ல. சந்த்ராவ கட்டி கொடுத்து அவள கண் முன்னாடிதான் பார்த்துக்க போறீங்க. அவ காதலிக்கிறத ஏன் பிரச்சினையா பாக்குறீங்க, வெளியால காதலிச்சா தான் யோசிக்கணும், விசாரிக்கணும்” என்று விட நாதனும் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
“என் பொண்ண இவனுக்கு கொடுக்க எனக்கு சம்மதம் இல்ல. என்ன மீறி இந்த கல்யாணம் நடக்காது” பூர்ணா ஆவேசமாக மனதுக்குள் தான் கத்திக்கொண்டிருந்தாள். அவளைத்தான் மந்திரா ஆப் பண்ணி வைத்திருந்தாளே! பல்லைக் கடித்தவாறு அங்கே நடப்பத்தை கையலாதவளாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள் பூர்ணா. சந்திராவும், மந்த்ராவும் இவர்களுக்கு குடிக்க ஏற்பாடு செய்தவர்கள் கொண்டுவந்து கொடுக்க ஜெயமணி அதை அனைவருக்கும் பகிர்ந்தான்.
மந்த்ராவின் தலை மறையும் வரை ரோஹன் அவளை ஓரக்கண்ணால் பார்க்க, அவளும் யாரும் அறியாமல் புன்னகைத்து விட்டு சென்றாள்.
பூர்ணாவோடு பேச வாசனுக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. அவள் புறம் திரும்பக் கூட இல்லை. “மாமா ரோஹன பத்தி விசாரிச்சீங்களா?” என்று வாசன் கேக்க
சந்திராவுக்கு ஜெயமணியை திருமணம் பேசி விட்டு ரோஹானை பற்றி எதற்காக கேட்கின்றான் என்று புரியாது பார்த்த நாதன் “விசாரிச்சேன் மாப்புள, ஆனா இப்போ அதுக்கு அவசியம் இல்லையே!” என்று விட
“விசாரிச்சதுல உங்களுக்கு திருப்தியென்றால் நம்ம மந்த்ராவுக்கு ரோஹன பேசலாமே!” என்று வாசன் சொல்ல, நாதன் என்ன பதில் சொல்வதென்று யோசிக்க,
“என்ன இவன் ரெண்டாவது பொண்ண கேட்டு வந்தான் இவனுக்கு எப்படி மூணாவது பொண்ண கொடுக்குறது என்று தானே! யோசிக்கிறீங்க?” என்று ரோஹானே! பேச நாதனின் உடல்மொழியும் அதுதான் காரணம் என்று சொன்னது.
“உண்மையிலயே! நான் சந்திராவ விரும்பி பொண்ணு கேட்டு வரல, அவங்க நடத்தையை பார்த்த நல்ல பொண்ணா இருக்காங்கன்னுதான் பொண்ணு கேட்டு நானே! வந்தேன். அவங்கள விரும்பி இருந்தா நேரா அவங்க கிட்ட தானே! போய் சொல்லி இருப்பேன். அண்ணா வந்து அவங்க வேறொருத்தர காதலிக்கிறதா சொன்னதும் நான் அன்னைக்கே! ஒதுங்கிட்டேன். அதுக்கு பிறகு அண்ணா கூட நல்ல பழக ஆரம்பிச்சேன். இது அவர் பார்த்த சம்பந்தம் உங்களுக்கு இஷ்டமில்லன்னா பரவால்ல” என்று நீண்ட விளக்கம் கொடுத்த ரோஹன் மனதில் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிடக் கூடாதென்று எல்லாக் கடவுள்களையும் வேண்டிக்கொண்டிருந்தான்.
வாசனோடு பேசும் பொழுதுதான் குழந்தையாக வெக்கப்படுவானே! தவிர மற்றவர்களிடம் கம்பீரமாக சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவான் ரோஹன்.
ரோஹானை ஸ்ரீவத்சனின் திருமணத்தில் பார்த்திராவிட்டால் நாதன் மறுத்திருக்கவும் கூடும். கல்யாண வேலைகளை பார்த்ததோடு வாசனோடு கூடவே! சுற்றித்திரிந்தவன் மந்த்ராவை கட்டினால் குடும்பத்தாரோடு ஒற்றுமையாகவும் இருப்பான் என்று தோன்ற “சரி, ரெண்டு பேருக்கும் ஜாதக பொருத்தம் பாத்துட்டு சொல்லுறேன்” என்று விட ரோஹன் நிம்மதியடைந்தான்.
சந்திரா மற்றும் ஜெயமணியின் திருமணம் உறுதிசெய்யப்படவும் நிச்சயதார்த்தத்தை கூடிய விரைவில் வைத்துக்கொள்ளலாம் என்றும் ரோஹன் மற்றும் மந்த்ராவின் ஜாதகம் பொருந்தினால் இரு ஜோடிகளின் திருமணத்தையும் ஒரே நாளில் வைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்த கலைவாணி.
“ரோஹன் தம்பி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, நீங்களே! பொண்ணு கேட்டு வந்து இருக்கீங்க, உங்க வீட்டுல அப்பா அம்மா…” என்று இழுக்க
“அப்பா.. சென்னைல பிஸ்னச பாத்துக்கிறாரு அம்மாக்கு கொஞ்சம் உடம்பு முடியல. என்ன கல்யாணம் பண்ண சொல்லி கேட்டுக்கிட்டுதான் இருக்காங்க, அவங்க காட்டுற எந்த பொண்ணும் எனக்குத்தான் பிடிக்கல. நானே! பொண்ணு பார்ததெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல. உங்க சைடுல எல்லாம் சரினு சொன்னா அவங்க வந்து பொண்ணு பார்த்து மத்த விஷயமெல்லாம் பேசிப்பாங்க” ரோஹன் தெளிவாகவே! பேச
ஜாதகம் பொருந்தினால் வாசனை அழைத்து கூறுவதாக நாதன் கூற வாசனும் ரோஹனும் விடைபெற சாப்பிட்டு விட்டு செல்லுமாறு வற்புறுத்தியும் வாசுகி காத்துகொண்டு இருப்பாள் என்று வாசன் மறுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
வாசனை கடையில் இறக்கி விட்டு அறைக்கு வந்த ரோஹன் தந்தையை அழைத்துப் பேசினான்.
“எல்லாம் நான் நினைச்ச மாதிரிதான் பா… நடக்குது. வாசுகியை கல்யாணம் பண்ணி அந்த குடும்பத்துல மருமகனான போகணும்னு பார்த்தேன். அதுக்கு வாசன் அண்ணாக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தையும் இருக்குனு போன் பண்ணி சொல்லி கல்யாணத்தையும் நிறுத்தப் பார்த்தேன். நான் அமெரிக்கால இருந்ததால என்னால கல்யாணத்த நிறுத்த முடியல. வேற வழியில்லை. சந்திராவை கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தேன் அவ என்னடான்னா… அத்த பையன காதலிக்கிறாளாம். அதுவும் போச்சான்னு இருக்கும் போது வாசன் அண்ணா பொண்ணு பாக்குறேன்னு சொன்னதும் சரினு சொல்லி வச்சேன்”
“வாசன் உனக்கு யாரை பார்த்து வச்சிருக்கான்? ரொம்ப நல்லவனா நடிக்கப்போய் போன காரியத்தை கோட்ட விட்டுடாத மகனே!” ரோஹனின் தந்தை ராஜேந்திரன் எச்சரிக்க
“நேத்து மந்த்ரா டீச் பண்ணுற ஸ்கூல் முன்னாடி வண்டி போய் நின்னதும் பக்குனு இருந்துச்சு. அவளும் வெளிய வந்தா வாசன் அண்ணாவ பார்த்து பயந்துட்டா.. மனிசன் பார்வையாலையே! மிரட்டுறாரு. ரெண்டு பேரும் ஒரு மரத்தடில போய் பேச ஆரம்பிச்சதும் நானும் பின்னாடியே போய் அவங்க கவனிக்காத விதமா நின்னு கிட்டேன். அவர் மொத கேட்ட கேள்வியே! நீயும் யாரையாச்சும் காதலிக்கிறியான்னுதான். அவ கிட்ட இந்த கேள்விய கேட்டதுக்கு என்ன கூட்டிகிட்டு வந்ததுக்கு காரணத்தை நான் புரிஞ்சிகிட்டு அங்க இருந்து நழுவி வண்டில வந்து உக்காந்தேன். கொஞ்சம் நேரத்துலையே! அண்ணா போன் பண்ணி என்ன வர சொன்னாரு. மந்த்ராவ அறிமுகப்படுத்தி அவதான் எனக்கு பாதித்திருக்கும் பொண்ணுன்னு சொன்னாரு. தனியா ஒரு பத்து நிமிஷம் பேசினோம். அவளும் கல்யாணத்துக்கு சம்மதிச்சா”
“அக்காவை கேட்ட மப்பளனு வேணாம்னு சொல்வானு நெனச்சேன்” ராஜேந்திரன் நக்கலாக சிரிக்க,
“அதெல்லாம் பேச வேண்டிய விதத்துல பேசி கரெக்ட் பண்ணிட்டேன்”
“என்ன இருந்தாலும் நீ வாசுகியை கல்யாணம் பண்ணி இருந்தா குடும்பத்துல மூத்த மாப்பிள்ளைனு அந்த குடும்பத்த ஒரு வழி பண்ணி இருக்கலாம். இப்படி கடைசி மாப்பிள்ளையா போய் நாம நினைக்கிறது செய்ய முடியுமா?”
“பார்க்கலாம் பா…” ரோஹன் பெருமூச்சு விட
“அந்த ஜாதக விஷயம்தான் இடிக்குது”
“ஹாஹாஹா… என் ஜாதகம் எந்த ஜாதகத்தோடும் பொருந்தும் அப்படி தயார் பண்ணி கொடுத்தருக்கேன். பொண்ணு பார்க்க வர ரெடியாக்குங்க” என்றவன் அலைபேசியை அனைத்திருந்தான்.
ரோஹன் தந்தையிடம் கூட கூறாது மறைத்தது வாசுகியை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதை அறிந்த உடன் அதை பற்றி விசாரிக்கச் சென்றவன் மந்த்ராவைக் கண்டு மையல் கொண்டதை பற்றியும், வாசன் பெண் பார்க்க செல்லலாம் என்று கூறியதும் அது மந்த்ரா இல்லையா என்று அவன் மனம் ஏங்கியதையும், அது அவள்தான் என்ற உடன் அவன் மனம் போட்ட குத்தாட்டத்தையும்தான்.
மந்த்ராவும் ரோஹானை பற்றி தான் சிந்தித்துக்கொண்டிருந்தாள். வாசன் வந்து “யாரையாவது காதலிக்கிறாயா?” என்று கேட்டதும் ஆடித்தான் போய் விட்டாள். இல்லை என்று அவசரமாக தலையாட்டியவளிடம்
“உனக்கு மாப்பிள்ளை பாத்திருக்கிறேன்” என்றால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று கூட தோன்ற வில்லை.
அதிர்ச்சி ஒரு புறம், ஆச்சரியம் ஒரு புறம். ஒருவாறு “அப்பாவிடம் பேசுங்க மாமா” என்று கூறினால்
“முதலில் மாப்பிள்ளையிடம் பேசு, பிடிச்சிருந்தா வீட்டில் பேசிக்கொள்ளலாம்” என்ற வாசன் ரோஹானை அழைத்து பேச வைப்பான் என்று மந்த்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சந்திராவை பெண் கேட்டு வந்தவன் பெயர் ரோஹன் என்று அறிந்திருந்தாலே! தவிர அவனை மந்த்ரா கண்டதில்லை. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன். முதலில் சொன்னது “வாசன் அண்ணா பொண்ணு நீங்கதான்னு சொல்லாம கூட்டிட்டு வந்துட்டாரு”
“அப்போ சொல்லி இருந்தா வந்திருக்க மாட்டானோ!” மந்த்ராவின் மனம் கேட்க, அது அவனுக்கும் கேட்டது போலும்,
“நீங்க நினைக்கிற மாதிரி இல்ல, என்ன பேசுறது என்று ரெடியாகி வந்திருப்பேன்”
“எக்ஸ்சாமா எழுத போறீங்க? அதான் வந்துட்டீங்கல்ல சொல்லுங்க” அவன் தடுமாற்றம் சிரிப்பாக இருக்க இவள் துடுக்குத்தனம் எட்டிப்பார்த்தது.
“என்ன இவ இப்படி பேசுறா? ஒருவேளை பிடிக்களையோ!” என்ற பார்வையோடு “உங்க அக்காவ நான் விரும்பி பொண்ணு கேக்கலைங்க, அவங்க பார்க்க அமைதியா, அடக்கமான பொண்ணா தெரிஞ்சாங்க, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருப்பாங்கன்னுதான், நானே! நேர்ல வந்து பொண்ணு கேட்டேன்”
“என்ன உளறுறான் இவன்” என்று மந்த்ரா பார்க்க,
“உங்க அக்கா லவ் பண்ணுற விஷயம் சத்தியமா எனக்கு தெரியல தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் பொண்ணு கேட்டு வந்திருக்க மாட்டேன்”
அப்பொழுதுதான் மந்த்ராவுக்கு அவன் யார் என்றே! புரிந்தது. மாமா எதுக்கு இவன மாப்பிள்ளையா கொண்டு வந்திருக்குறாரு? என்று மந்த்ரா யோசிக்க, அவளின் குழப்பமான முகபாவனையில் ரோஹன் அவளுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்ற முடிவுக்கே! வந்தான்.
ஒரு பெருமூச்சு விட்டவன் “சரிங்க உங்களுக்கு இஷ்டமில்லன்னா விடுங்க சந்திரா கல்யாணமாவது நல்ல படியா நடக்கட்டும், அதுக்கு உங்க அம்மா பிரச்சினை பண்ணாம இருக்கணுமில்ல, கொஞ்சம் இத பாருங்க” என்று வாசுகியை மூன்று பெண்களும் கண்டபடி பேசிய வீடியோவை மந்த்ராவுக்கு காட்ட வீடியோவை பார்த்து விட்டு மந்த்ரா அதிர்ச்சியடைந்தவள் பேசியது தன் அன்னைதானா என்று நம்ப முடியாமல் இருந்து விட்டாள்.
“ஆமா உங்கம்மாவ ஏன் சித்தினு கூப்பிடுறீங்க? உங்க அம்மாவ உங்க அப்பா கல்யாணம் பண்ணும் போது உங்க அக்காக்கு நாலு மாசம் தானே! அம்மானே! கூப்பிட சொல்லி கொடுத்திருக்கலாமே! உங்க அக்காக்கும் உங்களுக்கும் எந்த பாரபட்சமும் பாக்குறதில்லன்னு நீங்க நினைக்கிறீங்க, ஆனா அது உண்மையில்ல” ரோஹன் மீண்டும் பேச சுயநினைவுக்கு வந்தவள் விழித்தாள்.  
பூர்ணா எல்லாவற்றக்கும், எல்லார் மீதும் எரிந்து விழுவதால் இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. அதனாலயே! வாசுகியின் மீது இருக்கும் வெறுப்பின் அளவு யாருக்கும் தெரியாமலையே! போய் விட்டிருந்தது புரிந்தது. ரோஹன் காட்டிய வீடியோவை பார்த்ததும் பூர்ணாவுக்கு வாசுகி மீது அவ்வளவு வெறுப்பா? தங்கள் மீதும் வெறுப்பை கக்குவால்தான் இதற்கு எல்லாம் காரணம் அபர்ணா பெரியம்மா காதலித்து வீட்டை விட்டு சென்றது மாத்திரம் போல் தெரியவில்லை. என்ன இருந்தாலும் பூர்ணா பேசியது தப்பு.
வாசன் மாமா பார்த்த மாப்பிள்ளை என்பதால் ரோஹனிடம் எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் எதோ ஒன்று சரியில்லை என்று அவள் மூளையில் மின்விளக்கு எரிந்து அவளை எச்சரிக்கை செய்தது.
“அடியேய் மந்த்ரா நீ சயன்ஸ் டீச்சர்னு இப்படி ஐன்ஸ்டைன் ரேஞ்சுக்கு திங்க் பண்ணனுமா? அந்த ரோஹன் கெட்டவனா இருந்தா சித்திய வழி மறிச்சு மிரட்டி கல்யாணம் நடக்கும் போது பிரச்சினை பண்ணக் கூடாது இல்லனா வீடியோவை அப்பாக்கு காட்டுவேன்னு மிரட்டி அவன் கல்யாணத்த நடத்திக்கொண்டிருப்பான். இல்லையா? அப்படி பண்ணலையே! சந்திரா கல்யாணம் நல்ல படியா நடக்கணும் சித்தி பிரச்சினை பண்ணக் கூடாது அதே! மாதிரி வாசுகிக்கா.. கிட்டயும் சித்தி வாலாட்ட கூடாதுனுதானே! வீடியோவை எனக்கு காட்டி புரிய வச்சாரு” மனம் அவனுக்காக வாதிட ரோஹானை நிறையவே! பிடித்துப்போனது,
கூடவே! சொல்ல வேண்டியதை சொல்லியவன் ஆல் தி பெஸ்ட் சொல்லி விட்டு அவளிடம் விடைபெற்ற பொழுது அவன் முகத்திலிருந்த சோகம் இவளையும் தாக்கியதுதான் விந்தை
“ஹலோ கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க வந்துட்டு ஒன்னும் சொல்லாம போறீங்க?”
“என்ன சொல்லணும்?”
“பொண்ணு பாத்தீங்கள்ல புடிச்சிருக்கா இல்லையானு இங்கயே! சொல்லிட்டு போங்க? என் முடிவு உங்களுக்கு தெரிய வேணாமா?”
“அதான் வந்த உடனே! பார்வையாலே! ஒதுக்கிட்டீங்களே!” சோகமான குரலில் ரோஹன் சொல்ல
“இது என்னங்க வம்பா போச்சு? யார்னே தெரியாதவங்க பின்ன எப்படி பாப்பாங்களாம், சரி சொல்லுங்க என்ன பிடிச்சிருக்கா? இல்லையா?”
“எனக்கு பிடிச்சிருக்குங்க, ஆனா உங்களுத்தான் என்ன பிடிக்கல” விரக்தியாக சொன்னவன் நகர
“நான் சொன்னேனா? நீங்களாகவே! ஒரு முடிவுக்கு வரீங்க? எனக்கும் பிடிச்சிருக்கு, வீட்டுல வந்து பேசுங்க” அக்கணம் சொல்லி விட்டாள்தான். எந்த தைரியத்தில் சொன்னாள் என்று கூட தெரியவில்லை. சொல்லி விட்டு அங்கிருந்தால் தானே! ஓடியே விட்டாள். இப்பொழுது நினைத்துப் பார்த்தவளுக்கு சிரிப்பாக இருக்க தனக்கு தானே! வெகு நேரமாக பேசிக்கொண்டிருந்தவள் எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கே! தெரியவில்லை.
நாதன் வாசனை அழைத்து மந்த்ரா மற்றும் ரோஹனின் ஜாதகங்கள் பொருந்தி விட்டதாக கூறியதோடு,  இன்னும் பத்து நாட்களில் சந்திரா மற்றும் ஜெயமணியின் நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும் அன்றே பெண் பார்க்க வருமாறு ரோஹனின் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு தெரிவித்திருக்க, வாசனும் உடனே! ரோஹானை அழைத்து தெரிவித்தான்.
இரண்டு நாட்களுக்குப் பின் வாசனை அழைத்த ரோஹன் கடைக்கு வந்து வாசனை கையேடு இழுத்துச் செல்ல
“எங்க டா… கூட்டிட்டு போற? கடைல நிறைய வேல இருக்குடா” என்று கடிய
“உங்களுக்கு எப்ப வேல இல்லாம இருந்தது? சும்மா வாங்கண்ணா..” என்று இழுத்துச்சென்றது வாசனின் வீட்டுக்கு. அது வாசன் பிறந்து வளர்ந்த வீடு இப்பொழுது யாரோ வசிக்கும் வீடு.
பலதடவை அவ்வழியாக சென்றிருக்கிறான். மனம் வலிக்கும். வீட்டை நிமிர்ந்து பார்த்தால் தானே! இந்த வேதனை என்று அப்பக்கம் பாராமலையே! செல்ல முயல்வான். இருந்தாலும் கண்கள் முற்றத்தில் உள்ள மாமரத்தில் ஆசையாக படியும் சின்ன வயதில் எப்பொழுதும் மரத்தின் மேல்தான் இருப்பான். பழம் பறிக்க பழம் இருக்கும் பொழுது ஏறினால் பரவாயில்லை. இல்லாத பொழுதும் மரத்தின் மேல் தான் இருப்பான். பூனை குட்டி, குருவி கூடு, பட்டம் சிக்கி விட்டது, இப்படி அவனுக்கு மட்டும் ஆயிரம் காரணங்கள் கிடைத்து விடும்.
இன்று ரோஹன் வீட்டுக்குள்ளேயே இழுத்து செல்லவும் மனசெல்லாம் ஒருவித பதைபதைப்பு “நான் வரல” என்று ரோஹனிடமிருந்து கையை இழுத்துக்கொள்ள
“அட வாங்க ..ண்ணா… நம்ம வீடு இது” என்று ரோஹன் சொன்னதும் வாசன் அதிர்ச்சியாக அவனை புரியாது பார்க்க
“என்ன அண்ணா… பொண்ணு பார்க்குறதோட எல்லாம் முடிஞ்சிடுமா? கல்யாணம் வர எவ்வளவு வேல இருக்கு? நான் எங்கயோ அறை எடுத்து தங்கி இருக்கேன். எனக்கென்று யார் இருக்கா? மாப்ள வீடுன்னு நீங்கதானே! எல்லாம் பார்த்து கேட்டு செய்யணும். அதான் உங்க வீட்டு பக்கத்துல வீடு தேடினேன். அப்பா, அம்மா வந்து தங்க வீடு பார்க்க வேணாமா இந்த வீடு கிடைச்சது நல்லா இருக்கில்ல” என்றதும்
“இவன் தெரிஞ்சுதான் சொல்லுறானா? தெரியாம சொல்லுறானா?” ஒருகணம் குழம்பினான் வாசன்.
வாசன் குழம்பிக்கொண்டிருக்க, அதெல்லாம் ரோஹனின் கண்களுக்கு தெரியவில்லை. வாசனை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றவன் வீட்டை பற்றி புகழ, நொந்து விட்டான் வாசன்.
அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அவனுக்கு தெரியாதா? கத்த வேண்டும் போல் இருந்தாலும் ரோஹனுக்காக அமைதியாக அவனோடு சென்றவன் கடைசியாக அந்த வீட்டில் நடந்த சம்பவங்களும் கண்முன் வர இறுகிப்போனான்.
“அண்ணா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!” என்று ரோஹன் புதிராக ஆரம்பிக்க
“என்ன” என்று கண்களால் கேட்டான்! தவிர வாயை திறக்கவில்லை.
“கல்யாணம் முடியும்வரை நாம எல்லோரும் ஒரே வீட்டுல ஒண்ணா இருப்போம்!” ஆசையாக கண்கள் மின்ன கேட்டான் ரோஹன்.
“இல்ல ரோஹன் அது சரிவராது…” என்று வாசன் ஒரேயடியாக மறுத்து விட
“ஏன் ..ண்ணா… தம்பின்னு சும்மா வாய் வார்த்தையாதான் கூப்டியா?” சோகமான குரலில் கேக்க
“அறைஞ்சேன்னா… இது யார் வீடு தெரியுமா?” என்று கேட்ட வாசன் மொத்த கதையையும் சுருக்கமாக சொல்லி முடிக்க,
“அட இப்படி ஒரு ட்விஸ்ட்ட நான் எதிர்பார்க்கவே! இல்ல …ண்ணா…” என்றவன் தாடை தடவி யோசித்து விட்டு “இந்த வீட்டை நீங்களே! வாங்கிக்கோங்க …ண்ணா” என்று சொல்ல
“லூசா நீ” என்று வாசன் அவனை முறைத்துப் பார்த்தான்.
“என்ன ..ண்ணா.. ரொம்ப பாசமா பாக்குறீங்க?” ரோஹன் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க அதில் முகம் கனிந்த வாசன்
“இந்த வீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கோடி ரூபாக்கு வித்தோம்” ஆம் ரோஹனிடம் பணத் தேவைக்காக, வீட்டை விற்றதாகத்தான் கூறினானே! தவிர தன் கூடப் பிறந்தவர்களே! தன்னை ஏமாற்றி விட்டதாக கூறவில்லை. ஆனால் ராமநாதன்தான் அவனிடம் உண்மையை உளறி இருந்தாரே!
“அப்படி இருக்க இப்போ நீ வீட்டை எவ்வளவு ரூபாய்க்கு வாங்கி இருப்ப? என் கிட்ட எங்க அவ்வளவு காசு? காசு இருந்தா நான் என் கடைய விரிவு படுத்த பார்ப்பேனே! தவிர வீடு வாங்க யோசிக்க மாட்டேன்” என்றான் வாசன்.
“நான் வீட்டை ஒரு கோடி ரூபாய்க்குத்தான் வாங்கினேன். அவருக்கு என்ன அவசரமோ! வாங்கின விலைக்குத்தான் வித்தார். அப்போ அவரு எனக்கு பொய் சொல்லல, சந்தோசம்” என்ற ரோஹன் “அண்ணா.. நான் வீட்டை வாங்கினது கல்யாணத்துக்காக கல்யாணம் ஆனா கையோட நான் சென்னைக்கு கிளம்பிடுவேன். ஒன்னு வீடு பூட்டி இருக்க போகுது, இல்ல வாடகைக்கு விடணும். வாடகைக்கு விட எனக்கு விருப்பம் இல்ல. உங்கள வந்து தங்க சொல்லலாம்னுதான் ஒண்ணா இருங்கனு சொன்னேன். இது உங்க சொந்த வீடா போனதால இந்த வீட்டை நீங்களே! வாங்கிக் கொள்ளுறதுதான் சரினு எனக்கு தோணுது” ரோஹன் நீளமாக பேச
“காசு உங்கப்பனா கொடுப்பான்?” என்று கேக்க தூண்டிய மனதை அடக்கியவன் “என் கிட்ட அவ்வளவு பணம் இல்ல ரோஹன் புரிஞ்சிக்க, கல்யாணம்வரைக்கும் கூட இருக்கேன். இந்த வீட்டுல என்னால இருக்க முடியாது” என்றவன் விறுவிறுவென வெளியேறி இருந்தான்.

Advertisement