Advertisement

அத்தியாயம் 20
இதோ ஸ்ரீவத்சன் எமிலியோடு சந்தோசமாக கிளம்பி லண்டன் சென்று விட்டான். வழியனுப்ப அனைவரும் விமான நிலையம் சென்றதில் இருவருக்கும் ரொம்பவே சந்தோசமாக இருக்க, செல்லும் முன்பாக அலைபேசியில் ராமநாதனோடும், ரோஹானோடும் பேசிய ஸ்ரீவத்சன் எமிலியையும் ராமநாதனோடு பேச வைத்திருந்தான். வாசுகியை கட்டிக்கொண்டு எல்லாவற்றுக்கும் நன்றி கூறிய எமிலி ஆனந்தக் கண்ணீரோடு சிரித்தவாறே! விடைபெற ஸ்ரீவத்சனும் சந்தோஷமாகவே! விடைபெற்று சென்றான்.
“மா… இன்னக்கி என் பிரெண்டு லக்ஷ்மன் பர்த்டே போகணும்னு சொல்லி இருந்தேனே! மறந்துட்டீங்களா?” ஆதி விமான நிலையத்திலிருந்து வந்த உடன் ஆரம்பித்திருக்க
“ஏன்டா… எப்பவும் பகல்ல தானே! பார்ட்டினு போவ இன்னக்கி என்ன?” நித்யா கடிய
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. ப்ளீஸ் மா…” ஆதி கெஞ்ச
“என்டா உசுர வாங்குற? உன் அப்பா கிட்ட கேட்டு அவர் போக சொன்னா போ” நித்யா குரலை தாழ்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே! அங்கு வந்த ஆத்மநாதன்
“என்ன பிரச்சினை” என்று கேக்க 
“எதோ பார்ட்டியாம், அதுவும் நைட்டாம்” என்று நித்யா இழுக்க,
“டின்னர் அவுட் எல்லாரும் போலாம்னு பார்த்தேன். அப்போ உன்ன பார்ட்டில விட்டுட்டு நாம போறேம். வரும் போது உன்ன பிக்கப் பண்ணிக்கிறோம்” என்று ஆத்மநாதன் சொல்ல தாய் மகன் இருவருக்கும் ஆச்சரியமே!
இரவில் குடும்பத்தாரோடு எங்கும் செல்ல ஆத்மநாதன் விரும்புவதில்லை. பாதுகாப்பு கருதியே! இந்த முடிவு. பார்ட்டிக்கு நித்யாவோடு சென்றாலும் பத்து பதினொன்றுக்குள் வீடு வந்து விடுவான். தனியாக சென்றால்தான் நேரமெல்லாம் பார்ப்பதில்லை. அப்படிப்பட்ட தந்தை தான் செல்ல அனுமதி வழங்கியதோடு, அவர்களும் வெளியே! செல்கிறார்கள் என்றால் ஆச்சரியமில்லாமல் இருக்குமா?
சஹானாவைக் கேட்டால் நாளை காலையில் எக்ஸாம் இருக்கு அதனால் வர முடியாது என்று விட அக்ஷரா தூக்கம் வருது முடியாது என்று விட்டாள்.
“என்ன டி நீங்க ரெண்டு பேரும்” என்று நித்யா மகள்களை முறைக்க, வாசனும் தாங்களும் வரவில்லை. நாளை மதியம் ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதனாலும் அலைந்ததில் ரொம்ப டயடா இருக்கு என்று சொல்ல வாசுகியும் வேக வேகமாக தலையசைக்கலானாள்.
நித்யா அனைவரையும் ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க, “சரி வா நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்” என்று ஆத்மநாதன் கூற நித்யா வெளியே! செல்ல தயாராக செல்ல முற்படுகையில்
“சஹானா” என்று அழைத்த ஆத்மநாதன் “அப்போ இரவைக்கு என்ன சாப்பிடுவீங்க” என்று கேக்க
“தோசை மாவு ப்ரிஜ்ஜுல இருக்கு ஊத்தி சாப்பிடுவாங்க, பகல் சமைச்ச சாதம், கறி எல்லாம் இருக்கு, சப்பாத்தி மாவும் இருக்கு” என்று நித்யாவிடமிருந்து பதில் வரவும்
“உங்கம்மா உனக்கு பழைய சோத்த போட பாக்குறா” என்று மூத்த மகளின் தலையை தடவ தான் காண்பது கனவா என்று தந்தையை அவள் பாத்திருக்க, நித்யா உட்பட ஆதியும் ஆச்சரியமாக பார்களாயினர். 
ஆத்மநாதன்தான் குடும்பத்துக்கு சம்பாதித்து கொடுப்பவன் என்றாலும் குழந்தைகள் மூவரும் நித்யாவிடம்தான் எல்லா தேவைகளுக்கும் வந்து நிப்பார்கள். அவனும் காலையில் ஆபீஸ் போகும் டென்ஷன் என்று குழந்தைகளோடு நின்று கூட பேச மாட்டான். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தாலும் ஏதாவதொரு ஸ்போர்ட் சேனலில் மூழ்கி இருப்பான். வெளியே அழைத்து சென்றாலும் பெரிதாக பேச்சு வார்த்தை இருக்காது. குழந்தைகளின் விருப்பத்தைக் கூட கேட்காமல் அவனாக ஒன்றை ஆடர் செய்து வர வளைக்க, அதை குழந்தைகள் உண்ண வேண்டும். “இதற்கு எதற்கு வெளியே! வந்தோம். வீட்டிலையே! சமைச்சி சாப்பிட்டு இருக்கலாம்” என்று குழந்தைகள் நித்யாவிடம் பொரிந்துத்தள்ளுவார்கள். ஆகா மொத்தத்தில் ஆத்மநாதனுக்கும் குழந்தைகளுக்கும் நடுவே பெரிய ஆறே ஓடிக்கொண்டிருக்க பாலமாக நித்யாதான் இருக்கிறாள் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று அவனே! நெருங்கி வந்து விட்டான் இனி? 
“நாங்க எதுக்கு பழையத சாப்பிட போறோம். காசு கொடுத்துட்டு போங்க பிஸ்ஸா ஆடர் பண்ணா வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க போறான் அத சாப்பிடுவோம்” என்று அக்ஷரா சொல்ல
“நான் வாங்கி தரேன்” என்று வாசன் சொல்ல
அவனுக்கு கண்ணடித்த அக்ஷரா தந்தையிடமிருந்து காசை வாங்கிக்கொண்டிருந்தாள்.
நித்யா ஆத்மநாதன் ஆதி மூவரும் கிளம்பி சென்ற பின் வாசன் கதவை சாத்தி விட்டு திரும்பிய உடனே!
 “ஏங்க அண்ணி வெளிய போகலாம்னு சொன்னப்போ! வேணாம்னு சொன்னதுமில்லாம எதுக்கு கண்ணால முடியாதுனு சொல்ல சொன்னீங்க?” வாசுகி கணவனை முறைக்க,
தாடையை தடவியவாறு “ஹனிமூன் ட்ரிப் வந்துட்டு வெளிய சுத்திகிட்டு இருந்தா எப்பிடி டி? வீட்டு இருந்தா தானே! என்னவேனாலும் பண்ணலாம் அதான்” என்றவன் அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் வைத்துக்கொள்ள
“அட விடுங்க சஹானாவும் அக்ஷராவும் வந்துட போறாங்க” அவன் மனையாள் திமிறி விலக முயற்சிக்க
“சஹானா படிக்கிறா அக்ஷரா டீவி பாக்குறா, பிஸ்ஸா வரும் மாமா மேல கொண்டு வாங்கனு சொல்லிட்டுதான் டீவி பார்க்க போனா அதனால கீழ வர மாட்டா. நீ வாடி செல்லம் நாம இப்படி உக்காரலாம்” என்று மனைவியை இழுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான் வாசன்.
மருத்துவமனையிலிருந்து வந்த பின் வாய்மொழிகளை விட கண் பேசும் பாஷைகள்தான் இருவரிடமும் அதிகம் பேச வாசன் என்ன சொல்ல விழைகிறான் என்று வாசுகியும், வாசுகி என்ன சொல்கிறாள் என்று வாசனும் உடனே புரிந்துக்கொள்ளும் அளவுக்கு நெருங்கி இருந்தனர்.
கல்யாணமாகி பல வருடங்கள் புரிதலோடு வாழும் அந்நியோன்யமான தம்பதிகள் மட்டும்தான் கண்களால் பேசுவதை உடனே! புரிந்துக்கொள்ள முடியுமாம், சில வலிகள், வேதனைகளுக்கு கணவன் மனைவிக்கு அவரவரே! ஆறுதலாகவும், மருந்தாகவும் இருந்தால் ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு கண்களால் பேசிக்கொள்வார்கள் போலும்.
“சரி சொல்லுங்க, போய் இருந்தா அப்படியே! டில்லியையும் சுத்தி பாத்துட்டு வந்திருக்கலாமே!” என்று வாசுகி குறை பட
“நைட்டுல என்ன டி சுத்தி பார்க்க இருக்கு. மாமா கிட்ட எதோ மாற்றம் தெரியுது அதான் அவங்க ரெண்டு பேரும் மனம் விட்டு பேசட்டும்னு தனியா அனுப்பி வச்சேன்”
“ஆமாங்க, பசங்க வேற அந்த முழி முழிக்கிறாங்க, ஏன் அண்ணன் அப்படி இருக்காரு” வாசுகி யோசனையாக கேக்க
“ஒவ்வொருத்தரனும் வளர்ந்த விதம் அப்படி. பத்மா அத்த இப்படி இருந்தா புள்ளைங்க வேற எப்படி இருப்பாங்க? எதோ இவரு மட்டும் படிச்சி முன்னுக்கு வந்து குடும்பம்னு கொஞ்சம் ஒழுங்கா இருக்காரு”
“ஒழுங்காவா இருக்காரு” கணவனை முறைத்த வாசுகி “பத்மா அத்தைய பார்த்தாலே! தெரியுதே! அவங்க வளர்ப்பு எப்படி இருக்கும்னு. நித்தி அண்ணி மாதிரி ஒரு மனைவி கிடைச்சதாலையும் அண்ணன் நல்லவரா இருக்குறாருனு சொல்லுங்க” 
“ஏன்டி என்ன முறைக்குற? நான் என்ன பண்ணேன். கடிச்சிடுவேன் பாத்துக்க” என்று அவளை இழுத்து கன்னம் கடித்தவாறே “அது என்னவோ! உண்மைதான் நல்ல பொண்டாட்டி அமைஞ்சாலே! போதும் வாழ்க ஜாம்னு இருக்கும்” என்ற வாசனின் முகத்தில் பெரியதோடு புன்னகை மலர்ந்திருந்தது. அது நீ எனக்கு கிடைச்சிருக்கியே என்று சந்தோசமாக சொல்லியது.  
அவன் கையை கிள்ளியவள் ரகசியம் பேசுவது போல் “உண்மையிலயே! உங்க மாமாக்கு செட்டப்பெல்லாம் இருக்கா? பார்த்தா அப்படி தெரியலையே! அண்ணி மேல இப்படி பாசத்தை பிழியிறாரு. ஒருவேளை குற்ற உணர்ச்சியால் இப்படியெல்லாம் செய்யிறாரோ” கண்களை அகல விரித்து இரகசிய குரலில் கேக்க
அவள் நெத்தியில் முட்டியவன் “அவர் வீட்டுக்குள்ளேயே! இருந்து அவர பத்தியே! தப்பா பேசுறியா?” அடிக்குரலில் சீறுவது போல் கூற வாசுகி அவனை நன்றாக முறைத்தாள்.
“நான் எங்க பேசினேன். என்ன பேச வச்சிட்டீங்க, எனக்கென்னமோ! நித்தி அண்ணி தப்பா புரிஞ்சி இருக்காங்கனு தோணுது”
“தப்பாதான் புரிஞ்சிகிட்டு இருக்கா, தொழில்ல பிரச்சினை வந்தா புருஷன் பொண்டாட்டி மேல இல்ல காட்டுவான் அதான் மாமா வீட்டுக்கு வாறதில்ல, அது இதுனு கண்டதையும் மனசுல போட்டு குழப்பி இருக்க, அப்பொறம் பாக்குறதெல்லாமே! தப்பாதானே! தெரியும்”
தன் மனைவியிடம் எதையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் வாசனுக்கு இல்லை. குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வரக்கூடாதென்றும், ஒருவரை ஒருவர் ஒரு மாதிரி பார்வை ஏன் பார்த்து வைக்க வேண்டும்? ஆத்மநாதனின் மாற்றமும் கண்ணில்பட தன்னெஞ்சறிய பொய்யுரைக்கலானான். 
“ஆமா யாரோ தப்பா நினைக்க போய் என் புருஷன் கிட்ட அடி வாங்கினது நானு” வாசுகி நொடிக்க
சத்தமாக சிரித்தவன் “வாங்கினத திருப்பி கொடுத்தவளெல்லாம் நொந்த குரல்ல பேசக் கூடாது. அடிக்கு அடி சரியா போச்சு. கணக்கு வழக்கு கியர். மீண்டும் இத பத்தி பேசக் கூடாது” மிரட்டலாக வாசன் சொல்ல
“சரிங்க மளிகை கடைக்காரரே”  பவ்வியமாக வாய் பொத்தினாள் வாசுகி.  
பிஸ்ஸா வரவும் அதை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றவர்கள் சஹானாவுக்கும் கொடுத்து விட்டு அக்ஷராவோடு அமர்ந்து உண்ண அவள் எதோ ஒரு கார்ட்டூன் படத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஆமா மேடம் உங்களுக்கு எக்ஸாம்,  ஹோர்ம் ஒர்க் ஒன்னும் இல்லையா?” வாசன் கேக்க
அவனை முறைத்தவாறே “எங்க அம்மாவோட அண்ணன்னு இந்த கேள்வியை கேட்டுத்தான் நிரூபிக்கணுமா? சாப்பிடும் போது என்ன பேச்சு? அமைதியா சாப்பிடுங்க? பாட்டி சொல்லி கொடுத்திருக்காங்க இல்ல” மாமனை அதட்டியவள் தொலைக்காட்ச்சியில் கவனமாக வாசுகியால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
“டீவி பார்த்துக்கொண்டும்தான் சாப்பிடக் கூடாது” என்று வாசன் கூற அவனை முறைத்துப் பார்த்தாளே! ஒழிய பதில் சொல்லவில்லை.
“ஏங்க நீங்க சொன்னது உண்மைதான். சரியான கொடமொளகாவா இருக்கா, ஒன்னும் பேச முடியாது போல இருக்கே” வாசுகி முணுமுணுக்க,
“படம் பாக்குற மூட்ல இருக்கா, இல்லனா சூடா பதில் வரும், சரி நீ போய் டீ போட்டு எடுத்துட்டு வா” என்று வாசுகியை அனுப்பியவன் அக்ஷராவின் அருகில் அமர்ந்து “பிஸ்ஸா சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா சீஸ் மாதிரி ஆகிட்ட. நீ பொறந்தப்போ நான் தான் உன்ன மொத மொத கைல வாங்கினேன். குட்டியூண்டு அழகா கியூட்டா இருந்த, இப்போவும் அப்படிதான் இருக்க” எதை பற்றி பேசினால் அவள் கவனத்தை தன் புறம் இழுக்கலாம் என்று அறிந்திருந்த வாசன் அதை பேச
“நிஜமாவா? ரொம்ப அழுதேனா?” ஆர்வமாக கதை கேட்கலானாள் அக்ஷரா.
“ரொம்ப எல்லாம் இல்ல. கொஞ்சம் தான். கண்ண திறக்காம அழுத” என்றவன் உடனே! ஆத்மநாதனை பற்றி பேசலானான். “உங்க அப்பாவ பாரேன் ரொம்ப மாறிட்டாருல்ல. ஆதியை பார்ட்டிக்கு அனுப்ப மாட்டாருனு நினச்சேன் அவரே கூட்டிட்டு போறாரு” பதின் வயதில் இருக்கும் பெண் அக்ஷரா. வளரும் பொழுது அவள் மனநிலை எவ்வாறு இருக்குமோ என்ற அச்சம்தான் அவனுக்கு. அவள் என்ன நினைக்கிறாள் என்று அறிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் வாசன்.
“அப்பாக்கு எங்க மேல பாசம் இருக்கு. அத காட்டத்தான் தெரியல. நீங்களும் கடைய கட்டிக்கிட்டு அழாம அத்தைய அப்போ அப்போ வெளிய கூட்டிகிட்டு போங்க” தேனிலவுக்கு எங்கும் செல்லவில்லை என்று வாசுகி சொல்லும் பொழுது அவளும் அங்குதானே! இருந்தாள். அதை நியாபகத்தில் கொண்டு வந்தவள் பேச
“அதுசரி எனக்கே! அட்வைஸா?” அவள் பேசும் பொழுது ஆவுடையப்பனின் மறு உருவமாகவே! தெரிந்தாள். அந்த கம்பீரமும், ஆளுமையும் அப்படியே! அக்ஷராவிடம் இருந்தது. பத்மா மாதிரி ஒரு மனைவி, நாலு பசங்களும் நாலு விதம் என்று எப்படியோ! இருக்க வேண்டியவர் எப்படியோ! இருக்கிறார்.
“ஹலோ! யாரு தப்பு பண்ணாலும் யாருவேனாலும் யாருக்கு வேணாலும் அட்வைஸ் பண்ணலாம்”
“சரிங்க பாட்டிமா” வாசன் அவள் தலையில் செல்லமாக கொட்ட
“மாமா அம்மா கண்டிப்பா உங்க கிட்ட எதையும் மறைக்க மாட்டாங்கன்னு தெரியும். அப்பா பத்தி கவலை படாதீங்க ஊருல இருந்து வரும் முன்னாடியே! நாம பொங்கல் வைக்க கோவிலுக்கு போனோமே! அப்போ அய்யனார் சாமி முன்னாடி நின்னு இனிமேல் எந்த தப்பும் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்காரு” என்று சொல்ல
“இது எப்போ நடந்தது?” என்ற பார்வைதான் வாசனிடம்”
“அநேகமா இன்னைக்கி அம்மாகிட்ட உண்மைய சொல்லி மன்னிப்பு கேட்டுடுவார்னு நெனக்கிறேன். பெட்டு வச்சிக்கலாமா?” என்னதான் பெரிய மனிசி மாதிரி பேசினாலும் அவள் குழந்தை என்று நிரூபித்து விட
“எதுல பெட்டு வக்கிர? உன்ன…”
“என்ன பெட்டு?” என்றவாறு வாசுகி வர
“நமக்கு பொறக்க போறது பையனா, பொண்ணான்னு பெட்டுதான் வாசு…” என்று மனைவியை பார்த்து கண்ணடித்த வாசன் டீயை எடுத்துக்கொள்ள
“ஆமா அத்த” என்று மாமனை பார்த்து கண்சிமிட்டியவள் எனக்கு தூக்கம் வருது குட் நைட்” என்று அவ்விடத்தை விட்டு அகன்றாள் அக்ஷரா.
வாசுகி அமைதியாக இருக்கவும் கரு கலைந்ததை பற்றி நினைத்து வருந்துகிறாள் என்று புரிய
“இன்னும் குழந்தையே! உண்டாகள அதுக்குள்ளே பெட்டு காட்டுறீங்களா? இதுக்கெல்லாம் பெட்டு கட்டணும்னு ஒரு விவஸ்த இல்லையா? அவதான் சின்ன பொண்ணு? நீங்களும் அவ கூட சேர்ந்துக்கிட்டு” வாசுகி வாசனை வசைபாடுவது போல் வாசன் பேச வாசுகி சிரிக்க ஆரம்பித்தாள்.
 “ஆமா வாசு மொதல்ல குழந்தை உண்டாக என்ன வேல பண்ணணுமோ! அந்த வேலய பார்க்கலாம், அப்பொறம் பெட்டு கட்டலாம். நீ பேச வேண்டிய டயலாக்கையெல்லாம் நானே பேச வேண்டி இருக்கு” என்று வாசனும் சிரிக்க,
“நீங்க பேசிக்கிட்டே இருங்க வேல மட்டும் நடக்குற மாதிரி தெரியல. ஹனிமூன் வந்து ஊர் சுத்தினதும், திங்கிறதும், தூங்குறதும்தான் உங்க வேல” திரும்பவும் வாசன் வாசுகி போல் பேச
“எங்க நான் நினைக்காதத எல்லாம் பேசுறீங்க” என்று வாசுகி தடுக்க,
“ரொம்ப பார்த்தா என்னையே! கலாய்கிரியா? சரிதான் வாடி” என்றவன் கப்பை கீழே வைத்து விட்டு அவள் கையை பிடித்து தர தரவென இழுத்துக்கொண்டு அறைக்குள் செல்ல    
“என்னங்க பண்ண போறீங்க?” அவன் வம்பு செய்கிறான் என்று நன்றாகவே! புரிந்தது.
“நீ வா சொல்லுறேன்” என்று இழுத்துக்கொண்டு போனவன் அவளை கட்டிலில் அமர்த்தி ஒரு பேப்பரை கையில் கொடுக்க அதில் இருந்த செய்தி வாசுகியை மிரள வைத்தது.
“என்னங்க இது” அதை புரட்டிப் பார்த்தவள் புரியாது முழிக்க
“வீட்டுல இருந்தா கண்டதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்கிற அதான் உன்ன ஸ்கூல்ல சேர்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” வாய் மூடி சிரித்தான்.
“என்னது?” அதிர்ச்சியடைந்தவள் எழுந்து விட
“இது ஒரு நர்சரி கோர்ஸ் டி… ஆறு மாசம் கோர்ஸ் மூணு மாசம் ட்ரைனிங் இருக்கு. மொத்தம் ஒன்பதே மாசம் அப்பொறம் உனக்கு நர்சரி டீச்சரா வேல கிடைக்கும்”
“நா வேலைக்கெல்லாம் போக மாட்டேன்” ஒரேயடியாக வாசுகி மறுத்து விட
“சரி போகாத, கோர்ஸை மட்டும் படி.. இது ஒரு கம்பியூட்டர் கோர்ஸ் அதையும் படி” படிக்கிறதுல என்ன பிரச்சினை
“முடியாது, முடியாது முதல்ல என் பையன் எனக்கு வேணும் மத்ததெல்லாம் அப்பொறம்தான்”
“சரியான பிடிவாதக்காரியா இருக்கியே! சரி அப்போ ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம், நீ நர்சரி கோர்ஸ் ஸ்டார்ட் பண்ணும் போது குழந்தையும் வரும்”
கண்ணை சுருக்கி கணவனை பார்த்தவள்  “இப்படி பண்ணா என்ன? குழந்தை வரான்னு சேதி கேட்ட பின்னாடி எத்தன கோர்ஸுக்கு வேணாலும் போறேன்” என்றவளின் மனமோ! “மூணு வருசத்துல ரெண்டு புள்ளய பெத்தா வீடே நர்சரிதான் அதுங்கள பாத்துக்கவே! நேரம் பத்தாது. லூசு மாதிரி பேசிகிட்டு இருக்காரே!” 
“உசாராதான் டி இருக்க. அடுத்த மாசம் தொடங்கிடுவாங்களே!” என்று இவன் பதற 
“அப்படியா? அய்யய்யோ… என்னங்க நீங்க டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு சீக்கிரம் வாங்க, இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு” என்று கணவனின் கையை பிடித்துக்கொண்டு கட்டில் புறம் நகர்ந்தாள் வாசுகி.  
“அடங்க மாட்டியா? இப்படியெல்லாம் சொன்ன நீ கேக்க மாட்டியே!”
“அட வா மச்சான்”
“நீ என் பொறுமையா ரொம்பவே! சோதிக்கிற டி வாசு…”
அவள் செய்கைகள் ஒவ்வொன்றும் வாசனின் பொறுமையை தகர்த்தெறிய காதல் நெஞ்சம் ஊற்றெடுக்க, இழுத்தணைத்தவன் இதழோடு இதழ் பொருத்தி இருந்தான்.
மறுப்புகள் எதுவுமின்றி செல்ல சிணுங்கலோடு வாசுகி வாசனை தழுவிக்கொள்ள இது அவனுக்கு புது அனுபவமாக இருந்தது. காதலோடு நிறைந்த அழகிய கூடல் அங்கே! அரங்கேறிக்கொண்டிருந்தது.  
கல்யாணமான நாளிலிருந்து உடல் தேவையை தீர்த்துக்கொள்வதற்காக மனைவியை நாடுபவன் அந்த பின்னிரவில் கொஞ்சல் மொழிகளை எங்கிருந்து கோர்த்தெடுப்பான்? தேவை தீர்ந்தால் போதும் என்று தூங்குபவளிடம் சில நேரம் கெஞ்ச செய்வான் அவ்வளவுதான். தேவை தீர்ந்த பின் நிம்மதியாக உறங்கி விடுபவன் இதுவரை மனைவியின் ஆசா பாசங்களை அறிய முற்பட்டதில்லை.  
வாசுகிக்கும் இத்தனை நாட்களாக கூடல் ஒரு கடமையாகவே! தெரிந்ததே! தவிர ஆசையாக கணவனை நெருங்கினாள் இல்லை. குழந்தையின் இழப்பு கணவன் மனைவிக்கிடையில் நெருக்கத்தை அதிகப்படுத்தி இருக்க, வாசன் அவள் மீது வைத்திருக்கும் அன்பை நன்கு புரிந்துக்கொண்டவளுக்கு அவன் மேல் எக்கணம் காதல் வந்தது என்று தெரியவில்லை. சிந்தித்துப் பார்த்தால் பார்த்த நொடியே! வந்திருக்க வேண்டும் என்றுதான் எண்ணினாள். அதை உணரத்தான் அவளுக்கு இத்தனை மாதங்கள் தேவைப்பட்டிருந்ததோடு, அவள் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவமும் நடந்தேற வேண்டியதாக இருந்தது.
அவர்களின் வாழக்கை தாமரை இலைமேல் தண்ணீர் போல் போல்தான் இத்தனை நாள் இருந்து வந்தது. வாசன் தாமரை இலையாகி வாசுகியை அவனை விட்டு செல்லாது சிந்தாமல் சிதறாமல் பார்த்துக்கொண்டிருந்தான். மனதோடு மனம் கலக்காமல் ஒட்டாமல் உறவாடிக்கொண்டிருந்த இருவரையும் பிடித்து வைப்பது குழந்தையென்றால்? அந்த குழந்தை இழந்த பின்தான் மனம் விட்டு பேசி ஒருவரையொருவர் புரிந்தும் கொண்டிருந்தனர்.
வாசன் வாசுகியை கவனித்துக்கொண்டு விதத்தில் வாசுகி கணவனின் காதலை எவ்வாறு உணர்ந்து கொண்டாளோ! அவ்வாறே வாசுகி மருத்துவமனையில் படுத்துக்கிடந்ததை பார்த்ததும் அவள் தனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று வாசன் உணர்ந்து கொண்டான்.
குழந்தையின் இழப்பு என்றும் மனதில் நீங்கா கவலையை கொடுத்தாலும் அந்த குழந்தைதான் பெற்றோருக்கு அன்பை கற்றுக்கொடுத்த ஜீவன். கடவுளின் ஒவ்வொரு செய்கையின் பின்னாலும் வழுவான காரணம் இருப்பது உண்மையாயின் இந்த குழந்தை உருவாக்கியதற்கும் பின் இழந்ததற்கு பின்னால் இவர்களின் வாழ்க்கை தடம் மாறி காதல் என்ற படகில் பயணிக்க காத்திருக்கின்றது என்பதே! உண்மை.
கூடல் முடிந்து கணவனின் நெஞ்சில் தலை சாய்த்திருந்தவளோ! “என்ன மளிகை கடைக்காரரே! எங்க போச்சு உங்க சபதமெல்லாம்” என்று அவன் முகம் பார்க்க
“வர வர உன் வாய் ரொம்பதான் நீளுது, பொண்ணு பார்க்க வந்த போ ஒன்னும் ஒன்னும் ரெண்டுனு எண்ணி எண்ணி பேசின. இப்போ என்னனா வாயடிக்கிற, அது மட்டுமா? அப்போ அப்போ கையையும் நீட்டுற, கடைல போய் பொருள் வாங்குற மாதிரி பொண்டாட்டியையும் பார்த்து செலெக்ட் பண்ண ஏதாச்சும் வழி இருந்தா நல்ல இருக்கும் சாமி” முகட்டு கூரையை பார்த்து கும்பிட
“நீங்களும் தான் அய்யனார் செல கணக்கா வெரப்பா இருந்தீங்க, ஆனாலும் பச்சை மண்ணுங்க நீங்க”  அவன் நாடியை பிடித்து செல்லம் கொஞ்ச,
“மூஞ்ச அப்படித்தான் வச்சிப்போம், இல்லனா ஊருக்குள்ள எவன் மதிப்பான் நீயே சொல்லு”
சிரிப்பை அடக்க முடியாமல் அவன் தோளில் வலிக்க கடிக்க “ஐயோ…அம்மா… இரத்த காட்டேரி கிட்ட மாட்டி கிட்டேன் காப்பாத்துங்க” என்று கத்த
“ஐயோ கத்தி ஊரக் கூட்டாதீங்க. தூங்கிட்டு இருக்குற அக்ஷரா திடுக்கிட்டு எந்திரிச்சு வந்திட போறா, சஹானா வேற அடிச்சி பிடிச்சி வந்திடுவா” என்றவாறே வாசுகி வாசனின் வாயை பொத்த
அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் “தாங்க்ஸ் டி வாசு…இன்னக்கி நான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன்” என்று ஆத்மார்த்தமாக சொல்ல
“இருக்காதா பின்ன… பாப்பா வரப்போறா இல்ல” என்றவள் கண்ணடித்து சிரிக்க
“என்ன டி ஒரேயடியா அந்தர் பல்டி அடிக்கிற, நீ சொல்லுறத பார்த்தா பொம்பள புள்ளத்தான் வேணும்னு மாதிரி இருக்கு. அன்னைக்கும் நீ பாப்பானுதான் சொன்ன” மருத்துவமனையில் இருக்கும் பொழுது கூறியதை நியாபகத்தில் கொண்டுவந்தவன் யோசனையாக கேக்க  
“அதுவா.. எனக்கு உங்களை போலவே! ஒரு பையன்தான் வேணும் ஆனாலும் உங்களுக்கு பொண்ணுதான் வேணும்னு சொன்னதும் அன்னக்கி கோவிலுக்கு போனப்போ பொண்ணுதான் வேணும்னு வேண்டிகிட்டேன். நீங்க சொன்ன மாதிரி யாரு பொறந்தா என்ன? அடுத்த குழந்தைக்கு உடனே! ஏற்பாடு பண்ணிடலாம் மச்சான்.  ஆனா நம்ம பாப்பா…” என்றவள் குரல் கமறி இருக்க,
“ஷ்… வாசு… வேணாம் டி… சந்தோசமா இருக்குற நேரத்துல எதுக்கு மனச ரணப்படுத்திக்கிற, நம்ம பாப்பா எங்கயும் போகல நம்ம கிட்ட வந்துடுவா… சரியா”
அவள் தலை கோதியவாறே நெத்தியில் முத்தமிட்டவன் “ஆனாலும் என்ன வெறுப்பேத்த பையன்தான் வேணும்னு சொல்லுற உன்ன என்ன பண்ணலாம்” என்றவாறு அவள் உதடுகளை சிறையெடுக்க, 
அவன் விட்டதும் பதில் சொல்லலானாள் “பொண்ணு பொறந்தா உடனே! பையன பெத்துக்கலாம், பையன் பொறந்தா உடனே! பொண்ண பெத்துக்கலாம் இதுல என்ன இருக்கு ஸ்ரீநிவாசா…”   
“ஏய்..அழகா இருக்கு டி யாருமே என் பேர இப்படி கூப்பிட்டதில்ல”  வாசன் காதலாக சொல்ல
“பேர் சொல்லி கூப்பிடவா? இல்ல மாமா, மச்சான், அத்தான் இப்படி ஏதாச்சும் சொல்லி கூப்பிடவா?” வீம்புக்காகவே! இவள் கேக்க
“நீ மச்சானு கூப்பிட்ட பாரு அப்போ சும்மா ஜிவ்வுனு இருந்திச்சு. நைட்டுல மட்டும் அப்படி கூப்டு மத்த நேரத்துல நீ எப்படி கூப்பிட்டாலும் ஓகே தான் வாசு” பெண்ணவள் வெக்கம் வந்து அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.
வாசல் மணி அடிக்கவே! வெளியே சென்றவர்கள் வந்திருப்பார்கள் என்று வாசன் கதவை திறக்க செல்ல சஹானா கதவை திறந்துக்கொண்டிருந்தாள். உள்ளே வந்த ஆத்மநாதன் பேமிலி பேக் ஐஸ் கிரீமை அவள் கையில் கொடுக்க “தேங்க்ஸ் அப்பா” என்று சொல்வது வாசனின் காதில் விழ சிரித்துக்கொண்டவன்
“ஆதி எங்க நித்தி” என்று வாசன் கேக்க
“வீடு பக்கத்துல வரவும் ஆதி தான் கார் ஓட்டிட்டு வந்தான் பார்க் பண்ணிக்கிட்டு இருக்கான்” என்று நித்யா கூறவும் தங்கையின் முகம் பார்த்த வாசனுக்கு என்றுமில்லாத சந்தோசம் அவள் முகத்தில் தெரிய வாசனின் மனதில் நிம்மதி பிறந்தது.

 

Advertisement