Advertisement

அத்தியாயம் 18
கல்யாணம் முடிந்து மூன்று நாட்கள் ஊரில் தங்கியவர்கள் இதோ ஹனிமூனுக்காக ஸ்ரீவத்சன் எமிலியோடு ஆக்ரா செல்ல, அவர்களோடு வாசனும், வாசுகியும், டில்லிவரை விமானத்திலும் ஆக்ராவரை ட்ரைனிலும் தாஜ்மகாலுக்கு அருகே! ஒரு ஹோட்டலில் தங்கும் வசதியோடு ஹனிமூன் பேக்கேஜ் ரோஹனின் கல்யாண பரிசாக இரு ஜோடிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.
கல்யாணமன்று மதியம் ரமேஷும் கடையை திறக்க வேண்டும் என்று கிளம்பி இருக்க, புஷ்பாவும் பாண்டிராஜோடு கிளம்பி விட்டாள். நாதன் கிளம்பும் போது பூர்ணாவும் கிளம்ப ஆவுடையப்பனோடு பத்மா செல்ல குடும்பத்தாரோடு ராஜம் மட்டும்தான் இருந்தார்.
மதியம் சாப்பிட்டு விட்டு பாதி பேர் உறங்க செல்ல ஸ்ரீவத்சனும் எமிலியும் வாசலில் அமர்ந்து அக்ஷரா சஹானாவோடு பேசிக்கொண்டிருக்க,
“ஆமா நீங்க ரெண்டு பேரும் ஹனிமூனுக்கு எங்க போக போறீங்க?” என்று கேட்டவாறு ரோஹன் அமர கூடவே! வாசனும் அமர்ந்துகொண்டான்.
வாசுகி கொஞ்சம் பழங்களை துண்டு துண்டாக நறுக்கி இரண்டு பிளேட்டில் முள்கரண்டியோடு கொண்டு வந்தவள் ஒன்றை எமிலிக்கு கொடுத்து ஒன்றை சஹானா மற்றும் அக்ஷராவுக்கு கொடுக்க அவளை கேள்வியாக ஏறிட்ட முகங்களை பார்த்து
“இவங்க காலையிலையும் ஒழுங்கா சாப்பிடல, மதியமும் சாப்பிடல அதான்” என்று சொல்ல
“நம்ம சாப்பாடு அவளுக்கு ஒத்துக்கள, காரம்னு சொல்லுறா அண்ணி” நன்றியோடு வாசுகிக்கு கூறிய ஸ்ரீவத்சன் எமிலிக்கு ஆங்கிலத்தில் கூற
“தாங்க் யு வாசுகி” என்றவாறு அதை சாப்பிடலானாள் எமிலி.
“தாங்க் யு அத்த…” என்றவாறு சஹானா மற்றும் அக்ஷரா சாப்பிட
ரோஹன் “ஆமா நீங்க ரெண்டு பேரும் எங்க ஹனிமூன் போனீங்க?” என்று வாசனை கேட்க
“அவருக்கு கடைய கட்டிக்கிட்டு அழுகவே நேரம் பத்தல. இதுல எங்க வெளியூர் கூட்டிட்டு போவாரு. தாஜ் மஹால் பார்க்க கூட்டிட்டு போறேன்னு சொன்னவருதான் இந்த ஏழு  மாசமா நல்ல நாள் வரும் வர காத்துகிட்டு நிக்கிறாரு” வாசுகி கேலியாக சொல்வதை போல் ஆதங்கத்தை சொல்ல
வாசுகி ஹனிமூன் எங்கும் செல்லவில்லை என்றதும் “என்னண்ணா நீங்க?” என்று ரோஹன் கடிய வாசன் அவன் நிலமையை கூற “ஒன்னும் பேச வேணாம் என் கல்யாண பரிசா ரெண்டு ஜோடியும் ஹனிமூன் போயிட்டு வாங்க உங்க கடைய நான் பாத்துக்கிறேன்” என்று விட வாசன் மறுக்க முன் வாசுகிதான் மறுத்து விட்டாள்.
அவளை ஒருவழியாக சென்டிமெண்டாக பேசி சம்மதிக்க வைத்தவன், ராமநாதனையும் தானே! வீட்டிலிருந்து பார்த்துக்கொள்வதாக வாக்களித்து இவர்களை தேனிலவுக்கு அனுப்பி வைத்திருந்தான்.
விமானம் ஏறும் போது கூட வாசன் சொன்னதுதான் “என்னால் செலவு செய்ய முடியாமல் வாசுகியை அழைத்து செல்லாமல் இருக்க வில்லை. கடையை விட்டு எங்கும் செல்ல முடியாது என்பதுதான் உண்மை. இதற்குண்டான செலவ நான் கொடுத்துடுறேன்”
“என்னண்ணா நீங்க என்ன உங்க தம்பியா ஏத்துக்கொண்டீங்க இல்ல. உங்களுக்காக இத கூட செய்ய மாட்டேனா? இல்ல செய்ய உரிமை இல்லையா? ஒன்னு பண்ணுங்க என் கல்யாணத்துக்கு பிறகு  ஹனிமூன் செலவை நீங்க பாத்துக்கோங்க” வாசன் பலதடவை கூறியதால் வேறு வழியில்லாது ரோஹன் இவ்வாறு கூற
“கல்யாணம் பண்ண பிறகுதான் டா.. ஹனிமூன் போவாங்க, பின்ன தனியாவா போவாங்க? முதல்ல கல்யாணம் பண்ணுற வழிய பாரு” என்று வாசன் கேலி செய்ய
“அதுக்கு அண்ணன் நீங்கதானே! பொண்ணு பார்த்து இந்த தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்” நெளிந்தவாறு ரோஹன் சொல்ல
“நான் பாக்குற பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?” யோசனையாகவும் எதிர்பார்போடும் வாசன் கேக்க
“நிச்சயமாக” என்று உறுதியோடு கூறினான் ரோஹன்.
அவன் தோளில் தட்டிய வாசன் “ஹனிமூன் போயிட்டு வந்து உன் கல்யாண வேலைய பாக்குறதுதான்டா என் மொத வேல” என்று சொல்ல சிரித்து வைத்தான் ரோஹன்
விருந்து என்று சத்யா அழைக்க, நித்யா குடும்பம் மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தமையாலும், ஸ்ரீராம் குழந்தைக்கு உடம்பு முடியாததால் வேறொரு நாள் வருகிறோம் என்றதனாலும், வாசனும் எதோ ஒரு காரணத்தை கூறி மறுத்து விட,
யாருமே வரவில்லை என்றதும் ஸ்ரீவத்சனும் மறுத்து விட “நித்தியாகா… சொல்லித்தான் எங்க வீட்டுக்கு வராமல் இருக்கியா?” அதற்கும் ஒரு பிரச்சினையை சத்யா கிளப்ப, “என்னடா.. இது வம்பு விருந்துக்கு செல்லவில்லையாயின் வீண் பிரச்சினை வந்து விடும் போல இருக்கே!” என்று எமிலியும் அவனும் மாத்திரம் அங்கு சென்றிருக்க, காதில் இரத்தம் வரும்வரை சகோதர்களை பற்றி குறை சொல்லி அனுப்பி இருந்தாள் சத்யா.
ஸ்ரீராம் வீட்டை விற்றதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அண்ணன் கல்யாணமான பிறகு மாறி விட்டான், நித்யா, ஆத்மநாதன் முதல் அவள் மூன்று குழந்தைகள்வரை குறை பேச ஸ்ரீவத்சனுக்கு ஏன் டா.. வந்தோம் என்றானது.
எதுவும் பேசாமல் அக்கா சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்து விட்டு வந்தவன் யாரிடமும் எதுவும் கூறவுமில்லை.
புஷ்பா…., பத்மா, நாதன் என்று அனைவரும் விருந்துக்கு அழைத்தும் எங்கும் செல்ல ஸ்ரீவத்சன் விரும்பாமல் நேரமின்மையை காரணமாக்கி திரும்ப வந்தால் வருவதாக கூறிவிட்டான்.
அதன்பின் தேனிலவு பயணத்துக்கான ஆயத்தம் செய்தார்கள். நித்யா குடும்பமும் இவர்களோடுதான் விமானத்தில் டில்லி பயணமானார்கள் அவர்கள் வீடு செல்ல இவர்கள் ஆக்ரா சென்றிருந்தனர்.
யமுனா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆக்ரா நகரமானது உத்தர பிரதேசத்தில் நான்காவது அதிக மக்கள்தொகையை கொண்ட நகரமும் கூட. மழைக்காலங்கள் ஆக்ராவில் கணிசமானவை என்றாலும் இவர்கள் வந்த காலநிலையோ! இலேசான குளிருடன் வெயிலடிக்கும் காலநிலை என்பதால் வியர்வை வழியாமல் சுற்றிப் பார்க்க இதமாக இருந்தது.
வந்த மறுநாளே! தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க ஆயத்தமானார்கள் நால்வரும். காலை உணவை உண்டவர்கள் சாவகாசமாக அறையை விட்டு வெளியே! வர காலை பதினொன்று தாண்டியிருந்தது.
ஸ்ரீவத்சன் ஜோடி ட்ரீகோட் பேண்ட் மற்றும் டீஷர் அணிந்து கழுத்தில் கேமரா மற்றும் ஒரு பையோடு தயாராகி வர, வாசன் கால்ச்சட்டை மாற்றும் ஷார்ட் அணிந்து வாசுகி சுடிதாரில் வந்திருந்தாள்.
இது ஷஹானாவின் ஏற்பாடு. வாசுகி ஆக்ரா செல்ல தனக்கு நல்லதாய் சில சேலைகளையும், வாசனுக்கு வேட்டி சட்டையையும் பயணப்பையில் அடுக்குவதைக் கண்டு “என்ன இது? அங்க போய் இதயா? உடுத்த போறீங்க? இது சரி பட்டு வராது, எங்க ரோஹன் சித்தப்பா…” என்றவள் இவர்களை இழுத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றவள் பயணத்துக்கு தேவையான துணிகளை வாங்கிக் குவித்தாள்.
வாசுகி இதெல்லாம் நான் போட மாட்டேன் என்று அடம்பிடிக்க, வாசனும் போடுவதாக ரோஹன் கூற, பலதடவை அவனிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்ட பின்தான் சரியென்று ஒத்துக்கொண்டாள்.
“வாசு… என்னடி.. வர வர சிட்டி பொண்ணா மாறிக்கிட்டு வர” வாசன் கிண்டலடித்தவாறே! அவள் கைகோர்த்து நடக்க,
“ஆ.. நீங்க மட்டும் கோட் சூட் போட்டு கார்ல வந்து ஊருக்குள்ள இறங்கிப் பாருங்க அப்படியே! தளபதி மாதிரி இருப்பீங்க. ஊருக்கண்னு உங்க மேலதான்” இவளும் கிண்டல் செய்ய ஸ்ரீவத்சன் ஜோடியும் இவர்களோடு சேர்த்து நடக்கலாயினர்.
வாசன் ஊருக்குள்தான் வேட்டி சட்டையில் திரிவான். டில்லி செல்வதென்றால் கல்ச்சட்டைதான் போடுவான். அது வாசுகிக்கி தெரியாதே! அவன் முதல் முறையாக போடுவதாக எண்ணி இவள் பேச, அவனும் எதுவும் கூறாது சிரித்து வைத்தான்.
தாஜ்மகால் வெள்ளை பளிங்குகளால் முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மகாலுக்காக கட்டப்பட்ட கல்லறையாகும். இதில் ஷாஜகானின் கல்லறையையும் கொண்டுள்ளது. ஒரு மசூதி மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை ஆகியவை அடங்கும், மேலும் மூன்று பக்கங்களிலும் வளைந்த சுவரால் அமைக்கப்பட்ட சாதாரண தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே நுழைந்த பொழுதே எமிலி போட்டோ எடுக்க ஆயத்தமாக வாசுகி சிலையாகி அப்படியே! நின்று விட்டாள். 
அவளை உலுக்கிய வாசன் “ஏய் என்ன டி..” என்று கேக்க
“என்ன அழகு என்ன அழகு எத்தனை சினிமால பாத்திருக்கேன். நேர்ல பாக்குறதெல்லாம் ஒரு வரம் பா… சே… ஷாஜஹான் பெரிய தப்பு பண்ணிட்டாரு”
வாசன் புரியாது “என்னடி சொல்லுற?”
“மும்தாஜ் சாகுறவரைக்கும் இருந்து தாஜ் மஹால கட்டி இருக்குறாரு உசுரோட இருக்கும் போது கட்டி இருந்தா அவங்க பார்த்து சந்தோச பட்டிருப்பாங்க இல்ல” சோகமான குரலில் சொல்ல
சத்தமாக சிரித்தவன் “என் அறிவுக்கொழுந்தே! இது கல்லறை டி செத்த பிறகுதான் கட்டுவாங்க, உசுரோட இருக்கும் போது கட்டி இருந்தா அந்தம்மா கோபிச்சி கிட்டு அவங்க அப்பா வூட்டுக்கு போய் இருப்பாங்க” என்று கிண்டல் செய்ய
“ஐயே!… கல்லறைனா  சுடுகாட்டுல இருக்குற மாதிரி கட்டினா போதாதா? தோட்டம், நீர்வீழ்ச்சி, மண்டபம்னு மாளிகை மாதிரி கட்டணுமா? அதுக்கு ஒரு மாளிகையை கட்டி பரிசா கொடுத்திருக்கலாமே! இத கட்டினது மும்தாஜுக்கு தெரியவே தெரியாது. இதுவே! ஒரு மாளிகையை கட்டி கொடுத்திருந்த காதல் மாளிகைல வாழ்ந்து முடிஞ்ச சந்தோஷத்துல மேல போய் சேர்ந்திருப்பாங்க” வாசுகி நொடித்துக்கொள்ள,
“வாஸ்தவம்தான். இருக்கும் போது மும்தாஜுக்கு சொன்ன காதல அவங்க இல்லாத போ உலகத்துக்கு சொல்ல நெனச்சாரு போல ஷாஜகான். அதான் இன்னைக்கி வரைக்கும் தாஜ் மஹால் நிமிர்ந்து நிக்குது” வாசன் சொல்ல
“இருக்கும், இருக்கும் உலகின் ஏழு அதிசயங்கள்ல தாஜ் மஹாலும் ஒண்ணுனு இன்னைக்கி நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்து மட்டுமில்லாம பார்வையிட இவ்வளவு பேர் வராங்களே! இங்கயே! இருந்தா எப்படி வாங்க பக்கத்துல போய் பார்க்கலாம்” வாசனின் கையை பிடித்து இழுக்க,
“அடிப்பாவி…” என்று புன்னகைத்துக் கொண்டவன் சேர்ந்து நடக்க எமிலி அவர்களை தாஜ் மஹாலின் முன்னால் உள்ள நீர்த்தொட்டியின் முன்னால் நிற்க வைத்து வித விதமாக புகைப்படம் எடுத்தாள். அவர்களும் வித விதமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் முன்னே நடந்தனர்.    
பாரசீக வடிவமைப்பிலான பளிங்கு கல்லறையை வியந்து பார்த்தவாறு ஷாஜஹான் மும்தாஜின் காதல் வரலாற்றையும் பேசியவர்கள் தெற்கில் இருந்த தோட்டம், பளிங்கு மொட்டை மாடி மற்றும் மத்திய நீரூற்றுடன், வடக்கே ஒரு மணற்கல் மேற்கில் ஒரு மசூதி மற்றும் கிழக்கில் ஒரு சந்திப்பு மண்டபம் என அனைத்தையும் பார்வையிட்ட பின்னர் அறைக்கு செல்லும் வழியில் மதிய உணவையும் முடித்துக்கொண்டு திரும்பியிருந்தனர்.
“அவ்வளவுதானா?” போட்டுக்கொண்டு போன நகைகளை கழற்றியவாறு வாசுகி கேக்க
“என்ன அவ்வளவுதானா?” கையிலிருந்த வாட்சை கழற்றிய வாசன் அவளை திரும்பிப் பார்த்தான்.
“ஹனிமூன் வந்து தாஜ் மஹால் பார்த்தோம் ஒரு டூ-த்ரீ ஹவர்ஸ்குள்ள பார்த்து முடிச்சிட்டோம். அப்போ ஹனிமூன் ட்ரிப் முடிஞ்சிருச்சா?” என்ன இது மூன்று நாள் தேனிலவுக்கு வந்து மொத நாளே! இப்படி சீக்கிரம் முடிஞ்சிருச்சே! என்ற ஆதங்கத்தில் வாசுகி பேச
கையை உதறி அவள் கேட்ட விதத்தில் வாசனுக்கு சிரிப்பு வர “ஹனிமூன் ட்ரிப்ல ஊர் சுத்தவா வராங்க ரூம்லதான் டி வேலையே! இருக்கு” என்றவன் அவளை நெருங்க
“கிட்ட வராதீங்க அங்கேயே! நில்லுங்க, என்ன இது பட்ட பகல்ல” திகிலடைந்தவளாக பின்னாடி அடியெடுத்து வைக்க,
“அன்னைக்கி ராத்திரி நடந்தத கொஞ்சம் நெனச்சு பாருங்க அம்மணி…” என்றவன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்ள வாசுகி கீழுதட்டை கடித்துக்கொண்டு கையை பிசையலானாள். 
பத்மா, புஷ்பா, பூர்ணா மூவரும் பேசியது வாசுகியின் காதில் விழுந்த போது வாசன் அவர்களை திட்டியதும் சமாதானமான அவள் மனது இரவின் தனிமையில் பலவகையாக சிந்தித்து குழம்பி அலைக்கழித்து தூக்கம் வராமல் உருண்டுகொண்டிருந்தவள் வாசன் அறைக்குள் நுழைந்ததை அறியவில்லை.
அவள் அருகில் வந்து படுத்துக்கொண்டவன் அவள் இடையில் கைபோட்டு அணைத்துக்கொள்ள மறுகணம் அவன் புறம் திரும்பியவள் அவன் இதழோடு இதழ் பொறுத்த அதிர்ச்சியடைந்தவன் ஆழ்ந்து அனுபவிக்கலானான்.
இந்த ஏழு மாத கல்யாண வாழ்க்கையில் வாசுகி வாசனை நெருங்கியது இதுதான் முதல் முறை “என்ன உலக அதிசயமா இருக்கு, இந்த அத்தைங்க பேசின பேச்சுக்கு ரிஎக்ஸன் இப்படி இருக்கோ!” என்று வாசன் நினைக்கும் பொழுது அவன் மனைவிக்கு முத்தம் மட்டும் போதவில்லை என்று புரிய அவளை தன்னைடமிருந்து பிரித்தவன் கேள்வியாக ஏறிட்டவளின் தலை கோதியவாறே! “இப்போதாண்டி உடம்பு தெறிருச்சு இன்னும் ஒரு வாரம், பத்து நாள் போகட்டும்” என்று சொல்ல
“முடியாது முடியாது எனக்கு இப்போவே! பாப்பா வேணும்” என்று அவனை மீண்டும் முத்தமிட முயல
“எதுக்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கணும்னு ஒரு விவஸ்த்தையே! இல்லையா? நான் ஒதுங்கி இருந்தாலும் நீ இருக்க விட மாட்ட போல இருக்கே!” என்றவன் அவளை அணைத்துக்கொண்டு “நெஜமாலுமே ரொம்ப டயடா இருக்கு டி. அதான் இன்னும் ரெண்டு நாள்ல ஹனிமூன் போறோமில்லை ஹனிமூன் போய் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்ன நான் சொல்லுறது புரியுதா? அங்க போய் நம்ம பாப்பாவை திரும்ப கொண்டு வார வேலைய பார்க்கலாம் சரியா? இப்போ தூங்கு” என்று அவள் நெற்றியில் முத்தம் வைக்க சமாதானமடைந்தவளாக கணவனை கட்டிக்கொண்டு உறங்கியும் போனாள் வாசுகி.
வேலை செய்து கொண்டிருப்பவளை சீண்டுவதற்காகவே! வியர்வையை துடைக்கிறேன் பேர்வழி என்று முத்தமிடுவதும், சில்மிஷங்களை செய்தவன்தான். அது மனைவியின் மேல் புதிதாய் பூத்த காதலும், அக்கறையும் சேர்ந்து அவனை அவளின் பால் ஈர்த்து சென்றது என்றால் மிகையில்லை. அதற்காக ஒரேயடியாக அவள் உடல்நிலையை மறந்து அவள் உடலை காயப்படுத்த வாசன் நினைக்கவில்லை.  மற்ற நாட்கள் என்றால் வாசுகி சமாதானம் அடைந்திருப்பாளோ! என்னவோ! கணவனின் சமீபகால செயல்களும், இணக்கமும் அவன் சொன்னதை உடனே! ஏற்றுக்கொள்ள வைத்திருந்தது.     
வாசனுக்குத்தான் தூக்கம் வர வில்லை. தான் மட்டும் அங்கு வரவில்லையென்றா. அவர்கள் பேசியதை கேட்டு இவள் மனம் எவ்வாறெல்லாம் பாடுபட்டிருக்கும். அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது விட்டு சொல்லியுமிருக்க மாட்டாள். “கல்யாண வேலையெல்லாம் பார்த்து டயர்டுல படுத்திருப்பானு பார்த்தா கண்டதையும் யோசிச்சிகிட்டு இருக்கா, இவ இப்படி இருந்தா… திரும்ப பிரக்னன்ட் ஆனாலும் குழந்தையை நெனச்சே! மனஅழுத்தம் அது இதுனு வந்துடுமே!” கவலையாக மனையாளின் முகம் பார்த்திருந்தான் வாசன்.
“குழந்தையும் முக்கியம்தான் அதைவிட அவளின் மனநிம்மதி முக்கியம். அவ வீட்டு பிரச்சினையை சரி பண்ணின ஓரளவுக்கு சரியாவானு பார்த்தா இந்த அத்தைங்க கண்டதையும் பேசி திரும்ப குழந்தையை பத்தி விதைச்சிட்டு போய் இருக்காங்க இவ இத நினச்சியே! பழைய படி ஆவாளே! மொதல்ல அந்த பொம்பளைங்கள வீட்டுல சேர்க்க கூடாது”
 தேன்நிலவுக்கு வருவதற்கு முன்பாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் ராஜலக்ஷிமியை சந்தித்தவன் வாசுகிக்கி கரு கலைந்ததையும், அவள் கோப்பையும் கொடுக்க, அவள் தற்போது எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை துண்டில் பார்த்தவர் குழந்தை எதிர்பார்பதால் அவை முடிந்த பின் வேறு சில மாத்திரைகளை எடுக்குமாறு எழுதிக் கொடுத்தவர் சில ஆலோசனைகளையும் வழங்கி ஆறுதலும் கூறி வாசனை அனுப்பி வைத்தார்.
மருத்துவரின் ஆலோசனைபடி மனைவியை நெருங்க அவனுக்கு எந்த தடையும் இல்லை. கல்யாண வேலை என்று அதிக வேலைகளை இழுத்துக்கொண்டவள் ஓய்வில்லாது இருக்கிறாள் ஒருவாரம் பத்து நாள் போகட்டும் என்றது கூட அவளை எண்ணித்தான். ஆனால் அவன் மனையாளின் அவசரம் அவனின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது.
“என்ன பொண்டாட்டி நியாபகம் வந்திருச்சா?” வாசன் கிண்டலாக கேட்க
“நீங்க தானே! ஒரு வாரம் பத்து நாள் போகட்டும்னு சொன்னீங்க?” முழித்தவாறே பதில் சொன்னவள் “நடந்ததுல என் காலு ரொம்ப வலிக்குது நான் தூங்க போறேன் பா..” என்று கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள,   
 “அதுவும் சரிதான் இப்போ தூங்கினாதான் ராவைக்கு கண் முழிச்சு வேல பார்க்க முடியும்” தனக்கு சொல்வது போல் சத்தமாக சொல்லியவாறே குளியலறைக்குள் புகுந்துக்கொள்ள வாசுகிதான் செய்வதறியாது நின்றாள்.
அன்று ஏதோ அந்த பெண்கள் பேசியதன் தாக்கம் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கணவனை நெருங்கி இருந்தாள். அதை நியாபகத்தில் வைத்துக்கொண்டு கணவன் இம்சிப்பான் என்று அவள் கனவா கண்டாள்.
“வாசு உன் புருஷன் ஓவரா பண்ணுறான் டி…” தனக்கு தானே! பேசிக்கொள்ள
“புள்ள பெத்துக்கணும்னா நீ உன் புருஷன் கிட்டாதான் கேக்கணும் பின்ன பக்கத்துக்கு வீட்டுக்காரன் கிட்டயா கேக்க முடியும்” மனசாட்சி கேலி செய்ய
“ஆமா வந்ததுல இருந்தே! பேசி கிட்டு இருக்கிறாரே தவிர செயல்ல ஒண்ணத்தையும் காணோம்” நொடித்துக்கொண்டவள் இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.
வாசன் குளியலறையிலிருந்து வரும் பொழுது வாசுகி தூங்கி இருக்க, “தலையை வச்ச அடுத்த செக்கன் இவளுக்கு மட்டும் எப்படித்தான் தூக்கம் வருதோ! கொடுத்து வச்சவ, சுடிதார்ல செம்ம அழகாத்தாண்டி இருக்க, ஆனாலும் சேலயில அத விட அழகா இருக்க, இப்படி எல்லாத்தையும் மனசுல போட்டு பூட்டி வச்சிகிரியே! வாய தொறந்து சொன்னா முத்து உதிர்ந்திடும் பாரு, அப்பொறம் கண்டடையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்கிற, உன்ன தனியா விட்ட தானே! இப்படி பண்ணுவ? உன்ன ஏதாச்சும் பண்ணனும் டி. என்ன பண்ணலாம், ஒரு வழி பிறக்காமலையா போகும் பார்க்கலாம்”
“எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் வாசு, நீ சொல்லுற மாதிரி உன்ன எங்கயோ பாத்து பிடிச்சி அப்பொறம் தேடி வந்து கல்யாணம் பண்ணனும் என்று இல்ல. பார்த்த நொடியிலையே! உன்ன எனக்கு பிடிச்சிருந்தது. உன்ன கண்கலங்காம பார்த்துணும்னு தோணினது நிஜம். அதெல்லாம் கல்யாணம் பண்ணி பண்ணிக்கிட்டு இருக்கேன். என்ன வார்த்தையால சொல்லத்தான் தெரியல டி. உனக்கு என்ன எவ்வளவு பிடிக்கும்னு தெரியலையே!” தூங்கும் மனையாளின் முகத்தை பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்த வாசன் அவள் முகம் முழுவதும் சின்ன சின்ன முத்தங்கள் வைக்க வாசுகி தூக்கத்தில் சிணுங்கலானாள்.  .   
இரண்டாவது நாள் ஆக்ரா கோட்டை மற்றும்  இதிமாத்-உத்-த உலாவின் கல்லறையை பார்வையிட சென்றவர்கள் அக்பரின் கல்லறையையும் பார்வையிட்டு ஆக்ராவின் கடை வீதிகளில் சுற்றித் திரிந்து பளிங்கு பொறிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் செய்யும் சில குடிசை தொழில்களையும் பார்வையிட்டு, நினைவுச் சின்னமாக சில பளிங்கிலான கைவினை பொருட்களையும் வாங்கிக்கொண்டு, கடை வீதிகளிலையே! உணவுகளையும் உண்டவாறே! அன்றைய நாளை கழித்தவர்கள் அறைக்கு வர இரவானது.
அறைக்குள் நுழையும் பொழுதே! வித்தியாசமான மின் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்க, எதோ ஒரு மாய உலகத்துக்குள் நுழைவது போல் இருந்தது இருவருக்கும். இது தங்களது அறைதானா? என்ற சந்தேகமும் வர அறை எண்ணை ஒரு தடவைக்கு இரண்டு தடவை மீண்டும் மீண்டும் சரி பார்த்து விட்டே அறைக்கு நுழைந்தனர் வாசனும், வாசுகியும்.
ஹனிமூன் சூட் என்பதால் அறை கொஞ்சம் வித்தியாசமான அலங்காரத்தில்தான் இருக்கும். காலை ஒரு தடவை மாலை ஒரு தடவை அறையை ஒழுங்கு படுத்துவார்கள். முதல் நாள் தாஜ் மகால் சென்று வந்த பொழுது மாலை ஒழுங்கு படுத்த வரவா என்று அலைபேசி வழியாக தொடர்பை ஏற்படுத்தி கேட்டிருக்க, வாசுகியியும் தூங்கிக் கொண்டிருப்பதால் வாசன் மறுத்து விட்டான். சரி என்று கூறி இருந்தால் நேற்றும் இவ்வாறுதான் ஒழுங்கு படுத்தி இருந்திருப்பார்களோ! என்ற எண்ணம் வாசனுக்கு தோன்ற நேற்றைய பொழுதை வீணாடுத்து விட்ட குற்ற உணர்ச்சிதான் எழுந்தது.
அறை அவ்வளவு ரம்மியமாக அலங்கரிக்கப்பட்டிருக்க, காதலிக்க ஏற்ற பொழுதாக மனநிலையை மாற்றியமைக்கும் விதமாக இருந்தது.
“ரொம்ப அழகாக இருக்கு” வாசுகி வியந்து கூற,  அவளை காதலாக பார்த்த வாசன் பதில் ஏதும் கூறவில்லை.
கணவன் எந்த பதிலும் சொல்லவில்லையே! என்பது கூட அவள் கவனத்தில் இல்லை. துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.
அவளின் உருவம் மறைந்த பின்தான் வாசன் என்ற சிலைக்கு உயிரே வந்தது.
“ஹா… இப்படி கண் முன்னால எஸ்கேப் ஆகிட்டாளே! வாசா.. அவளா வரும் போது வீர வசனம் பேசி துரத்தி விட்ட, இப்போ ஏங்கிகிட்டு நிக்குற, இப்படியொரு சூழ்நிலைல உன் நிலைமை ரொம்ப கஷ்டம்தான்” கண்ணாடியை பார்த்தவாறு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தான் வாசன்.
வாசுகி குளியலறையிலிருந்து ஒரு ஸ்கர்ட் அண்ட் பிளவுஸ் அணிந்து வெளியே வர “ஆ…: வென பாத்திருந்தவன் “ஐயோ இவ எந்த ட்ரெஸ் போட்டாளாலும் அழகா தெரியிறாளே! இன்னக்கி என்ன ஒருவழி பண்ணாம விடமாட்டா போல இருக்கே! என்று முணுமுணுக்க, 
“ஏங்க? என்னங்க பண்ணுறீங்க?” என்ற வாசுகி விழுந்து விழுந்து சிரிக்கலானாள்.
“வாட்ச கூட கழட்டலா, துணி கூட மாத்தல, தல வாரி கிட்டு நிக்கிறீங்க? தூங்குற ஐடியாவே! இல்லையா? எங்க கிளம்பிட்டீங்க?” சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணற, அசடு வழிந்தான் வாசன்.
காதல் கிறுக்கனாகவே! மாறி. செய்ய வேண்டியதை செய்யாது அனைத்தையும் மாற்றி செய்துகொண்டிருக்க, “நான் தூங்கும் போது கூட தல சீவிட்டு தான் தூங்குவேன். உனக்கென்ன நீ உன் வேலையைப்பாரு” என்று வாசன் கோபமாக சொல்ல
“ஆளப்பாரு, இவர் பெரிய மன்மதரு, கனவுல டூயட் பாட தல சீவிக்கிட்டு தூங்கப் போறாரு” என்று திட்டியவள் “தள்ளுங்க” என்று தன் உடம்பின் முழு பலத்தை கொண்டும் அவனை தள்ளி விட்டவள் கண்ணாடியின் முன் நின்று தலை வாரலானாள்.
வாசுகி என்னமோ! சாதாரணமாக செய்த செயல் அவள் தேகம் தீண்டியதும் வாசனின் தேகத்தில் காதல் தீ பற்றிக்கொண்டது.

Advertisement