Advertisement

 

அத்தியாயம் 17
ஆத்மநாதன் தூக்கம் வராமல் யோசனையில் இருந்தான். காலேஜில் இருக்கும் பொழுது அவன் ஒரே பிடிவாதம் படிப்பு ஒன்று மட்டும்தான். படித்து முடிந்ததும் கைநிறைய சம்பாதிக்கணும் என்று நினைத்தவன் முதலில் வெளிநாடு செல்ல எண்ணிய பொழுது அவன் படிப்புக்கு டில்லியிலையே! அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க எதற்கு வெளிநாடு போக வேண்டும் என்று எண்ணினான். அவன் சிந்தனைகளுக்கு அவனே! அரசன். அவன் வாழ்கைகையில் அனைத்து முடிவுகளையும் அவன்தான் எடுத்திருக்கிறான்.
அவன் வேலை பார்க்கும் இடமோ! மென்பொருள் நிறுவனம். மாதம் ஒருநாள் பார்ட்டி என்று அனுபவித்துக்கொண்டிருந்தவனின் வாழ்க்கையில் பெண்கள் சகவாசனும் குறைவில்லாமல்தான் இருந்தது. வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாளிலையே! ப்ரோமோஷன், வேலையை தக்க வைத்துக்கொள்ள இவனிடம் வரும் அழகிகள், அழகிகளுக்கா பஞ்சம்?
இப்படி சென்ற ஆத்மநாதனின் வாழ்க்கையில் திருப்புமுனைதான் நித்யா, மார்டன் அழகிகளையே! மிஞ்சும் பேரழகி. நித்யா சராசரி பெண்களை விட சற்று உயரம் மாநிறத்தையும் விட சற்று நிறமாக இருந்தாள். மாசுமரு அற்ற முகம். குடும்பத்துக்காக உழைப்பதால் அந்த வயதில்லையே! முதிர்ந்த முகத்தோற்றம். பாவாடை தாவணியில் தேவதையாகத்தான் தெரிந்தாள்.
பார்ட்டியில் இது என் மனைவி என்று ஒருத்தியை அறிமுகப் படுத்தினால் அந்தப் பெண் இப்படியொரு பேரழகியாக இருக்க வேண்டும் என்பது ஆத்மநாதனின் கனவு. திருவிழாவில் பார்த்த உடனே! அவள் பின்னால் அலைந்து அவள் அறியாமையே! நித்யா யார் என்ன என்று விசாரித்து அறிந்துக்கொண்டவன் அண்ணனுக்கு திருமணம் ஆகி இருந்தபடியால் நேரடியாக தந்தையின் முன் நின்று தனக்கு இன்னாரின் மகளை பிடித்திருப்பதாக கூற ஆவுடையப்பன் யோசிக்கலானார்.
மகனுக்கு திருமணம் செய்து வைப்பதில் பிரச்சினையில்லை. இவர்கள் மிராசுதார், நித்யா குடும்பம் வேறு ஜாதிக்காரர்கள் சம்மதிப்பார்களா? எடுத்து சொன்னாலும் ஆத்மா புரிந்துக்கொள்பவனல்ல, டில்லியில் வடநாட்டு பெண்ணை மணந்து கொண்டேன் என்று சொல்வதை விட இங்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்வது மேல்தான் என்ற முடிவுக்கு வந்தவர் “பேசிப்பார்களாம்” என்று கூற பத்மாதான் நித்யாவின் வசதிவாய்ப்பையறிந்து ஒரேயடியாக மறுத்தாள். 
ஆத்மநாதனுக்கு நித்யாவை சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவசரம் இருந்தது. அது டில்லியில் அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை பற்றி அறிய நேர்ந்தால் கண்டிப்பாக நித்யா அவனக்கு கிடைக்க மாட்டாள் என்று அவனுக்கு நன்கு தெரியும். பெண் பார்க்க சென்றவன் பத்மா மறுக்க மறுக்க “செலவு எல்லாம் நானே! செய்கிறேன் அடுத்த முகூர்த்தத்திலேயே! கல்யாணத்த வைக்கணும், நான் டில்லி போகணும்” என்று கூறி கல்யாணமும் செய்துகொண்டான். சுயநலம்தான் அவரவர் நிலையில் அவரவர் முடிவுகள் சரிதான்.
அவசரக் கல்யாணம் என்றாலும் அவன் திருமணத்தில் எந்த குறையும் செய்யவில்லை. கல்யாணப்பட்டு முதல் நகை வரை பார்த்துப் பார்த்து வாங்கினான். எல்லாம் நித்யாவின் விருப்பப்படி இருக்க வேண்டும் என்பதையும் பார்த்துக்கொண்டான். மரசாமான்களும் அவ்வாறே! அவளுக்கு அதை பற்றி தெரியாது என்றதும்தான் அவன் இஷ்டப்படி வாங்கி இருந்தான்.
கல்யாணமாகி டில்லிக்கு அவளை விமானத்தில் அழைத்து சென்றான்.
“நாம ட்ரைன்லயே! வந்திருக்கலாமே!” என்று நித்யா கேக்க
“லாரில ஏத்தின பொருட்கள் வந்து சேர்றதுக்குள்ள வீடு பார்க்கணும் நித்யா”
“இப்போ இருக்குற வீடு”
“இப்போ நான் ஒரு ரூம்லதான் இருக்கேன். நானா ஒரு வீடு பார்த்து அது உனக்கு பிடிக்கலைன்னா? உனக்கு பிடிக்க வேணாமா?” என்றவன் விமானம் தரையிறங்கியதும் அவனது கம்பனிக்கு அருகில் பத்து, பதினைந்து கிலோமீட்டரில் ஏதாவது வீடு கிடைக்குமா என்று தேடிப்பார்களானான்.
நித்யாவுக்கு பிடித்தது போல் பன்னிரண்டு கிலோமீட்டரில் ஒரு வீடு கிடைக்கவே! பால் காய்ச்சி குடியேறி இருந்தனர். இவ்வாறு நிதித்யா விருப்பப்படிதான், அவள் சந்தோசம் முக்கியம் என்று நினைத்துதான் அனைத்தையும் செய்தான்.
நித்யாவும் அவனை எந்த குறையும் இல்லாது பார்த்துக்கொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். நித்யா அவன் வாழ்க்கையில் வந்த பிறகு பிற பெண்களை விலக்கிதான் வைத்திருந்தான். ஆதியும், சஹானாவும் பிறக்கும் வரை.
குழந்தைகள் பிறந்த பின் நித்யாவால் பார்ட்டி என்று கணவனோடு வெளியே செல்லவோ! தனியாக நேரம் செலவழிக்கவோ! முடியவில்லை. அது ஆத்மநாதனின் மனதில் சற்று வெறுப்பை ஏற்படுத்தி இருக்க குழந்தைகளிடம் ஒட்டாத மனப்பாங்காத்தான் கொடுத்திருந்தது. பார்ட்டிக்கு செல்பவன் அன்று வீட்டுக்கு வராமல் இருக்க பழகினான். இது தொடரவே! நித்யாவிடம் வேலையென காரணம் கூறலானான். உண்மையில் அன்று யாரோ! ஒரு பெண்ணோடு அறையெடுத்து தங்கி விட்டு வந்திருப்பான்.
பலவருடங்கள் கடந்து, அக்ஷரா பிறந்த பின்னும் மாதத்தில் ஒருநாள் வெளியே செல்லும் இந்த பழக்கத்தை ஆத்மநாதனால் விட முடியவில்லை.
சொந்தபந்தங்கள் யாராவது டில்லியில் இருந்திருந்தால் வாசன், நித்யா, அல்லது ஆவுடையப்பன் காதுக்காவது இந்த விஷயம் சென்றிருக்குமோ! யாருமே! இல்லாத ஊரில் படிப்பறிவில்லாத நித்யா கணவன் சொல்வதை மட்டும் நம்பிக்கொண்டு இருந்து விட்டாள்.
குழந்தைகள் வளர வளரத்தான் “அம்மா வீட்டுல சும்மா இருக்குறத நீ, இந்த கோர்ஸ் படிக்கலாமே! உனக்குத்தான் சமையல் நல்லா வருமே! கேக் கிளாஸ் போ, பேக்கரி ஐட்டம்” என்று சஹானா சொல்ல
“தோட்டக்கலை கூட அம்மாக்கு வருமே!’ என்று ஆதி சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்தை பார்கலானாள் நித்யா.
ஆத்மநாதனும் பார்ட்டி என்றால் அவளை பியூட்டிபாளர் அழைத்து சென்று அலங்காரம் செய்துதான் அழைத்து செல்வான் கணவனுக்கு பிடித்திருக்கு என்ற ஒரே காரணத்துக்காக அதையும் கற்றுக்கொண்டாள்.
ஆத்மநாதனும் அவள் எதை படிக்க வேண்டும் என்று சொல்கிறாளோ! அதற்குண்டான செலவை கொடுப்பான். ஊரிலிலிருந்து ஆவுடையப்பன் வேறு வரும் வருமானத்தில் அவன் பங்கை வங்கிக் கணக்கில் போட்டு விடுவதால் கையை விரித்து செலவும் செய்வான்.
இத்தனை வருடங்களில் சொந்தமாய் ஒரு வீடு, வாகனம் என்று எல்லாம் வாங்கி விட்டான். நித்யா எப்பொழுது கேட்டாலும் காசு கொடுப்பவன் கேள்வி கூட கேட்க மாட்டான். அவனுக்கு நித்யா மேல் சந்தேகம் வந்தே! இல்லை. அதற்கு காரணம் அவள் செய்யும் செலவுக்கு உண்டான அனைத்தையும் எழுதி வைப்பதே!
அவள் நினைத்திருந்தால் கணவனை ஏமாற்றி இருக்கலாம். அவளும்தான் வெளியே! செல்கிறாள். பார்ட்டி, கெட்டுகெதர் என்று புதிதாய் கிடைத்த நண்பர்கள் என்று போகிறாள். யார் கூட போனாலும் தான் இன்னாரோடு போகிறேன், இந்த இடத்தில் இருக்கிறேன் என்ற குறுந்செய்தி அவனுக்கு வந்து விடும்.
“ஆமா எதுக்கு எனக்கு மெஸேஜ் பண்ணுற?” ஏன்னு ஆத்மநாதன் ஓரு நாள் கேட்டதற்கு”
“ஒரு சேஃப்டிக்குனு வச்சிக்கோங்களேன்” என்பாள் நித்யா.
நித்யா நல்ல மனைவி மட்டுமல்ல நல்ல மருமகளும் கூட ஊருக்கு வந்தாலும் ஆத்மநாதன் வீட்டில் தங்க மாட்டான் வசதி பத்தாது என்று லாட்ஜில் அல்லது தனியாக வீடு எடுத்து தங்கி விடுவான். ஆனால் காலையிலையே! எழுந்த நித்யா குழந்தைகளுக்கு காலை உணவைக் கொடுத்து விட்டு தயாராகி மாமனார் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவாள்.
வந்தவள் சும்மா இல்லாமல் பம்பரமாக சுழன்று வீட்டை சுத்தம் செய்வதிலும், தோட்டத்தை சுத்தம் செய்வதிலும் நேரத்தை செலவிடுவதால் ஆவுடையப்பனுக்கு அவள் மேல் பாசம் அதிகம். அவள் ஊருக்கு வருவதென்றால் களைப்பையும் பொருட்படுத்தாது வேலை செய்வாள் என்று வேலைக்கு ஆட்களை நியமித்து வேலையை ஏவும் பணியை மட்டும் செய்யச் சொல்வார், அவளோ! சமையலில் ஈடுபடுவாள்.
இப்படி அங்கிருக்கும் நாட்களில் காலையில் மாமனார் வீட்டுக்கு செல்பவள் தூங்க மட்டும்தான் ஆத்மநாதன் பார்த்த வீட்டுக்கோ! லாஜுக்கோ செல்வாள்.
நித்யாவிடம் குறை தேடும் பத்மாவும் ஆத்மநாதனின் மேலிருக்கும் கோபத்தைத்தான் இவள் மீது கறிச்சுக்கொட்டி தீர்த்துக்கொள்வாள்.
வீட்டை கொஞ்சம் “பழுது பாருங்க, நிறம் பூசுங்க” என்று நித்யா ஒரு வார்த்தை சொன்னால் ஆவுடையப்பன் செய்யாமல் இருக்கப் போவதில்லை. நித்யா இந்த குடும்பத்தை கையில் வைத்து ஆட்டிப்படைப்பதாக பேச்சு வரும், அது அந்த குடும்பத்தின் மூத்த மருமகள் செய்து விடுவாள்.
ஆவுடையப்பன் வீட்டை ஒழுங்கு படுத்தாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கும், அது என்னவென்று அவர்தான் சொல்ல வேண்டும்.
நித்யா மாதிரி மனைவி அமைய தான் உண்மையில் கொடுத்து வைக்க வேண்டும் ஆனால் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். என்ற கேள்விதான் அவனுள் எழுந்தது.
முத்து முத்தாக மூன்று குழந்தைகள். எதிலும், எந்த குறையும் இல்லை. அப்படியிருக்க, சமீபகாலமாக தாரிக்காவோடு இருக்கும் நெருக்கம் ரொம்பவே! அதிகம். சஹானாவை விட நான்கு வயது பெரியவளாக இருப்பாள். மற்ற பெண்களை போல் அவளை விலக்க முடியவில்லை. அவள் ஒரு போதை என்று தெரிந்து தொடத்தோன்றுகிறது.
என்றும் போல் இருந்து விடலாம் என்று பார்த்தால் அக்ஷரா பார்த்து விட்டாள். இன்று அலைபேசியில் உரையாடி விட்டு உள்ளே வரும் பொழுதுதான் சஹானா நித்யாவை விட்டுக்கொடுக்காமல் பேசுவது காதில் விழுந்தது. வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவள் இவ்வளவு பேசுவாளா? சற்று ஆச்சரியம் மேலோங்க அவள் பேசுவதை ஆசையாக கேட்க அங்கேயே! நின்று விட்டான்.
குழந்தையாக இருக்கும் பொழுது ரைம்ஸ் சொல்கிறேன் என்று மேலே ஏறுபவளை அதட்டி ஒரு இடத்தி அமர்த்தி விடுவான். இன்னும் இரண்டோ! மூன்று வருடங்களில் அவள் திருமணமாகி சென்று விட்டால் நினைத்த நேரத்தில் பார்க்கக் கூட முடியாமல் போய் விடும். என்ற எண்ணம் தோன்ற வாழ்க்கையில் எதையோ! இழந்து விட்ட வெறுமை மனதில் தோன்றியது.
அவர்களின் பேச்சு திசை மாறி சத்யா வேறு உள்குத்தோடு பேசும் பொழுதுதான் உள்ளே வருபவன் போல் வந்து விசாரித்தான். அதற்க்கு அவன் இளைய மகள் தக்க பதிலடியையும் கொடுத்து விட்டாள். அவள் கேட்பது நியாயமான கேள்வி தானே! நித்யாக்கு நான் உண்மையாக இருந்தால் என் மனசாட்ச்சிக்கு நான் உண்மையானவனாக இருந்தால் யார் என்ன சொன்னாலும் பதில் சொல்ல வேண்டியதில்லையே!
ஊரில் இருப்பவர்களுக்கு தெரியாதவரைக்கும்தான் மரியாதை கொடுப்பார்கள் தெரிந்தால்? ஊரில் இருப்பவர்களை விடு, ஊருக்கு வராமல் இருந்து விடலாம், அம்மா, அப்பாவையும் விடு உனக்கு அவங்க மேலையும் பெருசாக பாசம் இல்லை. நித்யாவை பத்தி யோசித்தாயா? அவளுக்கு மட்டும் தெரிந்தால்? கண்டிப்பாக உன்னை விட்டு சென்று விடுவாள்.
அக்ஷரா உன்னை பிளேக்மெயில் செய்துகொண்டிருக்கிறாள். இன்று கூட மறைமுகமாக அதைத்தான் செய்தாள். ஒரு தந்தையாக அவளுக்கு நீ காட்டும் வழிதான் என்ன? ஒரு வயதுக்கு மேல் அவள் உன்னை மதிப்பாளா? ஆத்மநாதனின் மனசாட்சசி கேள்வி மேல் கேள்வி கேட்க 
“ஏங்க புதிய இடம் எங்குறதால தூக்கம் வரலையா?” நித்யாவின் குரல் கேட்டு அவள் புறம் திரும்பிய ஆத்மநாதன் ஜன்னலினூடாக வந்த நிலவொளியில் மிளிர்ந்த அவளின் முகம் பார்க்கவே! சங்கடப்பட்டவனாக கண்களை மூடிக்கொண்டு “ம்ம்” என்றான்.
அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டவள் “இப்போ தூங்குங்க” என்று சொல்ல அவனையறியாமையே கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. நித்யா தூங்கி இருக்க ஆத்மநாதன் அவளையே! பார்த்தவாறு இருந்தான். 
சூரியன் கிழக்கு வானை அடைய இன்னும் நேரம் இருப்பதாகா வானம் சேதி சொல்ல,  வீட்டில் ஒவ்வொருவரும் எழுந்து கோவிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்க, வாசனும், வாசுகியும் ராமநாதனும் வந்து சேர்ந்தனர்.
அதிகாலையிலையே! அனைத்து மின் விளக்குகளும் எரிய, அலங்கரிக்கப்பட்ட வீடோ! மின் விளக்குகளின் ஒளியால் பகல்வேளை போல் மின்ன வாசுகி பிளாஸ்கில் கொண்டு வந்த டீயை அனைவருக்கும் கப்பில் ஊற்ரிக் கொடுக்கலானாள்.
“எமிலி கிறீன் டி தான் சாப்பிடுவா வாசுகி நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று நித்யா சொல்ல
“இல்ல பரவால்ல, வாசனை வேற நல்லா இருக்கு இதையே! சாப்பிடுறேன்” நித்யா கிறீன் டி என்றதும் தனக்குத்தான் என்று புரிந்துக்கொண்ட எமிலி ஆங்கிலத்தில் கூறியவாறு டீயை வாசுகியிடம் ஒரு குட் மார்னிங்கோடு இன்முகமாகவே! பெற்றுக்கொண்டவள் ஒரு இடத்திலிருந்து பருக்கலானாள்.
ரோஹனும் பட்டு வேட்டி சட்டையில் கையில் ஒரு பையோடு வந்தவன் “பன்னு வாங்கி வந்தேன். டீயோட சாப்பிடுங்க” என்றவாறு அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க
“ஏன் நித்தி உனக்கு இன்னொரு தங்கச்சி இருந்திருந்தா இவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கலாம் போல இருக்கே! இப்படி உங்க குடும்பத்தோடு ஒட்டிக்கிட்டு திரியிறான். யாரு இவன்” என்று ஆத்மநாதன் கேக்க, அது வாசன் காதில் விழுந்தது.
“அவன் எனக்கு இன்னொரு தம்பி மாதிரி மாமா” என்ற வாசனுக்கு ஒரு எண்ணம் தோன்ற அது இப்பொழுது பேசக்கூடிய விஷயம் இல்லை என்பதால் டீயை பருகியவாறு ரோஹானையே! பார்த்திருந்தான். அவனோ! அலைபேசியில் அனைத்தையும் பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தான்.
வாசனின் அருகில் அமர்ந்த வாசுகி “என்னங்க எதுக்கு இப்போ அவரை சைட் அடிக்கிறீங்க” என்று அவன் காதைக் கடிக்க,
“அவனும் என்ன மாதிரிதான். இதுவரைக்கும் யாரையும் சைட் அடிக்காம சுத்திகிட்டு திரியிறான். அவன் யாருனு தெரியுமா?”
“தெரியல, பார்க்க நல்லவராதான் தெரியிறாரு, ஆமா யாரு அவரு?”
“ம்ம் உன் மாமன் மகன்” என்று வாசன் புன்னகைக்க
“என்ன சொல்லுறீங்க?” புரியாது முழித்தாள் வாசுகி.
“இவன் தான் சந்திராவை பொண்ணு கேட்டு வந்தது”
“என்னங்க சொல்லுறீங்க? அவர விலக்கி வைக்கணும்னு சொன்னீங்க, இப்போ ரெண்டு பேரும் கூடிக் குலாவுறீங்க, எனக்கு ஒன்னும் சரியா படல” வாசுகி முறைக்க,
“என்ன சரியா படல நான் எல்லாம் கரெக்ட்டா யோசிச்சுதான் பண்ணுறேன். அவன் என்ன அண்ணனா ஏத்துக்கிட்டான், நீ போய் கோவிலுக்கு கொண்டு போக வேண்டிய பொருட்களெல்லாம் எடுத்து வை நித்தி கல்யாண பொண்ண அலங்கரிப்பா”
“ஹ்ம்” நொடித்தவாறே வாசுகி உள்ளே செல்ல ரோஹன் இவர்களின் நெருக்கத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தான்.
மெரூன் நிற கல்யாண பட்டில் அழகோவியமாக இருந்தாள் எமிலி. நெத்திச்சூடி, வளையல்கள், காசுமாலை என வித்தியாசமான அலங்காரத்தை பார்த்து அவளுக்கே! தான்தானா இது என்று நம்ப முடியவில்லை என்று நித்யாவிடம் பேசி பேசி மலைத்தவள் யாரையும் விடவில்லை. எல்லோரிடமும் போய் தான் எவ்வாறு இருக்கிறேன் என்று வேறு கேட்டு வைத்தாள்.
ராமநாதனிடம் போய் ஆசிர்வாதம் வாங்கியவள் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருக்க, அவரும் அவளுக்கு சரி சமனாக வாள் வீச்சில் இறங்கி இருந்தார்.
அப்பக்கமாக வந்த வாசுகி மாமனார் அழகாக ஆங்கிலம் பேசுவதைக் கண்டு வாய் பிளந்தவள் வாசனை முறைக்க,
புன்னகைத்தவன் “எங்க அப்பா அந்த காலத்துலயே! இங்கிலீசு ஸ்கூல்ல படிச்சவரு. அவர் உனக்காதான் அன்னைக்கி அப்படி பேசினார்” என்று சிரிக்க, மாமனாரின் குறும்பு புரிய அவளுக்கும் சிரிப்பாக இருந்தது.
வாசனும் ரோஹன் வாசுகி நேரங்காலத்தோடு கோவிலுக்கு கிளம்பி இருக்க மற்ற அனைவரும் மணமக்களோடு கோவிலை வந்தடையும் பொழுது ஐயர் மணமேடையில் அமர்ந்து அனைத்தையும் தயார் செய்துக்க கொண்டிருந்தார்.
பத்மா-ஆவுடையப்பன், புஷ்பா- பாண்டிராஜ், நாதன்-பூர்ணா ராஜம் என்று அனைவரும் வந்து சேர ஸ்ரீவத்சனும் மணமேடையில் வந்தமர்ந்தான்.
குடும்பத்தார் மணமக்களை சுற்றி பின் புறமாக இருக்க, முன் புறமாக வலது புறத்தில் ஆண்களும், இடது புறத்தில் பெண்களும் இருந்தனர்.
“எப்படியோ! நம்ம ஊர்ல வந்து கல்யாணம் பண்ணனும்னு நினச்சங்களே! அதுவரைக்கும் சந்தோசம்” என்று பத்மா சொல்ல
“வெள்ளைகாரிய கட்டிக்கிட்டு நல்லா வாழ்வான்னு நினைக்கிறீங்களா?” என்று புஷ்பா பத்மாவை பார்த்து கேக்க
“வெள்ளைக்காரனுங்க குடும்பம் நடத்துற லட்சணம் தான் நாம பாக்குறோமே!” என்று பூர்ணா சொல்ல மூவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
எமிலியை நித்யாவும் வாசுகியும் அழைத்து வந்து ஸ்ரீவத்சனின் அருகில் அமர்த்த அவளோ அனைவருக்கும் ஹாய் சொல்ல அனைவருக்கும் சிரிப்பாக இருக்க, மூன்று பெண்கள் கூட்டணி “விளங்கும்” என்று கேலியாக சிரிக்கலாயினர்.
ஐயர் தாலியை எடுத்துக்கொடுக்க, எமிலியின் கழுத்தில் ஸ்ரீவத்சன் மாங்கல்யத்தை பூட்ட குழந்தை போல் அவள் அழ அவள் கண்களை துடைத்து விட்டவன் சமாதானப் படுத்தலானான். எல்லாவற்றையும் ரோஹனின் வீடியோ கேமரா அழகாக உள்வாங்கிக் கொண்டிருந்தது.
அதன் பின் அவள் நெற்றி வகுட்டில் குங்குமமிட்டவன், தாலியிலும் வைத்து, அக்கினியை வளம் வந்தவர்கள் ராமநாதனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்ட பின் ராஜத்தை தொடர்ந்து மற்ற பெரியவர்களின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
காலை உணவு வீட்டிலையே! தயார் செய்திருப்பதால் அனைவரையும் வண்டியில் ஏற்றி அனுப்ப எஞ்சிருந்தவர்களை ஆட்டோ பிடித்து அனுப்பி விட்டு வாசனும் வாசுகியும் ரோஹனும் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு கடைசியாக ஒரு ஆட்டோவில் ஏறி வீடு சென்றனர்.
“என்ன அண்ணா ஆடி அசைஞ்சி வர, கல்யாணம் உனக்கா? இல்ல வத்சனுக்கா? அண்ணி கூட எங்க போன?” என்று சத்யா வழி மறைத்து கேள்வி கேக்க
“ஏன் மா… மண்டபத்துல இருக்குறதெல்லாம் ஒதுங்க வச்சி கொடுத்துட்டு வர வேணாமா? கூடமாட ஒத்தாசையா இருக்கலானாலும் பரவால்ல இப்படி அண்ணன் ஊர் சுத்திட்டு வர்ர மாதிரியா பேசுவீங்க?” என்று ரோஹன் பேச 
“யாரு இவன்” என்று சத்யா முகத்தை சுளிக்க
அவள் கேட்டது காதில் விழவே! இல்லை என்பது போல் “வாசு நீ போய் கடைக்கு அனுப்ப சாப்பாடு கட்டி வை நான் ரகுக்கு போன் பண்ணி வர சொல்லுறேன்” என்றவன் ரோஹானை அழைத்துக்கொண்டு நகர்ந்து விட்டான் வாசன்.
அனைவரும் வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, சமயலறைக்குள் நுழைந்த வாசுகி கடைக்கு கொண்டு செல்ல சாப்பாட்டை கட்ட ஜன்னல் புறமாக புஷ்பாவின் குரல் கேட்டது.
“சில தரித்திரம் புடிச்சதுங்களுக்கு குழந்தை தங்காது பத்மா அக்கா, பொறக்கும் போதே! அம்மா இல்ல. இதுங்களுக்கு அம்மா ஆகுற பாக்கியம் இருக்குமா சொல்லுங்க? என்ன கேட்டா இதுங்க கல்யாணமே! பண்ணக் கூடாது”
“கல்யாணம் பண்ணாம எங்க வீட்டுல தரித்திரமா உக்காந்து என் மகளுங்க வாழ்க்கையை அழிக்கவா?” பூர்ணா கோபமாக சொல்ல
பொதுவாக யாரையோ பற்றி பேசுகிறார்கள் என்று வாசுகி நினைக்க பூர்ணாவின் குரல் கேட்டதும் தன்னை பற்றி தானா? இவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள் என்று அதிர்ந்தவள் அப்படியே! நின்று விட்டாள்.  
“இதுங்களெல்லாம் உயிரோடயே! இருக்கக் கூடாது, தற்கொலை பண்ணி செத்திடனும்” என்று புஷ்பா கர்ஜிக்க, பூர்ணாவும் ஒத்தூதினாள்.
“ஆமா அத்த தற்கொலைதான் பண்ணிக்கணும்” என்று வாசனின் குரல் கேட்டதும் மூன்று பெண்களும் அதிர்ச்சியடைய வாசுகியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
வாசலில் ஆட்கள் இருப்பதால் பின் பக்கமாக வந்தவன் இவர்களின் பேச்சை கேட்டு கொதித்து “சில தரித்திரம் புடிச்சவங்களுக்கு ஆண் வாரிசே இல்ல. குடும்பத்தை வழி நடத்த ஆண் வாரிசு எவ்வளவு முக்கியம். எல்லாம் அவங்க புருஷன சொல்லணும் ஆம்பள புள்ளய பெத்துக் கொடுக்க வக்கில்லனு அடிச்சி தொரத்தாமா கட்டிக்கிட்ட பாவத்துக்கு வச்சிருக்காங்க பாருங்க அதான் அந்த தரித்திரம் புடிச்சது அக்கா பொண்ணுன்னு நினைக்காம வாய் கூசாம பேசும்” என்று பூர்ணாவை தாக்கியவன்
“சில தரித்திரம் புடிச்சதுங்களுக்கு பெண் வாரிசு இல்ல. சாக கிடக்கும் போது பொம்பள புள்ளைங்கதான் தண்ணீர் கொடுத்து உடம்பு கழுவி எல்லா வேலைகளையும் செய்யும், மருமகளுங்களா செய்வாளுங்க, சுத்தம் அந்த கொடுப்பனக்கூட இல்ல” என்று பத்மாவை பேசியவன்
“இதுல பாருங்க புஷ்பா அத்த சில தரித்திரம் புடிச்சவங்களுக்கு ஆம்பள, பொம்பளலனு ரெண்டு புள்ள இருந்தாலும் அதுங்க புள்ளைங்க வாழா வெட்டியா இருக்கும். அத மறந்துட்டு. அந்த தரித்திரம் மத்தவங்கள பத்தி வாய் கூசாம பேசும். இதுங்களே! உசுரோடதானே! இன்னமும் இந்த பூமில இருக்குதுங்க” என்றவன் மூவரையும் எரித்து விடுவது போல் பார்க்க
“வாசா நீ ரொம்ப பேசுற” என்று பத்மா எகிற
“இவன் தங்கச்சிய வாழா வெட்டியா அனுப்பிட்டா இவன் இப்படி பேச மாட்டானில்லை” புஷ்பா கொதிக்க,
வாசுகியை பேசியதும் வாசன் கோபத்தில் பேசி விட்டான்தான் அந்த நேரத்தில் தங்கைகளின் வாழ்க்கை நினைத்து பார்க்காமல் பேசியது தவறா? இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக சென்று விட வேண்டுமா? என்ன அநியாயம் இது.
“நீங்க பேசியதெல்லாம் என் செல்போனுல படம் புடிச்சி வச்சிருக்கேன். ரொம்ப பேசினா உங்க வீட்டுகாரங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் அப்போ இருக்கு உங்களுக்கு கச்சேரி. அப்போ தெரியும் யாரு வாழா வெட்டியா போக போறாங்கன்னு. அனுப்பி வைக்கட்டா?” என்றவாறு வந்த ரோஹன் “போங்கண்ணா போய் கடைக்கு சாப்பாடு அனுப்புற வழிய பாருங்க இந்த தரித்திரம் புடிச்சவங்களோட பேசினா நமக்கு அடுத்த வாய்க்கு சோறு கிடைக்காது” என்று விட்டு வாசனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வர ரோஹானைக் கண்டு பூர்ணா அதிர்ச்சியடைய, அவளை முறைத்துப் பார்த்தவாறு வாசனோடு உள்ளே சென்றான் ரோஹன்.
வாசுகி கண்ணீரோடு நிற்பதைக் கண்டு அவளை அணைத்துக்கொண்டவன்
“இதுங்க பேசியதெல்லாம் நீ மனசுல போட்டுக்காத” என்று ஆறுதல் படுத்த
“இது ஆனந்தக் கண்ணீர். எனக்காக நீங்க இருக்கீங்க…” என்று வாசுகி முடிக்க வில்லை.
தொண்டையை கணைத்த ரோஹன் “சின்ன பையன் முன்னாடி இப்படியெல்லாம் ரோமான்ஸ் பண்ணக் கூடாது. நான் கெட்டு போய்டுவேன்” என்று சொல்ல வாசனிடமிருந்து விலகி நின்ற வாசுகி சங்கடமாக அவனை பார்க்க
“டேய் கரடி வெளிய போடா” என்று வாசன் அவனை துரத்த
“அண்ணா கூப்டீங்களானா” என்று அருகில் வந்தவன் அவனை கட்டிக்கொண்டு “சாப்பிட்டு முடிச்சவங்க கைகழுவ இங்கதான் வருவாங்க அடங்குங்க. ஆகட்டும் ஆகட்டும் சாப்பாடு கட்டுங்க” என்று சொல்ல மூவரும் சேர்ந்து கடைக்கு கொண்டு செல்ல சாப்பாட்டை கட்டலாயினர்.

Advertisement