Advertisement

அத்தியாயம் 16
ஆதவன் கிழக்கில் விழித்துக்கொள்ள ஊரும் விழித்துக்கொண்டு தனது அன்றாட கடமைகளை சரிவர நிறைவேற்ற ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
காலை உணவை உட்கொண்ட உடனே! எமிலி நேற்று போலவே ஒரு குர்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தவள் அவளுடைய குட்டைக் கூந்தலை போனிடைல் போட்டுக்கொண்டு கழுத்தில் கேமராவையும் மாட்டிக்கொண்டு “வாட்சன் வாட்சன்” என்று அவன் பெயரை ஏலம் போட நித்யாவும், வாசுகியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்களே! தவிர எதுவும் கூறவில்லை.
கிராமங்களில் கணவனை பெயரை எல்லாம் மனைவி அழைப்பது இன்னும் நடைமுறைக்கு வந்த பாடில்லை. அவளாவது சந்தோசமாக அழைத்து மகிழட்டுமே! என்று இரு பெண்களும் பார்வை மாற்றம் செய்துகொள்ள ஸ்ரீவத்சனும் ஓடிவந்து அக்காவையும், அண்ணியையும் பார்த்து புன்னகைத்து விட்டு என்னவென்று கேக்க, ஊரை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றாள் எமிலி.
நித்யாவும் “நாளை நலங்கு வைப்பதால் எங்கும் செல்ல முடியாது. எங்கு செல்ல வேண்டுமோ! இன்று சென்று வாங்க, எங்கு சென்றாலும் மதியத்துக்கு வந்து விட வேண்டும்” என்று கறாராக கூறியே வழியனுப்பி வைக்க,  சஹானாவும், அக்ஷராவும் அவர்களோடு கிளம்பி இருந்தனர்.
குளம், குட்டை, கோவில், ஆடு, மாடு, கிழவி, குழந்தை என்று எதையும், யாரையும் விடாமல் போட்டோ எடுத்தவள் சில வீடுகளையும், வீட்டின் முன் போட்டிருந்த கோலத்தையும் கூட போட்டோ எடுக்கலானாள்.
“யாருப்பா இது” என்று சில பெருசுகள் தானாக வந்து பேசி ராமநாதனின் மகன் என்றதும் “வெளிநாட்டிலிருந்து எப்போ வந்த? நல்லா இருக்கியா” என்று நல விசாரிப்புகளோடு கடந்தும் செல்ல, சிலர் எமிலியை யார் என்று தோண்டித் துருவ, தன்னுடைய மனைவி என்று அறிமுகப்படுத்தினான் ஸ்ரீவத்சன். ஊர் என்றால் அப்படித்தான். தெரியாத முகங்களைக் கண்டால் விசாரிப்புகள் நடைபெறும். அது ஊர் பாதுகாப்பை ஒட்டி நடைபெறுவதுதான். 
வயல்வெளி, தோட்டம், என்று ஊர் முழுக்க சுற்றியவர்கள் நாளை கல்யாணம் நடைபெற இருக்கும் கோவிலுக்கும் சென்று கடவுளை தரிசித்து விட்டே வீடு வந்தனர்.
நித்யாவும் வாசுகியோடு சேர்ந்து கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என அனைத்தையும் லிஸ்ட் போட்டுக்கொண்டிருக்க, கல்யாண சாப்பாடு வீட்டில் சமைப்பதால் அதற்கு தேவையான காய்கறி, அரிசி, மளிகை சாமான்கள் என அனைத்தையும் வாசனோடு ஆதியும் இறக்கிக் கொண்டிருக்க, ஒரு லாரி வந்து நிற்கவும் யாரு என்று பார்க்க ரோஹன்தான் வீட்டை அலங்கரிக்க பூக்களோடும் வாழை மரங்களோடும் வந்திருந்தான்.
“வாடா…தம்பி” என்று வாசன் ரோஹானை அழைக்கவும் ஆதி ரோஹானை “யாரடா இவரு” என்று பார்த்தான்.
ரோஹன் ஒன்றும் விளையாட்டுக்கு வாசனிடம் கல்யாணத்துக்கு அழைக்கவில்லை என்று கூறவுமில்லை, “அண்ணா” என்று அழைக்கவுமில்லை. தினமும் காலை மாலை என்று அலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பேசிப்பேசியே! வாசனோடு சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். அதனால்தான் அவனை கண்ட உடன் வாசனும் சகஜமாக “வாடா.. “என்று அழைத்திருந்தான். அவனும் உரிமையாக கல்யாண வேலைகளை பார்க்க இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருந்தான்.
“மருமகனே! நானும் உனக்கு மாமா தான்” என்றவன் அவன் தோளில் தட்டி விட்டு வீட்டை அலங்காரிக்குமாறு வந்தவர்களிடம் உத்தரவிட்டு விட்டு வாசனோடு இறக்கி வைத்த பைகளை சுமந்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைய, யார் இந்த புதியவன் என்று அனைவரும் ஆராய்ச்சி பார்வை பார்க்க, அனைவரிடமும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டவன் சகஜமாக அனைவரிடமும் பழகினாலும் வாசனோடு ஒட்டிக்கொண்டும், கேலியும் கிண்டலோடும் சுற்றலானான்.
ஆத்மநாதன் ஸ்ரீவத்சன் கூட நம்மளையே! மிஞ்சுடுவாங்க போலயே! என்று கண்களாளேயே! பேசிக்கொள்ள ரோஹன் அவர்களை பார்த்து சிரித்து வைத்தான். 
வாசனோடு சுற்றிக்கொண்டிருந்தாலும், கல்யாண வேலைகள் அனைத்திலும் தன் பங்கு இருக்குமாறு பார்த்துக்கொண்டவன், வேலை செய்பவர்கள் முதல் வீட்டாட்கள் என்று அனைவருக்கும், டீ, காபி, ஜூஸ் என்று விநியோகம் செய்து பம்பரமாக சுழல,
“சீக்கிரம் உனக்கு கல்யாணம் ஆகட்டும்” என்று வாசன் வாழ்த்த வெக்கத்தில் சிவந்தான் ரோஹன்.
ரோஹன் யாரு என்ன என்று அறிந்துக்கொண்ட பின் அவன் உயரமும், செல்வாக்கும் இவன் இந்த வேலைகளை செய்ய வேண்டுமா? என்று எண்ணத் தோன்றினாலும், “அண்ணா… அண்ணா..” என்று வாசனை அழைத்துக்கொண்டு அவன் பின்னால் வால் பிடித்து திரிந்துக்கொண்டிருப்பவனை பார்க்கும் பொழுது சொந்த தம்பிகளுக்கு பொறாமை பற்றிக்கொண்டுதான் எரிந்தது.
  
ரோஹனுக்கே! டிமிக்கி கொடுத்து விட்டு அப்போ அப்போ மனைவியை தரிசிக்க செல்லும் வாசன் அவள் புடவை முந்தியை இழுத்து “பாரு எப்படி வேர்த்திருக்கு” என்று அவள் முகத்தில் பூத்திருக்கும் வியர்வை துளிகளை துடைத்து விடும் சாக்கில் அவள் கன்னத்தை எச்சில் படுத்த
“என்….ன  பண்..ணுறீ..ங்க” என்று வாசுகி சிணுக்க, விசிலடித்தவாறே வாசன் நழுவி விடுவான்.
அருகிலையே! இருக்கும்வரை அருமை தெரியவில்லையோ! திருட்டு மாங்காயில்தான் ருசி அதிகமோ! என்பது போல்தான் வாசனின் செய்கைகள் இருந்தது.
யாருமே! தங்களை கவனிக்கவில்லை என்று வாசன் நினைத்திருக்க,
“அடப் பாவி மனிஷா.. என்ன அந்த பக்கம் அனுப்பிட்டு இந்த பக்கம் ரொமான்டிக் ஹீரோ வேல பாத்துகிட்டு இருக்குறாரு” என்று ரோஹன் வாய் பிளக்க,
“சும்மா படையப்பா ரேஞ்சுக்கு பட்டய கிளப்புரியே! வாசா” என்று நித்யா கிண்டலாக புன்னகைக்க 
“என்ன? என்ன?” என்று  கேட்பவனிடம் “அதான் கல்யாண வேல” என்று ரோஹனும் நித்யாவும் கூறி சிரிக்க, அவர்களை புரியாது பார்த்து விட்டு செல்பவனிடம்
“அண்ணா போகும் போது சொல்லிட்டு போங்க யாரும் வராம நான் பாத்துக்கிறேன்” என்று ரோஹன் சொன்ன பிறகுதான் விஷயம் புரிய, வெக்கமே இல்லாமல்
“இங்கயே இரு” என்று அவனை காவலுக்கு வேறு வைத்து விட்டு வாசுகியை கொஞ்ச சென்று விடுவான் வாசன். ரோஹன்தான் வாசுகியை தான் திருமணம் செய்து வாழ வேண்டிய வாழ்க்கை இப்பொழுது என்ன வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் என்று நினைக்க, எதிலோ சிக்கிக் கொண்டவனாக முழிக்கலானான்.
த்ரிஷா இல்லனா நயன்தாரான்னு சந்திராவை கல்யாணம் பண்ணி அந்த குடும்பத்துக்குள்ள போக எடுத்த முடிவு என்னவோ! நல்ல முடிவுதான் குமாரு, ஆனா கொஞ்சம் அவசர பட்டுட்ட, அந்த புள்ள சந்திரா லவ் பண்ணுற விஷயம் தெரிஞ்சிருந்தா கடைக்குட்டி மந்த்ராவை பொண்ணு கேட்டிருக்கலாம்.  
“அந்த புள்ள எவன லவ் பண்ணுதோ!” ரோஹனின் மனம் சொல்ல
“இதுதான் இருக்குற கடைசி சான்ஸ் பொண்ண தூக்கி கல்யாணம் பண்ணியாவது குடும்பத்துல எண்டரி கொடுக்குறோம்” தனக்குத்தானே! புலம்பியவாறு காவல் காக்கலானான்.  
ஸ்ரீவத்சனின் திருமணத்தில் கலந்துக்கொள்ள ஸ்ரீராமும் மதுவும் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஊருக்குள் காலடி எடுத்து வைத்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வருவதால் நேரங்காலத்தோடு வர வேண்டும் என்று எண்ணி இருந்தாலும், குழந்தைக்கு உடம்பு முடியாமல் போனதால் அதிகாலையில்தான் ஊருக்கு வந்து சேர்ந்தான். வந்தவன் நேராக வாசனை அழைத்துப் பேச லாட்ஜில் அறையொதுக்கி இருப்பதாக கூற, மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு அறைக்கே! வந்து விட்டான்.
“என்ன உங்க அண்ணா இந்த மாதிரி ஒரு லாஜுல ரூம் போட்டிருக்காரு” மது முகத்தை சுருக்க,
“இந்த ஊருக்கு இருக்கிறதே ரெண்டு லாட்ஜ், இதுதான் கோவிலுக்கு பக்கம்னு இதுல ரூம் போட்டிருக்கான். நீ ஐடியா கொடுத்து நான் நம்ம வீட்டை விக்கலானா இன்னைக்கி எல்லாரும் ஒண்ணா நம்ம வீட்டுல இருந்திருப்போம். அவனே! பழசை மறந்து ரூம் போட்டு இருக்கான் அத விட்டுட்டு நொட்டம் சொல்லிக்கிட்டு. வீட்டை வித்த காசுல தொழில் ஆரம்பிச்சோம். அத ஒழுங்கா பார்க்க விட்டியா? பாரின் ட்ரிப்பு, மாசத்து ரெண்டு தடவ பியூட்டி பாலர், வாரம் தவறாம சினிமா, பார்ட்டி.  வீட்டுல என்னைக்காவது சமைக்கிரியா? தினமும் பாஸ்ட் புட்.  காசும் கரைஞ்சி தொழிலையும் இழுத்து மூட வேண்டிய நிலம. உன் அண்ணன்களுக்கு உன் குணம் தெரியும். அதனாலதான் உன்ன ஒதுக்கி வச்சிருக்காங்க, அடக்கிவாசி. போ போ  தூங்கி எந்திரிச்சா பாப்பா அழுதுட போறா, அவளை கவனி, சீக்கிரம் ரெடியாகி போகணும் நலங்கு வைக்கிறாங்க” சிடுசிடு என்று எரிந்து விழுந்தவன் குளியலறைக்குள் புகுந்துக்கொள்ள வாயை இறுக மூடிக்கொண்டாள் மது.
வீட்டை விற்க மது ஐடியா கொடுத்தாலும், தனது அப்பாவையும், சொந்த அண்ணனையும் ஏமாற்றுகின்றோம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல்தான் ஸ்ரீராம் அந்த தவறை செய்தான். செய்யும் பொழுது இனித்த மனைவி, வழி தவறியதும் கசக்க ஆரம்பித்திருந்தாள்.
மதுவின் வீண் விரயத்தாலும், உதாறித்தனத்தாலும், சதா வீட்டில் சண்டையும் சச்சரவுமாகத்தான் ஸ்ரீராமின் நாட்கள் நகருகின்றன. கல்யாணத்தை சாக்காக வைத்து வந்ததும் அண்ணன்களிடம் பணம் கேட்கத்தான். வாசனை பற்றி நன்கு தெரியும் என்னதான் கோபமாக இருந்தாலும் மனம் இளகி விடுவான். ஸ்ரீவத்சன் அவ்வாறு இளகா விட்டாலும் பேசி கரைக்கலாம் என்ற எண்ணம்தான் ஸ்ரீராமிடம். தான் எல்லாரிடமும் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணமும் மது தான் என்று அவன் மனதில் கோபம் படிந்திருக்க, அவளை அடிக்கவும் ஆரம்பித்திருந்தான்.
இதற்கிடையில் குழந்தையும் உருவாகி, அதிலும் இருவருக்கும் எந்த சந்தோஷமும் இல்லை. குழந்தை அழுதாலும் மதுவுக்கு அடி விழும் என்ற நிலைதான் அவள் வாழ்க்கை.
காதலிக்கும் காலத்தில் அவள் சொல்வதை தவிர வேறு பேச்சு எதுவும் ஸ்ரீராமின் காதில் விழாதவாறு அவனை மயக்கிதான் வைத்திருந்தாள் மது. கல்யாணம் செய்த பின்பும் அப்படிதான். அவள் சொல்வதுதான் வேத வாக்கு. அவள் சொல்வதை கேட்டுத்தான் வீட்டை விற்க திட்டம் தீட்டி விற்று விட்டான் ஸ்ரீராம்.
மதுவின் ஆடம்பர செலவுகளால் ஸ்ரீராமால் தொழிலிலை முன்னேற்ற முடியவில்லை. காதல் போய் அவளை வார்த்தைகளால் பந்தாட, சமீபகாலமாக குடிப்பதும், அடி உதை என்று நரக வாழ்க்கைதான். மதுவின் குடும்பத்தார் அவளை ஒதுக்கி வைத்திருப்பதால் அவளால் ஸ்ரீராமை விட்டு போகவும் முடியவில்லை. கோபத்தை கட்டுப்படுத்தியவள் நலங்குக்கு செல்ல தயாரானாள்.
குடும்பத்தார் மட்டும் கூடி இருக்க, எமிலிக்கு நலங்கு வைக்கும் நிகழ்வு நடந்துக்கொண்டிருந்தது. பெரிதாக செய்ய வேண்டும் என்று நித்யா ஆசைப்பட்டாலும் ஸ்ரீவத்சன் மறுத்துவிட்டதால் இந்த சடங்கு எவ்வாறு நடைபெறுவது என்று எமிலிக்கு காட்டுவதற்காவாசுகியோடு சேர்ந்து நித்யா ஏற்பாடு செய்திருந்தாள்.
ஸ்ரீராமும், மதுவும் உள்ளே நுழையவும் நித்யா வரவேற்று சாதாரணமாக பேச சத்யா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள். ஸ்ரீராம் ராமநாதனோடு பேச முற்படுகையில் அவர் எழுந்து வெளியவே! சென்று விட்டார். ஸ்ரீராமை திருமணத்துக்கு அழைத்திருப்பதாகவும், எந்த பிரச்சினையும் பண்ணக் கூடாதென்று ஸ்ரீவத்சன் சொன்னதால்தான் ராமநாதன் கோபமாக வீடு வந்ததே!
வாசன் கூட “சரி விடுங்கப்பா… உங்க மனசு நோகும்னு நான் என் கல்யாணத்துக்கு கூப்பிடல, அவனாச்சும் கூப்ட்டானே! சந்தோசமா வந்துட்டு போகட்டும். இந்த ரெண்டு வருசத்துல அவன் மாறி இருந்தாலும் இருப்பான்ல” என்றவன்தான் இந்த வீட்டில் தங்குவதற்காக அறை பத்தாததால் சத்யா குடும்பத்துக்கும், ஸ்ரீராம் குடும்பத்துக்கும் லாட்ஜில் அறை ஒதுக்கி இருந்தான். சத்யா தங்களது வீட்டுக்கு வர மாட்டாள், ஸ்ரீராமை அழைக்க ராமநாதன் விரும்பமாட்டார் என்பதனால்தான் இந்த ஏற்பாடு. வீட்டில் இடவசதி பாத்தா விட்டாலும் கல்யாணம் என்று வந்தால் உறவுகளோடு ஒன்றாக இருப்பது தனி சந்தோஷத்தைக் கொடுக்கும், அதெல்லாம் ஒரு வயதுக்குள் தான். உறவுக்குள் கசடுகள் இருக்கும் பட்சத்தில் வேறு வழியில்லை. மாற்று ஏற்பாடு செய்துதான் ஆக வேண்டும்.
சத்யாவும் குழந்தையோடு தனியாகத்தான் வந்திருந்தாள். அவள் கணவன் கடையை பூட்டி விட்டு வர மறுத்து விட்டானாம். கல்யாணம் அன்றும் கடையை பூட்ட வேண்டும் என்பதால் கல்யாணத்துக்கே! வருகிறானாம். அதை அவள் கணவன் வராத குறையாக கூற வில்லை. கடையில் வியாபாரம் மும்முரமாக நடப்பதாகவும் விட்டுவிட்டு வந்தால் பெரும் நஷ்டம் என்பது போலும்தான் கூறினாள்.
“ஏன் அண்ணி அவ்வளவு வியாபாரம் நடக்குதுனா, வேலைக்கு இன்னும் நாலு பேர போட்டுட்டு, அண்ணா ஜம்முனு இருக்க வேண்டியது தானே!” என்று மது வாயை விட சத்யாவின் முகம் இரத்த நிறமானது.
உண்மையில் கடையில் பெரிதாக இலாபம் இல்லை. காலையிலிருந்து மாலைவரை கடையை திறந்து வைத்திருந்தால்தான் நடக்கும் வியாபாரத்தில் கொஞ்சமாவது வருமானம் பார்க்க முடியும். அதனால் ரமேஷ் எங்கும் செல்வதுமில்லை. சத்யாவை எங்கும் அழைத்து செல்வதுமில்லை. இதை தன் சகோதரர்களிடம் கூறாமல் பெருமைப் பாடப் போய் மது கேட்டதில் மாட்டிக்கொள்ள போனவள்
“ஆமா, ஆமா அடுத்தவன் பார்பான்னு விட்டா புறங் கைய நக்க வேண்டியதுதான்” என்று ஸ்ரீராமை இகழ்ச்சியாக பார்க்க,
ஸ்ரீராம் “இது உனக்குத் தேவையா” என்று மனைவியை எரித்து விடுவது போல் பார்த்தான். அவன் தொழில் படுக்கக் காரணமே! யார் யாரையோ! நம்பி ஒப்படைத்து விட்டு வெளிடாடுப்பயணம், சுற்றுலா என்று இவர்கள் ஊர் சுற்றியதுதான்.
என்னதான் ரமேஷ் சொற்ப வருமானத்தை கொண்டு வந்து கொடுத்தாலும், வீட்டு வாடகை, வீட்டு செலவு என்று போக, கணவனை தன் கைக்குள் வைத்துக்கொண்டு குடும்பம் நடாத்தினாள் சத்யா. மதுவுக்கு அந்த சூட்சமம் தெரியவில்லை. அதனால் அவளுக்கும் ரமேஷுக்கு இடையில் எந்த பிரச்சினையும் வந்ததில்லை. சொல்லப்போனால் சத்யாவின் மகுடியில் மயங்கிய பாம்பாக இருந்தான் ரமேஷ். வீட்டுக்கும் செல்வதில்லை. இதனால் புஷ்பாக்கும் சத்யாவுக்கு நடுவில் பிரச்சினை உருவாகி சத்யாவை திட்ட  மாமியாரிடம் கணவனுக்கு தொழிலில் விருத்தி இல்லை அதனால் தான் வீட்டுக்கு வராமல் இருக்கிறார் என்று பேசி மாமியாரை சரிக்கட்டி வைத்திருக்கிறாள். அன்னை திட்டியும் சண்டை பிடிக்காமல் பொறுமையாக போகும் மனைவி ரமேஷுக்கு தேவதையாக தெரிந்திருப்பாள் போலும். அவன் வீட்டில் அண்ணன் அண்ணிகளுக்கிடையில் அடிக்கடி சண்டை நிகழும். இல்லையா அவன் அம்மா யார் கூடையாவது சண்டை பிடிப்பாள். ஆக மொத்தத்தில் சத்யாவை பேசினால் ரமேஷுக்கு கெட்ட கோபம் வரும் என்று அறிந்த புஷ்பாவும் வாயை இறுக மூடிக்கொண்டிருப்பவள் அந்த கோபத்தை வாசனின் குடும்பத்தார் மீதுதான் காட்டமாக காட்டிவிட்டு செல்வாள்.
நலங்கு வைக்கும் நிகழ்ச்சியும் இனிதே! நிறைவேறி இருக்க, வாசன் ரோஹானோடு வெளியே சென்றிருந்தான். ஆத்மநாதன் கால் வந்ததால் வெளியே சென்றிருந்தான். ராமநாதன் ஸ்ரீராமின் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே காற்றாட சென்றிருந்தார். பகலுணவை தயாரித்து எடுத்து வர வாசுகி நித்யாவோடு வீடு சென்றிருந்த நேரம் மற்றவர்கள் வாசலில் கதையடித்துக்கொண்டிருந்தனர்.
எதை மாற்றினாலும் பிறவி குணத்தை மாற்ற முடியாதில்லையா? ஸ்ரீவத்சனை அழைத்த சத்யா “வெள்ளக்கார பொண்ணா புடிச்சாலும் பரவால்ல பேரயாச்சும் பார்த்து பிடிச்சிருக்கணும், எலி, எலிக்குஞ்சுனு” என்று கிண்டல் செய்ய மதுவும் அவளோடு சேர்ந்துக்கொண்டாள். இவ்வளவு நேரமும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்ட இருவரும் இந்த விஷயத்தில் ஒருநொடியில் ஒற்றுமையானார்கள்.
எமிலிக்கு அவள் தமிழில் சொன்னது புரியாவிடினும் எதோ கிண்டல் செய்கிறாள் என்று புரிய, என்ன எது என்று ஸ்ரீவத்சனைக் கேக்க அவன் என்ன சொல்வதென்று முழித்தவன் பல்லைக் கடிக்கலானான். சத்யாவை பற்றி அவனுக்கு நன்கு தெரியும் இப்படித்தான் ஏதாவது ஏடா, கூடமாக பேசி வைப்பாள். இத்தனை வருடங்கள் கடந்தும் குணத்தை மாற்றிக்கொண்டு இருப்பாள் என்று எண்ணி இருக்க, கொஞ்சமாவது மாறாமல் பேசுபவளை முறைக்கவும் முடியாமல் முறைத்தால் அதை வைத்தே! எமிலி கண்டுகொள்வாள் என்ற அச்சம் வேறு அவன் மனதை பதைபதைக்க செய்ய, உணர்ச்சிகளை முகத்தில் காட்டாது இருக்க பெரும்பாடுபடலானான்.
“எங்கிருந்தான் பிடிச்சானோ! தெரியல” என்று மதுவை வசைபாட முடியாமல் ஸ்ரீராமை மனதால் வசை பாடியவன் முறைக்கவும் தவறவில்லை. அவன் மனதோ! சின்ன வயதில் சத்யா நித்யாவையும், வாசனையும் மற்ற உறவுகளையும் பேசும் பொழுது எவ்வளவு சிரித்திருப்பாய். உனக்கு வந்தா மட்டும் இரத்தமா? அனுபவிடா என்று கேலி செய்ய கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்
“ஏன் சித்தி ஒரு குழந்தைக்கு பேர் வைக்கும் போது பெத்தவங்க, அர்த்தமெல்லாம் பார்த்து தானே! வைக்கிறாங்க, அவங்க பேர் இங்கிலீஸ்ல இருக்கு நீங்க தமிழ்ல அர்த்தம் சொன்னா சரி வருமா? நம்ம பேர் கூட சில வேல வேற மொழில வெவ்வேறு அர்த்தங்களை கொடுக்கலாம்ல, அதுக்காக இப்படி பேசுறது நல்லதில்லை” என்று சஹானா கேக்க
“ஆமா, ஆமா என் பொண்டாட்டி பேரு மது தமிழையே! அதுக்கு அர்த்தம் என்னானு நான் சொல்லனுமா என்ன?” என்று சத்தமாக ஸ்ரீராம் சிரிக்க மது கணவனை நன்றாக முறைத்தாள்.
“ஒரு வேல எமிலி அத்த அழகா இருக்காங்க, இங்கிலீசு பேசுறாங்க என்ற பொறாமையா?” என்று அக்ஷரா கிண்டலாக கேக்க
“இருக்கும் இருக்கும், இவங்க ரெண்டு பேர் கலரையும் பார்த்தா காக்கா கலரில்ல, நித்தி அக்காவும் அழகாதான் இருக்காங்க இல்ல, அதான் பொறாமைல வேகுறாங்க” இருந்த கடுப்பை இவ்வாறு பேசி தீர்த்துக்கொண்டான் ஸ்ரீவத்சன்.
பெயரில் ஆரம்பித்தது தோல் நிறத்துக்கு மாறி இருக்க, அண்ணனும் தம்பியும் அத்தோடு விடாமல்
“சத்யா சத்யா உன் பல்லு என்ன சொத்தையா?
ஒத்தைக்கு ஒத்த வரியா? நீ வரியா?” என்று பாட     
மாறி மாறி நால்வரும் இவர்கள் இருவரையும் கிண்டல் செய்ய, கிண்டல் பேச்சாக ஆரம்பித்தது விபரீத பேச்சாக மாறியது.
“ஆமாடி உங்கம்மா போல பியூட்டி பாலர் போய் அழகாகணும் என்று எங்களுக்கு தலையெழுத்தா? இயற்கை அழகு எனக்கு கொட்டிக்கிடக்கு” என்று சத்யா நித்யாவை தாக்க, அது நித்யாவின் பெண்களின் கோபத்தை தூண்டி இருந்தது.
நித்யா அங்கு இல்லை. இல்லாத அவளை எதற்கு தாக்கி பேச வேண்டும் என்ற கோபம் மேலோங்க “எங்க அம்மாக்கு என்ன சித்தி குறை சொந்தமா வீடு, டில்லில போக வர, காரு, வேண்டியதை கேட்டா அப்பா வாங்கி கொடுப்பாரு. அவங்க ராணி மாதிரிதான் இருக்காங்க” சத்யா இருப்பதோ வாடகை வீட்டில் சொந்த வாகனம் இல்லை. அதைத்தான் சஹானா மறைமுகமாக சொல்லிக் காட்டினாள்.
“எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம், ராமன் மாதிரி புருஷன் இல்லையே!” என்று சத்யா சொல்லும் போதே! அண்ணன் தம்பி இருவரும் புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். இந்த பேச்சு செல்லும் திசை சரியில்லையே! என்று எண்ணும் பொழுது ஆத்மநாதன் உள்ளே நுழைந்தான்.
“ஏன் எங்கப்பா ராமாரா? க்ரிஷ்ணனானு உங்க கிட்ட பஞ்சாயத்து பண்ண சொன்னோமா?” சஹானா கோபமாக கேக்க
“என்ன பிரச்சினை?” ஆத்மநாதன் கேக்க
“இல்லப்பா… நீங்க அம்மாவை சரியா பாத்துக்கிறதில்லையோனு சித்திக்கு டவுட்டு.அது மட்டும் டவுட் இல்ல. நீங்க ராமரா, க்ரிஷ்ணனானு வேற டவுட்டு. என்னைத்தவிர உங்கள பத்தி சரியா யாருக்கும் தெரியாதில்ல” என்று அக்ஷரா சொல்ல ஆத்மநாதன் ஒருநொடி ஆடி நின்றான் என்றால் சத்யா வாயை கப்பென்று மூடிக்கொண்டாள்.
எதோ வார்த்தைக்கு வார்த்தை வாயாடி வாய் தவறி வெளியே வந்து விட்டது. ஆத்மநாதன் பிரச்சினை பண்ணினால் அனைவரும் அவளைத்தான் குற்றவாளியாக்கி விடுவார்கள் என்று சத்யா மௌனம் காக்க,
தந்தையின் மௌனத்தைக் கண்டு “நீங்க அம்மாக்கு உண்மையா இருந்தா யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை இல்லப்பா…..” என்ற அக்ஷராவை சஹானா புரியாது பார்த்து வைக்க, வாசன் ரோஹானோடு உள்ளே வரவும் அப்பேச்சு தடைப்பட்டது.  
விடிந்தால் கல்யாணம். மதிய உணவை உண்டு சிறிது ஓய்வெடுத்தவர்கள் மாலையிலையே! மருதாணியும் இட்டுக்கொண்டார்கள். இரவில் நேரங்காலத்தோடு தூங்கி எந்திரிச்சால்தான் காலையிலையே! கோவிலுக்கு செல்ல முடியும்.
ஆத்மநாதனும் நித்யாவும் ஒரு அறையில் தங்கியிருக்க, ஆதி மற்றும் ஸ்ரீவத்சன் ஒரு அறையில் தங்கிக் கொள்ள பெரிய அறையில் மற்ற மூவரும் தங்கிக் கொண்டனர்.
அதற்கும் மது கிண்டலாக கேட்பது போல் ஸ்ரீவத்சனிடம் “அந்த நாட்டில் ஒன்றாகத்தான் இருந்திருப்பீர்கள் இங்கு மட்டும் எதற்கு தனியாக இருக்க வேண்டும் நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்” என்று கூற
“ஏன் மது நீயும் ஸ்ரீராமும் காதலிச்சுதானே! கல்யாணம் பண்ணீங்க? அப்போ நீயும் கல்யாணத்துக்கு முன்னாடியே!” என்று நிறுத்த மதுவின் முகம் கன்றிப்போனது.
சத்யா வரிஞ்சிக்கட்டிக்கொண்டு “என்ன நீ மதுவும், எமிலியும் ஒண்ணா? மது எங்க நாட்டு கலாச்சாரத்துல வளர்ந்தவ? எமிலி அப்படியா?” என்று மதுக்காக பரிந்து பேச
“என்ன மது? எமிலினு? ரெண்டு பேருமே! எனக்கு தம்பி பொண்டாட்டிங்கதான். ஏன் எமிலிக்கு அங்க கல்யாணம் பண்ணி அங்க இருந்திருக்கலாமே! நம்ம கலாச்சாரத்தை மதிச்சு வந்த பொண்ண இப்படித்தான் கொச்சையா பேசுவீங்களா? சரி அவதான் அந்த கலாச்சாரம்னு சொல்லுற ஸ்ரீவத்சன் நம்ம கலாச்சாரத்துல வளர்ந்த பையன்தான்! அப்போ அவனையும் தப்பா பேசுவியா?” நித்யா ஒரே போடாக போட சத்யாவும், ரமேஷ் இன்று வர மாட்டேன். நாளை கல்யாணத்துக்கே வருவதாக போன் பண்ணி சொல்லி இருந்ததால் முகத்தை சுருக்கியவாறு அமைதியாக ஸ்ரீராமோடு லாட்ஜை நோக்கி நடந்தாள்.
இந்த உரையாடல் வாசன், வாசுகி, ஆத்மநாதன் மூவரின் காதிலும் விழுந்ததுதான் நித்யா பேசுவதால் அவர்கள் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஸ்ரீராமும் அங்குதான் இருந்தான். வரும் பொழுதே! மனைவியிடம் அனாவசியமாக பேசி வம்பு வளர்க்காதான்னு சொல்லித்தான் அழைத்து வந்தான். சொல்லியும் கேட்காவிட்டால் பட்டுத் தெளியட்டும் என்று விட்டு விட்டான்.

Advertisement