Advertisement

அத்தியாயம் 15
ஸ்ரீவத்சனுக்கு சின்ன வயதிலிருந்தே! ஆத்மநாதனை பார்க்கும் பொழுது ஒரு பிரமிப்பு, சுயமாக படித்து முன்னேறியவன். கைநிறைய சம்பாதிக்கிறான். யார் தயவையும் எதிர்பார்க்காமல் இருக்கிறான் என்று அவனின் புகழ் பாட தானும் மாமாவை போல் தான் வரவேண்டும் என்று ஆசைகொண்டான்.
காலேஜ் சென்றவனின் எண்ணமெல்லாம் படிப்பில் மட்டும்தான் இருந்தது. காதல் என்ற ஒன்றை தூரவே வைத்திருந்தான். அதனால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது என்பதுதான் உண்மை.
வாசன் காலேஜுக்கு பணம் கட்டுவதெல்லாம் அண்ணனின் கடமை என்று எண்ணினானே தவிர அவனின் பாரத்தை குறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த வகையில் ஸ்ரீவத்சன் சுயநலக்காரன்தான்.
“ப்ரீ டைம்ல கடைக்கு வாடா” என்று வாசன் அழைப்பதும், “அண்ணா தனியா கஷ்டப்படுறான் போய் கூட மாட ஒத்தாசையா இருடா..” என்று நித்யா கூறுவதெல்லாம் தன்னை படிக்கவிடாமல் செய்வதற்காவேண்டி என்றுதான் அந்த வயதில் அவனுக்குத் தோன்றியது.
அதனாலயே! வீட்டாரிடமிருந்து தப்பிக்க கண்காணாத இடத்துக்கு வேலைத் தேடி சென்றவன் ஆத்மநாதனோடு மட்டும் தொடர்பில் இருந்தான். கைநிறைய பணத்தை சம்பாதித்த பிறகும் வாழ்க்கையில் திருப்தி இல்லை. வெறுமையாக இருந்தவனுக்கு தன் வாழ்விலும் ஒரு பெண் வந்த பின்னால் உறவுகளின் அருமையை உணர்ந்து கொண்டிருப்பான் போலும் திருமணம் செய்ய ஊருக்கு வர முடிவு செய்திருக்கின்றான்.
கல்யாண ஏற்பாடுகள் ஊர் கோவிலில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் தங்கவும், நித்யா குடும்பம் தங்கவும் வாசன் ஊரிலுள்ள புதிதாய் கட்டப்பட்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தான்.
ஏதாவதொரு லாட்ஜை பார்க்குமாறு நித்யா கூறி இருக்க, பெண் பிள்ளைகளோடு அங்கு தங்க வேண்டுமா? எந்த மாதிரியான ஆபத்துக்கள் வேண்டுமானாலும் வரலாம். ஸ்ரீவத்சன் கல்யாணம் பண்ண போகும் பெண் வேறு வெளிநாட்டுப் பெண். ஆர்வக்கோளாறில் ஏதாவது செய்யப்போய் ஆபத்தை விலைகொடுத்து வாங்கிடப் போகிறாள். எல்லோரும் ஒரே இடத்தில் ஒருவருக்கொருவர் கண்பார்வையில் இருப்பது நல்லது அது மட்டுமல்லாது வீடாக இருந்தால்தான் அது கல்யாண வீடாகவே! இருக்கும் என்றுதான் மூன்று அறைகளைக் கொண்ட இந்த வீட்டை வாடகைக்கு வாங்கி இருந்தான் வாசன்.
கோவிலுக்கு அருகில் இருப்பதனாலும், அவன் வீட்டுக்கு அருகில் இருப்பதனாலும், நினைத்த நேரத்தில் சென்று வர முடியும், சமையலுக்கும் ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி விட்டால் வாசுகியும் நித்யாவும் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் தோன்ற கல்யாண வேலைகளை நிம்மதியாக பார்க்க முடிந்தது.
கல்யாணபட்டு, தாலி, மெட்டி என்று எதிலும் குறையில்லாது வாங்குமாறு நித்யா கூறி இருக்க, ஸ்ரீவத்சன் பணமும் வாசனின் வங்கிக் கணக்கில் போட்டு விட்டிட்டிருந்தான்.
“இதெல்லாம் ஒரு செலவா நித்தி நான் பார்த்துக்கொள்ள மாட்டேனா?” அலைபேசி உரையாடலின் இடையே வாசன் கேக்க
“அவன் பொண்டாட்டிக்கு அவன் செலவு செய்யணும்னு ஆசைப்படுறான். அத நாம புரிஞ்சிக்கணுமா இல்லையா? நமக்குத்தான் பண்ணுறதில்ல. பொண்டாட்டிக்காவது பண்ணுறானேன்னு சந்தோசப்படு வாசா” என்று நித்யா சொல்ல
“அவன் செலவு பண்ணி வாழுற நிலைமையில்லையா நாம இருக்கோம் நித்தி” என்று வாசன் சிரிக்க,
“கடவுள் கிருபையால் யார்கிட்டயும் கையேந்துற நிலமை வரக்கூடாது. வெளிநாட்டுக்கு போனவன் அக்கானு அன்பா பேசி இருப்பானா? எப்போ பார்த்தாலும் மாமான்னு இவர் கிட்ட மட்டும்தான் பேசுறான். அந்த மாமான்காரன் பண்ணுற வேல தெரிஞ்சா இந்த மரியாதையெல்லாம் கொடுப்பானா?” பெருமூச்சு விட்டபடி நித்யா பேச
“ஆத்மா மாமா படிச்சு முன்னேறினவரு அவர் வழில இவன் போனான் அந்த மரியாதைதான்” ஸ்ரீவத்சன் ஒன்றும் தவறான வழியில் சொல்லவில்லையே! என்று கூறினான் வாசன். 
“வாசா நான் ஒரு உண்மைய சொல்லவா? ஸ்ரீவத்சன் அந்த வெள்ளக்கார பொண்ண கூட்டிட்டு வாரான் சரி. மாமா அந்த பொண்ண தப்பா பாப்பாரோன்னு எனக்கு பயமா இருக்கு” நித்யாவின் குரலில் பயத்தை விட வெறுமைதான் அதிகமாக இருந்தது.
நித்யா சொன்னதைக் கேட்டு வாசனுக்கு திக்கென்றாக, என்ன சொல்வதென்று யோசித்தவன் “அப்போ வாசுகி, மதி எல்லாரையும் தப்பாதான் பாக்குறதா சொல்லவரியா?” குடும்பத்தில் உள்ள பெண்களையும் அவர் இப்படித்தான் பார்த்து வைக்கிறாரா? சத்யாவிடம் அப்படி நடந்துகொள்ள வில்லையே! என்ற குற்றச்சாட்டோடு அவள் பயமும் புரிய கேட்டான்.
“ப்ச்.. அப்படியில்ல வெள்ளக்கார பொண்ணு என்றதும் ஒரு நெருடல். அந்த பொண்ணுகிட்ட வழிஞ்சி நாலு அறவேனாலும் வாங்கிக்கிட்டா சந்தோசம்தான். ஸ்ரீவத்சனுக்கு இவர் மறுமுகம் தெரிஞ்சிடும் இல்லை” என்றவள் “வெள்ளக்கார பொண்ணு வேற இதெல்லாம் சகஜம்னு அவர்கூட போய்டுவாளோ தெரியல” விரக்தியாக சொல்லி முடிக்க
மனவேதனையில் கண்டதையும் போட்டு குழப்பிக்கொள்கிறாள் என்று வாசனுக்கு புரிய “ஆமா கேக்கணும்னு நினச்சேன். மாமா தப்பு பண்ணுறார்னு உன் கிட்ட யாராச்சும் சொன்னாங்களா? இல்ல நீயே! நேர்ல பாத்தியா?”
நித்யா அழுதவாறு சொன்னதில் அன்று வாசனால் யோசிக்க முடியவில்லை. போதாதற்கு வாசுகியை அடித்து வீட்டில் வேறு பிரச்சினை. அதை தொடர்ந்து வாசுகி கற்பமானதும், கரு கலைந்தது என்றும் அவன் வாழ்க்கையிலையே! சூறாவளி போல் பிரச்சினைகள் சுழற்றியடிக்க நித்யா பிரச்சினையை பற்றி சிந்திக்க முடியவில்லை.
சத்யா வீட்டுக்கு போன போது ப்ரியங்கா என்று யாரோ ஒருத்திதான் சத்யாவிடம் கூறியதாக சத்யா கூறியதும், அதேபோல் நித்யாவிடமும் யாராவது பார்த்து விட்டு கூறி இருந்தால்? ஒன்றுமில்லாததற்குத்தான் இவள் அழுது கரைந்தாளோ! என்ற எண்ணத்தில்தான் வாசன் கேட்டான். 
“யாரும் கூறல வாச.. முன்ன எல்லாம் வீட்டுக்கு வந்தா டீவி பாப்பாரு இப்போ போனும் கையுமா உக்காந்துடுவாரு. யார் கூட சேட் பண்ணுறாருன்னு தெரியல அடிக்கடி சிரிக்கிறார். என்னனு கேட்ட என் மேல எறிஞ்சி விழுறாரு. போன வேற லாக் பண்ணி வச்சிருக்குறாரு. நான் சந்தேகப்படுறதுல நியாயம் இருக்கா? இல்லையா? சொல்லு” இத்தனை வருடங்களாக தான் உயிரையே! வைத்திருந்த தன் கணவன் பொய்த்துப்போன கோவமும், ஆதங்கமும் குரலில் தெறிக்க பேசினாள் நித்யா.
“அப்போ நீ எதையும் கண்ணால பார்க்கல” வாசனுக்கு கோபம் எட்டிப் பார்த்தாலும் நித்யாவிடம் கோபப்பட முடியவில்லை. நித்யா யாரோ! சொன்னதை வைத்து முடிவெடுப்பவளும் இல்லை. எல்லா பெண்களும் கணவன் விஷயத்தில் மட்டும் கோணலாக யோசிப்பார்கள் என்றுதான் எண்ணினான். ஆத்மநாதனின் மேல் வைத்த அதீத பாசம் நித்யாவின் கண்ணை மறைத்து விட்டது, அதனால் எழுந்த கோபம் என்றுதான் வாசனுக்கு தோன்றியது.
“நான் பார்கலைனா என்ன? அக்ஷரா பார்த்திருக்கா, அவ ஸ்கூல் பிரெண்ட்ஸ் கூட ஒரு ஹோட்டல்ல பர்த்டே பார்ட்டினு போய் இருக்கா அப்போ இவரு ஒரு பொண்ணு கூட லிப்ட்டுல இருந்து இறங்கி வந்திருக்காரு” நித்யாவின் குரலில் வேதனையோடு, வெறுப்பும் அப்பட்டமாகவே இருந்ததை வாசன் நன்கு உணர்ந்தான்.
நித்யா அக்ஷரா பார்த்ததை கூறிய போதும் வாசன் அதை தவறாக எடுக்கவில்லை. ஒரு பெண்ணோடு நின்று பேசுவதையெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ள முடியுமா? இதை தானே! அவன் சத்யாவிடமும் கூறினான். 
“என்ன நித்தி நீ. அக்ஷரா சின்ன பொண்ணு. அவதான் புரியாம பேசுறான்னா நீயுமா? மாமா யாரையாச்சும் மீட் பண்ண அந்த பொண்ணு கூட வந்திருக்கலாம் இல்லையா?” வாசன் தங்கையின் மனவேதனை போக்க பேச
“சஹானா மாதிரி அமைதியான பொண்ணு இல்ல அக்ஷரா ரொம்ப ஷார்ப். அப்பாவ பார்த்ததும் கிட்ட போய் பேசி இருக்கா. அப்போ அவர் அந்த பொண்ணு இடுப்புல கைய போட்டுக்கிட்டுதான் நடந்தே! வந்திருக்காரு. லிப்ட் வேற கண்ணாடியிலானது.  ரகசியம் பேசுறது மாதிரி  ரெண்டு பேரும் கொஞ்சி பேசுறத பார்த்த பின்னாலதான் லிப்ட் திறந்ததும் போய் பேசி இருக்கா, என்ன தில்லு. இவ போய் நின்னதும் அவர் மூஞ்ச பார்க்கணுமாமே! நீ எங்க இங்கனு இவள திட்ட ஆரம்பிச்சிருக்காரு. சஹானாதான் அப்பா திட்டினா அமைதியா போறா. இவ அப்பா காது வழியா புகுந்து வெளிய வரவளாச்சே ஹிந்தியிலையே! ஹாய் டேடி பிரெண்ட்ஸ் பர்த்டே பார்ட்டி டீச்சர்ஸ் கூட வந்திருக்காங்க, வாங்க அறிமுகப்படுத்தி வைக்கிறேன்னு தெனாவட்டா சொன்னவ, யாரிந்த ஆன்டினு வேற கேட்டிருக்கா, அந்த பொண்ணு மூஞ்சு போன போக்க பார்க்கணுமேன்னு சொல்லி சிரிச்சா”
நித்யாவின் குரலில் வெறுமை மட்டுமே! எந்த அன்னையும் தான் பெற்ற பிள்ளைகள் தந்தையை இவ்வாறு பார்த்து விட்ட பின்  எப்படி பட்ட மனநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற அச்சம் இருக்கும். அந்த அச்சம் நித்யாவின் மனதிலும் இருக்கு. அதையும் தாண்டி குரலில் ஒரு வெறுமை இருப்பது வாசனுக்கு புரிய இந்த விஷயத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று கூட தோன்றவில்லை.
“ஆமா.. அக்ஷரா இத உன் கிட்டு வந்து சொன்னா சரி, அத அவ எப்படி எடுக்கிட்டா.. அவளுக்கு பன்னெண்டு வயசு தானே! ஆகுது?” தந்தை தவறு செய்கிறார் என்று புரிந்தும், நேராக சென்று பேசி இருக்கிறாள். அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.  வாசனுக்கு சற்று ஆச்சரியம்தான். சிறு அதிர்ச்சி கூடவா இந்த குழந்தைக்கு இல்லை. அவளுடைய மனநிலை எவ்வாறு இருக்கிறது என்று அச்சம் கொண்டான். 
“எல்லாம் கால கொடும வாச… இங்க பாதி பெத்தவங்க இப்படித்தான் போல, அவ கிளாஸ்ல சிங்கிள் ப்ரெண்ட்ஸ் அதிகம். இதெல்லாம் பார்த்து நம்ம குடும்பத்துல இந்த மாதிரி நடந்த எப்படி முகம் கொடுக்கணும்னு புரிஞ்சிகிட்டாளோ! என்னவோ!” என்ற நித்யாவின் குரல் விரக்தியாகவே! ஒலித்தது. அன்பான கணவன், அழகான குழந்தைகள், நிறைவான வாழ்க்கை எந்த குறையும் இல்லை. வாழ்க்கையில் ரொம்ப சந்தோசமாக இருப்பதாக சொல்பவள்தான். சில நேரம் பெருமையாகவும் இருப்பதாக வாசனிடம் சொல்வாள். வாசனிடம் மட்டும்தான் சொல்வாள், அவள் மனதை திறக்கும் ஒரே ஜீவன் வாசன் மட்டும்தான். 
குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். சில நேரம் அவர்கள் எங்களை யோசிக்க வைத்து விடுவார்கள் என்று நினைத்த வாசன் “மாமா அக்ஷரா கிட்ட உன்கிட்ட சொல்ல கூடாதுனு மிரட்டி இருகலயா?”
“மிரட்ட எல்லாம் இல்ல. அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப மனசு கஷ்டப்படுவானு சென்டிமெண்டா பேசி இருக்காரு. அங்கதான் அவரு தப்பு பண்ணிட்டாரு. அப்படி பேசி காசும் கொடுத்து இவ கூடயே இருந்து வீட்டுக்கு வந்தாரு. பணத்தையும் அவர்கிட்ட இருந்து வாங்கிக்கொண்டவ, அம்மா அப்பா உன்ன ஏமாத்திகிட்டு இருக்காருன்னு உண்மையையும் சொல்லிட்டா. அவ பார்க்கத்தான் மாமா மாதிரி இருப்பா… ஆனா அப்படி அம்மா குணம்தான். பொய் சொல்லுறது, ஏமாத்துறது சுத்தமா ஆகாது. என்ன நடந்தாலும் உண்மைய சொல்லி வார பிரச்சினைக்கு முகம் கொடுக்கணும்னு சின்ன வயசுல இருந்தே! சொல்லி கொடுத்ததனால என் கிட்ட உண்மைய சொல்லிட்டா”
அக்ஷராவை நினைத்து வாசனுக்கு ஆச்சரியம்தான். தந்தை பணம் கொடுத்ததை வாங்கிக் கொண்டவள் அமைதியாக கூட இருந்திருக்கலாம். அல்லது பணத்தை வாங்காது அன்னையிடம் கூறுவேன் என்று சொல்லி இருக்கலாம். அவ்வாறு செய்வதால் தாயும், தந்தையும் சண்டையிடுவார்கள் என்று அவளுக்கு தெரியும்தானே! அவள் என்ன நினைத்து அப்படி செய்து இருப்பாள். ஒன்றும் புரியவில்லை.
 “என்ன வாசா சத்தத்தையே! காணோம்” சில நிமிட மௌனத்தில் நித்யா தன்னை மீட்டுக்கொண்டிருந்தால் போலும் குரல் இயல்பாக ஒலித்தது.
“என்ன சொல்லுறதுனு தெரியல நித்தி. சின்ன பொண்ணு இந்த மாதிரியான விஷயமெல்லாம் அவ மனசையும் பாதிக்கு. ஆமா சஹானா, ஆதிக்கு இந்த விஷயம் தெரியுமா?” நித்யாவுக்கும், மாமாவுக்கும் நடுவில் பிரச்சினை என்றால் அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள். குழந்தைகளும் வந்துவிட்டால் பிரச்சினை வேறு விதமாக செல்லும் என்ற அச்சம் வாசனின் மனதை வாட்ட வாசனுக்கு தலை வேறு வலிப்பது போல் இருந்தது.
“இல்ல வாசா.. ஆதியும் ஷஹானாவும் வளர்ந்துட்டாங்க சொன்னா அப்பாவ விட்டுட்டு போலாம்னு சொல்வாங்க, மூணு பேர் படிப்பு செலவையும் அவர்தானே! பாக்குறாரு. அவர்தான் பார்த்தாகணும். படிக்கிற பசங்க இத சொல்லி மனஉளைச்சலுக்கு வேற ஆளாகி படிப்பையும் கோட்ட விட்டு வேற வேற பழக்கங்களுக்கு போய்டுவாங்க” சமூகத்தில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது, என்னவெல்லாம் நடக்கக் கூடும் என்று உணர்ந்தே கூறினாள் நித்யா.
“அக்ஷரா… அவளுக்கு தெரியுமே!” நெற்றியை தடவியவாறு வாசன் கேக்க,
“அவகிட்ட கேட்டேன். அப்பா அம்மா பிரிஞ்சி இருந்தா உனக்கு பிடிக்குமா? இல்ல சேர்ந்து இருந்தா பிடிக்குமான்னு. நாம சின்ன வயசுல எப்படி இருந்தோம், என் கல்யாணம் எப்படி நடந்தது, மூணு பேரும் எப்படி பொறந்தாங்கன்னுதான் கத சொல்வேன். அதெல்லாம் கேட்டு வளர்ந்ததால என்னவோ! பேமிலியா இருக்குறதுதான்மா.. ஸ்ட்ரென்த். அப்பாவ கண்டுக்காம விட்டுடு அவருக்கு உன் அருமை தெரியல, பட்டு திருந்தட்டும்னு சொல்லுறா. ஆனா பெரிய மனிசி மாதிரி பேசினாலும் அப்பாவையும் விட்டு கொடுக்க மாட்டேங்குறா” தன் மகளை பற்றி பேசியதால் நித்யா சிரித்தும் விட்டாள்.
வாசனுக்கு சிரிப்பாகவும் இருந்தது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். இந்த குட்டிப் பொண்ணு அன்னைக்கே! ஆறுதலாக இருந்திருக்கிறாள்.
“அவதான் அத்த மாதிரியே! அதட்டி, மிரட்டி அப்பா எங்க இருக்கீங்கன்னு போன் போட்டு விசாரிக்கிறா, ஸ்கூல்ல இருந்து பிக்கப் பண்ண சொல்லுறா, கொஞ்சம் குண்டா இருக்கா இல்ல ஸ்கூல் பசங்க அவளை கேலி செய்யுறாங்களாம். அது இதுனு அப்பா கூட வளவளக்குறா. ஆதியும், சஹானாவும் கூட ஆச்சரியமா ரெண்டு பேரையும் பாக்குறாங்க. உன் மாமா பத்தி தெரியுமில்ல. சஹானாவையோ ஆதியையோ! கொஞ்சியது கூட இல்ல. இவ சொல்லுறதெல்லாம் செய்யிறாரு” ஆத்மநாதனையே! ஒருத்தி மிரட்டுகிறாள் என்ற பெருமை நித்யாவின் குரலில் இருக்க,
“அப்போ கூடிய சீக்கிரம் மாமா வழிக்கு வந்திடுவாருனு சொல்லு” வாசனுக்கு தானாக புன்னகை மலர்ந்தது.
“ம்ம்.. எனக்கு தெரியாதுன்னு நெனச்சிகிட்டுதான் இருக்காரு. அதுவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்ல. தெரியும்னு சொன்னா இஷ்டத்துக்கு ஆடுவாரே! அக்ஷராவ வச்சுதான் அந்த சிங்கத்தை அடக்கணும். சரி வாசா… ஊருக்கு வந்பிறகு மிச்ச கதையை பேசலாம். கல்யாணத்துல எந்த குறையும் இல்லாம பாத்துக்க” என்றவள் அலைபேசியை அனைத்திருந்தாள்.
சத்யாவிடம் அந்த ப்ரியங்கா சொன்னது பொய் இல்லை. ஆனாலும் இந்த பெண்களுக்கு இவ்வளவு நியாபக சக்தி இருக்கக் கூடாது. போட்டோல பார்த்தவரை, ஹோட்டல்ல பார்த்ததும், அவர்தான் இவர்னு சொல்லுற அளவுக்கு அடுத்தவனோட வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு ஆராய அவ்வளவு அக்கறை.
உண்மையில் சத்யாவிடம் வாசன் தனக்கு தெரியாது, நித்யா சொல்லவே! இல்லை. ஆத்மநாதன் அப்படிபட்ட மனிதனே! இல்லை என்று அடித்துக்கூற பல காரணங்கள் இருந்தது. அது ஆத்மநாதன் செய்யும் தவறை மறைப்பதற்காக கூறப்பட்டது அல்ல. 
ஆத்மநாதன் தன் தவறை உணர்ந்து திருந்தி குடும்பத்தோடு வாழும் போது உறவுகளுக்குள் கிண்டல் பேச்சுக்கள் உருவானால் வீண் மனஸ்தாபம் ஏற்படக் கூடும், அதனால்தான் சத்யாவின் வாயை அடைத்தான்.
இல்லையாயின் இவ்விஷயம் வாய்க்கு வாய் போய் நித்யாவின் மூன்று குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை முதல் திருமணம் வரை ஒரே நொடியில் தந்தையின் நடத்தையை வைத்து  தீர்மானித்து விடுவார்கள்.
கணவன் தவறு செய்கிறான் என்று அறிந்தும் நித்யா தெளிவாக இருக்கிறாள். கணவனிடம் சண்டை போடவில்லை. தனக்கு தெரியும் என்று கூட காட்டிக்கொள்ளாமல் குழந்தைகளை முன்னிறுத்தி கணவனை தன் பக்கம் சாய்க்க நினைக்கிறாள்.
ஒருவேளை வாசன் வசதி வாய்போடு இருந்தால் விட்டுட்டு வந்திருப்பாளோ! அல்லது அவள் ஏதாவது தொழிலோ! வேலைக்கோ! செல்பவளாக இருந்தால் விவாகரத்து கேட்டிருப்பாளோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
ஆத்மநாதன் ஒன்றும் கொடுமைக்காரன் இல்லையே! எதோ ஒரு இடத்தில் தடம் மாறி விட்டான். அக்ஷரா போல் ஆதி, சஹானா கூட தந்தையை பற்றி அறிந்துக்கொண்டாலும் அன்னைக்கு உறுதுணையாகி குடும்பம் பிரியாமல் இருக்க நடந்துகொள்வார்கள் என்றுதான் வாசனுக்கு தோன்றியது.
இப்போதைக்கு ஆத்மநாதனுக்கு நல்ல புத்தியை கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ள மட்டும்தான் வாசனால் முடியும். ஆத்மநாதனிடம் போய் நேரடியாக பேச வாசனுக்கு தைரியம் இல்லாமல் வாசன் இந்த விஷயத்தை ஒன்றும் பேசாமல் இருக்கவில்லை. நித்யாவே! தனக்கு தெரியாதது போல் இருக்கும் விஷத்தை வாசன் எவ்வாறு அறிந்துகொண்டான் என்ற கேள்வியோடு மேலும் நித்யாவின் வாழ்க்கையில் வாசனால் பிரச்சினைகள் எழக்கூடும் என்ற அச்சம்தான் வாசனை தடுத்துக்கொண்டிருந்தது.
“சட்டையை பிடித்து நாலு அப்பு அப்பி, நாக்கை பிடுஙங்குற மாதிரி கேள்வி கேக்க வேணாமா?” என்று சொல்வதெல்லாம் ரொம்ப இலகுவான வார்த்தைகள் அதை செய்ய மனதைரியம் மற்றும் உடல் தைரியம் வேண்டும். அதையும் தாண்டி அந்த குடும்பத்தின் எதிர்கால வாழ்க்கையை பற்றி சிந்தித்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனம். வார்த்தைகளாக கொட்டி ஒரு குடும்பத்தை மிக இலகுவாக பிரித்து விடலாம்.
தப்பு செய்பவர்கள் திருந்தவே! மாட்டார்களா? திருந்தியவர்களை அந்த குடும்பம்தான் மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? இதில் முடிவெடுக்க வேண்டிய நித்யாவே! தெளிவாக இருக்கும் பொழுது சகோதர பாசத்தைக் காட்டுகிறேன் என்று தான் குட்டையை குழப்பி அவர்களின் குடும்ப வாழ்க்கையை நிலைகுலைய செய்யலாகாது. அக்ஷரா பார்த்து விட்டாள் என்றதும் ஆத்மநாதனை அடித்தே! கொல்லும் வெறி நெஞ்சம் முழுக்க பரவி இரத்தம் சூடாகி, வாசனின் தேகம் இறுகி அமர்ந்திருக்க, மூளையோ! நிதானமாக செயல்பாடு என்று அவனுக்கு வலியுறுத்திக்கொண்டிருந்தது.
“என்னங்க தூங்காம இங்க என்னங்க பண்ணுறீங்க?” மின்விளக்கு எறியவும் சுயநினைவுக்கு வந்த வாசன்
“ஆ… ஒண்ணுமில்ல. நீ என்ன பண்ணுற?”
“நான் கழிவறைக்கு போகலாம்னு வந்தேன். கட்டில்ல உங்கள காணோம். தூக்கம் வரலையா? ஏதாவது பிரச்சினையா?” வாசுகி கண்களில் அச்சத்தை தேக்கி வைத்துக்கொண்டு கேக்க,
“நாளைக்கு எல்லாரும் டில்லிலிருந்து வராங்க, எல்லாம் நல்லபடியா நடக்கணுமில்ல. அதான் யோசிச்சுகிட்டு இருந்தேன்” சுதாரித்தவன் புன்னகைத்தவாறே கூற
“நல்லா யோசிச்சீங்க போங்க… வந்து தூங்குங்க, காலைல ரயில்வே ஸ்டேஷன் போகணும் இல்லையா” என்றவள் சமயலறை பக்கமாக சென்று கதவை திறக்க வாசனும் அவள் பின்னாடி சென்றான்.
ஊருக்கு வருவோரை ரயில் நிலையத்துக்கே! சென்று அழைத்து வரலாம் என்று வாசன் சென்றிருக்க, கூடவே! ராமநாதனும் சென்றிருந்தார்.
நித்யா குடும்பத்தோடு இறங்க பின்னாலையே! ஸ்ரீவத்சனும் அவன் கல்யாணம் செய்யப்போகும் வெள்ளைக்காரப் பெண்ணும் இறங்கினாள்.
இவர்களை பார்த்ததும் ராமநாதன் “என்னடா.. வாசா…  வெள்ளக்கார பொண்ணுன்னு சொன்னான் இவ என்ன வடநாட்டு பொண்ணு மாதிரி இருக்கா?”
அப்பொழுதுதான் வாசனும் அப்பெண்ணை பார்த்தான் கண்களும் முகமும் வெள்ளைக்கார பெண் போல இருந்தாலும் கூந்தல் கபிலமும் ஒருவித சிவப்பும் கலந்த நிறத்தில் இருந்தது, குர்த்தியும், ஜீன்சும் போட்டிருந்தாள். தங்க நிறத்தில் இருந்த அவள் கூந்தலை டில்லி வந்ததும் கலரிங் செய்ததில் வடநாட்டு பெண் போல் தோற்றமளித்தாள். முகத்தை உற்றுப்பார்த்தால்தான் அவள் வெள்ளைக்கார பெண் என்றே தெரிந்தது. 
வாசன் பதில் சொல்லும் முன் அவன் அருகில் வந்த ஸ்ரீவத்சன் “ஹாய் அண்ணா…” என்று இத்தனை வருட பிரிவும் ஒன்றுமில்லை என்பது போல் கட்டிக்கொண்டவன் “இது எமிலி” என்று அறிமுகப்படுத்த எமிலியும் வணக்கம் வைத்தாள்.  ராமநாதனிடமும் அங்கையே! ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள நித்யா, ஆத்மா, ஆதி, சஹானா, அக்ஷரா என்று அனைவரிடமும் நலம் விசாரித்தவாறு வாடகைக்கு எடுத்த வீட்டுக்கே! செல்ல வாசுகி அனைவருக்கும் குடிக்க இளநீர் வழங்கினாள்.
இளநீரை ரசிச்சு ருசிச்சு அருந்திய எமிலி ஆதி, சஹானா, அக்ஷராவோடு நன்கு ஒட்டிக்கொண்டது போல்தான் தெரிந்தது. வளவளத்துக்கொண்டேதான் இருந்தாள்.
“என்ன மருமகளே! சின்ன மருமக பேசுறது ஏதாவது புரியுதா?” என்று ராமநாதன் வாசுகியிடம் ரகசியமாக கேக்க
திருதிருவென முழித்தவள் “அது லண்டன் இங்கிலீசு மாமா, நாங்க ஸ்கூலை படிச்சது பிரிட்டிஸ் இங்கிலீசு” என்று இடத்தை காலி செய்திருந்தாள்.
எமிலி பேசியதன் வேகம் அவ்வாறு இருக்க, அவள் என்னதான் சொல்கிறாள் என்று புரிந்துக்கொள்ள அந்த ஆங்கிலத்தை இன்னொருவர் பேச வேண்டிய அவசியம் இருந்தது.
புன்னகைத்த ராமநாதன் குழந்தைகள் ஆங்கிலம் பேசும் அழகை ரசித்துக்கொண்டிருந்தார்.
இன்னும் ரெண்டு நாட்களில் திருமணம் என்பதால் அன்று முழுக்க பயணக் களைப்பு தீர ஓய்வெடுத்துக்கொண்டவர்கள் அடுத்த நாள் விடிந்ததிலிருந்து துரிதமாக வேலைகளை பார்க்கலாம் என்று முடிவு செய்துகொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்துக்கொள்ள வாசுகி இரவு உணவை தயாரிக்கும் பணியில் இருந்தாள்.
இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி என்று வித விதமா குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை ஏற்பாடு செய்திருக்க, எமிலிக்கு வெஜிடேபுள் சேலட் மற்றும் ப்ரூட் ஜூஸ் வைத்திருக்க, வாசுகியை ஆச்சரியமாக பார்த்தவள்
“தங்க யு. எனக்காக இவ்வளவு சிரமப்பட்டிருக்கீங்க” என்றவள் “சேலையில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, நித்யா அண்ணி கூட டில்லில சுடிதார்தான் போடுவாங்களாம், இங்க வந்தா தான் சேலை கட்டுவாங்கலாம். நீங்க சேலை மட்டும்தான் கட்டுறீங்க போல, எனக்கும் ஆசையாகத்தான் இருக்கு நாளைக்கு ட்ரை பண்ணலாம்” என்று ஆங்கிலத்தில் கூற, வாசுகிக்கி பாதி புரிந்தும், பாதி புரியாமலும் சிரித்து வைத்தாள்.
புன்னகைத்தவாறு மனைவியையே! பார்த்திருந்த வாசன் எமிலிக்கு தனியாக உணவு ஏற்பாடு செய்யச் சொல்லி தாங்கள் கூறவில்லை என்பது நியாபகத்தில் வர தானாக குடும்பத்தாரை நினைத்து சிந்தித்து செயல்படுபவளை நினைத்து காதல் பெறுக அவளையே! பார்த்திருக்க,
எதிர்ச்செய்யாக கணவன் புறம் திரும்பியவள் “என்ன?” என்று கண்களாலும் கையாளும் ஒன்று சேர கேட்க, யாரும் பார்க்காதவாறு அவளுக்கு பார்க்கும் முத்தம் ஒன்றை உதடு குவித்து வழங்கியவன் கண்சிமிட்ட, மற்றவர்களின் முன்னால் கண்ணியம் காப்பவனின் செயலால் அவனை அதிசயத்துப் பார்த்தாள் வாசனின் வாசுகி.

Advertisement