Advertisement

அத்தியாயம் 14
அன்று மாலை வீடு வந்த ராமநாதன் கடும் கோபத்தில் இருந்தார். குடிக்கும் காலத்தில் கூட கோபப்படாதவர், குடியை நிறுத்திய பின் நிதானமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்து ஊர் மக்களிடையே! நன்மதிப்பை பெற்றிருந்தார்.
“எப்படி வாழ வேண்டிய மனிசன். இப்படி ஆகிட்டாரு” என்று அனைவரும் அவரை பார்த்து பரிதாபப்பட்டார்களே! தவிர அவரின் குடிப்பழக்கத்தால் ஊரில் பிரச்சினையோ! வீட்டில் சண்டையோ! இதுவரை வந்ததில்லை. அதனாலயே! அவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டார் என்றதும் பலரும் அவரிடம் நற்பு பாராட்டினர். அதற்கு குடிப்பழக்கத்துக்கு ஆளாக முன்பு அவர் எப்படிப்பட்ட நல்ல மனிதர் என்று ஊர் மக்கள் அறிந்திருந்தமையாலும், ராமநாதன் வாசனின் தந்தை என்ற மற்றோரு காரணமும் இருந்தது என்னவோ! உண்மைதான்.
எப்பொழுதும் முகத்தில் புன்னகை வாடாமல் பேசி அனைவரையும் கவருவதில் ராமநாதன் வல்லவர். உதவி என்று யார் வந்து கேட்டாலும் தன்னால் முடிந்ததை செய்யக்கூடியவரும்தான். அப்படி பட்ட நல்ல உள்ளம் கொண்டவரை கடவுள் இப்படி சோதித்திருக்கக் கூடாது என்பதுதான் பலரின் கருத்து.
எது எப்படியோ! விதிப்படி எல்லாம் நடந்து குடியையும் விட்டு ஒழுங்காகத்தான் இருக்கிறார். வீடு வந்தவரின் முகமோ! என்றுமில்லாததை போல் கடுகடுவென இருக்க, செருப்பை கழற்றி வீசிய விதமே! அவரின் கோபத்தின் அளவு வாசுகிக்கு புரிய என்ன? ஏது என்று கேட்கக் கூட அச்சமாக இருந்தது. எப்பொழுதும் சாந்தமாக “வாசுகிமா…” என்று அழைக்கபவரின்  இப்படியொரு அவதாரத்தில் அவரை முதல்முறை பார்ப்பதால் வந்த அச்சம்.   
வாசனை அழைத்துக் கூறலாமா? என்று ஒரு கணம் நினைத்தாலும், “வேண்டாம், வேண்டாம் என்ன எதுன்னு தெரியாம அவர வேற டென்ஷன் பண்ணனுமா?” என்ற எண்ணம் தோன்ற ராமநாதனின் அறைக் கதவை மெதுவாகத் தட்டினாள் வாசுகி.
“மாமா டீ, காபி ஏதாவது சாப்பிடுறீங்களா? இஞ்சி போட்ட டீ சாப்பிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்” மெதுவாக குரல் கொடுத்து அவரின் மனநிலையை அறிய முயற்சித்தாள்.  
“டீயே போடுமா வரேன்” என்றார். குரலில் கோபமோ! அதிகாரமோ! இல்லை.
“அப்பாடா… கோபம் போச்சு போல” என்ற சிந்தனையிலையே! வாசுகி டீ போட ராமநாதனும் வந்து சமையலறை கதிரையில் அமர்ந்து கொண்டார்.
அவரின் சிந்தனையெல்லாம் “கல்யாணம் பண்ணா இந்த மாதிரி தங்கமான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணனும் அத விட்டுட்டு எவளோ! ஒரு வெள்ளக்காரிய கல்யாணம் பண்ணுறானாம். உறுப்படுவானா அவன்” என்றிருந்தது. பழமையான சிந்தை கொண்டவரல்ல ராமநாதன். ஒரு தந்தையாக அவரின் அச்சமே! வேறு
“இந்தாங்க மாமா டீ” என்று வாசுகி மாமனாரை அழைத்து டீயை கையில் கொடுத்தவள் அவரின் யோசனையாக முகத்தைக் கண்டு “மாமா ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க
“பிரச்சினை தான்மா… பெரிய பிரச்சனை. வெள்ளைக்காரன் நம்ம நாட்டை கொள்ளையடிச்சிட்டு போனானில்ல” ஏதோ கதை சொல்வது போல் ராமநாதன் ஆரபிக்கவும் வாசுகியும் இவர் என்ன சொல்ல போகிறார் என்று ஆவலாக ஏறிட்டாள்.
“போனவனுங்கள பழி வாங்கவென்றே இங்க ஒரு கூட்டம் அலையுறானுங்களே!” டீயை ஒரு மிடறு பருகியவர் மருமகளின் பார்வையின் ஆர்வத்தைக் கண்டு குறும்பாக கூற
“பழி வாங்கவா? என்ன சொல்லுறீங்க?” புரியாது முழித்தாள் வாசுகி.
“அதான்மா… வெள்ளைக்காரன் கிட்டாதான் வேல பார்ப்பேன், அவன் ஊர்லதான் குப்பை கொட்டுவேன், அவன் காசதான் செலவு பண்ணுவேன்னு பெத்தவங்கள விட்டுட்டு அந்த ஊருதான் சொர்க்கம்னு கெடக்குறானுகளே!”
அவர் சொன்ன விதத்தில் சிரிப்பு வர “இப்போ என்ன பிரச்சினை மாமா?” காரணமில்லாமல் கதை கூற மாட்டார் என்று புரிந்தாலும், அவரே! கூறட்டும் என்று டீயை பருகினாள் வாசுகி.
“எனக்குன்னு நாலாவதா பொறந்திருக்கானே! ஒருத்தன். அவன் வெள்ளைக்காரனை பழி வாங்கும் உச்ச கட்டமா வெள்ளைகாரியவே! கல்யாணம் பண்ண போறானாம்” என்று ஸ்ரீவத்சனை வசை பாட ஆரம்பிக்க, அவரின் கோபத்துக்கான காரணமும் வாசுகிக்கு புரிந்தது.
அவளுக்கு என்ன சொல்வதென்றே! தெரியவில்லை. ஒரு தந்தையாக அவர் ஆதங்கம் புரிந்தது. வெளிநாட்டில் இருக்கும் பையனுக்கு இங்கே பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் முடித்து வைக்கிறார்கள்தான். ஆனாலும் திருமணத்தில் மனப்பொருத்தமும் முக்கியமில்லையா? தனக்கு வாசன் அமைந்தது போல் எல்லோருக்கும் வீட்டில் பார்க்கும் துணை புரிந்துக்கொண்டு அனுசரணையாக வாழும் துணையாக அமைந்து விடுமா? ஸ்ரீவத்சனுக்கு அந்த பெண்ணை பிடித்திருந்தால் அதில் என்ன தவறு? அவர்களுக்கு ஒருவரையொருவர் பிடித்திருந்தால் குறுக்கிட நாம யார்? என்றுதான் வாசுகிக்கு தோன்றியது.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லுவாங்க, சின்னவன் ஒருத்திய காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டான் அவ குடும்பத்துக்கு ஏத்தவளே! இல்ல. பெரியவன் எத்தனையோ பொண்ண பாத்து உன்ன கண்டு பிடிச்சான். குடும்பத்துக்கு எத்தவளா நீ இருக்கியே! அது மாதிரி வெள்ளக்காரி இருப்பான்னு எதிர் பார்க்க முடியுமா? அவங்க கலாச்சாரம் வேற நம்ம கலாச்சாரம் வேற, நாளை பின்ன குழந்தை குட்டின்னு ஆகி, ஏதாவது பிரச்சினைன்னா? விட்டுடு போகாம புருஷன அனுசரிச்சி வாழ்வாளா?” சீரியஸாக பேசியவர்
 “அது கூட பரவல்லமா அவன் கட்டிக்கிட்டு எக்கேடு கெட்டும் ஒழியட்டும். அந்த பொண்ணு பேசுற தஸ்ஸு புஸ்ஸு இங்கிலீசு நமக்கு ஆகாது. அது பேசுறதுதான் எனக்கு புரியுமா? நான் பேசுற தமிழ்தான் அதுக்கு புரியுமா? இது பெரிய பிரச்சினை இல்ல” என்றவர் புன்னகை கூட சிந்தவில்லை. ஆனால் அவர் கேலிதான் செய்கிறார் என்று இத்தனை நாள் ஒரே வீட்டில் இருந்த வாசுகி அறியாததா?
அவர் சொன்ன விதத்தில் வாசுகி சிரித்து விட “என்னமா சிரிக்கிற? யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா? உனக்கு இங்கிலீசு வருமா?”  மெதுவாக கேட்டவர் கேட்கும் விதத்தை வாசுகி கவனித்திருந்தால் அவர் ஆழம் பார்க்கிறார் என்று புரிந்துக்கொண்டிருப்பாள். 
“பேசினா புரிஞ்சிப்பேன் மாமா. பேசத்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்றாள் படு சீரியஸாக
“அடப் போமா… இருக்குற பிரச்சினைல இது வேற. அந்த பொண்ணு வேற நம்மள பட்டிக்காடுன்னு நினைக்க போறா” சோகமான முகத்தை வைத்தவாறு சொல்ல, உண்மையில் இவருக்கு என்னதான் பிரச்சினை என்று நினைத்தாள் வாசுகி.
வெள்ளக்காரியை திருமணம் செய்வதுதான் பிரச்சினையா? அல்லது திருமணம் செய்வதால் அவளோடு சம்பாஷணை மேற்கொள்ள முடியாமல் போவதால் மனவருத்தப் படுகிறாரா ஒன்றும் புரியவில்லை. அவரின் கோபம் கூட ஸ்ரீவத்சன் அந்த பெண்ணை திருமணம் செய்வதால் வந்தது போல் தெரியவில்லை. அவர் எதோ பேசி இவரை கோபத்துக்கு ஆளாக்கி இருக்கிறார் போலும் என்று வாசுகிக்கு புரிந்து போனது. 
“ஆமா வாசுகிமா.. வெள்ளகாரிய கல்யாணம் பண்ணா ஊரு, உலகம் தப்பா பேசாது?” யோசனையாக கேட்பது போல் யோசனை கேட்டார் ராமநாதன்.
“ஊரு, உலகம் என்ன மாமா… அது எப்பவும் கண்டபடி பேசும் அதெல்லாம் நாம கண்டுக்கக் கூடாது. ஆமா மாமா எப்போ கல்யாணம் பண்ண போறாங்களாம்?”
“அத ஏன்மா… கேக்குற அந்த வெள்ளக்காரிக்கு நம் நாட்டு கலாச்சாரம்னா ரொம்ப இஷ்டமாம். நம்ம ஊரு கோவில்லதான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாளாம். அடுத்த வாரம் ஊருக்கு வாரங்களாம். வாசன் கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி வைக்கவாம். செலவெல்லாம் அவன் பாத்துப்பானாம்” சாதாரணமான குரலில்தான் கூறினான் ராமநாதன். 
“நல்ல விஷயம்தானே! மாமா அந்த பொண்ணு நம்ம கலாசாரத்தை மதிக்கிறா, புரிஞ்சிக்கிட்டதாலதானே! நம்ம ஊருக்கு வந்து கல்யாணம் பண்ணனும்னு சொல்லுறா”
“அட போமா.. நீ வேற புரியாம பேசுற, அவங்க எப்படி துணி போடுவாங்கனு உனக்கு தெரியாதா? அந்த மாதிரி துணிய போட்டுக்கிட்டு ஊருக்குள்ள சுத்தினா நாலு பேரு நாக்கு மேல பல்ல போட்டு பேசுவாங்க, அந்த ஸ்ரீவத்சன் பயலுக்கு அறிவு வளந்த அளவுக்கு கலாச்சாரத்தை தூசிக்கு கூட மதிக்க மாட்டான். அவனும் தொட தெரிய ஸ்கூல் பையன் மாதிரி டவுசரை போட்டுக்கிட்டு அலைவான். இதுல அவன் எங்க பொண்டாட்டிய திருத்த போறான். ஊருக்குள்ள பொம்பள ஆம்பல்னு இவங்க ரெண்டு பேரையும் பார்த்து சிரிச்சி நம்ம குடும்பத்தை காரி துப்ப போறாங்க” அந்த காட்ச்சியெல்லாம் கண்களில் விரிந்து மிரண்டவர் நொந்த குரலில் முடித்தார்.  
“ஒஹ்.. இதான் பிரச்சினையா? அப்போ அவர் வெள்ளைகாரிய கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு பிரச்சினை இல்லையா?” அவரின் பயத்தை அறிந்த நொடி வாசுகி கேக்க
“நீயே சொல்லு அறையும் குறையுமா வந்து வாசன்கிட்ட பேசிகிட்டு நின்னா நீ வாசனை முறைக்க மாட்டியா?”
உண்மைதான் தன் கணவன் தப்பானவன் இல்லை. தப்பான நோக்கத்தோடு அந்த பெண்ணிடம் பேசவில்லை என்றாலும் அந்த பெண்ணின் ஆடையை வைத்து இந்த உலகம் அப்பெண்ணின் நடத்தையை அளவிடுவதால், எந்த மனைவியும் கணவனை முறைக்கத்தான் செய்வாள். அது அப்பெண்ணின் கலாச்சாரம் என்ற சிந்தனையெல்லாம் வராது. அது வெள்ளைக்காரியா இருந்தா என்ன? நம்மூர்க்காரியா இருந்தா என்ன? கணவனை முறைக்க சந்தர்ப்பம் கிடைச்சா போதும் 
 “மாமா சொல்லுறத பார்த்தா இந்த பிரச்சினை பெரிய பிரச்சினையா இருக்கும் போல இருக்கே!” வாசுகிக்கி தலைவலியே! வரும் போல இருக்க, மீதம் இருந்த டீயை பருக்கலானாள்.
இரவில் வீடு வந்த வாசனிடம் ஸ்ரீவத்சன் ஊருக்கு வருவதையும், அவன் ஒரு வெள்ளைக்காரியை திருமணம் செய்யப்போவதையும், அதற்கான ஏற்பாட்டையும் பார்க்குமாறு ராமநாதனை அழைத்து பேசி இருப்பதாக வாசுகி கூற,
“கல்யாணம் பண்ண முடிவெடுத்தானா, நல்ல விஷயம்தான்” என்றவன் உடனே! நித்யாவை அழைத்து விஷயத்தைக் கூறி கண்டிப்பாக மாமாவுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு என்று விசாரிக்க, நித்யாவும் சற்றுமுன் தான் ஆத்மநாதன் இதை பற்றி பேசியதாக கூற “அப்போ மாமாவ முன் நிறுத்தி ஸ்ரீவத்சன் விருப்பப்படி கல்யாணத்த பண்ணிடலாம் என்று கூற நித்யாவும் ஒத்துக்கொண்டாள்.
கண்டிப்பாக பத்மா ஆயிரம் கேள்விக் கணைகளை தொடுப்பாள் ஆத்மநாதன் என்றால் அவளை சமாளித்து விடுவான். இந்த பக்கம் புஷ்பா வேறு வேண்டுமென்றே ஏதாவது கேட்டு வைப்பாள். ஆத்மநாதன் முன்னின்று செய்யும் திருமணம் என்றால் அவளும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாள். இவ்வாறு சிந்திந்துத்து வாசன் கூற நித்யாவுக்கும் அதுதான் சரி என்றுபட எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னவள் ஸ்ரீவத்சன் வரும் நாளில் கணவனோடு ஊருக்கு வருவதாக கூறி விட்டு அலைபேசியை அனைத்திருந்தாள் நித்யா.
“அண்ணனும் தங்கச்சியும் சட்டுபுட்டுனு காரியத்துல இறங்கிட்டீங்க போல” வாசன் அலைபேசியை வைக்கவும் வாசுகி கேக்க,
“நீ இன்னும் தூங்கலையா? மாத்திரை போட்டதும் தூங்கி இருப்பான்னு நினச்சேன்” என்றவன் மின் விளக்கை அணைத்துவிட்டு வந்து அவள் அருகில் படுத்துக்கொண்டு “ஆ.. அந்த ரோஹன் ஊர்ல இல்லையாம். எனக்கென்னமோ சந்திரா லவ் மேட்டர் அவனுக்கு தெரியாதுன்னு தோணுது. நாளைக்குத்தான் வரானாம். எதுக்கும் நான் நாளைக்கு போய் பார்த்து பேசுறேன்” நியாபகம் வந்தவனாக சொல்ல
“கல்யாண வேல இருக்கே! கடைக்கும் நீங்க போகாததால் வேல இருக்கும். சந்திரா விசயத்த அப்பொறம் பார்க்கலாங்க” வாசுகியும் எத்தனை வேலையைத்தான் செய்வது என்ற தொனியில் கேட்க
“கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே! முதல்ல இந்த ரோஹன் விசயத்த பார்க்கணும்” என்றவன் மனைவியை அணைத்தவாறு தூங்கியும் இருந்தான்.
“என்னப்பா… உங்க அடுத்தப் பையனுக்கும் கல்யாணமாகப் போகுது, சந்தோசமாக இருக்க வேணாமா? இப்படி மூஞ்ச தூக்கி வச்சிக்கிட்டு இருக்கீங்களே!” காலை சாப்பாட்டை சாப்பிட்டவாறே வாசன் சொல்ல
அவன் பேச்சில் வாசுகிக்கும் தனக்குள்ளும் நடந்த பேச்சு வார்த்தையை அவள் வாசனிடம் கூறி இருப்பது புரியவே! மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக சாப்பிடலானார்.
“முதல்ல ஊருக்கு வரட்டும். நம்ம ஊரு காத்து பட்டாலே! மனசும் அமைதியாகும். நம்ம கூட பழகினா நம்மளையும் புரிஞ்சி கிட்டு நடந்துக்குவாங்க. என்ன உங்களுக்கு இங்கிலீசு பேச வரல்லன்னு கவலை படாதீங்க. அதான் நம்ம ஆதி, சஹானா, அக்ஷரா இருக்காங்களே! நீங்க என்ன சொல்லுறீங்களோ! அத அப்படியே! இங்கிலீசுல உங்க ரெண்டாவது மருமகளுக்கு சொல்லிடுவாங்க. நித்தி கூட தானே! வாரங்க அவ பாதுபா” குறும்பாக ஆரம்பித்து கடைசி வாக்கியத்தை சொல்லி கண்களால் ஆறுதல் சொன்னவன் கூறியது வரும் பெண்ணின் ஆடையை பற்றி என்பது ராமநாதனுக்கு புரிய லேசாக முகம் மலர்ந்தவர்
“கல்யாண பத்திரிக்கை அடிக்க வேணுமா இல்லையா?”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டான். அதிக கூட்டம் எல்லாம் வேணாமாம். நம்ம குடும்பம், அந்த பக்கம் பத்மா அத்த, ஆவுடையப்பன் மாமா, இந்த பக்கம் புஷ்பா அத்த, பாண்டிராஜ் மாமா மட்டும் போதுமாம்”
“ஏன் டா… உன் தங்கச்சீங்க மாமனார், மாமியாரை கூப்புடுறவன் உன் மாமனார் மாமியாரை கூப்டாம விட்டுட்டு? இன்னுமா குழந்தை விஷயத்துல அவங்க மேல கோபமா இருக்க?” ராமநாதன் மகனை முறைக்க,
“இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பா… நம்ம குடும்பம்னு அவங்களையும் சேர்த்துதான் சொன்னேன். இல்லனா என் பொண்டாட்டி நாளைல இருந்து சோறு போட மாட்டா” தாழ்ந்த குரலில் வாசன் சொல்ல
சத்தமாக சிரித்தவாறு “நீ பொழச்சிக்குவ வாசா.. நல்லா தேறிட்ட டா” என்று தோளில் அடிக்க
“எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்பா…” என்றான் இவனும் பவ்வியமாக
இவர்களின் பேச்சில் குறுக்கிடாமல் கேட்டவாறு புன்னகைத்துக்கொண்டு, வாசுகியும் அங்குதான் இருந்தாள்.
“அப்பா…” என்று வாசன் கிண்டல் செய்வதும்
“மகனே!” என்று பதிலுக்கு இவர் கிண்டல் செய்வதும் அப்போ அப்போ நடப்பதுதான்.
“தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன். என்ன கொஞ்சம் லேட்டாதான் ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டாங்க போல” என்று வாசுகியும் புன்னகைத்துக்கொள்வாள்.
வளமை போல் வாசுகியின் சமையலை சாப்பிட்டு விட்டு ரோஹானை பார்த்து விட்டே! கடைக்கு செல்வதாக வாசுகியிடம் விடை பெற்றான் வாசன்.
சந்திரா வேலை செய்வது ஒரு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஊரிலிருந்து முப்பது கிலோமீட்டரில் இருக்கும் தொழிற்சாலைக்கு தினமும் பயணம் செய்வாள். அதில் அவள் கணனிப்பிரிவில்தான் வேலை பார்க்கின்றாள். இன்று அவள் வேலைக்கு வந்து இருப்பாளோ! வந்திருந்தால் அவளிடமும் பேசி விடலாம் என்ற சிந்தனையிலையே! பஸ்ஸை விட்டு இறங்கிய வாசன் அந்த உணவு கம்பனியின் முன் நின்றவன் ஜி,எம்மை பார்க்க வேண்டும் என்று சொல்ல  
முன் கூட்டியே! அனுமதி வாங்கி விட்டீர்களா? என்று அந்த செக்கியூரிட்டி கேக்க வாசன் இல்லை என்றதும், அப்படியாயின் இன்று சந்திக்க முடியாது, உங்க பெயரையும், விலாசத்தையும், போன் நம்பரையும் எழுதி விட்டு போங்க என்று சந்திக்க வேண்டுமோ! அலைபேசியில் தகவல் சொல்லுறோம் என்று கூற பல்லைக் கடித்தான் வாசன்.
“ஜனாதிபதிய சந்திக்கக் கூட இப்படியெல்லாம் ரூல்ஸ் போட மாட்டாங்க போல” தனக்குள் முணுமுணுத்தவன் பேனாவை எடுத்து பெயரை எழுதப் போக அந்த செக்கியூரிட்டியின் அலைபேசி  அடிக்கவே எடுத்துக் பேசியவன் வாசனிடம் மரியாதையாக பேசி உள்ளே அனுப்பி வைத்தான்.
“என்ன டா… உலகம் மறு பக்கத்துக்கு சுழலுது போல இருக்கே” என்றவன் உள்ளே நுழைந்தாலும் ஒருவேளை சந்திரா தான் அவனை கண்டு அழைத்திருப்பாள் என்று எண்ணினான். அவளுக்கு அவ்வளவு அதிகாரம் இருக்குமா என்று யோசிக்கத் தவறினான்.
வாசன் எங்கும் காத்திருக்க வேண்டி இருக்க வில்லை. நேராக ஜி.எம் இன் அறைக்கே செல்ல அவனை கைகுலுக்கி வரவேற்று அமர வைத்த ரோஹன் “என்ன சாப்புடுறீங்க அண்ணா” என்று விழிக்க
நீண்ட நாள் பழகியது போல் அவன் பேசுவது வாசனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், நடிக்கிறானோ! என்ற சந்தேகத்தையும் தோற்று வித்தது.
“இல்ல சார் வீட்டுல சாப்பிட்ட உடனே! உங்கள பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன். அதனால ஒன்னும் வேணாம்” என்று இவன் ஒரேயடியாக விசயத்துக்கு வர
வாசன் “சார்” என்று ஒதுக்கியதை வைத்தே! என்ன விஷயமாக பேச வந்திருப்பான் என்று ஊகித்த ரோஹன். “சந்திராவை பெண் கேட்ட விஷயமாகத்தான் நீங்க பேச வந்தீங்களா? ஏதாவது பிரச்சினையா? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?”  குழப்பமான முக பாவனையில் கேட்டான்.
“உண்மைய சொல்லனும்னா… சந்திரா அவ அத்த பையன விரும்புறா… அதான் பிரச்சினை” என்று வாசன் கூற
“ஒஹ்..மை கோட். இது எனக்கு தெரியாதே! தெரிஞ்சிருந்தா பொண்ணு கேக்க சொல்லி இருக்க மாட்டேனே! நான் பொண்ணு கேட்டதால வீட்டுல ஏதும் பிரச்சினையா?” உண்மையான கவலை அவன் முகத்தில் தெரிய
“ஆமா நீங்க சந்திரா கிட்ட பேசாம ஏன் வீட்டுல போய் பொண்ணு கேட்டீங்க?” வாசனுக்கு இந்த கேள்விக்கு பதில் தெரிந்தே ஆகா வேண்டும் போல் இருந்தது.
“எனக்கு சந்திரா மேல லவ் எல்லாம் இல்ல. உண்மையிலயே! சந்திரா ரொம்ப நல்ல பொண்ணு, வேலையிலையும் சரி கேரக்டர் வைச்சா பார்த்தாலும் எந்த குறையும் சொல்ல முடியல. அப்பா பிஸ்னச பாத்துக்கிறாரு, அம்மாக்கு கொஞ்சம் உடம்பு முடியல. கூடப்பொறந்தவங்கனு யாருமில்ல. அம்மாக்கு இப்படி ஆகிருச்சேன்னு அப்பா தொழில ஒழுங்கா கவனிக்காம குடிச்சிட்டு வீட்டுல விழுந்து கிடப்பார். காலேஜ் முடிச்சதும் தொழில முன்னேற்றணும் என்கிற சிந்தனைதான். காதலிக்க எல்லாம் நேரமில்லை. முப்பது வயசு ஆகிருச்சு. அப்பாவும், அம்மாவும் கல்யாணம் பண்ணிக்க சொல்லுறாங்க. சந்திரா மாதிரி அமைதியான பொண்ணா இருந்தா….” என்று இழுத்தவன் “என்னால ஏதும் பிரச்சினைனா சொல்லுங்க நானே! வந்து பேசுறேன்” என்று முடிக்க,
வாசனுக்கு தன்னையே! ஒரு நொடி பார்த்தது போல் இருந்தது.
“சந்திரா சின்ன வயசுல இருந்து காதலிக்கிறா… மாமாக்கு காதல்னா பிடிக்காது. அத்த உங்க சம்பந்தத்தைத்தான் பண்ணுவேன்னு சொல்லுறாங்களாம். நீங்க விலகி கிட்டா மாமா கிட்ட பேசலாம்னுதான் வந்தேன்” என்று வாசன் கூற
“என் சைடுல எந்த பிரச்சினையும் வராது. நீங்க கவலை படாதீங்க” என்று ரோஹன் சொல்ல அவனை வாசனுக்கு ரொம்பவே பிடித்தது.
விடைபெற பார்த்தவனை வலுக்கட்டாயமாக அமர்த்தி அவன் செய்யும் தொழில் முதல் அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் என்று பேசியவன் குடிக்க குளிர்பானமும் வரவழைத்துக் கொடுக்க ரோஹன் என்பவன் தோழன் என்ற நிலைக்கு வந்திருந்தான்.
அலைபேசி எண்களையும் பரிமாறிக்கொண்டவர்கள் மீண்டும் ஒருநாள் சந்திக்கலாம் என்று விடைபெறும் பொழுது “ஆமா நீங்க சந்திரா கிட்ட பேசினீங்களா?” என்று ரோஹன் கேக்க
“அவளையும் சந்திக்கணும். சொன்னா அவள் இருக்கும் இடத்துக்கு அழைச்சிட்டு போவாங்க தானே!” என்றான் வாசன்.
“நல்லா சொன்னீங்க போங்க. எதேச்சையா நான் உங்கள பார்த்து சிகியூரிட்டிகு போன் பண்ணதால உள்ள அனுப்பினான். இல்லனா அனுப்ப மாட்டாங்க. எல்லா இடத்திலையும் பழங்கள் அடுக்கி வச்சிருக்காங்க, பழச்சாறு எடுத்து வச்சிருக்காங்க,  இல்லையா, எதிரிங்க வந்து எதிலையாவது என்னத்தையாவது கலந்துட்டா, என்ன பண்ணுறது அதான் யாரையும் சட்டுனு உள்ள விடமாட்டாங்க. உக்காருங்க சந்திராவை இங்கயே! வர சொல்லலாம்” என்றவன் யாரையோ! அழைத்து சந்தாராவை வந்து தன்னை பார்க்குமாறு சொல்ல முகம் இறுக்கியவளாக வந்து சேர்ந்தாள் சந்திரா.
  “உக்காருங்க மிஸ் சந்திரா” என்று சொல்லவும்தான் அவள் வாசனை கண்டாள்.
வாசன் எதுக்கு இங்கு வந்திருக்கின்றான் என்ற ஆராய்ச்சி பார்வையோடு சந்திரா அமர
“ஓகே மிஸ்டர் வாசன் அப்போ நீங்க பேசுங்க நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்” என்று ரோஹன் சொல்ல
“நீங்களும் இருந்தா நல்லதுதான் ரோஹன். அப்பொறம் அண்ணான்னு கூப்பிடுங்க, உறவானாதான் அண்ணான்னு கூப்பிடணும்னு இல்லையே!” என்று வாசன் புன்னகைக்க,
சந்திராவுக்கு வாசன் வேண்டுமென்றே செய்வது போல்தான் தோன்றியது. அதுவும் அவளால் தானே! வாசன்-வாசுகியின் குழந்தை கருவிலையே! கலைந்து போனது. அதனால்தான் ரோஹானை சந்திக்க வந்தவன் ஏதோ திட்டமிடுகிறான் என்று எண்ணியவள் வாசன் இங்கு வந்தது வாசுகிக்கு தெரியுமா? என்று சந்தேகமும் கொண்டாள். 
“மிஸ் சந்திரா ஐம் ரியலி சாரி நீங்க காதலிக்கிற விஷயம் தெரியாம உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தது என் தப்புதான். வாசன் அண்ணா சொன்னது போல முதல்ல உங்க கிட்ட பேசி இருந்தா நீங்க மறுத்து இருப்பீங்க, அந்த நேரத்துல எனக்கு சரினு பட்டத்தை நான் செஞ்சேன். ஆனா என்னால உங்களுக்கு வீட்டுல பிரச்சினை வரும்னு தெரியல. பட் டோன்ட் ஒர்ரி உங்க கல்யாணம் நீங்க ஆசப்பட்டவரோட கண்டிப்பா நடக்கும்” தெளிவாக ரோஹன் முதலில் பேச குழம்பினாள் சந்திரா.
“வாசுகி என் கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னா சந்திரா. சித்திய நினைச்சி நீ பயப்படாத. ரோஹன் கிட்ட பேசின பிறகு மாமாகிட்ட பேசலாம்னு இருக்கேன். அடுத்த வாரம் என் தம்பி கல்யாணம். கல்யாணம் முடியட்டும் அதுவரை கொஞ்சம் பொறுத்துக்க, ஜெயமணியையும் கொஞ்சம் அமைதியா இருக்கச் சொல்லு. பேசுற விதத்துல பேசினா மாமா புரிஞ்சிக்குவாரு சரியா”
இருவரும் பேசிய பின் குழப்பம் தீர்ந்தவள் “என்ன மன்னிச்சிடுங்க மாமா என்னாலதான் பாப்பா” என்றவளின் கண்களில் நீர் நிறைய,
“நடந்தத பத்தி பேச வேணாம் சந்திரா உன் அக்கா நல்லா இருக்கா இல்ல. அது போதும்” என்ற வாசன் பெருமூச்சு விட
“ஓகே நீங்க போய் வேலைய பாருங்க, மனச போட்டு குழப்பிக்காதீங்க” என்று சந்திராவை அனுப்பிய ரோஹன் “தம்பி கல்யாணம் என்று சொல்லுறீங்க இந்த தம்பிக்கு அழைப்பு இல்லையா?” என்று கேட்க
“அதான் தம்பின்னு சொல்லியாச்சே! பாக்கு வெத்தல வச்சி கூப்பிடணுமா? வந்து கூட மாட இருந்து வேலைய பாருல” என்ற வாசன் தலையசைத்தவாறே விடைபெற அவன் தலை மறைந்ததும்  அவசர அவசரமாக தந்தைக்கு அழைப்பு விடுத்தான் ரோஹன்.

Advertisement