Advertisement

முதலில் மித்ரனின் தாய் அனுப்பிய அடியாட்கள் வர, அவர்களை தொடர்ந்து சில மணித்துளிகளில் மித்திரனின் தாயும், ஆதியின் தந்தையுமாக நடிப்பவரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.

பின்னர் அனைவருமாய் காட்டிற்குள் நுழைய, அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை… எத்திசையில் செல்வதென்று தெரியாமல், நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றனர்.

“எங்கு செல்வது செபாஸ்டியன், எப்படியு உங்கள இந்த வழியில தானே அழைத்து வந்திருப்பாங்க. வழி ஞாபகம் இருக்க”, என்றார் அந்தப் பெரியவர்.

“என்னை இங்கு அழைத்து வர, சுமார் இரண்டு மணி நேரம் இருக்கும் அங்கில். என் கண்ணையும், கைகளையும் கட்டி இழுத்து வந்தானுங்க. மேலும் அவனுங்க இருக்க இடத்த சுற்றி, ஒரு கிலோ மீட்டருக்கு கேமரா இருக்குன்னு மித்ரன் சொன்னான்”…..

“கேமரா பற்றி பிரச்சினை இல்லை. அதனை ஜேமர் கொண்டு செயலிழக்க செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்க”, என்று ஓர் அடியாளை அனுப்பினான் பிரதாப்.

“ஆனால் செல்லும் வழியை எப்படி கண்டுபிடிப்பது”, என்றார் ஆதியின் தந்தை (தந்தையாக நடிப்பவர்).

“ஜேமர் வரும்வரை வழியை தேடுவோம்”,என்று கூறிவிட்டு, செபஸ்டியனை தன்னுடன் அழைத்துச் சென்றான் பிரதாப்.

“நன்றாக யோசித்துப் பார் செபாஸ்டியன், நீ வரும் வழியில் ஏதாவது தடயங்கள் விட்டு வந்தாயா”, என்று அவன் வினவ.

“இல்லை பிரதாப்”, என்று சிந்தனையில் ஆழ்ந்தான் செபாஸ்டியன்.

செபாஸ்டியன் மயங்கிக்கிடந்த இடத்திற்கு, இருவருமே சென்று அங்கிருந்து காட்டுக்குள் செல்ல முயற்சித்தனர்.

“இப்போது தான் ஞாபகம் வருது…. என்ன இழுத்துட்டு வந்த அடியாட்களில் மூவர், என் முன்ன நடந்து, நீண்ட கத்தியை வைத்து செல்லும் வழி எல்லாம் இருந்த முள் செடிகளை வெட்டினர். என் கண்களை கட்டும் முன்பே இந்த வேலையை செய்ய ஆரம்பித்தனர்”, என்றான் செபஸ்டியன்.

“முட்டாள் பசங்க”, என பிரதாப் கூறியவாறே காட்டினுள்  நுழைய…. முகமலர்ச்சியோடு பேசலானான், “அங்கு பார் செபஸ்டியன், நீ கூறியது நல்ல உபாயம். அந்த அறிவற்ற ஜீவன்கள் முள் செடிகளை வெட்டி கிட்டத்தட்ட ஒரு புதிய பாதையை உருவாக்கி வைத்துள்ளனர்”, என்ற பிரதாப் கூற,

அதற்குள் கேமரா ஜேமருடன் ஒருவர் வந்துவிட்டார். அனைவரும் அந்த வழியில் சென்றனர்…. 

“நான் நினைத்தபடியே நம் அம்மாவுடன், செபாஸ்டியனும், பிரதாப்பும், வந்துவிட்டார்கள்”, என்றான் மித்ரன்.

சனாயாவின் வாடிய முகம் பிரதாப் என்ற பெயரை கேட்டவுடன் மலர்ந்தது….

அந்த பாழடைந்த வீட்டை அடைந்த பிரதாப், “இந்த இடத்திலா நம் சனா இருக்கிறாள்”, என வருந்த …

“சொத்து பத்திரம் எங்கே”, என்று கூறிக்கொண்டே வெளியே வந்தான் மித்ரன் 

“ஆதியை கடத்தி வெச்சுகிட்டா சொத்து பத்திரத்தை எடுத்துத்து வந்துருவேன்னு நினச்சியா”, என்று அவன் அன்னை கோபத்துடன் வினவ.

“அப்போ நீங்க எடுத்து வரலையா”, என்ற மித்ரனின் குரலில் கோபமும், ஏமாற்றமும், நிறைந்து இருந்தது.

“இல்லை”, என்று அவன் அன்னை கூறிவிட்டு, அடியாட்களை உள்ளே சென்று ஆதியையும் சனாயாவையும் அழைத்து வரச் சொன்னார்.

“அதற்கு அவசியமில்லை”, என்று கூறினான் மித்ரன்.

பின் படத்தில் வருவது போல், ஆதியின் கழுத்திலும், சனாயாவின் கழுத்திலும், கத்தியை வைத்து மிரட்டினார்கள் மித்ரனின் அடியாட்கள்.

ஒரு நிமிடம் திகைத்து விட்டு, என்னுடன் வா என்று மித்ரனை தனியே அழைத்துச் சென்று, நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி, இதை ஆதியிடம் சொல்லி விடாதே என்று அழுதார் அவன் அன்னை.

முதலில் நம்ப மறுத்த மித்ரனிடம், ஆதியின் தாத்தா எழுதி வைத்த சொத்து பத்திரத்தின் புகைப்படத்தை காட்டினார்.

“இந்த விஷயம் எனக்கு மட்டுமல்ல, என் கணவனாக நடிப்பவருக்கும் தெரியும்”, என்று அவர் கூற,

“வேறு யாருக்கெல்லாம் தெரியும்”, என்றான் மித்ரன்.

“செபாஸ்டியன்..  செபாஸ்டியனின் தந்தை, ஒரு வக்கீல், ஒரு டாக்டர், அந்தத் தாத்தாவின் நண்பர்கள், என பலருக்கும் தெரியும் மித்ரா, அதனால் எந்த மிரட்டலும் பயனளிக்காது. நீ ஜெயிலுக்கு செல்ல வேண்டியதாகிடும்”, என்று அவர் படபடக்க,

“என்னை கொஞ்சம் தனியே விடுங்கள்”, என்று கத்தியவன், கடந்த காலத்தை சிந்தித்து பார்த்தான்.

“தாய், தந்தையின், பாசம் கிடைக்காமல் நான் மட்டுமல்ல, ஆதியும் தான் சிறுவயதில் ‘அம்மா என்னிடம் பேசுவதே இல்லை’, என்று தனியே ஒரு அறைக்குள் தேம்பி தேம்பி அழுவான். இவ்வளோ காலம் நாம சுகமா வாழ்ந்தது, நம்ம அம்மாவின் காசுல இல்ல, ஆதியின் காசில்”, என்று எண்ணிய அவனுக்கு இனம் புரியாத ஒரு உணர்வு,  தொற்றிக்கொள்ள.

அவன் அன்னையை அழைத்து பேசலானான் “சரி ஆதியிடம் இதை நான் சொல்ல மாட்டேன், எப்படியும் என் பெயருக்கு சொத்தை மாற்ற முடியாது”, என்றான் ஏமாற்றத்தோடு.

“இவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்வன்னு நான் நினைக்கவே இல்லை மித்ரா”, என்று அவர் ஆனந்தப்பட,

“ரொம்ப சந்தோஷப் படாதீங்க”, என்று சொல்லிவிட்டு…. பிரதாப்பையும், செபாஸ்டியனையும், அழைத்து “நீங்க மூவரும் என்ன செய்வீங்கன்னு எனக்கு தெரியாது, ஆனால் எனக்கு ஒரு கோடி ரூபாய் பணமும், சனாயாவும் வேண்டும்”, என்றான்.

“டேய் மித்ரா… ஆதியின் அம்மாவாக நடித்து, சுக வாழ்வு வாழ்வதற்கு, ஆதியின் தாத்தா எனக்கு கொடுத்த சம்பளத்தை இப்போது சேர்த்தால், லட்சகணக்கில் வரும். அதை மொத்தமும் கொடுத்துடறேன். தயவுசெய்து சனாயாவை விட்டுட்டு ஒழுங்கா வாழு”, என்றார் அவன் அன்னை.

“உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள், என் கனாயாவை நான் விடமாட்டேன்”, என்றான் பிரதாப்.

“அப்படினா, நான் ஆதியிடம் அனைத்தையும் சொல்லிடுவேன்”, என்று மித்ரன் மிரட்ட துவங்கினான்.

‘பல நாட்களாக கட்டி காத்த உண்மை, இவனால் வெளி வரக்கூடாது. அப்படி வந்தால் ஆதியால் அதை தாங்கிக் கொள்ளவே இயலாது’ என்று எண்ணிய மித்திரன் அன்னை, ஆத்திரமடைந்து மித்ரனை திட்ட துவங்கினார்.

“சொல்லிடு… போய் அனைத்தையும் சொல்லிடு. பாவம் அந்த பிள்ளை… உன்னை என்று அந்த வீட்டுக்கு அழைத்து வந்தேனோ. அந்த நாளிலிருந்து நான் ஆதியை கண்டுகொள்ளவே தவறிவிட்டேன். ஆதியின் தாத்தா கூறியது போலவே, தொழிலை கவனித்த நான், ஆதியிடம் தாயாக நடிக்கும் வேலையை மறந்துட்டேன். எல்லாம் உனக்காக தான், பாசத்துக்காக ஏங்கும் உன்னை கவனித்து, ஆதியை மறந்தேன்… ஆனால் நீ இதுவரை எனது பாசத்தை மதிக்கவே இல்லை. என் மீதுள்ள அன்பை விட காசின் பேரிலும், சனாவின் மீதும் தான் உனக்கு அன்பு அதிகம்”, என்று கண்ணீர் வடித்தார்.

°°°°°°°°°°°°°°°°°°°°

‘பிரதாப் வந்துவிட்டார், இனி எல்லாம் சுகமே… எப்படியும் என்னையும், ஆதியையும் காப்பாற்றுவார்’…

‘இந்தப் படுபாவி மித்ரனிடமிருந்து தப்பி சென்ற பின், ஆதியைப்பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் எவ்வளவு காலம்தான், தன் மன பாரத்தை அவனே சுமந்து கொண்டு இருப்பான். நம்மிடம் பகிர்ந்து கொண்டால், கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் அல்லவா’, என்று நினைத்தாள் சனாயா.

மித்ரன், பிரதாப், செபாஸ்டியன், மித்ரனின் அன்னை, இவர்கள் நால்வரும் தனியே சென்று நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருப்பதை கவனித்த ஆதி, ‘அப்படி என்னதான் பேசுகிறார்கள்’, என்று நொந்து கொண்டான்.

சட்டென யாரும் எதிர்பாராத வண்ணம் பிரதாபுடன் வந்த அடியாட்களில் ஒருவன் மித்திரனின் தலைமை அடியாளின் கையை கத்தியால் லேசாகக் கிழித்து, அவன் கழுத்தில் கத்தியை வைக்க,

அவன் வலியாலும், பயத்தாலும் அலற, அதை கண்டோர் பயத்தில் சனாயாவையும், ஆதியையும், விடுவித்தனர்.

இதை தூரத்திலிருந்து கவனித்த மித்ரன், “அவர்களை விடாதே”, என்று கத்தினான்.

“என்னிடமே உங்கள் வேலையை காட்டுகிறீர்களா, இப்போதே ஆதியிடம் அனைத்தையும் சொல்லிடறேன்”, என்று வெறி கொண்ட மிருகம் போல கிளம்பினான் மித்ரன்.

அவன் அன்னை, வேண்டாம் என்று அலற துவங்க,

“என்னை மன்னித்து விடுங்க அம்மா”, என்று கூறிவிட்டு, மித்ரனை அடித்து கீழே தள்ளினான் பிரதாப்.

பின் இமைப்பொழுதில், தனது கைக்குட்டையை எடுத்து மித்ரனின் வாயை அடைத்தான் செபாஸ்டியன். 

அதற்குள்ளாக, அடியாட்களை அழைத்து, மித்ரனின் கைகால்களை கட்டி காரில் போட உத்தரவிட்டார் அவனது அன்னை.

“மிக்க நன்றி” என்ற பாவனையில், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆதியும், சனாயாவும் அவர்களை நெருங்கி வர,

ஆதியை கண்ட அந்த அன்னை அவனிடம் ஓடினார்… “எப்படி இருக்கிறாய் தம்பி”… என்று அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டு அவர் அழ.

“இப்போதாவது உங்களுக்கு என் மீது பாசம் வந்ததே”, என்றான் ஆதி வெறுப்பாக.

“எனக்கு எப்போதும் உன் மீது பாசம் உள்ளது, வெளிப்படுத்தியது தான் இல்லை”, என்று அவர் தேம்ப.

“போதும் பொய் சொல்லாதீங்க, என்ன விட அந்த மித்ரனை தான் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்… அதனால தான் இவ்வளவு செல்லம் கொடுத்து அவன கெடுத்து வெச்சிருக்கீங்க”, என்று மனதிலிருப்பதை முதல் முறையாய் வெளிபடுத்தினான் ஆதி.

என்ன கூறுவது என்று புரியாமல், அந்த அன்னை கண்ணீர் வடித்தார் 

“அப்படி எல்லாம் சொல்லாதே ஆதி, உனக்காக தானே அவங்க இவ்வளோ கஷ்டபடராங்க. தவறு செய்த மித்ரன் தன்னோட மகன்னாலும். தனது இன்னொரு மகன், உனக்காக, அவனை அடித்து, கை கால்களை கட்டி, அழைத்துச்செல்ல உத்தரவிட்டிருக்காங்க. அவங்க பாசத்துல சந்தேகம் கொள்ளாத”, என சனா கூற,

ஆதி எப்போதும் சனாயாவின் பேச்சை மீறியதோ, எதிர்த்ததோ, இல்லை. அதேபோல் இப்போதும் சரி என்று தலையசைத்து, அழுது கொண்டிருந்த தனது அன்னையை கட்டிக் கொண்டான்.

“உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் மா. மித்ரன் யார்ன்னு கூட எனக்கு தெரியாது, ஆனால் அவன் வரும்வரை நீங்க காட்டிய பாசமும், அக்கறையும், அவன் வந்தபின் எனக்கு கிடைக்கலை”….

“அது ஏன்…. மித்ரன் யார்… இப்படியலாம், நான் உங்கிட்ட கேட்க போவதில்ல, நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் .. எனக்கு என் பழைய அம்மா வேண்டும்… கிடைக்குமா???”, என்றான் ஆதி.

தாங்கமுடியாத அழுகையையும், சோகத்தையும், அடக்கிக் கொண்டு “கண்டிப்பாக ஆதி”, என்றார் அந்த அன்னை.

இதையெல்லாம் அமைதியாய் கவனித்த அனைவரும், அவர்களது உலகத்துக்கு திரும்பினார்.

தொடரும்……..

Advertisement