Advertisement

‘எனக்கு ஒரு பிரச்சினை என்றால், கண்டிப்பா என் பிரதாப் வருவார். இப்போதும் நிச்சயம் வருவார்’, என்ற நம்பிக்கையில் அமர்ந்திருந்தாள் சனாயா.

“டேய் மித்ரா……. உனக்கு என்ன தான் வேணும்”, என்று ஆதி எரிச்சலுடன் வினவ,

“முதலில் உன் சொத்து முழுசும் வேணும். பிறகு உன் தோழி சானாயா, என் மனைவியாக வேண்டும்…. அவ்வளவுதான்”, என்றான் மித்ரன், அசட்டு சிரிப்புடன்.

“சொத்து முழுசும் தந்தா அத வெச்சு பெருசா என்ன கிழிச்சிடுவ. எல்லா நேரமும் உன் விருப்பத்துக்கு குடிப்ப, உன்னப் போன்ற உதவாக்கரைகளுடன் சேர்ந்து வீணா செலவழிப்ப. இத தான செய்வ”, என்று ஏளனமாய் கூறினான் ஆதி….

பின் சனாயாவை பார்த்து “இவள பாரு, இவள பத்தி உனக்கு என்ன தெரியும். உன் கண்ணுக்கு, அவள் அழகு மட்டும் தான் தெரியும். ஆனால் அவளுக்குள்ள எவ்வளோ நல்ல குணம், லட்சிம், இருக்குன்னு உனக்கு தெரியுமா. அனைத்துக்கும் மேல அவள்

பிரதாப்பை விரும்புகிறாள். அவளை விட்டுவிடு”, என்று  மன்றாடும் தோரணையில் கூறினான் ஆதி.

“உன் உபதேசங்கள கேட்க நா இங்க வரல. உன் அம்மா வெளிநாடு போயிருக்காங்க. அவங்க வந்ததும் உன்ன வெச்சு மிரட்டி, உன் சொத்து முழுசும், என் பேருக்கு மாத்தப் போறேன். அப்புறமா இவளையும் கல்யாணம் செஞ்சிக்குவேன். இது தான் என் முடிவு”, என்றான் மித்ரன் திமிராக.

“இதெல்லா நடக்குறதுக்கு முன்னால, வெளிய இருக்க பிரதாப் அண்ணனும், இப்போ அனுப்பி வெச்சியே… என் தொழன் செபாஸ்டியன்னும், எங்களை காப்பாற்றிடுவாங்க. உன் திட்டம் எதுவும் பாழிக்காது”, என்றான் ஆதி.

“அடப் போடா மடையா… நா பிரபாவையும் செபாஸ்டியனையும் அனுப்பி வெச்சதே, உங்கள நான் இங்க பிடிச்சு வெச்சிருக்கேன்னு நம்ம அம்மாகிட்ட சொல்றதுக்கு தான். அப்போ தான உங்கள காக்க, அவங்க ஓடி வருவாங்க. பின் அவங்களை மிரட்டி, சொத்து முழுசையும் வாங்கிக்குவேன்”, என்றான் மித்ரன்.

“சட்டம் உன்ன சும்மா விடாது”, என்று ஆதி முறைக்க.

“உன் அம்மா, உனக்கு மட்டு அம்மா அல்ல. எனக்கும் தான் அம்மா. அவங்க என்ன மாட்டி விடமாட்டாங்க. நான் அப்படியே மாட்டிக்கிட்டாலும், என்ன வெளிய எடுக்க எல்லா முயற்சியும் செய்வாங்க. ஏன்னா அவங்களுக்கு உன்ன விட என்ன தான் ரொம்ப பிடிக்கும்”, என்றான் கர்வமாக.

அவன் கூறியதை கேட்டு, முகம் வாடி தலை குனிந்து நின்ற ஆதியை பார்த்து அதிர்ந்தாள் சனாயா.

“அவன் சொல்றது உண்மையா ஆதி”, என்றாள் வினவினாள் சனா.

ஆதி எதுவும் கூறாமல்,அவள் முகத்தை கூட பாராமல், ஆம் என்பது போல் தலையை அசைத்தான்.

“சில நிமிடம் சிந்தித்து விட்டு, சரி ஆதி… இவன் உன் அண்ணன் தான, இவனுக்கும் சொத்தில பங்கு இருக்கு தான, அது எப்படியோ போகட்டும்னு, அந்த பாதிய இப்பவே அவனுக்கு கொடுத்துட்டு வா. நீ தரலைனாலும், எப்படியும் ஏதோ ஒரு வழியில குடித்து, செலவழித்து, அதை அழிச்சிருவான்”.

“அதனால சொத்தை சட்டபூர்வமா பிரித்து பாதிய கொடுத்துட்டு நீ நிம்மதியா இரு. உனக்கு இருக்கும் அறிவுக்கு, உன் பங்கை வெச்சே நீ நிறைய சாதிக்கலாம்”, என்றாள் சனாயா.

“அதெல்லாம் ஒத்துக்க முடியாது. எனக்கு சொத்து முழுசும் வேணும்… அது மட்டுமல்ல நீயும் வேணும்”, என்று அவளை பார்த்து முறைத்தான் மித்ரன்.

“நீயெல்லாம் மனுசனே இல்ல”, என்று அவள் எரிச்சலுடன் கூற,

“உனக்காக மாறிடறேன், என்ன திருமணம்  செஞ்சுக்கன்னு கேட்டப்ப நீதான் மறுத்துட்ட. அதன் விளைவ உன்னுடன் சேர்ந்து ஆதியும் அனுபவிக்கிறான். நீ மட்டும் என்ன திருமணம் செய்திருந்தால், ஆதியுடன் இணைந்து ஒழுங்கா வாழ்ந்திருப்பேன்”…

“இப்போ எல்லாம் கைமீறிப் போய்டுச்சு. நீ திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், நீ தான் என் மனைவி. அதேபோல என்ன படைத்த இறைவனே வந்து தடுத்தாலும், ஆதியிடமிருந்து அனைத்து சொத்துக்களையு பிடுங்காம விடமாட்டேன்”, என்று ஆவேசமாக கூறிவிட்டு, அந்த அறையை வெளிப்புறமாக பூட்டிச்சென்றான் மித்ரன்.

ஒரு பாழடைந்த கட்டடம். எதற்காக கட்டப்பட்டதென்றே தெரியவில்லை. புழுதியும் தூசியுமாக காணப்பட்ட அந்த அறையின், ஒரு ஓரத்திலிருந்த மரக் கட்டலில் சென்று விழுந்தான் ஆதி.

பிரபா செய்ததை நினைத்து வாடுவதா, இல்லை அவளாவது தப்பினாலே என்று மகிழ்வதா, என்று வருந்திக் கொண்டிருந்த சனாயாவிற்கு இப்போது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்தது.

ஆதி இருக்கும் நிலையை கவனித்தவள், கொஞ்ச நேரமாவது அவனை தனிமையில் விடலாம். பின்சென்று மித்ரன் கூறியதைப் பற்றி பேசலாம், என்று எண்ணமிட்டாள் சனாயா.

‘எப்படியும் பிரபா அல்லது செபாஸ்டின் மூலம் பிரதாபுக்கு தகவல் போயிருக்கும். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார். கண்டிப்பாக துடித்துப்போய் இருப்பாரே”, என்று பிரதாப்பின் நினைவில் மூழ்கிய சனாயாவிற்கு, பிரதாபை அணைத்துக் கொள்ளவேண்டும் போல் தோன்றியது. கண்களிலும், அருவிபோல் கண்ணீர் கொட்டியது.

சில மணி நேரங்கள் கழிந்த பின், ஆதியிடம் சென்று நீங்கள் இருவரும் சகோதரர்கள் தானா!!! … அது உண்மையா, என்று விசாரித்தாள் சனாயா.

“என்கிட்ட எதுவும் கேட்காத சனா. நான் இங்கிருந்து எப்படி தப்பிப்பதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”  என்று கடுகடுவென பேசினான் ஆதி.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

“என்ன சார் பார்க்க பெரிய இடத்து பிள்ளை போல இருக்கீங்க. அதுக்காக நீங்க சொல்றத நம்பிடுவோம்ன்னு நினைக்காதீங்க. இந்த காட்டிற்கு வெளியே ஃபாரஸ்ட் ஆபிஸராக பல வருடங்கள் பணிபுரிகிறேன். நீங்க சொல்ற மாதிரி சம்பவங்கள் இதுவரை நடந்தது இல்லை. இந்த காட்டுக்குள்ள பல விஷப்பாம்புகள், பூச்சிகள், உள்ளதால இங்கு செல்ல அனுமதி இல்லை. நீங்க கூறுவது எல்லாம் நம்பிக்கொண்டு, உங்களுடன் வர நாங்க தயாரா இல்லை”, என்றார் அந்த ஆபீஸர்.

எவ்வளவோ முயன்றும் அவர் வழிக்கு வருவதாக தெரியாததால், அங்கிருந்து சென்று தங்களது காருக்குள் அமர்ந்தார்கள் செபாஸ்டியனும், பிரதாப்பும்.

பின் அவர்களுக்கு தெரிந்து போலீஸ் ஒருவர் வந்தார்.

“நான் ஆன வரை எங்கள் காவல் நிலையத்தில் பேசி பார்த்துட்டேன், யாரும் நம்புவதாக இல்லை சார். என்னாலும் உங்களுடன் வர இயலாது”, என்று கூறி சென்றார் அந்த போலீஸ்.

“வேறு வழியே இல்லை பிரதாப், இதை ஆதியின் அம்மாவுக்கு தெரியப்படுத்தி விட்டு, நாம் இருவரும் உள்ளே செல்ல வேண்டியது தான்”, என்றான் செபாஸ்டியன்.

“வேண்டாம் செபாஸ்டின், அவர்களால் என்ன செய்ய முடியும்”, என பிரதாப் கூற,

“அவங்க வந்தா தான், இந்த பிரச்சினை முடியும் பிரதாப். உங்கிட்ட அனைத்து ரகசியங்களையும் சொல்றேன். அதன் பின் உங்களுக்கே புரிந்து”, என்று கூறியவன் ஆதியின் அன்னைக்கு கால் செய்து, நடந்தது அனைத்தையும் கூறி அவர்களை ஊட்டிக்கு சொன்னான் செபாஸ்டியன்.

செபாஸ்டியன் ஆதியின் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில், தனது மன பாரத்தை குறைக்க பாடல் கேட்டான் பிரதாப்.

ஆனால் அவன் கேட்ட பாடலோ, அவனின் வேதனையை அதிகப்படுத்தியது. அவனது காதலியின் பிரிவை உணர்த்தியது.

பாடல் வரிகள்

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்……

எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்……

பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தவன் சனாயாவின் நினைவில் தன்னை தொலைத்தான். அவள் கூறிய வார்த்தைகளும் காதில் ஒளித்தது.

“எனக்கு எதாச்சும் பிரச்சினைன்னா நீங்க தான் முதல்ல வருவீங்க”, என்று அவள் கூறியது நினைவிற்கு வர, அவளைக் காண வேண்டும் என்று கண்கள் கெஞ்சியது. அவனது மூளை, அவளை தவிர மற்ற விஷயங்களை சிந்திக்க விடாமல், அவனை திணறச் செய்தது.

அவனைக் கண்ட செபாஸ்டியன், “கவலைப் படாதீங்க பிரதாப், நாம அவங்களை காப்பாற்றிடலாம். சனாயாவுக்கு ஒன்னும் ஆகாது”, என்று ஆறுதலாய் பேசினான்.

லேசாக சரி என்பது போல் தலையசைத்து விட்டு, “அந்தக் குடும்பத்தின் ரகசியத்தை கூறுங்க”, என்றான் பிரதாப்.

“ஆதியின் தந்தை படித்தது, வளர்ந்தது, எல்லாம் அமேரிக்காவில்தான். ஆதியின் தாத்தாவிற்கும், அவருக்கும், சில மனஸ்தாபங்கள் இருந்ததால, அவர் வெகு காலமா சென்னை வராமல் இருந்தார். அமேரிக்காவிலேயே தமிழ் பெண் ஒருவரை மணந்து, மகிழ்ச்சியாக இரு வருடம் வாழ, ஆதியும் பிறந்தான்”….. 

“இப்போதாவது சென்னைக்கு சென்று, உங்க அப்பாவை பார்ப்போம், என்ற எனது மனைவியின் கோரிக்கையை ஏற்று ஆதியுடன் அவர் சென்னை திரும்ப. ஆதியின் தாத்தா, அவரது மகன் மருமகள் பேரன் என தனது ரத்த சொந்தங்களை வரவேற்க திருவிழா போல, பல ஏற்பாடுகள் செய்தார்”   

அதுவரை ஆதியின் தந்தையை பார்க்காத தொழிலாளிகளு,ம் உறவினர்களும், அவரை காண ஆர்வமாய் கூடியிருந்தனர்….

“ஆனால் நாம் ஒன்று நினைக்க, இறைவன் ஒன்று நினைப்பான். என்ற பழமொழிக்கேற்ப ஆதி அவனுடைய தாய் தந்தையோடு டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கி, 

மறுநாள் காலை சென்னை செல்லலாம் என ஹோட்டலில் தங்கினர்”…. 

“மறுநாள் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், ஒரு பெரிய ஆக்சிடென்டில் ஆதியின் தாயும், தந்தையும், சம்பவ இடத்திலேயே அகால மரணம் அடைந்தனர். ஆதி மட்டும் தனது தாய் தந்தையின் உதவியினால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான்”, என்று நடந்தவற்றையெல்லாம் செபாஸ்டியன் கூறி முடிக்கவும்,

“என்ன கூறுகிறாய் செபாஸ்டியன்…. நீங்க கூறுவது உண்மைன்னா இப்போ ஆதியின் அன்னை, தந்தையா, இருக்கிறது யார்!!!… இந்த விஷயம் ஆதிக்கும், மித்ரனுக்கும், தெரியுமா!!!”, என்று பரபரப்பாய் வினவினான் பிரதாப்.

“இல்லை பிரதாப், இது அவங்களுக்கு தெரியாது. நான் முழுசா சொல்லிடறேன் கொஞ்சம் பொறுங்க”, என்றான் செபாஸ்டியன்.

“அவர்கள் இறந்த செய்தியை அறிந்த ஆதியின் தாத்தா. யாரிடமும் சொல்லாமல் டெல்லிக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் என்னுடைய தந்தையும், ஆதியின் தந்தைக்கு மிக நெருங்கிய தோழருமான ஜான் ஐசக்கு அழைத்து, இவை அனைத்தையும் கூறி அழுதார்”.  

“என்னுடைய தந்தை ஜான், டெல்லியில் ஒரு மிகப்பெரிய தொழில் செய்து வந்தார். இதை அறிந்த அவர், ஆதியின் தாத்தாவுடன் சேர்ந்து, அவர் இறந்த செய்தியை யாரிடமும் சொல்லாமல். செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தார்” என்றான் செபாஸ்டியன் 

“அதனால தான் உங்களுக்கு இந்த ரகசியம் தெரியுமா”, என்றான் பிரதாப்.

“ஆம் பிரதாப்”…

“பின் என்ன நடந்தது”, என்று பிரதாப் வினவ,

“ஆதியின் தாயும் தந்தையும் இறந்து விட்டார்கள், என்ற செய்தியை அறிந்தால். அனைத்து சொத்துக்கும் ஒரே வாரிசான ஆதிக்கு, தனது உறவினர்கள், தொழில் பங்குதாரர்களினால், பிரச்சினை வரும் என்று அவர் பயப்பட… அவரது பயம் நியாயமானது என்று அறிந்த என் தந்தை, அவருக்கு உதவினார்”….

“குடும்பத்தை இழந்து பத்து வருடமாக உண்மையாகவும், நேர்மையாகவும், பணிபுரியும் இருவரை தேர்வு செய்து, அவர்கள் இருவரும் தமிழர்கள் என்பதால், அவர்களை ஆதியின் தாய் தந்தையாக நடிக்க வைத்தார்”…

“ஆதியின் தாத்தா மூளைக்காரர், அத்தகைய துயரமான சம்பவம் நேர்ந்த போதும். அதை மறந்து ஆக வேண்டிய காரியத்தை செய்தார். தாய், தந்தையாக நடிப்பவருக்கு தொழிலை கற்றுக் கொடுத்து. இந்த ரகசியத்தை அவரது நெருக்கமான நண்பர்களான, ஒரு வக்கீலிடமும், நீதிபதியிடமும், குடும்ப டாக்டரிடமும், மேலும் சில நம்பகமானவர்களிடமும், சொல்லிவிட்டு சொத்து முழுவதையும் ஆதியின் பெயருக்கு மாற்றி, அதற்கு கார்டியனாக ஜானை வைத்தார். அந்த சொத்தில் ஆதியின் தாய், தந்தைக்கு, உரிமை இல்லை என்று எழுதி வைத்தவர். பின் ஆதியின் தாய் தந்தையாக நடிப்பவருக்கு மாதச்சம்பளம்

வரும்படி ஏற்பாடுகள் செய்தார்”….

இதைக்கேட்ட பிரதாப் வியந்து வினவினான்… “பின் எங்கிருந்து வந்தான் இந்த மித்ரன்”, என்று…

“ஆதியின் தாயாக நடிப்பவர், தனது சிறுவயதில் ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு, ஒரு குழந்தைக்கு தாயானார். பிறந்த குழந்தையை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்துட்டு, அவரது தோழியின் உதவியால் டெல்லி சென்று, என் அப்பாவிடம் வேலை செய்தார்”…

“சென்னை வந்த பின், குழந்தையின் நினைவு வந்துவிட, ஒரு ஐந்து வருடம் அமைதியாக இருக்க முயற்சி செய்தவர். அதில் தோற்று, அந்த ஆசிரமம் சென்று அவனை மீட்டு வந்து அவருடன் வைத்துக்கொண்டார்”…

“அப்போது ஆதிக்கு எட்டு வயது. மித்ரனுக்கு பத்து வயது, அந்த வயதிலேயே கொஞ்சம் ஒழுக்கமில்லாமல் தான் இருந்தான்”…

“அவனை மாற்ற, அவன் அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும், மாறவில்லை அவன். ஆதிக்கோ புதிதாய் வந்திருக்கும் மகனை ஏற்கமுடியல. அவன் வந்தபின் அவனுடைய அம்மா தன்னை கவனிப்பதில்லை என்ற எண்ணம் வந்து விட, ஆதி மித்ரனை வெறுக்க தொடங்கினான்”… 

“மித்ரனை திருத்துவதா, ஆதியை கொஞ்சுவதா, தொழிலிலை கவனிப்பதா, என்று குழம்பிய அந்தப்பெண். இறுதியாக தொழிலை கவனிக்க தொடங்கி விட்டார். அதன் விளைவாக ஆதி பாசம் இல்லாமல் வளர்ந்தான். மித்ரன் மேலும் தவறுகள் செய்ய தொடங்கிவிட்டான். இப்போது அனைத்து சொத்துக்கும் ஆசைப்படுகிறான்”, என்று அனைத்தையும் கூறி முடித்தான் செபாஸ்டியன்.

“பாவம் அந்த பெரிய மனிதர், இந்த சொத்துக்காக தனது பேரன் பாதிக்கப்படக்கூடாதென நினைத்து, இவ்வளவு செய்தும்… அதுவே இறுதியில் விணையாக வந்து முடிந்துவிட்டது”, என்று பிரதாப் கூறினான்.

தொடரும்….

Advertisement