Advertisement

பிரதாப் அவனது பண்ணை வீட்டை வந்தடைய…

“வாடா சனா குட்டி”, என்று புன்னகைத்துக் கொண்டே, அவர்களை வரவேற்றார் பிரதாப்பின் பாட்டி.

“என்ன ஞாபகம் உள்ளதா பாட்டி!!!… எப்படி இருக்கீங்க…”, என்று ஆவலாய் சனாயா வினவ,

“உன்ன எப்படி மறக்க முடியும், அப்படியே மறந்தாலும், நாளுக்கு குறைந்தது நான்கு முறையாவது, உன்ன பத்தி பேச்செடுத்து விடுவான் பிரதாப். அதுவும் கடந்த இரு வருடமா, ரொம்பவே அதிகமாய்டுச்சு”, என்று அவள் கன்னத்தை கிள்ளினார் அந்த பாட்டி.

அவர் கூறியது காதிலேயே விழாதது போல், தனது முடியை கோதிக்கொண்டே, வேறு புறம் நோக்கினான் பிரதாப்.

அதை கவனித்த சனாயாவின் கன்னம் சிவந்தது…

“அடடே… வந்துத்தீங்களா. நீங்க வந்தது கூட தெரியாம, சமையலில் மும்முரமா இருந்துட்டேன்”, என்று கூறிக் கொண்டு, வந்தவர் பிரதாப்பின் அன்னை.

“நமது சனாயாவா இது!!!, குட்டி பாப்பாவா இருந்தவள், அழகு தேவதையா மாறிட்டாளே!!!”, என்று, அவளை அணைத்து, சிரித்த முகத்தோடு வரவேற்றார் பிரதாப்பின் அன்னை சாருமதி.

பின்னர் பிரதாப்பின் தந்தை, தாத்தா, அண்ணன், அண்ணி, என்று அனைவரும் வந்து வரவேற்றனர்.

“இப்படியே பேசிகிட்டிருந்தா எப்படி. இருவரும் களைப்பா இருக்காங்க, உணவுக்கு ஏற்பாடு செய்யுங்க”, என்றார், அந்த வீட்டு பெரியவரும், பிரதாப்பின் தாத்தாவுமான, சௌந்தர்ராஜன்.

அவரின் கட்டளையின் பேரில் அனைவரும் உள்ளே செல்ல,

பிரதாப்பின் அண்ணி, சனாவை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தாள்.

“பிரதாப் தம்பிக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், எப்போதும் உன் புராணம்தான். சொல்லப்போனால் அவர் மட்டும் அல்ல, அனைவரும் தான்.. முக்கியமா என் அத்தை. சாரி… சாரி… நம்ம அத்தை”, என்று கண்ணடித்தாள் பிரதாப்பின் அண்ணி.

சனாவின் முகம் மீண்டும் வெட்கத்தில் சிவக்க….

“ஓஓஓஓ…..வெட்கமா”…என்றாள் அவள்…

ஒரு சிறு புன்னகையுடன், அவளை நோக்கினாள் சனாயா….

பிரதாப் வீட்டில் உள்ள அனைவரும், அவள் மீது காட்டிய அக்கறையும், பாசமும், ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும், ஒருசேர அளித்தது.

‘இந்த பிரதாப் சரியான ஆள் தான், அவர் என்னை காதலிப்பதை என்னிடமே இதுவரை சொல்லவில்லை. ஆனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்”, என்று நினைத்துக் கொண்டே, தனது உடைகளை மாற்றிக் கொண்டு, முகம் கழுவி, வெளியே செல்ல தயாரானாள்.

தலை வாறலாம், என்று தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த சனாயாவிற்க்கு, 

அவள் வருங்கால அத்தை கூறியது நினைவிற்கு வந்தது…

‘அவர்கள் என்னை அழகு தேவதை என்று சொன்னாங்களே’ என்று, தன் முகத்தைப் பார்த்து மகிழ்ந்தாள் 

“சனாயா”… என்று அழைத்துக் கொண்டே கதவைத் தட்டினான் பிரதாப்.

“இதோ வந்துவிட்டேன்”, என்று அவள் கதவை திறக்க.

“நம்ம வீடு பிடித்துள்ளதா” என்றான்…

“வீட்டை மட்டுமல்ல, அனைவரையும் ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப.. பிடித்துள்ளது”, என்றாள்.

“அவ்வளவுதானா”, என்று அவன் குறும்பாய் புன்னகைக்க,

“உங்களையும் தான்” என்றாள், தரையைப் பார்த்துக் கொண்டு.

“இதையெல்லவா, நீ முதல்ல சொல்லனும்”….

“நா சொல்றது இருக்கட்டும், நீங்க எப்போ சொல்வீங்க”, என, இடுப்பில் கை வைத்து, மிரட்டுவது போல் கேட்க,

“கூடிய விரைவில்,… நீ அடுத்த முறை இந்த வீட்டுக்கு வரப்ப, இந்த வீட்ல ஒருத்தியா தான் உருவ”, என்றான்.

“இதைவிட தெளிவா சொல்றதுக்கு, என்ன இருக்கு”, என தோன்றியது சனாவிற்கு.

ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்தவண்ணம், இருவரும் பேசிக்கொண்டிருக்க…

“ரொமான்ஸ்க்கு முன், திருமணம் செய்ய வேண்டும்”, என்று, அவர்களிடன் வந்தான் பிரதாப்பின் அண்ணன்.

“முதல்ல இப்ப,.. இரவு உணவ கவனிக்க வேண்டும், வாங்க சாப்பிடலாம்” என்றாள், அவனின் அண்ணி.

“கொஞ்ச நேரம் நிம்மதியா பேச விட மாட்டீங்களே”, என்று பிரதாப் கூறிக்கொண்டே, நகர்ந்தான்.

பின்னர், வீட்டில் உள்ள அனைவரும், ஒன்றாக அமர்ந்து உணவை ருசித்தனர்.

இது அனைத்தும் புதிய அனுபவமாக இருந்தது சனாவிற்கு…

பொறுமையாக உணவை ருசித்த வண்ணம், பல கதைகளை பேசிக்கொண்டு, கலகலப்பாக சிரித்து மகிழ்ந்தனர்.

‘இறுதியில் நமக்கு ஒரு குடும்பமும் கிடைத்துவிட்டது’, என்று உற்சாகமானாள் சனா.

உறங்கும் முன் சனாயாவை தனியே சந்தித்தார், பிரதாப்பின் அன்னை சாருமதி… 

“நீ தனியா வளர்ந்திருப்ப, இங்க எல்லாமே உனக்கு கொஞ்சம் புதுசா இருக்கு, இத பழகிக் கொள்ள சில காலமாகும், அதுக்கெல்லாம் பயப்படவோ வருந்தவோ வேண்டாம்”…

“நீ இதுவரை எப்படி சுதந்திரமா உன் வீட்ல இருந்தயோ, அத விட அதிகமான சுதந்திரத்தோட இங்க இருக்கலாம், இது உன் வீடு, இங்கு நீ இப்படி தான் இருக்கனும், அப்டின்னு யாரும் சொல்ல மாட்டாங்க”, என்றார் தேற்றுதலாக.

“ஐயோ ஆன்ட்டி…. எனக்கு உங்க குடும்பம் முழுக்க ரொம்ப பிடிச்சிருக்கு, உண்மையில உங்க எல்லாரோடும் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது”, என்றாள்.

“அப்படினா ரொம்ப சந்தோஷம் கண்ணு, ஆனா ஒன்னு….. நான் உன் ஆன்ட்டி அல்ல,… அத்தை, என்று உரிமையா கூப்பிடு. அதேபோல் இது எங்க வீடல்ல, நம்ம வீடு”, என்றார்.

பின்னர், சனாயாவின் தந்தையை பற்றி விசாரித்தவர்…. பிரதாப், அவளின் தந்தையிடம் அடிக்கடி பேசுவதை பற்றியும் கூறினார்.

இது அவளும் அறிந்ததே, ஏன்… இப்போது அவனது வீட்டிற்கு செல்கிறேன், என்று அவள் கூறியபோதும் கூட, அவர் கொஞ்சம் கூட மறுக்கவில்லையே.

ஆனால் அவள் அரியாதது, ‘அவளது தந்தை பிரதாப்பின் குடும்பத்துடனும் நங்கு இணைந்து விட்டார்’ என்பதுதான்.

மறுநாள் காலை, வீட்டிலுள்ள அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு இருவரும் வெளியே கிளம்பினார்.

“எங்க போறோம் பிரதாப்” என்று, அவள் ஆவலாய் வினவ.

“எல்லாம் உனக்கு பிடித்த இடத்துக்கு தான்”, என்றான்.

சில தூரம் காரில் சென்று விட்டு, ஒரு தென்னந்தோப்புக்குள் சென்றனர்.

ஒரு ஓரமாக காரை நிறுத்தி, அந்த அழகிய தோப்பில், இயற்கையின் அணைப்பில், இருவரும் நடக்கத் துவங்கினர்.

“எனக்கு இது மிகவும் பிடித்த இடம். சின்ன வயசுல இருந்தே, வாரம் ஒரு முறையாவது இங்கு வந்து, சில மணி நேரங்கள் இருந்துட்டு போவேன்”, என அவன் பழைய நினைவுகளில் மூழ்கி பேசிக்கொண்டிருக்க, அவனை பின்தொடர்ந்தாள் சனா.

சிறிது தூரம் சென்ற பின், குளிர்ந்த காற்று வர, இருவருக்கும் உடல் சிலிர்த்தது.

“எவ்ளோ அழகா இருக்கு, இது போன்ற இடத்தை நான் கனவுல கூட கற்பனை செய்ததில்லை”…..

“இந்த வீடு…. எவ்வளவு அழகு… சொல்ல வார்த்தையே இல்லை”, என்று கூறி, திகைத்து நின்றாள் சனாயா.

இடதுபுறம், அழகிய பெரிய குளம். அதில் எலும்பும் குளிர்ந்த காற்று. அதனை ஒட்டியே ஒரு அழகிய வீடு, கலைநயத்துடன் காணப்பட்டது.

மிகப் பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல், அளவாகவும், அழகாகவும் இருந்தது.

வீட்டைச்சுற்றி வண்ண பூக்களின் தோட்டம், அந்த வீட்டிற்கு மேலும் அழகு சேர்த்தது.

வீட்டின் ஒரு புறம் குளம், மறுபுறம் தோட்டம், அந்த தோட்டத்தின் நடுவே ஊஞ்சல், இதைக் கண்ட சனாயா மலைத்துப் போனாள்.

அந்த வீடு, அது இருந்த இடம், என அனைத்தும் அவளது கனவு இல்லத்தை பிரதிபலிப்பது போல தோன்றியது.

வார்த்தையற்று நின்றிருந்தவளிடம், “பிடித்துள்ளதா… வா உள்ளே செல்லலாம்…” என்று, அழைத்துச் சென்றான் பிரதாப்.

“மிக மிக, அழகாக உள்ளது. இது யாருடையது”, என்று அவள் வினவ,

“நம் இருவரின் வீடு”, என்றான்.

“லவ் யூ சனா” என்று அவன் மெல்லிய குரலில் கூற,

“இதைக்கூற இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டதா”, என்று, அவள் நினைத்தது அவனது காதில் விழுந்தது போலும், 

“நீதான் என் மனைவின்னு எப்பவோ முடிவு செஞ்சுட்டேன். உன் மனசுலயும், நான் இருப்பத தெளிவு செஞ்சிட்டு, உனக்கு பிடித்தது, பிடிக்காதது, என அனைத்தையும் வெகுவாய் தெரிஞ்சிகிட்டேன்”…. 

“பின், நம் இருவருக்கும் பிடித்த வண்ணம் இந்த இடத்தை தேர்வு செஞ்சு, இந்த வீட்டையும் கட்டினேன். நாம வாழப்போற இந்த வீட்டில, உனக்காக நான் பார்த்துப் பார்த்து கட்டிய இந்த வீட்டில, என் காதலை சொல்ல வேண்டும்ன்னு, இவ்வளவு நாள் காத்திருந்தேன். உன்னையும் காக்க வெச்சுட்டேன், சாரி”, என்றான் புன்னகையுடன்.

“எதிர்பார்க்காததை, எதிர்பாராத வகையில் செய்றதே, உங்க வேலை”, என்று அவள் முகம்சிவக்க.

“அது சரி, நான் லவ் யூ, என்று கூறினேன். நினைவுள்ளதா”… என்றான்.

“லவ் யூ…. லவ் யூ…. லவ் யூ….” என்றாள் ஆனந்தமாக.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கார்த்திக், பிரபாவின், நிச்சயதார்த்த விழாவுக்கு பிரதாப்பின் குடும்பம் தயாராகிக் கொண்டிருக்க,

“சனாயா தயாரா” என்று அவனுடைய அன்னை பிரதாபிடம் வினவினார்.

“இதோ வந்துட்டேன், அத்தை” என்று தனது அறையிலிருந்து வெளியே வந்தாள் சனா.

மயில்கழுத்து நிற புடவையில் அழகு பதுமையாய் ஜொலித்தாள்….

அசந்துபோன பிரதாப், தனது குடும்பம் முழுவதும் அங்கேயேதான் உள்ளது என்பதையே மறந்து, கண் சிமிட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“வா சனா, ரொம்ப அழகா இருக்க”, என்று கூறிக்கொண்டே, அவள் கூந்தலில் பூக்களை வைத்து, அழகுக்கு அழகு சூட்டினாள், பிரதாப்பின் அண்ணி.

தனது கழுத்திலிருந்த, தங்க நெக்லஸ் ஒன்றைக் கழற்றி சனாவிற்கு அணிவித்து, அழகு பார்த்தார், பிரதாப்பின் பாட்டி.

“பாச மலைகளை எல்லாம் பொழிந்தாயிற்றா… இப்போது கிளம்பலாமா…” என்று நக்கலடித்தான், பிரதாப்பின் அண்ணன்.

‘ஒரு குதூகலமான குடும்பத்தில், அன்பான இதயங்களுடன், தானும் இணைந்து விட்டேன்’, என்று மகிழ்ந்தவள், அவர்களுடன் ஆனந்தமாக விழாவிற்கு சென்றாள்.

விழாவில் ஆதியும், அவனது நெருங்கிய நண்பன் செபாஸ்டியனும், இவர்களை பார்த்தவுடன் எழுந்து வந்தனர்.

“எல்லா பிரச்சினையும் தீர்ந்ததென்று கேள்விப்பட்டேன், மிக்க மகிழ்ச்சி”, என்று பிரதாப் கூற,

“ஆம் அண்ணா, எல்லாம் நமது செபாஸ்டியனாள்தான்”, என்று தனது நண்பனை மெச்சிக் கொண்டான் ஆதி.

மற்ற அனைவரும் நாற்காலியில் அமர்ந்து அரட்டை அடிக்க, தனது தோழி பிரபாவின் அறையை நோக்கி விரைந்தாள் சனா.

“விழாவுக்கு நான்கு நாள் முன்பே வரவேண்டிய பெண், இப்போது தான் வருகிறாய்”, என்று கார்த்திக்கின் அன்னை அவள் காதை திருகி கொண்டே வினவ,

“சாரி ஆன்ட்டி”, என அவள் கூற வரவும்,

“சரி, சரி,…  போய் உன் தோழியைப் பார், அவள்தான் உன் மேல கோபமா இருக்கா”, என்றார் தொடர்ந்து.

அலங்காரத்துடன் அமர்ந்திருந்த பிரபா, சனாவை கண்டதும்… ஆனந்தமாய் எழுந்துவர,

“சாரி பிரபா” என கூற வந்தவளை தடுத்து, பிரபா பேசத் துவங்கினாள்,

“பரவாயில்லை சனா, பிரதாப் அண்ணன் அனைத்தையும் என்னிடம் கூறினார். என் திருமண நிச்சய விழாவுக்கு வந்துட்டு, உன் திருமணத்தை நிச்சயித்து விட்டாயா”, என கேலி செய்தாள் பிரபா.

அந்த விழாவின் கதாநாயகியானதால், பிரபாவிடம் சனாயாவால் வெகு நேரம் பேசி சிரிக்க முடியவில்லை.

இருப்பினும் விழா முடிந்து, அனைவரும் சென்றபின், கார்த்திக் பிரபா வீட்டிலேயே சில நாட்கள் தங்கி விட்டு, பிரபாவுடன் இணைந்து கல்லூரிக்கு திரும்பினாள் சனாயா.

“இன்னும் இரண்டு வருட கல்லூரி படிப்பு, அதை முடித்த பின், ஆறே மாதத்தில் திருமணம். பின், நம் வாழ்நாள் முழுவதும், நாம் ஆசைப்படுவது போல, கார்த்திக் மாமாவுடன் தான் இருக்கப் போறோம். அதனால் இந்த இரண்டு வருடமாவது ஒழுங்கா படிப்போம்”, என்று ஒருவழியாக முடிவு செய்தாள் பிரபா.

அவளுக்கு உதவும் வண்ணம், பிரபாவை தனது வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டாள் சனாயா.

இருவரும் ஒரே வீட்டில் தங்கினர், நன்றாக படித்தனர்…

ஆதி, சனாயா, மற்றும் பிரபாவின், இரண்டு வருடவாழ்க்கை எந்த சலனமுமின்றி நன்றாகவே சென்றது.

மூவரும், தங்களின் முழு கவனத்தை, கல்வியில் செலுத்தி, அதில் வெற்றி கொண்டனர்.

இப்படியே சுமூகமாய் சென்றிருந்த தங்களது கல்லூரி வாழ்க்கைக்கு முடிவு வந்தது, இறுதி தேர்வுகளை நல்ல முறையில் எழுதி முடித்தனர்.

தேர்வு முடிந்த கையோடு, அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும், உதகை சென்று, தங்களது farewell விழாவை கொண்டாடலாம், என முடிவு செய்தனர்….

தொடரும்….

Advertisement