Advertisement

அது வேறு யாருமில்லை…. மித்ரன் தான் என அறிந்ததும் இங்கிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டுமென முடிவு செய்தவள், காரில் ஏறப் போக…

“ஒரு நிமிஷம் சனா, பயப்படாத நான் ஒன்னும் பன்ன மாட்டேன்”, என்றான் மித்ரன்.

சிந்தனையோடே,  இவள் அவனை காண…

“நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன் சனா. உனக்கு என்னை பிடிக்கலைனு தான் நான் உன்னிடம் இருந்து இவ்வளவு நாள் விலகி இருந்தேன். என்ன மாதிரி மனுஷனோட நீ வாழ வேண்டாம்னு தான் உன்னை மறக்க முயற்ச்சி செஞ்சேன். ஆனா என்னால முடியல சனா…..” 

“அதனால தான், இப்போ ஒரு முடிவு செஞ்சிருக்கேன்”….

“நான் இப்போ பழைய மித்ரன் அல்ல, புதியவன்… என்னோட திமிரு, ஆணவம் எல்லாத்தையும் விட்டுட்டேன். இனி ஒழுக்கமா வாழுவேன். இது எல்லாமே உனக்காக தான் சனா, என்ன கல்யாணம் பன்னிக்கோ” என்றான்.

‘நான் ஒன்னும் சிறுபிள்ளை அல்ல, நீ மாறிட்டேனு சொன்னதும், அத நம்பி, உன் பின்னாலேயே வரதுக்கு’, என்று மனதுக்குள் நினைத்தவள், மௌனமாய் நிற்கவும்,

“நீ இன்னு என்ன நம்பலைனு நினைக்றேன்”, என்றான் மித்ரன்

“நீங்க மாறினாலும், மாறலைனாலும், அதை நாம் நம்பினாலும், நம்பாமல் போனாலும்… என் முடிவு ஒன்னு தான், நான் வேறொருவரை நேசிக்றேன். உங்களை என்னால் காதலிக்க முடிலாது”, என்று முடிவாக கூறினாள்.

“நான் மாறியது உண்மைதான். ஆனால் நீ எனக்கு கிடைக்காமல் போனால் எதையும் செய்யத் துணிவேன்”, என்று அவன் மிரட்ட…

இந்த பதிலை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த சனாயா, இவனிடம் பேசி பயன் இல்லை என்பதை உறுதி செய்தாள். 

இவனிடமிருந்து எப்படியும் தப்ப முடியாது… என்ன செய்வது என்று திண்டாடினாள்.

“இந்த மௌனத்தை நான் என்னன்னு எடுத்துக்கிறது”, என்றான் மித்ரன் எரிச்சலாக.

“எவ்வளவுதான் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்பவர்களிடம், எதையும் சொல்ல முடியாது. அதுபோன்ற வீண் முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை”, என்றாள் கடுப்பாக

“பரவாயில்லை…. மனதில் இருப்பதை சொல். உனக்காக இவ்வளவு தூரம் மாறிய என்னால், உன்னை புரிந்து கொள்ளவும் முடியும், என நினைக்கிறேன்”, என்றான், கையை கட்டி அவளது காரில் சாய்ந்துகொண்டு.

இவனது இந்த பதில் ஆச்சரியத்தை அளிக்க… ஒருவேளை உண்மையிலேயே, நமக்காக இவன் மாறி இருப்பானோ, என்ற சந்தேகமும் எழுந்தது. பேசித்தான் பார்ப்போமே என தோன்றியது.

“நான் பிரதாப்பை காதலிக்கிறேன், நீங்க எனக்காக மாறியது உண்மையானு  எனக்கு தெரியலை, ஆனால் அப்படி மாறி இருந்தால், என்னை விட நல்ல பெண் நிச்சயமா உங்களுக்கு கிடைப்பாங்க. நான் கிடைக்கலைனா எதையும் செய்யவேன்னு சொன்னீங்களே, நீங்க அப்படி எத செஞ்சாலும், என்னால அவர மறந்து உங்களோட வாழ முடியாது, எனக்கும் பிரதாப்கும் மனதளவில் என்றோ திருமணம் ஆகிடிச்சு. அவர்தான் என் கணவர்”…. 

“என்னோட முடிவுல எந்த மாற்றமும் வரப்போறதில்லை. நீங்க எதையாவது தப்பா செஞ்சு வெச்சா… அதனால பாதிக்கப்படுவது நாங்க மட்டுமல்ல, நல்ல மனிதனா மாறியிருக்கும் நீங்களும் தான். அதனால் இதையெல்லாம் நினைவில் வைத்து, உங்கள் வாழ்வை பற்றி சிந்திங்க. இனி நாம் சந்திக்க வேண்டாம்”, என்று தன் உரையை வேகமாக முடித்தாள் சனாயா.

“அப்படினா….நீ ஆதிய காதலிக்கலையா!!!!”, என்றான் அதிர்ச்சியாக

“சேச்சே…. இல்லை, இது என்ன பேச்சு… அவன் என் நண்பன்”,

“நீ பிரதாப்ப காதலிக்றது அவனுக்கு தெரியுமா”   

“இல்ல தெரியாது… இனிதான் சொல்லனும். ஆனால் இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு”…

“சரி சனா, நான் வருகிறேன்… நீ கவனமா வீட்டிக்கு போ”, என்று பவ்யமாக கூறிவிட்டுச் சென்றான் மித்ரன்.

மித்ரன் செல்லும்வரை அவனது காரை வெறித்து பார்த்த சனாயா,

“என்ன இவன், எதுவு சொல்லாம போறான். இதுக்கு என்ன அர்த்தம். இனி என்ன தொல்ல செய்ய மாட்டான்னு அர்த்தமா, இல்லை இனியும் இது தொடரும்னு அர்த்தமா, ஒன்னும் புரியலையே”, என்று நினைத்தாள் சனாயா

“நான் என் காதலை  பிரதாபிடமே இன்னும் சொல்லல…. இந்த நிலையில இவனிடம் எல்லாத்தையும் உளறிட்டேன்…. இவன் வாயை மூடிக் கொண்டிருந்தால் பரவால்ல”, என்று வருந்திக் கொண்டே காரை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி பயணித்தாள் சனாயா.

சிறிது தூரம் சென்ற பின் தான் நினைவுக்கு வந்தது, ‘இது ஆதிக்கு தெரியாதானு கேட்டானே!!!!… ஒருவேளை இவன் இதை ஆதியிடம் சொன்னால் என்ன செய்வது… நான் வேண்டுமென்றே அவனிடம் மறைத்ததாக நினைப்பானே… நிச்சயம் வருந்துவானே’, என்று அவள் மனம் பதரியது.

வீட்டிற்கு சென்று பார்த்தால்.. கார்த்திக்கும் பிரபாவும் ஒன்றாக அமைந்திருக்க, இவர்கள் எப்போது இங்கே வந்தார்கள் என்று மனதுக்குள் மகிழ்ந்தாள் சனாயா.

அவர்கள் இருவரையும் பார்த்தபின் மனதில் இருந்த கலக்கம் எங்கோ ஓடி சென்று விட, கலகலப்பாக பேசி மகிழ்ந்தாள்.

“நிச்சயதார்த்த விழாவுக்கு, பிரபாவை அழைத்து செல்ல வந்தேன் சனா”, என்றான் கார்த்திக் புன்னகையுடன்.

“நீயும் வா சனா, அங்க நிறைய பேர் இருப்பாங்க. ஜாலியா இருக்கு”, என்றாள் பிரபா உற்சாகமாக.

நேற்றுவரை வாடி இருந்த பிரபாவா இது, எங்கிருந்து வந்தது இவ்வளவு உற்சாகமும், என்று மனதிற்குள் எண்ணியவளாய்… 

“இல்ல பிரபா, நான் ஒரு ப்ராஜக்ட் செய்றேன், அது முடிந்ததும் வருகிறேன்”, என்று கூறினாள் சனா.

“பிராஜெக்ட்டா….. என்கிட்ட நீ சொல்லவே இல்லையே”, என்று பிரபா விழி விரித்துப் பார்த்தாள்.

‘நான் அதை செய்தால் தானே சொல்வதற்கு, எனக்கு இப்போது தேவைப்படுவது தனிமை மட்டும் தான். அதன் பின் ஆதியிடம் பேசவேண்டும். நன்றாக பேசி பல நாட்கள் ஆகின, இது அனைத்துக்கும் மேலாக ரொம்ப நாள் கழித்து இருவரும் வெகு தூரம் ஒன்றாக பயணிக்க போகிறீர்கள். நான் வந்தால் கண்டிப்பாக இடையூறாக தான் இருக்கும்’, என்று எண்ணினாள் சனாயா.

“என்ன சனா… அமைதியா இருக்க…”

“இல்ல பிரபா…. உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன், நிச்சயம் உன் விழாவுக்கு, நான்கு நாட்கள் முன்பே வரேன்” என்றாள் சனா.

“எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வா சனா… வீட்டில எல்லாரும் உன்ன பாக்கணும்னு சொன்னாங்க” என்று, கார்த்திக் கூற,

“கண்டிப்பா வரேன் அண்ணா”, என்றாள்.

“நீ இப்படி தான் சொல்வ, கடைசில என்ன ஏமாத்திடுவ” என்று பிரபா சிணுங்க.

“நீ ஒன்னும் கவலைப்படாத கண்ணு, பாப்பாவ நான் கண்டிப்பா அங்கு அனுப்பி விடறேன்”, என்று கூறினார் வல்லியம்மை.

“நீங்க சொன்னால் சரிதான்”, என்று கார்த்திக் புன்னகைக்க,

“அவளை அனுப்பி வைக்கிறீங்களா…. நீங்களும் அவளோட கண்டிப்பா வரனும்”, என்றாள் பிரபா கட்டளையாய்.

“அதுக்கென்ன கண்ணு, உனக்காக உனக்கு பிடித்தவை எல்லாம் செய்து, எடுத்துக்கிட்டு வரேன்”, என்றாள் வல்லி, வாய் நிறைய புன்னகையுடன்.

பல நாட்கள் கழித்து அன்று தான் பிரதாப் கால் செய்தான்… “எப்படி இருக்கிற சனா”, என்று ஆரம்பித்து… அவளை கடைசியாக பார்த்ததிலிருந்து, இன்று வரை, நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான்.

அவளும் மித்ரனை சந்தித்ததை தவிர, அனைத்தையும் கூறினாள். வீணாக இந்த நல்ல வேளையில் அவனைப் பற்றி பேசுவானேன் என்று எண்ணினாள் சனா.

“உனக்கு எப்போ செமஸ்டர் விடுமுறை துவங்குது”, என்று பிரதாப் வினவ,

“நாளையிலிருந்து” என அவள் விடையளிக்க,

பின்னர் அவனுக்கு, ஏதோ ஓர் அவசர வேலை வந்துவிடவே, “நான் போகனும் சனா”, என்றான் பரபரப்பாக.

“சரிங்க பிரதாப்… ஒழுங்கா சாப்பிடுங்க, கவனமா சென்று வாங்க”, என்று இறுதியாக சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

கல்லூரி லைப்ரரிக்கு சென்று, வழக்கம் போல தனது படிப்புல் கவனம் செலுத்தினாள்.

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், எவ்வளவு தான் குழப்பங்கள் இருந்தாலும், அது அவளுடைய கல்வியை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்வாள்.

‘இன்னிக்கு ஏன் ஆதி கல்லூரிக்கு வரலை’, என்று சிந்தனையோடே, பூங்காவிற்கு சென்று காத்திருந்தாள்.

போன் செய்து பார்த்தாள்… 

பதில் வராமல் போகவே, வீட்டுக்கு திரும்பிவிட்டாள்.

கதவைத்திறந்த வல்லியம்மையின் முகம், மிகுந்த குழப்பத்தில் இருப்பதை உணர்ந்து,

“ஏன் வல்லிமா, ஒருமாதிரியா இருக்கீங்க”, என்று வினவினாள். 

“பால்கனி போய் பார் பாப்பா, உன்னைக்கே புரியும்”, என சொல்லிவிட்டு, சமையல் அறைக்குள் நுழைந்துவிட்டார்.

ஹாலில் பல துணி பெட்டிகள் இருப்பதை பார்த்து… “இது யாருடையது வல்லிமா” என்றாள் ஆச்சரியமாய்.

பதில் ஏதும் வராததால், காதில் விழவில்லை போலும், என்று நினைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றாள் சனாயா.

அங்கு ஒரு சேரில் ஆதி அமர்ந்திருந்தான்…

அவனை பார்த்த சனாயா, ‘நானே அழைத்த போது கூட வீட்டிக்கு வர மறுத்தவன், இன்னிக்கு ஏன் இங்க வந்து இப்படி ஒக்காந்திருக்கான்’ என்று சிந்தித்த வண்ணம், அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“அந்தப் பெட்டிகள் என்னுடையது”, என்றான் ஆதி.

“உன்னுடையதா… எதற்கு இத்தனை பெட்டிகளை எடுத்துட்டு வந்திருக்க, எங்காவது நீண்ட நாள் பயணம் செல்ல போறியா, வழியில என்ன பார்த்துட்டு போகலாம்னு வந்தியா”, என்று அவள் கேள்விகளை அடுக்க,

அவன் அமைதியாய் இருப்பதை பார்த்து விட்டு, “நீ எங்க வேனும்நாலும் போ, ஆனால் பிரபா நிச்சயதார்த்த விழாவுக்கு தவறாமல் வந்துடு”, என்றாள்.

“நான் எங்கும் போகல சனா, உன்னோட இங்கேயே தான் இருக்கப் போறேன்”, என்றான்.

அதிர்ந்துதான் போனாள் சனா, இப்படி ஒரு பதிலை, அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. 

“உளறாதே… என்ன பிரச்சனை, எதுக்கு இப்படி செய்ற”, என்று கடும் சினத்தோடு, வினவினாள்.

பதில் வராமல் போகவே, “நீ என்னோட நண்பன் தான். அதுக்காக இதையெல்லாம் அனுமதிக்க முடியாது”, என அவள் கடிய,

அவன் கண்னை மூடி அமர்ந்திருந்தான்…

“இப்படியே வாயை மூடிக்கொண்டிருந்தால் எப்டி, என்ன பிரச்சினைனு சொல்லு”, என்று விடாமல் வினவினாள் சனாயா….

“நான் சொல்றேன்”, என்று பால்கனிக்குள் நுழைந்தான் பிரதாப்.

Advertisement