Advertisement

நகைக்கடை ஓனரின் மூலமாக, அந்த பிரேஸ்லெட்டுக்குப் பின் இருக்கும் ஆசாமி தன் முன்னாள் கணவர் தான் என்பதை அறிந்து கொண்ட வசுந்தராவுக்கு, அடுத்து, அந்த பிரேஸ்லெட் சம்பவம் நடந்த இடத்திற்கு எப்படி வந்தது? என்பது பற்றி அறிய வேண்டி இருந்தது

அதன்பொருட்டு அருணாச்சலத்தின்  அறையில் அவர் பொருத்தி விட்டு வந்து இருந்த மைக்ரோ ஸ்பீக்கர் மூலமாக, அங்கு நடப்பவற்றை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தார் வசுந்தரா.

அப்பொழுது தான் நகைக்கடை ஓனரிடம் பேசி முடித்து போனை வைத்திருந்த அருணாச்சலம் டென்ஷன் தாங்காது, உடனே ரீட்டாவைத் தன்றைக்கு வரும்படி அழைத்தார்.

அறைக்கு வந்தவள் அருணாச்சலத்திடம் நெருங்கி கொஞ்சி குலாவ ஆரம்பிக்கவுமே, அதை கேட்டுக் கொண்டு இருந்த  வசுந்தராவுக்கு பெருத்த அதிர்ச்சி என்றால், அதை விட அடுத்தடுத்து அவர்கள் பேசியதைக் கேட்டவரின் முகம் அனலடிக்க ஆரம்பித்து விட்டது.

வசுந்தரா அந்த பிரேஸ்லெட் பின்னாடி போக ஆரம்பிச்சுட்டா. அவ மட்டும் உண்மையைக் கண்டுபிடிச்சுட்டா நாம அவ்ளோதான்!” என்று முகம் வேர்த்து விறுவிறுக்கச் சொன்னவரை நெருங்கி, அவரின் நெஞ்சை நீவியபடி,இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க  டார்லிங்?” என்று சாதாரணமாகக் கேட்டாள் ரீட்டா.

அவளை விலக்கி நிறுத்தியவரோ,எதுக்குன்னு உனக்குத் தெரியாதா?” என்று உறுத்து கேட்கவும், “கூல்! கூல் டார்லிங்! ஆனானப்பட்ட போலீசாலையே கண்டுபிடிக்க முடியாததை, இவளால மட்டும் கண்டுபிடிச்சுட முடியுமா என்ன??” என்று அவரின் முகத்தில் தன் ஒரு விரல் கொண்டு வருடி கேட்டாள்.

அந்த வருடலில் லேசாகத் தடுமாறிப் போனவரும்,
நீ சொல்றது எல்லாம் ஓகே தான், ஆனா வசுந்தரா…?” என்று ஆரம்பிக்கும் முன், அவரின் இதழ்களை தன் விரல் கொண்டு மூடி பேச விடாது செய்தவள், இன்னும் அவரை நெருங்கி கிறங்க வைத்ததில், மொத்தமாகத் தன்னிலை இழந்தார் அருணாச்சலம்.

இன்னைக்கு நைட் நாம மீட் பண்ணலாமா?” என்று ரீட்டா தாப குரலில் கேட்க,

இப்போ வேண்டாம்என்று அந்நிலையிலும் உஷாராகப் பதில் சொன்னார் அருணாச்சலம்.

அதில் அவரின் மீதான விரலை பட்டென்று எடுத்தவள்,இன்னும் எத்தனை நாளைக்கு என்னை இப்படித தள்ளி வைக்கப் போறீங்க?  உங்களை நான்  எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா??” என்று உருகும் குரலில் கூற, அந்த வார்த்தைகளில் உருகி போனவரும்,சரி, நைட் மீட் பண்ணலாம்என்று மயக்கத்துடன் சொன்னார்.

அதில் உற்சாகமாகிப் போனவள், ஒரு முத்தத்தை அவருக்குப் பரிசாகக் கொடுத்து விட்டு,நைட் மீட் பண்ணலாம்என்று சொல்லி விட்டு, ஒயிலாக அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள்.

அவர்களின் அந்தச் சல்லாப சந்திப்பைப் பற்றி அறிந்து கொண்ட வசுந்தராவுக்கு நெஞ்சம் பற்றி எரிந்தது, இப்படிப்பட்ட ஒருவனா என் பிள்ளைக்கு அப்பா  என்று!

சூழ்நிலையை கருத்தில் கொண்டு தன்னைத்தானே அடக்கிக் கொண்டவர், அருணாச்சலம் ரீட்டாவின் வீட்டுக்குச் செல்லும் முன் அருணை அங்கே அனுப்பி வைத்தார்.

ஏனென்றால் அவருக்கு நன்கு தெரியும்! அருணாச்சலத்தின் வாயில் இருந்து தனக்குத் தேவையான உண்மை வெளிவர வேண்டுமென்றால், அவரை கார்னர் பண்ணினால் மட்டுமே அது முடியுமென்று!

அதன்பொருட்டே ரீட்டாவும், அருணாச்சலமும் ஒன்றாக இருக்கும் வீடியோ ஆதாரத்தை எடுத்து வரும்படி அருணிடம் கேட்டு இருந்தார் அவர்.

வசுந்தராவின் வார்த்தைகளை ஏற்று, அருணாச்சலத்திற்கு முன் ரீட்டாவின் வீட்டை அடைந்திருந்த அருணுக்கும் ஜோசப்புக்கும்,  அந்தச் சொகுசு பங்களாவிற்குள் எப்படி உள்ளே செல்வது என்ற எண்ணம் தோன்றியது.

இரவு என்றாலும் முன்பக்க ஆள்நடமாட்டம் மற்றும் கேமராக்கள் இருந்ததால், பின்பக்கமாக அதிக இருள் சூழ்ந்து இருந்த இடத்தைக் கண்டுபிடித்த அருணுக்கு,இத விட்டா வேற வழி இல்லைஎன்ற எண்ணத்தில்,யாராவது வராங்களான்னு கவனி!” என்று ஜோசப்பிடம் சொன்னான்.

அவனின் திட்டம் புரிந்த ஜோசப்புக்கோ, தன் முன்னே இருந்த அந்த ஆளுயர சுவற்றை பார்க்கவுமே,இதெல்லாம் நடக்குற காரியமா??’ என்று இருந்தது.

அதில்,ஏன் சீனியர், நீங்க வேணா உள்ளே போங்களேன்.. நான் இங்கேயே இருந்து யாராவது வராங்களான்னு பார்க்குறேன்என்று சொல்ல, அதில் கடுப்பாகிப் போனவனோ திரும்பி,உன் மூஞ்சியைப் பார்த்தா தான் சும்மா போறவன் கூட போலீசைக் கூப்பிடுவான். அதனால ஒழுங்கா எகிறி குதிக்கிற வேலையைப் பாரு!” என்றான்.

அதைக் கேட்டு,அந்த அளவுக்கா நாம பயப்படுறது வெளியே தெரியுது?’ என்று எண்ணியவனும்,எதுக்கு வம்பு? எகிறியே குதிச்சுடுவோம்என்று எண்ணத்துடன் முக்கி முனங்கி பங்களாவிற்குள் குதித்து விட்டான்.

என்ன பாஸ்.. இன்னும் ரெண்டு பேரையும் காணோம்? எவ்ளோ நேரம் தான் இப்படி கொசுக்கடியில் குத்த வச்சுட்டு இருக்கிறது?” என்றான் ஜோசப்.

ஏன்டா நாம என்ன இங்கே பொண்ணு பாக்கவா வந்து இருக்கோம்?? பொண்ணு வரலை அவுங்க அம்மா வரலைன்னுட்டு இருக்கஎன்று அருண் பல்லைக் கடிக்கவும், ‘பல்லே இந்த கடி படுதே, அப்போ நம்ம நிலை??’ என்று அரண்டவனோ, அதற்கு மேல் வாயைத் திறக்காதுகப்சிப்ஆனான்.

ஒருவழியாக அதிக நேரம் அவர்களைக் காக்க வைக்காமல், ஊரடங்கிய நேரம் ரீட்டாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்து இருந்தார் அருணாச்சலம்.

அவரின் வரவைக் கண்டதும் ஹாலில் திறந்து வைக்கப்பட்டு இருந்த ஜன்னல் கதவு வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்க, அங்கே உள்பக்கமாக சுவற்றில் ஒரு மைக்ரோ கேமராவை ஒட்டினான் அருண்.

அதன் மூலம் உள்ளே நடக்கும் அனைத்தையும் தன்னிடம் இருக்கும் போனில் பதிவு செய்ய ஆரம்பித்தான் ஜோசப்.

தன் கழுத்து டையை கழட்டியபடி உள்ளே நுழைந்த  அருணாச்சலத்தை, அரைகுறை உடையுடன் கையில் சரக்கு நிரம்பிய கிளாசுடன் நெருங்கிய ரீட்டா,வெல்கம் டார்லிங்!” என்று கிளாசை அவரிடம் கொடுத்தபடி போதை ஏற்றும் குரலில் சொன்னாள்.

அதை வாங்கி ஒரே மடக்கில் குடித்து, காலையில் இருந்து தன்னை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்த டென்ஷனை எல்லாம் தணிக்க முயன்றார் அருணாச்சலம்.

இன்னொரு கிளாஸ் அவருக்கு ஊற்றிக் கொடுத்து, அவரை அணைத்து நெஞ்சில் முகம் புதைத்தவள், அவரின் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்ட, அந்நேரம் அவரின் போன் அலறியது. அதை அவர் எடுத்துப் பேசும் முன் தன் கைவசப்படுத்தி இருந்தாள் ரீட்டா.

அதைக் கொடு ரீட்டா!” என்று அவளின் பின் ஓடாத குறையாக ஓடியவரை இன்னும் சில நிமிடங்கள் அலைய விட்டு விளையாடியவள்,நான் வேணுமா? போன் வேணுமா??” என்று சரசமாகக் கேட்க,

இரண்டும்!” என்று சொல்லியபடியே அவளின் கையில் இருந்த போனை வாங்கி, சில நிமிடங்களிலேயே பேசி முடித்து அணைத்தவரின் முகம் சிந்தனை வயப்பட்டு இருப்பதைக் கண்டுகொண்டவள்,

என்னாச்சு?” என்று கேட்க, “நாளைக்கு போர்டு மீட்டிங் இருக்கு, தெரியும்ல?” என்று கேட்டார் அருணாச்சலம்.

ம்ம்ம்.. அட்லாஸ்ட் நீங்க நினைச்ச மாதிரி எல்லாம் நடக்கப் போகுதுஎன்றவளின் பேச்சைக் கேட்டவர், இன்னும் சிந்தனை  வயப்படுவதை அவரின் நெற்றிச் சுருக்கத்தில் கண்டவள்,

இப்போ என்ன?” என்று கேட்க,

ஏதோ தப்பா நடக்கப் போகுற மாதிரி ஒரு பீலிங்!” என்றபடி கையில் இருந்த ஸ்காட்சை அருந்தியபடியே சோபாவில் சென்று அமர்ந்தார் அருணாச்சலம்.

அவர் பின்னோடு சென்று அவரை இடித்தபடி அமர்ந்த ரீட்டா,நீங்க தேவையே இல்லாமல் பயப்படுறீங்களோன்னு எனக்குத்  தோணுது???” என்றாள்.

நாம செஞ்சு இருக்கிறது என்ன சாதாரண விஷயமா? அப்புறம் எப்படி பயப்படாமல் இருக்க முடியும்?” என்று கேட்டவர்,

அன்னைக்கு நான் அர்ஜுன் கெஸ்ட் ஹௌஸ்க்குப் போயிருக்கவே கூடாது! அப்படியே போயிருந்தாலும் உன் பேச்சைக் கேட்டு அந்த விஷயத்தைச் செய்து இருக்கவே கூடாது!” என்றதில் ரீட்டாவுக்குக் கோபம் துளிர் விட்டது.

இப்போ என்ன சொல்ல வர்றீங்க? உங்களின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணமுன்னா?”

இல்ல, நான்..” என்று அருணாச்சலம் பேசி முடிக்கும் முன்,

ஃபார் யுவர் கைண்ட் இன்பெர்மேஷன், துளசியைக் கொலை செய்தது அர்ஜுன்னு நினைத்து, உங்க குடும்ப கெளரவமே போய்டுச்சுன்னு நீங்க புலம்பவும் தான், நான் அந்த பாடியை அங்கே இருந்து ரீமூவ் பண்ணிடலாம்னு சொன்னேன்என்றவளின் ஆத்திரத்தில்,

அவளை விட கர்ஜனையோடு,நீ மட்டும் அன்னைக்குக் கொஞ்சம் கவனமா இருந்து இருந்தா, நாம இன்னைக்கு இப்படி ஆர்கியூ பண்ண வேண்டி இருக்காது!” என்று அவளின் மீதே மீண்டும் குற்றம் சாட்டினார் அருணாச்சலம்.

ஆமா.. ஆமா.. நான் தான் வேணும்ன்னு நீங்க கொடுத்த அந்த பிரேஸ்லெட்டை அர்ஜுன் காரில் கழட்டிப் போட்டுட்டு வந்தேன் பாருங்க..” என்று முகத்தை திருப்பிக் கொண்டு அழும் குரலில் சொல்லவும், மனமிறங்கிப் போனவர்,நாட் லைக் தட் டா..” என்று சொல்ல, அதைக் கேட்டு கொஞ்சமும் தணியாதவளை நெருங்கி அமர்ந்தவர், அவளின் முதுகில் முத்தங்களைப் பதிக்க ஆரம்பித்தார்.

அதில் லயிக்க ஆரம்பித்தவள், சில சிமிடங்களிலேயே அருணாச்சலத்துடன் சல்லாபிக்க ஆரம்பித்து விட்டாள்.

அவர்களின் பேச்சையும், செயல்களையும் கேட்டு அதிர்ந்து போனவர்கள், அதற்கு மேல் எதையும் பார்க்கவோ கேட்கவோ முடியாது, வந்த தடமே தெரியாது அங்கிருந்து கிளம்பினார்கள்.

மறுபுறம் சுவர் எகிறி குதித்துத் தங்கள் பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்து இருந்த அருணிடம்,என்ன மனுஷன் இவன் எல்லாம்??!! இவன் மாட்டிக்க கூடாதுன்னு பெத்த பையனையே மாட்டி விட்டு இருக்கான்என்று ஆத்திரம் அடங்காது கேட்டவனை விட அதிக சினத்தில் அருண் இருந்தாலும், அமைதியாகவே நடந்து கொண்டு இருந்தான்.

சீனியர்!‌ நாம வேணா ஒரு அனகோண்டாவை பிடித்து அவுங்க ரூமுக்குள்ள விட்டுட்டு வந்துடலாமா?” என்று கேட்கவும்,

ஏன்டாஎன்ற விதமாக அவனைப் பார்த்து வைத்தான் அருண்.

பின்னே என்ன சீனியர்? அந்தக் கிழவனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தீங்களா? இந்த வயசுல என்னமா ஜல்சா பண்ணிட்டு இருக்கான்என்று கடுப்பில் சொன்னவனின் பேச்சில்,தூ!” என்று துப்பாத குறையாக துப்பியவன்,மூடிட்டு நட!” என்றான் அருண்.

ஏன் சீனியர் இப்படி ஜடம் மாதிரி இருக்கீங்க?? இந்த வயதில் இந்த மாதிரி எல்லாம் பார்த்தா, நம்ம நாடி நரம்பு எல்லாம் அப்படியே பொங்க வேண்டாமா??” என்று தன் இரண்டு கைகளையும் முறுக்கிக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தவன், திடீரென்று,சீனீயர்!” என்று அலறியதில்,இப்போ என்னடா?” என்று திரும்பிக் கேட்டான் அருண்.

அப்பொழுது தனக்கு அருகில் இல்லாதவனைத் திரும்பிப் பார்த்தவன், அங்கே சில அடி தூரத்தில், ஒரு நாய் ஜோசப்பை சிறை வைத்து இருப்பதைக் கண்டான்.

ஒரு அடி நகர்ந்தாலும் நீ செத்தடா மவனே!!’ என்றபடி முப்பத்திரண்டு பற்களையும் காட்டி உறுமிக் கொண்டு இருந்த நாயின் முன் நடுநடுங்கிக் கொண்டு இருந்தவனைக் கண்டு சிரித்தவன்,உன் பாக்கெட்டில் இருக்கிற பிஸ்கெட்டை எடுத்து அதுகிட்ட போட்டுட்டு வா!” என்று சொன்னான்.

அருண் சொன்னபடி ஜோசப் செய்யவும், நாய் அவனை ரிலீஸ் செய்து விட்டு பிஸ்கெட்டை குனிந்து சாப்பிட ஆரம்பிக்கவும், விட்டால் போதுமென்று தலைதெறிக்க ஓடி வந்தவனிடம்,இதெல்லாம் உனக்குத் தேவையா?” என்று கேலியாகக் கேட்டான் அருண்.

சாப்பிட ஒரு பிஸ்கட் கொண்டு வந்தது ஒரு குற்றமா?” என்றவனும், பின்னாடி நாய் இருக்கும் பயத்தில்,சீக்கிரம் வாங்க சீனியர், இங்கே இருந்து போய்டலாம்என்று அருணை அவசரப்படுத்திக் கொண்டு இருந்த நேரம், அவர்கள் இருவரையும் ப்ரேக் பிடித்தது போல முன்னே வந்து நிறுத்தி இருந்தது அதே நாய்.

அதில் வெறுப்பாகிப் போன ஜோசப்,ஏய்! என்ன விளையாடுறியா? அதான் இருந்த பிஸ்கெட்டை எல்லாம் கொடுத்துட்டேனே?? அப்புறமும் இப்படி வந்து நின்னா நான் என்ன பண்ணுவேன்?? எல்லாத்துக்கும் ஒரு நியாய தர்மம் வேணா??” என்று நாயிடம் நியாயம் கேட்டான்.

அவனின் பேச்சைக் கேட்ட நாய்க்கு என்ன புரிந்ததோ?உடனே அது அவனைப் பார்த்து குலை நடுங்கும் அளவுக்கு குரைக்க ஆரம்பித்து விட்டது. அதில் சர்வமும் ஒடுங்கிப் போனவனோ,  “சீனியர்! சீனியர்! என்னைக் காப்பாத்துங்க!” என்று அருணைப் பிடித்துக் கொண்டு அலற ஆரம்பித்து விட்டான்.

அருணை மிரண்டு பார்த்த ஜோசப்,இப்போ என்ன செய்றது சீனியர்?” என்று கேட்க,

வேற வழியே இல்லை..” என்று நாயையே பார்த்தபடி சொன்ன அருணை பார்த்துக் கொண்டு இருந்தவனோ,அது என்ன வழி?” என்று கேட்டு முடிக்கும் முன், அங்கிருந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்து விட்டான் அருண்.

அதைக் கண்டவனோ,அடப்பாவி சீனியர்! இதுதானாடா அந்த வழி??” என்று கூவியபடியே அவனைத் தொடர்ந்து பின்னங்கால் பிடறியில் பட ஓடினான்.

ஒருவழியாக நாயிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்தவர்களின் கோலம் கண்டு மற்ற ஜூனியர்கள்,ச்சே! என்னமா உழைச்சு இருக்கான் பாரேன்!” என்று ஜோசப்பின் ஆடை அழுக்காகி இருப்பதைப் பார்த்துப் புகழவும், அதைக் கேட்டு வெறியாகிப் போனவனோ, கடுப்பானபடி அவர்களைப் பார்த்து குரைக்க ஆரம்பித்து விட்டான்.

அதில்,என்னடா ஆச்சு உனக்கு?” என்று நடுங்கி அவனிடம் கேட்டவர்களிடம்,என்ன ஆச்சா??” என்று அந்நேரம் அங்கே வந்த அருணை அவன் அனல் பார்வை பார்க்க, அதைக் கண்டு கொள்ளாதவனோ, நைசாக குளியல் அறைக்குச் சென்று  புகுந்து கொண்டான்.

சொல்லுடா!” என்று நச்சரித்த நண்பர்களைத் திரும்பிப் பார்த்தவன்,இந்த கறை எல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி நான் உழைச்சதால வந்தது இல்ல மச்சான். ஒரு நாய்கிட்ட இருந்து தப்பிக்க ரோட்டில் உருண்டு புரண்டதில் வந்ததுடாஎன்று ஓவென அழுதவனின் பேச்சைக் கேட்டவர்களோ, அவனுக்கு ஆறுதல் சொல்லாமல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனோ, அவர்களின் மீது பாய்ந்து குதற ஆரம்பித்து விட்டான்.

பக்கத்து அறையில் நடக்கும் கலவரம் புரியாது, அருண் கொடுத்த வீடியோவைப் பார்த்துக் கொண்டு இருந்த வசுந்தராவுக்கு, அதில் தோன்றிய காட்சிகளைக் கண்டு கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது.

அருணாச்சலத்திற்கும் ரீட்டாவுக்குமான உறவை உலகுக்குக் காட்டி, அவரின் மானத்தைக் கப்பல் ஏற்ற வசுந்தராவுக்கு ஒரு நிமிடம் ஆகாது! ஆனால் அது அவனோடு போகாது! அர்ஜுன், சித்ரா மற்றும்  விஷ்வாவையும் அதிகம் பாதிக்கும் என்று எண்ணியவர், உடனே அந்த எண்ணத்தை கைவிட்டு, வேறு ஒரு ஆயுதத்தை கையில் எடுக்க நினைத்தார்.

அதன்படி உடனே அருணாச்சலத்தை போனில் அழைத்த வசுந்தரா, அவரைகாய்ச்சு காய்ச்சு’ என்று காய ஆரம்பித்து விட்டார்.

முதலில் வசுந்தராவின் ஆக்ரோஷத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாது திமிர் காட்டிய அருணாச்சலம், தன் போனில் அவர் அனுப்பி வைத்து இருந்த வீடியோவைக் கண்டு, தலையில் இடி விழுந்தார் போல அரண்டு போனார்.

அதில், “தயவு செய்து இதைப் பத்தி யாரிடமும் சொல்லிடாத வசுந்தரா! சொல்லிடாத வசுந்தரா!” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்ச, “ச்சீ! வாயை மூடு! என்கிட்டே கெஞ்ச கூட ஒரு தகுதி வேணும். ஆனா அந்தத் தகுதியை எல்லாம் நீ எப்பவோ இழந்துட்டஎன்று கர்ஜித்தார்.

அதில் பேச்சு மூச்சு இன்றி நடுங்கிப் போனவரிடம்,இங்கே பார்! உனக்கு இருக்கிறது இரண்டே ஆப்ஷன் தான்! ஒன்று, துளசியின் பிணத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியது நீ தான்னு சொல்லி போலீசில் சரணடைந்து, உன்னோட கௌரவத்தைக் கொஞ்சமாவது காப்பாத்திக்கோ! இல்லை உன்னோட வண்டவாளத்தை எல்லாம் நான் தண்டவாளத்தில் ற்றுவதைப் பார்த்து சாகத் தயாரா இரு! சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!” என்று சொல்லி போனைத் துண்டித்திருந்தார்.

அணைக்கப்பட்ட போனையே வெறித்துப் பார்த்து இருந்த அருணாச்சலத்துக்கு, எப்படி யோசித்தும் வசுந்தரா பின்னிய வலையில் இருந்து தப்பிக்கும் மார்க்கம் மட்டும் விளங்கவே இல்லை. அதன்பொருட்டு, பலமணி நேர சஞ்சலத்திற்குப் பிறகு,போகிற மானம் கொஞ்சமாவது போகட்டும்என்ற முடிவுக்கு வந்தவர், உடனே போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்து விட்டார்.

அருணாச்சலத்தின் வருகையிலும், அவரின் வாக்குமூலத்திலும் லேசாக ஜெர்க்காகிப் போன போலீஸ் அதிகாரிகள்,எதற்காக துளசியின் பாடியை மூவ் பண்ணீங்க?” என்று விசாரிக்க ஆரம்பித்தனர்.

சம்பவம் நடந்த அன்று துளசியை நான் செக் செய்த போது அவள் உயிரோடு இல்லை. என் மகனும் சுயநினைவில் இல்லை. சோ அர்ஜுனைக் காப்பாத்த நினைச்சுத்தான் நான் அப்படிச் செய்தேன்

இவ்வளவு நாள் இல்லாமல் இப்போ நீங்க வந்து சரணடைய காரணம் என்ன?”

அது.. அது..” என்று லேசாகத் திணறியவர், பின் குரலை செருமி சீர் செய்து கொண்டு,அது இப்போதான் அர்ஜுன் கேஸ்ல அவனுக்கு எதிரா இருக்கிற வலுவான ஆதாரமே, அந்த வீடியோதான்னு தெரிஞ்சது, அதான்..” என்று வாக்குமூலம் கொடுத்தார் அருணாச்சலம்.

கொலை செய்யாவிட்டாலும், அதை மறைக்க முயன்ற குற்றத்திற்காக அருணாச்சலத்தைக் கைது செய்த போலீசார், உடனே அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த உலகத்துக்கு அருணாச்சலம் செய்த மானங்கெட்ட செயலைப் பற்றி மறைத்த வசுந்தரா, அதை ஒருவரிடம் மட்டும் சொல்லியே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரைக் காண புறப்பட்டுச் சென்றார்.

அருணாச்சலம் எப்பொழுது சிறை சென்றாரோ, அந்த நொடியில் இருந்து, தன் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல தன் மகனின் வாழ்க்கை குறித்தும் அதிகம் கவலைப்பட ஆரம்பித்து இருந்தார் சித்ரா.

அதற்கு முக்கிய காரணம், கம்பெனியின் முழுப் பொறுப்பை அர்ஜுன் ஏற்றது மட்டுமில்லாது,அந்நிலையில் கூட யாரும் தன் மகனை ஒரு ஒப்புக்காக கூட அங்கே அழைக்கவில்லையே??’ என்ற எண்ணம் தான் அவரை அதிகம் தத்தளிக்கச் செய்து கொண்டு இருந்தது.

அந்நேரம் தன்னைச் சந்திக்க வந்து இருக்கும் வசுந்தராவின் வரவு பற்றி அறிந்தவருக்குள், தானாக ஒரு பீதி உண்டாகியது.

அருணாச்சலத்துடன் வாழ்ந்த இத்தனை வருட காலத்தில், சித்ரா வசுந்தராவின் பெயரை கேட்டு இருக்கிறாரே தவிர, இதுவரை அவருடன் நேருக்கு நேர் பேசியது இல்லை.

ஆனாலும் அவர் சென்னை வந்ததில் இருந்து நிம்மதியின்றி தவிக்கும் தன் கணவனைக் காணும் பொழுது எல்லாம், ஏனோ தாயும் மகனும் சேர்ந்து கொண்டு, ஏதோ ஒரு விதத்தில் தன் கணவரைத் தண்டிக்கிறார்களோ? என்று பல நேரம் அவர் எண்ணியதுண்டு.

அந்தத் தண்டிப்பு படலம் இன்று தன் மீதும், தன் மகன் மீதும் திரும்புகிறதோ? என்று எண்ணி சித்ரா புழுங்கிய போதும், அதை வெளிக்காட்டாது, வீட்டுக்கு வந்தவரை வரவேற்று உட்கார வைத்திருந்தார்.

காபி, டீ, ஜூஸ் ஏதாவது சாப்டுறீங்களா?” என்று கேட்டவரை நிமிர்ந்து பார்த்த வசுந்தரா,

என்னை யார்ன்னு உங்களுக்குத் தெரியும் தானே?” என்று கேட்க,

ம்ம்ம்..” என்றவர்,என்ன சாப்டுறீங்க?” என்று மீண்டும் கேட்டார்.

இல்ல, எதுவும் வேண்டாம்என்று மறுத்த வசுந்தரா,நான்..” என்று பேச ஆரம்பித்து முடிக்கும் முன், சித்ரா தன் பேச்சை ஆரம்பித்து இருந்தார்.

எங்களையும் பழி வாங்கப் போறீங்களா???” என்றவரை நிமிர்ந்து பார்த்த வசுந்தரா, ஒரு ஊருடுவும் பார்வையை அவர் மீது செலுத்தி,நான் பழிவாங்குற அளவுக்கு நீங்க என்ன தப்பு செய்தீர்கள்?” என்று மிடுக்காகக் கேட்டார்.

அதைக் கேட்டு, ஒரு நிமிடம் பேச்சற்றுப் போய், அவரையே பார்த்துக் கொண்டு இருந்த சித்ராவின் மனதை நொடிப் பொழுதில் படித்தவரோ,உன் புருஷன் உள்ளே போனதுக்கு அவர் காரணமே தவிர நான் இல்லைஎன்று சொல்லி அந்தப் பேச்சுக்கும், எதிரே இருப்பவரின் சந்தேகத்துக்கும் சேர்த்தே முற்றுப்புள்ளி வைத்திருந்தார் வசுந்தரா.

உங்களைப் பற்றி பல முறை கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனா இப்போ தான் அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியுதுஎன்ற சித்ராவிடம்,என்ன கேள்விப்பட்டாய்?” என்று வசுந்தரா கேட்கவில்லை. அது அவருக்குத் தேவையுமில்லை.விஷ்வா வீட்டில் இருக்கானா?” என்று மட்டும் கேட்டார் அவர்.

இல்லை, வெளியே போய் இருக்கான். ஏன் அவனிடம் ஏதும் பேசணுமா???” என்றவரிடம்,இல்ல இல்லநான் உங்ககிட்ட தான் பேச வந்தேன்என்றார் வசுந்தரா.

என்ன பேசணும்?” என்று கேட்டவரிடம் தன் கைப்பையில் இருந்து ஒரு மொபைலை எடுத்து நீட்டியவர்,யாரிடமும் தெரியப்படுத்த முடியாத விஷயம், ஆனால் கட்டாயம் நீ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!” என்று ஒரு வீடியோவை சுட்டிக் காட்டிச் சொன்னார்.

என்ன இது!’ என்று எண்ணியபடியே அந்த போனில் இருந்த வீடியோவை ஹெட் செட் உதவியுடன் வெளியே சத்தம் கேட்காது பார்க்க ஆரம்பித்த சித்ராவுக்கு, சில நிமிடங்களிலேயே குமட்டிக் கொண்டு வந்தது.

எந்தப் பெண்ணால் தான் தன் கணவன் இன்னொருத்தியுடன் உறவாடுவதைக் கண்டு ரசிக்க முடியும்? ‘இப்பொழுதே செத்து விட மாட்டோமா?’ என்று உடல் நடுங்க, கோபம், இயலாமை, விரக்தியில் தத்தளித்த சித்ராவின் கண்களில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்தது.

சித்ராவின் கலக்கத்தைக் கண்ட வசுந்தராவுக்கு ஆத்திரம் தான் வந்தது.உன்னுடைய ஒரு சொட்டு கண்ணீருக்கு கூடத் தகுதி இல்லாத அந்த ஆளுக்காகவா நீ அழற?? ஸ்டுப்பிட்!!” என்றார்.

இல்ல, நான் அதுக்காக அழலைஎன்று தலையாட்டி மறுத்தார் சித்ரா.

இல்லையா?? பின்ன வேற எதுக்கு??” என்று புருவம் உயர்த்திப் பார்த்தவரிடம், ”இப்படிக் கேடுகெட்ட ஒருத்தனிடம் போய் இத்தனை வருடம் அடிமையா வாழ்ந்து இருக்கேனேன்னு நினைக்கும் பொழுது தான், எனக்கு என்னை நினைச்சாலே கேவலமா இருக்குஎன்று அருவெறுத்தவரின் பதிலில் உண்மையாகவே சமாதானமாகிப் போனார் வசுந்தரா.

இதில் உன் மீது எந்த தவறும் இல்லை. இந்த உலகத்தில் யாரும் விரும்பி அடிமை வாழ்க்கை வாழ்வது இல்லை. சிலரின் சூழ்நிலை அவர்களை அப்படி வாழ வைத்து விடுகிறதுஎன்றவரின் தேற்றும் வார்த்தைகளைக் கேட்டுக் கண்கள் ததும்ப அவரைப் பார்த்த சித்ரா,சில நேரம் நினைத்து இருக்கேன், உங்களைப் போல ஏன் என்னால் துணிந்து அவரை விட்டுப் போக முடியவில்லை என்று?? ஆனா அப்போ எல்லாம் எனக்கு விடையா கிடைத்தது விஷ்வா மட்டுமில்லை அர்ஜுனும் தான்!” என்றதும் ஆச்சரியம் கொண்டார் வசுந்தரா.

எப்படி?” என்று பார்த்தவருக்கு,ஒருவேளை நானும் உங்களைப் போல் முடிவு எடுத்தால், எங்கே விஷ்வாவும் அர்ஜுனைப் போல ஆகிடுவானோன்னு நான் பயந்தேன்என்று சொல்லி முடித்த சித்ராவின் நிதர்சனமான உண்மை வசுந்தராவைச் சுட்டது.

அதில் அமைதியாகிப் போனவரின் செயலைக் கண்டு, ”நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” என்று கேட்ட சித்ராவின் குரலுக்கு,இல்ல இல்ல.. அது தான் உண்மை! நான் அர்ஜுனை இன்னும் கொஞ்சம் கேர் பண்ணி இருக்கணும். அவனுக்குள்ள இருந்த போராட்டத்தையும், வலியையும் கவனிக்காம விட்டது என் தப்பு தான்!” என்று காலம் கடந்து தனக்குக் கிடைத்த ஞானத்தை ஒளிவு மறைவின்றி ஒத்துக் கொண்டார் வசுந்தரா. அதே நேரம்,எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் தானே??”  என்றும் சித்ராவுக்கு எடுத்துச் சொன்னார்.

ம்ம்ம்.. நீங்க சொல்வதும் உண்மை தான்! ஆனா எனக்கு அந்த ரிஸ்க் எடுக்கத் துணிவு இல்லை. அதனால தான் இந்த வாழ்க்கைக்கு என்னை நானே பழக்கிக்கிட்டு வாழ ஆரம்பிச்சுட்டேன்என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே,  “ஆனா.. ஆனா.. இப்போ உடம்பெல்லாம் கூசுது, இவன் கூட வாழ்ந்ததை நினைச்சாலே!!” என்றவரின் கண்கள் அப்பட்டமாக வெறுப்பை உமிழ்ந்தது.

அவரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவரும்,இப்பவும் ஒன்னும் காலம் கடந்து விடவில்லை. இனி உன் வாழ்க்கை எப்படி இருக்கணும்ன்னு நீ முடிவு செய்!

அந்த ஆளை வெளியே கொண்டு வரப் போறியா?? இல்லை அவனுக்குத் தண்டனை கொடுக்கப் போறியான்றதும் இனி உன் முடிவாகத்தான் இருக்கணும்!

நீ என்ன முடிவு எடுத்தாலும் உனக்குப் பக்க பலமா நான் இருப்பேன்!” என்றவரின் ஆதரவு நிறைந்த அக்கறையில் இந்த முறை நெகிழ்ச்சியில் கண் கலங்கிப் போனார் சித்ரா.

ஓகே, அப்போ நான் கிளம்புறேன்என்று எழுந்து நின்றவரின் கைகளைத் தன் கைகளுக்குள் சிறை வைத்துக் கொண்டு அவரை நிறுத்திய சித்ரா,தேங்க்ஸ்!” என்று மனதார சொல்லியதைக் கேட்டுப் புன்னகைத்த வசுந்தரா, சித்ராவின் கண்ணீரைத் துடைத்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

 அர்ஜுனின் கேஸில் அருணாச்சலத்தின் வாக்குமூலமும், கைதும் தன் மகனைத் தற்காலிகமாகத் தான் தப்ப வைத்து இருக்கிறது என்று தெரிந்த வசுந்தராவுக்கு, அடுத்து எப்படி அவனை இந்த கேஸில் இருந்து முழுவதுமாகக் காப்பாற்றுவது என்ற எண்ணமே சூறாவளியாகச் சுழற்றிக் கொண்டு அடித்தது.

அதில் சிக்கி, இரவு பகல் பாராது உண்மை குற்றவாளியைத் தேடி அலைந்தவருக்கு கிடைத்ததோ ஒரு பேரிடி!!

அதன் பாரம் தாங்காதவரின் கண்களிலோ,இவனா இதைச் செய்தது?” என்ற அப்பட்டமான அதிர்ச்சி!!

Advertisement