Advertisement

அத்தியாயம் 25

மதுமிதா வீட்டுக்கு வந்தாலும் கதிரவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் கண்கொடு பாரத்தையும், தன் கண்முன்னால் நடந்த சம்பவங்களையும் அவளால் மறக்கவும் முடியவில்லை. கதிரவனை மன்னிக்கவும் முடியவில்லை.

தன்னுடைய திருமண நாளன்று இதுதான் நடந்திருக்குமென்று தாஸ் கூறினாலும், தான் பார்த்தவற்றை கொண்டு அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தவளுக்கு நரசிம்மன் பொய்யாய் போனதில் உண்மை என்னவென்று புலப்பட்டதில் அண்ணனை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

கொஞ்சம் கூட தயங்காமல் கதிரவனை “அண்ணா” என்றழைத்திருந்தாள்.   

“என்ன அண்ணனும் தங்கச்சியும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா? இத்தனை வருஷமா உங்கள பிரிச்சி வச்ச சந்தோஷமே எனக்கு போதும். அதான் உங்க அப்பன், என் எதிரி மனசுல இருக்குற கஷ்டத்தை யாருகிட்டயும் சொல்லக் கூட முடியாம செத்துட்டானே. நீ கூட மனசுல ஒரு வலியோட இருக்குறியே அதுக்கும் நான் தான் காரணம்” என்று கதிரவனை பார்த்து கைகொட்டி சிரித்தான் நரசிம்மன்.

“சாந்தி… சாந்திய என்னடா பண்ண?” கதிரவன் தான் காதலித்தவள் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போவதற்கு காரணம் இந்த நரசிம்மனா? என்றதில் மேலும் கோபமடைந்து பாய்ந்து நரசிம்மனின் கழுத்தை நெறிக்கலானான்.

கதிரவனை தடுத்த முத்துப்பாண்டி “நீ இந்தாள கொன்னுட்டு ஜெயிலுக்கு போகணுமா? நான் உனக்காக கொல்லுறேன்” என்று நரசிம்மனை கொலை செய்ய முயல தாஸும், பாரியும் அவனை தடுத்தனர்.

சத்தமாக சிரித்த நரசிம்மன் முத்துப்பாண்டியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு “உன்ன பெத்ததுக்கு உன் அம்மா மலடியாகவே இருந்திருக்கலாம். இவன் என்ன கொன்னா மாரிமுத்து பையன் கொலைகாரன் என்று ஊரே பேசும். நீ எனக்குத்தான் பொறந்தியாடா? இவனுக்கு வக்காலத்து வாங்குற?”

உண்மை அனைவருக்கும் தெரிய வந்த பின்னும் அடங்காமல் தான் செத்தாலும் பரவாயில்லையென்று கதிரவனை கோபப்படுத்தி என்ன காரியம் செய்ய துணிந்து விட்டார் இந்த நரசிம்மன்.

“நீ அடங்க மாட்டியா?” பாரியின் கையில் சிறைபட்டுக் கொண்டிருந்த முத்துப்பாண்டி திமிறினான்.

“சாந்தி… சாந்தி… சாந்தி… அவளை என்ன பண்ணேன்னு தெரியனுமா? அவளை நான் கொன்னுட்டேன்” பைத்தியம் பிடித்தவன் போல் குதித்தார் நரசிம்மன்.

“யாரு சாந்தி?” என்று மிது தாஸிடம் கேட்க,

“எனக்கெப்படிடி தெரியும்?” என்று அவன் அவளை கேட்டான்.

 “யாரு சாந்தி யாரு சாந்தி கேள்விப்படாத பெயரா இருக்கே” என்று அனைவரும் முணுமுணுத்துக் கொண்டிருக்க, நரசிம்மனின் கன்னத்தில் “பளார்” என்று அறைந்திருந்தாள் நாச்சி.

“என் வீட்டுக்காரரோட சிநேகிதன் என்று உன்ன வீட்டுக்குள்ள விட்டேன். அண்ணே, அண்ணே என்று உனக்கு மறவாத கொடுத்து உபசாரிச்சா நீ என் பையன் வாழ்க்கைல விளையாடி இருக்க. போதாததுக்கு என் பொண்ணு வாழ்க்கையிலையும் விளையாட பார்த்திருக்க.

என் புருஷன் என் பையன் குடிக்க ஆரம்பிச்சிட்டானே என்று மனசோடஞ்சி தினமும் புலம்புவாரு. குடிச்சிட்டு என் பையன் சாந்தி சாந்தி என்று புலம்பினத பார்த்து

பேசாம அந்த பொண்ண தேடி அவளையே என் பையனுக்கு கட்டி வைங்கன்னு நான் கெஞ்சி கேட்டதும் சாந்தியை தேடித் போன அந்த மனுஷனுக்கு அப்படி ஒரு பொண்ணே இல்லனு தெரிய வந்ததும் அத எப்படி கதிரு கிட்ட சொல்லுறது என்று புரியாம அழுதாரு.

அவனுக்கு ஒரு கண்ணாலத்த பண்ணி வச்சா அவன் சரியாவான்னு கதிரை கட்டாயப்படுத்தி, மிரட்டித்தான் மங்களத்த கட்டி வச்சோம். அவன் திருந்தி ஒழுங்காயிட்டான். ஆனா மது கல்யாணத்துல நடந்த அசம்பாவிதத்துல பொண்ண பார்க்கவே முடியல என்று புலம்பிப் புலம்பியே என் புருஷன் போய் சேர்ந்துட்டாரு” நரசிம்மனின் சட்டையை உலுக்கியவாறே பேசிய நாச்சி ஆத்திரம் தீர அடிக்கலானாள்.

“ஆமா கதிரவன் வாழ்க்கையை நாசமாக்கவென்றே பணம் கொடுத்து அவனுக்கு பேனா நண்பியா ஒரு பெண் கடிதம் எழுதுறது போல ஒரு பையன ஏற்பாடு பண்ணதும் நான் தான். காதலிக்க சொன்னதும் நான் தான்.

அவன் அந்த ஊருல தங்கி படிச்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு பணம் தேவைப்பட்டது, எனக்கு அவன்.

படிப்பு முடிஞ்சதும் அவன் பறந்துட்டான். கதிரவன் காதலிச்ச சாந்தியை தேடி பைத்தியமா அலைஞ்சான். குடிகாரனானான். அதெல்லாம் பொற்காலம்” என்று நாச்சி கொடுத்த அடியெல்லாம் வாங்கிக் கொண்டு சிரித்த நரசிம்மன் தான் நாச்சியை காதலித்ததை மட்டும் வாய் திறந்து சொல்லாமல் மறைத்து விட்டார்.

வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் அண்ணன் என்று அழைப்பவளிடம் என்ன சொல்ல? அதுவும் இந்த வயதில்?

நாச்சியின் அண்ணன் என்ற அழைப்பில் அவள் மீதிருந்த காதல் கரைந்தோடிப் போய் அவளை கொல்லும் அளவுக்கு கோபத்தில் கொதித்தான் நரசிம்மன்.

கொலை. கொலை செய்வதாக இருந்தால் மாரிமுத்துவை என்றோ கொலை செய்திருக்க மாட்டானா? இல்லை கொலை நிச்சயமாக இதற்கு தீரவில்லை என்று தெளிவான முடிவில் இருந்தான் நரசிம்மன்.

கதிரவனின் மற்றும் மதுமிதாவின் வாழ்க்கையை சீர்குலைக்க முடிவு செய்யும் பொழுதே மாரிமுத்துவின் மட்டுமல்ல நாச்சியின் நிம்மதியும் தொலைந்து விடும் என்று நரசிம்மனுக்குத் தெரியாதா?

தான் ஆசை கொண்டவள். தான் திருமணம் செய்ய நினைத்தவள் தன்னையே அண்ணன் என்று அழைக்கிறாளா? தனக்கு கிடைக்காதவள் மாரிமுத்துவோடு சந்தோசமாக வாழ்ந்திடவே கூடாது என்று தான் அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கையை சீர்குலைக்க முடிவு செய்தார்.

நினைத்ததை நடத்தியும் விட்டார். வெற்றியும் கண்டு விட்டார்.

இல்லாத சாந்தியை நேரில் பாராமல், புகைப்படத்தில் மட்டுமே பார்த்து காதலித்தான் கதிரவன்.

திடீரென்று அவளிடமிருந்து கடிதங்கள் வராமல் போகவே அவள் படிக்கும் ஊரிலுள்ள கல்லூரிக்கு சென்று விசாரித்தான். அவன் காட்டிய புகைப்படத்திலுள்ள பெண்ணை அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

விடுதியின் விலாசத்துக்கல்லவா கடிதமெழுதினான். அங்கு சென்று விசாரித்தால் அந்த பெண்ணை தெரியவில்லையென்றனர்.

ஒருவேளை சாந்தி தனது சொந்த புகைப்படத்தை அனுப்ப அஞ்சி வேறு யாரோ ஒரு பெண்ணுடைய புகைப்படத்தை அனுப்பியிருப்பாள் என்று எண்ணி அவளை தேடியலைந்த கதிரவன் சாந்தி என்ற பெயரில் ஒரு பெண்ணே இல்லை அவனுடன் பேசியது ஒரு ஆண் என்று கிஞ்சத்திற்கும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. 

இல்லாத சாந்தியை எண்ணி குடிக்கு அடிமையானது மட்டுமன்றி பெற்றோருக்கு மனவேதனையை கொடுத்திருக்கிறான். கட்டிய மனைவியை அடித்திருக்கிறான். கூடப்பிறந்தவளை அடித்திருக்கின்றான். எல்லாம் தான் மதித்த இந்த பெரிய மனிதன் செய்த கைகாரியமா? என்று அதிர்ச்சியாக பார்த்திருந்த கதிரவனுக்கு பேச்சே வரவில்லை.

ஒரு மனிதன் பழிவாங்க இவ்வளவு கீழ்த்தரமாக யோசித்து, செயல்படுவானா? என்று நரசிம்மனை கொலை வெறியோடு முறைத்தனர் அனைவரும்.

கதிரவனுக்கு ஈடான அதிர்ச்சி அனைவருக்கும் இருந்தது. என்ன பேசுவதென்றே புரியாமல் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருக்க,

“இந்தாள என்ன பண்ணலாம்? போலீஸ்ல புடிச்சி கொடுத்தாலும் இந்தாள் பண்ணதுக்கு ஆதாரம் இல்லாம எந்த பிரயோஜனமும் இல்ல” என்றான் பாரி.

“இந்தாள நம்பி மோசம் போனது நாம, இந்த வயசுல இந்தாளுக்கு என்ன தண்டனை கொடுக்குறது?”

“என்ன அப்பத்தா மன்னிச்சி விட்டுடலாமென்று சொல்லுறியா?” கோபமாக கேட்டாள் மிது.

“என் புருஷன் பொறுமையாக போக சொல்லியும். எனக்கும் நாச்சிக்கும் இருக்குற மோதலை தெரிஞ்சே என் பையன் கல்யாணத்துல கலாட்டா பண்ணி நம்ம ரெண்டு குடும்பத்துலையும் பிரச்சினை பண்ணவனை நாச்சி மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன்” என்றாள் சோலை.

“மன்னிக்கக் கூடிய காரியத்தையா இவன் பண்ணியிருக்கான்? நான் இவன இந்த ஜென்மத்துல மன்னிக்க மாட்டேன்” என்று சோலையை முறைத்தாள் நாச்சி.

“இங்க என்ன நடக்குது அத விட்டுட்டு இதுங்க ரெண்டும் முட்டிகிட்டு நிக்குது” தாஸ் மிதுவின் காதை கடிக்க,  அவள் இவனை முறைத்தாள்.

“என்னதான் நாம தப்பு பண்ணாலும் வாழ்க்கையே நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தரும். அந்த சந்தர்ப்பம் தான் நம்ம பேரபாசங்க உருவத்துல அதுங்க கல்யாணமா நமக்கு கிடைச்சது நாம தான் அத புரிஞ்சிக்காம, உணராம அங்கேயும் சண்டை போட்டு பிரிஞ்சிட்டோம். நம்ம மேல தப்ப வச்சிக்கிட்டு இந்தாள பேசி என்ன பிரயோஜனம்” என்றாள் நாச்சியார்.

“ஆமா உன் மேல இருக்குற கோபத்துல என்ன நடந்தாலும் உன்ன குத்தம் சொல்ல காத்துகிட்டு இருந்தேனே ஒழிய சுத்தி என்ன நடக்குது என்று கவனிக்க மறந்தது என் தவறுதான். இந்தாள் உண்மையிலயே உன் குடும்பத்து மேல அக்கறை இருந்திருந்தா நாம சண்டை போடும் போது சமாதானம் செஞ்சி வச்சிருப்பான். சமரசம் பேச வீட்டுக்கு வந்திருப்பான். எப்போடா நாம சண்டை போடுவோம் வேடிக்கை பார்க்கலாம் என்றல்லவா காத்திருந்தான். இவன நொந்து என்ன செய்ய?” தன் தவறை உணர்ந்து பேசினாள் சோலையம்மாள்.

“கட்டயில போற வயசுல கட்டிக்கிட்டவளும் கூட இல்லாம, பெத்த பையனும் தொணையில்லாம தனிமரமா நிக்கிறான். குடும்பம்னா வாழையடி வாழையா தலைச்சி நிக்கணும் அந்த கொடுப்பன இவனுக்கு இல்லாம போச்சு. இவனே இவன் கையாள இல்லாமலாக்கிட்டான். இதைவிட வேற தண்டனை இவனுக்கு இருக்குமா?” என்று நாச்சி கூற, அதை சோலையும் தலையசைத்து ஒப்புக்கொண்டாள்.

குடும்பத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால் குடும்பத்தை அசைத்துப் பார்க்க யார் வந்தாலும் எதுவும் செய்து விட முடியாது. சோலையும், நாச்சியும் மனம் திருந்தி ஒன்று சேர்ந்ததில் இனி ஆயிரம் நரசிம்மன் வந்தாலும் இந்த குடும்பத்தை ஒன்றும் செய்து விட முடியாது.

“இனிமேல் இந்தாளோட முகத்திலையே முழிக்கக் கூடாது” என்றாள் மங்களம்.

“இனிமேல் இந்தாள் இந்த வீட்டுப் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டான். இந்தப்பக்கம் வராம நான் பார்த்துகிறேன்” என்ற முத்துப்பாண்டி “தம்பி நீயும் உன் அம்மாவும் பேசினது” என்று பாரியை முறைத்தான்.

“இந்தாள போய் வில்லன்னு சொல்லுறாங்க. எவ்வளவு தெளிவா இருக்கான்” என்ற பார்வையோடு பாரி “அது உங்க வாயிலிருந்து உண்மைய கொண்டு வர” என்றதும் சமாதானமானவன் அனைவரிடமும் ஒரு பார்வையிலையே விடைபெற்று நரசிம்மனை இழுக்காத குறையாக அழைத்து சென்றான்.

“என்னவெல்லம் பண்ணியிருக்கான் இந்தாளு. என்னால நம்பவே முடியல” போகும் பொழுது முத்துப்பாண்டி கூறியதை யாரும் கேட்டுக் விடக் கூடாதே என்று கனகா வாய்க்கு வந்ததெல்லாம் உளறிக் கொண்டிருந்தாள்.

“அப்பா… நான் உடனே சென்னைக்கு போகணும். நாம வீட்டுக்கு போகலாமா?” யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் பாரிவள்லல் நடக்க, அவன் பின்னால் அவன் குடும்பம் விடைபெற்று கிளம்பலாயினர். தன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதாக இருந்தாலும், மிது பார்த்துக்கொள்வாளென்று அம்ரிதாஷினியும் கண்களாளேயே தங்கையிடம் கூறிவிட்டு கணவனோடு சென்று விட்டாள்.

“போலீஸ்காரரே ரொம்ப நன்றி” என்று மிது கத்தி சொல்ல

“அண்ணனுக்கு என்ன அவசரமோ இப்படி ஓடுறாரு. சென்னைக்கு போனா கறி விருந்தே போடலாம் மிது” என்றான் தாஸ்.

பாரியை தாஸ் அண்ணன் என்றழைத்ததில் புருவம் உயர்த்திப் பார்த்த மிது விழிகளில் பொய்யாய் ஆச்சரியம் காட்டி அங்கலாய்த்தாள்.

அவள் முகபாவனைகள் தாஸுக்கு சிரிப்பை மூட்ட. உதடு குவித்து முத்தமிடுவது போல் செய்ய மிது கணவனை முறைத்தாள்.  

செல்பவர்களை பார்த்திருந்த தீந்தமிழன் இவர்களை கவனிக்காமல் “ஆமா பாரி மச்சான் போலீஸ் மட்டுமில்ல கழுகுக் கண்ணோட இருந்து முத்துப்பாண்டி மாமாவோட லவ் மேட்டர்” என்ற தீந்தமிழன் மதுமிதாவை பார்த்து விட்டு அமைதியானான்.

“டேய் வீட்டுக்கு வரப்போற மறுமவனே பார்த்துப் பேசு அவ என் மருமக” என்று அதட்டியது சோலை தான்.

மதுமிதா வேலனின் முகத்தை, முகத்தை பார்த்திருக்க, கதிரவன் மங்களத்தை பாவமாய் பார்த்திருந்தான்.

அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு சிறுசுகள் வாசல் பக்கம் நகர்ந்து விட, சோலையும், நாச்சியும் நரசிம்மனை வசைபாடியவாறு சமயற்கட்டு பக்கமாக வீட்டுக்குள் நுழைந்திருந்தனர்.

கதிரவன் அங்கிருந்த கல்பெஞ்சில் அமர்ந்து விட மங்களம் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

மதுமிதா நடந்தவாறே யோசிக்க, வேலன் கூடவே நடந்தான்.

“என்ன யோசிக்கிற மது?” மதுமிதாவின் மனதுக்குள் பிரளயமே நடப்பதை உணர்ந்து கேட்டான் வேலன்.

“நீங்க என்ன சந்தேகப்படுறீங்களா?” மொட்டையாகத்தான் கேட்டாள்.

மனைவி என்ன கேட்டாள்? எதற்காக கேட்டாள் என்று வேலனுக்கு உடனே புரிந்தது. முத்துப்பாண்டி பேசிய பொழுது மதுமிதா வேலனின் கையை பிடித்தது மட்டுமல்லாது கொடுத்த அழுத்தத்திலையே அவளது அச்சத்தையும், பதட்டத்தியும் நன்கு உணர்ந்து கொண்டாலும், அப்பொழுது நடந்துகொண்டிருந்த சூழ்நிலையில் மதுமிதாவுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையாவது வேலனால் கூற முடியவில்லை.

“இங்க பாரு மது. இத்தனை வருஷம் உன் கூட வாழ்ந்திருக்கேன். இப்போ போய் உன்ன சந்தேகப்பட்டா, நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்ல. வீணா மனச போட்டு குழப்பிக்காத” என்றான்.

“இல்ல முத்து சொல்லுறது போல அவன் என்ன விரும்பினது எனக்கு சத்தியமா தெரியாது. நான் அவனை விரும்பவே இல்ல. பசங்க முன்னாடி இப்படி சொல்லிட்டானே” இந்த வயதில் என்ன இது சோதனை என்று மனம் விம்மி கண் கலங்களானாள். 

“இத ஒரு பிரச்சினையா பேசிகிட்டு இருக்க? அந்த நரசிம்மன் சதி பண்ணி உங்க அண்ணனை குடிக்க வச்சி, நம்ம குடும்பத்தை பிரிச்சிட்டாரே. அத பத்தி யோசிக்க மாட்டியா? அத விட அந்தாளோட அல்டிமேட் மோடிவ் உன்ன வாழாவெட்டியா வீட்டுக்கு அனுப்புறது. அன்னைக்கி என் குடும்பம் மட்டும் அப்படியொரு முடிவெடுத்திருந்தா? இல்ல நீ அப்படியொரு முடிவெடுத்திருந்தா? இன்னைக்கி உண்மை தெரிஞ்ச பிறகு நாம எப்படியெல்லாம் மனவருத்தம் அடஞ்சிருப்போம். அப்படியேதும் நடக்கலையே அதுவே நிம்மதி தானே”

“ஆமா… அப்பா… அப்பா செத்தப்போ கூட வீம்பா வராம இருந்துட்டேனே” என்று தந்தையின் நினைவில் அழ ஆரம்பித்து விட்டாள். 

“நடந்து முடிஞ்சது நம்மளால மாத்த முடியாது மது நடக்கப் போறத பத்தி யோசிப்போம்” என்றான் வேலன்.

இந்தப்பக்கம் கதிரவன் மங்களத்தின் கையை பற்றிக் கொண்டு “என்ன மன்னிச்சுடு மங்களம்” என்றவாறே கதறியழுதுக் கொண்டிருந்தான்.

அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய மங்களமும் சேர்ந்து அழலானாள்.

செங்கதிரவன் எவ்வளவு நேரம் அழுதானென்று தெரியவில்லை. தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு “நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன். இல்லாத ஒருத்திக்காக உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன். அப்பாக்கு உண்மை தெரிஞ்சதாலதான் என்ன உனக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாரு. அவர் என் கிட்ட உண்மையைச் சொல்லியிருந்தா நான் உன்ன கஷ்டப்படுத்தாம இருந்திருப்பேனே” என்று புலம்பலானான்.

“இல்ல உண்மை தெரிந்தா நீங்க உடைஞ்சி போவீங்க என்று தான் மாமா உமைய சொல்லாம இருந்திருப்பாரு. தன் மாமனாரை அறிந்தவளாக கணவனுக்கு ஆறுதல் கூறினாள் மங்களம்.

அது தான் உண்மையும் கூட. என்ன நடக்க இருக்கிறதோ அது தானே நடந்து தீரும். ஒருவழியாக பல வருடங்களாக புதைந்திருந்த உண்மை வெளியே வந்து பிரிந்திருந்த இரண்டு குடும்பங்களும் மனக்கசப்புகள் நீங்கி முழுமனதாக ஒன்றாகி விட்டதோடு மிதுவையும், தாஸையும் முழுமனதாக ஏற்றுக் கொண்டும் விட்டனர்.

எப்படியோ உண்மை வெளியே வந்து  இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் தாஸும், மிதுவும் பேசிக் கொண்டிருக்க, தீந்தமிழன் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

தம்பியிடம் சத்தம் வராமல் போகவே “என்னடா… இப்போவே அகல்யாவை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தினா என்னென்ன விளைவுகளை சந்திக்க வேண்டி வருமோன்னு பயப்படுறியா?” என்று கிண்டல் செய்தாள் மிது.

“ஐயோ நீ வேற பீதியை கிளப்பாத. நா வேற யோசிச்சிகிட்டு இருந்தேன்” என்றான் தம்பி.

“உன் கல்யாணத்த விட உனக்கு அப்படியென்ன யோசிக்க இருக்கு?” மிது யோசனையாக கேட்டாள்.

“வேற என்ன? எல்லாம் அந்த முத்துப்பாண்டிய மாமாவை பத்தி தான். பீடி குடிச்ச எனக்கு எதுக்கு காசு கொடுத்து சிகரெட் வாங்கி குடிக்க சொன்னாரு? நான் அவரை வில்லனா பார்த்தா, அவர் ஹீரோவா மாறி போய்ட்டாரே. ஒரு இழவும் புரியல”

“இது தான் உன் பிரச்சினையா? நீ எங்கம்மாவை பேசணும் என்று தோட்டத்துப் பக்கம் கூட்டிட்டு போனியே அப்போ முத்துப்பாண்டி மாமா, பாரி என்று எல்லோரும் போக, கனகா அம்மாவும் பின்னாடியே போய்ட்டாங்க.

அந்த நேரம் முத்துப்பாண்டி என்ன படிச்சிருக்காரு, என்ன வேலை பாக்குறாரு ஏன் கல்யாணம் பண்ணலன்னு தோண்டி துருவினேன். அதுல ஒரு விஷயம் தெரிஞ்சது. சைக்கோலஜி படிச்சிருக்காரு. அதனாலதான் உன்ன நல்லா தெரிஞ்சி வச்சிக்கிட்டு உன் கிட்ட அப்படி மூவ் பண்ணியிருக்கார்”

“ஆமா… என்ன படிச்சி என்ன பிரயோஜனம். அப்பன் சரியில்லாததனால வேலையையும் விட்டு இப்படி சுத்திகிட்டு இருக்காரு. அந்த நரசிம்மன் தாத்தா உன் அம்மா வாழ்க்கையிலும் என் அப்பா வாழ்க்கையிலும் விளையாடியதோட விட்டுட்டாரு இல்லனா நம்மா வாழ்க்கையிலும் விளையாடியிருப்பாரு. எதோ முத்துப்பாண்டி மாமா நல்லவரா போயிட்டதால நமக்கு எதுவும் ஆகாம பாத்துக்கிட்டாரு” முத்துப்பாண்டிக்காக கவலைபட்டாள் மிது.

வெளியே சென்ற மிதுவின் அண்ணனும், அண்ணியும் வீடு வந்து சேர்ந்த உடன் நடந்த அனைத்தையும் அறிந்து அதிர்ச்சி, ஆச்சரியம் என்ற பாவனைகளோடு கதை கேட்க ஆரம்பிக்க, தீந்தமிழன் அவர்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தான். 

வீடு வந்த பாரிவள்லல் தனது துணிப்பைகளை வண்டியில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தான்.

“என்னப்பா இப்போவே கிளம்பிட்ட?” சிவநேசன் புரியாமல் மகனை பார்த்தான்.

தந்தைக்கு பதில் கூறாமல் வீட்டார் அனைவரையும் கூடத்துக்கு அழைத்தான் பாரி.

“என்னடா விஷயம் என்றவாறே வந்த அன்னையை முயன்ற மட்டும் முறைத்தான்.

“எதுக்குடா இப்போ என்ன முறைக்கிற?” கனகா உள்ளுக்குள் பதறினாலும் முகத்தில் எதையுமே காட்டாது விறைப்பாக நின்றிருந்தாள்.

“எதுக்குன்னு உனக்குத் தெரியாதா? தெரியாத மாதிரியே கேக்குறியே”

“என்னடா விஷயம்?” பாரிவள்லல் காரணமில்லாமல் கோபப்படவும் மாட்டான், கேள்வி கேட்கவும் மாட்டான் என்று அறிந்திருந்தமையால் பாரிவேந்தனும், சிவநேசனும் ஒரே நேரத்தில் ஒரே கேள்வியை கேட்டனர்.

“இத்தனை வருஷமா எனக்கு கல்யாணம் நடக்காததினால அம்மா புலம்புறாங்க. மிது ஓடிப்போனதால அவ மேல கோபமா இருக்கிறாங்க என்று நினச்சேன். அவ மேல வன்மத்துல இருக்கிறாங்க என்று இன்னைக்கு இல்ல தெரிஞ்சது”

“என்னடா சொல்லுற?” சிவநேசன் புரியாமல் கேட்க, நடந்த அனைத்தையும் கூறினான் பாரி.

பாரியின் கன்னத்தில் அறைந்த கனகா. “ஏண்டா அம்மாவை பார்த்து என்ன வார்த்த சொல்லுற? நான் எப்படா இப்படி சொன்னேன்? ஆதாரம் இருக்கா உன் கிட்ட? இல்லல” தான் பேசவே இல்லையேயென்று சாதித்தாள்.

கன்னத்தை தடவிக் கொண்ட பாரி “உன் பையன் போலீஸ் எங்குறத மறந்துட்ட பாத்தியா? அந்த முத்துபாண்டிய உசுப்பேத்தி பேச வைக்கணும். அத வாக்கு மூலமா ரெகார்ட் பண்ணமும் என்று ஏற்பாடொடத்தான் நான் மல்லிகை பந்தலுக்கு அருகே போய் நின்னதே. அப்போ நீ அங்க வந்து என்ன பேசின? அது கூட ரெக்கார்ட் ஆகிருச்சு” என்று கனகா பேசியதை எல்லோருக்கும் போட்டுக் காட்டினான்.

“என்ன கனகா இது?” சிவநேசன் அதிர்ச்சியாக மனைவியை ஏறிட்டான்.

“அது இவன் நடிக்கச் சொல்லி…” பதட்டத்தோடு குழறினாள் கனகா.

சத்தமாக சிரித்த பாரி கொஞ்சம் முன்னோக்கி ஓட விட்டு தீந்தமிழனிடம் அம்மாவை வரச் சொல்லு என்பதை ஓட விட்டவன் “ஏற்கனவே நடிக்கணும் என்றா அம்மா அங்கதான் இருந்திருப்பாங்க. எதுக்கு தமிழ் கிட்ட சொல்லி வரச் சொல்லணும்? இந்த ஆதாரம் போதாதா?

அம்மா தப்பானவங்க என்று அடையாளம் காட்ட நான் எல்லாரையும் கூப்பிட்டு இத போட்டு காட்டணும் என்று நினைக்கல. ஏற்கனவே அண்ணி குடும்பம் அந்த நரசிம்மனால பட்டது போதாதா? அம்மாவும் ஏதாவது செய்யணுமா?

மிது என்ன கல்யாணம் பண்ண முடியாது என்று போனதுக்கு காரணம் இருந்தது போல, நான் மிதுவ கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னதுக்கு காரணம் இருந்தது.

நல்லவேளை நானும் மிதுவும் கல்யாணம் பண்ணிக்கல. பண்ணியிருந்தா உங்களுக்காக நாம சேர்ந்திருந்திருப்போமே தவிர, நாம சந்தோசமா இருந்திருக்க மாட்டோம்.

அம்மா மனசுல இருக்குற இந்த எண்ணம் அழியிற வரைக்கும் நான் வீட்டுக்கு வர்றதா இல்ல. ஆ… கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன். என் மனசுக்கு பிடிச்ச பொண்ண சந்திக்கும் பொழுது” என்றவன் யாருடைய பதிலையும் எரிர்பார்க்காமல் வெளியேறினான்.

“டேய்… நில்லுடா…” என்று சிவநேசனும், பாரிவேந்தனும் அவன் பின்னால் ஓடாத குறையாக வர, பாரியோ அவன் வண்டியில் ஏறி வண்டியை கிளப்பி சென்று விட்டான்.

கனகா அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்து விட்டாள்.

அமிர்தாஷினி எதுவும் பேசாமல் உள்ளே சென்று மறைந்தாள்.

தாஸும் மிதுவும் மீண்டும் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு, இயந்திர வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.

காலையில் எழுந்து குளித்து சமைத்து குழந்தைகளை டே கேயார் சென்டரில் விட்டு மீண்டும் வேலைக்கு செல்லும் அதே பரபரப்பான வாழ்க்கை.

ஆனால் வீட்டாரோட சுமூகமானத்தில் இருவரினதும் மனநிலை மாறியிருந்தது.

அடிக்கடி வீட்டிலிருந்து யாராவது அழைத்து பேசுவார்கள். அல்லது இவர்கள் அழைத்து பேசுவார்கள். அன்று மாலை அல்லது இரவு கணவனும் மனைவிக்கு தங்களை பற்றி இல்லாவிடினும் வீட்டாரை பற்றியாவது பேச விஷயம் இருந்ததினால் இருவருக்கிடையில் இருந்த இடைவெளி வெகுவாக குறைந்திருந்தது.

அதற்கு மற்றுமொரு காரணம் தாஸை பற்றி குறை சொல்ல மிதுவுக்கு இப்பொழுது இரண்டு அப்பத்தாக்கள் கிடைத்திருக்கின்றார்கள். அலைபேசி அழைப்பு விடுத்து “உன் பேரன் சரியில்ல. கொஞ்சம் என்னானு தான் கேளு. அத செய்யல. இத செய்யல என்று ஆரம்பித்து. இன்னைக்கு அவன் துணி மடிக்கல, பாத்திரம் கழுவல என்ற புகார் வரைக்கும் அப்பாத்தாக்களிடம் செல்லும்.

தொலைக்காட்ச்சியில் வரும் நாடகங்களை பார்த்து பதறும் அப்பாத்தாக்கள் தாஸும் பட்டனத்துக்கு சென்ற பின் மனைவியை கவனிக்காமல் இருக்கின்றானா என்று மிதுவின் பக்கம் நின்று தாஸுக்குத்தான் புத்திமதி சொல்வார்கள்.

“ஏன்டி ஒண்ண நூறாகி சொல்லுற?” நொந்த தாஸ் மீண்டும் மருத்துவரை நாடி “டாக்டர் நீங்க சொன்னேன்னு தான் என் பொண்டாட்டிய ஊருக்கு கூட்டிட்டு போனேன். போயிட்டு வந்த பிறகு பொண்டாட்டி டாச்சர் அதிகமாக்கிருச்சு.  போதாததற்கு அப்பாத்தாங்க வேற டாச்சர் பண்ணுறாங்க” என்று புலம்பலானான்.

அவன் பேசுவதை வைத்தே அவன் மனநிலையை அறிந்து கொண்ட மருத்துவரோ “என்ன?… ஏன்? டாச்சரா பார்க்கறீங்க? என்ஜோய் பண்ணுங்க” என்பார்.

குழந்தைகளை பிரியும் பொழுது தாரை தாரையாக மங்களம் கண்ணீர் வடித்தாலும் வீட்டார் தற்பொழுது இருக்கும் மனநிலையில் சென்னைக்கு வந்து தங்க முடியாது என்பதினால் அழுகையை அடக்கிக் கொண்டாள்.  

“உங்கம்மா வந்து தங்கினாலும், ரெண்டு நாள் தாங்க மாட்டாங்க” என்று தாஸ் கிண்டல் செய்ய,

“ஏன் உன் அம்மாவ வரச் சொல்லேன் பார்க்கலாம். அவங்க வர மாட்டங்கள்ல” நடந்த சம்பவங்களால் யாருமே நிம்மதியில்லாமல் தான் இருக்கின்றார்கள். எல்லோருக்கும் மனஅமைதிதான் தேவை. இடமாற்றம் மனமாற்றத்தை தாறுமாயின் அது மதுமிதாவுக்கு பொருந்துமல்லவா. ஆனால் யாருக்குமே ஊரை விட்டு சென்னையில் வந்து தங்க பிடிப்பதில்லை.

என் அன்னையையா கிண்டல் செய்கிறாய்? உன் அன்னையும் அது போல் தான்” என்றாள் மிது.

“எல்லாரையும் வரவழைக்க ஒரு வழியிருக்கு. அதுக்கு நீ மனசு வைக்கணும்” முகவாயை கைவைத்து யோசிப்பது போல் பாவனை செய்த தாஸ் மிது அடிக்க முடியாத தூரத்துக்கு சென்று “என்ன போல சாதுவான ஒரு பொம்பள புள்ளைய பெத்துக்கலாம்” என்றான்.

“யாரு நீ சாதுவா? அதுக்கே உன்ன அடிக்கணும்” என்று கையில் கிடைத்ததை அவன் மேல் வீசியடித்தவள் “புள்ள வேணுமாம். ஒண்ண கைலயும், ஒண்ண இடுப்புளையும் வச்சிக்கிட்டு நான் அல்லாடுறேன்.  இன்னொன்ன வயித்துலயும் சுமக்கணுமா? உனக்கு ரொம்பதான் ஆச. ஆச இல்ல பேராசை. உன்ன…” என்று மிது தாஸை துரத்த, தாஸ் சாஸ்வினை தூக்கிக் கொண்டு ஓட, சைத்ரன் பெற்றோரின் பின்னால் அவர்களை துரத்திக் கொண்டு ஓடலானான். சாஸ்வினோடு கட்டிலில் விழுந்த தாஸை மிது அடிக்க, சைத்ரன் அவர்கள் மேல் பாய்ந்தான்.

பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை. கடந்து போவதும், தீர்வு காண்பதும் நம் கையிலே உள்ளது. அது பிரச்சினையை பொறுத்து தான் உள்ளது.

தன் குடும்பம் தங்களுக்கு வேண்டும் என்று மிது எடுத்த முடிவில் தாஸ் உறுதுணையாக நின்றதில் தாஸ் மற்றும் மிதுவின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமாயின், தீர்க்கவே முடியாத பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்க முயற்சி செய்வதில் தப்பில்லை.

மிது மற்றும் தாஸ் போல் காதலித்து திருமணம் செய்து பெற்றோரை பிரிந்து வாழ்பவர்கள் தனிமை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். தவறை திருத்திக் கொண்டவர்கள். கணவனும் மனைவியும் நீயா? நானா? என்று மல்லுக்கட்டாமல் யார் நீ? யார் நான்? என்று உணர்ந்து விட்டார்களாயின் இல்லறம் சிறக்கும். மிது எனும் மிதுர்லாஷினியும் தாஸ் எனும் தாசந்தனும் உணர்ந்து விட்டார்கள். அவர்களின் இல்லம் சிறக்க வாழ்த்தி விடைபெறுவோமாக.

நன்றி

வணக்கம்

BY

MILA

Advertisement