Advertisement

அத்தியாயம் 9

“புள்ளய பெத்தாளாம் ஒருத்தி. சீராட்டி, பாலூட்டி வளர்த்தாளாம் சக்களத்தி” தண்டட்டி குலுங்க கையையும் கழுத்தையும் ஆட்டியையாவரே கூறிய நாச்சி “உன் பேச்சும் அப்படித்தான் இருக்கு சோலை” என்று சோலையம்மாளை திட்டினாள்.

பேத்தி வேண்டாமாம். அவள் பெற்ற ஆண் பிள்ளைகள் மட்டும் வேண்டுமாம் என்றதில் மட்டும் நாச்சி பேசவில்லை. ஏற்கனவே தன் மகளை தன்னிடமிருந்து பிரித்து அழைத்து சென்றவள் அல்லவா இந்த சோலை என்ற கோபம்தான் நாச்சி இவ்வளவு பேச காரணம்.

“ஆகா… ஆகா… வந்துட்டா… திருவள்ளுவரோட முண்டாச திருடிகொண்டு வந்து திருக்குறள் படிச்சவ”  {தாஸ் என்னமோ அவன் குடும்பம் படிச்ச குடும்பம் என்று சொன்னான் பாரதியாருக்கும் திருவள்ளூர் கூட வித்தியாசம் தெரியல}

“ஏய் திருடி… கிருடின்னு சொன்ன நாக்கை அறுத்துப்புடுவேன் பார்த்துக்க” நாச்சி விரல் நீட்டி எச்சரித்தாள். {இல்லாத முண்டாக திருடிச்சேன்னு அந்தம்மா சொல்லுது. இந்தம்மா அதுக்கு சண்டை போடுது}

“எனக்கு பேசி வச்ச மாரிமுத்துவ திருட்டுத்தனமா கட்டிகிட்டவ தானே நீ. உன் புத்தியப் பத்தி பேசினா கோபம் வருதா?” சோலையம்மா எகிற

“அம்மா வந்த விசயத்த பேசாம எதுக்கு வீணா பேசிகிட்டு இருக்க” என்று தணிகை வேலன் அதட்ட 

“அப்பா செத்தும் அவருக்கு நிம்மதியில்லை. அம்மாக்கும் நிம்மதியில்லை” என்றான் செங்கதிரவன்.

நாச்சியைப் பார்த்ததில் சோலையம்மாள் எதற்கு வந்தோம் என்பதையே மறந்திருக்க, மகன் பேசியதில் சுயநினைவுக்கு வந்தவள் செங்கதிரவன் சொல்வதை பொருட்படுத்தாது. வந்த காரியத்தில் குறியாக “பையன பெத்தவளுக்கு இல்லாத உரிமையா? உன் பேத்தி சிங்கக்குட்டி போல ரெண்டு பையனைத்தான் பெத்து வச்சிருக்கா. பொட்டச்சிய அல்ல. என் பேரனோட பசங்க ரெண்டும் என் வீட்டு வாரிசுங்க. பேசி, மயக்கி உன் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று பார்க்கிறாயா? அதுவும் எப்படி? என் பேரன உன் வீட்டு மாப்பிள்ளையா” இளக்காரமாக சிரித்தாள் சோலையம்மாள்.

பொக்கை வாய் தெரிய அவள் சிரித்ததில் காதில் அணிந்திருந்த தண்டட்டி அங்கும் இங்கும் ஆடியது.

மதுமிதாவுக்கு தாஸின் மேல் உரிமை இருக்கிறது என்றால்? மிதுவுக்கு அவள் பெற்ற பிள்ளைகள் மீது உரிமை இருக்காதா? தன் பேத்தியின் உரிமைக்காக பேசி பிரச்சினையை தீர்த்து வைக்க நினைத்தால் நாச்சி அதை பற்றித்தானே பேசுவாள். ஆனால் கண் முன் நிற்கும் சோலையை பேச கிடைத்த சந்தர்ப்பத்தை விட முடியுமா?

“ஏற்கனவே ஒரு பேரன வீட்டோட மாப்பிள்ளை அனுப்பி வச்சவ, இன்னொரு பேரன அனுப்ப சங்கடப்படுறா. எங்க கிட்ட மட்டும் காசு, பணம் இல்லையா? உன் பேரன உட்கார வச்சு சோறு தான் போட மாட்டோமா? இல்ல எங்க வீட்டுக்கு அனுப்புறதற்கு மட்டும் உன் தன்மானம் இடம் கொடுக்கலையா? இவங்கள பார்த்து ஊரே கை கொட்டி சிரிக்குது. இவளுங்களுக்கு தன்மானம் ஒரு கேடு” நாச்சியாரும் விடாது சோலையம்மாளை நக்கலாக சீண்டினாள்.

“நான் வாங்குற சம்பளத்துக்கு முப்பது நாலும் கடையிலையே மூக்கு முட்ட சாப்புடுவேனே. இதுங்க எதுக்கு எனக்கு சோறு போடணும்?” என்று தாஸ் மிதுவின் காதை கடிக்க,

“ஆ… முப்பது நாளும் கொட்டிகிட்டல்ல முப்பத்தோராவது நாள் பிச்சை எடுப்பியாம். அதுக்கு தான் இந்த சண்டை” என்று கணவனை முறைத்தவள் “ஐயோ இந்த கிழவிங்க ரெண்டும் பேச்ச நிப்பாட்டாதா?” என்று பார்த்திருந்தாள்.

அம்ரிதாசனியை அழைத்த மங்கலம் மிதுவை பார்க்க குடும்பத்தோடு வருவதாக கூறியிருக்க அக்காவும் தங்கையிடம் விஷயத்தை கூறியிருந்தாள்.

மிதுவும் தாஸிடம் “எங்க வீட்டாளுங்க வரதா அக்கா சொன்னா. என்ன பேசினாலும் பூம்பூம் மாடு மாதிரி தலையை மட்டும் ஆட்டு. எதுவும் பேசாதே” என்றிருந்தாள்.

ஏற்கனவே மனைவி எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாள். ஊருக்கு வந்ததில் கொஞ்சம் முகம் மலர பேசுகிறாள். அவள் சொல்லும் அனைத்துக்கும் தாஸ் சொல்லும் முன்னே மூக்கணாங் கயிறு  கட்டிய மாடு போல் தான் இருக்கின்றான். இதில் அவள் சொன்னதை தட்டுவானா? “அப்படியே ஆகட்டும் இளவரசி” என்ற தோரணையில் தலை வணங்கி ஒத்துக் கொண்டான்.

அவன் விதி. அவன் நினைத்தாலும் மிதுவோடு சமூகமாக வாழ விடக் கூடாது என்றிருக்க, நினைத்ததெல்லாம் நடக்குமா?

மனைவியின் குடும்பம் மாலையில் வந்து விடுவார்கள் என்று மனைவியை தொல்லை செய்யாது, குழந்தைகளையும் தயார் செய்து. அவனும் தயாராகி, வருகிறவர்களுக்கு குடிக்க, கொறிக்க என்று எல்லாவற்றையும் மனைவியிடம் கேட்டு கேட்டு ஏற்பாடு செய்து. மனைவிக்கான ஆடையை தேர்வு செய்து கொடுத்து, அவள் அலங்காரத்திலும் உதவியும் செய்தான்.

அழைப்பு மணி அடிக்கவும் “மிது வந்துட்டாங்க” என்று இவன் இன்முகமாக சென்று கதவை திறந்தால் வாசலில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்றிருந்தது அவன் குடும்பம்.

சிரிப்பதா? அழுவதா என்று இவன் முழிக்க “வாங்க. உள்ள வாங்க” என்ன நடக்கப் போகிறதோ என்று முகபவனையோடு வரவேற்றாள் மிது.

“தள்ளுடா… ஏழு வருசத்துக்கு பிறகு அம்மாவ பாக்கறோமே, பாசமா அம்மானு கூப்பிட்டு கட்டிப்பிடிக்கிறானா? கல்நெஞ்சக்காரன்” மதுமிதா கண்ணீரோடு மகனை திட்டியவாறே உள்ளே நுழைந்தாள்.

“நீ வருவாய் என்று அவன் எதிர்பார்க்கல இல்ல. அதிர்ச்சியாகிட்டான் போல” என்றவாறு உள்ளே நுழைந்தான் தணிகை வேலன்.

“ஆமா… ஆமா… பேரதிர்ச்சி.. இன்னும் கொஞ்சம் நேரத்துல ஹாட் அட்டாக் வந்துடும்” அவன் மறைமுகமாக கூறியது இன்னும் சற்று நேரத்தில் மிதுவின் குடும்பத்தார் வந்துவிடுவார்கள் என்பதையே. தன் குடும்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த மிது கணவனின் குடும்பத்தை பார்த்ததும் கணவன் தான் அழைத்து இருக்கின்றான் என்று அவனை முறைத்தவள். தன் குடும்பத்தை பேசியதும் மிது கணவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

“உட்காருங்கள்” என்று மிது மரியாதையாக அனைவரையும் பார்த்து கூறிவிட்டு கணவனை கண்ணசைவில் அழைக்க, தாஸ் மனைவியை கண்டு கொள்ளாது வீட்டாரோடு உரையாடலானான்.

“ஏங்க கொஞ்சம் உள்ள வாங்க” கடுப்போடு  மொழிந்தாள் மிது.

“டேய் கூப்பிடுறா இல்ல” என்று தணிகை வேல் சொல்ல

“எதுக்காம்…” தாங்கள் வந்தது பிடிக்காமல் அழைக்கிறாளோ என்று மதுமிதா மிதுவே சந்தேகமாக பார்த்தாள்.

“கடைக்கு போக” உதடு கடித்து மிது சொன்ன விதத்தில் கணவன் வீட்டாரை கவனிக்க வேண்டும் என்ற பதட்டத்தில் அவள் இருக்கிறாள் என்று அனைவரும் நினைத்தனர்.

“நல்ல புள்ள…” என்று சிரித்தாள் சோலையம்மாள்.

மிது இல்லாமல் தாஸ் வரவே மாட்டான் என்பதை தணிகை வேலன் ஒருவாறு அன்னைக்கும், மனைவிக்கும் புரிய வைத்துத்தான் அழைத்து வந்திருந்தான். வந்தவர்களிடம் மிதுவும் இன்முகமாகவே பேச சோலையம்மாளும், மதுமிதாவுக்கு தணிக்கை வேலனின் கூற்றுக்கு உடன்பட்டது போல் தான் பேசலாயினர்.     

தாஸை இழுக்காத குறையாக அறைக்கு அழைத்து சென்ற மிது “ஏன்டா கூறுகெட்டவனே. என் வீட்டாளுங்க வரதாக உன்கிட்ட சொன்னேனே. எதுக்கு அதே டைம்ல உன் வீட்டாளுங்களையும் வர சொல்லி இருக்க. அறிவு இருக்கா உனக்கு?” எட்டி அவன் தலையில் கொட்டினாள்.

“சத்தியமாக அவங்க வர்றது எனக்கு தெரியாதுடி…”

“இத நான் நம்பனுமா? அவங்க வரும் பொழுது முகத்துல எல்.இ.டி பல்போட கதவை திறந்தியே அப்பவே புரிஞ்சது. இவங்கள வர சொல்லி இருக்கேன்னு சொல்லி இருந்தா, நான் என் வீட்டாளுங்களை வர வேணாம்னு சொல்லி ஏதாவது காரணம் சொல்லி இருப்பேனே. இப்போ அவங்களும் வந்தா, என்ன நடக்கும் என்று தெரியாதா உனக்கு? பிரச்சனை பண்ணவே அலையிரியா?”

“யாரு நானா? நான் என்னடி பண்ண? நான் அப்பாவிடி…” இவளுடைய குடும்பத்தாரை வரவேற்க கதவை திறந்தால், தன் குடும்பம் வாசலில் நின்றால் அது தன்னுடைய குற்றமா என்று மனைவியை பார்த்தான் தாஸ்.

யாரு நீ… நீ பாவி டா. மகாபாவி. உன் குடும்பத்திலேயே கேடி நீதான். உன்ன கட்டிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே… உன்ன லவ் பண்ண என்ன சொல்லணும். கங்கையில போய் ஏழு ஜென்மம் மூழ்கினாலும், உன்னை லவ் பண்ணதுக்கான பாவம் மட்டும் போகாது” தலையில் அடித்துக் கொண்டாள் மிது.

“குட்ட குனியிறான்னு தானே இத்தனையும் பேசிகிட்டு இருக்க. இருக்குடி உனக்கு. கொலுசு போட்ட கொசுவத்தி. உன் வாயில இருந்து வார்த்தையாடி வருது? எரிகாற்கள்… இல்லை. இல்லை… எரிசொற்கள்” தாஸுக்கு கடுப்பாக பேச ஆரம்பிக்க, வாசலில் சத்தம் கேட்டது.

“வந்துட்டாங்க. நீதானே உன் குடும்பத்தை வர சொன்ன. போ… போய் நீயே கவனி…” தன் அப்பத்தா நாச்சியின் சத்தம் ஓங்கி ஒலிக்கவும் கணவனை முறைத்தாள்.

“உனக்கிருக்கிறது உன் அப்பத்தா வாய் தானே” போகிற போக்கில் தாஸ் சொல்ல,

“உனக்கு இருக்கிறது உன் அப்பத்தா புத்தி தான்” என்றாள் மிது.

மெல்லிய குரலில் முகத்தை சாதாரணமாக வைக்க முயன்றவாறு கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் திட்டியவாறு வாசலுக்கு வர இங்கே நாச்சியாரும், சோலையம்மாளும் வாய் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

எதுக்குடி நீ என் பேரன் வீட்டுக்கு வந்த?” நாச்சியை பார்த்ததும் சோலையம்மாள் கேட்க,

நான் என் பேத்தியை பார்க்க வந்தேன். நீ பேரன். பேரன் என்று சொல்கிறாயே, அவன் எனக்கும் பேரன் தான். நீ எதுக்கு வந்தியாம்” சோலையை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தாள் நாச்சியார்.

“ஆ… நான் என் பேரன வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்தேன். பேரனையும் கொள்ளுப்பேர பசங்களையும் மட்டும்” என்று சோலை சொன்னதும் கடுப்பாகி தான் நாச்சி பேச ஆரம்பித்திருந்தாள். சோலை சொன்னது உள்ளறையில் இருந்த தாஸுக்கும், மிதுவுக்கும் கேட்கவில்லை. இவர்களின் வாய் சண்டை முற்றிய பின்னர் தானே அவர்கள் வாசலுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

தாஸோடு மிதுவையும் பெருந் தன்மையாக அழைத்து செல்லலாம் என்ற முடிவுக்கு வந்திருந்த சோலையம்மாள் நாச்சியாரை பார்த்த உடன் மிது வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள். அதன் விளைவுதான் இந்த சண்டை.

நாச்சியாரும் சோலையம்மாளும் என்று சண்டை போட்டாலும் அந்த சண்டையில் அங்கமாக வகிப்பவர் மாரிமுத்து. சண்டைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் மாரிமுத்துவை கொண்டுதான் ஆரம்பிப்பார்கள். அல்லது முடிப்பார்கள். அல்லது சண்டைக்கு நடுவேயேனும் மாரிமுத்துவின் பெயர் அடிபடும். இவர்களின் சண்டைக்கு காரணமான மாரிமுத்து உயிரோடு இருந்த வரையிலும் சரி, இறந்த பின்னும் சரி இவர்களின் சண்டைக்கு காரணமாய் இருப்பினும் அவரை இவர்கள் திட்ட மாட்டார்கள்.

“மாரிமுத்து ஆண் மகன். உனக்கெங்க போச்சு புத்தி” என்று சோலையம்மாள் நாச்சியாரை பார்த்து கேட்பதும்,

“நீயெல்லாம் பொம்பளையா உன்ன பிடிக்காம தானே என்ன கட்டிக்கிட்டார்” என்று நாச்சியார் சோலையம்மாளை பார்த்து கத்துவதும் தான் ஆரம்பக்கட்டநிலை சண்டையாக இருந்தது.

படிப்படியாக உருமாறி பிள்ளைகளுக்காக சண்டை. அதன்பின் பேரன், பேதிகளுக்காக சண்டை, இன்றோ கொள்ளுப்பேரன்களுக்காக சண்டை என்று வந்து நின்றிருக்கிறது.

“நம்ம லவ்வுக்கு தான் சண்டை நடக்குதுன்னு பார்த்தா, இந்த பழைய லவ் ஸ்டோரிக்கு தான் இன்னமும் சண்டை நடக்குது. தாத்தா செத்தும் இந்த ஜென்மத்தில் இந்த சண்டை முடியாது போல” மிது நக்கலாக கூற

“எத்தனை ஜெனரேஷன் தாண்டினா என்னடி லவ்வுன்னா லவ் தான்” என்றான் தாஸ்.

“என்ன எழவெடுத்த லவ்வோ அடுத்தவன் புருஷன் மேல” சந்தடி சாக்கில் தாஸின் அப்பத்தா சோலையம்மாளை தப்பானவள் என்றாள் மிது.

“ஏற்கனவே உங்க அப்பன் பேசின பேச்சில தாண்டி நம்ம ரெண்டு குடும்பமும் இப்படி சண்டை போட்டுக்கிட்டு நிக்குது. நீ வேற பேசி வைக்காதே” என்று அவளை முறைதான் தாஸ்.

தாஸ் காதலைப் பற்றி புகழ் பாடுவதோடு தான் மிது மீது வைத்திருக்கும் காதலை உணர்த்தவும், புரியவைக்கவும் பேச, அதை புரிந்து கொள்ளாது அவனை மட்டும் தட்டுவதாக நினைத்து அவன் குடும்பத்தாரை, அதுவும் சோலையம்மாளை தவறாக பேசினாள்.

மிதுவும், தாஸும் ஏன் இருவரின் குடும்பத்தாருக்குமே நாச்சியாரும் சோலையம்மாளும் மாரிமுத்துவின் மீது இருந்த காதலால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அது முற்றிலும் தவறு.

சோலையம்மாளின் கோபம் எல்லாம் தோழியான நாச்சியார் மாரிமுத்துவை விரும்பி இருந்தால், அதை தன்னிடம் தெரிவித்து இருக்க வேண்டும். மாரிமுத்துக்கும் தனக்கும் பரிசம் போட்டது ஊரறிந்த செய்தி. மாரிமுத்துவே வந்து தோழியிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று விருப்பம் கேட்டிருந்தால் தன்னிடம் வந்து தெரிவித்து அனுமதி கேட்டிருக்க வேண்டுமே. தோழிக்காக தனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை விட்டுக் கொடுக்க மாட்டேனா? இப்படி திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? அப்படி என்ன நம் நட்பை விட மாரிமுத்துவின் காதல் உசந்தது என்ற கோபம்தான் சோலையம்மாளின் இத்தனை வருட கோபத்திற்கும், பகைக்கும் காரணம்.

தன் திருமணம் எவ்வாறு நடந்தது என்று எடுத்துக் கூற கூட சந்தர்ப்பம் கொடுக்காது தன்னைப் பேசும் தன் தோழி தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற கோபம் தான் நாச்சியாரின் பகைக்கு காரணம்.

“என்னதான் பொட்டச்சி புள்ள பெத்தாளும், அப்பன் வம்சாவளி தாண்டி செல்லும். என் பேரனுக்கு தான் உரிமை அதிகம். அதுவும் அவன் பெத்து வச்சிருக்கறது இரண்டுமே ஆம்பள பசங்க. அவங்க எங்க வீட்டுக்கு தான் வருவாங்க” என்றாள் சோலை.

“என் பேத்தி இழுத்துக்கிட்டு ஓடி, திருட்டு கல்யாணம் பண்ணதும் இல்லாம, ஏழு வருஷமா கண்ணுலையும் காட்டாம, இப்ப என்னடா திடுதிப்பா வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லுவ? உன் திட்டம் என்ன என்று எனக்குத் தெரியும் டி. ஒரு பேரென்ன எம்.எல்.ஏக்கு எழுதி கொடுத்துட்ட. இவனையாச்சும் வீட்டோடு வெச்சிக்கலாம்னு என்று பாக்குற”

தங்களுடைய எண்ணத்தை படித்து புட்டு புட்டு வைக்கும் நாச்சியின் மீது சோலையம்மாவுக்கு கட்டும் கடங்காத கோபம் வரவே தாஸையும் மிதுவையும் அவள் புறம் திருப்பிவிட முயன்றாள்.

“இவங்க கல்யாணம் பண்ணி ஏழு வருஷம் ஆச்சு. ரெண்டு பசங்களையும் பெத்துட்டாங்க இன்னமும் “ஊரை விட்டு ஓடிட்டாங்க. ஊரை விட்டு ஓடிட்டாங்க” என்று அதையே சொல்லிக்கிட்டு. பார்த்தியா டா தாஸு இவ ஏத்துக்கொள்றது போல ஏத்துக்கிட்டாலும், குத்தி காட்டிக்கொண்டே இருப்பா. இப்பவே இப்படி பேசுறா. அப்புறம் எப்படி எல்லாம் பேசுவா. யோசிச்சிக்க” என்றாள் சோலையம்மாள்

“டேய் தாஸ். நீ அவளுக்கு மட்டும் பேரன் இல்ல. எனக்கும் பேரன்தான். அவள மாதிரி நான் உள்ள ஒன்னு வச்சு வெளியே ஒன்னு பேசுறவ இல்ல. என் மனசுல என்ன இருக்கோ அதுதான் என் வாயிலையும் வரும். அதை தான் நான் பேசுவேன்”  என்று நாச்சியார் சொன்னதும் மதுமிதா அன்னையை முறைத்தாள்.

“யாரு நீ உள்ள ஒன்னு வச்சி வெளிய பேசாதவளா? அத நீ பெத்த பசங்க முன்னாடியே சொல்லுற பார்த்தியா அது தான் வேடிக்கையா இருக்கு”

மதுமிதா ஆத்திரத்தில் யாரை பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று கூட புரியாமல் பேசிவிட்டாள்.

“பார் பார் உன் மகளே உன்னை பற்றி கூறுகிறாள் இதை விட யார் சாட்ச்சி சொல்ல வேண்டும்?” என்ற பார்வையோடு தெனாவட்டாக நாச்சியை பார்த்திருந்தாள் சோலை.

சோலையின் பார்வையில் பூமி பிளந்து உள்ளே சென்று விடமாட்டோமா என்று தான் நாச்சிக்கு தோன்றியது “அப்படி என்னடி நான் மாத்தி பேசினேன்” தன் ரெத்தம் தன்னை எதிர்த்து பேசியதில் வெகுண்டெழுந்தாள் நாச்சி.

“அம்மாவையே எதிர்த்து பேசுற. அவங்க என்ன பேசினாலும் அது நமக்காக என்று தெரியாதா?” மதுமிதாவை அடிக்க கையை ஓங்கியிருந்தான் செங்கதிரவன்.

அன்னையை பேசியதில் அண்ணன் தங்கையை அடிக்க கையை ஓங்கினான். அதில் என்ன தவறு? ஒரு அடி அடித்திருந்தால் கூட அண்ணனும் தங்கையும் சண்டை பிடித்து பின் சமாதானம் கூட ஆகிவிடுவார்கள். ஏற்கனவே செங்கதிரவனின் மீது மதுமிதாவுக்கு கோபம் இருப்பதால் ஜென்மப்பகையாகக் கூட மாறிடலாம்.

கூட இருப்பவர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அண்ணனுக்கும், தங்கைக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்திருந்தாலே போதும் குடும்பம் ஒற்றுமையாக இருந்திருக்கும்.

அவ்வாறெல்லாம் நடக்குமா? மதுமிதாவை அடிக்க செங்கதிரவன் கையை ஓங்கினால் மதுமிதாவின் கணவன் தணிகை வேலன் வேடிக்கை பார்த்திருப்பானா? தணிகை வேலன் செங்கதிரவனின் சட்டையை பிடித்திருந்தான்.

அப்பத்தாக்கள் இருவரும் இதுவரையில் வாய் சண்டை போட்டுக் கொண்டிருக்க, அப்பாக்கள் இருவரும் அவர்களை தடுத்து நிறுத்துவார்கள் என்று பார்த்தால் இப்பொழுது அவர்களே கைகலப்பில் ஈடுபட நிலைமை கைமீறிப் போய் கொண்டிருப்பதை உணர்ந்த மிதுவும் தாஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதோடு தந்தையர்களை பிரிக்க முயன்றனர்.

“டேய் இவன் உன் அம்மாவ அடிக்கப் பார்த்தான். நீ என்ன இவனுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு இருக்க? பொண்டாட்டி மேல மயக்கமா?” என்று தணிகை வேல் கேட்டு விட

“ஏன் நீ உன் பொண்டாட்டிய அடிக்க கையோங்கியத்துக்கே வரிஞிகட்டிக் கொண்டு வந்தியே அதுக்கு என்ன பேராம்?’ என்று நாச்சி பேச

“அப்பத்தா கொஞ்சம் அமைதியா இரு” என்றாள் மிது.

“மயக்கமா? அப்படி ஒண்ணுமில்ல பயம் தான்” என்றது தாஸின் மயின்ட் வாய்ஸ்.

“இவனுக்கு இவன் அம்மாவ விட பொண்டாட்டி தான் உசத்தி. அவன் மாமனார் அவன் அம்மாவ அடிக்கப்பாக்குறான். இவன் என்னடான்னா… பொண்டாட்டி குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கிகிட்டு. இவன என் வயித்துல தான் பெத்தேனா…” என்று மதுமிதா நெஞ்சில் அடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள்.

மதுமிதாவின் பேச்சில் தணிகை வேல் சீண்டப்பட்டு செங்கதிரவனோடு மல்லுக்கு நின்றான்.

அடங்காத காளையாக திமிறிக் கொண்டிருந்த தந்தையர்கள் இருவரையும் பிடித்து வெவ்வேறு இடத்தில் அமரவைத்தனர் மிதுவும், தாஸும்.

“அம்மா என்ன பேசுற?” செங்கதிரவன் தாஸுக்கு மாமனார் தான். அதற்கு முன் மதுமிதாவுக்கு அண்ணன் தானே. ஏன் யாரோ போல் பேச வேண்டும்? நொந்து விட்டான் தாஸ்.

“உங்கம்மாவுக்கு ஐப்பா அவார்ட் மட்டும் கொடுத்தா பத்தது, ஆஸ்கார் அவர்ட்டே கொடுக்கலாம்” தாஸின் காதுக்குள் கூறினாள் மிது.

அவளை முறைக்க முடியாமல் “கொஞ்சம் நாக்கை அடிக்கிக் கிட்டு இருடி” என்று தாஸ் மனைவியை அடக்க

“அங்க பாரு இப்பவும் அவன் பொண்டாட்டிய கொஞ்சிகிட்டு தான் இருக்கான்” என்றாள் சோலை.

“ஐயோ… ஐயோ… ஐயோ.. நான் பெத்த பசங்க ரெண்டுமே எனக்கு இல்லாம போச்சே” தலையிலும், நெஞ்சிலும் அடித்துக் கொள்ளலானாள் மதுமிதா

“அம்மா போதும்மா…” என்று தாஸ் மதுமிதாவை நெருங்கி சமாதானப்படுத்த முயன்றான்.

மகன் அருகில் வந்ததும் மதுமிதாவின் சத்தம் இன்னும் அதிகரித்தது. அவன் நெஞ்சில் சாய்ந்து, கட்டிப் பிடித்துக் கொண்டு ஏங்கி, ஏங்கி அழுதாள் மதுமிதா.

ஏழு வருட பிரிவு, மகன் அலைபேசியில் கூட பேசவில்லை என்ற புலம்பலினூடே மிதுவின் குடும்பமும் தங்கள் குடும்பமும் ஏன் பிரிந்தோம், யாரால் பிரிந்தோம் என்று கூறி மகனின் மனதை தன் பக்கம் சாய்க்க முயன்றாள்.

“அந்தம்மா பச்சையா நடிக்குது. அது தெரிஞ்சும் மரம் மாதிரி நிக்குறத பாரு” கணவனை வாய்க்குள்ளையே வசைபாடினாள் மிது.

மிது முறைப்பதை பார்த்து “அப்படிப்பட்ட குடும்பத்து பொண்ண தேடிப் போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட. ஆனா அவளுக்கு நம்ம மேல கொஞ்சம் கூட பாசமில்ல. இங்க நான் ஒருத்தி கதறுறேனே ஒரு வாய் தண்ணீர் கொடுத்தாளா?” மிது தாசந்தனுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவள். தங்களுடைய குடும்பத்துக்கும் பொருத்தமில்லாதவள் என்பதை சூசகமாக கூற மிதுவின் பொறுமை பறந்தது.

“டேய் என்னடா…. நானும் பார்த்துகிட்டு நிக்குறேன். உங்கம்மா அவார்டு கொடுக்குற அளவுக்கு நடிக்கிறாங்க. நீ கொஞ்சிகிட்டு நிக்கிற. முதல்ல அந்த பொம்பளைய வீட்டை விட்டு போக சொல்லு”

“என்ன பேசுற? புரிஞ்சிதான் பேசுறியா? பொம்பள கிம்பளனா பல்ல பெத்துடுவேன் பார்த்துக்க” கோபமாக மிதுவின் பக்கம் திரும்பினான் தாஸ். இந்த மாதிரி சூழ்நிலையை தான் முறையாக கையாள வேண்டும் என்று மருத்துவர் கூறினார். அதை மறந்து விட்டான் தாஸ்.

மதுமிதாவின் பேச்சு கோபத்தின் வெளிப்பாடாகவும், கண்ணீர் பாசமாகவும் மட்டும் தாஸுக்கு தெரிந்ததே ஒழிய தன்னை பெற்ற அன்னை நடிப்பதாக அவன் நினைக்கவேயில்லை. 

“என்ன அம்மா கூட இருந்தா ரோசம் வருதா? வீரம் வருதா? நான் சொல்லுறபடி கேட்டு வீட்டுல அடங்கி தானே இருப்ப” தன்னிடம் பம்மும் கணவனா இவன் என்ற கோபத்தில் மிது தங்கள் திருமண வாழ்க்கையையே புட்டு புட்டு வைத்திருந்தாள்.

“ஐயோ ஐயோ என் பையன மயக்கி, என் குடும்பத்த பழிவாங்கவே இவ கல்யாணம் பண்ணியிருக்காளே முருகா… மொத்த குடும்பமும் சேர்ந்து சதி பண்ணியிருக்கே. இது தெரியாம என் பேரன் இப்படி மாட்டிக்கிட்டானே” என்று சோலை புலம்ப

மதுமிதா “ஐயோ முருகா…  என் பையன் வாழ்க்கை போச்சே” என்று மயங்கிச் சரிந்தாள்

Advertisement