Advertisement

அத்தியாயம் 7

தாஸ் மிது மற்றும் குழந்தைகளோடு ரயிலில் ஊருக்கு பயணம் செய்து கொண்டிருந்தான். தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட மனைவியை பார்க்கும் பொழுது தாஸுக்கு எரிச்சல் வந்தது. கடுப்போடு அமர்ந்திருந்தான்.

தீபாவளி விடுமுறை, காரியாலயத்தில் மேலும் ஒரு வாரம் விடுப்பு வாங்கிக் கொண்டு தான் இருவரும் ஊருக்கு கிளம்பியிருந்தனர்.

இந்த ஏழு வருடங்களில் வேலைக்கு லீவ் போடாதவர்கள் லீவு போட்டது கூட வேலை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தை கொடுக்கத்தான் செய்தது.

குழந்தைகளோடு மிக நீண்ட தூரம் பயணம் செய்வது இருவருக்கும் இதுவே முதல் தடவை. மிது குழந்தைகளுக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்திருக்க, “இது எதற்கு? இது தேவையில்லை. இது ஊரிலேயே கிடைக்கும். இதையும் சுமந்து செல்ல வேண்டுமா?” என்று தாஸ் பல பொருட்களை குறைத்திருந்தான்.

இரவில் இரயிலேறியதால் குழந்தைகள் சமத்தாக தூங்கவில்லை. இரயிலின் ஆட்டத்தில் மிது மற்றும் தாஸுக்கே தூக்கம் வராமல் உருண்டு புரண்டார்கள் என்றால் குழந்தைகள் சத்தத்தாலும் சிணுங்கலாயினர்.

ஒருவழியாக அவர்களை தூங்க வைத்து இவர்கள் தூங்க அதிகாலையாகியிருந்தது.

சூரியன் கிழக்கில் உதித்து வெளிச்சம் படர ஆரம்பித்திருக்க, ஓரிருவர் விழித்து காலைகடனை முடிக்க ரயிலுக்குள் அங்கும் இங்கும் செல்லலாயினர். அந்த ஓசையிலும் இவர்கள் நல்ல தூக்கத்தில் இருக்க, சின்னவன் சாஸ்வின் பசியில் சிணுங்கலானான். மிது எழுந்து அவனுக்கு பால் கலந்து கொடுத்து விட்டு தூங்க முயன்றாள். அந்த நேரம் சைத்ரன் விழித்து “ம்ம்… ச்சூ… ம்ம்… ச்சூ…” வருது என்றான்.

“பொட்டி கொண்டு வரலடா… அதான் பெம்பி போட்டிருக்கேன் அதுலையே போ” என்ற மிது தூங்க முயன்றாள்.

இயற்கை உபாதை அழைத்தால் சைத்ரனை சிறு வயதிலிருந்தே கண்ட கண்ட இடத்தில் உட்கார வைக்காமல் அவனுக்கென்றே வாங்கப்பட்ட பொடி எனும் இருக்கையில் தான் அமர வைத்து பழக்கி இருந்தாள் மிது.

பொடி இருக்கையும் தேவை படும், குழந்தை கேட்பான் என்று மிது எடுத்திருக்க, தாஸ் வேண்டாமென்று வீட்டில் வைத்து விட்டு வந்திருக்க, தூக்கத்தில் குழந்தை ஒண்ணுக்கு சென்று விடக் கூடாதே என்று பம்பஸ் அணிவித்திருந்த மிது அதிலையே செல்லுமாறு கூறினால் குழந்தை கேட்டுமா? அமர்ந்த வாக்கில் அழ ஆரம்பித்தான்.

தூங்கும் நேரத்தில் தொந்தரவு செய்தால் எவ்வளவு கடுப்பாக இருக்கும்? மிதுவுக்கு சொல்ல முடியாத கோபம் கனன்றது. கணவனை பார்த்தால் அவனோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

“இங்க இவ்வளவு அமளி துமளி நடக்குது. இந்த சத்தத்துலையும் இவனுக்கு மட்டும் எப்படித்தான் தூக்கம் வருதோ?” மொத்த கோபத்தையும் ஒரு உதையில் அவன் மேல் காட்டினாள்.

திடுக்கிட்டு விழித்த தாஸ் “என்னைக்குமில்லாம கனவுல அன்பா பேசறாளேன்னு நினச்சேன். அதான் நேர்ல பத்ரகாளியா நிக்குறாளே” என்ற முணுமுணுப்போடு “என்ன?” என்று சிடுசிடுத்தான்.

“இவன் பொடிய எடுக்க சொன்னா, அது என்னவோ பெரிய பாரம் போல அத தூக்க உன்னால முடியாது என்று வீட்டுலையே வச்சிட்டு வந்தியே. இப்போ பாரு இவன் என் உசுர வாங்குறான். போ… போய் இவன உச்சா போக வை” என்று கடுகடுத்தாள்.

“அவ்வளவு சாமான் வேணாம் என்று சொன்னது ஒரு குத்தமா?” என்று தாஸ் தலையை சொரிய, பக்கத்து இருக்கையில் இருந்த முதியவர் ஒருவர் இவர்களின் சத்தத்தில் “என்ன தம்பி பொண்டாட்டி குழந்தைகளோடு தனியா கஷ்டப்படுறாளே, கூடமாட உதவி செய்ய மாட்டியா?” என்று அவனுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தார்.

“இதுக்கு என் பொண்டாட்டியே தேவலாம்” என்ற முணுமுணுப்போடு சைத்ரனை தூக்கிக் கொண்டு சென்றான் தாஸ்.

இரயிலின் டாயிலட்டோ என்று சுத்தம் செய்ததோ என்ற சந்தேகத்தில் இருக்க, சைத்ரன் தாஸின் கையிலிருந்து இறங்காமல் அடம்பிடித்தான்.

“டேய் என்னடா?”

அவன் மொழியில் சுத்தமாக இல்லை. அருவருப்பாக இருக்கிறது என்று சொல்ல, தாஸுக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை.

குழந்தையை பலவந்தமாக இறக்கி சூச்சு போக வைக்கலாமென்று பார்த்தால் சைத்ரன் முரண்டு பிடித்தான். கோபத்தில் குழந்தையின் பின் பக்கம் இரண்டு அடியை வைக்க குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது.

என்ன செய்வது என்று தாஸ் விழிபிதுங்கி நிற்க, அங்கே வந்த பெண் ஒருத்தி “குழந்தை தானே சார் அப்படி ஓரமா நிக்க வைங்களே. உள்ள கூட்டிட்டு வந்திருக்குறீங்க. இதுக்குள்ள வந்து குழந்தைக்கு ஏதாவது வியாதி வந்துட போகுது” என்றாள்.

“பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்குறது பத்தாதென்று யாரென்றே தெரியாதவங்க கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேணும் எங்குறது என் தலையெழுத்து” முணுமுணுத்தவன் அந்த பெண் கூறியதை போல் செய்ய இவன் அடித்ததில் அப்பொழுதும் குழந்தை முரண்டு பிடிக்கத்தான் செய்தது.

“இந்த வயசுலயே ஸ்கூல்ல சுத்தம், சுகாதாரம், டிசிப்பிளீன் என்று சொல்லிக் கொடுத்து எங்க உசுர வாங்குறாங்க. டேய் நாங்க எல்லாம் உன் வயசுல டவுசர் கூட போடாம காடு, மேடெல்லாம் ஓடி விளையாடினோமடா. ஒண்ணுக்கு போரதுக்கே இப்படி அலும்பு பண்ணுற, ஆயி வந்தா என்ன அதுப்பு பண்ணுவ? முதல்ல உங்கள ஊருக்கு கூடி போய் காட்டுல மேய விடணும்” என்றவாறே குழந்தையை நிற்க வைத்து துணியை தளர்த்தினான்.

அடம்பிடித்து அழும் குழந்தையை பார்த்து “ஒரு மாதிரி, ஒரு இடத்துல நில்லுடா. உனக்கு உன் அம்மா தான் சரி” என்று முதுகில் ஒரு அடியை கொடுத்தே வந்த வேலையை பார்த்து அழைத்து சென்று குழந்தையை மிதுவிடம் கொடுத்தான்.

“பெரும் சத்தத்தோடு வரும் குழந்தையால் பாதி தூக்கத்தில் இருந்த அனைவருமே விழித்திருந்தனர்.

சாஸ்வினை அணைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த மிது எழுந்து “என்ன?” என்ற பார்வையோடு கணவனை எரிச்சலாக முறைத்தாள்.

அன்னையிடம் தாவிய சைத்ரனோ உதடு குவித்து விம்மியவாறே தந்தை அடித்து விட்டதாக குற்றம் சாட்டினான்.

குழந்தையை சமாதானப்படுத்தியவாறே “குழந்தைகளை பெத்துக்க மட்டும் தெரியும். பார்த்துக்க தெரியல. எப்ப பார்த்தாலும் அழ வச்சிக்கிட்டு” தாஸை கோபமாக முறைத்தாள் மிது.

என்ன நடந்தது என்று அறியாமல், தன்னிடம் விசாரிக்காமல் தன்னை திட்டும் மனைவியை பார்க்கையில் தாஸுக்கு எரிச்சலாக வந்தது. இவன் பேசினால் அவளும் பேசுவாள். வாய் வார்த்தை வீண் சண்டையாகி விடும். பயணம் செல்லும் பொழுதும் சண்டை வேண்டுமா? அதற்கும் கண்ணை கசக்கி கொண்டு தன்னையே குற்றம் சொல்வாள். சுற்றி இருப்போர் வேடிக்கை பார்ப்பதோடு, மனைவியை கொடுமை படுத்துபவன் போல் தன்னை பார்ப்பார்கள். தனக்கே புத்திமதி சொல்ல முற்படுவார்கள் என்பதால் எதுவும் பேசாமல் அமைதியானான் தாஸ்.

மிது காலைகடனை முடித்துவிட்டு வரும் வரையில் தாஸ் சைத்ரனுக்கு உணவு ஊட்டலானான். சாஸ்வின் தூங்கிக் கொண்டிருந்தமையால் எந்த பிரச்சினையும் வரவில்லை.

தாஸ் முகம் கழுவிக் கொண்டு வரும் பொழுது சாஸ்வின் விழித்துக் கொண்டு மிதுவை படுத்திக் கொண்டிருந்தான். அதற்கும் அவள் அவனைத் தான் திட்டினாள்.

“வீட்டில் பத்தாது என்று இவனுங்க இவள வந்த இடத்திலும் படுத்துறாங்க. இவளுக்குன்னே வாச்சவனுங்க” தாஸால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தால் அதற்கும் மனைவியிடம் வாங்கி கட்டிக்கொள்ள நேரிடுமே என்று அமைதியை கடைப்பிடித்தான்.

குழந்தைகள் இருவரும் படுத்திய பாட்டில் மிதுவும், தாஸும் காலை உணவை கூட சரியாக உண்ணவில்லை.

வீட்டில் இருந்தாலாவது ஒருவாறு குழந்தைகளை சமாளிப்பாள். மிதுவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

அதை பார்த்த தாஸ் “இதுக்குத்தான் நான் ஊருக்கு போக வேண்டாம் என்று சொன்னேன்” என்றான்

அதை கேட்டு கணவனை ஏகத்துக்கும் முறைத்த மிது “ஆமா நான் எங்கதான் வெளிய போறேன்? ஒரு சினிமாவுக்கு தான் போறேனா? குழந்தைகளை கூட்டிக்கிட்டு பார்க்குக்கு தான் போனேனா? இல்ல பீச்சுக்குத்தான் போனேனா? நாம கடைசியா குடும்பமா எப்ப வெளியே போனோம்? எங்கேயும் போகாம, உனக்கு தாசியா, குழந்தைகளுக்கு வேலைக்காரியா வீட்டிலேயே அடஞ்சி கிடந்தா சரி” என்றாள்.

முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் வேறு பொல பொலவெனு கொட்ட துப்பட்டாவால் துடைக்கலானாள். அவள் துடைக்க துடைக்க கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. மூக்கு விடைக்க நெஞ்சம் வேறு விம்மியது. கண்ணீரோடு நிற்கும் அன்னையை பார்த்த சைத்ரன் கண்களை துடைத்து விடலானான்.

அதை பார்த்த பக்கத்து இருக்கையில் இருந்த முதியவரோ “என்னமா ஏதாவது பிரச்சனையா? என்ன உன் புருஷன் ஏதாவது சொன்னானா?” என்று அதட்டலாக கேட்டார்.

அவரே இரண்டு அடி விட்டால் சுருண்டு விழுவார் போல் இருக்கும் தோற்றம்தான். அடுத்தவர் பிரச்சினை என்றால் வாரி சுருட்டிக் கொண்டு வந்து விடுவார்களே என்று அவரை முறைத்த தாஸ். மனைவியை முறைக்கவும் தவறவில்லை.

அதற்குள் “கண்ணுல தூசி போயிருச்சு தாத்தா” என்று சமாளிக்க முயன்றாள் மிது.

“கல்யாணமான பொண்ணுங்க கண்ணுல மட்டும் அடிக்கடி தூசி போகுது போல” தாஸை பார்த்து கிண்டலாக கூறினார் அவர்.

தாஸ் கோப எல்லையை கடந்த நிலையில் மிதுவை நன்றாக முறைத்தானே ஒழிய எதுவும் பேசவில்லை. “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு கண்ண கசக்குறா? மேடத்தை ஒன்னும் சொல்லிடக்கூடாது, உடனே டாம தொறப்பா. இவளுக்கு வக்காலத்து வாங்க நாலு பேர் எங்கு இருந்துதான் வாரங்களோ. இன்னும் அரை மணி நேரத்துல ஸ்டேஷன் வந்துடும். இறங்கிடுவோம். அதனால பொறுமையா இருக்கேன்” தனக்குள் சொல்லிக் கொண்டான்.

ஊரை வந்தடைந்ததும் பொருட்களோடும் குழந்தைகளோடும் இறங்குவது கூட இருவருக்கும் போராட்டமாகத்தான் இருந்தது. ஒரு வழியாக இறங்கி வண்டி பிடித்து ஊரை வந்தடைந்தனர்.

ஏழு வருடங்களில் ஊரில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்க, அவற்றையெல்லாம் பார்வையிட கூட முடியாதவாறு குழந்தைகள் இருவரும் பயண களைப்பில் பெற்றோரை படுத்தியெடுக்கலாயினர்.

பாரிவள்ளல் பார்த்துக் கொடுத்த வாடகை வீட்டைத் தேடிக் கண்டுபிடிப்பது ஒன்றும் ஓட்டுனருக்கு சிரமமாக இருக்கவில்லை. கோவிலுக்கு அருகே இருந்ததோடு பாரிவள்ளலின் எதிர்வீடும் கூட.

அது அவன் வீடு தான் என்று பார்த்த உடனே தாஸ் கண்டுபிடிக்க காரணம் வீட்டின் முன்னே அவன் வண்டி நின்றது தான்.

“வரமாட்டானு நினைச்சேன், வந்துட்டானா? இவன்கிட்ட இருந்து என் பொண்டாட்டிய காப்பாத்துறது எனக்கு பொழப்பா இருக்கும் போல” முணுமுணுத்தவாறே பொருட்களை வீட்டுக்குள் எடுத்துச் செல்லலானான் தாஸ்.

பயணக் கலைப்பு தீர குளித்துவிட்டு மிது வரும் பொழுது, தாஸ் சாஸ்வினை தூங்க வைத்திருந்தான். சைத்ரன் அவனது விளையாட்டு பொருட்களோடு ஐக்கியமாக இருந்தான்.

மிது வேணாம்னு சொன்னாலும் இவனோட விளையாட்டு சாமான்கள்ல கொஞ்சத்தை கொண்டு வந்தது நல்லதா போச்சு” என்றவாறே தாஸ் துணி மாற்றலாம் என்று நினைக்க

குளித்துவிட்டு வந்த மிது “மதியத்துக்கு என்ன சமைக்கிறது?” என்று வந்து நின்றாள்.

“ஆ…. இதோ இப்பவே போய் வாங்கிட்டு வரேன். நைட்டுக்கும் சேர்த்து சாதம் வடிச்சிடு. உனக்கு ஒரு வேல மிச்சம் இல்ல” என்று சிரித்தான்.

அவனை கடுப்போடு முறைத்தவள் “ஏண்டா… உனக்கு ஊர சுத்தணும். உன் அம்மாவ பார்க்கணும். அதற்காக நான் சொன்ன உடனே கிளம்பிட்டியா?”

“ஏய்… என்னடி சொல்லுற” புரியாது முழித்தான் தாஸ்.

“பின்ன… நைட்டு ஒழுங்கா தூங்காம டிராவல் பண்ணிக்கிட்டு வந்திருக்கோம். ஹோட்டல்ல வாங்கிக்கலாம் என்று சொல்லுறியா? தோணுதா உனக்கு? தோணாம இல்ல. உனக்கு உன் வீட்டாளுங்களை பார்க்கணும். அதுக்கு காரணம் வேணும். நான் சொன்ன உடனே கிளம்பிட்ட”

“ஆஹா… பழக்க தோஷத்துல பொண்டாட்டி என்ன சொன்னாலும் ஆமா சாமி போட்டது தப்பா போச்சே. அவ கால்ல போட்டு இருக்கிற ஏழாம் நம்பர் செருப்பக் கொண்டு எவ்வளவு அடிச்சாலும் எனக்கு புத்தி மட்டும் வர மாட்டேங்குது. இப்படி போட்டு வாங்குறான்னு தெரியாம மாட்டிகிட்டு முழிக்கிறதே என் வேல” தனக்குள் பேசிக்கொண்டவன்

“வீட்டுப் பக்கமா? நானா? ஏழு வருஷமா அம்மா கூட பேசவே இல்ல. நான் எதுக்கு அவங்கள பார்க்கணும்? அவங்களுக்கு நான் வேணாம் என்றுதானே என்ன ஒதுக்கி வெச்சிருக்காங்க. அவங்களே வந்து பேசட்டும். நைட்டுக்கும் சேர்த்து சமைச்சா, ஈஸியா இருக்கும் என்று சொன்னேன். சரி விடு, ஹோட்டல்ல வாங்கிக்கலாம். நீ தூங்கு நான் இவன பார்த்துக்கிறேன். சாப்பாடு வாங்க இன்னும் டைம் இருக்கே” வழமைபோல் நீளமாக பேசி சமாளிக்க முயன்றான்.

கணவனை சந்தேகமாக பார்த்தவள் “சைத்ரன் பாட்டுல விளையாடிக்கிட்டு இருப்பான். நீ வீட்டை கொஞ்சம் கிளீன் பண்ணு” என்றாள்.

“ம்க்கும்… என்ன வேலை வாங்காம உனக்கு தூக்கம் வராதே” மனதுக்குள் அவளை திட்ட ஆரம்பிக்க, அதைக் கூட செய்ய விடாது அழைப்பு மணி ஒலித்தது.

“வந்துட்டான்யா… வந்துட்டான். வீட்டுக்கு வந்த உடனே தேடி வந்துட்டான். வாச கதவை பூட்டி வச்சாலும் வந்துட்டானே” பாரிவள்ளல் தான் வந்திருப்பான் என்று யூகித்து “மிது நீ போய் தூங்கு. நான் பாக்குறேன்” உதடுகளை காது வரை விரித்தான் தாஸ்.

அவனை விசித்திர ஜந்துவை பார்ப்பது போல் பார்த்தவள் தோள்களை குலுக்கியவாறு அறைக்கு சென்றாள்.

எதிர்பார்த்து கதவை திறந்த தாஸுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அங்கே ஒரு பெண்மணி நின்றிருந்தாள்.

“யார் இவங்க?” என்ற பார்வையோடு தாஸ் நிற்க,

“தள்ளுப்பா….” என்று அவனை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவள் “மிது… மிதும்மா” என்று உரிமையாக மிதுவை அழைத்தாள் அந்த பெண்மணி.

“யாரு….” என்றவாறு அறையில் இருந்து வெளியே வந்து மிது “யார் இவங்க?” என்ற பார்வையோடு கணவனை ஏறிட்டாள்.

“எனக்கென்ன தெரியும்” என்று தாஸ் முழிக்க,

“நான் உரிமையா உள்ள வந்துட்டேன். யாருன்னு சொல்லாம விட்டுட்டேன். பாத்தியா…” மிதுவின் முகவாயை தடவியவள் “நான் உங்க அக்கா அமிர்தாஷினி ஓட அத்த. நீயும் என் பையன கட்டிக்கிட்டு என் வீட்டுக்கு வந்திருக்க வேண்டியது. விதி. இப்படி ஊரவிட்டு தனியா போய் கஷ்டப்பட்டு கிட்டு இருக்க. சரி விடு. அதான் வந்துட்டியே. மதியத்துக்கு உனக்கும் சேர்த்து சமச்சி எடுத்துட்டு வந்தேன். நைட்டுக்கும் எதுவும் பண்ணாதே, உன் அக்காவ பண்ண சொல்லுறேன். உனக்கு என்ன வேணும் என்று மட்டும் சொல்லு” என்றவள் கையோடு கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் அடங்கிய பையை கொடுத்தாள்.

“என்னது தனியா கஷ்டப்படுறாளா? கூட நானும் தான் கஷ்டப்படுறேன்” என்று தாஸின் மைண்ட் வாய்ஸ் அந்த அம்மாவை முறைத்துக் கொண்டிருக்க, அமிர்தாஷினி என்ற பெயர் கூட அவனுக்கு அந்த அம்மா யார் என்று அடையாளம் காட்டவில்லை. அடுத்து அந்த அம்மா பேசியதில் கடுப்பானான்.

பாரிவள்ளலின் அன்னை என்று அறிந்த உடன் “உட்காருங்க அத்த… நான் ஒருத்தி உங்களை நிக்க வச்சுக்கிட்டே பேசுறேன்” என்றாள் மிது.

“புள்ள வேற காணாம போயிட்டானாமே. பாரி சொன்னான். எந்த நேரத்துல கல்யாணம் பண்ணிங்களோ? சாத்திர சம்பிரதாயங்களை ஒழுங்கா செஞ்சீங்களோ? ஏழு வருஷமா ஊருக்கே வரல. குலதெய்வத்துக்கு பூஜை கூட செய்யலையே! அதனால தான் இப்படி எல்லாம் நடக்குது.

நீ மட்டும் அவசரபடாம இருந்திருந்தா, இந்நேரம் எங்க வீட்ல, எங்க கூட இருந்திருப்ப. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டு இருப்பேன். ரெண்டு பசங்கள சுமந்து, பெத்து ஒத்த மனுஷியா எப்படி தனியாக எல்லாத்தையும் பண்ண?” தானும் இரண்டு ஆண் பிள்ளைகளை தான் சுமந்து பெற்றேன். ஆனால் எனக்கு என் குடும்பம் உறுதுணையாக இருந்தது என்பதை சொல்லாமல் சொன்ன கனகா. மிதுவை கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“அங்க சுத்தி இங்க சுத்தி இந்தம்மா என்ன இந்த பேச்சிலே வந்து நிக்குறாங்க? இவ இவங்க பையன கல்யாணம் பண்ணாதது ஒரு பெரிய குத்தம் போல பேசுறாங்க. பையனைப் போலவே இந்தம்மாக்கும் நான் இங்க நிற்கிறது கண்ணுக்கு தெரியலையா? முறைத்தவாறு நின்றிருந்தான் தாஸ்

“யார் தலையில் என்ன எழுதி இருக்கோ அது தானே அத்த நடக்கும். யாருக்கு யார் என்று விதிச்சிருக்கோ அவங்க தானே அமையும். மாமாக்கு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கலாம்” என்றாள் மிது.

“ம்ம்… என்னத்த சொல்ல… பார்க்கிற எந்த பெண்ணையும் பிடிக்கலன்னு சொல்லுறான். ஏழு வருஷமா பொண்ணு பாக்குறேன். அவன் பார்த்து சரி என்று சொன்ன நீ, இதோ இவன கட்டிக்கிட்டு ஊர விட்டு போயிட்ட” ஆதங்கத்தோடு சொன்னாள் அக்காவின் அத்தை.

தாஸுக்கு பக்கெண்று இருந்தது. “மிது அம்மாக்கு குடிக்க ஏதாவது கொடு. பேசி பேசி தொண்டை வறண்டு போயிருக்கும்” நக்கலாகத்தான் கூறினான் தாஸ்.

“ஏம்பா… பேசிக்கிட்டு இருக்கோமில்ல. உனக்கு காபி, டீ போட தெரியாதா? ஒரு ஜூஸ் ஆவது போட தெரியாதா? பொண்டாட்டியவேவா வேலை வாங்குவ? இவன் கூட எப்படிமா குடும்பம் நடத்துற?” தாஸை மட்டம் தட்டுவது போலவும், அவன் கொடுமைக்காரன் போலவும் பேசலானாள் பாரிவள்ளலின் அன்னை.

“என் பொண்டாட்டி உடம்பு முடியலன்னா என் பொண்டாட்டிய பார்த்துட்டு எனக்கு தெரியும். ஆனா நீங்க விருந்தாளியாக வந்திருக்கிறீங்க. நான் போய் காப்பியோ, டீயோ, ஜூசோ போட்டுக் கொண்டு வந்தா நீங்க போய் நாலு பேரு கிட்ட என் பொண்டாட்டிய பத்தி என்ன சொல்லுவீங்க? அவ ஒக்காந்து என்கிட்ட பேசிகிட்டு இருந்தா, அவ புருஷன் தான் போய் ஜூஸ் போட்டான் என்று சொல்ல மாட்டீங்களா? அதுவும் இவள உங்க பையனுக்கு பேசி இருக்கிறீங்க நல்லவேளை என் பையனுக்கு அவள கட்டல. கட்டி இருந்தா என் பையனை வேலை வாங்கி இருப்பான்னு சொல்ல மாட்டீங்களா?” குத்தலாகவே சொன்ன தாஸ் பாரியின் அன்னை முறைக்கவும்

“நீங்க இப்படி பேசுவீங்கன்னு எனக்கு தெரியலையே. தெரிஞ்சிருந்தா நானே போய் உங்களுக்கு ஜூஸ் போட்டுக் கொண்டு வந்து கொடுத்திருப்பேன். நீங்க அப்படியெல்லாம் பேசுவீங்கன்னு நான் நெனைச்சிட்டேன்” என்று சமாளித்தான்.

மிதுவுக்கு தாஸின் பேச்சில் விகல்பம் இருப்பது போல் தெரியவில்லை. அவளுக்கு உடம்பு முடியாமல் போனால் அவன் தானே பார்த்துக் கொள்கிறான். பாரியின் அன்னையை அவள் இன்று தான் பார்க்கின்றாள். அதனால் முதல் முதலாக கணவனின் கூற்றை ஏற்றுக்கொண்ட விதமாக தலையசைத்ததோடு “ஆமாம் அத்த எனக்கு உடம்பு முடியாமல் போன இவர்தான் வீட்டு வேலை எல்லாத்தையும் பார்க்கிறாரு” என்றாள் பெருமிதத்தோடு,

தாஸும் மிதுவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசியது கனகாவுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ “சரி மா… சாரி மா… நான் வேற வீட்டுக்குள்ள ஒக்காந்து பேசிக்கிட்டே இருக்கேன். அவ்வளவு தூரம் பயணம் செஞ்சி வந்து களைப்பா இருப்பீங்க. நீங்க தூங்குங்க நான் அப்புறமா வரேன்” என்ற அவள் எழுந்து கொண்டாள்.

சைத்ரனை பார்த்து குழந்தையாக நான் கூட்டிட்டு போகவா என்று வேறு கேட்டாள்.

தான் பார்த்துக் கொள்வதாக வேண்டாம் என்று மறுத்தது தாஸ் தான்.

கனகா கிளம்பிய உடன் கதவை அடைத்தவன் முதலில் செய்தது அழைப்பு மணிக்கான சுவிட்சை அணைத்து வைத்தது தான்.

கனகாவை தான் பெரிய கோடு என்று மருத்துவர் கூறினாரோ? அல்லது இதை விட பெரிய கோடு உண்டோ?

எதுவாயினும் தாசந்தனின் வாழ்க்கையில் மிது முதன் முறையாக அவன் பக்கம் நின்றிருந்தாள். அவனுக்காக பேசியிருந்தாள். அதுவே அவனுக்கு கிடைத்த முதல் வெற்றி. அதை அவன் தக்க வைத்துக் கொள்வானா?

Advertisement